• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.
5.2.2. எதுகை வகைகள்
எதுகை குறிக்க எட்டு வகைகள்.
அடியெதுகை, இணையெதுகை, பொழிப்பெதுகை, ஒரூஉவெதுகை,
கூழையெதுகை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்றெதுகை,
என்று வகைகள் எட்டில் வருமே எதுகை.

அடியெதுகை தவிர்த்து மற்றபிற எதுகைகள்
நாற்சீர் கொண்ட அளவடியில் மட்டுமே
குறித்தல் வேண்டும் என்பது நியதி.

5.2.3. அடி எதுகை
அடிகள் தோறும் முதலெழுத்து அளவொக்க
பின்வரும் எழுத்து(கள்) பொருந்தி அமைவது
அடியெதுகை என்ற வகையில் வருவது.


இரண்டடி எதுகைச் சான்றுக் குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
---திருக்குறள் 1:1

இரண்டடி களுக்கு மேல்வரும் எதுகை:
அன்று மூல மாதியாய்
இன்று காறு மேழையேன்
நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன்

செய்யுள் அடியினைக் கணக்கிடும் அடியெதுகை!
அடியெதுகை நோக்க வள்ளலாரின் இப்பாடல்
நான்கே வரிகளில் அமைவது விளங்கும்!

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
..உத்தமர்தம் உறவு வேண்டும்
..உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
..உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெரும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
..பேசா திருக்க வேண்டும்
..பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
..பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
..மறவா திருக்க வேண்டும்
..மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
..வாழ்வுநான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
..தலமோங்கு கந்த வேளே
..தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
..சண்முகத் தெய்வ மணியே.
---இராமலிங்க அடிகள், திருவருட்பா 8

எனவே, நெடிலடி, கழிநெடிலடி போன்ற
அடிகளில் நீண்ட கவிதை புனைய
அடிகளை எதுகையால் தொடுப்பதோர் உத்தி.

5.2.4. இணை எதுகை
முதலெழுத்து அளவொக்க முதலிரண்டு சீர்களிலே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது இணையெதுகை.


இணையெதுகைச் சான்றுக் குறள் கீழே:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
---திருக்குறள் 3:6

மற்ற சான்றுகள் தேடிடக் கிடத்தவை:
என்றும் என்தோள் பிரிபு அறியலரே
---கபிலர், நற்றிணை 1

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறியிட்டுத்
---நக்கீரர், நெடுநல்வாடை 76

பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
---காரியாசான், சிறுபஞ்சமூலம் 8

சொல்லிய நல்லவும் தீயவாம்---எல்லாம்
---முன்றுறை அரையனார், பழமொழி நானூறு 14

தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
---தோலாமொழித் தேவர், சூளாமணி

கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
---இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வேட்டுவ வரி 61

மாரதி பாரதியார்க்கு உன்னை உவமானமளிப்பார்
ஆர்*அதிகம் ஆர்தாழ்வு அறைந்திடாய்---ஊர்*அறிய
---பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், அழகர் கிள்ளை விடுதூது 55

5.2.4. பொழிப் பெதுகை
முதலெழுத்து அளவொக்க முதலாம் மூன்றாம் சீர்களிலே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது பொழிப்பெதுகை.


பொழிப்பெதுகைச் சான்றுகள் நோக்குவோம் கீழே:
தோன்றிற் புகழொடு தோண்றுக வஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.
---திருக்குறள் 24:6

ஒருமுறை படித்தது மனதில் நிலைக்க
பாரதி புனையும் பொழிப்பு எதுகைகள்:

ஞானத்தி லேபர மோனத்திலே---உயர்
மானத்தி லேயன்ன தானத்திலே...

தீரத்தி லேபடை வீரத்திலே--நெஞ்சில்
ஈரத்தி லேயுப காரத்திலே...

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே--புய
வீக்கத்தி லேயுயர் நோக்கத்திலே...
---தேசிய கீதங்கள், பாரத நாடு

5.2.5. ஒரூஉ எதுகை
முதலெழுத்து அளவொக்க முதலாம் நான்காம் சீர்களிலே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது ஒரூஉவெதுகை.


வள்ளுவர் தராத எதுகைகள் உண்டோ?
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
---திருக்குறள் 20:2

நல்வழிப் படுத்த ஔவை தருவது:
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கெனென் றிட்டுண்டு இரும்.
---ஔவையார், நல்வழி 11

5.2.6. கூழை எதுகை
முதலெழுத்து அளவொக்க முதல்மூன்று சீர்களிலே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது கூழையெதுகை.


வள்ளுவர் தருகிற கூழை எதுகை:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்ப்பற்றைப்
பற்றுக பற்ற விடற்கு.
---திருக்குறள் 35:9

பாரதியின் வந்தே மாதரம் வரிகள்:
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும் வலி குன்றா தோதுவம்.
---பாரதியார், ஜய வந்தே மாதரம்

5.2.7. மேற்கதுவாய் எதுகை
முதலெழுத்து அளவொக்க முதலாம் மூன்றாம் நான்காம் சீர்களிலே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது மேற்கதுவாய் எதுகை.


வள்ளுவர் தந்திடும் மேற்கதுவாய் எதுகை:
உதவி வரைத்தன்று உதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
---திருக்குறள் 11:5

5.2.8. கீழ்க்கதுவாய் எதுகை
முதலெழுத்து அளவொக்க முதலிரண்டு நான்காம் சீர்களிலே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது கீழ்க்கதுவாய் எதுகை.


வள்ளுவர் திருகிற மேற்கதுவாய் எதுகை:
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
--திருக்குறள் 43:8

ஆசாரக் கோவை தருகிற சான்று:
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
---பெருவாயின் முள்ளியனார், ஆசாரக்கோவை 79

5.2.9. முற்று எதுகை
முதலெழுத்து அளவொக்க முதல்நான்கு சீர்களிலுமே
பின்வரும் எழுத்து(கள்) ஒன்றுவது முற்றெதுகை.


வள்ளுவர் தருகிற முற்று எதுகை:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 2:2
 
5.2.10. எட்டு வகைகளும் காரணப் பெயர்களே!

எதுகையும் மோனையும் எட்டு வகையின.
எதுகையின் வகைகள் மேலே பார்த்தோம்.
மோனையின் வகைகள் அடுத்துப் பார்ப்போம்.

சீர்களில் ஒன்றிடும் வகைகள் எட்டிலும்
முதற்சீர் தன்னில் ஒன்றுவது அவசியம்.
முதற்சீர் தொட்டே பிறசீர் ஒன்றுவது
வகையின் பெயரில் குறிக்கப் படுவது.

எண்வகை எதுகையும் மோனையும் குறிக்க
நாற்சீர் கொண்ட அளவடி மட்டுமே
எடுத்துக் கொள்ளப் படுவது நியதி.

ஐந்தும் மேலும் சீர்கள் பெற்றிடும்
அடிவகை தன்னில் முதல்நான்கு சீர்களே
எதுகை மோனை குறிக்க அமைவது.

இதனால் நெடிலடி கழிநெடி லடிகளில்
அடிகளின் தொடக்கம் குறிக்க அவசியம்
அடிவகை எதுகையோ மோனையோ பயிலும்.

தொடையும் எதுகை மோனை முரணும்
இயைபும் காரணப் பெயர்கள் போல
எதுகை மோனை வகைகள் எட்டும்
காரணப் பெயராய் அமைவது காணீர்!

5.2.10.1. அடியெதுகை பெயர்க் காரணம்
அடுத்து வருவது அடியெனப் படுவதால்
அடிதொறும் வருவது அடியெதுகை ஆகும்.

5.2.10.2. இணையெதுகை பெயர்க் காரணம்
முதலிரு சீர்களில் இணைந்து வருவதால்
இணையெது கையென அழைக்கப் படுமே.

5.2.10.3. பொழிப்பெதுகை பெயர்க் காரணம்
பொழியெனப் படுவது கணுவெனப் பொருள்படும்.
கணுக்கள் கரும்பினைப் பிரித்தல் போல
சீரொன்று இடையில் பிரிக்க வருவதால்
ஒன்றிலும் மூன்றிலும் வருவது பொழிப்பு.

5.2.10.4. ஒரூஉ வெதுகை பெயர்க் காரணம்
ஒருவு என்றால் விடுதல் நீங்குதல்.
ஒன்றில் தொடங்கி இருசீர் விட்டு
நாலில் ஒன்றுவது ஒரூஉ வெதுகை.

5.2.10.5. கூழையெதுகை பெயர்க் காரணம்
கூழை என்றால் குட்டை யானது.
கூழைக் கும்பிடு போடும் போது
உயரம் சுருக்கிக் குழைவது தெரியும்.
கூழை நரிக்கு வாலது குட்டையாம்.
கூழைப் பாம்போ கழுத்தே இன்றித்
தலையும் உடலும் சேரும் குள்ளம்.

அளவடி தன்னில் நாற்சீர் இருக்க
முதல்மூன்றில் மட்டுமே எதுகை வருவதால்
குள்ளமாகிக் கூழை எதுகை யானது!

5.2.10.6. மேற்கதுவாய் எதுகை பெயர்க் காரணம்
அளவடி நாற்சீரில் தலைச்சீர் வடக்கென்றால்
இரண்டாவது கிழக்காகும், மூன்றாவது தெற்காகும்
நான்காவது மேற்காகும், வரைபடத்தின் திசைபோல.

தலைச்சீர், மூன்று, நான்கில், அதாவது
வடக்கு தெற்கு மேற்கில் அமைந்து
தெற்கிலும் மேற்கிலும் தொடர்ந்து ஒன்றிட
மேற்கதுவாய் எதுகையென அழைக்கப் படுமே.

5.2.10.7. கீழ்க்கதுவாய் எதுகை பெயர்க் காரணம்
தலைச்சீர், இரண்டு, நான்கில், அதாவது
வடக்கு கிழக்கு மேற்கில் அமைந்து
வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து ஒன்றிட
கீழ்க்கதுவாய் எதுகையென அழைக்கப் படுமே.

5.2.10.8. முற்றெதுகை பெயர்க் காரணம்
அளவடிச் சீர்கள் நான்கிலும் தப்பாது
முற்றிலும் ஒன்றிட முற்றெதுகை யாகுமே.

5.2.11. எண்வகைக்கு எண் குறியீடு!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்போது
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென வள்ளுவர் கூறிடும் போது
எண்குறிகள் மட்டும் ஏனில்லை செய்யுளில்
என்பது நண்பர் ராஜுவின் ஆதங்கம்.

எழுத்தில் எழுதாது எண்களை எண்களில்
குறித்தால் செய்யுளில் ஓசையும் சுவையும்
குன்றாமல் கருத்துப் பரிமாற் றமும்
பழுது படாது என்பதவர் வாதம்.

5-இலே 1 பெற்றான் 5-லே ஒன்றைத் தாவி
என்று குறுஞ்செய்தி சேவை போலக்
கைப்பேசி மூலம் கவிதை எழுதும்
வாய்ப்பினை இழந்தோமே என்கிறார் ராஜு.

கவிதை செய்வதில் இலக்கணமே கூடாது
என்றிடும் இந்நாளில் மரபுக் கவிதையில்
எண்களை அவற்றின் குறிகளி லேயே
அசைச்சீர் நோக்கி எழுதிட லாமே!

எழுத்தில் எழுதாது எண்களில் எழுதி
எண்குறி யீடுகள் அமைக்கும் போது
பொருள்மா றாமல் இருக்க வேண்டும்.

5-இலே 1 பெற்றான் 5-லே ஒன்றைத் தாவி
என்பது கூடச் சரியல்ல ஏனெனில்
எண்குறிக்கும் சொல்-எது அஞ்சா, ஐந்தா?
5 அஞ்சானால் 1 ஒண்ணாகுமே!

இதுபோல் குழப்பம் வருவது தவிர்க்கவே
யாப்பில் எண்களை அமைத்திலர் போலும்!

எனினும் அமைப்போம் எண்குறி யீடுகள்
எதுகை மோனையின் எண்வகை களுக்கு!

கீழ்வரும் எண்களைத் தனித்தனி யாக
எழுத்தில் படித்து அலகிட வேண்டும்.
ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு சீராம்.
எண்கள் குறிப்பது எதுகைச் சீர்களை.

1 என்பது அடியெதுகை ஆகும்
அடிகளின் முதற்சீர் எதுகை பெறுவதால்.

1 2 என்பது இணையாம்
முதலிரண்டு சீர்களில் எதுகை வருவதால்.

1 3 என்பது பொழிப்பு
ஒன்றிலும் மூன்றிலும் எதுகை வருவதால்.

1 4 என்பது ஒரூஉ
ஒன்றிலும் நான்கிலும் எதுகை வருவதால்.

1 2 3 கூழை
முதல்மூன்று சீர்களில் எதுகை வருவதால்.

1 3 4 மேற்கதுவாய்
எண்கள் குறிக்கும் எதுகைச் சீர்களால்.

1 2 4 கீழ்க்கதுவாய்
எண்கள் குறிக்கும் எதுகைச் சீர்களால்.

1 2 3 4 முற்றுதுகை
சீர்கள் நான்கிலும் எதுகை வருவதால்.
 
5.2.12. எண்வகைக்கு திசைக் குறியீடு!

1 2 3 4
ஆகிய எண்கள் அதேவரி சையில்
திசைகள் நான்கினைக் குறிக்கக் கொண்டால்
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
என்பன ஆகும் எண்ணின் திசைகள்.

நான்கு திசைகளின் பெயர்களைச் சுருக்கி
வட-கீழ் தென்-மேல் என்று குறிப்போம்.

எண்குறி யீடுகளை திசையெழுத் தாக்கிட
எண்வகைப் பெயர்கள் இப்படி அமையும்.

வட-என்பது அடியெதுகை யாகும்.
வடகீழ் என்பது இணையெதுகை யாகும்.
வடதென் என்பது பொழிப்பெதுகை யாகும்.
வடமேல் என்பது ஒரூஉவெதுகை யாகும்.
வடகீழ்தென் என்பது கூழை யெதுகை யாகும்.
வடதென்மேல் என்பது மேற்கதுவா யெதுகை யாகும்.
வடகீழ்மேல் என்பது கீழ்க்கதுவா யெதுகை யாகும்.
வடகீழ்தென்மேல் என்பது முற்றெதுகை யாகும்.

5.2.13. எண்வகைக்கு இன்னொரு எளிய குறியீடு!

1 2 3 4
என்று சீர்களைக் குறிக்கும் எண்கள்
கர்ம பக்தி ஞான முக்தி
என்ற நான்கு பெயர்கள் பெற்றிட,

கர்ம என்பது அடியெதுகை யாகும்.
கர்ம பக்தி என்பது இணையெதுகை.
கர்ம ஞான என்பது பொழிப்பெதுகை.
கர்ம முக்தி என்பது ஒரூஉவெதுகை யாகும்.
கர்ம பக்தி ஞான கூழை யெதுகை.
கர்ம ஞான முக்தி மேற்கதுவா யெதுகை.
கர்ம பக்தி முக்தி கீழ்க்கதுவா யெதுகை.
கர்ம பக்தி ஞான முக்தி முற்றெதுகை.

5.2.14. சொற்குறை எதுகைகள்

மேற்சொன்ன எண்வகை எதுகைகள் யாவும்
முதல்தர எதுகைகள் என்று பெயர்பெறும்.
எண்வகை மோனையும் முதல்தரம் ஆகும்.

முதல்தர எதுகை வகைகள் எட்டில்
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
பின்வரும் எழுத்து(கள்) பொருந்திடும் போது
பொருந்திடும் எழுத்துகள் ஒன்றாக வேண்டும்.

அதாவது, ’தலை’-யின் எதுகை யானது
’மலை’யென, ’சிலை’யென, ’குலை’யென வரலாம்
இரண்டாம் எழுத்துகள் அதுவே ஆவதால்.

’தலை’-யின் எதுகை ’மழை’யென வராது
இரன்டாம் எழுத்து மாறு படுவதால்.

செய்யுள் வழியில் கவிதை செய்கையில்
பொருளும் சொல்லும் நோக்கிடும் போது
பொருளே சொல்லை விஞ்சுதல் கண்டு
முதல்தரத் தொடைகள் இயலாத போது
தொடைகளின் இலக்கணம் சற்றே தளர்ந்து
வேறு வகைகள் வந்திட உதவும்.

இவ்வகைத் தொடைகள் இரண்டாம் தரமே
என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வகைத் தொடைகள் இரண்டாம் தரமென
அழைக்கப் படினும், பொருள்நோக்கி அமைவதால்
பொருள்வகை, பொருள்மேல் எதுகைகள் என்றோ
ஏனோதானோ, சொற்குறை எதுகைகள் என்றோ
இலக்கிய, இலக்கண வகையில் அழைக்கலாம்.
 
5.2.15. சொற்குறை எதுகை வகைகள்
சொற்குறை எதுகையில் பலவகை உண்டு.
வருக்க எதுகை, இனவெதுகை, உயிரெதுகை,
நெடிலெதுகை, மூவகை எதுகை, இருவிகற்ப எதுகை,
இடையிட் டெதுகை, மூன்றாம் எழுத்தொன் றெதுகை,
வழியெதுகை, ஆசிடை யிட்ட எதுகை யெனப்பல.

5.2.16. வருக்க எதுகை
வருக்கம் என்பது வம்சம் ஆகும்.
க-முதல் கௌ-வரை பன்னிரு உயிர்மெய்
க-வருக்கம் என்று அழைக்கப் படுவது.

முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்து
வருக்கத்தில் ஒன்றுவது வருக்க எதுகை.

’சிவகைப் புலிகள்’, ’விப்பினில் உயிர்ப்பு’,
"பாடாமல் ஆடேனே", "பலாப்பழ விலை சொல்"
தொடர்களில் வருக்க எதுகை அமைவது காண்க.

இந்தத் தொடர்களில் குறிலொடு குறிலோ
நெடிலொடு நெடிலோ ஒன்றுதல் காண்க.

"சிவகை சிலைகள்", "பாடாமல் ஓுவேன்"
என்றும் வரலாம் குறில்நெடில் இணைந்து.

எதுகை எழுத்துகள் அளவில் ஒத்திட
எதுகை சிறக்க அமையும் என்பர்.

வருக்க எதுகையில் வருக்க ஒற்றுகள்
அதுவும் வல்லின வருக்கம் தவிர்த்தல்
வேண்டும் இலக்கணம் சரியே அமைய.

’சி்றாடைச் சிறுமகள்’ என்பது கூடாது.
’பு்னகை மனிதன்’ என்பதும் தவிர்க்க.

வருக்க எதுகைச் சான்றுகள் கீழே:

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
---திருக்குறள் 81:5

நெடில்-குறில் அடியெதுகை வருவது காண்க.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.
---திருக்குறள் 52:10


முதலடிச் சீர்களில் நெடிலொடு குறிலும்
அடுத்ததன் சீர்களில் நெடிலொடு நெடிலும்
அடிகளில் நெடிலும் ஒன்றிடக் காண்க.

700 ஈது முன்னர் நிகழ்ந்த திவன்துணை
மாத வத்துயர் மாண்புடை யாரிலை;
நீதி வித்தகன் தன்னருள் நேர்ந்தனிர்
யாது உமக்கரி தென்றனன் ஈறிலான்.
---கம்ப ராமாயணம், பாலகாண்டம், மிதிலைக் காட்சிப் படலம்


நாமும் வருக்கம் அமைத்திடு வோமா?
’இலில் தகித்து வகுபட்ட பகைவன் கைகொடான்’
தொடரில் க-வகைக் குறில்கள் வரிசையாக
ஐந்தில் நான்கு வருவது காண்க.

வராத கெ-குறில் சேர்க்கச் சொல்லினை
வகையுளி செய்து இப்படிப் பிரிக்கலாம்.
வகையுளி என்பது பேசும் சொல்லினை
சீரசை நோக்கிப் பிரித்தல் ஆகும்.

’இலில் தகித்து வகுபடவெறுப் புகெழுமும் பகைவன் கைகொடான்’
தொடரில் க-வகைக் குறில்கள் வரிசையாக
ஐந்தும் வருவதன் செயற்கை காண்க.

வராத கெ-யெனும் குறிலினை, இரண்டாம்
எழுத்தாக்கி வந்திடும் சொல்லினை,
வகையுளி யின்றித் தொடரில்
’பகைவன்’ முன்பு சேர்த்திடு வோர்க்கு
வேண்டிய வரங்கள் கிட்டுவ தாக!

இதுபோல் நெடில்கள் வரிசையில் வந்திட
வருக்க எதுகை அமைப்பது கடினம்.

"பிசாசவள் வசீகர வசூரையினங் கசேனையின்
சைவினி லேசோதித் தசௌமியம்’ ... ... ... [வசூரை=விலைமகள், வேசி]
என்று சொற்களைப் பிரித்து வகையுளியாக்கி
எழுதினால் செயற்கை யாகி விடுமே!

வகையுளி நீக்கிடப் புரியும் இத்தொடர்:
’பிசாசவள் வசீகர வசூரையின் அங்க சேனையின்
அசைவினிலே சோதித்த சௌமியம்’
 
5.2.17. இன எதுகை
முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்து
இனத்தில் ஒன்றுவது இனவெதுகை யாகுமே.
இனவெது கையில் ஒற்றுகள் வரலாம்.

இனங்களின் வகைகள் நினைவு கூர்ந்திட
கசடதபற வல்லின மாகும்;
ஙஞணநமன மெல்லின மாகும்;
யரலவழள இடையின மாகும்.

இனவெதுகைச் சான்றுகள் நோக்குக கீழே:
்கார் தகவிலர் என்ப தவரவர்
ச்சத்தாற் காணப் படும்.
---திருக்குறள் 012:04

தீயினாற் சுட்டபுண் உள்ள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.
---திருக்குறள் 013:09

வல்லின ற-கரமும் இடையின ர-கரமும்
ஒலியினில் நெருக்கத்தால் இன்றைய பாக்களில்
எதுகை களாகக் கருதப் படுமே.

நாமும் இனங்களில் அமைத்திடு வோமா?
சேரின் கேம் ஆப் பாத் தாம் ஆத்
திடுமெனக் காற்றடித்துப் பேய்மழை பொழிந்தது.

முதலடியில் வல்லினம் வரிசையில் காண்க.

ங்கிடத் தஞ்சம் திண்ணையில் தந்திடும் நம்மூர் நன்மக்கள்.
தொடரில் மெல்லினம் வரிசையில் காண்க.


லாரும் வவேற்று வம்வரும் அவது
குந்தையின் உறல் கேட்க இனிமை.

முதலாறு சீர்களில் இடையினம் வரிசையில் காண்க.

5.2.18. உயிர், நெடில் எதுகைகள்
முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்தில்
ஒத்த குறிலொலி ஒன்றுவது உயிரெதுகை,
ஒத்த நெடிலொலி ஒன்றுவது நெடிலெதுகை.

’பகலும் இரவும்’, ’முகிலின் குளிர்ச்சி’
’பாகலும் பாமரனும்’, ’பாடுவது தேறுமா’

தொடர்களில் உயிரெதுகை வருவது காண்க.

’உலாவரும் கனாமகள்’, ’விதைகள் விளைந்தன’,
’பேசாமல் போகாதே’, ’பாவையும் ஆசையும்’

தொடர்களில் நெடிலெதுகை வருவது காண்க.

முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்தில்
ஏதேனும் குறிலொலி ஒன்றுவதும் உயிரெதுகை,
ஏதேனும் நெடிலொலி ஒன்றுவதும் நெடிலெதுகை.

’சுடச்சுட வருவது’, ’அனுவின் கடிதம்’
’பலாப்பழ நிவேதனம்’, ’வினாவெனில் விடையுள’
’போனது போதுமோ’, ’ஆதவன் நூதனம்’
’போகாதே பூவையே’, ’கூரையில் ஏறாதே’

தொடர்களில் ஏதேனும் குறிலிலொலி ஒன்றிட
உயிரெதுகை நெடிலெதுகை வருவது காண்க.

உயிரெதுகை நெடிலெதுகைச் சான்றுகள் கீழே:
ணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
---ஔவையார்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07
 
5.2.19. மூவகை எதுகை
முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்து(கள்)
சீர்முழுதும் ஒன்றினால் தலையாய எதுகை.

’அடுப்பில் குவளை கழுத்தில் குவளை, குளத்தில் குவளை’
குவளையின் பலவிதப் பொருள்கள் பயில
மேல்வரும் தொடரில் தலையாய எதுகை.

ஓரெழுத்து மட்டும் ஒன்றினால் இடையெதுகை:
’அகர முதல’, ’பகவன் முதற்றே’.

மற்ற வகைகள் யாவும் கடையெதுகை.
சொற்குறை எதுகைகள் கீழ்நிலை யாவதால்
கடையெதுகை என்றும் அழைக்கப் படுமே.

சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்


மேலுள்ள அடிகளை அலகிடக் கிடைப்பது:
’லெல்லாம்’ என்பது தலையாய எதுகை;
சுற-இற இடையெதுகை; ’வன-பன’ கடையெதுகை
’கிடங்-பொழி’ முழுதும் ஒன்றாமல்
ஏதேனும் குறிலொலி ஒன்றிட உயிரெதுகை.

5.2.20. இருவிகற்ப எதுகை
நாலடிச் செய்யுளில் முன்னிரு அடிகளில்
ஓரெது கையும் பின்னிரு அடிகளில்
வேறெது கையும் பெற்று வருவது
இருவிகற்ப எதுகை, இரண்டடி எதுகை
என்றிரு பெயர்களில் அழைக்கப் படுமே.

இருவிகற்ப எதுகைகள் வெண்பாவில் மிகுவரும்:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்---கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.
---ஔவையார், நல்வழி, கடவுள் வாழ்த்து

தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதியவி உண்ணவே.
---திருமூலர், திருமந்திரம் 237

கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.
------பாரதியார், கண்ணன் திருவடி


5.2.21. இடையிட்டெதுகை
அடிகளில் விட்டு விட்டு வருகிற
எதுகை இடையிட் டெதுகை யாகும்.

எட்டுத் தொகைநூல் பெயர்குறிக்கும் வெண்பாவில்
இடையிட் டெதுகை வருவது காண்க:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியே அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.

ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
களிபடைத்த மொழியினாய் வாவாவா
கடுமை கோண்ட தோளினாய் வாவாவா
தெளிவு பெற்ற மதியினாய் வாவாவா
சிறுமை கண்டு பொங்குவாய் வாவாவா
எளிமை கண்டு இரங்குவாய் வாவாவா
ஏறுபோல் நடையினாய் வாவாவா.
---பாரதியார், போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
 
5.2.22. மூன்றாம் எழுத்தொன் றெதுகை
இரண்டாவ தல்லாது மூன்றாவ தெழுத்து
ஒன்றுதல் மூன்றாம் எழுத்தொன் றெதுகை.

’உமாவும் கலாவும் விழாவுக்குச் சென்றனர்’
’பாடுவது நாலுவகை காணுவது ஆறுவகை’

தொடர்களின் எதுகை மூன்றில் ஒன்றுவதே.

கீழ்வரும் குறளின் முதலிரு சீர்களில்
மூன்றில் ஒன்றும் அடியெதுகை காண்க:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
---திருக்குறள் 005:05


5.2.23. வழியெதுகை
முதலெழுத்து அளவொக்கப் பின்வரும் எழுத்து
சீர்கள் பலவற்றில் தொடர்வது வழியெதுகை.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10


காரணம் இன்றி வழியெதுகை அமைத்தால்
சொற்களின் ஆட்சியில் பொருள்தடு மாறுமென
கற்றுக் குட்டிகள் கற்றிட வேண்டும்.

5.2.24. ஆசிடையிட்ட எதுகை
ஆசு என்றால் பற்றுக் கோடு.
ஆசிடுதல் என்றால் பொன்னின் துகள்களைப்
பற்ற வைத்துப் பொன்னணி செய்தல்.
பற்றாசு என்று இதனைச் சொல்வர்.
பட்டாசு என்பது பற்றாசின் திரிபோ?

முதல்தர எதுகை முடியா விட்டால்
கருத்தைச் சொல்லிட ’ய-ர ல-ழ’
எழுத்துகளின் ஒற்றுகளால் ஆசிடு வதாகும்
ஆசிடை யிட்ட எதுகை என்பது.
இந்த நான்கு ஒற்றுகள் இடைவந்தாலும்
ஓசை கெடாது என்பது செய்தி.

’வாய்மை-தீமை’, ’சாக்கிடை ஊர்க்கிடை’
’தாவாதே கால்வாயை’, ’யாழ்வகை பாவகை’

தொடர்களில் ஒற்றுகள் ஆசிடுவது காண்க.

அடியிடை பயிலும் ஆசிடை எதுகை:
மெய்யெலாம் புள்ளிருக்கும் வேளூரா உன்னையிந்தத்
தையலா ளெப்படிச் சேர்ந்தாள்?
---காளமேகப் புலவர், வைத்தீஸ்வரன் கோயில் இறைவனைக் குறித்து.

சொக்கன் மதுரையினில் தொண்டர்க்குன் அவிழ்ந்த
பொய்க்குதிரை சந்தைக்குப் போகுமதோ?
---காளமேகப் புலவர், வசையும் வசைமீட்சியும்
 
5.3. மோனை
மோனை என்றால் முதன்மை எனப்பொருள்.
மோனை என்றால் முனையென்றும் சொல்வர்.
முனைந்து முதலில் நிற்பது மோனை.

5.3.1. மோனை என்பது
செய்யுளின் அடிகளில் அல்லது சீர்களில்
முதலெழுத்து ஒன்றிடத் தொடுப்பது மோனை.

’மலையும் மடுவும்’, ’மாதவனின் மாலை’
தொடர்களில் குறில்நெடில் மோனைகள் காண்க,
முதலெழுத்து முற்றும் ஒன்றி வந்திட.

5.3.2. மோனை வகைகள்
எதுகை போல மோனையும் எண்வகை:
அடிமோனை, இணைமோனை, பொழிப்புமோனை, ஒரூஉமோனை,
கூழைமோனை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்றுமோனை.

முதலெழுத்து ஒன்றும் மோனைகள் யாவும்
அடிதோறும் வந்தால் அடிமோனை
முதற்சீர் இரண்டில் வந்தால் இணைமோனை
முதலிலும் மூன்றிலும் வந்தால் பொழிப்பு
முதலிலும் நான்கிலும் வந்தால் ஒரூஉ
ஒன்று இரண்டு மூன்றில் வந்தால் கூழை
ஒன்று மூன்று நான்கில் மேற்கதுவாய்
ஒன்று இரண்டு நான்கில் கீழ்க்கதுவாய்
சீர்கள் நான்கிலும் ஒன்றினால் முற்றுமோனை.

அடி,இணை பொழிப்பு ஒரூஉ
கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று
வகைகள் எண்குறி யீட்டில் முறையே
1 12 13 14 123
134 124 1234
ஆகும், எண்கள் மோனைச் சீர்கள் குறிக்க.

எண்வகை மோனையும் திசைக்குறி யீட்டில்
வடதிசை வடகீழ் வடதென் வடமேல்
வடகீழ்தென் வடதென்மேல் வடகீழ்மேல்
வடகீழ்தென்மேல் ஆகும்
திசைகள் மோனைச் சீர்கள் குறிக்க.

கர்ம பக்தி ஞான முக்தி
என்று சீரகள் நான்கையும் அழைத்தால்
எண்வகை மோனையும் யோகா மொழியினில்
கர்ம கர்ம-பக்தி கர்ம-ஞான கர்ம-முக்தி
கர்ம-பக்தி-ஞான கர்ம-ஞான-முக்தி
கர்ம-பக்தி-முக்தி கர்ம-ஞான-பக்தி-முக்தி
என்று ஆவது மனதில் நிற்கும்.

5.3.2. மோனை வகைகள்: சான்றுகள்
அடியிணை மோனைகள் காண்க கீழே:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
---திருக்குறள் 06:3


இணைமோனை காண்க கீழ்வரும் குறளில்:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
---திருக்குறள் 01:4


பொழிப்பு காண்க கீழ்வரும் குறளில்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
---திருக்குறள் 01:6


ஒரூஉ காண்க கீழ்வரும் குறளில்:
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
---திருக்குறள் 05:9


கூழை காண்க கீழ்வரும் குறளில்:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்ப்பற்றைப்
பற்றுக பற்ற விடற்கு.
---திருக்குறள் 35:9


மேற்கதுவாய் காண்க கீழ்வரும் குறளில்:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
---திருக்குறள் 2:1


கீழ்க்கதுவாய் காண்க கீழ்வரும் குறளில்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
---திருக்குறள் 1:5


முற்று மோனையும் எதுகையும் வருவது:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 2:2
 
Last edited:
5.3.3. மோனையின் வேறு வகைகள்
செய்யுளில் பொருளின் பெருமை நோக்கி
முதலெழுத்து முற்றிலும் ஒன்றாத போது
வேறு வகைத்த மோனைகள் வரலாம்.

5.3.4. வருக்க மோனை
வருக்கத்தில் ஒன்றும் வருக்க மோனை,
குறிலொடு குறிலோ நெடிலொடு நெடிலோ
குறில்நெடில் இணைந்தோ வருவ தாகும்.

’நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’
--ஔவையின்
மூதுரையில் புல்-பொசி என்று வருகின்ற
மோனை ப-வருக்கம் காண்.

’ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே’
என்று
ஔவை நல்வழிப் படுத்தும் போது
வீற்-வாழ் என்பது நெடிலொன்றும் மோனை.

’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்னும்
ஔவையின் மூதுரையில் கற்-காமு என்று
க-வருக்கக் குறில்நெடில் மோனை காண்க.

5.3.5. இன மோனை
வல்லின மெல்லின இடையின வகைத்த
இனத்தில் ஒன்றுவது இனமோனை யாகும்.

ஔவை அருளிய கொன்றை வேந்தனில்
வல்லின மோனை வருகிற அடிகள்:
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
காவல்தானே பாவையர்க் கழகு.


மெல்லின மோனை வருகிற சான்றுகள்:
மோனம் என்பது ஞான வரம்பு.
---ஔவையார், ஆத்திச்சூடி


நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
---திருக்குறள் 100:09

’நகல்வல்லார்’ ’மாயிரு’ ’ஞாலம்’ மோனைகள்.

இடையின மோனை வருகிற குறட்பா:
வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல.
---திருக்குறள் 030:01


இந்தக் குறளில் இடையின மோனை
’வாய்மை யாதெனின்’ தொடரிலா அல்லது
’வாய்மை யாதொன்றும்’ தொடரிலா சொல்வீர்!
முன்னது தவறு பின்னதே சரியாம்.
’யெனப்படுவது யாதெனின்’ என்பது புணர்ந்து
’யெனப்படுவ தியானெனின்’ என்று ஆவதால்.

மோனை எதுகை அலகிடும் போது
சொற்களைப் புணர்ந்தபின் அலகிடல் வேண்டும்.
என்பது முக்கிய மான நியதி.

யாண்டுச்சென் றியாண்டும் உளராகில், வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
---திருக்குறள் 090:05

’யாண்டு’ ’வெந்து’ இடையின மோனை.

5.3.6. உயிர், நெடில் மோனைகள்
ஒத்த குறிலொலி ஒன்றுவது உயிர்மோனை,
ஒத்த நெடிலொலி ஒன்றுவது நெடில்மோனை.
ஏதேனும் குறில்நெடில் ஒலிகளும் ஒன்றலாம்.

ஔவை தருகிற உயிர்நெடில் மோனைகள்:
’கண்டொன்று சொல்லேல்’ ’தையற்சொற் கேளேல்’
’குணமது கைவிடேல்’ ’கேள்வி முயல்’

---ஔவையார், ஆத்திச்சூடி

5.3.7. இருவிகற்ப மோனை
நாலடிச் செய்யுளில் முன்னிரு அடிகளில்
ஒருமோ னையும் பின்னிரு அடிகளில்
வேறுமோ னையும் பெற்று வருவது
இருவிகற்ப மோனை, இரண்டடி மோனை
என்றிரு பெயர்களில் அழைக்கப் படுமே.

இருவிகற்ப மோனைச் சான்றுகள் கீழே:
இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி
மந்திரம் போல்வேண் டுமடா சொல்லின்பம்---நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித் (தகத்)
---பாரதியார், சக்திக் கூத்து


நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா---நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
---ஔவையார், மூதுரை 1


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்
டாவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
---ஔவையார், நல்வழி 22
 
5.3.8. இடையிட்ட மோனை
அடிகளில் விட்டு விட்டு வருகிற
மோனை இடையிட்ட மோனை யாகும்.

சத்திமுற்றப் புலவரின் புகழ்மிகு செய்யுளில்
இடையிட்ட மோனை காண்க
நா-நீ-ந ப-பா-பே வருகிற வரிகளில்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீ*இப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.
---தனிப்பாடல், சத்திமுற்றப் புலவர்


ஏழைப் புலவர் ஊர்வந்தது பின்மாலைப் பனிக்காலம்.
மேலிடும் குளிரில் மேலாடை யின்றி நடுங்கினார்.
குட்டிச் சுவரொன்று பார்த்து அடியில் ஒட்டி அமர்ந்தார்.
வழியறி யாமல் வானில் மேலே பார்த்தார்.
நாரை யொன்று கூடுநோக்கிப் பறப்பது கண்டார்.

வந்தது கவிதை அந்தக் குளிரிலும் நிலையிலும்.
பாடினார் வாய்விட்டு உரக்க நாரைக்குச் செய்தியாக.
பாடலைக் கேட்டான் பாண்டியன் ஊர்வலம் வந்தபோது.
அரண்மனைக் கழைத்துப் பண்புடன் நல்கினான் பரிசில்பல.
குளிரும் வறுமையும் நீங்கிடப் புலவர் மகிழ்ந்தார்.

தமிழே மூச்சாகக் கவிதையே பேச்சாகப்
புலவர்கள் புரவலர்கள் வாழ்ந்திட்ட காலத்தில்
குளிரில் வேனிலில் வறுமையில் கவிதைகள்
ஒல்காப் புகழ்பெற உதித்தது வியப்போ?


5.3.9. வழி மோனை
சீர்கள் பலவற்றில் தொடர்வது வழி மோனை.

வழிமோ னைக்கு வள்ளுவர் சான்று:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10


பாரதி வரிகளில் வல்லின மோனைகள்:
பயமெனும் பேய்தனை யடித்தோம்--பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரக் குடித்தோம்
------பாரதியார், ஜய பேரிகை
 
5.3.10. அணு மோனை
உயிரோ உயிர்மெய்யோ ஓசையில் எழுத்தில்
முழுதும் ஒன்றாமல் இனவகை ஒலிகளில்
ஒன்றிட வருவது அணுமோனை ஆகும்.

முன்னோர் தந்த அணுமோனை எழுத்துகள்:
அஆ-ஐஔ இஈ-எஏ உஊ-ஒஓ உயிரெழுத்துகள்.
இவ்வுயிர் ஏறிய உயிர்மெய் எழுத்துகள்:
ககா-கைகௌ கிகீ-கெகே குகூ-கொகோ போல.

சிலமெய் எழுத்துகள் சலுகை பெறுவன,
அவற்றில் தொடங்கும் சொற்களின் குறைவால்:
ச-வும் த-வும் ஓரினம்.
ம-வும் வ-வும் ஓரினம்.
ந-வும் ஞ-வும் ஓரினம்.
யாவிற்கு இஈஎஏ மோனை என்பர்.


புலவோர் குழந்தை, பசுபதி பரிவது போல
இன்றைய வழக்கில் ய,ஜ,ர,ஹ,ல முதலாக
சொற்கள் பலப்பல வருவ தாலே
யா-விற்கு அஆ-ஐஔ மோனை என்றும்
ஜ-வுக்கு ச-த-மோனை என்றும்
ர-ல-விற்கு இ-ஈ-எ-ஏ-மோனை என்றும்
ஹ-விற்கு அ-ஆ-ஐ-ஔ மோனை என்றும்

இன்றைய பாக்களில் கொள்ளப் படுமே.

அணுமோனை வாய்ப்பா டாகப் பழைய வெண்பா:
அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகாண்
இகரமொடு ஈகாரம் எஏ -- உகரமோ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ தச்சகரம்
ஆகாத அல்ல அநு.
[அநு=பின், வழி]

5.3.11. அணு மோனை: சான்றுகள்
மேலே சொன்ன அணுமோனைகள் முறையே
கீழே வருகிற சான்றுகளில் காண்க.
மோனை எழுத்துகள் அடைப்புக் குறிகளில்.

5.3.11.1. அணு மோனை: உயிர் எழுத்துகள்
அகதிக்கு ஆகாயம் துணையாகும். [அ-ஆ]
அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா? [அ-ஐ]
அஞ்சில் படித்தாலே ஔவைசொல் புரியும். [அ-ஔ]

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் [ஆ-அ]
ஆடுமாடு கொம்பிரண்டு ஐயம் பிடாரிக்கு மூன்று. [ஆ-ஐ]
ஆகாரம் குறைப்பதே தன்னில் ஔடதம். [ஆ-ஔ]

இரந்தோர்க்கு ஈவது உடையார் கடனே. [இ-ஈ]
இடுகிற தெய்வம் எங்கும் இடுமே. [இ-எ]
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் [இ-ஏ]

ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும். [ஈ-இ]
ஈயும் எறும்பும் எங்கும் உண்டு. [ஈ-எ]
ஈயம் பிடித்தவன் ஏது சொல்லினும் கேளான். [ஈ-ஏ]

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாமோ? [உ-ஊ]
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர் சுகமே. [உ-ஒ]
உறுதியான காரியும் ஓர்போதும் கெடாது. [உ-ஓ]

ஊனினால் உறவு பூணினால் அழகு. [ஊ-உ]
ஊசி ஒருமுழத் துணியாவது கொடுக்கும். [ஊ-ஒ]
ஊருக்கெல்லாம் ஓர்வழி உனக்கோர் வழியா? [ஊ-ஓ]

எங்கும் மடமிருக்க இருக்க இடமில்லை. [எ-இ]
என்ணம் இருந்தால் ஈவது இயலும். [எ-ஈ]
எடுப்பது பிச்சை ஏறுவது பல்லாக்கு. [எ-ஏ]

ஏது பிரியம்? இல்லாதது பிரியம். [ஏ-இ]
ஏழை நெஞ்சில் ஈரம் உண்டு. [ஏ-ஈ]
ஏரி பெருகினால் எங்கும் பெருக்கு. [ஏ-எ]

ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக்காசு. [ஐ-அ]
ஐம்பொறி ஆட்சிகொள். [ஐ-ஆ]
ஐப்பசி முதல்நான் ஔவைநோன்பு. [ஐ-ஔ]

ஒருவன் அறிந்தால் உலகம் அறியும். [ஒ-உ]
ஒருபிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம். [ஒ-ஊ]
ஒருகை தட்டினால் ஓசை எழும்புமோ? [ஒ-ஓ]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் [ஓ-உ]
ஓதுவார்க்கு ஊரும் உழுவார்க்கு நிலமும் இல்லையா? [ஓ-ஊ]
ஓயா மழையும் ஒழியாக் காற்றும். [ஓ-ஒ]

ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை. [ஔ-அ]
ஔவையின் ஆத்திச் சூடி குழந்தைகள் அறியும். [ஔ-ஆ]
ஔவை படித்து ஐயம் நீக்குவோம். [ஔ-ஐ]
 
Last edited:
5.3.11.2. அணு மோனை: உயிர்மெய் எழுத்துகள்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே [க-கா]
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் [க-கை]
கந்தனின் மதமே கௌமாரம் என்பது. [க-கௌ]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் [கா-க]
காக்கை கையில் வந்து அமருமோ? [கா-கை]
காக்கை கௌவிச் சென்ற வறுவல். [கா-கௌ]

கிளியும் கீரியும் ஒன்றாய்க் காணுமோ? [கி-கீ]
கிளியின் பேச்சால் கெட்டது காரியம். [கி-கெ]
கிளியின் பேச்சைக் கேட்பாயோ மன்னா? [கி-கே]

கீழே விழுந்த கிழவன் மாண்டான். [கீ-கி]
கீழே விழுந்தும் கெடுப்பதை விடாதவன். [கீ-கெ]
கீழே விழுந்தால் கேட்பார் இல்லை. [கீ-கே]

குறும்பு செய்தாள் கூடைக் காரி. [கு-கூ]
குலமகட் கழகு கொழுநனைப் பேணுதல். [கு-கொ]
குடந்தை நகரில் கோயில்கள் பலவுண்டு. [கு-கோ]

கூட்டுக் குடும்பத்தில் உள்ளது நன்மை. [கூ-கு]
கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் தெய்வம். [கூ-கொ]
கூடி வாந்தால் கோடி நன்மை. [கூ-கோ]

கெடுவான் கேடு நினைப்பான். [கெ-கே]
கெஞ்சிய கிழவிக்குக் கொடுத்தால் குறையுமோ? [கெ-கி]
கெட்டுப் போன கீரையைத் தூக்கியெறி. [கெ-கீ]

கேணி வெட்டக் கிரையம் என்ன? [கே-கி]
கேள்வி கேட்காமல் கீழ்ப்படி வாயா? [கே-கீ]
கேட்டு அறிவது கெடுதல் ஆகுமோ? [கே-கெ]

கைவினை கரவேல். [கை-க]
கையால் இயல்வது காலால் முடியுமோ? [கை-கா]
கைமாற்று வாங்கில் கௌரவம் குறையும். [கை-கௌ]

கொற்றவன் குடியே கோபத்தால் கெடுமே. [கொ-கு]
கொற்றவன் கூற்றுக்கு மறுபேச் சில்லை. [கொ-கூ]
கொண்டதே கோலமென அலைவார் சிலபேர். [கொ-கோ]

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். [கோ-கு]
கோவிலில் கூடி விழாவினை நடத்துவோம். [கோ-கூ]
கோவிலில் கூட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. [கோ-கொ]

கௌரவருடன் சேர்ந்தாலும் கர்ணனின் கீர்த்தி குன்றவில்லை. [கௌ-க]
கௌவை காணாது வாழ்தல் இனிது. [கௌ-கா]
கௌவருக்கு சூது கைவந்த கலையாம். [கௌ-கை]

5.3.11.3. அணு மோனை: இதர ஓரின எழுத்துகள்

சட்டி கெட்டியா என்று தட்டிப் பார்த்தான். [ச-த]
தள்ளிட முடியாது, சட்டம் கழுதையென்று. [த-ச]

மயிலவள் நடந்தாள் வயல்வழி யாக. [ம-வ]
வந்தான் மன்னன் போரினில் வாகைசூடி. [வ-ம]

நன்றி உள்ள விலங்கு ஞுமலி. [ந-ஞு][ஞுமலி=நாய்]
ஞானம் கூடிட நாடுவோம் குருவினை. [ஞா-நா]

யவனர் இல்லாது சரித்திரம் உண்டா? [ய-இ]
இவனே அவனது யசமானன். [இ-ய]

யக்ஞத்தில் முனிவருக்கு ஈடுபாடு அதிகம். [ய-ஈ]
ஈமக் கடனுக்கோர் யஜ்ஞம் உண்டு. [ஈ-ய]

யவனர் எப்படி நுழைந்தனர் தெரியுமா? [ய-எ]
எவ்வளவு பெருமை யசோதைக்குக் கண்ணனால்! [எ-ய]

யக்ஞம் ஏது தருமம் குன்றிட? [ய-ஏ]
ஏரினால் உழுதவன் யந்திரத்தால் உழுகிறான். [ஏ-ய]

ஜப்பான் நாட்டார் சட்டப்படி நடப்பர். [ஜ-ச]
சத்ரம் சாமரத்துடன் ஜனித்தது குழந்தை. [ச-ஜ]

ஜப்பான் நாட்டில் தஞ்சம் புகுந்தான். [ஜ-த]
தங்கல் நேரிட்டது ஜனனியின் தந்தைக்கு. [த-ஜ]

ரணகளத்தில் இவனோ கூற்றுவன் போல. [ர-இ]
இவனது ரத்தம் என்னவகை தெரியுமா? [இ-ர]

ரத்தம் ஈந்தால் உயிர்கள் பிழிக்கும். [ர-ஈ]
ஈச்சம் பழத்தால் ரத்தம் பெருகும். [ஈ-ர]

ரங்க சுவாமி எங்குதான் இல்லை? [ர-எ]
எழுந்தாள் தேவலோக ரம்பை போல. [எ-ர]

ரவாதோசைக்கு ஏது பணமென் பையில்? [ர-ஏ]
ஏனென்பேனோ ரயிலில் பயணிக்க? [ஏ-ர]

ஹரியென்றும் எழுதலாம் அரியென்றும் எழுதலாம். [ஹ-அ]
ஹரஹர என்பது பெரிதோ ஆண்டிக்கு இடுவது பெரிதோ? [ஹ-ஆ]
ஹரிக்கும் உண்டு ஐவகைத் தொழில்கள். [ஹ-ஐ]
ஹரிபற்றி உண்டோ ஔவையின் பாட்டில்? [ஹ-ஔ]

இத்தனை சலுகைகள் தொடைகளில் இருந்திட
மரபுக் கவிதையில் எதுவும் இயன்றிட
புதுமைக் கவிதை மோஹம் ஏனோ?
ஆதனாலினால் மரபினில் ஆக்குவோம் புதுமை!

*****
 
4.7. அடிப்படை உறுப்புகள்: பா: பாவும் செய்யுளும்

பாவெனும் சொல்லின் பலவித பொருள்களைப்
பாவினை விளக்கப் புரிந்து கொள்வோம்.

பாவெனில் முதலில் வருவது நெசவு.
பாவெனில் பஞ்சிநூல் என்றும் பொருளே.
பாவெனும் சொல்லின் ஒருபொருள் பரப்பு.
பாவுதல் என்பது பரவுதல் படர்தல்.
பாத்தல் என்றால் பகுத்தல் வகுத்தல்.

இத்தனை பொருள்களும் நெசவினில் அடக்கம்.
நெய்வது நெசவு செய்வது செய்யுள்.
செய்யுளின் அடிப்படை உறுப்பே பாவாம்.

ஆடை என்பது நெய்யப் படுவது.
செய்யுள் என்பது செய்யப் படுவது.

ஆடையில் பலநிற நூல்கள் பாவுதல் போலச்
செய்யுளில் பலவிதப் பாக்கள் பாவுதல் உண்டு.

ஆடையில் ஒருநிறம் மட்டுமே வருவது போலச்
செய்யுளில் ஒருவகைப் பாவே வருவது உண்டு.

ஆடையின் ஓசை வண்ணம் என்றால் ... [ஓசை=கீர்த்தி]
செய்யுளின் வண்ணம் ஓசை எனலாம். ... [வண்ணம்=தாளம்]

நெய்பவர் எண்ணம் நிறங்களில் பேசும்.
செய்பவர் எண்ணம் ஓசையில் பேசும்.

நெய்பவர் ஆடையில் நூல்கள் இழையும்.
செய்பவர் செய்யுளில் தொடையும் தளையும்.

ஆடையின் வனப்பு நூல்களின் நிறங்களில்.
செய்யுளின் வனப்பு தளைதரும் ஓசையில்.

அந்நூல் பாவி நடத்தலின் ஆடை.
’அத்தொடை பாவி நடத்தலிற் பாவே.’ [இலக்.வி.711]

’அறம் பொருள் இன்பம் வீடு
இவற்றைப் பாவி நடத்தலின் பாவென்பது.’ ... [யாப்பருங்கலம் உரை]


பாவும் நெசவும் பிணைந்தது போல
நூலும் செய்யுளும் பிணைந்தது காணீர்.

நூற்றல் என்றால் நூலிழை ஆக்குதல்.
நூற்றல் என்பதே செய்யுள் இயற்றலும்.

ஆடையின் சிறப்பு நூல்களால் இயல்வது.
பாவின் சிறப்பு சீர்களால் இயல்வது.

ஆடையின் சிறப்பில் நூல்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட.

பாவின் சிறப்பில் சீர்கள் மறைந்து
எண்ணம் சிறந்திடும் வண்ணம் நிறைந்திட. ... [வண்ணம்=தாளம்]

ஆடையின் அழகு அணிந்திட வருமே.
பாவின் அழகு பாடிட வருமே.
 
Last edited:
4.7.1. பாவென்பது சீர், தளை, ஓசை
பாவென்பதே முதலில் சீரினைக் குறிக்கும்.
பாடலைக் குறிப்பது ஆகுபெயர் மூலமே.
பாடலை இயற்றும் ஊடகம் செய்யுள்.

4.7.1.1. பாவும் சீரும்
பாவின் உட்பொருள் சீரே என்பதால்
பாவகை உள்ளது சீர்களின் பெயரில்.

பாவின் வகைகள் நான்கு ஆகும்:
’ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென’. ... [தொல்.செய்.104]

மாச்சீரும் விளச்சீரும் ஆசிரிய வுரிச்சீர் ... [தேமா புளிமா கருவிளம் கூவிளம்]
காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர் ... [மாங்காய் இரண்டு விளங்காய் இரண்டு]
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர் ... [மாங்கனி இரண்டு விளங்கனி இரண்டு]

என்றிவ் வாறு பெயர்கள் பெற்று
நான்கில் மூன்று பாவகை சுட்டும்.

4.7.1.2. பாவும் தளையும்
சீரினும் மேலாகச் சீர்களால் இயலும்
தளைகள் காட்டிடும் பாவகை நன்கு.

மாமுன் நேரெனும் நேரொன் றாசிரியமும் ... [நானும் நீயும்]
விளமுன் நிரையெனும் நிரையொன் றாசிரியமும் .. [அவனும் அவளும்]
ஆசிரியப் பாவகைக்கு உரிய தளைகள்.

மாமுன் நிரையும் விளம்முன் நேரும் ... [நானும் அவளும், ~அவளும் நானும்]
பயில வந்திடும் இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வரும் வெண்சீர் வெண்டளை ... [வருவேனா நானும்]
இவ்விரு தளைகளும் வெண்பா வகையின.

காய்முன் நிரைவரும் கலித்தளை என்பது ... [வருவாளா அவளும்]
கலிப்பா வகைக்கு உரிய தளையாம்.

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியும் ... [அவளாவது வருவாள்]
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியும் ... [அவளாவது செல்வாள்]
வஞ்சிப்பா வகைக்கு உரிய தளைகளாம்.

4.7.1.3. பாவும் ஓசையும்
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்.
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்.
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்.
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்.

தளைகள் தட்டினால் ஓசை சீர்கெட்டு
பாவரும் செய்யுள் உரைநடை யாகிவிடும்.
 
4.7.2. பாவின் வகைகள், இனங்கள்
தொடையாலும் அடியாலும் இயற்றும் செய்யுள்
பாவே பாவினம் எனவிரண் டாகும்.

அறம் பொருள் இன்பம் வீடு
இவற்றைப் பாவி நடத்தலால் பாவாம்.

பாவகை யோடு ஒத்த இனமாய்
ஒருபுடை யாக வருவது பாவினம். ... [புடை=முறை, ஒழுங்கு]

4.7.2.1. பாவின் வகைகள்
பாவின் வகைகள் நான்கில் அமையும்:
வெண்பா ஆசிரியம் கலிப்பா வஞ்சியென.

நான்கு வகைகளும் இரண்டில் அடங்கும்
ஆசிரி யப்பா வெண்பா என்று.

ஆசிரிய நடையைப் போன்றது வஞ்சி
வெண்பா நடையைப் போன்றது கலிப்பா.

மருட்பா என்பது ஐந்தாம் வகையாம்.
வெண்பா முதலாக ஆசிரியம் இறுதியில்
கொண்டு தொடுப்பது மருட்பா வாகும். ... [யா.வி.]

பாவகை நான்கினுள் உள்ள வகைகள்
பொதுவில் அடியின் வகையால் அமையும்.

4.7.2.2. பாவின் இனங்கள்
பாவகை நான்கிலும் இனங்கள் உண்டு
பாவகை ஓசை ஒட்டிவரப் பாவினம்.

பாவின் பொதுவகை இலக்கணம் குறைந்து
பாவினம் பொதுவே அடியால் அமையும்.

’தாழிசை துறையே விருத்தம் என்றிவை
பாவினம் பாவொரு பாற்பட் டியலும்’ ... [யா.வி.]

பாவுடன் கூடிப் பாவினம் நடக்கும்:
வெண்டாழிசை வெண்டுறை வெளிவிருத்தம் என்றும்
ஆசிரியத் தாழிசை ஆசிரியத் துறை ஆசிரிய விருத்தம் என்றும்
கலித்தாழிசை கலித்துறை கலிவிருத்தம் என்றும்
வஞ்சித் தாழிசை வஞ்சித்துறை வஞ்சி விருத்தம் என்றும்
பாவொடன் கூடிப் பாவினம் நடக்குமே.

தாழம் என்பது தாழ்ந்த ஓசை.
தத்தம் பாவொடு ஒத்த தாழத்தால்
ஒத்த பொருளால் இசைப்பது தாழிசை.

தத்தம் பாவிற்குத் துறைபோன்று நெறியுடன்
ஒத்து நடப்பது துறையெனும் பாவினம்.

தத்தம் பாவொடு ஒழுக்கத்தில் அடியில்
ஒத்து புராணம் முதலிய விருத்தம்
உரைப்பது விருத்தம் என்னும் பாவினம்.
 
4.7.3. பாவகைகள்: அடியும் ஓசையும்

பாடல் ஒன்றைப் படிக்கும் போது
கண்ணில் தெரிவது பாவின் அடிகள்
காதில் கேட்பது பாவின் ஓசை.

பாவகை இலக்கணம் பயிலும் முன்னர்
பாவகை அடிகளின் அமைப்பும் ஓசையும்
முதலில் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

குறளடி சிந்தடி அளவடி நெடிலடி
கழிநெடிலடி என்று முறையே
இரண்டு மூன்று நான்கு ஐந்து
ஆறும் மேலும் சீர்கள் பெற்று
அடிகளின் வகைகள் ஐந்தில் அமையும்.

வெண்பா அகவல் கலிப்பா அளவடி .. [அகவல்=ஆசிரியப்பா]
வஞ்சியெனும் ஒண்பா குறளடி சிந்தடி. ... [யா.கா.21]


’திண்பாமலி செப்பல்’என வெண்பா விற்கும்
’சீர்சால் அகவல்’என அகவற்பா விற்கும்
’சென்றோங்கு துள்ளல்’என கலிப்பா விற்கும்
’நலமிகு தூங்கல்’என வஞ்சிப்பா விற்கும்
ஓசைகள் கூறிக் காரிகை விளக்கும்.


தளைகள் மூலமே ஓசைகள் அமையும்:
ஆசிரியத் தளைகளில் அகவல் கேட்கும்
வெண்டளை இரண்டில் செப்பல் கேட்கும்
கலித்தளை யதனில் துள்ளல் கேட்கும்
வஞ்சித் தளைகளில் தூங்கல் கேட்கும்
தளைகளின் விளக்கம் மேலே அறிக. ... [4.7.1.2]
 
வணக்கம்.

கடந்த ஒரு மாதமாக இந்தக் ’கவிதையில் யாப்பு’ தொடரை நான் மரபுக் கவிதை வரிகளில் எழுதிவந்தாலும், இதுவரை நான் மரபுக் கவிதையின் ஒரு குறிப்பிட்ட பாவகையிலோ பாவினத்திலோ அதற்கென முனைந்து கவிதை எழுதியது இல்லை. இதுவரை இத்தொடரில் நான் எழுதியவை கூட அங்கங்கே வரிகளின் தொடர்ச்சியில் குறள்வெண்செந்துறை, ஆசிரியத் தாழிசை என்ற பாவினங்கள் ஆகலாமே தவிர, ஒரு குறிப்பிட்ட மரபுப் பாவகை ஆகாது என்பதை நான் அறிவேன். செய்யுளின் உறுப்புகள் பற்றி நாம் இதுவரை பேசியதால் இந்த நெகிழ் வடிவத்தில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

இனிமேல் நாம் வெண்பா முதலாகிய நான்கு பாவகைகளும் அவை ஒவ்வொன்றின் மூன்று பாவினங்களும் பற்றிப் பேசும்போது, அந்தந்தப் பகுதிகளைக் கூடியவரையில் அந்தந்தப் பாவகையில்/பாவினத்தில் எழுதிட முயல்வேன். இப்படி முயன்றுதான் நான் வெண்பா போன்ற பாவகைகளை முறையாக எழுதக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவ்வாறு முயல்வது ஈடுபாடு உள்ள யாருக்குமே முடியும் என்பது என் துணிபு.

முதலில் ’கவிஞர்களுக்குப் புலி’ என்றும் ’வன்பா’ என்றும் அழைக்கப்படும் வெண்பாவில் தொடங்குவோம். வெண்பாவின் நயங்களையும் நுட்பங்களையும் வெண்பா வகைகள் மூலமாகவே அறிவோம். இலக்கண விதிகளையும் கருத்துகளையும் வெண்பாவில் சொல்லும்போது, ஒவ்வொரு வரியையும் நினைத்து, தட்டெழுதி, அலகிட்டுச் சரிபார்த்து, பொருள் சரியாக, தெளிவாக வருவதற்காக வரிகளைத் திருத்தி, தேவையில்லாத தொடைவகை அணிகளைக் குறைத்து, எல்லாம் திருப்தியாக வந்த பின்பே நான் இங்குப் பதியப் போவதால், தினமும் மிகவும் கொஞ்சமாகவே அஞ்சலிட முடியும். மரபுக் கவிதையில் ஆர்வம் உள்ளவர்களும் கவிதை ரசிகர்களும் உடனுக்குடன் படித்து என் பதிவுகளின் குறைநிறைகளைப் பற்றி எழுதுவது எனக்கு ஊக்கமளிக்கும்.

ஆர்வலர்கள் தாமும் குறள் வெண்பாவில் தொடங்கி வெண்பா வகைகளில் தம் கவிதைக் கருத்துக்களை வெளியிட முனைந்தால் அவ்வகை எளிதாகி வசப்படும். இரண்டே வரிகளில் குறள் வெண்பா ஒன்று எழுவிட்டு, கீழ்க்கண்ட ’அவலோகிதம்’ மென்பொருளில் உள்ளிட்டுச் சரிபார்க்க, அதுவே அழகாக அலகிட்டுப் பாவகை சரியா என்று சொல்லிவிடும்! குறை சொல்லும் இடத்தைத் திருத்துவதும் எளிது.
Avalokitam - Virtual Vinodh

நேற்றும் இன்றும் பத்துக்கும் மேற்பட்ட வெண்பாக்களை முயன்று அவை முடிவில் சரியாக வந்தது எனக்கு வியப்பும் தெம்பும் அளிக்கிறது!
 
Last edited:
4.7.4. வெண்பாவின் பொது இலக்கணம்

வெண்பா இலக்கணம் மீறமுடி யாததால்
வன்பா எனப்படு மே.

வேற்றுத் தளைகளோ சீர்களோ கூடாது.
வெண்பா புலவர் புலி.

வெண்பா அடியே அளவடி ஆகும்
அளவடி என்பது நாற்சீரால் ஆகுமே.
வெண்டளையால் வந்திடும் செப்பலின் ஓசையே
வெண்பாவின் ஓசை அறி.

4.7.4.1. வெண்பாவின் சீர்
வெண்பா வுரிச்சீராம் காய்ச்சீர்கள் நான்கும்
இரண்டசை கொண்ட இயற்சீர்கள் நான்கும்
இறுதியடி ஈற்றுச்சீர் ஓரசை யாகவும்
வெண்பாவில் வந்திடும் காண்.

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்பன ஈரசை தாங்கிய நான்கு
இயற்சீர். இவற்றுடன் நேரசை சேர்ந்துவரும்
காய்ச்சீர்கள் நாலுமே வெண்பா வுரிச்சீர்.
இவையெட்டும் வெண்பாவிற் கு.
 
வெண்பா எழுதிட ஒரு வழி

இநச் சிறு அறிமுகத்திலேயே நமக்கு வெண்பாவின் சீர் தளை ஈற்றடி விவரங்கள் கிடைக்கின்றன. இதுவே சரியான சமயம். ஆர்வலர்கள் மேற்கண்ட ஐந்து வெண்பாக்களை நகல்-ஒட்டு மூலம் ’அவலலோகிதம்’ மென்பொருள் வலைதளத்தில் உள்ளிட்டுச் சரிபார்த்து வெண்பாவின் இலக்கணக் கூறுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏதேனும் தவறுகள் குறைகள் இருப்பின் என் கவனத்திற்குக் கொண்டுவரலாம்.

வெண்பாக்களை நாமே அலகிட்டால் நமக்கு வெண்பாவின் நெளிவு சுளிவுகள் பிடிபடும். உதாரணமாக, மேலுள்ள முதல் குறள் வெண்பாவினை எடுத்துக்கொள்வோம்.

வெண்பா இலக்கணம் மீறமுடி யாததால்
வன்பா எனப்படு மே.

01. இந்த வெண்பாவில் சொல்வதை நாம் முதலில் உரைநடையில் யோசித்து எழுதிப் பின் சீர் தொகுத்துத் தளையிடுவோம்.
வெண்பாவின் இலக்கணம் என்பது மீற முடியாதது. எனவே அது வன்பா எனப்படும்.

02. அடுத்து இந்த உரைநடை வாக்கியங்களைப் பார்ப்போம்.

சரி: எல்லாமே மூவசை/ஈரசைச் சீர்கள். வெண்பாவில் வரலாம்.
தவறு: ’அது’ என்ற ஓரசை கடைசி அடியின் கடைசிச்சீராகத்தான் வரலாம்.
தவறு: ’முடியாதது’ மூவசையெனினும் நிரையில் முடிவதால் கனிச்சீர். இதை மாற்றவேண்டும்.

03. இப்போடு இந்த உரைநடையை இரண்டடிக் குறள் வெண்பா ஆக்கிட, வாக்கியங்களை இருவரிகளில் எழுதுவோம்.
வெண்பாவின் இலக்கணம் என்பது மீற முடியாதது.
எனவே அது வன்பா எனப்படும்.

தவறு: முதல் வரியில் நான்கு சீர்கள்தான் இருக்கலாம்.
தவறு: இரண்டாம் வரில்யில் மூன்று சீரகளும், இறுதியில் ஓரசையும் வரவேண்டும்.

04. முதல் திருத்தம்:
வெண்பாவின் இலக்கணம் மீற முடியாதது. [’என்பது’ நீக்கிவிட்டோம், பொருள் மாறாததால்.]
வன்பா எனப்படும் அது. [’எனவே’ தேவையில்லை.]

’வெண்பாவின் இலக்கணம்’ = காய் முன் நிரை வருகிறது. காய் முன் நேர் அல்லது விளம் முன் நேர் வரவேண்டும்.
இதை சரிசெய்ய எளிதான வழி:
’வெண்பா இலக்கணம்’
இப்போது இரு சொற்களும் ஈரசையாகிவிட, ’மா (நேர்) முன் நிரை’ எனும் இயற்சீர் வெண்டளை வர, செப்பாலோசை உறுதியாகிறது.

’இலக்கணம் மீற’ = விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை = செப்பலோசை = சரியே.
’மீற முடியாதது’ = மா (நேர்) முன் நிரை = இயற்சீர் வெண்டளை = செப்பலோசை = சரியே.

’வன்பா எனப்படும்’ = மா (நேர்) முன் நிரை = இயற்சீர் வெண்டளை = செப்பலோசை = சரியே.
’எனப்படும் அது’ = விளம் முன் நிரை = நிரையொன்றிய ஆசிரியத்தளை = தவறு!

இதை மாற்றுவதும் எளிது. நமக்கு வேண்டுவது ’விளம் முன் நேர்’. எனவே ஈற்றுச்சீர் நேரசையாகவேண்டும்.
’அது’வை முழுவதும் நீக்கிவிட்டு,
’எனப்படும்’ சொல்லை உடைப்போம்: ’எனப்படு மே/மாம்’
அல்லது ’எனப்படும் காண்’ (சொல்லை உடைக்காமலேயே)

இப்போது நம் வெண்பாவுக்கு இரு வடிவங்கள் கிடைக்கின்றன:
வெண்பா இலக்கணம் மீற முடியாதது.
வன்பா எனப்படு மே. (அல்லது ’மாம்’).

வெண்பா இலக்கணம் மீற முடியாதது.
வன்பா எனப்படும் காண்.

இப்போது எல்லாம் சரியாகிவிட்டதா? இல்லை.

05. இன்னும் ஒரு முக்கிய சிக்கல் உள்ளது: நாம் அடிகளுக்கிடையில் உள்ள தளையைப் பார்க்கவில்லை. அதாவது முதல் அடியின் இறுதியசை அடித்த அடியின் முதலசையோடு தளையில் பொருந்தவேண்டும்.

’முடியாதது வன்பா’ = தவறு. ஏனெனில் ’முடியாதது’ = ’நிரை-நேர்-நிரை’ = புளிமாங்கனி.
வெண்பாவில் எங்கும் கனிச்சீர் வரவே கூடாது.
’மீற முடியாதது’ என்ற சொற்கள் நமக்கு முக்கியம் என்போம்.
சீர்-தளைக்காக அதை மாற்றுவது கூடாது என்போம்.

கொஞ்சம் யோசித்தால் ஒருவழி புலனாகிறது.
’மீற முடியாதது’ ’முடியாதது வன்பா’
’தது வன்’ விளம் முன் நேர் வருவதால் சரி.
’மீ/ற முடி’ மா முன் நிரை வருவதால் சரி.

என்ன செய்வது? சொற்களை வகையுளி செய்வது தவிர வேறு வழியில்லை:
’மீற முடியாதது’ என்ற சொற்கள் முக்கியமானவை என்பதால் அவற்றை
’மீறமுடி யாதது’ என்று வகையுளி செய்யும்போது
’மீறமுடி’ = ’மீ/றமு/டி’ = கூவிளங்காய் ஆகிவிட, இப்போது
’மீறமுடி யாதது’ சொற்களில்
’டி யா’ என்று காய் முன் நேர் வர

எல்லாம் சரியாகிவிடுகிறது! இப்போது நம் வெண்பாவுக்கு இறுதியாக இரண்டு வடிவங்கள்:
வெண்பா இலக்கணம் மீறமுடி யாதது.
வன்பா எனப்படு மே. (அல்லது ’மாம்’).

வெண்பா இலக்கணம் மீறமுடி யாதது.
வன்பா எனப்படும் காண்.

பயிற்சி
முதல் அடியில் அந்த ’மீறமுடி யாதது’ என்ற வகையுளி படிக்கும்போது போய்விட்டாலும் பார்க்கும்போது செயற்கையாகத் தெரிகிறது. ஆர்வலர்கள் இதை மாற்றி இரு இயல்பான சொற்களாக்க முனையலாம், பொருள் மாறாமல்.
 
Last edited:
4.7.4.2. வெண்பாவின் ஈற்றுச்சீர்
வெண்பாவில் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பெனும் வாய்பாடில்
நேர்,நிரை நேர்பு நிரைபென்ற ஒன்றில்
முடிந்திட வேண்டும் இனிது.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நேர்தனியே வந்திட நாளென் றறிக
நிரைதனியே வந்தால் மலர்.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
ஒற்றைக் குறில்தவிர்த்த நேருடன் குற்றுகரம்
சேர்வது காசெனும் நேர்பு; நிரையுடன்
சேர்ந்தால் பிறப்பாம் நிரைபு.

தனிக்குறில் ஒற்றுடன், ஒற்றுடன் ஓர்நெடில்,
அன்றித் தனிநெடில், ஆகிய நேரசை
மூன்றுடன் குற்றுகரம் சேர்ந்து வருவது
காசெனும் நேர்பா வது.

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனியாக, ஒற்றடுத்து வந்திடும் நான்கு
நிரையசை யோடொரு குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு பிறப்பு.

குற்றுகரம் ஆகும் குசுடு துபுறு
உயிர்மெய் எழுத்துகள் காண்.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வந்திடுமோ வாய்பாட்டுச் சொல்?

நாள்சொல் தனிநேர் எனவே வரலாம்
மலர்சொல் வரலாம் தனிநிரை யாவதால்
காசுசொல் ஆகுமே நேர்-பின் உகரம்
பிறப்புசொல் ஆகும் நிரை-பின் உகரத்தால்
என்று நினைவினில் கொள்.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
நாள்,மலர் காசு பிறப்பு.

வேறெந்தச் சீராக நாள்,மலர் கூடாது
ஓரசைச்சீர் என்றா வதால்.

வேறெந்தச் சீராகக் காசு பிறப்பு
வரலாம் எனினும் அதுபோல வந்தாலோ
இந்த வரிகளில் உள்ளது போலவே
ஈரசைச் சீர்களாகும் காண்.

நிரை-நேர் எனப்பிறப்பும் நேர்-நேர் எனக்காசும்
ஈரசைச் சீர்களாகும் காண்.


நாள்மலர் காசு பிறப்பில் முடிகிற
வெண்பாக்கள் கீழே உள.

நண்பனே நண்பனே ஞாபகம் வந்ததே
நெஞ்சினில் நாம்பிரிந்த நாள்.

பூவெல்லாம் பூவல்ல புன்னகை பூக்க
அவள்பார்க்கும் கண்கள் மலர்.

கேட்பதற்கு நாதியில்லை வேலையும் இல்லை
அவனொரு செல்லாத காசு.

எல்லாப் பிறப்பும் பிறப்பல்ல ஈசனருள்
கிட்டும் பிறப்பே பிறப்பு.
 
Last edited:
4.7.4.3. நாள் மலர் காசு பிறப்பு சான்றுச் சொற்கள்
கீழ்வரும் சான்றுகளை நோக்கத் தெரியுமே
நாள்மலர் காசு பிறப்பு.

க-கல்-கா-கால் சொற்களில் நேர்தனி வந்திட
நாளெனும் வாய்ப்பாடா கும்.

கட-கடல் மற்றும் கடா-கடாம் சொற்கள்
நிரைதனி வந்து மலரெனும் வாய்பாடால்
ஆவது என்று உணர்.

படுஎனும் சொல்லில் தனிநிரை காணலாம்.
பட்டு எனும்போது குற்றுகரம் சேர்வதால்
நேர்பெனும் காசா வது.

தகாஎனும் சொல்லில் தனிநிரை காண
தகாது எனும்சொல்லில் குற்றுகரம் சேர்வதால்
ஆகும் நிரைபு, பிறப்பு.

சிறுபான்மை முற்றுகரம் கூட வருவதுண்டு:
சொல்லு, கதவு என.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொல்தனியே
கூம்பு-சாய்த்து ஆடு-பாரு தந்து-நில்லு அஞ்சு-நீர்க்கு
--சொற்களைச் சேர்க்கும் கழித்தல் குறிநீக்கி--
எல்லாமே நேர்பெனும் காசு.

வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
கீழ்வரும் சங்க இலக்கியச் சொற்கள்
முடங்கு குவவு விரைந்து அலங்கு
பலவு இரவு உறாது இராது
அனைத்தும் நிரைபு பிறப்பு.

4.7.4.4. நாள் மலர் காசு பிறப்பு திருக்குறள் சான்றுகள்
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்
வள்ளுவரின் சான்று சில.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். ... [நாள்]

வெண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ... [மலர்]

இருள்சேற் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ... [காசு]

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ... [பிறப்பு]
 
4.7.4.5. நாள் மலர் காசு பிறப்பு: அனைத்துவகைச் சான்றுகள்
வெண்பாவின் ஈற்றடியில் ஈற்றுச்சீர் ஓரசையாய்ப்
பைந்தமிழ்ச் சான்றுகள் பார்க்கும் பொழுது
இறுதி இரண்டடிகள் இங்கு.

நாள்மலர் காசு பிறப்பு அனைத்து
வகைச்சான்றும் கீழே உள.

கீழுள்ள சான்றுகள் ஔவையின் பாக்களே
வேறு இரண்டு தவிர்த்து.

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. ... [தனிக்குறில்: நேர்: நாள்]
---காளமேகப் புலவர் இஞ்சிக்குடி தாசி கலைச்சியை இகழ்ந்து பாடியது.

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல். ... [தனிக்குறிலொற்று: நேர்: நாள்]

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா. ... [தனிநெடில்: நேர்: நாள்]

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். ... [தனிநெடிலொற்று: நேர்: நாள்]

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. ... [குறிலிணை: நிரை: மலர்]

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேள் இட்ட கலம். ... [குறிலிணையொற்று: நிரை: மலர்]

கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. ... [குறில்நெடில்: நிரை: மலர்]

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். ... [குறில்நெடிலொற்று: நிரை: மலர்]

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு. ... [தனிக்குறிலொற்று+உகரம்: நேர்பு: காசு -- தனிக்குறில்+உகரம் வரக்கூடாது.]

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. ... [தனிநெடில்+உகரம்: நேர்பு: காசு]

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. ... [தனிநெடிலொற்று+உகரம்: நேர்பு: காசு]

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. ... [குறிலிணை+உகரம்: நிரைபு: பிறப்பு]

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றைடம் எல்லாம் சிறப்பு. ... [குறிலிணையொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]

உரையுள் வளவியசொல் சொல்லா ததுபோல்
நிரையுள்ளே இன்னா வரைவு. ... [குறில்நெடில்+உகரம்: நிரைபு: பிறப்பு]
---பழமொழி நானூறு 68

நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து. ... [குறில்நெடிலொற்று+உகரம்: நிரைபு: பிறப்பு]
 
4.7.4.6. செப்பலோசையின் வகைகள்
வெண்பா இயல்வது செப்பலெனும் ஓசையால்.
ஏந்திசைச் செப்பலோசை தூங்கிசைச் செப்பல்
ஒழுகிசைச் செப்பல் எனும்மூன்று ஓசைகளும்
செப்பலின் ஓசை வகை.

காய்ச்சீர் எதுவென்று ஏற்கனவே பார்த்துவிட்டோம். ... [4.7.4.1. வெண்பாவின் சீர்]
வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வருமே.
இவ்விரண்டும் ஏந்திசையின் கூறு.

ஏந்திக்கொள் என்றாலே கையாலே தூக்குதலும்
கையினிலே தாங்குதலும் ஆவதுபோல் வெண்பாவின்
ஏந்திசையில் செப்பலோசை ஏந்தியேந்தி வந்திடவே
காய்ச்சீரும் வெண்சீரின் வெண்டளையும் மாத்திரமே
ஏகமாகக் கூடிவரு மே.

மேல்வந்த நம்செய்யுள் ஏந்தலோசை கேட்டீரோ?
கீழுள்ள வள்ளுவரின் கீர்த்திமிகு பாக்குறள்தான்
ஏந்திசைக்கு ஏற்புடைத்த சான்று.

யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07


தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் ... [குறளை அலகிட]
கூவிளங்காய் தேமாங்காய் காசு

வெண்பா முழுதும் இயற்சீர் பயில்கிற
வெண்டளை வந்திடத் தூங்கிசைச் செப்பல்
ஒலிப்பது கேட்குமே நன்கு.

இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
இவ்விரண்டும் தூங்கிசையின் கூறு.

தூங்கிசைச் செப்பலின் சான்றாய் அடுத்து
வருவது ஓர்குறட் பா.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
---திருக்குறள் 040:01


தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் ... [குறளை அலகிட]
தேமா புளிமா நாள்

இருவகை வெண்டளையும் வந்திடும் வெண்பா
ஒழுகிசைச் செப்பல் களம்.

ஒழுகிசைச் செப்பலின் சான்றாய் அடுத்து
வருவது ஓர்குறட் பா.

தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
---திருக்குறள் 040:06


கூவிளம் தேமா புளிமாங்காய் புளிமா
கருவிளம் தேமா பிறப்பு ... [குறளை அலகிட]

4.7.4.7. செப்பலோசை வெண்பாப் பயிற்சி
நாமும் முயல்வோமா மூவகை வெண்பா?
ஒருபொருள் பற்றியே மூவகை ஓசையில்
ஈரடி வெண்பா இவை.

முதல்வரும் ஏந்திசை தூங்கிசை பின்னர்
அதன்பின் ஒழுகிசை யாம்.

பாழடைந்த கேணியிலே பேயொன்று ஓலமிடும்
போவோர்க்கு அவ்வழியே தீது.

கூவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
தேமாங்காய் கூவிளங்காய் காசு

அழிந்த கிணற்றில் ஒருபேய் கதறும்
வழியது போனால் பயம்.

புளிமா புளிமா புளிமா புளிமா
கருவிளம் தேமா மலர்

அழிந்த கிணற்றினிலே பேயொன்று கத்தும்
வழியது போனாலே தீது.

புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
கருவிளம் தேமாங்காய் காசு


பயிற்சி 1.
அழி-வழி என்று அடியெதுகை வந்திட இந்த ஏந்திசையை மாற்றமுடியுமா?
பாழடைந்த கேணியிலே பேயொன்று ஓலமிடும்
போவோர்க்கு அவ்வழியே தீது.

இப்படி மாற்றினால் என்ன தவறு?
அழிந்துவிட்ட கேணியிலே பேயொன்று ஓலமிடும்
வழிப்போவோர் யாவர்க்கும் தீது.


பயிற்சி 2.
வேறெப்படி மாற்றலாம்?
[தகவல்: ’பாழ’ போலவே இரண்டாம் அடியிலும் நெடில்பின் ழ-வருக்கம் வந்தால் அடியெதுகை வரும்.
’மனவுறுதி’ என்ற பொருளில் கா-வில் தொடங்கும் சொல் சரிவரும்.]

பயிற்சி 3.
’கேணியிலே’ என்ற சொல்லை ’காட்டினிலே’ என்றும் மாற்றலாம். காட்டில் பேயைப் பார்க்கக்கூடும், ஆனால் ’பாழடைந்த காட்டினிலே’ என்பது கொஞ்சம் செயற்கையாக உள்ளது. வழக்கமாகப் பேயுலாவும் வேறு எந்த இடங்கள் இங்கு சரிவரும்?

பயிற்சி 4.
கீழ்வரும் வெண்பா ஒலிப்பது ஏந்தலில்.
தூங்கல் ஒழுகல் குறட்பா வகையில்
இதேகுறட் பாவினை மாற்று.

தூளியாட்டித் தாலாட்டித் தூங்காத பாப்பாவைத்
தூளியாட்டித் தூங்கிவிட்டாள் தாய்.


*****
 
4.7.4.8. வெண்பாவின் தளை
வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்;
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்டளையில் வெண்சீர் இயற்சீர் எனவே
வகைகள் இரண்டு உளது.

இயற்சீரின் வெண்டளையில் மாமுன் நிரையும்
விளம்முன்னே நேருமென மாறியே வந்திடும்
வெண்பா இயற்சீர் என.

வெண்சீரின் வெண்டளையில் காய்முன்னே நேர்வரும்
வெண்பாவின் காய்ச்சீர் என.

4.7.4.9. வெண்பாவின் அடி
நாற்சீர் பயிலும் அளவடி மட்டுமே
வெண்பாவில் வந்திட, முச்சீரில் சிந்தடியாய்
ஈற்றடி நின்றிட, ஈற்றடியின் ஈற்றுச்சீர்
ஓரசையாய் மேற்சொன்ன வாறு.

பாவகை பாவினம் பற்றி அடிவகை
மாறுபட்டு வந்திடு மே.

அடிகள் அறிந்திடப் பாவின் இனத்தின்
அடிவகை எல்லை யுமே.

எல்லை அடிகளின் எண்ணிக்கை யாவது
கீழெல்லை மேலெல்லை என்று.

வகையே அடிகளின் சீர்களின் எண்ணிக்கை
சிந்தடி நேரடி என்று. ... [நேரடி=அளவடி]

வெண்பா அடிகளுக்கு மேலெல்லை யில்லையாம்
கீழெல்லை யாக இரண்டு.

இரண்டடியும் மூன்றடியும் நாலடியும் இன்னும்மேல்
என்று குறட்பாவும் சிந்தியலும் நேரியலும்
பஃறொடையும் ஆன வகைகள் முறையே
அடிகளின் எல்லை பெறும்.

முச்சீரே வந்திடும் வெண்பாவின் ஈற்றடிக்கு
முக்கா லடியென்றும் பேர்.

ஓரடி முக்கால் குறள்வெண்பா எல்லையாம்
ஈரடி முக்காலே சிந்தியல் எல்லையாம்
மூவடி முக்கால் அளவடி எல்லை
பலவடி முக்காலே பஃறொடை எல்லை
எனவும் வகுப்பது உண்டு.
 
4.7.4.7. செப்பலோசை வெண்பாப் பயிற்சி விடைகள்

பயிற்சி 1. விடை
அழிந்துவிட்ட கேணியிலே பேயொன்று ஓலமிடும்
வழிப்போவோர் யாவர்க்கும் தீது.

’ஓலமிடும் வழிப்போவோர்’ என்ற சீரடிகளில் ’கூவிளங்காய் கருவிளங்காய்’ என்று ’மா முன் நிரை’ வந்திடக் கலித்தளையாகும். வெண்பாவில் கலித்தளை வருதல் கூடாது.

பயிற்சி 2. விடை
’காழ்’ என்றால் ’மனவுறுதி’. இநச் சொல்கொண்டு இவ்வாறு எழுதிட அடியெதுகை வரும்.
பாழடைந்த கேணியிலே பேயொன்று ஓலமிடும்
காழிருந்தால் அவ்வழியே போ.

பயிற்சி 3. விடை
’பாழடைந்த கோவிலிலே’ ’பாழடைந்த வீட்டினிலே’ ’பாழடைந்த பங்களாவில்’ என்றெல்லாம் எழுதலாம்.

பயிற்சி 4. விடை
பாட்டிலே தூளியில் தூங்காக் குழவியை ... [அல்லது ’தூங்கா மகவினை’]
ஆட்டியே தூங்கினாள் தாய்.

தூளியாட்டித் தாலாட்டித் தூங்காக் குழவியை
தூளியாட்டித் தூங்கினாள் தாய்.

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top