• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
நண்பர் வாக்மி அவர்களே!

நீங்கள் என் பாடலில் ’நெருடல்கள்’ சுட்டுவது எனக்கு மகிழ்வும் ஊக்கமும் அளிக்கிறது!

1. ’பேயுடன் ஆடும் பித்தன்’ என்பது சிவனின் இயல்பைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற உண்மை. அதே நேரம் அவன் தாயாகவும் தந்தையாகவும் அருள்செய்வான். காய்ப் பருவத்திலே பழுக்காதே, கனிந்த பருவத்திலும் இனிக்காதே இருக்கும் எனக்கு சிவனின் இந்த இயல்பு அச்சமாக, அன்னியமாகத் தெரிவதால், அவனது அருளை வேண்டுகிறேன்.

2. ’வாயினாற் போற்றல் இல்லை’ என்று திருத்திக்கொள்கிறேன்.

3. ’நகத்திலே உணர்வைப் போல’ என்ற உவமையைப் பாராட்டியதற்கு நன்றி.

4. ’இல்லையும் உண்டும் என்றே’ என்பதை ’இல்லை எனப்படுபவைகளும், உண்டு எனப்படுபவைகளும்’ என்னும் பன்மை தொனிக்குமென்று எழுதினேன். எனினும் உங்கள் ’நெருடல்’ நியாயமாகப் படுவதால் இதை ’இல்லையும் இருப்பும் என்றே’ என்று மாற்றிக்கொள்ளுகிறேன்.

நான் முன்பே சொன்னதுபோல் உங்கள் ’நெருடல்’களை வரவேற்கிறேன். கவிஞர் நோக்கில் சிந்திக்கும் ஒரு வாசகர் எனக்குக் கிடைத்தது என் பேறு. நீங்களும் மரபுக் கவிதை முயலுமாறு மீண்டும் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,
ரமணி

*****
 
நண்பர் வாக்மி அவர்களே!

நீங்கள் என் பாடலில் ’நெருடல்கள்’ சுட்டுவது எனக்கு மகிழ்வும் ஊக்கமும் அளிக்கிறது!

1. ’பேயுடன் ஆடும் பித்தன்’ என்பது சிவனின் இயல்பைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற உண்மை. அதே நேரம் அவன் தாயாகவும் தந்தையாகவும் அருள்செய்வான். காய்ப் பருவத்திலே பழுக்காதே, கனிந்த பருவத்திலும் இனிக்காதே இருக்கும் எனக்கு சிவனின் இந்த இயல்பு அச்சமாக, அன்னியமாகத் தெரிவதால், அவனது அருளை வேண்டுகிறேன்.

2. ’வாயினாற் போற்றல் இல்லை’ என்று திருத்திக்கொள்கிறேன்.

3. ’நகத்திலே உணர்வைப் போல’ என்ற உவமையைப் பாராட்டியதற்கு நன்றி.

4. ’இல்லையும் உண்டும் என்றே’ என்பதை ’இல்லை எனப்படுபவைகளும், உண்டு எனப்படுபவைகளும்’ என்னும் பன்மை தொனிக்குமென்று எழுதினேன். எனினும் உங்கள் ’நெருடல்’ நியாயமாகப் படுவதால் இதை ’இல்லையும் இருப்பும் என்றே’ என்று மாற்றிக்கொள்ளுகிறேன்.

நான் முன்பே சொன்னதுபோல் உங்கள் ’நெருடல்’களை வரவேற்கிறேன். கவிஞர் நோக்கில் சிந்திக்கும் ஒரு வாசகர் எனக்குக் கிடைத்தது என் பேறு. நீங்களும் மரபுக் கவிதை முயலுமாறு மீண்டும் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,
ரமணி

*****

நண்பர் ரமணி அவர்களுக்கு,

1. நான் ஒரு கவிஞன் இல்லை. தமிழ் மீது ஆறாக்காதல் கொண்ட ஒரு ரசிகன். அவ்வளவே.

2. எனது நெருடல்களை மதித்து ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

3. ஆருக்கும் அடங்காத நீலி..........என்ற ஹரிகேசநல்லூராரின் பாடல் நினைவுக்கு வந்ததால் காளியுடன் ஆடினான் தில்லையம்பலத்திறைவன் என நினைத்து எனது நெருடலை எழுதினேன்.

நன்றி.
 
ஜகத்குரு தரிசனம்
33. சம்புசொல் அன்றோ வசம்பு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சிறுநீ ரகத்தில் சிரமம் சிகிச்சை
உறிந்தது செல்வம் உளைச்சலென் உள்ளத்தில்
ஐயன் அருளில் அடியேன் குணம்பெற்றென்
மெய்தேற நான்வேண்டு வேன். ... 1

இதுபோன்ற போதில் இனியவராய்ப் பேசிப்
பொதுவில் கருணை பொழியும் பெரியவர்
இச்சம யம்கடிந்தே ஏசியது கண்டவர்
அச்சம் எழநின் றனர். ... 2

பண்ணும் அதர்மத்தைப் பற்றியெல் லாரும்தான்
எண்ணாது என்னிடம் இங்கு வருகின்றார்
தான்செய் அதர்மம் தவறை உணர்வதில்லை
நானென்ன செய்வது நன்று? ... 3

முன்னோர் தரும முறைக்கென்று வைத்திருந்தார்
நின்று விளைநிலம் நீர்ப்பந்தல் வைக்க!
இவரதை விற்றுண்டால் இன்னல் வராதா?
தவறுசெய் தால்துன்பம் தான். ... 4

உறைத்தது வந்தவருக்(கு) உள்ளம் நெகிழ
உறுதிமொழி தந்துநின்றார் உற்றதர்மம் நீர்ப்பந்தல்
என்றவர் செய்யவே; இன்முனி கேட்டவரை
மன்னித்துச் சொன்னார் மருந்து. ... 5

கடையில் வசம்பு கணிசமாய் வாங்கி
அடிவயிற் றில்பூ(சு) அறைத்தே; சிலநாளில்
எல்லாம் சரியாகும் என்றார் தருமத்தில்
நல்லதே செய்துவா நன்கு. ... 6

பத்துநாள் சென்றதும் பத்தரும் மீள்வந்தார்
அத்தனை துன்பமும் ஆவியாய்ப் போனதென்றார்!
நம்முடல் உள்ள நலிவுகள் போக்கிடும்
சம்புசொல் அன்றோவ சம்பு! ... 7

--ரமணி, 09/07/2015, கலி.24/03/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9623/

*****
 
பிரதோஷத் துதி: வேண்டுமோ வரம்?
(அளவியல் நேரிசை வெண்பா)

கண்ணுதல் தீக்கனலும் கண்டத்தில் காளமும்
வெண்ணீ றணிந்திலங்கு மேனியும் - பண்ணுறும்
கன்னற் பதிகமும் கண்ணுறக் காதுற
இன்னும் வரம்வேண்டல் ஏன்? ... 1

செஞ்சடை மீதுறும் திங்களொடு கங்கையொடு
அஞ்சேல் எனும்கை அழகுமயம் - வஞ்சி
இடம்கொண் டருள்செயும் ஈசனுருக் காணில்
விடையென வேண்டுவரம் வீண்! ... 2

மானும் மழுவும் மதியுடன் மத்தமும்
ஆனந்த மாய்த்தாங்கும் ஆடலை - வானவர்
மானிடர் போற்றி மகிழ்வது கண்ணுற
ஏன்வரம் வேண்டும் இனி? ... 3

திங்களும் ஞாயிறும் செவ்வாயர் கண்ணாக
வெங்கும் வியாழனாய் வெள்ளிமலை - தங்கியே
பொங்கு சனியாய் புதனாக புத்தியிலே
தங்க,வரம் வேண்டுமோ தான்! ... 4

[வியாழன் = குரு; புதன் = தேவன்]

வண்டமிழும் வேத வடமொழியும் பாரதம்
கொண்ட பிறமொழியும் கூத்தனின் - வண்ணம்
தனைப்பாடும் கல்வியில் தானறிந்தே உய்யும்
மனமெவண் வேண்டும் வரம்? ... 5

காலன் உதைத்த கழற்பாதம் சென்னியில்
மேலுறக் கொண்டார் வினைகளைக் - காலற
வீழ்த்தி யருள்செய் விடையோன் கழலிணைகாண்
வாழ்விலேன் வேண்டும் வரம்? ... 6

பாலும் தெளிதேனும் பன்னீரும் சந்தனமும்
கோலம் வழிந்தோடும் கூத்தனுரு - மேலுறும்
உள்ளத்தில் ஊறும் உவகையை வேறுவரம்
அள்ளித் தருமோ அகம்? ... 7

வேதம் தமிழிசை விண்முட்டும் ஓசையில்
தீதுகொளச் சுற்றிவரும் தோலுடையான் - பேதம்
அகற்றிடும் ஞானம் அகத்தில் சொரியத்
தகுந்ததோ வேறுவரம் தான்? ... 8

கழலிணை காணலே காக்கும் வரமாம்
குழகனாய்க் கண்ணுறும் கூத்தன் - அழகினைப்
பாதாதி கேசம் பருகுத லாம்வரம்
போதா தெனிலென் புகல்? ... 9

பிறப்போர் வரம்மீள் பிறப்பும் வரமாம்
இறப்போர் வரமாம் இகம்வா - லறிவன்
தரிசனம் மேலுலகில் தங்குவ தானால்
வருவினையும் ஆகுமே மாண்பு! ... 10

--ரமணி, 13/07/2015, கலி.28/03/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
34. எப்போதும் ராமநாமம்
(எண்சீர் விருத்தம்: கூவிளம் காய் காய் காய் ... காய் காய் மா மா)

உத்தர மாநிலத்தில் பணிசெய்து வாழும்நம்
. ஊர்க்கார ராயொருவர் ஓர்நாள் காஞ்சிச்
சித்தரைக் காணவந்தார், பிரச்சினையாம் அவருக்கு:
. செவிகேட்கும் எப்போதும் ஏதோ பேச்சு!
அத்தனை யும்ராம தூதனென்று பேர்பெற்ற
. ஆஞ்சநேயர் குரலென்றே உள்ளம் கொண்டார்
இத்தகு தெய்வீக சக்தியவர்க் கிருப்பதனை
. வேறெவரும் அறியாதே ஒளித்தல் ஆமோ? ... 1

கூடிய நண்பர்கள் தூண்டுதலால் அம்மனிதர்
. குறிசொல்ல ஓர்நாளை ஒதுக்கி வைத்தார்
கூடரும் சக்திபயன் பிறமனிதர் பெறும்வண்ணம்
. கூட்டுதலை விழைந்தவரைச் சுற்றிக் கூட்டம்
பாடதற்குப் பணமென்று அவரேதும் கொள்ளவில்லை
. பலித்ததிவர் சிலபேர்க்குச் சொன்ன குறியே!
நாடுவோர்க் கிவர்சொல்லால் நலிவுசில தீர்ந்ததெனில்
. நன்மைசெயும் இவர்மனத்தில் அமைதி இல்லை! ... 2

காஞ்சியில் பெரியவரை தரிசித்தே அலுவலகக்
. காரியத்தில் சென்னைக்கு மாற்றம் கேட்டார்
ஆஞ்சநே யர்கருணை பூரணமாய் உனக்கிருக்கே
. அவரிடமே வேண்டிக்கொள் என்றார் முனிவர்!
பூஞ்சையாய்க் கவலைபடர் முகத்துடனே இவர்சொன்னார்
. புரைதீர்க்கும் சொல்தீய தேவ தையோ
ஆஞ்சநே யர்சொல்லாய் நான்கொண்ட ஊகத்தால்
. அடியேனுக் கிரவினிலே தூக்கம் இல்லை! ... 3

என்துயர் பெரியவர்தான் தீர்த்தருள வேண்டுமென்றே
. இங்குவந்தேன்! கருணைமுனி சொன்னார் தீர்வு:
என்றுமே இராமரது நாமத்தைச் செபம்செய்வாய்
. இம்மடத்தின் குருவான போதேந் திராளின்
இன்னருள் அதிஷ்டானம் உன்மனத்தில் சாந்திதரும்
. இங்குசென்று சிலகாலம் வாசம் செய்வாய்
கும்பகோ ணம்பக்கம் இப்பெரியார் அதிஷ்டானம்
, கோவிந்த புரமென்றோர் ஊரில் உளதே. ... 4

பின்னையோர் நாளினிலே பத்தரவர் வந்துநின்றார்
. பெரியவரை தரிசித்தே ஆசி பெறவே
என்னவோய் ஆஞ்சநேயர் தன்ராம சேவைக்கே
. இப்போது போய்ட்டாரா என்றார் முனிவர்,
தன்முகத் தில்குறும்பு தவழ்ந்திடவே! எப்போதும்
. சத்தியரா மர்நாம செபத்தில் உறைவோர்
பொன்மனச் செம்மலென்றே பூவுலகில் செல்வரென
. போதேந்தி ராள்முனிவர் வாழ்க்கை சொலுமே! ... 5

--ரமணி, 16/07/2015, கலி.31/03/5116

உதவி:
http://periva.proboards.com/thread/9683/

*****
 
நீர்மை காப்போம்!
(கலித்துறை: தேமா மா மா மா காய்)

ஆற்று நீரில் அற்றைத் தேவை நம்முன்னோர்
காற்று வாங்கிக் கால்கள் நடந்தே முடித்தனரே
நேற்று வரையில் நிலையாய்க் கிடந்த ஊருணியைப்
போற்றி ஊரார் பொன்னாய்க் காத்தே வாழ்ந்தனரே. ... 1

ஊற்று நீராய் உதவும் கிணற்றின் பாசனத்தில்
ஏற்றம் இறைத்தே ஏர்க்கால் உழுதே விளைத்தனரே
தோற்ற மெல்லாம் தோன்றும் தெய்வ உருவென்றே
ஆற்றும் அறத்தில் அன்பாய்க் கூடி வாழ்ந்தனரே. ... 2

வீட்டில் கிணறு விழைந்தே பின்னர் வாழ்ந்ததிலே
கூட்டுக் குடும்பம் கொய்யாக் கனியாய்ப் பெருகியதே
ஈட்டும் பொருளை இருத்தும் குணத்தார் தலையெடுத்தே
நாட்டில் வளநீர் நலியச் செய்தே தழைத்தனரே. ... 3

இன்றோ அடுக்காய் இல்லம் கட்டி நிலநீரைக்
குன்றாய் உயர்ந்த கூரைத் தொட்டி சேமித்தே
என்றும் இல்லம் எங்கும் பாயும் நீரெனவே
நன்றாய்க் கறந்தே நன்மை செய்தும் பயனிலையே! ... 4

நிலமேற் கழிவு நீரிற் கழிவு சேர்த்தேநாம்
நிலத்துள் தங்கும் நீரின் தூய்மை கெடச்செய்தே
இலத்தில் குடிநீர் ஈட்டப் பணத்தைச் செலவழித்தே
நலத்தை நாட நலிவே தங்கும் வாழ்வினிலே! ... 5

குன்றை வெட்டும் குவாரித் தொழிலால் மழைபெய்தல்
குன்றி வயல்கள் குற்று யிராக ஆனதுவே
என்றும் இளமை என்றே உயிர்க்கும் இயற்சூழல்
இன்று கயவர் ஏரி தூர்த்தே சாய்த்தனரே. ... 6

நாளை வாழும் நம்சந் ததியார் இவையெல்லாம்
ஆளா ளுக்கே அகத்தில் உணரச் செய்கடனைக்
கோளாய்க் கொண்டே குறியாய்க் நாமும் இயங்குவதில்
நீளும் துயராம் நீரின் குறையைத் தீர்த்திடுவோம்! ... 7

--ரமணி, 24/07/2015, கலி.08/04/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
35. குழந்தைகள் சாமிக்கு வழிபாடு!
(அளவியல் இன்னிசை வெண்பா)

அந்தநாள் பாலர்கள் ஆடுவிளை யாட்டிலும்
இந்துமா தொல்வழக்கம் இல்லா திருக்காது
கோவில் விழாக்காண் குடந்தைக் குழந்தையுடன்
மேவிவிளை யாடு மிறை! ... 1

கூடைக் களிமண்ணைக் குஞ்சுக் கரம்பல
கூடிப் பிசையவே கூடும் இறையுரு!
வெண்ணைகொள் தாழியும் வேங்கடவன் வாகனமும்
வண்ணத்தில் வந்திடும் வாகு! ... 2

பற்பலவாய் தெய்வம் பரியூர்தி மூஞ்சூறாம்
கற்பனை ஊற்றெடுக்கக் கற்ற குழந்தைகள்
மந்திரம் சொல்லும் மழலைக் குரலிலே
கந்தனை யெண்ணியே காப்பு. ... 3

சிவாய நமஹ திருமால் நமஹ
சிவநந்தி யேபோற்றி தேவியே போற்றி
கரிமுக னேநமஹ கந்தனே போற்றி
பரிவுடன் எங்களைப் பார்! ... 4

காவிரி யோரம் தருக்கள் சொரிந்திடும்
பூவும் இலைபுல்லும் பூசையில் அர்ச்சனை!
வெண்ணீறும் குங்குமமும் மேனி யலங்கரிக்கப்
பண்ணும் அமர்க்களப் பாங்கு! ... 5

நடைவண்டிச் சட்டத்தில் நட்டுவெச்ச சாமி
உடைகலைய ஒய்யார ஊர்வலத் தில்வரக்
காவலுக்கு தெய்வம் கருப்பண சாமியென
ஏவலுக்குக் காத்திருக்கு மே! ... 6

இப்படியோர் சாமி எதிர்வரவே காஞ்சிமுனி
சப்பரத்தின் முன்னே திருமட வீதியிலே!
தண்டத்தால் வந்தித்துத் தண்கரத்தால் கும்பிட்டுக்
கண்பார்த்தே நின்றார் கனிந்து. ... 7

குழந்தைகள் சாமிக்குக் கொள்ளைகற் கண்டும்
பழம்தேங்காய் நைவேத்யம் பண்ணிடச் சொல்லி
விநியோகம் செய்ததில் வீதியில்கை லாயப்
பனியாய் மலர்ந்தது பற்று. ... 8

திருக்கரம் ஆசீர்வ திக்கக் குழந்தைத்
திருவிழா ஊர்வலம் சென்றது மேலே
இளம்வயதில் கொள்ளும் இறைப்பற்று மேலே
வளரவே செய்தார் வழி! ... 9

இளம்வயதில் இங்ஙன் இறைப்பற்று ஓங்கிக்
களம்கொண்டே வாழ்வில் களிப்பும் கனிவும்
நிலைபெறச் செய்தே நியமங்கள் நாடும்
கலைகற்பித் தல்நம் கடன். ... 10

--ரமணி, 27/07/2015, கலி.11/04/5116

*****
 
பிரதோஷத் துதி: உன்னருள் என்றுவரு மோ?
(அளவியல் நேரிசை வெண்பா)

அந்தி மயங்கி அருளும் பொழுதிலே
சிந்தனை என்ன சிறுமனமே! - எந்தை
நடமாடும் ஆனந்தம் நாடவுன் னுள்ளே
விடைவேண்டும் எண்ணம் விழும். ... 1

வானத்தில் மேகத்தின் வண்ணங்கள் ஆலய
கானத்தில் மோனம் கலக்குமே! - ஏனின்னும்
தன்னைச்சிந் தித்தே தளர்வாய் சிறுமனமே
மன்றுளாடி பாதம் மருந்து. ... 2

விழுநீர் அகத்தில் விழுமம் தருமே!
ஒழுகிடும் எண்ணம் ஒழித்தே - கழுவாயாய்
அஞ்செழுத்து மந்திரம் ஆளும் அமைதியில்
நெஞ்சே இளைப்பாறு நின்று. ... 3

கோவில் திருச்சுற்றில் கோவணன் பூக்கோலம்
மேவிடும் உள்ளம் மினுக்கிடுமோ? - பாவம்
தொலைக்கப் பரமனின் தொல்கழல் சேர்வாய்
உலையும் உளத்துக்(கு) உரம். ... 4

நான்பிறக்க நீபிறந்தாய் நான்தான் இனியென்றே
ஏனென்னை வைத்தாயோ இவ்வாழ்வில்? - மானேந்தி
மீதுனக்கு மையன்மை மேவினால், என்மனமே
ஏனெனும் எண்ணந்தான் ஏது? ... 5

[மையன்மை = மையல்; மையன்மை செய்து (திவ். பெரியாழ்.2,3,3)--அகராதி.]

அறிவேன்நான் என்றாய் அறியேன்நான் உன்னைத்
தறிக்க இயலாத தன்மை - பொறுத்தது
போதுமென்(று) உன்னுடன் போராடும் ஆயுதமாய்
ஏதுள்ள(து) இந்நாள் எனக்கு? ... 6

ஆயுதம் கண்டிலேன் ஆன்மப் பொறியினைத்
தாயுமாய் நின்றருளும் தந்தையே - சேயென்
மனத்திலே இட்டுநீர் மாயை எரிப்பீர்
தினவுறும் காட்டிலே தீ! ... 7

கண்படும் காட்சியில் காமுறும் என்னுள்ளம்
புண்பட்டு வீங்கிப் புரையோடும் - கண்ணுதல்-உம்
கண்பட்(டு) அறுத்தெனது காயம் குணமாகிப்
பண்பட்டே சேர்ப்பீர் பலம். ... 8

அறத்தில் ஒழுகிடும் அன்பென்(று) இருந்தும்
இறுக்கும் உலகியல் ஈனம் - சிறுத்தமனம்
தன்னை விரித்துத் தருவாய்ப் பயன்தரும்
இன்நிலை கிட்டுவது) என்று? ... 9

வெண்ணீ றணிந்துளத்தில் வேற்றுமை விட்டொழித்தேன்
கண்ணீர் சொரியக் கழல்பிடித்தேன் - உண்ணீராய்
என்னுள் பரவியென் ஈனம் குறையவே
உன்னருள் என்றுவரு மோ? ... 10

--ரமணி, 29/07/2015, கலி.13/04/5116

*****
 
இலந்தையார் எழுதிய ஓர் அற்புதக் கவிதை இங்கே:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/c-cF03o6xdI
கீழே என் கவிதை...

கைவினை எல்லாம் கணிணியிலே!
(அறுசீர் விருத்தம்: தேமா மா/விளம் காய் - அரையடி)
பள்ளிப் பருவ நினைவுகளில்
. பஞ்சில் தூசு நீக்கிடவே
அள்ளிக் கையால் வில்லடித்தே
. அறையின் தரையே பஞ்சாகத்
துள்ளி விழுந்தே பரவிடவே
. தூய பஞ்சைக் கைதிரித்தே
வெள்ளைப் பஞ்சுப் பட்டைகள்
. வீங்கும் கட்டுகள் செய்தோமே! ... 1

பட்டைப் பஞ்சைத் தக்கிளியில்
. பாங்காய்த் நுனியில் கைகோர்த்தே
வட்டச் சக்கரம் விரல்சொடுக்கில்
. வாகாய் நன்கு சுழன்றிடவே
பட்டை நூலிழை நூற்பாக
. பக்குவம் பெற்றே மெல்லிழையாய்
சிட்டுக் கையால் நூல்நூற்றே
. சீராய்ச் சுற்றித் தொடர்ந்தோமே! ... 2

சட்டம் சுழற்றிக் கிடைநிலையில்
. தக்கிளி பருத்த நூலிழையைச்
சிட்ட மாகச் செய்தெமது
. சிந்தனை மிக்க ஆசானார்
திட்ட மிட்ட எண்களிலே
. சேர்த்தவை கைத்தறி நெசவுக்கு
இட்டுத் தந்த நிகழ்வுகளும்
. இன்று நெஞ்சில் நிழலிடுமே! ... 3

கைவினைக் கல்விப் பயிற்சியிலே
. கையால் நூற்றோம், இழைப்புளியால்
கைகள் ஓட்டி மரத்துண்டைக்
. கலையாய் இழைத்தே நேர்கோட்டில்
கைவாள் கொண்டே அறுத்தவற்றைக்
. கைசேர்த் துளியால் துளையிட்டே
கைகள் வீசிப் பந்தடிக்கும்
. கிரிக்கெட் மட்டையும் செய்தோமே! ... 4

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
. கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
மெய்த்தவம் அதுபோல் இல்லையென
. மேதகு கவிமணி சொன்னாரே
எத்தொழில் எதுவும் தெரியாமல்
. இருக்கும் நிலையில் இந்நாளில்
கைவினை யெல்லாம் கணிணியெனும்
. கையறு நிலையில் குழந்தைகளே! ... 5

--ரமணி, 08/08/2015, கலி.23/04/5116

*****
 
பிரதோஷத் துதி: நடேசனுக்கோர் நவரச வெண்பாச் சரம்
(அளவியல் நேரிசை வெண்பா)

நகை (சிரிப்பு)
கைத்தீ அணைக்காதோ கங்கை? நிலவிடும்
மெய்த்தீ அணைக்கவோ மேவினாள் - மைவிழியாள்?
வெண்பனியில் கண்கனல் வீட்டுமோ? வாட்டாதோ
உண்விடம் தீயாய் உமை? ... 1

[நிலவிடும் = நிலவுகின்ற, நிலவு+இடும்; வீட்டுதல் = அழித்தல்]

அழுகை (ஓலம்)
பிரம்மன் உருத்திரனாய்ப் பெற்றதில் ஓலம்
பிரம்படி விம்மிப் பிளிற்றி - இரவில்
எரிவனத்தில் ஓலம் இடுவீர்-உம் கண்ணீர்
உருத்திராட் சம்கொள் ளுரு. ... 2

இளிவரல் (இழிவு)
வெண்ணீறு பூசியே வெள்விடை யேறிநீர்
பண்ணுகின்ற ஆட்டம் பரிகாசம்! - உண்ணும்
கொடுவிடத்தில் ஆடையே கோவணமாய்ப் போக
நடமாடும் நீரோர்கை நாட்டு! ... 3

மருட்கை (வியப்பு)
மூவுலகை மால்கொண்டார் மூன்றடியில், உம்பாதம்
தாவுகையில் அண்டம் தகருமே - மேவுசக்தி
அண்டம் விளைக்கும் அணுவாய் உயிர்பலவாய்
உண்டுநீர் கொள்வீர் உவந்து. ... 4

அச்சம்
கால்-அகலும் நீரொரு காலகாலன் ஆகுவீர்
மேலுறும் கையில் விடதரம் - சூலன்
எரிவனம் ஆடினால் என்னுளம் அஞ்சும்
தெரிவதெவண் தெய்வமென தென்று? ... 5

[விடதரம் = பாம்பு]

பெருமிதம் (உள்ளக் களிப்பு)
மாலயன் தேடியே மாய்ந்த பெருமிதமோ?
காலன் உதைத்த களிப்பிலோ? - வேலனிடம்
கற்ற பெருமிதமோ? காலம் கடந்தநிலை
உற்ற களிப்போ உமக்கு? ... 6

வெகுளி (சினம்)
நெற்றிக்கண் காட்டவுமை நேர்கொண்டார் நக்கீரர்
உற்ற சினத்தில் உமைபிரிந்தீர் - பெற்ற
வெகுளியில் ஓர்தலை வீட்டினீர் நானோ
வெகுளியென் மேலேன் வெறுப்பு? ... 7

உவகை (மகிழ்ச்சி)
உமையாள் இருக்கும் உவகை, அழித்தே
அமைக்கும் மலர்ச்சி அகத்தில் - உமைபத்தர்
போற்றும் மகிழ்வோர் புறமிருக்க கங்கையின்
ஊற்றாய்ப் பெருகும் உவப்பு. ... 8

அமைதி (சாந்தம்/நிறைவு)
ஆலமர் செல்வன் அமைதி அடியவர்
மேலமர் மோனமாய் மேவியே - காலனை
வெல்லுமெய் ஞானம் விளவித்தே தன்னிலை
சொல்லும் நிறைவே சுகம். ... 9

பலத்துதி
பித்தன்நான் ஏதோ பிதற்றினேன் நீயுமோர்
பித்தனென் றாவதால் பேயாய்-என் - சித்தம்
பிடித்தேயென் வாழ்வில் பிரச்சினைகள் தீர்த்தென்
பிடிவாதம் தன்னைப் பிடுங்கு. ... 10

--ரமணி, 12/08/2015, கலி.27/04/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
36. வேப்பம்பூ பச்சடி
(எழுசீர் விருத்தம்: காய் விளம் விளம் தேமா . காய் காய் காய் )

வேப்பம்பூ புளியுடன் வெல்லமும் நாங்கள்
. வேதமுனி அவைதன்னில் சமர்ப்பித்தோம்
வேப்பம்பூ பச்சடி செய்விதம் என்ன
. மேதையவர் எங்களிடம் கேட்டாரே
யாப்பென்றே அவரிடம் ஓர்முறை சொன்னோம்
. யாதுமறி யாதவர்போல் செவிமடுத்தார்
சாப்பாட்டுக் கித்துடன் தேனுடன் நெய்யும்
. சற்றேசேர் பச்சடியில் சுவைகூடும்! ... 1

பக்குவமாய்ச் செய்தபின் பச்சடி அம்பாள்
. பாதத்தில் நைவேத்யம் செய்வீரே
முக்கண்ணி நம்மிடம் வசப்படு வாளே
. முன்வந்தே அருள்செய்து காத்திடுவாள்
அக்கணத்தில் கேட்டது சரியெனச் சொல்வார்
. அகமுடையான் பச்சடியை உண்டாலே!
சிக்கலின்றி பணிகளைச் செய்வரே செய்வோர்
. சீர்மிக்க பச்சடியின் மகிமையன்றோ! ... 2

பக்குவமாய்ப் பச்சடி செய்திடச் சொல்லிப்
. பணித்தாரே திருமடத்தின் பிரசாதம்!
சிக்கனமாய்ப் பச்சடி தந்தவர் கேட்டார்
. தெரிகிறதா நான்தந்த காரணமே?
தக்கபடிப் பெரியவர் சொல்வது உள்ளம்
. தங்கிடவே என்றுரைத்தாள் ஓர்மங்கை
முக்கண்ணி பக்தியில் எந்நாளும் நீங்கள்
. முழுகிடவே தந்தேன்நான் என்றாரே. ... 3

புதுக்கோட்டை பத்தராய்த் தரிசனம் செய்தே
. புண்ணியங்கள் பெற்றோமே நாங்களெலாம்!
எதுசொன்னா லுமதிலோர் தத்துவம் காட்டி
. எங்களுக்கு வழிசொல்லும் காஞ்சிமுனி
பொதுவான அறமென உள்ளதைச் செய்தால்
. பொலிவுடனே வாழ்ந்திடலாம் என்றாரே
எதுநல்ல காரியம் என்றுநாம் தேர்ந்தே
. இறைபக்தி உடன்சேரச் செய்வோமே! ... 4

--ரமணி, 13/08/2015, கலி.28/04/5116

*****
 
பிரதோஷத் துதி:
ஆற்றுச் சடையனுக்கோர் அறுசுவை வெண்பாச் சரம்
(அளவியல் நேரிசை/இன்னிசை வெண்பா)

கைப்பு (கசப்பு)

கசப்பே மருந்தொன்றின் கண்ணுறும் தன்மை
பசப்பிய பாற்கடல் பாம்பின் - விசத்தை
விருந்தென்று கொண்டே மிடறினில் தாங்கும்
மருந்தீசா என்னுள்ளே வா! ... 1

பசப்பும் பகட்டும் பலவாய் இளைமைப்
பசிதீர வாழ்ந்த பலனில் - கசக்குதே
இன்று சுயதருமம் ஈசனே நீயெனக்கு
நின்றருள் செய்வதெவண் நேர்? ... 2

இனிப்பு

இடங்கொளும் பெண்ணால் இனிப்போ? அதுவும்
அடியார் துதிதரும் அன்போ? - நடமாடும்
ஈசநின் உண்மை இயல்பாம் இனிப்பென்று
பேசினால் அண்டுமோ பேய்? ... 3

இனித்திடும் வாழ்வென்றே இன்றுநாள் செல்லப்
பனித்தசடை பால்நீறு பார்த்தே - மனித்தப்
பிறவியிதில் உன்னை மறவாதே வாழும்
உறவுதரக் கேட்டேன் உமை. ... 4

புளிப்பு

புளித்தேதான் போகாதோ புண்ணியா? என்றும்
தளராதே நீயாடும் தாண்டவம்? - இன்னும்
பிறப்பிலியாய் ஞாலமெலாம் பேணியே வாழ்வில்
இறப்பும் தருவது என்று? ... 5

புளித்த வினைமாவு பொங்கியெழும் வாழ்வில்
அளித்திடும் தாண்டவனாய் ஆடும் - களிற்றுரியன்
என்வினை போக்கி எனக்கருள்நீ செய்யவே
என்னசெய்ய வேண்டும்நான் இன்று? ... 6

உவர்ப்பு (உப்பு)

உப்பிய நஞ்சை உவர்த்தலின்றிக் கண்டத்தில்
தப்பாது கொண்ட தவமணியே! - உப்பக்கம்
செஞ்சடை வேணியுடன் சேர்ந்தாடக் கண்டுமகிழ்
நெஞ்சத்தில் நேச நெகிழ்ப்பு. ... 7

[உவர்த்தல் = அருவருத்தல், வெறுத்தல்;
உப்பக்கம் = முதுகு; வேணி = பின்னல்]

பிறப்பாம் உவரியிது பெய்வினை மாரி
உறவை விளைக்கும் உவர்மண் - அறுப்பதில்
நெல்லில் மிகுவது நெற்பதரே என்றாலும்
அல்லல் களைந்தே அருள். ... 8

[உவரி = உப்புக் கடல்; மாரி = மழை; ]

துவர்ப்பு

மாதுளையச் செய்தே மறுபிறப் பித்தனை
யாதும் விளையாட்டே யாண்டுமே - வேதன்நீ
தாணுவாய்த் தாழத் தழைப்பித்த சக்தியைப்
பேணுதலன் றோவுன் புகழ்? ... 9

[மாதுளையச் செய்தே = மாதுவாம் உமையை வருத்தியே;
தாணு = பட்டமரம்]

மாதுளை வாழைக்காய் மாவடு மஞ்சளென்றே
தோதாய் உணவில் துவர்ப்பெனவே - ஏதுசுவை
ஆயினும் உன்னருள், ஆதியே என்வாழ்வில்
தோயவே செய்வாய் துவர்ப்பு. ... 10

கார்ப்பு (காரம்)

ஆகாரம் நஞ்சாம் அலங்கார ஓங்காரன்
சீகாரம் பாடவெழும் சீவனுரு - சேகாரம்
என்பும் அரவும் எருதும் எனவேநீ
அன்புடன் ஆளும் அரன். ... 11

[ஆகாரம் = உடம்பு; சீகாரம் = பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் பாடிய பண்;
சேகாரம் = சேகரித்த பொருள்]

காரம் பலவகையாய்க் காணவரும் வாழ்விதன்
சாரம் எதுவெனில் சக்கையே - வேரில்
விளைவது யாதெனினும் வேதியனுன் பேரே
உளம்வரக் கேட்டேன் உமை. ... 12

கடைக்காப்பு

அறுசுவை உன்னிடம் ஆள்வதாய் நானும்
பொறுப்பில்லா தேபாப் புனைந்தேன் - சிறுவன்யான்
என்சுவை உன்னிடம் ஏற்றிக்கண் டாலும்நீ
என்றும் தெவிட்டா இனிப்பு. ... 13

--ரமணி, 27/08/2015, கலி.10/05/5116

*****
 
பிரதோஷத் துதி:
எருதேறும் ஈசனருள் என்றோ?
(முப்பத்திரண்டு சீர் ஆசிரிய விருத்தம்:
கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா மா x 7)


கண்ணெதிரே சூரியனும் மேற்கில் சாயும்
. கதிரவனின் கிரணங்கள் நீளப் பாயும்
. . கண்களிலே இதமாக வழிந்தே ஓடும்
. . . கன்றுடனே பசுக்கூட்டம் கொட்டில் நாடும்
. . . . கையினிலே மேய்ப்போனின் கோலும் போகும்
. . . . . கால்தவழும் வாத்துகளும் ஓரம் போகும்
. . . . . . கழனியிலே நெற்கதிரைத் தென்றல் ஓட்டும்
. . . . . . . காற்றினிலே மணியோசை தனியாய்க் கேட்கும். ... 1

வண்ணமெலாம் திரளாக வானில் பாயும்
. வானளாவும் மேகங்கள் வண்ணம் தோயும்
. . வட்டமிடும் பறவையெலாம் கூட்டை நாடும்
. . . வடிநீரின் சலசலப்பில் கால்வாய் ஓடும்
. . . . வயலெல்லாம் பைங்கூழாய்க் கண்ணில் ஒட்டும் ... ... [பசும்பயிர்]
. . . . . வரப்பெல்லாம் பொன்துகளாய்க் கண்ணில் தட்டும்
. . . . . . வந்ததெலாம் போனதுவாய் ஆகும் நேரம்
. . . . . . . வழிகளெலாம் ஆலயத்தின் வாசல் சேரும். ... 2

தண்ணொளிரும் சிவலிங்கம் நீரில் ஆடும்
. தலைவீழும் திரவியங்கள் வழிந்தே ஓடும்
. . . தன்மவொலிப் பண்ணொலியில் ஒன்றாய்ச் சேரும் ... ... [தன்மவொலி = வேதவொலி]
. . . . தான்மறந்தே நெஞ்சங்கள் அன்பில் ஆறும்
. . . . . தாழ்சடையன் வெண்ணீறை நெற்றிக் கிட்டே
. . . . . . தலையெல்லாம் ஒன்றாகும் சூடம் தொட்டே
. . . . . . . தட்சிணமாய் உமைபாகன் கோவில் சுற்றே
. . . . . . . . தன்வினையைத் தாங்கவரம் கூடும் பற்றே. ... 3

எண்ணத்தில் இவையெல்லாம் கண்டும் கேட்டும்
. எழுதுவதில் இறைநெறியைப் பெரிதும் வேட்டும்
. . என்னுள்ளம் இகவாழ்வில் சுகமே நாடும்
. . . எண்ணத்தில் களிம்பேற்றி வினையே தேடும்
. . . . என்நாவில் ஐந்தெழுத்தே உருளும் போதும்
. . . . . ஏதேதோ எண்ணங்கள் இடையில் மோதும்
. . . . . . எருதேறும் ஈசனருள் ஓர்நாள் என்றோ
. . . . . . . இகவாழ்வில் கிட்டாது போமோ நெஞ்சே! ... 4

--ரமணி, 10/09/2015, கலி.24/05/5116

*****
 
பாரதி நினைவுத் துதி: என்றும் புதியவன்!
(அளவியல் நேரிசை வெண்பா)

செந்தமிழ்ப் பாட்டாலே சீர்மீட்டுத் தந்தவன்
எந்தையாய் எந்தாயாய் எம்முயிராய் - விந்தையாய்
சிந்தனையை மேம்படுத்திச் செவ்விதின் செப்பனிட்டே
எந்நாளும் வாழ்வான் இனி. ... 1

பழம்பொருள் என்றே பகலவன் இந்து
தழைதுளிர் மின்னொளி தண்ணீர் - வழக்கில்
ஒழிந்தே படியுமோ ஒட்டடை? என்றும்
அழியாத வானம் அவன். ... 2

என்றும் புதிதாய் இமைதரும் காப்பெனப்
பொன்றாது வாழ்ந்திடும் போதகனை - நன்றேநாம்
ஊரில் உலகத்தில் உள்ளத்தில் பின்பற்றப்
பாரதி வாழவைப் பான். ... 3

--ரமணி, 11/09/2015, கலி.25/05/5116

*****
 
அரசியல்வாதி
(கலிவிருத்தம்)

பணத்தில் ஊறிப் பணித்தே வாழ்வர்
கணப்பாய்ப் போர்வை கணிப்பாய்ப் பார்வை
பிணத்தில் கூடப் பிணித்தல் தேடும்
குணத்தில் ஊறிக் குணித்தல் செயலே. ... 1 ... [குணித்தல் = ஆலோசித்தல்]

சிரத்தில் இலாதது சிரிப்பில் காட்டுவர்
உரத்தே பேசுவர் உரித்தே வீசுவர்
பரத்தை யிடமும் பரித்தல் உண்டு ... ... [பரித்தல் = ஆளுமை]
தரத்தைப் போலியாய்த் தரித்தலும் உண்டே. ... 2

எனதே இல்லை எனினும் கொள்ளும்
மனதில் தேடின் மனிதம் ஓடும்
தனதைக் காப்பர் தனியே பார்ப்பர்
இனத்தைக் காட்டி யினிக்கும் வாழ்வே. ... 3

அளத்தல் ஆயிரம் அளித்தல் பூஜ்யம்
களத்தில் இறங்கிக் களிக்கும் போது
உளத்தில் உள்ளதை உளிசா திக்க
குளத்துக் குருதியில் குளிக்கும் வாழ்வே. ... 4

அரசியல் வாதி அரிசியில் ஊழல்
இரக்கம் இல்லா இரிகம் கொண்டே ... ... [இரிகம் = இதயம்]
துரத்தியே வாழும் துரிச்சை மாந்தர்
சிரத்தை அறுத்தே சிரிப்பாய் காளீ! ... 5

--ரமணி, 15/09/2015, கலி.29/05/5116

*****
 
பிள்ளையார் சதுர்த்தி துதி: வேரினைக் காணும் நாள்வரவே...
(குறும்பா)

வேழமுகன் உன்னழகைப் பாட
ஆழவுளம் வந்தருளி யாடு
. . தினைத்துணையே எறும்பாக
. . உனைக்கொளவே குறும்பாவில்
ஏழைநானும் படுவேனே பாடு! ... 1

எத்தனையோ உன்னுருவில் சின்னமே
அத்தனையும் அர்த்தமுடன் உன்னவே
. தந்தியுருக் களமாகும்
. சிந்தனையும் வளமாகும்
சித்தமெலாம் உன்நாமம் பின்னுமே. ... 2

எத்தனையோ உன்பிறப்பில் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. . தந்தையிடம் செற்றனையே
. . தந்திமுகம் பெற்றனையே
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே. ... 3

ஆனைமுகம் அன்புருவாய் ஆகுமே
தானெனவே எண்ணுவதும் போகுமே
. . அருகினிலே அருகுவினை
. . அருளொளியாய்ப் பெருகுமுனை
வானமுதல் என்றுவையம் காணுமே. ... 4

பாரதத்தின் பழமைவளம் மீள்வரவே
சாரதரின் நாதனுன்றன் தாள்தருவாய் ... ... [சாரதர் = பூதகணத்தார்]
. . ஊழலெலாம் வாழ்வறவே
. . சூழுவினை தாழ்வுறவே
வேரதனை யாம்காணும் நாள்வரவே! ... 5

--ரமணி, 17/09/2015, கலி.31/05/5116

*****
 
காஞ்சி பெரியவா குழுமத்தில் மகாபெரியவர் மீது S. Sriram என்பவர் எழுதியுள்ள
சமஸ்கிருத துதி கீழே.

श्री महास्वामि योग चक्र स्तवम्
Authored by Sri S Sriram

सिद्धयोगीश्वर प्रियामृत पूर्ण ज्ञान सागरा
मूलाधार रूपिणे भक्तानुग्रह कारण न्यान मूर्त्ते॥ १

तत्वार्थ रूपरमणीय मनोनाश रञ्जने
स्वधस्सिद्धस्स्वाधिष्ठाने वसति मनोहर:॥२

भू क्षेत्र वससि कामकोट्यालंकृत कामाक्षि प्रिया
अत्भुत शिरो मनिपुर सकल शास्त्र प्रपण्डिता॥३

हृदयप्रिय प्रेमेश्वरो हृदयालय प्रतिष्ठिता
अनादि रूप अनाहतःस्वरूप ब्रह्मैव केवलम्॥४

श्रुति रक्षको श्रुति गीतप्रियो श्रुति शब्द: स्वरूपा
विशुद्धि रूपो तव प्राणस्य जीवो चतुर्वेद:॥५

भ्रुवोर्मध्य ध्यानैक्य नाथा इन्दु अलंकृत ईश:प्रिय:
अज्ञान निवृत्ति कारणा आज्ञा ज्ञानं ददातु देवो॥६

जटामकुटालंकृत रुद्राक्षप्रियधारि प्रदोषपूजकाले
सहस्रारार्चन प्रीतिभावेन शिवशक्तैक्य सदा शिवं कुरु॥ ७

*****

சமஸ்கிருதப் பாடலைத் தமிழ்ப் பாடலாக அடியேனை மொழிபெயர்க்கச் சொன்னார்கள்.
அடியேனின் மொழிபெயர்ப்பு கீழே. சரியாக உள்ளதா என்று அன்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

*****

அருள்மிகு மகாபெரியவர் யோகசக்கரத் துதி
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா . விளம் மா தேமா)

நெஞ்சினுள் துறவி யாக
. நின்றிடும் உருவே போற்றி
தஞ்சமாம் உயிர்கள் தம்மைத்
. தாங்கிடும் அமுதே போற்றி
வஞ்சமில் கடலாய் ஞானம்
. வதியவே நடந்தாய் போற்றி
அஞ்சவே செய்யும் மூலா
. தாரமாய் ஆனாய் போற்றி! ... 1

தத்துவப் பொருளே போற்றி
. தாயெனத் திளைப்பாய் போற்றி
வித்திடும் மனம ழித்தே
. வினைகளை அறுப்பாய் போற்றி
தத்தமாய் மனதைத் தந்தால்
. தன்னிலை லயிக்கச் செய்தே
சித்தமாய் சுவாதிட் டானம்
. சேர்த்தருள் பரமே போற்றி! ... 2

பூமியில் காம கோடி
. புண்ணிய பீடம் ஏற்றுச்
சேமமே அருளும் வேந்தே
. தேவிகா மாட்சி யன்ப
நேமமாய் மனிதர் வாழும்
. நெறியினைத் தருவாய் போற்றி
தாமரை மணிபூ ரத்தில்
. சாத்திரம் அருள்வாய் போற்றி! ... 3

வினாவென ஏது மில்லா
. விதயமாம் ஆல யத்தில்
சனாதன மூர்த்தி யாகச்
. சகலமும் அருள்வாய் போற்றி
அனாதியாம் பரமாய் நெஞ்சில்
. அளாவிடும் ஒளியே போற்றி
அனாகதத் தனிமை வாழும்
. ஆரணண் உருவே போற்றி! ... 4

வேதமே காத்த ருள்வாய்
. வேதகா னத்தில் நேசம்
வேதமாம் ஒலிகள் கொள்ளும்
. விழுப்பொருள் உருவே போற்றி
வேதனின் மூச்சுக் காற்றாய்
. மேவியே திகழும் நான்கு
வேதமே உயிராய் வாழும்
. விசுத்தியின் உருவே போற்றி! ... 5

தற்பதம் புருவம் மத்தி
. தந்திடும் ஒளியே போற்றி
நெற்றியில் கனலைக் கொள்ளும்
. நிலவணி ஈசர் நேசன்
கற்பனை யுள்ளம் கொள்ளும்
. கருமையஞ் ஞானம் போக்கி
நெற்றியில் திகழும் ஆஞ்ஞை
. நிலையருள் ஒளியே போற்றி! ... 6

விருப்புறு அணியாய் சந்தி
. வேளையில் தலையின் உச்சி
உருத்திராட் சமணி மாலை
. ஊடுறும் வடிவே போற்றி
அருச்சனை வழிபா டாக
. ஆயிரம் விழைவாய் போற்றி
உருத்திரை பிணைந்தே காணும்
. உருசதா சிவமே போற்றி! ... 7

--ரமணி, 19/09/2015, கலி.02/06/5116

குறிப்பு:
பாடல் 1.
தஞ்சமாம் = தஞ்சமாகும்; வதியவே = தங்கவே, வசிக்கவே;
அஞ்சவே செய்யும் மூலாதாரம் = மூலாதாரச் சக்கரம் கீழே உள்ள அதர்ம சக்கரங்களே
நம் வினைகளுக்குக் காரணம். மூலாதார மூர்த்தியாகப் பிள்ளையார் அமரும்போது இந்தக்
கீழினச் சக்கரங்கள் மூடப்படுகின்றன. இறைவன்/குருவின் அருளின்றி நாம் மூலாதாரச்
சக்கரத்தைச் சுழலவைக்க முடியாது. அதே சமயம், அது மூடாமல் இருக்கும்வரை
கீழுள்ள சக்கரங்களின் ஆதிக்கத்தில் நம்முள் தர்மமே மேலோங்கும். எனவேதான்,
மூலாதாரத்தை வசப்படுத்துவது ஓர் அஞ்சவைக்கும் சாதனையாகும்.

கீழுள்ள புத்தகத்தில் இதுபற்றிய விளக்கம் உள்ளது:
http://www.himalayanacademy.com/media/books/loving-ganesha/loving-ganesha.pdf

பாடல் 3.
நேமமாய் = நியமத்துடன்

பாடல் 5.
தற்பதம் = ’தத்’ என்னும் பதம், பிரம்மஞானம் (தான் பிரம்மமே என்னும் ஞானம்)

பாடல் 7.
உருத்திரை = உமை, பார்வதி.

*****
 
Last edited:
'வல்லமை' மின்னிதழில் இன்று வெளியான பாடல் கீழே.
http://www.vallamai.com/?p=62749

01. அரசமர கணபதியே ஆறுதல்!
(குறும்பா)

அரசமரம் கீழமர்ந்த கணபதியே
தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
. தென்காற்றின் அலையோட
. என்காற்றும் நிலையாக(க்)
கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே. ... 1

எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
. ஓங்காரம் உள்ளமுற
. ரீங்காரப் பள்ளமறும்
சித்தமெலாம் உன்நாமம் பதியுமே. ... 2

ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
. முக்கண்ணன் நாமமெலாம்
. எக்கணமும் சேமமென
வேகுமன வேதனைகள் ஓரம்போம்! ... 3

சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
வந்தவினை போனதெனத் தள்ளுவனே
. தும்பிக்கைக் காப்பினிலே
. நம்பிக்கை கூப்புவனே
வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே. ... 4

என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
. தந்திமுகன் வந்தனையில்
. சிந்தனையில் பந்தமறும்
என்நாவில் உன்பெயரே தேனாமே. ... 5

--ரமணி, 07/10/2015, கலி.20/06/5116

*****
 
பிரதோஷத் துதி: மாலை நடந்தரும் மாதேவா!
(சந்தக் கலித்துறை: தானன தந்தன தானன தந்தன தானானா)

கம்பன் பாடல்: ஆழநெ டுந்திரை யாறுக டந்தவர் போவாரோ?

மாலைந டந்திடும் வேளைந டந்தரும் மாதேவா!
சோலைவ ளந்தனில் சூழுமி ளந்திரை நீயன்றோ!
சூலியி டம்வர மேவுமி ளம்பிறை தோய்சென்னி
தோலணி அந்திரன் மேலணி அங்கதம் தோள்மேலே! ... 1 ... [அந்திரன் = கடவுள்]

நந்திசி ரந்தனில் வந்துந டஞ்செயும் நல்லானே!
சிந்தையு ரம்பெற வந்தப ரம்பொருள் நீயன்றோ?
பந்தம றுந்திடும் விந்தைநி கழ்ந்திட வாராயோ?
வந்துவ ரந்தர வேண்டும னந்தனில் வாழாயோ? ... 2

ஆரணம் தொண்டையில் வானதி மண்டையில் ஆனந்தன்
பூரணன் பண்ணுறும் நீரினில் தண்ணுறும் பூசைதான்
ஊரினில் உன்னருள் ஊருணி யின்சுவை யாயேறும்
காரணன் மந்திரம் காப்பருள் சிந்தனை காலூன்றும்! ... 3

போதுக ழிந்திடும் மேனிய ழிந்திடும் பூஞ்சைதான்
போதும னந்தனில் பூரித மென்னுளம் பூவாதோ? ... ... [பூரிதம் = மிகுகளிப்பு]
வேதன னந்தனை வேள்விம னந்தனில் கொண்டேயென்
சேதம ழிந்திட வாதுவி ழுந்திடும் சேர்வென்றோ? ... 4

வாரியெ ழுந்திடும் வாசுகி நஞ்சுணி வான்மூலா!
மாரியெ ழுந்திடும் வானவ ளந்தரும் மாதேவா!
வேரிலெ ழுந்திடும் வேதம ளந்திடும் வீடேதான்
தேரவெ ழுந்திடும் சோதியை யென்னுளம் சேராதோ? ... 5

--ரமணி, 09/10/2015, கலி.22/06/5116

*****
 
சித்தலப் பாக்கப் பொண்ணு!
(அறுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் காய்)

சித்தலப் பாக்கப் பொண்ணுதான்
. செவத்த மாமனப் பாக்கணும்னு
வெத்தலப் பாக்கு வாயுடன்
. வீட்டுப் பக்கமாப் போனாளாம்
முத்தலை வேலன் வாழ்விலே
. முழுசா எப்பவும் கொடுக்கலையே
பொத்தலு சேலைத் தலைப்பிலே
. புன்ன கையில மறைச்சாளே!

--ரமணி, 12/10/2015

*****
 
கேள்விகள்
(அறுசீர் விருத்தம்: தேமா மா காய் அரையடி)

என்னை எனக்குப் புரியலையே
. எண்ணம் எதுவும் சம்மதமாய்
முன்னர் இன்று நாளையென
. மூன்று பொழுதும் ஓடிடுமே
இன்னும் மூச்சில் பேச்செனவே
. இங்கே நானும் இருந்திடவே
பின்னர் ஓர்நாள் போனதுமே
. பேயென் றேதான் அலைவேனோ?

பேயென் றேதான் அலைந்தேநான்
. பித்தன் உன்னைக் காணுவனோ?
நீயென் னையாட் கொள்ளவென
. நீசன் நானும் மாறுவனோ?
சேயென் றேநீ கொண்டாலும்
. தேறல் இன்றித் தள்ளுவனோ?
தீயைக் கையில் ஏந்தும்நீ
. திண்மை ஞானம் தருவாயோ?

--ரமணி, 12/10/2015

*****
 
தமிழும் வடமொழியும்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

இடமுறையும் தமிழ்மொழியே யென்தாயின் மொழியாமே
வடமொழியே தந்தையென வலமுறையும் மொழியாமே
நடமாடும் ஈசனவன் நலந்தரவே அருள்மொழியாய்த்
திடமாக இவையிரண்டும் தேன்மொழியென் றுணர்வோமே!

--ரமணி, 12/10/2015

*****
 
அன்புடையீர், வணக்கம்.

இன்று வெள்ளிக்கிழமை வல்லமை மின்னிதழில் 'தெய்வ தரிசனம்' தொடரில் படைப்பு பற்றிய ரிக்வேத நாஸதீய சூக்தம்,10.129-இன் எளிய மொழிபெயர்ப்பாகக் குறும்பா வடிவில் நான் எழுதிய ஏழு பாடல்கள் வெளிவந்துள்ளன. பாடல்கள் கீழே. அன்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

http://www.vallamai.com/?p=62950

அன்புடன்,
ரமணி

*****

தெய்வ தரிசனம்:
02. பரம்பொருளும் படைப்பும்
(குறும்பா)

[ரிக்வேதம் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது சூக்தமாக
உள்ளது ’நாஸதீய சூக்தம்’. இப்பாடல் அதன் எளிய மொழிபெயர்ப்பு.]

இல்லையென்றோ உள்ளதென்றொ ஏதுமிலை
தொல்லுலகம் தொடுவானம் போதுமிலை
. மூடுபனி கூடியதோ
. கூடெனவே மூடியதோ
வல்லிருளோ வெள்ளமதோ பேதமிலை! ... 1

மரணமென்றும் மோட்சமென்றும் இல்லாதே
இருள்தனியே பகல்தனியே செல்லாதே
. அதுவொன்றே மூச்சற்றே
. அதிர்ந்ததுவே பேச்சற்றே
உருவெமென வேறெதுவும் கொள்ளாதே! ... 2

இருளொன்றே இருளென்றே மூடியதே
உருவற்ற வெள்ளம்போல் கூடியதே
. ஒன்றெனவே ஓர்பொருளே
. தன்நிலையை ஓர்பொருளே
எரிதவத்தால் தன்னுள்ளே தேடியதே! ... 3

உள்ளியதில் ஓராசை எழுந்ததுவே
உள்ளத்தின் மூலவித்தாய் விழுந்ததுவே
. தன்னிதயம் ஆயுமுனி
. உண்மையென மாயையென
உள்மனத்தின் உணர்வினிலே இழிந்ததுவே! ... 4

கதிர்பலவாய் சூனியத்தில் விரிந்ததுவே
அதிர்வாற்றல் அடியெனவே இருந்திடவே
. சந்ததிகள் உருவாக
. விந்தொன்றே கருவாக
அதிவேகம் உச்சியிலே திரிந்திடவே! ... 5

யாரறிவார் எங்கிருந்து படைப்பிதுவே
யாருரைப்பர் இதுவென்ன புடைப்பெனவே
. கடவுளரும் தேவருமே
. படைத்தபினே மேவினரே
யாரறிவார் எங்கிருந்த உடைப்பிதுவே! ... 6

படைப்பிதனைப் படைத்ததுவே புரப்பதுவோ
படைப்பிதனைப் படைத்ததுவே புரந்திலையோ
. பரவான வெளியினிலே
. அரசாளும் ஒளியவனே
படைப்புண்மை அறிவானோ அறிந்திலையோ? ... 7

--ரமணி, 12/10/2015, கலி.25/06/5116

*****
 
நகைச்சுவை வெண்பா: முழி பிதுங்கும் மொழிமாற்றம்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

சாஸ்திரம் என்பது சாத்திரம் ஆகுமே
ஆஸ்திகன் என்பவன் ஆத்திகன் ஆவனே
நாஸ்திகன் என்பவன் நாத்திகன் ஆவனே
வாஸ்து உருவமோ வாத்து? ... 1

வஸ்து எனும்சொலை வத்து வெனச்சொல
அஸ்த மனமது அத்த மனமாக
மஸ்து எனும்சொலே மத்து வெனச்சொல
அஸ்து எனிலது அத்து? ... 2

ஈஸ்வரன் என்பவர் ஈச்சுரன் ஆவதால்
சாஸ்வதம் என்பது சாச்சுதம் ஆகுமோ?
ஸ்வப்னம் எனும்பதம் சொப்பனம் ஆக
ஸ்வயம்பு உருவமோ சொம்பு? ... 3

--ரமணி, 12/10/2015

*****
 
சமஸ்கிருத மூலத்தின் மெட்டுக்கேற்பச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதியது. பாடக்கூடியவர்கள் யூட்யூப் மூலத்தை வைத்துக்கொண்டு தமிழில் பாடிப்பார்க்கவும்.
(மீள்பதிவு)


ஶ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம்
(எழுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் விளம் விளம்/மா காய்)

முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் இயற்றிய
சமஸ்கிருத தோத்திரத்தின் தமிழ் யாப்பு


இசை வடிவம்:
http://www.youtube.com/watch?v=M0VNJ6KT2XY

நல்மனம் போற்றிடும் இன்னெழில் மாதவி
. சந்திரன் சோதரி பொன்னொளியே
பன்முனி சூழ்ந்திடும் முத்திய ளித்திடும்
. நன்மொழி இன்மொழி மறையொளியே
இன்கம லத்தினில் வானவர் போற்றிடும்
. தேன்குணம் பெய்திடும் சாந்தியுரு
வென்றிடு வாய்மது சூதனன் காமுறு
. ஆதிலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 1

புன்மைகள் கலியினில் நீக்கிடும் பாவையே
. நன்மறை யுருவினள் வேதமயம்
வன்கடல் தோன்றிய மங்கள உருவமே
. மந்திரம் உறைபவள் மந்திரமாம்
இன்னருள் தருபவள் பங்கயம் உறைபவள்
. விண்ணவ ருன்கழல் பணிந்திடுவார்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. தான்யலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 2

வென்றிடு வோர்புகழ் வைணவி பார்கவி
. எந்தவோர் மந்திர உருவினளே
விண்ணவர் வழிபடும் விரைவினில் பலன்தரும்
. மிகுதரும் ஞானமும் நூல்போற்றும்
ஜன்மப யத்துடன் பாவமும் போக்கிடும்
. பற்றிலா ருன்தாள் பணிந்திடுவார்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. தைர்யலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 3

இருள்வழி மாற்றியே காப்பவள் காமினி
. கேட்டவ ரம்தரும் நூல்வடிவாம்
பரியுடன் கரித்தேர் காற்படை யாய்வரும்
. நாற்படை நாயகி பாற்கடலாள்
அரியுடன் அரனும் பிரம்மனும் வழிபடும்
. அழலினத் தீர்த்திடும் தாளுடையாள்
வெற்றியே நீமது சூதனன் காமுறும்
. ஶ்ரீகஜ லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 4

கருடனில் வலம்வரும் சக்கர மோகினி
. பற்றுகள் நீக்கிடும் ஞானவுரு
இறைகுண வாரியாம் நலனுளம் கொள்பவள்
. சுரங்களின் ஒலிகளின் நாயகியே
வரருடன் தானவர் துறவியர் மானவர் ... ... (வரர்=தேவர்கள்)
. யாவரும் வழிபடும் தாளுடையாள்
வெற்றியே நீமது சூதனன் காமுறும்
. சந்ததி லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 5

வனச முன்னாசனம் நற்கதி யளிப்பவள் ... ... (வனசம்=தாமரை)
. ஞானமும் மிகுதரும் கானவுரு
தினம்தினம் அர்ச்சனைக் குங்குமத் தூளணி
. எங்கணும் வாத்திய வழிபாடு
கனக தாராதுதி போற்றிட மகிழ்வுடன்
. சங்கரர்க் கருள்மழை பெய்தவளே
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. விஜயலக்ஷ் மியென்றும் காத்தருள்வாய். ... 6

அண்டருன் தாள்படும் பாரதி பார்கவி ... ... (அண்டர்=தேவர்கள்)
. அயர்ச்சியை நீக்கிடும் ரத்னவொளி
மணிகளை யணிந்தவள் காதினில் குண்டலம்
. சாந்தியும் புன்னகை மிளிருமுகம்
ஒன்பது நிதிதரும் கலிமலம் மாய்த்திடும்
. உவந்திடும் வரம்தரும் கரமுடையாள்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. வித்யா லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 7

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
. பேரிகை யோசைநி றைந்தருள்வாய்
குமகும கும்கும கும்கும கும்கும
. சங்கொலி கேட்டிடத் திகழ்ந்திடுவாய்
வேதபு ராணயி திகாசமும் போற்றிட
. வேதநல் நெறியினைக் காட்டிடுவாய்
வென்றிடு வாய்மது சூதனன் காமுறும்
. ஶ்ரீதன லக்ஷ்மிநீ காத்தருள்வாய். ... 8

--ரமணி, 20/09/2013, கலி.04/06/5114

மூலம் (தமிழ் உருவில்):
http://ammanpaattu.blogspot.in/2012/07/1.html

பொருள்:
http://devotionalonly.com/ashtalakhsmi-stotram-meaning-and-pdf/#chitika_close_button
http://www.sadagopan.org/index.php/categories/doc_details/641-sh107-ashtalakshmi-stotram

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top