என் கதை முயற்சிகள்

Status
Not open for further replies.
(இறுதிப் பகுதி)

ஒரு நெடிய பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தபோது எனக்கே வியப்பாக இருந்தது! என் கணவர்மீது எனக்கு அத்தனை வெறுப்பா, அதுவும் தாலியைத் துறக்கும் அளவுக்கு!

இந்தக் கதையின் பாத்திரங்கள் மிகைப்படுத்தப் படவில்லை. அந்த ’நான்’ வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். கதையின் சம்பவங்களும் உரையாடல்களும் பெரும்பாலும் என்னைச் சுற்று வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்தவையே. அவற்றை வசதிக்கேற்ப மாற்றி அமைத்துத் தொகுத்தது மட்டுமே என் பணி. என் வலிய உணர்வுகளின் ’கார்டியோக்ராஃப்’-ஆக என் பேனா கிறுக்கிவிட்ட இந்தச் சித்திரத்தில் இவ்வளவு தூரம் என்னை ஒரு தீவிரவாதியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தை உடனே புறக்கணித்தேன். என்னைப் பற்றி எழுதத் துணிந்த பின் என்னைப்பற்றி எழுதத்தானே வேண்டும்?

என் முன் மேசையில் அந்த கான்ட்ராக்ட் படிவங்கள் காற்றில் அசைந்தன. எனது அரிய ஸாஃப்ட்வேர் பாக்கேஜின் முழு உரிமைகளையும் அந்தக் கம்பெனி பெயரில் மாற்றி அவர்கள் நிர்ணயித்திருந்த ’ராக் பாட்டம்’ ராயல்டிக்கு சம்மதித்திருந்தேன். அவர்கள் அளித்திருந்த பயண, வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டதில், இதுவாவது வரட்டுமே? ஏற்கனவே பதிவாகிவிட்ட விமானப் பயணச் சீட்டை ரத்து செய்துவிட என் கணவர் சென்றிருக்க, அவர் சமீப காலமாக விரித்திருந்த அன்பு வலையில் நான் வசமாக சிக்கிகொண்டுவிட, அடுப்படியில் எனக்கு வேலைகள் காத்திருக்க, நான் ஆயாசத்துடன் எழுந்துகொண்டபோது அடிவயிறு கனத்தது.

*** *** ***
 
(ஏற்கனவே இந்த மன்றத்தில் வேறொரு நூலில் பதிவாகியிருந்தாலும் நான் சமீபத்தில் எழுதிய இந்தச் சின்னஞ் சிறுகதையையும் இந்த நூலில் சேர்த்துக்கொள்கிறேன்.)

யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்
பாட்டியும் பேரனும்

’ப்ராஹ்மண-பந்து’

"பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். "நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!"

பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே படாமல் எடுத்துவிட, பாட்டி, "இனி நான் பாத்துக்கிரேண்டா கண்ணா!", என்றாள். அம்மா முகவாய்க்கட்டையை ஒருதரம் தன் தோளில் இடித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள். அப்பா வழக்கம்போல் சோஃபாவில் உட்கார்ந்தபடி பேப்பரில் மூழ்கியிருந்தார்.

பாட்டி மடியாக ஸ்நானம் பண்ணியவுடன், பேரனும் ஸ்நானம்பண்ணிவிட்டு ரெடியாக, இருவரும் அந்த சின்ன பூஜை அறைக்குள் சென்றனர்.

"பாட்டி, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால, நான் ஸந்த்யா வந்தனம் பண்ணறதை நீ கூட இருந்து பார்க்கணும்". "ஆட்டும்டா கண்ணா", என்றாள் பாட்டி. பேரனின் ஸந்தியில் பாட்டி சிற்சில உச்சரிப்பு திருத்தங்கள் செய்தபோது, "எப்படி பாட்டி உனக்கு இதெல்லாம் தெரியும்? தாத்தா வாத்யாரா இருந்தார்னு சொல்வியே, அவர் உனக்கு சொல்லிக்கொடுத்தாரா?" என்றான் பேரன். "நானும் நாளைக்குத் தாத்தா மாதிரி ஆவேன், அதுதான் நேக்குப்பிடிக்கும்".

பின்னர், பாட்டி ஷ்லோகங்கள் சொல்ல, பேரன் அவற்றை அழகாகத் திருப்பிச் சொல்ல பூஜையறை களைகட்டியது. இதற்குள் அப்பாவும் குளித்துவிட--அம்மா காலையிலேயே வழக்கம்போல் பாட்டியைத் திட்டியபடி குளித்துவிட்டிருந்தாள்--பாட்டியும் பேரனும் தரையில் உட்காந்துகொண்டு சாப்பிட்டனர். அதன்பின், அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து அரட்டையடித்தாவாறே சாப்பிட்டு முடிக்க, பேரன் அதுவரை பாட்டியிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அம்மாவின் "போதும் கதை கேட்டது, போய் ஹோம்வர்க் பண்ணு" குரல் ஒலிக்க, படிக்கச் சென்றான்.

மாலை அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் சென்றுவிட, பாட்டியும் பேரனும் கோவிலுக்குப் போனார்கள். பாட்டி பேரனை வழக்கம்போல் ஒவ்வொரு ஸந்நிதியாக அழைத்துப்போய், அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய ஷ்லோகங்களையும் கதைகளையும் சொன்னாள். தீபாராதனை பார்த்துவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, பேரன் கையில் விபூதி-குங்குமம் ஈரமாகக் கொண்டுவந்தபோது அப்பா-அம்மா இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரிந்தது. பாட்டி தன் ஜபமாலையை உருட்டத்தொடங்க, பேரன் கொஞ்சநேரம் பாட்டியிடம் கதைகேட்டுவிட்டு, ஸ்கூல் பாடங்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்.

அம்மா பாட்டியைக் கரித்துக்கொட்டுவது வழக்கம்தான் என்றாலும் ஒரு நாள் இரவு மென்குரலில் அப்பாவிடம் தீர்மானமாகச் சொன்னாள்:

"இதப்பாருங்கோ, இதுக்கு ஏதாவது வழி பண்ணியே ஆகணும். என்னால இப்படி கஷ்டப்பட முடியாது. இந்தப்பிள்ளையும் உங்கம்மாவையே சுத்திச்சுத்தி வரது, நானும் தாத்தா மாதிரி வேத வாத்யாராவேன்னு இப்பவே பெருமையா சொல்லிக்கறது. தான் கண்ணைமூடறதுக்குள்ள பேரனுக்குப் பூணல் போடனும்னு சொன்னா உங்கம்மா. நீங்களும் சரின்னு ஆறு வயசுலேயே போட்டுவெச்சேள். இப்ப இந்தப்பிள்ளை நம்பளையே அலக்ஷியம் பண்ணறது. ஏம்மா உனக்கு பாட்டி மாதிரி ஸ்தோத்ரம்லாம் தெரியலே, நீ ஏன் பூஜை பண்றதில்ல, அப்பா ஏன் ஸந்திகூடப் பண்ணமாட்டேன்றா-ன்னு கேள்விவேற. அப்படியே தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கு. எல்லாம் அந்தக்கிழம் பண்றவேல. நாம் ரெண்டுபேரும் ஒடியாடி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறதால கிழம் சொகுசா அனுபவிக்கிறது. இல்லேன்னா என்னிக்கோ ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்திருங்கோன்னு சொல்லியிருப்பேன்."

"இவ்வளவுநாள் தள்ளினே. அம்மாக்கு வயசு எண்பதைத்தாண்டியாச்சு. வியாதி-வெக்கை இல்லேனால்லும் எவ்ளோ வீக்கா இருக்கா பாரு. எதோ ஒரு ஸங்கல்பத்ல மற்றவாளுக்கு சுமையா இருக்கக்கூடாதுன்னு தன் கார்யத்த தானே பார்த்துக்கறா. அந்த அளவுக்கு உனக்கும் எனக்கும் வசதிதானே? நம்ப சம்பாத்யத்ல குழந்தையை எஞ்ஜினீரிங், சீ.ஏ.ன்னு படிக்கவெக்க முடியாதுதான். நடக்க நடக்க பார்த்துப்பமே."

அவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ பாட்டி அடுத்த வாரமே ஒருநாள் ராத்ரித் தூக்கத்திலேயே தன் உடலை நீத்தாள். இவர்களுக்கு ஒரு சொல்லமுடியாத ரிலீஃப். பேரனால்தான் தாங்கமுடியவில்லை.

பாட்டியின் படுக்கையில் தலையணை அடியில் அப்பா-அம்மா ஒரு கவரைப் பார்த்தார்கள். பிரித்தபோது அதில் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு அப்பா பேரில் ஒரு செக் இருந்தது. கூடவே ஒரு சின்னக்கடுதாசி, ஒரு மாதம் முந்தய தேதியிட்டு. "ப்ரிய புத்ர, ஸ்னுஷா! உங்களுக்கு அதிக ஷ்ரமமாக, பாரமாக இல்லாமல் ஷீக்ரமே கண்ணைமூடிவிடவேணுமின்னுதான் அனுதினமும் பகவானைப் ப்ரார்த்தனை பண்ணினேன். உங்கப்பா ஆசீர்வாதத்தால் அது விரைவில் நிறைவேறும்னு நினைக்கிறேன். உங்கப்பா சேமிப்புடன் நான் சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தையும், லாக்கரில் உள்ள என் பத்துப்பவுன் நகைகளையும் நீங்கள் இஷ்டம்போல் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என் பேரனை,--அவன் விரும்பினால் மட்டுமே--அவனது ஏழாவது வயதில் ஒரு வேதபாடஷாலையில் சேர்த்து அவன் (தன் தாத்தா போல) தொடர்ந்து வேத அத்யயனம் பண்ண நீங்கள் அனுமதிக்கவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்."

பேரனுக்குப் பாட்டியின் பணமோ கடிதமோபற்றி ஒன்றும் தெரியாது. பாட்டியின் அந்திம காரியங்கள் முடிந்ததும் அப்பாவின் முன்னிலையில் அம்மா ஒரு நாள் மாலை பேரனிடம் சொன்னாள்: "கண்ணா, கவலைப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கிறோம்."

"போம்மா, எனக்கு பாட்டிதான் வேணும். உனக்கு அவா மாதிரி கதை சொல்லத்தெரியுமா? நாலு ஷ்லோகம் சொல்லித்தரத் தெரியுமா? கோவிலுக்கு கூடவந்து எனக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? யாருக்கு வேணும் நீயும் இந்த ஸ்கூல்லயும் சொல்லித்தற நர்சரி ரைம், அலைஸ் இன் வொண்டர்லாண்ட், மடில்டா கதைலாம்?"

"அதுதாண்டா இனிமே நமக்கு லைஃப் கண்ணா! நீ நல்லாப்படிச்சு, எஞ்ஜினீரிங் காலேஜ் சேர்ந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆகணும். அப்போதான் எங்களமாதிரி இல்லாம, கைநிறைய சம்பாதிக்கலாம். உன்கூடப்படிக்கற ஜனனியோட அண்ணா மாதிரி ஃபாரின் போகலாம், புரிஞ்சுதா?" என்றனர் அம்மாவும் அப்பாவும் கோரஸாக.

"அதெல்லாம் முடியாது. நான் தாத்தா மாதிரி வேத பாடசாலைல படிச்சு வேதம்தான் சொல்வேன். அதுல உங்களுக்கென்ன கஷ்டம்?" என்றான் பேரன்.

"கிழம் தப்பாம ஒரு வாரிசை உருவாக்கிட்டுத்தான் போயிருக்கு", என்றாள் அம்மா.

*** *** ***
 
இந்த நூலுக்கு நான் ’என் கதை முயற்சிகள்’ என்று தலைப்பு கொடுத்திருந்தாலும் இங்கு என் கவிதை, கட்டுரை முயற்சிகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.

கல்லூரியில் தமிழை மொழிப்பாடமாகப் படித்ததாலும், ஆங்கிலக் கவிதைகள் எழுத முற்பட்டதாலும் நான் என் கல்லூரி நாட்களில் யாப்பிலக்கணம் படித்து ஒரு பாடல் புனைந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. அது மனிதன் நிலவில் காலடி எடுத்துவைத்த நிகழ்வு குறித்தது:

அடிகளால் மூன்றளந்த அஞ்சிறைக் கண்ணன்
அடிகளால் மூன்றளந்த ஆன்றோர் வியப்ப
அடிகளால் மானுடர் அந்நிலா ஆய்ந்ததை
அடிகளால் ஏறுர வாக்கலென் பதந்த
அடிகட்கும் அரிதே தெளி.

மேலும் பல அடிகள் எழுத முயன்று அது என் பொறுமையை சோதிக்க ’இது நமக்கு ஒத்து வராது’ என்று ஒதுங்கிவிட்டது, இப்போது பிடித்துக் கொள்கிறது!

முதலில் என் முதல் கதை ’அவன் அவள்...’ தட்டெழுதும்போது ’உனக்கு என்னதான் பிடிக்கும்?’ என்ற வரியில் உதித்த ஒரு கடிக்கவிதை:

01. என்னதான் பிடிக்கும்?
உனக்கு என்னதான் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக்கொண்டாள்.
உனக்கு என்னத்தான் பிடிக்கும் என்று சொன்னேன் என்றேன்.
ஸ்மார்ட் என்று நினைப்போ என்றாள்.
தொடர்ந்து, எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
இப்போது என் முகம் சுருங்கியதைப் பார்த்து,
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்று சொன்னேன் என்றாள்!

*****

இதோ இன்னொரு கடிக்கவிதை: ’மண்டபத்தில் எழுதிக்கொடுத்த ஒரு நகைச்சுவத் துணுக்குடன்’ இரண்டு வரிகள் சேர்த்துச் சொன்னது:

02. சங்கேத மொழி
ஹலோ யார் பேசறது?
நான்தான் பேசறேன் நீங்க?
இங்கேயும் நான்தான் பேசறேன்.
படிப்பதற்கு உளறல்போல் இருந்தாலும்
அது அவர்கள் காதல் சங்கேதமொழி!

*****

என் (கடிக்)கவிதைகளை எண்ணிடத் தொடங்கிவிட்டேன்!

03. கவிதையை/கழுதையைக் கட்டிப்போடு!
புதுக்கவிதை எழுத முனந்து
அது புதுக் கழுதையாகி
உதைத்துக்கொண்டு மனம்போல் திரிந்து,
என் மின்வலைக் காகிதங்களைக்
கபளீகரம் செய்வதுகண்டு
அதை அசைச் சீர்தளைகளால்
கட்டிப்போட்டேன்:
உதைத்தது கடித்துவிட்டாலோ
அல்லது ஓடிவிட்டாலோ
எனக்கல்லவோ அவதி!

இந்தக் கவிதையை இப்படிக் கட்டினேன்:
புதுக் கவிதை எழுத முனைந்தது
புதுக் கழுதை யாகி உதைவிட்டு
மனம் போலத் திரிந்து எனது
மின்வலைத் தாள்களை விழுங்குவது கண்டதை
அசைச்சீர் தளைகள் கொண்டு நன்கு
கட்டிப் போட்டு விட்டேன் இன்று.
உதைத்தது என்னைக் கடித்து விட்டாலோ
அல்லது கழுதை ஓடிவிட் டாலோ
அவதி யுறுவது அடியேன் அல்லவோ!
--நம்பினால் நம்புங்கள், இது ஆசிரியப்பா!

*****

இந்த மூன்று ’கவிதை’களும் வேறு நூல்களில் இந்த மன்றத்தில் பதிவாகி உள்ளன. இனி வருவது என் புதிய முயற்சிகள்.

04. வாழ்வில் வசந்தம்
(இணைக்குறள் ஆசிரியப்பாவால் ஆன புதுக்கவிதை)

வார்த்தைகள் பலூனாக விஸ்வரூபம் எடுத்தால்‍அதை
மௌனம் என்ற ஊசியால்
உடைத்து விடலாம்.
மௌனங்கள் சுமையாக இறுகினால்
அதையொரு புன்னகையால்
அவிழ்த்துவிடலாம். வெறும் புன்னகைகள்
அலுத்துவிட்டால் கண்களில் நீர்வரச் சிரிக்கலாம்.

மனதில் புன்னகை இயல்பாக மிளிர
வார்த்தைகளில் மலர்களாய்ச் சிரித்து
மௌனத்தில் இலைகளாய்த் தழைத்து
கண்ணீரால் வேரூட்டி
வானுயரக் கிளைத்து வளர்த்த
வாழ்க்கை என்ற மரத்தில்
அமுதாய் விளைந்த கனிகளை
அணில்கள் குதறியும்
வண்ணப் பறவைகள் வளவளத்தும்
கானம் இசைத்தும்
உண்டு பசியாறி
தன் வம்சம் பேணி
வாழும் வாழ்க்கையில் வசந்தம் பொய்க்குமோ?

*****
 
Last edited:
ரம்யா
(குறுநாவல்)
ரமணி

[1]

கட்டில்மீது குழந்தையின் வண்ணப் புகைப்படங்கள் இறைந்திருந்தன. நடுவில் ஆஷ்ட்ரேயில் சிகரெட் துண்டுகள் நிரம்பி வழிந்து படுக்கை விரிப்பில் சாம்பல் உதிர்த்து இருந்தன.

மடியில் கனத்த ஆல்பத்தின் ப்ளாஸ்டிக் பக்கங்களை யோசனையுடன் மெல்லத் திருப்பியபோது மனம் கனத்தது.

எத்தனை எத்தனை வண்ணப்படங்கள்!

அப்பாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு துறுதுறுவென்று ஓடும் போஸில் காமிராவுடன் நின்ற அம்மாவை நோக்கிச் சிரிக்கும் ரம்யா.

அழகாகக் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ’ட்ரம்மர்’ பொம்மையின் தாளத்தை ரசிக்கும் ரம்யா.

பசுமையான பின்னணியில் மரக்கிளையில் அணில் ஒன்று இயற்கையாக எட்டிப்பார்த்து வியக்க ஊஞ்சலாடும் ரம்யா.

புறாக்களுக்குப் பொரி வேசும் ரம்யா.

இன்னும் பலவித போஸ்களைல் தரமான ப்ரின்ட்களில் ஜீவனுடன் பளிச்சிடும் ரம்யாவின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் புரட்டியபோது வாசுவுக்குக் கண்களில் நீர் மல்கியது.

கையிலிருந்த சிகரெட் துண்டத்தைக் கடைசிமுறையாக ஆழ இழுத்துப் பெருமூச்சுடன் புகைவிட்டு ஆஷ்ட்ரேயில் திணித்தபோது மனதில் ரம்யா புகைந்துகொண்டிருந்தாள்.

நினைவுகளின் சலசலப்பில் புகைப்படலம் விலக, அந்தப் போஸ் அவனுள் ஆழமாக உறைந்து பளிச்சிட்டது.

அவனுடைய கேனன் காமிராவில் சிக்காத அந்தப் படத்தில் ரம்யா ஒரு கார் சக்கரத்தின் அடியில் ரத்தவெள்ளமாகக் கிடந்தாள்.

’ரம்மி! டாடிய தொந்தரவு செய்யக்கூடாதுன்னு சொன்னேல்ல? ஸ்கூட்டர் ரிப்பேர் பாத்துட்டிருக்கேன், கழுத்திலேர்ந்து கைய எடு! அப்பறம் எனக்குக் கெட்ட கோவம் வரும்...’

’ரம்மி, சொன்னா கேக்கமாட்டே? ஸ்பார்க் ப்ளக் பக்கம் போகாதே, ஷாக் அடிக்கும்! கீதா, குழந்தைய உள்ள கூப்பிடு!...’

’சனியனே, போட்டேன்னா நாலு, போ அந்தாண்ட!’

அவனுடைய வலிமையான கரத்தால் தள்ளப்பட்டு ஒரு பந்துபோலத் தெருவில் விழுந்த ரம்யாவின் அலறலும் அந்தக் கார் சக்கரத்தின் ’க்றீச்’ ஒலியும் ஒரே சமயத்தில் கேட்டுத் திரும்பிப்பார்த்தபோது காரியும் முடிந்துவிட்டது.

’தினோம் நா உங்ககிட்ட முட்டிக்கிட்டேனில்லயா, இப்படி எதுக்கெடுத்தாலும் கோபப்படாதீங்கன்னு! இப்ப பெத்த குழந்தையவே பறிகொடுத்துட்டு வந்து நிக்கறீங்களே!...’

*** *** ***

இந்த மூன்று வருட ஏக்கத்தில் கீதா மிகவும் உடைந்துபோய்விட்டாள். ரம்யாவின் அகால மறைவு அவள் கண்களின் ஒளியையும், முகத்தின் மலர்ச்சியையும், உடலின் செழுமையையும், மனதின் மகிழ்ச்சியையும் பறித்துக்கொள்ள, அவர்கள் வாழ்வில் அந்த இரண்டாவது இடி விழுந்தது.

’ஸோ, ஸாரி, மிஸ்டர் வாசுதேவன். யுவர் ப்ராப்ளம் இஸ் ஸைக்கலாஜிகல். உங்க ரம்யாவோட அகால மரணம் உங்க தாம்பத்ய வாழ்க்கையை நீங்க நினைக்கறதவிட ஆழமா பாதிச்சிருக்கு. தட்’ஸ் த ரீசன் யு ஆர் அனேபிள் டு ரீப்ரட்யூஸ். எதுக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட கன்சல்ட் பண்ணுங்க...’

’ஐ டிஸர்விட் கீதா, ஃபர் ஆல் மை ரெக்ளஸ் டெம்பெரமென்ட். ஐ’ல் காரி திஸ் கில்ட் டு மை க்ரேவ்! நீ என்ன பாவம் பண்ணேம்மா, கடவுள் உன்னை ஏன் சோதிக்கணும்?’

கீதா அவனைப் புரிந்துகொண்டாள். மனதில் கனன்ற அவன் சோகத்தைப் பகிர்ந்துகொண்டாள். அன்பான செயல்களாலும் ஆதரவான வார்த்தைகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விரிசலை சரிசெய்ய முற்பட்டாள்.

மூன்று நெடிய வருடங்களுக்குப்பின் இப்போது பாறையிடுக்கில் புல்லிதழ்களாக வசந்தம் அவர்கள் வாழ்வில் துளிர்க்க முற்படுவதற்கு அறிகுறியாகத் தென்பட்ட அந்தப் புகைப்படத்தை அவன் கையில் எடுத்து மீண்டும் ஒருமுறை கூர்ந்து நோக்கினான்.

"காட், வாட் எ ரிசெம்ப்ளன்ஸ்! கீதா வில் லவ்விட்!"

சுற்றுப்புற சூழல்களைக் காமிரா சாமர்த்தியமாக மறைத்திருக்க, ப்ளாட்ஃபாரத்தில் நின்றுகொண்டு அவனைப் பார்த்து நேசமுடன் சிரித்த குழந்தை ஃப்ரேம் முழுக்க விரவியிருந்தது.

கண்களின் சுருக்கங்களில் முகத்தின் மலர்ச்சியில் இயல்பாக நின்ற தோற்றத்தில் குழந்தை அவன் திடுக்கிடும் வகையில் ரம்யாவை ஒத்திருந்தது!

குழந்தை அணிந்திருந்த மஞ்சள் கவுனின் சுருக்கங்களும் மெலிதான அழுக்கும் கலர் ஃபிலிம் கவர்ச்சியில் அடங்கித் தெரிய அவன் மனதில் நம்பிக்கை விதைகள் துளிர்விட்டன.

மறுநாள் கீதா திருப்பதியிலிருந்து வந்தவுடன் பக்குவமாக விஷயத்தை எடுத்துச் சொல்லவேண்டும் என்ற முடிவுடன் தலைமாட்டில் இருந்த ரம்யாவுக்கும் கையில் இருந்த ரம்யாவுக்கும் மென்மையாக முத்தமிட்டுவிட்டு விளக்கை அணைத்தான்.

*** *** ***
 
[2]

மாலைச் சூரியனின் செங்கதிர்கள் வானை நிறைத்திருந்தன. காக்கைகள் கூட்டம்கூட்டமாகப் பெரிய மரங்களை நோக்கிப் பறந்துகொண்டிருக்க, கீழ்வானில் தட்டையாக நிலா தெரிந்தது.

அடுத்தவீட்டுக் குழந்தை மாலா ஸ்கிப்பிங் விளையாடுவதை ரசித்தபடி மொட்டைமாடியில் நின்றிருந்தாள் கீதா. பத்துநாள் பிறந்தவீட்டு கவனிப்பில் சற்றே மெருகேறியிருந்தாள். மெல்லிய தென்றலின் சலசலப்பில் அவள் கேசங்கள் அசைந்தன.

பின்னால் காலடிகேட்கத் திரும்பாலமலேயே கேட்டாள்.

"இந்த பத்து நாளா எவ்வளவு சிகரெட் பிடிச்சீங்க?"

அப்போதுதான் அவனுக்கு தான் அந்த ஆஷ்ட்ரேயை அப்படியே ஜன்னல் மடியில் விட்டுச்சென்றது நினைவுக்கு வந்தது.

"ஏன் கீதா?"

"நேத்துமட்டும் முப்பத்திநாலு சிகரெட் காலி பண்ணியிருக்கீங்க! ரம்யாதானே காரணம்?"

பரிவுடன் அவள் கை அவன் காலர் எலும்பின்மேல் விழுந்தபோது நெகிழ்ந்துபோனான்.

"கம் ஆன், உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்."

வசதியாக கூடைநாற்காலிகளில் அமர்ந்துகொண்டார்கள். நடுவில் இருந்த டீப்பாய் மேலிருந்து அவள் ஒரு நாவலை எடுத்தபடி விழிகளை உயர்த்தியபோது கண்களில் சிவப்புச் சூரியன் பிரதிபலித்தது.

"ரம்யாவோட இந்தப் படத்தை எப்போ எடுத்தீங்க? அவள் கவுன்ல ஏன் இவ்வளவு அழுக்கு? பேக்கிரவுண்ட்ல என்னவோ போஸ்டர்லாம் அடிமட்டும் தெரியர்து. என்ன, எதாவது ட்ரிக் ஃபோட்டாக்ரஃபியா?"

’குட் கோயிங்’ என்று நினைத்துக்கொண்டான்.

"நானே உன்கிட்ட சொல்ல இருந்தேன் கீதா. லுக் அட் திஸ் பிக்சர்."

படத்தில் இன்னொரு ரம்யா அதேபோல் மஞ்சள் கவுனில் ஜெமினி ட்ராஃபிக் ஐலண்ட் கம்பியைப் பிடித்தபடி காமிராவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஐ நோ திஸ் பிக்சர். நம்ப ரெண்டுபேரும்தானே எடுத்தோம்? ஆனால் இந்த ஃபோட்டோ நான் பார்த்ததே இல்லையையே? ரம்யாவை அந்தமாதிரி அழுக்கு கவுன்ல கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியலை."

தலையைச் சிலிர்த்தபடி கண்களைச் சுருக்கிக்கொண்டு நெற்றியின் நடுவில் வரிகள் குத்திட அவள் பேசியபோது அவளே ஒரு பெரிய ரம்யாவாகத் தெரிந்தாள்.

"ஒரு வாரம் முன்னதான் அந்தப் படத்தை எடுத்தேன் கீதா."

சட்டென்று உறைந்தாள்.

கலவரமும் வியப்பும் அவள் முகத்தை மேலும் சிவந்திடச்செய்ய, "மை காட்! எவ்ளோ க்ளோஸ் ரிசெம்ப்ளன்ஸ்! கம் ஆன், டெல் மீ ஆல் அபௌட் இட்", என்றாள்.

"நீ ஊருக்குப்போன மறுநாள் சாயங்காலம் ட்ரைவ் இன்ல டிஃபன் பண்ணிட்டு ரோட க்ராஸ் பண்ணினபோது திடீர்னு ஓடிவந்து என் காலைக் கட்டிக்கிட்ட குழந்தை இது, கீதா. சட்னு எடுத்துத் தூக்கிக்கலாம் போல இருந்தது, அவ்வளவு ஒற்றுமை! பின்னாலயே அவங்க அம்மா வந்து குழந்தையை வாங்கிக்கிட்டுக் கையை நீட்டினா. எனக்கு ஒரு கணம் வருத்தமாயும் பயமாயும் இருந்தது, நம்ம ரம்யாவைத்தான் இவங்க எப்படியோ கடத்திகிட்டு போய்ட்டாப்பல. ’வாட் நான்சென்ஸ்’னு மனசில சொல்லிட்டு ஒரு ரூவா குடுத்தனுப்ச்சேன்."

"அந்த போஸ்டர் பேக்கிரவுண்ட்லேர்ந்தே ஒருமாதிரி கெஸ் பண்ணினேன். அப்பாவும் ப்ளாட்ஃபார்ம் வாசிதானே?"

"ஆமாம் கீதா, ஆனால்---"

"வாட்ஸ் ராங்?"

"வேண்டாம் கீதா, உன்னால தாங்கமுடியாது. இப்பத்தான் ஒரு மாதிரியா மனசைத் தேத்திட்டு வாழ்ந்திட்ட்ருக்கோம்."

"பரவாயில்லை, சொல்லுங்க."

சொன்னபோது, "இவ்வளவுதானே?" என்றவள் பதிலில் அதிர்ச்சியடைந்தான்.

"ஐ வாண்ட் டு ஸீ த சைல்ட்."

"போலாம். நாளைக்கு சனிக்கிழமை பேங்க் அரைநாள்தானே? மூணு மணிக்கு வந்திருவேன். நாலு மணிவாக்ல போய்ட்டு அப்படியே ட்ரைவ் இன்ல டிஃபன் பண்ணிட்டு வரலாம்."

*** *** ***
 
[3]

மறுநாள் சென்றபோது பிளாட்ஃபாரம் காலியாக இருந்தது கவலையாக இருந்தது.

"வா, டிஃபன் பண்ணிட்டு தேடலாம்."

மசால்தோசைக்கு ஆர்டர் கொதுத்துவிட்டு மௌனமாகக் காத்திருந்தபோது திடீரென்று கேட்டாள்.

"நீங்க என்ன நினைக்கறீங்க?"

"எதப் பத்தி?"

"ரம்யாவைப் பத்தி."

"ரம்யா?"

"அந்த ட்யூப்ளிகேட் ரம்யா."

"எனக்கு என்ன நினைக்கறதுன்னே தெரியலை கீதா. உள்ளூர பயம்மா இருக்கு."

"நான் நினைக்கறதை சொல்லட்டுமா?"

வெயிட்டர் மசால்தோசைகளைக் கொண்டுவந்து வைத்தார். கூடவே நீர் நிரம்பிய கண்ணாடி டம்ளர்களை அடுக்கினார். உணவு பறிமாறிய ட்ரேயைக் கடைசி மேசைமேல் வைத்துவிட்டு சுவரோரம் சென்று பின்னால் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டார்.

தோசையை நடுவில் விண்டு சாம்பாரில் நனைத்து வாயில் இட்டுக்கொண்டு கவலையுடன், "சொல்லு கீதா", என்றான்.

"நான் குழந்தையை ஒருவாட்டி பாத்திடறேன். எனக்குத் திருப்தியா இருந்ததுன்னா", என்றவள் மெலிதாகப் புரையேற ஒரு வாய் நீர் பருகி விழுங்கிவிட்டுக் கண்களில் தீர்மானம் தெரியக் கூறினாள்: "வி வில் ஹாவ் த சைல்ட்."

அவன் எதிர்பாராத பதிலாக இல்லாவிடினும் அதை அவள் நறுக்குத் தெறித்தாற்போல் கூறிய விதத்தில் துணுக்குற்றான்.

"முதல்ல நீ குழந்தயைப் பார், கீதா. நீ சொல்றது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. இந்த ஸ்டேஜ்ல நாம எந்த ஐடியாவும் வெச்சிக்க வேண்டாம்."

"இன்னிக்கு முழுக்க எனக்கு அந்த ஃபோட்டோ ஞாபகம்தான். எப்படா நேர்ல பார்ப்போம்னு இருக்கு. நம்ம ரம்யா அதுமாதிரி வறுமையான சூழ்நிலையில---"

சட்டென இடைமறித்தான்.

"அது நம்ம ரம்யா இல்லை கீதா."

"நம்ம ரம்யாதான். நான் தீர்மானிச்சாச்சு. அந்தம்மாகிட்ட நான் பேசறேன். காஃபிக்கு ஆர்டர் பண்ணுங்க, நேரமாச்சு."

*** *** ***

வெளியில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை குழந்தை தென்படவில்லை. மௌனமாக கதீட்ரல் சாலையில் கொஞ்சதூரம் நடந்தார்கள்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி சுற்றுச் சுவரை ஒட்டிய நடைபாதையில் அந்தக் குடும்பம் உட்கார்ந்து இருந்தது. கல்லூரிக்கு விடுமுறையாதலால் பிளாட்ஃபாரம் காலியாக இருந்தது.

தூரத்தில் வரும்போதே கவனித்துவிட்டு அவர்கள் கால்களை எட்டிப்போட்டபோது தாயும் குழந்தையும் தனியாகப் பிரிந்து தற்செயலாக அவர்கள் பக்கம் வருவது தெரிந்தது.

"அதுதான் அப்பாவா?"

அவன் உடன்பாடாக பதில் அளித்தபோது அந்த உருவம் தள்ளாடியபடி எழுந்துகொண்டது. நுனிகள் வற்றிய விரல்களில் ஓர் அலுமினியத் தூக்கை ஏந்தியபடி சுவரோரம் போய் அமர்ந்துகொண்டது.

அந்தப் பெண் தன் மகளிடம் ஏதோ கூற, குழந்தை மறுபடியும் தந்தையிடம் ஓடிக் குனிந்து அவர் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு வந்தது.

கீதா தலையை சிலிர்த்துக்கொண்டாள்.

அவன் திரும்பி அவளைப் பார்த்தபோது, "அம்மா பார்க்க அழகாவே இருக்கா. நிறம்கூடப் பரவாயில்லை. அவளுக்கு ஒண்ணும் வியாதி இல்லைனு தெரியறது. தட்’ஸ் எ குட் சைன்", என்றாள்.

நடைபாதை அருகில் இருந்த ஆவின் ’பூத்’ அருகில் அவர்கள் வந்தபோது குழந்தையை வைத்த விழி வாங்காமல் பார்த்தபடி அந்தப் பெண்ணை வழிமறித்து, "குழந்தை பேர் என்னம்மா?" என்றாள்.

"ஏனுங்க?"

"ஏனுங்கன்னு ஒரு பேரா!"

அந்தப் பெண் புன்னகைத்தாள்.

"இல்ல, எதுக்குக் கேக்கறீங்கன்னு கேட்டேன்."

"ஒண்ணுமில்லைம்மா. குழந்தை பாக்கறதுக்கு துறுதுறுன்னு இருக்கறதால கேட்டேன்."

"கொய்ந்த பேரு அமுதாங்க."

"உன் குழந்தையா?"

"ஆமாங்க."

அந்தப் பெண் அவனை அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

"எங்கம்மா இவ்வளவு அவசரமாப் போறீங்க?"

"அவருக்குத் துன்ன எதாச்சும் வாங்கணுங்க. கொய்ந்தைக்கும் பசி."

"எங்கபோய் வாங்குவ?"

"தா அந்த டீக்கட்லதாங்க. அவருக்குப் பரோட்டாவும் டீயும். கொய்ந்தைக்கு பன்னு."

"நீ ஒண்ணும் சாப்பிடலையா?"

"நானும் ஏதாச்சும் துன்னுவேங்க."

கீதா கைப்பையைத் திறந்து ஒரு புதிய ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தாள்.

"இதை வெச்சிக்கம்மா. உங்க வீட்டுக்காரருக்கும் குழந்தைக்கும் ஏதாவது நல்ல பணியாரமா வாங்கிக்கொடு."

அவள் கொஞ்சம் தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள். சுற்றிலும் கண்களை ஓட்டிவிட்டு ரூபாயை பத்திரமாக ஜாக்கெட்டினுள் செருக்கிக்கொள்ள, கீதா, "என்ன வயசாறது?" என்றாள்.

"எனுக்கு இருபத்தி-எட்டுங்க. எங்க வூட்டுக்காரருக்கு நாப்பத்தி-ஏளு."

"நான் பாப்பாவோட வயசைக் கேட்டேன்."

"அமுதாவுக்கு மூணு முடியுதுங்க."

"ஏம்மா, குழந்தைக்கு நல்ல துணியா தச்சுப் போடமாட்டே? பார், எவ்வளவு அழுக்கா இருக்கு. நீ மட்டும் பளிச்சினு உடுத்தியிருக்க?"

"நம்ம தொயிலு அப்படியாப்பட்ட தொயிலுங்க", என்று அவள் தொடங்கியபோது கீதா புரிந்துகொண்டாள். கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தபோது அந்தப் பெண் கவர்ச்சியாக உடுத்தியிருப்பது தெரிந்தது. முகத்தில் லேசாகப் பவுடர் பூசியிருந்தாள்.

"ஐயா போல்சுங்களா?" என்றாள் அந்தப் பெண் திடீரென்று.

எங்கோ பார்த்துக்கொண்டிருந்த வாசு திரும்பி, "இல்லைமா, நான் பேங்க்ல இருக்கேன்", என்றான்.

"நம்ப கஷ்டமரு ஒருத்தர்கூட பாங்குல இருக்கார்ங்க. பியூனு வேல."
 
"ஏம்மா, ஏதாவது உழைச்சு சம்பாதிக்கற வேலையா செய்யக்கூடாது?" என்றாள் கீதா.

"தொயு நோயாளி பொஞ்சாதிக்கு யார்மா வேலை தாராங்க? நீங்க குடுப்பீங்களா, சொல்லுங்க? ஒரு வூட்டாண்ட வேல செஞ்சிக்கிட்டிருந்தம்மா. ஒரு நாள் அந்தம்மா இவரப் பாத்துட்டாங்க. ஒரே கல்ட்டாவாய்ட்ச்சி. எதோ இந்தத் தொளில்ல ஒரு மாரி சமாளிக்க முடியுதோ, காலம் தள்றோம். பொண்ணு ஷோக்கா இருந்தா வர்ற ஆம்பிள வியாதியல்லாமா பாக்கறான்? எங்கூட்டுக்கார்க்கு தொயு நோய்யான்னு உண்மையைச் சொன்னாக்கூட, உனுக்கு வியாதி இருக்கா, அப்ப வாங்கறான்!" என்று சிரித்தாள்.

"எதோ எங்க வூட்டுக்காரரும் ஒடம்பு சொகமாகி அல்லார் மாதிரியும் நடமாடுவார்ங்கற நம்பிக்கைல, கெடைக்கற பணத்ல கால் வயிறு சாப்ட்டு, மீதிய அப்பப்ப சேத்து வெக்கறங்க. அவருக்கு வைத்தியம் பாக்க ஒதவியா இருக்கும் பாருங்க?" என்றாள் கொஞ்சம் இடைவெளி விட்டு.

"அவருக்கு உடம்பு எப்படிமா இருக்குது?" என்றான் வாசு.

"மொதல்ல கொஞ்சம் சாஸ்த்தியா இருந்திச்சுங்க. கவர்மென்டு ஆசுபத்திரிலதான் மாசம் ரண்டு வாட்டி காட்டறம். இப்ப புண்ணு கொஞ்சத்துக் கொஞ்சம் ஆறிட்டு வருதுங்க."

"ஏம்மா, நான் ஒண்ணு கேக்கறேன், தப்பா நினைச்சிக்க மாட்டியே?" என்றாள் கீதா.

"அவரு கூடவே இருக்கறதால எங்களுக்கும் இந்த நோயி வராதான்னுதானே கேக்கப் போறீங்க? அவருக்கு இருக்கறது ஒட்டற வியாதி இல்லன்னு டாக்குடருங்க சொல்லிட்டாங்க. சமயத்ல எனக்குக்கூட அமுதாவ அவர் தூக்கிவெச்சு கொஞ்சறப்ப மனசு திக்குனு இருக்குங்க. அவருக்கு கொய்ந்தமேல உசிரு. எதோ ஆண்டவன் புண்ணியத்தில இதுவரைக்கும் சீக்கு பத்திக்காம இருக்கோம்."

"நீ ராத்திரி வேலைக்குப் போறது உங்க வீட்டுக்காரருக்குத் தெரியுமா?"

"தெரியுங்க" என்றாள், கண்களைத் தாழ்த்திக்கொண்டு.

"குழந்தை?" என்றான் வாசு கவலையுடன்.

"நைட்டு கொய்ந்த அவராண்டதாங்க இருக்கும்."

"இந்த வண்டியில வெச்சு தள்ளிட்டு வராங்களே, அவங்களுக்கு வியாதி ஜாஸ்தியா இருக்குமா?" என்றான் வாசு.

"பொதுவா அப்பிடித்தாங்க. அதுல செலபேர்க்கு ஒட்டற வியாதிகூட உண்டுன்னு சொல்லுவாங்க. நாங்க கூடுமான வரைக்கும் மத்தவங்ககூட கலக்காம தனியாத் தாங்க இருக்கறது."

அவள் பதில் கொஞ்சம் ஆறுதல் தர, அவன், "பகல் பூரா இந்த ஏரியாவிலதான் இருப்பீங்களா?" என்றான்.

"இந்தப் பக்கம்தாங்க சுத்திக்கிட்டிருப்போம். சமயத்ல கூட்டம் அதிகமாய்டிச்சின்னா அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை வரைக்கும் போறது உண்டு. நைட்டு பெரும்பாலும் இந்தப் பக்கம் வந்திருவோம்."

"நல்லதும்மா, உன்னையும் உன் குழந்தையும் எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. இந்தப் பக்கம் வந்தா எங்களால முடிஞ்ச உதவி செய்யறோம்", என்று கீதா விடைபெற்றாள்.

*** *** ***
 
05. சினிமாவும் டீ.வீ.-யும்
சினிமா பார்ப்பது எதற்காக?
பொழுது போக்க.
பொழுது போக்கக் காசு செலவா?
ஓய்வுக் காக.
ஓய்வுக் காக காசு செலவா?
’சைட்’ அடிக்க.
அதற்குக் கோவில் ’பெட்டர்’ அல்லவா?
உள்மன ஆசைகளை, அதமங்களை
மாயையில் முயன்று பார்க்க---திருப்தியா?
இதுவே சரியான பதிலா காதோ?
ஆசைகள் எல்லாம் குறந்த செலவில்
மனத்தில் நிகழ இருக்கே டீ.வீ.!

*****
 
06. சஹதர்மிணீ!

லலாடம் நடுவில் திலகம் மிளிர,
சீமந்த ரேகையில் குங்குமம் துளிர்க்க.
சஞ்சரிக்கும் சஹதர்மிணீ! உனக்கு மனதில்
அடுப்படி, அலுவலகம், ஆன்மீகம், அக்கம்பக்கம்
எல்லாமே சமபாவம்! பற்றற்ற ஈடுபாடு!
நண்பர்கள் உண்டு, நண்பர்கள் இல்லை;
உறவினர் உண்டு, உறவினர் இல்லை.
பொழுது போகும், பொழுது போதாது,
எப்படி உனக்கிது சாத்தியம் ஆகிறது?

நானோ எனது செயல்கள் அனைத்திலும்
எடுப்பார் கைப்பிள்ளை! சித்தம் சிவன்போக்கு!
நீயும் நானும் வாழ்வில் இணைந்து
கருத்தொரு மித்து, கருத்து வேறுபட்டு,
நீஎன் சொல்கேட்டு நானுன் சொல்கேட்டு,
மதுரை சிதம்பரம் ஒன்றாக இணைந்து,
குறைகளைக் குறைத்து நிறைகளை நேசித்து
வாழ்வது கற்றோம், வருடங்கள் ஓட்டத்தில்!

இனிவரும் வாழ்வில் வம்சம் வளர,
கண்போல் வளர்த்த ஒரேமக னுக்கு
வதுவை தேடி விவாஹம் செய்வித்து
தாத்தா பாட்டி உறவுகள் ஆகி
பேரன் பேத்திகள் பேணி வளர்த்து,
புத்திரன் வதுவின் தாம்பத்யம் சிறக்க,
வாழக் கற்போம் கனவுகள் தவிர்த்து!

நீயின்றி நானும் நானின்றி நீயும்
வாழ்வது ஒருநாள் வந்தே தீரும்
என்பதை அறிந்து ஞானம் பெற்று
அந்த நாளில் சுமையாக இல்லாமல்
இருக்க நம்மைத் தேற்றிக் கொள்ள
உடல்நலம் பேணி, மனநலம் காத்து
வாழும் வகையைக் கவனித்து நடக்க
பகவான் நமக்கு அருள்வா னாக!

[லலாடம்=நெற்றி, சீமந்த ரேகை=வகிடு, சஹதர்மிணீ=இல்லறத்தில் பங்குகொள்ளும் மனைவி,
புத்திரன்=மகன், வது=மருமகள்]

*****
 
[4]

அடுத்த இரு சந்திப்புகளில் குழந்தை அமுதாபற்றி மேலும் விவரங்கள் அறிந்துகொண்டனர்.

ரம்யா தன் மூன்றாம் வயதில் இறந்த அதே மாதம் ஒரு வார இடைவெளியில் அமுதா பிறந்திருந்த செய்தி துணுக்குறச் செய்தது!

அவள் ஒரு வயதான மருத்துவச்சியின் கவனிப்பில் ஒரு எளிய குடிசையில் பிறந்ததால், பிறந்த தேதி அரசாங்கப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட வில்லை என்ற செய்தி ஆறுதல் அளித்தது.

அமுதாவும் அவள் தந்தை ஏழுமலையும் ஒருவருக்கொருவர் உயிராக இருந்து பாசத்தைப் பொழிந்த காட்சிகள் வயிற்றில் கவலை வார்த்தன.

அமுதாவுக்கு பி.சி.ஜி. தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவளை அந்த நோய் அதுவரை தாக்கவில்லை என்ற செய்திகள் மகிழ்ச்சியளித்தன.

அமுதாவின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றிய அவள் தாயின் கவலையை சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு வரைவில் அந்த முக்கியமான மூன்றாவது சந்திப்பை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

*** *** ***

"இத பார் லட்சுமி, நீ இவ்வளவு தூரம் உன் புருஷனுக்காகக் கஷ்டப்படறதப் பார்த்தா எங்களுக்கு மனசு வேதனையா இருக்கு. நாங்க ஏதாவது ஒரு வகையில உனக்கு உதவிசெய்ய நினைக்கிறோம். நான் சொல்றதைக் கவனாமாக் கேளு. உன் புருஷனோட வைத்தியச் செலவுக்கு மட்டும் நீ எப்படியோ சம்பாதிச்சு வழிபண்ணிக்க. அமுதாவோட எதிர்காலத்தைப் பத்தின கவலைய எங்ககிட்ட விட்டுடு."

"நீங்க ஸொல்றது எதும்மே வெளங்கலீங்க. வெவரமா, புரியும்படியா ஸொல்லுங்க", என்றாள் லட்சுமி காப்பியை ஆற்றியபடி.

கீதா பதில்பேசாமல் குழந்தை அமுதா ஆவலுடன் அவள் தாய் விண்டு வைத்திருந்த இட்லித் துண்டுகளை ஓரளவு நாசூக்காக விழுங்குவதை ஏக்கத்துடன் கொஞ்ச நேரம் பார்த்தாள்.

பின்னர் வாசுவிடம், "இட்’ஸ் பெட்டர் வி புட் இட் அக்ராஸ் டு ஹர் ஸ்ட்ரெய்ட்" என்றாள்.

வாசு தலையாட்டினான்.

"எங்களுக்கும் அமுதாமாதிரி ஒரு பெண் குழந்தை இருந்ததும்மா. நாங்க அதும்பேர்ல உசிரையே வெச்சிருந்தோம். திடீர்னு ஒருநாள் ஆக்ஸிடென்ட்ல செத்திருச்சும்மா!"

கீதா வாசுவின் பக்கம் கண்களைத் தவிர்த்து, கைப்பையில் இருந்து சில புகைப்படங்களை எடுத்தாள்.

"இந்தப் படத்தைப் பார்மா. இதான் கடைசியா நாங்க எங்க ரம்யாவை எடுத்த படம். மூணு வருஷத்துக்கு முன்னால மெட்ராஸ் வந்தப்ப எடுத்தது", என்றபோது அவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ரொம்பப் பாவம்மா நீங்க, அழாதீங்க." அந்தப் படத்தை வாங்கிக்கொண்ட லட்சுமி திடுக்கிட்டாள்.

காப்பி டம்ளரை மெதுவாக மேசைமேல் வைத்தவள், தாழ்ந்த குரலில், "என்னால நம்ப முடியலம்மா. அச்சா அப்படியே அமுதா மாரிக் கீது", என்றாள்.

கீதா கைக்குட்டையால் நாசியை ஒற்றியபடி மற்ற படங்களை அவள் பார்வைக்கு வைத்தாள்.

"அட, கலர் போட்டோவா புட்சிக்கிறீங்க!" என்று ஒவ்வொரு படமாக எடுத்துப் பார்த்த லட்சுமி, "ஏம்மா இந்தப் படத்ல உங்க பாப்பாவோட கவுனு அழுக்காக் கீது, எங்கனாச்சும் கீய வுளுந்திடிச்சா?", என்றாள்.

"அது உன் குழந்தையோட படம்மா. பத்து நாள் முன்ன நாந்தான் எடுத்தேன்", என்றான் வாசு அமைதியாக.

"அட, ஆமாங்க! எதுக்கு எங்கொய்ந்தய படம் புட்சீங்க?" என்றவள் சட்டென்று நிறுத்தினாள்.

"புரியுதுங்க", என்றாள் சற்று நேரம் கழித்து, கண்களில் சோகம் படர.

கீதா அவள் மௌனத்தைப் பயன்படுத்திக் கொண்டாள்.

"ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத் தாம்மா புரியும். மூணு வருஷமா எங்க ரம்யாவை இழந்துட்டு நடைப்பிணமா வாழ்ந்திட்டிருக்கேன். நீ மட்டும் ஒரு வார்த்தை சரின்னு சொன்னா, அமுதாவை நாங்க கூட்டிட்டு போய் எங்க மகளா வளர்க்கறோம். ஒரு பாவமும் அறியாத அந்தச் சின்ன உசிரோட எதிர்காலத்த நாம அழிச்சிரக் கூடாது. உன்னோட நிலைமையில எப்படி அந்தக் குழந்தையைப் படிக்க வெப்பே, எப்படி நாளைக்கு ஒரு நல்ல எடத்துல கண்ணாலம் கட்டிக்குடுப்பே, சொல்லு? உன் வாழ்க்கைதான் என்னமோ தலையெழுத்து இப்படி ஆய்ட்டது. குழந்தைக்கு வர அதிர்ஷ்டத்தை ஏன் தடுக்கணும்?"

வாசு அவள் விட்ட இடைத்திலிருந்து தொடர்ந்தான்.

"அடுத்த பதினஞ்சு வருஷத்தில நாங்க அமுதாவைப் படிக்கவெச்சு ஊர் அறியக் கல்யாணம் கட்டிக் கொடுக்கரோம்மா. எங்க குடும்பத்தில நாங்க ரெண்டே பேர்தான். கூடப் பிறந்தவங்க யாருமில்லை. வயசான அப்பாம்மா வெளியூர்ல இருக்காங்க. ஏதோ கொஞ்சம் சொத்து-சுகம் இருக்குது. நாங்க பெரிய பணக்காரங்க இல்லைதான், இருந்தாலும் ஆண்டவன் தயவிலே ஓரளவு வசதியா வாழ்ந்திட்டிருக்கோம். அமுதாவை நீ எங்களுக்கு விட்டுக் கொடுத்தியானா, உன் புருஷனோட வைத்தியச் செலவுக்காக நான் ரெண்டாயிரம் ரூவா உனக்கு கொடுத்திடறேன்!"

லட்சுமி பதில் பேசவில்லை.

"தா, துன்னாச்சினா சட்னு எந்திரி புள்ள, நேரமாவுது!" என்று குழந்தையைத் தட்டில் கையலம்ப வைத்தவள் ஒரு நெடிய பெருமூச்சுடன், "எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ கொண்டாந்து முடிச்சிட்டீங்கம்மா! எனக்கு கொய்ந்தயும் வேணும் பணமும் வேணும், இன்னா செய்வேன் நானு! எங்க வூட்டுக்காரர் கைல சொன்னா உசிரையே விட்டுருவார்மா. நீங்க அவராண்ட இதப்பத்திப் பேச வாணாம். எதுக்கும் ஒரு ரெண்டு நாள் பொறுத்து வாங்க. யோசிச்சு வெக்கறேன்", என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் விடுவிடு என்று குழந்தையை இழுத்துக்கொண்டு வெளியேறினாள்.

*** *** ***
 
[5]

அந்த நாடகத்தின் கடைசிக் காட்சியில் வாசு மட்டும் பங்கேற்றான்.

போயஸ் கார்டன் தெருமுனையில் அகலமான நடைபாதையின் சுவரோரம் அவர்கள் முடங்கியிருந்தனர்.

கதீட்ரல் சாலை அந்த வேளையில் நிசப்தமாக இருந்தது. மெர்க்யுரி விளக்குகள் ஒளிரும் மல்லிகைப் பூக்களாக ஒரு நீண்ட சரத்தில் மலர்ந்திருக்க, சுற்றிலும் தாமரை இலைகளாக இருள் விரவியிருந்தது.

லட்சுமி மெதுவாக புரண்டு படுத்தாள்.

அவர்களைத் தவிர அந்த நடைபாதையில் அதிர்ஷ்டவசமாக வேறு யாரும் சயனித்திருக்கவில்லை.

மெல்லத் தலையை உயர்த்திப் பார்த்தாள். தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது. ’நிச்சயம் அந்தாள்தான்’ என்றது உணர்வு.

அவள் இதயம் படபடத்தது. கண்களில் திரண்ட நீர்த்திரையில் எதிரிலிருந்த விளக்கின் ஒளி குழம்பிய நீள்படலமாகத் தெரிய, அருகில் சலனமின்றித் தூங்கும் குழந்தையை மென்மையாக முத்தமிட்டாள்.

குழந்தையின் அருகில் அவள் கணவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான், ’சார்’ ஆலோசனையின் பேரில் அவள் கலந்துகொடுத்திருந்த தூக்க மாத்திரையின் செல்வாக்கில். குழந்தைக்கும் சிறிது அந்த ’டீயில்’ பங்கு கொடுத்திருந்ததை வேதனையுடன் நினைவுகூர்ந்தாள்.

அவளுக்கு அந்த இளம் தம்பதியர் மீது கோபமில்லை. ’அந்தம்மா’வின் புத்திர சோகத்தை அவள் முழுமையாக உணர்ந்திருந்தாள். லாட்டரி அடித்ததுபோல் திடீரென்று தன் மகளுக்கும் தனக்கும் உருவான எதிர்காலம் அவளுக்கு ஒருவகையில் மகிழ்ச்சியளித்தது. ’வாசு சார்’ தரும் இரண்டாயிரத்தை அந்த பாங்க் பியூன்மூலம் அவள் ஏற்கனவே தொடங்கியிருந்த கணக்கில் கட்டி அதன்மூலம் தன் கணவனை ஒரு ’பிரிவிட் டாக்குடரிடம்’ காண்பித்துச் சிகிச்சை செய்துகொள்ளலாம் என்ற சாத்தியம் நம்பிக்கையளித்தது.

அதே சமயம் தன் கணவனை ஏமாற்றுவது வேதனையளித்தது. குழந்தையின் மறைவை அவன் எவ்விதம் எடுத்துக்கொள்வான் என்று தீர்மானிக்க முடியவில்லை. சில நாட்கள் கணவனிடம் உண்மையை மறைத்துத் தானும் அவன் இழப்பில் பங்குகொள்வது போல் நடிப்பதுதான் சரி என்று தோன்றியது. ஏதாவது வம்பில் மாட்டிக்கொள்வோமா என்ற பயம் அவ்வவ்ப்போது தலைதூக்கியது.

"ஏதாவது வம்பில மாட்டிக்காதீங்க. பாத்து செய்யுங்க. உங்க நிலைமை எனக்குப் புரியறது. அதே சமயம் சட்டவிரோதமா ஏதாவது செஞ்சிடாதீங்க", என்று அவன் வயதான தந்தை கொடுத்திருந்த அறிவுரை நினைவில் நெருட வாசு நடந்துகொண்டிருந்தான்.

இது ஒன்றும் சட்டவிரோதமான செயலாகத் தோன்றவில்லை. குழந்தையின் தந்தையைக் கலந்து ஆலோசிக்காமல் தாயிடம் மட்டும் எழுத்து மூலம் பெற்ற ஒப்புதல் சட்டத்தால் நிராகரிக்கப் படத்தக்க செயல் என்றாலும், செயலில் உள்ள மனிதாபிமானமும், கைம்மாறாக அந்த நலிவுற்ற தம்பதியர்க்கு அவன் செய்யப்போகும் பண உதவியும் அந்த செயலை நியாயப்படுத்தப் போதுமான காரணங்களாகத் தோன்றின.

’ரம்யா திரும்பக்க் கிடைத்ததும்’ செய்யவேண்டியன பற்றி அவர்கள் ஏற்கனவே விரிவாக விவாதித்து இருந்தனர்.

அவர்கள் சென்னைக்குக் குடிவந்து ஒரு மாத காலமே ஆகியிருந்ததாலும் அதில் பெரும் பகுதி கீதா திருப்பதியில் தன் பிறந்த, புகுந்த வீடுகளில் கழித்ததாலும், இங்குள்ள சுற்றுப்புற மனிதர்களிடம் ’முதல் ரம்யா’வின் மறைவுபற்றிக் கூறாமல் அவள் திருப்பதியில் அவன் பெற்றோர்களிடம் வளர்வதாகச் சொல்லியிருந்தது இப்போது சாதகமாக அமைந்தது.

புது மனிதர்களின் அநாவசிய விசாரிப்புகளும் ஆறுதல் மொழிகளும் ஏற்கனவே இருந்த சோகச் சுமையை அதிகரிப்பதை அவர்கள் விரும்பாமல்தான் ’முதல் ரம்யா’வின் மறைவுச் செய்தியை ஒத்திப் போட்டிருந்தனர். இனி அதற்கு அவசியமில்லை.

அதேபோல் திருப்பதியில் குடும்ப நண்பர்களைப் பொறுத்தவரை இந்த ’இரண்டாவது ரம்யா’ பெருமாள் அருளால் அவர்கள் சென்னையில் ஓர் அனாதை ஆஸ்ரமம் மூலம் சுவீகாரம் செய்துகொள்ளமுடிந்த குழந்தையாக இருப்பாள்.

சில நாட்களில் குழந்தை அந்தப் புதிய குடும்ப சூழ்நிலைக்குப் பழகி ரம்யாவாகவே உருமாறி வளர்ந்ததும் (அதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது), சென்னை திரும்பிவிடத் திட்டமிட்டு கீதாவை ஏற்கனவே தன் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.

நினைவுகளின் லயிப்பில் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி பஸ் நிறுத்தம் வரைவாக வந்துவிட்டதை உணர்ந்தவன் அவசரமாக பான்ட் பையில் கைவிட்டு சிகரெட் லைட்டரை எடுத்து ஏற்றி ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டபோது நடைபாதை சுவரோரம் படுத்திருந்த அந்தப் பெண் எழுந்துகொண்டாள்.

கவனத்துடன் சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவனைப் பின்தொடர்ந்து போயஸ் கார்டன் தெருவில் நுழைந்தாள்.

"எங் கொய்ந்தய நா உங்ககிட்ட விக்கலீங்க. அடகுதான் வெக்கறேன். எங்கூட்டுக்கார்க்கு ஒடம்பு சொகமானதும் எப்டியாச்சும் கஷ்டப்பட்டு உங்க பணத்தக் கொடுத்திட்டு எம்மவள மீட்டுக்குவன், ஸொல்ட்டன்."

கரகரத்த குரலில் லட்சுமி சொன்ன வார்த்தைகள் நினைவில் ஒலிக்க, அவன் ’ஆட்டோ’ தேடி நடந்தான் கையில் அந்த மலர்ச் சுமையுடன்.

*** *** ***
 
[6]

’காவல்’ என்று முகப்பில் எழுதியிருந்த அந்த ஜீப் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்க, உதவிப் போலீஸ் கமிஷனர் ஜெயராமன் அன்றைய தினத்தில் இரண்டாவது முறையாக உள்ளே நுழைந்தார்.

நிலையம் திடீரென்று சுறுசுறுப்பாகி அலுவலர்கள் சூழ்ந்துகொள்ள, தொப்பியைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டிவிட்டு காலரைத் தளர்த்திக்கொண்டு நாற்காலியில் சாய்ந்தார்.

"கட்சி ஆளுங்களோட அனாவசியமா வெச்சுக்காதீங்கய்யா! எனக்கு இதான் வேலையா? எங்க கலாட்டா நடந்தாலும் அங்க நிச்சயமா கட்சி ஆள் ரெண்டுபேர் இருக்கறது வழக்கமாய்டுத்து. புல்ஷிட் பாலிடிக்ஸ்!" என்றவர், எல்லோரையும் கலையுமாறு சைகை காட்டிவிட்டு, திடீரென்று, "சண்முகசுந்தரம், யார்ப்பா அது ரொம்ப நேரமா வாசல்ல நிக்கறது?" என்றார்.

ஹெட் கான்ஸ்டபிள் சண்முகசுந்தரம் முகத்தில் கலவரம் படர்ந்தது. ’மனுசன் களுகுக் கண்ல எதும்மே தப்பாதே?’ என்று மனதில் வார்த்தைகளை அசைபோடத் தொடங்கியவர் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "அந்தாள் ஒரு தொழு நோயாளிங்க சார். பேர் ஏழுமலையாம். பிளாட்பாரத்தில கையேந்திப் பிழைக்கிறவரு. நைட் போயஸ் கார்டன் டர்னிங்ல பிளாட்பாரத்தில குழந்தையோட தூங்கினாராம். காலைல குழந்தையைக் காணலியாம் சார். ரிப்போர்ட் எழுதிக்கிட்டங்க. நாளைக்கு இன்ஸ்பெக்ட்ர் டூட்டி ஜாயின்பண்ணதும் துப்புத் துலக்க ஆரம்பிச்சிடுவோங்க" என்றார்.

"ஏய்யா, இன்ஸ்பெக்டர் இல்லேன்னா ஸ்டேஷன இழுத்து மூடிடுவீங்களா, அ? காலைல எட்டு மணிலர்ந்து அந்தாள் இங்க தவம் கிடக்காரில்ல? இப்ப மணி என்ன? யார் உங்க டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர்?"

"ஶ்ரீதர் சார்ங்க."

"கெட் ஹிம் ஆன் த லைன்! கண்ணுசாமி, வெளில காத்துட்டிருக்கற அந்தாளக் கூட்டியா."

கான்ஸ்டபிள் கண்ணுசாமி, ’அட, அல்லார் பேரும் தெரிஞ்சு வெச்சுக்கிறாரு!’ என்று வியந்தபடி சென்றார்.

ஏழுமலை உள்ளே நுழைந்தபோது மெலிதான பயத்துடன் கான்ஸ்டபிள்கள் பிரிந்து வழிவிட, அவனை எதிரில் இருந்த பெஞ்ச்சில் அமருமாறு சைகை செய்துவிட்டு உதவி கமிஷனர் தொலைபேசி ரிஸீவரை வாங்கிக்கொண்டார்.

"ஶ்ரீதர், ஜெயராமன் ஹியர்... குட் ஆஃடர்நூன்! உங்களுக்கு ஒரு அர்ஜன்ட் அஸைன்மென்ட். கேஸ் அஃப் அ மிஸ்ஸிங் பேபி. பாஸிபிளி கிட்னாப்ட். ஃபாதர் இஸ் எ லெப்ரஸி பேஷன்ட். நாலுமணி நேரமா ஸ்டேஷன்ல வெயிட் பண்றாரு, நத்திங் இஸ் செட் இன் மோஷன்!... எஸ், உடனே வாங்க."

"வணக்கங்க", என்றான் ஏழுமலை.

"வணக்கம். உக்காரு. எப்பருந்து உன் குழந்தையைக் காணல?"

"போயஸ் தெரு மொகனைல பிளாட்டுபாரத்தில நானும் என் சம்சாரம், கொய்ந்தையும் படுத்திருந்தோங்க. பொதுவா நா நைட்டு சரியாத் தூங்கமாட்டேங்க. உடம்பு பூரா ஒருமாதிரி நமச்சல் எடுத்துக்கிட்டிருக்கும். நேத்து என்னமோ அசந்து தூங்கிட்டங்க. காலீல ஆறு மணிக்குத்தாங்க எந்திரிச்சேன். எய்ந்து உக்காந்தா திக்குன்னதுங்க. எம்மவ அமுதாவக் காணலீங்க", என்றவன் குரல் கரகரக்கத் தலையைக் குனிந்துகொண்டான்.

சண்முகசுந்தரம் அவன் வார்த்தைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டார்.

"குழந்தைக்கு என்ன வயசிருக்கும்?"

"மூணு முடியுதுங்க."

"குழந்தை பாக்க எப்படி இருக்கும்?"

"செவப்பா, அழகா இருக்குங்க, அது அம்மா மாதிரி. லெச்சுமி எனக்கு ரெண்டாந் தாரங்க. எங்களுக்கு சொந்த ஊரு பெரம்பலூர் பக்கத்தில வாலிகண்டபுரம்-ங்க. கல்யாணம் கட்டிகிட்ட பிற்பாடு ஊரை விட்டுப் புறப்ப்டங்க. எதும் படிக்காததால வேலை கிடைக்கல. எடையில எவனோ ஒரு கயவாளிப்பய என் சம்சாரத்துக்கு சினிமா சான்சு வாங்கிதரன்னு சொல்லி, கைலர்ந்த பணமெல்லாம் அவுட்டாயிருச்சிங்க. எதோ ரெண்டொரு படத்துல எக்ஸ்த்ராவா நடிக்க சான்சு கிடைச்சி, நானும் கூலிவேலை செஞ்சு பொழப்பு ஒருமாதிரியா ஓடிக்கிட்டு இருந்ததுங்க. த்திடீர்னு எப்படியோ எனக்கு இந்தத் தொயு நோயி புட்சு பொழப்ப நாறடிச்சிருச்சிங்க. இப்ப ஊர்ப்பக்கங்கூடத் தலை காட்ட முடியல. என்ன பாவம் பண்ணமோ இப்ப கொய்ந்தயும் பூட்ச்சுங்க!"

"எங்கய்யா உன் சம்சாரம்?"

"காலைல ரெண்டுபேரும் சேர்ந்துதாங்க இங்க வந்தம். ஒரு மணி நேரம் கழிச்சு என்ன இங்க பாத்துக்கச் சொல்லிட்டு, அது தெரிஞ்சவங்க கைல கொய்ந்தயப் பத்தி விசாரிக்க போயிருக்குங்க."

உதவி கமிஷனர் ஹெட் கான்ஸ்டபிளைப் பார்க்க அவர் தலையை பென்சிலின் பின்புறத்தால் சொறிந்துகொண்டார்.

"எவ்ளோ நாளா உனக்கு இந்த வியாதி இருக்கு?"

"ஒண்ணரை வருஷமாச்சுங்க. மொதல்ல புண்ணு கொஞ்சம் சாஸ்தியா இருந்து இப்ப பரவாயில்லீங்க."

"ஆஸ்பத்திருக்குப் போறதுண்டா?"

"முன்னேயெல்லாம் மாசம் ரெண்டு வாட்டி போய்க்கிட்டு இருந்தங்க. இப்ப நாலு மாசமா போவல."

"ஏன் போவல?"

"நெதம் ரெண்டு வேளை எதும் துன்றத்துக்கு சம்பாரிக்கிறதே நாய்ப் பொளப்பா இருக்குங்க. அங்க ஆசுபத்திரில எப்பப் பாத்தாலும் கியூங்க. பெரிய பேஜாருங்க."

உதவி கமிஷனர் தலையை இடவலமா ஆட்டியபடி, "கெட் மீ த ஸ்டேட் லெப்ராலஜிஸ்ட், டாக்டர் சுந்தரவதனம்", என்றார்.

வாசலில் ஜீப் வந்து நின்றது.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் முன்னால் இறங்கி வேகமாக உள்ளே நுழைந்து உதவி கமிஷனரை நோக்கி நடந்து சல்யூட் அடித்துத் தழைந்து நிற்க, பின்னால் காவல்துறை புகைப்பட நிபுணர், பேதாலஜிஸ்ட், ஃபாரன்ஸிக் எக்ஸ்பர்ட் முதலியோர் தொடர்ந்துவந்து அணிவகுத்து நின்றதும் உதவி கமிஷனர் எழுந்துகொண்டார்.

தொலைபேசி ஒலித்தது.

"டாக்டர் சுந்தரவதனம்? ஜெயராமன் ஹியர். ஹௌ ஆர் யு டாக்டர்?... ஃபைன்! ஒரு பேஷண்ட்ட பாக்கணும்... எஸ், அர்ஜன்ட் கேஸ்! (சிரித்து) யுவர் கேஸ் அஸ் வெல் அஸ் மை கேஸ்!...ஏழுமலைன்னு பேரு. அவரோட குழந்தையைக் காணலியாம். இன்வெஸ்டிகேஷன்ஸ் ஆரம்பிச்சுட்டோம். டு ஸ்டார்ட் வித், நீங்க ஒருதரம் பேஷன்டப் பாத்துருங்க. நாலு மணி வாக்குல டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர்கூட அனுப்பி வெக்கட்டுமா? நானும் முடிஞ்சா ஈவினிங் வரேன். தாங்க்யு!"

"வெல்கம், ஆல் அஃப் யு. நான் வேற ஒரு விஷயமா இங்க வந்தேன். ஶ்ரீதர், யு டேக் சார்ஜ் அஃப் திஸ் கேஸ். நா சொன்னேல்ல, ஏழுமலை? இந்தாள்தான். புவர் மேன்! நான் கிளம்பறேன், நேரமாறது, கமிஷனரைப் பார்க்கணும். [படிப்பதற்கு வசதியாக உ.க. தொடர்ந்த பேச்சு ஆங்கிலத்தில் தரப்படுகிறது.] You interrogate this man and his wife thoroughly. Take a group to the spot. Check everything: soil sample, fingerprints, possible fibres, hairs, tyre marks, footprints, even paint--ஒண்ணுவிடாம எல்லாம் பாத்துருங்க. தேவைப்பட்டா ஃபோட்டோவோட ப்ளாஸ்டர் காஸ்ட் போட்டுக்குங்க, பக்கா எவிடன்ஸா இருக்கும்.

"அப்புறம் சுத்தி இருக்கற கடைகள், அந்த காலேஜ், ட்ரைவ் இன் ஹோட்டல் எல்லாம் துப்புரவா விசாரிக்கச் சொல்லுங்க. You know all these routine only too well! I'm personally interested in this case. வாராவாரம் எனக்கு ரிப்போர்ட் அனுப்பிவிடுங்க. நாலுமணிக்கு இந்தாளை டாக்டர் சுந்தரவதனம்கிட்ட் அழைச்சிட்டுப் போகணும்."

"எஸ் சார்! ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங்."

"கவலைப் படாதீய்யா, என்ன? உன் குழந்தையைக் கண்டுபிடிச்சிருவோம், சீக்கிரமே. இவங்க கேக்கற கேள்விக்கெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம விவரமா பதில் சொல்லணும், புரியுதா?" என்று அவன் தோளில் மெதுவாகத் தட்டியவர், ஞாபகம் வந்து வெடுக்கென்று கையை எடுத்துக்கொண்டார்.

"டாக்டர் ரவி, ஹாவ் எ ப்ரிலிம்னரி செக்கப் ஆஃப் திஸ் பேஷன்ட். இஃப் நெசஸ்ஸரி, இந்த இடத்தை டிஸ்‍இன்ஃபெக்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க."

*** *** ***
 
Last edited:
07. ஹைகூ, சென்ரியூ முயற்சிகள்
ஹைகூ, சென்ரியூ என்ற, ஜப்பானிலிருந்து வந்த கவிதைகளுக்கு வடிவங்கள் ஒன்றே. இரண்டும் மூன்றடியில் வருவன: முதலடியில் ஐந்து, இரண்டாம் அடியில் ஏழு, மூன்றாம் அடியில் ஐந்து சீர்கள் இருக்கவேண்டும். மூன்றாம் அடியில் உள்ள ட்விஸ்ட்--திருகு, வியப்பளிப்பதாகவும், முன்னிரு வரிகளுடன் சம்பந்தம் உடையதாகவும் இருக்கவேண்டும். ஒரு வித்தியாசம், ஹைகூ பொதுவாக இயற்கையையும் விழுமிய பொருளையும் சொல்வது; சென்ரியூ மனித இயல்பைப் பற்றி.

கற்சிலையில் கடவுள்?
எத்தனை மூட நம்பிக்கை!
ஐகான் எங்கள் வழி.

மழைத்துளிகள் இணையும்
வயர்களில் அத்வைதம்! மிச்சம்
வேலைக்காரிக்கு.

நீயே நான் நானே
நீ என்ற தோழா! பில்பணம்!
பர்ஸை மறந்துவிட்டேன்!

கழுதைகள் கடன்பணம்
வராததால் கழுதைகள் பறிமுதல்:
பேங்க் பதிவுகள் காலி!

வரும்நாள் எல்லாம்
இன்று நேற்று ஆவது விதி.
கனவுகளில் வாழ்க்கை.

மனைவியின் மாக்கோலம்
காக்கைகள் அணில்கள் மேயும்.
எறும்புக்குத் தடங்கள்.

*****
 
[7]

"உன் பேரென்னய்யா?"

"ஏழுமலைங்க."

"உன் குழந்தையைத்தான் காணோமா?"

"ஆமாங்க."

"ஏய்யா, கால்ல போட்டிருக்கிற கட்டெல்லாம் ரொம்ப அழுக்காயிருக்கு, எப்ப வந்த ஆஸ்பத்திரிக்குக் கடைசியா?"

"நாலு மாசம் முன்னங்க."

"அதுக்கப்பறம் ஏன் வரலை, அ? மாசம் ரெண்டு தடவை வந்து கட்டுப் போட்டுக்கணும்னு தெரியுமில்ல?"

"எனக்கு இருக்கிறது ஒட்டற வியாதி இல்லைன்னு டாக்குடரு சொன்னாருங்க. திரியும் வரணும்னுதாங்க நெனச்சுக்கிட்டிருந்தேன். பொளப்புக்கே நேரம் போதலேங்க, மன்னிச்சிக்கோங்க."

"சரி சரி, வேட்டி சட்டையைக் கழட்டிட்டு பெஞ்ச் மேல படுத்துக்க."

டாக்டர் சுந்தரவதனம் வெளியேற எழுமலை வெட்கத்துடன் நர்ஸ் விமலாவைப் பார்த்தான். பின் அரைமனதாக உடைகளைக் களைந்தான்.

ஐந்து நிமிடங்களில் டாக்டர் சுந்தரவதனம் மீண்டும் அறைக்குள் நுழைந்தார்.

"விமலா, ஸிம்ப்டம்ஸ்லாம் விவரமா குறிச்சுக்க. போலீஸ்க்கு ரிப்போர்ட் ஸப்மிட் பண்ணனும்."

"எஸ் டாக்டர்."

டாக்டர் சுந்தரவதனத்தின் தேர்ந்த விரல்கள் ஏழுமலையின் உடலை அங்கங்கே இதமாக வருடின. சில இடங்களில் நின்று அழுந்தின. சில இடங்களில் தாளம்போட்டும், இன்னும் சில இடங்களில் நுனி மழுங்கிய ஊசியால் குத்தியும் உணர்வுகளை அளந்தன.

"Presence of macules, nodules, papules, and other cutaneous infections all over the body. Loss of sensation in finger tips and upper feet. The ulnar nerve is hard and tender. Diffuse nodular infiltration responsible for the nasal deformity, which is beginnging to show."

நர்ஸ் விமலா குறிப்பெடுத்துக்கொள்ள வெளியில் லெட்சுமி கவலையுடன் காத்திருந்தாள்.

*** *** ***

வாசலில் கான்ஸ்டபிள் நின்றிருக்க, ஶ்ரீதர் சிந்தனையுடன் ரிசப்ஷன் ஹாலில் முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தான்.

உதவி கமிஷனர் ஆலோசனைப்படி அவர்கள் குற்றம் நடந்த இடத்தைத் துப்புரவாக அலசியிருந்தார்கள். மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு டாக்டர் சுந்தரவதனத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டன. ஏழுமலை-லட்சுமி மேலிருந்த குழந்தை கவுனின் நூலிழைகள், உரோமங்கள் சேகரிக்கப்பட்டன. விரல் தடயங்கள் அனைத்தும் ஆக்ஸைட் மற்றும் கரிப்பொடிகள் தூவி வெளிக்கொணரப்பட்டு ஃபிலிம்களில் பதிவுசெய்யப்பட்டன. ஏழுமலை-லட்சுமியின் பத்துவிரல் ரேகைகளையும், காலடித் தடங்களையும் மற்றும் தலைமுடிகள் சிலவற்றையும் ஒப்புமைக்காக எடுத்துக்கொண்டார்கள்.

தார்போட்ட சாலையாதலால் டயர் தடங்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. போயஸ் கார்டன் தெருமுனையில் நடைபாதை திருப்பத்தில் ஒரு காலணித்தடம் முழுமையாகக் கிடைத்தது. ப்ளாஸ்டிக் டேப்பால் தடத்தைச் சுற்றி சிறிய, ஆழமற்ற தொட்டிபோல் அமைத்துக்கொண்டு ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் ஊற்றி, உலரவிட்டு எடுத்துத் தடத்தைப் பதிவுசெய்து படமும் பிடித்துக்கொண்டார்கள். மற்றபடி ரத்தக் கறைகளோ, வேரு விதமான கறைகளோ கிடைக்கவில்லை, வெற்றிலை-பாக்குக் கறைகள் தவிர.

ஏழுமலையின் பாத்திரங்களும் மற்ற உடமைகளும் கைப்பற்றப்பட்டு மற்ற பொருட்களுடன் க்ளினிகல் மற்றும் ஃபாரன்ஸிக் சோதனைச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டன.

குழந்தையைக் கடைசியாகப் பார்த்திருக்கக் கூடியவர்களையும், முன்தினம் பின்னிரவில் கதீட்ரல் சாலையில் எவரேனும் சந்தேகப்படும்படியான முறையில் உலவினார்களா என்று கண்டறிவதற்கும், மற்ற நேரடி விசாரணைகள் நடத்தவும் மூன்று தேர்ந்த கான்ஸ்டபிள்கள் சண்முகசுந்தரம் தலைமையில் அனுப்பப்பட்டிருந்தனர்.

ஏழுமலை சாதாரணமாகக் குறிப்பிட்ட அந்த இளைஞன் ஶ்ரீதர் மனதில் நெருடிக்கொண்டிருந்தான்.

’அவுரு ரொம்ப நல்லவருங்க. ஒரு தடவை எங்கிட்ட பேசினாரு. என்னோட வியாதி பத்திக் கேட்டாரு. ரொம்ப இரக்கப்பட்டு அஞ்சு ரூவா தந்தாரு...’

’...நா ரெண்டொரு தடவை அவரைப் பாத்தேங்க. கண்ணு மங்கலா தெரியறதால மூஞ்சி க்யாபகம் இல்லீங்க. கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தார், மீசை வெச்சிருந்தார். கூட ஒரு அம்மா இருந்தாங்க. அவரு எதோ பாங்க்ல இருக்கறதா பொஞ்சாதி சொல்லிச்சு.’

’நானும் ரெண்டொரு தபா பாத்தங்க, அவ்ளதான். ஒருக்கா, எம்மக ரோட்டு நடுவுல போய்ட்டப்ப அவருதான் ஒடியாந்து தூக்கினாருங்க. அன்னிக்கி எனக்கும் அஞ்சு ரூபா தந்தாருங்க--அதாவது அந்தம்மா தந்தாங்க...’

’அவங்க ரெண்டுபேரும் சின்ன வயசுங்க. எங்கொய்ந்தய காப்பாத்தினப்ப ’சார் போல்சுங்களா’ன்னு கேட்டேன், இல்ல பாங்க்ன்னாரு. சுருட்ட மயிர், கறுப்புக் கண்ணாடி போட்டு மீசை வெச்சிக்கிட்டு ஆள் ஷோக்கா இருந்தாருங்க. அந்தம்மாகூட பாக்கறதுக்கு அளகா இருந்தாங்க.’

’கார், ஸ்கூட்டர் எதாச்சும் வெச்சிருந்தாங்களா/’

’இல்லீங்க, நடந்துதான் வந்தாங்க...’

மறுபடியும் இவர்களை விசாரிக்கவேண்டும்.

*** *** ***
 
Last edited:
"விமலா, பேஷன்டை ரெடிபண்ணு. ஸ்கின் ஸ்மியர் எடுத்திடலாம்", என்று கூறியபடி டாக்டர் சுந்தரவதனம் வெளியில் வந்தார்.

மீண்டும் அவர் அறைக்குள் நுழைந்தபோது வாசலில் ஜீப் வந்து நிற்க, ஶ்ரீதர் விரைந்தான்.

உதவி கமிஷனரும் ஶ்ரீதரும் அந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தபோது, டாக்டர் சுந்தரவதனம் ஏழுமலையின் காது மடல்களையும், உடலில் சில இடங்களில் ஆறாதிருந்த புண்களையும் ஸ்பிரிட்டால் சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

"உங்க எக்ஸாமினேஷன் முடிஞ்சிருக்கும். இப்ப என் டர்ன்", என்று உதவி கமிஷனரிடம் கூறிப் புன்னகைத்துவிட்டு, ஏழுமலையின் காதுமடல் நுனியை விரல்களால் இறுகப்பற்றி ஒரு சிறிய கத்தியால் அரை சென்டிமீட்டர் ஆழத்துக்குக் கீறினார். பின் கத்தியை ஒரு செங்கோணத்தில் திருப்பித் திறமையுடன் வாய்பிளந்த தோல் விளிம்புகளைக் கசியும் திரவத்துடன் கத்தரித்து, ஒரு புதிய, ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட மைக்ராஸ்கோப் ஸ்லைடில் பரப்பினார். புண் நுனிகளையும் இதேபோல் கத்தரித்து ஸ்லைட்களில் பரப்பிவிட்டு கையுறைகளைக் கழற்றிவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டார்.

"Well, Jayaraman, a possible case of lepromatous leprosy. க்ளினிகல் டெஸ்ட் முடிஞ்சது. லாப் டெஸ்ட்ல கன்ஃபர்ம் பண்ணிடறேன்."

"யு மீன் இட்’ஸ் கண்டேஜியஸ்?"

"வெரி. பேஷன்ட்டை அட்மிட் பண்ணிடுங்க. கொஞ்ச நாளைக்கு க்வாரண்டைன்ல இருக்கட்டும்."

"எனக்கு ஒட்டற வியாதி இல்லைன்னு நாலு மாசம் முன்னாடி டாக்டர் சொன்னதா சொன்னானே?"

"அப்போ இன்டிடர்மினேட்டா இருந்திருக்கும். லுக், ஜெயராமன். லெப்ரஸில நாலு வகை இருக்கு. Tuberculoid and lepromatous are two polar types. ட்யூபர்குலாய்ட் வகையில லோகலைஸ்ட் இன்ஃபெக்‍ஷன் இருக்கும். டிஷ்யூ ரெசிஸ்டன்ஸ் அதிகமா இருக்கும். You know leprosy is caused by the organism Mycobacterium leprae. In the lepromatous type, because of the tissue resistance, கிருமிகளோட தாக்குதல் அதிகமாகி, பலவிதமான சருமப் புண்கள் உண்டாகும். அந்த வகையான ஸ்கின் லீஷன்ஸ் இவனோட உடம்புல அதிகமாயும் ஆறாமலும் இருக்கறதால கிருமிகள் புண்ணுலேர்ந்து சிதறி சுற்றிலும் பரவ வாய்ப்பு அதிகம். இவனைத் தொடுவதால even I can get infected. Of course, getting infected is not synonymous with getting diseased. இந்த ரெண்டுவகை தவிர, பார்டர்லைன்னு ஒரு டைப். அதுல முதல் ரெண்டு வகையோட குணங்களும் தென்படும். நாளடைவில ஏதாவது ஒரு டைப்ல ஸெட்டில் ஆயிடும். கடைசியாக, இன்டிடர்மினேட் டைப். லெப்ரஸியோட ஆரம்ப நிலைகள்ல எந்த டைப்னு தீர்மானிக்கறது கஷ்டம். அதனாலதான் அதை இன்டிடர்மினேட்னு சொல்றது. இதுவும் நாளடைவில ஏதாவது ஒரு டைப்ல ஸெட்டில் ஆயிடும்."

உதவி கமிஷனர் முகத்தில் கவலை படர்ந்தது.

"What about his child, he was affectionately in contact with?"

"நிச்சயமா குழந்தைக்கு நோய் பீடிக்க வாய்ப்பிருக்கு. இப்ப இல்லாட்டாலும் பின்னால."

சட்டென்று மூவரும் சில கணங்கள் மௌனமாகிவிட, டாக்டர் சுந்தரவதனம் சிந்தனையுடன் தேர்ந்தெடுத்த வார்த்தகளில் அறிவித்தார்:

"That child is a potential time bomb that has probably started ticking."

*** *** ***
 
[8]

"ரம்மி, உன் டாடி பேரென்னா?

"வா...சு!"

"மம்மி பேரென்ன?"

"கீ...தா!"

"ஒம் பேரு?"

"ரம்ம்யா!"

"டாடி உன்னை எப்படிக் கூப்பிடுவார்?"

"ரம்ம்மி!"

"பூனை எப்படிக் கத்தும்?"

"மீய்யாவ்!"

"டாடியோட புது ஸ்கூட்டர் பேரென்ன?

"வீஜ்ஜய்!"

"குட்! அம்மா சொல்லித் தந்தேனே, அந்த நர்சரி ரைம் சொல்லு?

"...டிவிங்க்கிள், டிவிங்க்கிள் லிட்டில் ஸ்டார்!
அவ்வை ஒன்டர் வாட் யூ ஆர்,
அப்ப போத வர்ல்ட் ஸோ ஹை
லைக்க டைமன் இந்த ஸ்கய்!"

அந்தக் குறுகிய காலத்தில் அமுதாவின் உருமாற்றம் வாசுவை அதியசிக்கச் செய்ய, அவள் வளர்ந்த அந்த இனிய காட்சிகளை நினைவில் ரசித்தபடி ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்தான்.

கீதாவால் நம்பத்தான் முடியவில்லை!

கலகலவென்று எப்போதும் உறவினர் மற்றும் நண்பர்கள் குழந்தையைப் புடை சூழ்ந்திருந்த நிலையில் திருப்பதியில் அவள் மாமனார் வீட்டில் வாசு-கீதாவின் இருபத்து=நாலு மணிநேர கவனிப்பில் குழந்தை அமுதாவின் உருமாற்றம் ஒரு பாரசூட் விரிவதுபோல் சடுதியில் தொடங்கி, குழந்தையைப் புதிய உலகம் நோக்கி அழைத்துச் சென்றது.

"A real miracle darling! You have done what you have undone! டார்ஃஜானை நாகரீகப் படுத்துவதுபோல இது உங்களுக்கும் எப்படி முடிஞ்சது? எனக்கு ரொம்..ப சந்தோஷமா இருக்கு. ஐ லவ் யூ!"

"ஒரு குழந்தையோடா மூளை வந்து கீதா, புரோக்ராம் செய்யாத ஒரு கம்ப்யூட்டர் மாதிரி. தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கி தக்க ஆணைகளைப் பிறப்பித்தால் அந்தக் கம்ப்யூட்டரை வசப்படுத்திடலாம். I am happy she is fond of me."

வெண்ணெய் காயும்போது ஓரத்தில் தட்டும் கசடுபோல் ரம்யாவிடம் ஒன்றிரண்டு விஷயங்கள் இன்னமும் முழுக்க மாறாதிருப்பதை நினைவுகூர்ந்தான். முக்கியமாக, சில சமயங்களில் அவளையும் மீறி வெளிப்பட்டுவிடும் அந்த ’ஆக்ஸன்ட்!’

"பசிக்குதா ரம்மி?"

"ஆமாம் டாடி, எதாச்சும் துன்ன வேணும்."

"ஏய் கழுதை! ’துன்ன’ சொல்லக்கூடாது, ’தின்ன’ அல்லது ’திங்க’ சொல்லணும்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்? கரெக்டா சொல்லு?"

"...ம், தின்ன வேணும் டாடி!"

"ரைட். இன்னிக்கு தெருவுல புழுதியில விளையாடலையே?"

"இல்லை டாடி."

"புழுதியைத் தொட்டா உடம்புல சிரங்கு வரும், புரியுதா? அப்புறம் டாடிக்கு ரொம்ப கோவம் வரும். புழுதியில விளையாடக்கூடாது, என்ன?"

"சரி டாடி!"

"குட் கேர்ல்! கமான் கிவ் மி எ கிஸ்!"

ஸ்கூட்டரை ஏறத்தாழ முத்தமிட்டதுபோல் இடப்புறம் ஒரு காவல்துறை ஜீப் செல்ல, மெலிதான திடுக்கிடலில் சாலையில் மஞ்சள் கோட்டுக்கு ஒதுங்கி, வலப்புறம் கையசைத்து நின்று, சரிந்து காலை ஊன்றிக்கொண்டு, எதிர்ப்புறம் சாலை காலியானதும் திரும்பி உட்லான்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

*** *** ***

"உன் பேர் தானய்யா கைலாசம்?"

"ஆமாங் சார்!"

"எப்டி இருந்தார் அந்தாளு?"

"யார் சார்?"

"அன்னைக்கு நீ டிஃபன் சப்ளை பண்ணியே, அவர். கூட ஒரு அம்மா, எதிர்த்தாப்பல இன்னொரு அம்மா, குழந்தை இருந்தாங்க இல்லையா? கமான், எப்படி இருந்தாங்க அவங்க?"

"அதான் ஏற்கனவே ரெண்டுபேர் வந்து விசாரிச்சாங்க, சொல்லிட்டேனே சார்! எனக்கு வேற ஒண்ணும் தெரியாது."

ஶ்ரீதர் கடைசி மேசையில் வசதியாக சாய்ந்துகொண்டு மசால் தோசையைப் பிரிக்க, சர்வர் கைலாசம் இனம்புரியாத அச்சத்தில் சுற்றிலும் பார்த்தான்.

"தைரியமா இன்னொரு தடவை சொல்லு. உன்னை ஒண்ணும் பண்ணிட மாட்டேன்."

"அன்னிக்கு அவங்க மூணுபேர் வந்தாங்க சார். அவர முன்னாடி இங்க பார்த்திருக்கேன். அவங்க ரெண்டுபேரையும் தெரியாது. ஓரு அம்மா பாக்க டீஜன்ட்டாவும் இன்னோரம்மா கொஞ்சம் கவர்ச்சியாவும் உடுத்தியிருந்தாங்க. குழந்தையோட மஞ்சக் கவுன் கொஞ்சம் அழுக்கா இருந்திச்சு. ’ஏம்மா, கீள விளுந்துட்டதான்னு’ அந்த ரெண்டாவது அம்மா கேட்டது காதுல விழுந்தது. டேபிள் மேல அந்தக் குழந்தையோட கலர் போட்டோ நாலஞ்சு இருந்தது. அதை இந்த ரெண்டாவது அம்மா ஒவ்வொண்ணா எடுத்துப் பாத்திச்சு. மற்றபடி நான் ஒண்ணும் கவனிக்கலீங்க."

"அந்தாள் எப்படி இருப்பார், முன்னாடி பாத்திருக்கேன்னு சொன்னல்ல?"

"அவரு சிவப்பா, உயரமா, பாக்க துறுதுறுன்னு இருப்பாருங்க. ரெண்டு பக்கமும் லேசா சரியற மீசை. நீளக் கிருதா. சுருட்ட முடி. கறுப்புக் கண்ணாடி எப்பவாச்சும். பேர் தெரியாதுங்க. அதிகமா போனா முப்பது வயசிருக்கும். அவ்ளதாங்க எனக்குத் தெரிஞ்சது."

"ரைட். நீ இதுவரைக்கும் எங்க டிபார்ட்மென்ட் ஆளுங்ககிட்ட சொன்ன அங்க அடையாளங்களை வெச்சு ஒரு படம் வரைஞ்சு பார்த்தா, இந்த ரெண்டு படத்தில எது அவர்மாதிரி இருக்கு?"

ஶ்ரீதர் காண்பித்த ’ஐடென்டிகிட்’ படங்களில் கைலாசம் வாய்திறந்து மூட மறந்தான். அவன் கைகள் தாமாக் ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தன.

"எப்படிங்க இவ்ள கரெக்டா..."

"ரைட். நீ போய் காஃபி கொண்டா."

காஃபி ட்ரேயுடன் வந்த கைலாசம் தற்செயலாக கவனித்துத் திடுக்கிட்டான்.

இரண்டு வரிசைகள் தள்ளி இரண்டாவது மேசையில் வேறொரு சர்வரின் கவனிப்பில் ஹெல்மேட்டைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வாசு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்!

வாசுவின் தாராள டிப்ஸ்களில் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளும் அளவுக்கு அவனுடன் பரிச்சயமாகியிருந்த கைலாசம், இப்போது அவனை அந்தப் போலீஸ் அதிகாரியின் பார்வையிலிருந்து மறைக்கும் நோக்கத்துடன் காஃபியை அவர் மேசைமேல் வைத்துவிட்டு மேசையை ஒட்டியபடி அவருக்குப் பக்கத்தில் நின்றான்.

"சுகர் போதுமா பாருங்க சார்."

"காஃபி நல்லாயிருக்கு. ரைட், மறுபடி பார்க்கலாம். பாக்கி சில்லறைய வெச்சுக்க."

கையலம்ப ஶ்ரீதர் வாஷ் பேசின் அருகில் சென்றபோது அவனுக்கு முன்னால் நின்ற அந்த இளைஞன் தலைவாரிக்கொண்டு ஹெல்மெட் அணிய முற்பட்டபோது ஒருகணம் அந்த சுருள் முடியையும் கண்ணாடியில் முகத்தையும் காண நேரிட்டவன் வியப்பு மேலிடத் திகைத்து நின்றுவிட்டான்!

அவசரமாகக் கையலம்பித் திரும்புவதற்குள் அந்த இளைஞன் ஹோட்டல் வாசைலில் மறைந்துவிட, ஶ்ரீதர் எதிர்ப்பட்ட மனிதர்களைத் தள்ளிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வாசல் நோக்கி விரைவதை கைலாசம் பயத்துடனும் கவலையுடனும் கவனித்துக் கொண்டிருந்தான்.

*** *** ***
 
[9]

ஹோட்டல் உட்லாண்ட்ஸ் வாசலில் ஶ்ரீதர் தன் மோட்டார் சைக்கிளை ஒரே உதையில் கிளப்பிக்கொண்டு சரேலென அரைவட்டத்தில் திரும்பி வெளிவாசலை நோக்கி இடப்புறம் தார்சாலையில் செல்ல யத்தனித்தபோது---

குதிரை ஒன்றை நடத்திக்கொண்டு ஓர் ஆள் சாவதானமாகப் பாதையைக் கடக்க, குதிரை மேல் அமர்ந்திருந்த அந்த அழகிய குழந்தை ஶ்ரீதரைப் பார்த்து முறுவலுடன் கையாட்டியது.

அவனும் பதிலுக்கு அவசரமாகக் கையாட்டிவிட்டு கியரை மாற்றி வண்டியை முன்னால் உசுப்பி, அந்த நேரம் பார்த்து இடையில் குறுக்கிட்ட ஓர் அம்பாஸிடர் காரிடம் ஹார்ன் பிளிறி, பின்னால் செக்யூரிட்டி கார்டின் விசிலைப் புறக்கணித்து, வழியும் வசவும் வாங்கிக்கொண்டு படபடத்து விரைந்து வெளிவாசல் அடைந்து வலப்புறம் சாலையில் விடாப்பிடியாகக் குறுக்கிட்ட டெம்போவுக்கு வழிவிட்டு, சரிந்து நிற்க நேரிட்டபோது---

அந்த இளம்நீல நிற விஜய் ஸ்கூட்டர் பி.டி.சாமி கட்டடம் எதிரில் சாலைத் திருப்பத்தில் வாகனங்களிடையே மறைவதைப் பார்த்தான்.

தொடர்வதா வேண்டாமா என்ற கேள்விக்கு சட்டென முடிவெடுத்தான் எதிர்மறையாக.

வாஷ்பேசின் முன் நின்ற அந்த இளைஞன் ஹெல்மெட் மாட்டிக்கொள்ளுமுன் பாக்கெட் சீப்பினால் தலைவாரிக்கொண்டு சீப்பில் இரண்டு விரல்களை ஓட்டி பேசினில் உதிர்த்தது பளிச்சென்று நினைவுக்கு வந்தது.

திருப்தியுடன் தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டியபடி பைக்கில் பொருத்தப் பட்டிருந்த பெர்சனல் ரேடியோ மூலம் மத்தியக் கட்டுபாட்டு நிலையத்துடன் தொடர்புகொண்டான்.

அடுத்த சில வினாடிகளில் அவன் குரல் தெளிவாக ’டாக்த்ரூ’ வசதி மூலம் அந்த ரேடியோ சானலில் ட்யூன் செய்யப்பட்டிருந்த அனைத்து ட்ரான்ஸ்மிட்டர்களிலும் ஒலித்தது.

"Attention all traffic flying squad units in Royapettah, Tenampet, Mylapore, Triplicane, Mandaveli and other nearby areas! This is SrIdhar, Divisional Detective, Anna Salai. Look for a new, light blue, Vijay scooter... person with a green helmet... இப்பதான் ரெண்டு நிமிஷம் முன்னாடி உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டலில் இருந்து கிளம்பினான். வெள்ளையில கறுப்புக் கட்டம் போட்ட ஃபுல் ஷர்ட், முன்கை பாதிவரை மடிச்சுவிட்டுப்பான். ஜீன்ஸ் பாண்ட்... Green helmet with visor... வண்டி நம்பரையும், முடிஞ்சா தொடர்ந்துபோய் விலாசத்தையும் குறிச்சிக்கங்க... ஆளை டீடெய்ன் பண்ணவேண்டாம்... அண்ணாசாலை ஸ்டேஷனன்ல தகவல் கொடுத்திடுங்க... அவுட்!"

இந்த செய்தி ட்ராஃபிக் பாட்ரோல் வண்டிகளை உஷார்ப் படுத்தியபோது வாசு, ஹோட்டல் சோழா அருகில் கஸ்தூரி ரங்கன் சாலையில் திரும்பி, மௌபரீஸ் சாலையைக் கடந்து லஸ்சர்ச் சாலை வழியாகப் போய்க்கொண்டிருந்தான்.

பகடெல்லி விளையாட்டில் நிகழ்வதுபோல் அவன் ஸ்கூட்டர் இயல்பான வேகத்தில் பல ட்ராஃபிக் தீவுகளையும் வட்டங்களையும் கடந்து சாந்தோம் வட்டத்தில் பொருந்தியபோது அதன் எண் பதிவிசெய்யப்பட்டது.

*** *** ***

உட்லாண்ட்ஸ் ஹோட்டல் வாஷ்பேசினில் பூதக் கண்ணாடிகொண்டு துழாவியபோது கிடைத்த ஒரே ஒரு சுருள்முடியை ஶ்ரீதர் பசைநாடாவில் ஒற்றி, ப்ளாஸ்டிக் உறையில் பத்திரப் படுத்திக்கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தபோது சண்முகசுந்தரம் கொடுத்த துண்டுக் காகிதத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆறு வண்டி எண்கள் இருந்தன.

அவற்றுள் மூன்றுடன் இருந்த குறிப்புகள் அவன் கொடுத்திருந்த அடையாளங்களுடன் பொருந்தியிருந்தன. அந்த எண்கள் திருவல்லிக்கேணியிலும் சாந்தோமிலும் எட்வர்ட் எலியட்ஸ் சாலையிலும் பதிவுசெய்யப்பட்டு, திருவல்லிக்கேணி எண்மட்டும் விலாசம் தாங்கியிருந்தது.

அவன் அவசரமாக வண்டி எடுத்துக்கொண்டு விரைந்து ஜாம்பஜார் மார்க்கெட் சந்தடியில் இடுப்புவரை ஜன, வாகன வெள்ளத்தில் ஒரு நாயின் உத்வேகத்துடன் நீந்தி, சந்துபொந்துகளில் திரும்பி ஒரு வீட்டின் முதல்மாடியில் விசாரித்தபோது,

அந்த ஸ்கூட்டருக்கு உரியவரும் அதை அந்த அன்று மாலை ஓட்டியவரும் ஜீன்ஸ் உடையில் பாப் செய்த தலைமுடியோடு அவன்முன் எதிர்ப்பட்டு அளவளாவிய பெண் என்று தெரிந்தது!

*** *** ***
 
[10]

காலிங் பெல் இசை வடிவில் ஒலித்து அந்த மிக்கி மௌஸ் கண்சிமிட்ட ரம்யா ஆர்வத்துடன் பார்த்தபடி, "டாடி, யாரோ வந்திர்க்காங்க", என்றாள்.

கீதா கதவைத் திறந்தபோது ஓர் இளைஞனும் யுவதியும் நின்றிருந்தனர்.

’லட்சுமி!...’ வாய்வரை வந்துவிட்ட வார்த்தையை ஏதோ ஒரு உள்ளுணர்வின் எச்சரிக்கையில் அடக்கிக்கொண்டவள், முகத்தை அன்னியமாக வைத்துக்கொண்டு, "யார் வேணும்?" என்றாள்.

"மிஸ்டர் வாசுதேவன் இருக்காரா?" என்றான் ஶ்ரீதர்.

"யார் மம்மி வந்திருக்காங்க?"

ரம்யாவின் கரிசனமும் குரலும் லட்சுமியின் பாச உணர்வுகளைச் சுண்டி இழுக்க, கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். மகளின் எதிர்காலத்தை உத்தேசித்து அவள் ஏற்கனவே எடுத்துவிட்ட முடிவில் இனி மனம் மாறப் போவதில்லை எனத் தீர்மானித்து இருந்தாள்.

"ஹ்ம்..ம்.. ஸ்மார்ட் லுக்கிங் சைல்ட்! உன் பேரென்ன பாப்பா?"

"ரம்யா..." குழந்தை மெதுவாகக் கூறிவிட்டுத் தாயைப் புதிருடன் பார்த்தாள். "யார் இந்த அங்கிள் மாம்?"

கீதா நிச்சயமின்றி விலகி வழிவிட்டு அவர்களை ஹாலுக்கு அழைத்துச் சென்று அமரவைத்தாள்.

ஶ்ரீதர் இயல்பாக சோஃபாவில் சாய்ந்துகொள்ள லட்சுமி தயங்கியபடி ஒரு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தாள்.

"இப்பத்தான் ஷேவிங் முடிச்சிக் குளிக்கப் போனார். கால்மணி வெயிட் பண்ணீங்கன்னா வந்திடுவார். மே ஐ நோ ஹூ யு ஆர்?"

"வெல், ஐ’ம் ஶ்ரீதர், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர், க்ரைம் ப்ராஞ்ச், அண்ணாசாலை டிவிஷன். இந்தம்மா பேர் லட்சுமி. ஐ ஸப்போஸ் யு நோ ஹர்."

இருவர் விழிகளும் சந்தித்துக்கொண்டு லட்சுமியின் விழிகள் தாழ, கீதா அவளை நன்றாகப் பார்த்துவிட்டுத் தயக்கமின்றி, "எங்கயோ பார்த்தமாதிரி இருக்கு... ஒன் மினிட், இவங்களை, உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இன் ஹோட்டல் ப்ளாட்ஃபாரத்தில பார்த்திருக்கேன். இந்தம்மாவோட புருஷன் ஒரு லெப்ரஸி பேஷன்ட், இல்ல? எப்படிம்மா இருக்கு அவருக்கு இப்ப?"

"அய்யா தயவுல ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அவர் உடம்பு கொஞ்சம் பரவாயில்லை. எங்கொய்ந்தயத்தான் ரண்டு மாசமா காணல", என்றாள் லட்சுமி விழிக்கடையில் நீர் தெரிய.

"என்னது, துறுதுறுன்னு பார்க்க அழகா இருக்குமே, அந்தக் குழந்தையா?"

"எந்தக் குழந்தை மம்மி?", என்றாள் ரம்யா, இவர்கள் உரையாடலை ஆர்வத்துடன் கவனித்தபடி.

"கிட்டத்தட்ட ரெண்டு மாசமாத் தேடிட்டிருக்கோம். இன்னும் சரியான ’க்ளூ’ கிடைக்கலை. ஐ திங்க் யு பீப்பிள் கன் ஹெல்ப் அஸ்..."

"எங்களால முடிஞ்சதை செய்யறோம்", என்றவள், குக்கரின் ’ஹூஷ்’ கேட்க, "ஒன் மினிட்" என்று விலகினாள்.

ஹாலில் நுழைந்தபோதே வலப்புறம் ஷவர் ஒலி கேட்பதை உணர்ந்திருந்த ஶ்ரீதர் அவள் இடப்புறம் சமையல் அறையை நோக்கிச் செல்வதை கவனித்தான்.

"ரம்யா, இங்க வாயேன்!"

ஶ்ரீதரின் ரகசியக் குரலில் குழந்தை தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

"ரம்யா, கமான்! அங்கிள் என்ன வெச்சிருக்கேன் பார்!"

குழந்தை இப்போது அவனை நோக்கி முழுமையாகத் திரும்பி நிற்க, "எங்கே, என்னையே பார்!... இங்க, இங்க பார், மேஜிக்!... தட்’ஸ் நைஸ்" என்று இரண்டு தடவை ரகசியமாக ’க்ளிக்’ செய்துவிட்டுத் தன் பாக்கெட் காமிராவைப் பையில் போட்டுக்கொண்டு அவன் குழந்தையை நோக்கிக் கைநீட்டியபோது கையில் ஒரு மில்க் சால்லேட் பார் இருந்தது.

"இந்தக் குழந்தையாம்மா?"

"அசப்பில அப்படித்தாங்க இருக்கு. இருந்தாலும் இவங்க ஏங்க எம்மவள கடத்திட்டு போவணும்! ரண்டொரு வாட்டி பாத்திருக்கேன்னு சொன்னதை வெச்சு இங்க இட்டாந்துட்டீங்களேய்யா! எனக்கு இவங்க மேல ஒண்ணும் சந்தேகம் இல்லை."

"நாங்க எல்லாரையும் சந்தேகப்பட வேண்டியிருக்கு. எங்க வேலையே சந்தேகப்படறதுதான். அவசியம் ஏற்பட்டா உன்மேலகூட சந்தேகப்படுவோம்", என்று சிரித்தான்.

"அமுதா தான்னே உன் குழந்தை பேர்?" என்றான் கொஞ்சம் இடைவெளி விட்டு.

"ஆமாங்க."

"இந்தா, நீயே குழந்தையை அந்தப் பேர்சொல்லிக் கூப்பிட்டு சாக்லேட் கொடு", என்று எழுந்துகொண்டு ஹால் மூலையில் பெட்ரூம் பக்கம் இருந்த புத்தக அலமாரியை நோக்கி நடந்தான்.

லட்சுமி கொஞ்சம் தயங்கிவிட்டு, "அமுதா!" என்று கூப்பிட்டாள்.

ட்ரம்மர் பொம்மைக்குச் சாவி கொடுப்பதில் மும்முரமாக இருந்த குழந்தை திரும்பிப் பார்க்காதது அவளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியும் ஒரு புறம் வருத்தமும் தர, இரண்டாம் தடவையாக, "அமுதா!" என்றாள் கொஞ்சம் குரலை உயர்த்தியபடி.

ரம்யா நிச்சயமின்றித் திரும்பிப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள். "யார் ஆன்ட்டி அமுதா?"

லட்சுமி பொறுக்கமாட்டாமல் அவளை இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டாள்.

"அமுதாங்கறது என்னோட கொய்ந்தைம்மா. பாக்கறதுக்கு உன்னமாதிரியே அழகா இருப்பா. அவளை ரண்டு மாசமாக் காணலை. இந்தா, நீ இந்தச் சாக்குலட்ட இப்பத் துன்னுவியாம், எங்கண்ணில்ல?"

ரம்யா தயக்கத்துடன் வாங்கிக்கொண்டாள்.

"உனக்குச் சாக்குலட்டு பிடிக்குமாம்மா?"

"ஓ! நெறையத் துன்னுவேன்! டாடி தினம் ஒண்ணு வாங்கிட்டு வருவாங்க."

கையில் ஜூஸ் ட்ரேயுடன் வந்த கீதா அந்தத் ’துன்னுவேன்’ பிரயோகத்தில் துணுக்குற்றாள்.

"ஏய், வாயாடி! அதுக்குள்ள சாக்லேட்லாம் வாங்கிக்கிட்டாச்சா? போ, போயி டாடி குளிச்சாச்சா பாரு."

*** *** ***
 
Dear Saidevo Sir,

hearty greetings on wonderful flow and apt use of words... felt like hugging you for the superb writing. Cheers!! Eagerly waiting for the next posting...
 
கொஞ்ச நேரத்தில் வாசுவும் அவர்களோடு சேர்ந்துகொண்டான்.

அறிமுகங்கள் முடிந்ததும் ஶ்ரீதர் விவரங்களைக் கூறிவிட்டு, "இந்தம்மாவையும் இவங்க புருஷன் ஏழுமலையையும் எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு சொல்லுங்க", என்றான்.

வாசு அந்த முதல் அறிமுகம் பற்றியும், அடுத்த ஒன்றிரண்டு சந்திப்புகள் பற்றியும், சந்தித்த போதெல்லாம் அவனும் அவன் மனைவியும் கொடுத்த ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையிலான தர்மங்கள் பற்றியும் கூடுமானவரை உண்மையை ஒளிக்காமல் கூறினான்.

"வெல், உங்க இரக்கத்தை நான் பாராட்டறேன். அதே சமயத்தில அந்த ஐந்து ரூபாய் தர்மங்கள் கொஞ்சம் அசாதாரணமாய்த் தெரியலை?"

"எங்களுக்கு அப்படித் தெரியலை", என்றாள் கீதா பட்டென்று. "இதுக்கு முன்னாடியும் நாங்கள் ஏழை ஜனங்களுக்கு உதவியிருக்கோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் இவங்களைப் பார்த்தால் பிச்சைக்காரங்களாத் தெரியலை, அவ்வளவுதான்."

"டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர், நீங்க எங்களை சாதாரணமாக விசாரிக்க வந்தீங்களா அல்லது சட்டப்படி ’இன்டராகேட்’ பண்ண வந்தீங்களான்னு சொல்லிட்டா நல்லது--"

"ச்ச்...ச்ச்! திஸ் இஸ் ஜஸ்ட் அன் இன்ஃபார்மல் டாக், மிஸ்டர் வாசுதேவன்! இவங்க குழந்தை காணாமல் போனதால இவங்களுக்குத் தெரிஞ்சவங்களை ஒவ்வொருத்தரா விசாரிச்சிட்டு வரோம், அவ்வளவுதான். நீங்க மனசு வெச்சா எங்களுக்கு உதவி செய்யலாம். லுக், நான் எதையுமே குறிச்சுக்கலை."

வாசு தலையசைத்தான்.

"ரைட். போன மாதம் பத்தாம் தேதி, அதாவது இந்தக் குழந்தை--(ஶ்ரீதரின் கண்கள் ரம்யா பக்கம் ஒரு முறை திரும்பியதை வாசு கவனிக்கத் தவறவில்லை)--காணாமல் போன அன்னைக்கு முதல் நாள் மாலை ஆறு மணியிலிருந்து மறுநாள் காலை எட்டு மணி வரை நீங்க ரெண்டு பேரும் என்ன செஞ்சிட்டிருந்தீங்கன்னு சொல்ல முடியுமா?"

"என்ன கேள்வி இது இன்ஸ்பெக்டர், ரெண்டு மாசம் கழிச்சு! எனக்கு சரியா ஞாபகம் இல்லை. ஆனா ஒண்ணு, பத்தாம் தேதி காலைல முதல் பஸ் பிடிச்சு நான் திருப்பதி போனேன்."

"போன மாசம் ஏழு தேதிலேர்ந்து நான் திருப்பதியிலதான் இருந்தேன். எங்க பெற்றோர் வீட்டில, மாமனார் வீட்டில. இந்த மாசம் பத்தாம் தேதிதான் சென்னை வந்தேன்."

"உங்க குழந்தை மேடம்?"

"ரம்யா திருப்பதியில என்னோடதான் இருந்தா."

"அப்புறம் மிஸ்டர் வாசுதேவன், அன்னைக்கு உட்லான்ட்ஸ் ஹோட்டல்ல இந்தம்மாவுக்கு நீங்க டிஃபன் வாங்கித் தந்தபோது---ஏன் ஒரு ப்ளாட்ஃபார்ம் வாசிக்கு நீங்க டிஃபன் வாங்கித் தரணும்னு நான் கேக்கப் போறதில்ல---கூட இருந்தது உங்க குழந்தையா?"

வாசு சட்டென்று தீர்மானித்து, "இல்லை. அது இந்தம்மாவோட குழந்தைதான்", என்றான்.

"அன்னைக்கு நீங்க லட்சுமிகிட்ட சில கலர் ஃபோட்டோ காட்டினீங்கல்ல, அதைப்பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?"

வாசுதேவனின் கண்கள் சட்டென லட்சுமியின் மீது விழுவதை ஶ்ரீதர் கவனித்தான். கீதாவும் அவளை நோக்க, அவள் ஒரு தமிழ் செய்தித்தாளைப் படித்துக்கொண்டு ரம்யாவிடம் கிடைத்த பால்பேனாவால் அதில் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள், அசுவாரஸ்யமாக.

"அதெல்லாம் என் குழந்தைகளோட படங்கள்தான். யு வான்ட் டு ஸீ தெம்?"

கீதா எழுந்து படுக்கை அறையை நோக்கிச் சென்றாள். சில வினாடிகளில் ஒரு அச்சிட்ட கவருடன் திரும்பினாள்.

வாசு கவரை வாங்கிக்கொள்ள, ஶ்ரீதர், "அதுக்கில்ல மிஸ்டர் வாசுதேவன். உங்க குழந்தை ஃபோட்டோவை நீங்க ஏன் இந்தம்மாட்ட காட்டணும்?" என்றான்.

"வொய் நாட்?" என்றான் வாசு, கவரை ஶ்ரீதரிடம் கொடுத்தபடி. அவன் மனம் ஒரு ரேஸ் குதிரையைப்போல் எண்ணங்களைக் கடந்து நிராகரித்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தது, ஒரு இயல்பான, பொருத்தமான பதிலில் நிற்பதற்கு.

ஶ்ரீதர் கவரில் இருந்து புகைப்படங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தான். "பட் வொய் வாசுதேவன்?"

"வெல், பில்லுக்குப் பணம் வைக்கும்போது என் பர்ஸ்ல ரம்யாவோட ஃபோட்டோவை தற்செயலாப் பார்த்து ஆச்சிரியப்பட்டு இந்தம்மா, ’அட, உங்க கொய்ந்தையும் எங்கொய்ந்தையும் ஒரே மாதிரிக்கிது!’ன்னு சொன்னாங்க. அப்பத்தான் நாங்க கவனிச்சோம். உடனே, சான்ஸா அன்னைக்குத்தான் ப்ரின்ட்போட்டு வந்து கீதா கைப்பையில வெச்சிருந்த இந்தக் கவர்லேர்ந்து சில ஃபோட்டோக்களை எடுத்துக் கம்பேர் பண்ணிப் பார்த்தோம். இட் வாஸ் எ ரிமார்கபிள் ரிசம்ப்ளன்ஸ்! கடவுளோட அபூர்வமான கார்பன் காப்பி படைப்புகள்ல ஒண்ணுன்னு நெனச்சுக்கிட்டேன்."

வாசுதேவனின் இந்த பதில் முன்பு லட்சுமி அவனிடம் கூறிய பதிலுடன் அநேகமாகப் பொருந்துவதை ஶ்ரீதர் மனதில் குறித்துக்கொண்டான்.

"நீங்க மைன்ட் பண்ணலேன்னா உங்க திருப்பதி விலாசம் வேணும். யு ஸீ, இட்’ஸ் மை ஜாப் டு செக் எனி அலிபி."

விலாசம் வாங்கிக்கொண்டு அவர்கள் எழுந்துகொண்டனர். லட்சுமியை முதலில் அனுப்பிவிட்டு ஶ்ரீதர் வாசுவுடன் எதிரில் நாலைந்து வீடுகள் தள்ளி நிறுத்தியிருந்த தன் பைக்கை நோக்கி நடந்தபோது கூறினான்.

"நாங்கள் உங்கமேல சந்தேகப்படறதுக்கு இதுவரை போதுமான ஆதாரம் கிடைக்கலை, மிஸ்டர் வாசுதேவன். ஆனால் ஒரு விஷயம்...அந்தம்மாவோட குழந்தைக்கு லெப்ரஸி வர வாய்ப்பு அதிகம் இருக்கிறதா எங்க டாக்டர் அபிப்ராயப்படறார். அவரோட வார்த்தைகள்ல சொல்லணும்னா, ’That child is a potential time bomb that has probably started ticking.’"

"நீங்க என்ன சொல்லறீங்கன்னு புரியலை."

ஶ்ரீதர் புன்னகைத்தான். "இன்னொரு விஷயம் மிஸ்டர் வாசுதேவன்."

"ப்ளீஸ்..."

"குழந்தை உயிரோட இருக்கிறபோது பொதுவா அதோட படத்துக்கு மலர்மாலை அணிவிக்கிறதில்லை. நீங்களும் உங்க வொய்ஃபும் நிக்கிற போஸ்ல ஒரு ஃபோட்டோ உங்க பெட்ரூம்ல கண்ல பட்டது. அந்த ஃபோட்டோல உங்களுக்குப் பின்னால கவனிச்சேன்", என்றான் ஶ்ரீதர், பைக்கைக் கிளப்பியபடி.

"அந்த ஃபோட்டோ சமீபத்தில எடுத்தது. அன்னைக்கு ரம்யாவோட பிறந்த நாள்."

தலையாட்டிய ஶ்ரீதரின் பைக் வட்டமடித்துத் திரும்பி விரைய வண்டியின் வெளிப்போக்கிக் குழாயிலிருந்து புறப்பட்ட புகை வாசுவின் கால்களில் மெத்தென்று தாக்கியது.

வாசு வீட்டுக்கு வந்தபோது கீதா அன்றைய செய்தித்தாளைக் காட்டினாள். அதில் நாலாம் பக்கத்தின் இடது மூலையில் கோலம் வரைந்து அதற்குள் சின்னதாக, ’கவலப் படதீங்க. நான் கட்டிக்குடுக்க மாட்டேன்’ என்று பால் பேனாவால் கிறுக்கியிருந்தது.

*** *** ***
 
[11]

"அவங்க மூணுபேரும் ஒருத்தருக்கொருத்தர் பேசி வெச்சிகிட்டாப்பல உண்மையை மறைக்கறாங்க சார். என்னுடைய தியரிப்படி அந்த ஜிக்ஸா பஸில் ஏறக்குறைய பொருந்தறது. ஒரே ஒரு லின்க்தான் வேணும்."

"லெட் மி ஸீ", என்றார் உதவி கமிஷனர்.

ஶ்ரீதர் உற்சாகத்துடன் கைகளைத் தேய்த்தபடி, "ஒரு நிமிஷம் சார்" என்றான். மனதில் எண்ணங்களை துரிதமாக ஓர் ஒழுங்கில் அமைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான்.

உதவி கமிஷனர் அந்த மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் கைகளைப் பின்னால் பதித்தபடி சாய்ந்துகொண்டார், ஶ்ரீதரின் வார்த்தைகளை எதிர்நோக்கியவராய்.

ஜெட் விமானம் ஒன்று மிக உயரத்தில் ஒரு சிலந்திபோல் ஊர்ந்துகொண்டிருக்க, வானில் நீண்ட கோடாக விமானம் இழையிட்ட புகைத்தடம் காற்றில் கலைந்துகொண்டிருந்தது.

தூரத்தில் மரங்களிடையே சூரியன் இறங்கிச் சிவந்துகொண்டிருக்க, குழந்தைகள் தெருவில் ஒரு நாய்க்குட்டியுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஊதுவத்திப் புகைபோல மெல்லிய தென்றல் அலையொன்று இலைகளை வருடியபடி வந்து நெற்றியில் குளிர்ந்து கேசங்களைச் சிலிர்த்தது.

ஶ்ரீதர் பேசத் தொடாங்கினான்.

"எல்லாமே அவங்க மூணுபேரைத்தான் பாயின்ட் பண்ணுது சார். வாசுவோட முதல் குழந்தை ரம்யா ஒரு கார் விபத்தில செத்துப் போய்ட்டதுன்னு திருப்பதியில விசாரித்துத் தெரிஞ்சுகிட்டேன். அந்த போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டோட புகைப்படப் பிரதி என்கிட்ட இருக்கு. ஆனால், வாசுதேவனோட அப்பாவைத்தான் பார்க்க முடியலை. வீடு பூட்டியிருந்தது. வேணும்னே இருக்காதுன்னு நம்பறேன். அவரோட சகோதரிக்கு சீரியஸ்னு ரெண்டு நாள் முன்னதான் பெங்களூர் கிளம்பிப் போனாங்களாம். அக்கம்பக்கத்தில விசாரிச்சதுல வாசுவோட மனைவி கீதா திருப்பதியில தன்னோட இருந்ததாச் சொன்ன குழந்தை, அவங்க சென்னையிலிருந்த ஒரு அனாதை ஆஸ்ரமத்திலேர்ந்து சுவீகாரம் பண்ணிக்கிட்ட குழந்தைன்னு சொன்னாங்க சார்.

"லட்சுமியோட குழந்தை குழந்தை தற்செயலா அந்த ரம்யா மாதிரி இருக்கவும் அவங்க அவளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் பணம்கொடுத்து ஏழுமலைக்குத் தெரியாம குழந்தையை விலைக்கு வாங்கிட்டாங்க. இந்த விஷயம் லட்சுமியோட முழு சம்மதத்தோட நடந்திருக்கு. அதனாலதான் அவள் அதை மறைக்கறா. சம்பவம் நடந்த மறுநாள் காலையில அவள் அந்தப் பணத்தை பாங்க்ல கட்டியிருக்கா. தவிர, முதல்நாள் ராத்திரி ஏழுமலை டீ சாப்பிட்ட டம்ளர்ல ஒரு ஸெடேட்டிவ்வோட ட்ரேஸஸ் இருந்திருக்கு சார். அந்தக் காரியத்தை லட்சுமி செஞ்சிருக்க அதிக சாத்தியம் இருக்கறதா எனக்குப் படறது. அநேகமா வாசு அந்தத் தூக்க மருந்தை வாங்கித் தந்திருக்கலாம்."

"என்ன சொல்றா அவ?"

"ஷி டினைஸ் இட் சார். அவள் ஒரு ரெகுலர் விபச்சாரின்னு தெரியறது. பிழைப்புக்காகவும், கணவனோட சிசிச்சைக்குப் பணம் சேர்க்கவும் ரெண்டு வருஷமா அவள் அந்தத் தொழில்ல ஈடுபட்டு இருக்காளாம் சார். அந்த ரெண்டாயிரம் ரூபாயை சமீபத்தில ஒரு சினிமா உதவி டைரக்டர்ட்டேர்ந்து சம்பாதிச்சதா சொல்றா. அவளோட பாங்க் பாஸ்புத்தகப்படி அதிகபட்சம் நூத்தம்பது ரூவாதான் இருந்திருக்கு.

"மற்ற ஃபிஸிகல் எவிடன்ஸ் பொறுத்தவரைக்கும் அந்த காலணித்தடம், தலைமுடி ரெண்டும் வாசுவோடதுன்னு உறுதியாய்ட்டது. வாசு திருப்பதிக்குப் பயணம்பண்ண அந்த பஸ் கண்டக்டர் அவரைப்போல தோற்றமுள்ள ஒரு இளைஞர் கையில் ஒரு தூங்கும் குழந்தையோட அந்த முதல் பஸ்ல பயணம் செஞ்சதா கன்ஃப்ர்ம் பண்ணறார் சார்."

"போறாதுய்யா. You have got personal and a few scientific evidences in this case. And then there is a circumstantial evidence. வாசுவோட குழந்தை ரம்யா இறந்துட்டதாலும், லட்சுமியோட குழந்தை அமுதா அந்த ரம்யா மாதிரி இருந்ததாலும், ஐ ரிபீட், இருந்ததாலும், வாசு அந்தக் குழந்தையை சட்டத்துக்குப் புறம்பான வகையில ஸ்வீகாரம் பண்ணியிருக்கலாம், இல்லையா? அதாவது, வாசுகிட்ட இப்ப இருக்கற குழந்தை ரம்யா இல்லை, அமுதாவா இருக்கலாம். ஆனால் அமுதாதான் அந்தக் குழந்தைன்னு சந்தேகத்துக்கு இடமில்லாம எப்படி நிரூபிக்கப் போறீங்க? குழந்தை பெற்ற தாயை அடையாளம் கண்டுக்கலை. தாயும் தான் பெற்ற குழந்தைதான்னு சொல்லத் தயாரா இல்லை. என்ன செய்யப் போறீங்க?"

"எனக்கு ஒண்ணு தோணறது சார்."

"யெஸ்?"

"அந்த ரெண்டாவது ரம்யா அவங்களுக்குப் பிறந்த குழந்தை இல்லைனு தெரியறதால, அந்தக் குழந்தையோட ஸோர்ஸ் பத்தி வாசு என்ன சொல்றார்னு பார்க்கலாம். திவிர, லட்சுமி குழந்தையை அடையாளம் காட்டத் தயாரா இல்லாட்டாலும் அவள் புருஷன் இருக்காரில்லையா சார்? அன்னைக்கு நான் அந்த ரம்யாவை எடுத்த கலர்ஃபோட்டோ ரெண்டும் என்கிட்ட இருக்கு சார். அதை ஏழுமலைகிட்ட காட்டி விசாரிக்கலாம்."

"எங்கருக்கான் ஏழுமலை?"

"ஆஸ்பத்திரியிலதான் இருந்தார் சார். இன்னமும் தீவிர சிசிச்சையிலதான் இருக்கறதா டாக்டர் சுந்தரவதனம் நான் திருப்பதி கிளம்பறதுக்கு முன்னாடி சொன்னார். எதோ ந்யூரோ சர்ஜரி செஞ்சாத்தான் ஸைஸபிள் ரெகவரி இருக்குமாம்."

"ரைட், கெட் ஹிம் ஆன் த லைன்."

இரண்டு முறை ’எங்கேஜ்ட்’ ஒலி கேட்டு மூன்றாம் முறை உதவி கமிஷனர் முயன்றபோது இணைப்புக் கிடைத்து மறுமுனையில் ஆஸ்பத்திரி பின்னணி ஒலிகளில் டாக்டரின் குரல் தூக்கலாக ஒலித்தது.

"ஸோ சாரி ஜெயராமன்! லாஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் உங்க நம்பர் எங்கேஜ்டா இருந்தது... அப்படியா, அப்ப நாம ரெண்டுபேரும் ஒரே சமயத்தில ட்ரை பண்ணியிருக்கோம்! எனிவே, இப்பதான் இன்டன்ஸிவ் கேர்லர்ந்து வரேன். Your patient Ezhumalai has lapsed into a coma. We were able to revive him briefly but in vain! Lots of neurological complications! I am doubtful about his recovery."

டாக்டரின் குரல் ஶ்ரீதருக்கும் கேட்க அறையில் சில கணங்கள் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவியது. பின் உதவி கமிஷனர் குரலை சமனப் படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

"கொய்ட் அன்ஃபார்சுனேட் டாக்டர். எனிவே, நாளைக்குக் காலையில உங்ககிட்ட ஒரு குழந்தையை அனுப்பி வைக்கிறேன். Suspected to be the missing link. உங்க மெடிகல் எவிடன்ஸ்தான் தீர்மானிக்கணும். You check up the child for any leprosy infection. குழந்தையோட ப்ளட் க்ரூப் மேட்ச் ஆறதா பார்த்திடுங்க. அப்படியும் கன்ஃபர்ம் ஆகலைனா DNA paternity test-தான் எடுக்கணும்."

*** *** ***
 
[12]

மறுநாள் காலை ஏழுமணிக்கு டாக்டர் சுந்தரவதனத்திடம் இருந்து ஃபோன் வந்தது.

"ஜெயராமன் குட்மார்னிங்! நீங்க சொன்ன குழந்தை நேத்து ராத்திரியிலிருந்து என் கஸ்டடியிலதான் இருக்கு. ரம்யாதானே பெயர்? பெற்றோர் வாசுதேவன்--கீதா. உங்க இன்ஸ்பெக்டர் இங்கதான் இருக்கார். காலையில வாசுதேவனுடைய வீட்டுக்குப் போயிருக்கார். வீடு பூட்டியிருக்கவே அக்கம் பக்கத்தில் விசாரிச்சு இங்க வந்துவிட்டார்."

"என்ன டயக்னோஸ் பண்ணினீங்க?"

"குழந்தைக்கு ஸ்ட்ராங் லெப்ரஸி இன்ஃபெக்*ஷன் இருக்கு. She has a localized, persistent numbness of the skin, which is a possible nerurological indication of leprosy. டைப் கன்ஃபர்ம் மண்ணறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்கணும். Right from urine, stool and blood, through hemoglobin estimation, chest radiograph to skin biopsy. We should rule out any inter-current diseases first. குழந்தையை அட்மிட் பண்ண சொல்லியிருக்கேன். Since it is an early stage, it should be one of the non-contageous type. Dapsone treatment-டில ரெண்டு மூணு வருஷத்தில குணப்படுத்திடலாம்னு நினைக்கிறேன்."

"What about the blood group Doctor?"

"லெட்சுமி, கீதா, வாசு, அன்ட் திஸ் சைல்ட் நாலுபேரோட க்ரூப்பும் ஓ பாஸிடிவ்தான், one of those common varieties observed. DNA test can be conclusive but very complicated. அவ்வளவு தூரம் போகணுமான்னு பார்த்துக்கங்க."

"இன்ஃபெக்*ஷனை வெச்சு ப்ரூவ் பண்ண முடியுமா டாக்டர்?"

"கன்க்ளூசிவ்வா முடியுமான்னு நாட் க்ளியர் ஜெயராமன். வாசு, கீதா குடும்பத்தில இந்த நோய் இல்லைங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். குழந்தைக்கு ஏழுமலையோட கான்டாக்ட் இருந்ததாலதான் இன்ஃபெக்ட் ஆகியிருக்குன்னு வெச்சுக்கிட்டாக்கூட, how do you prove it is the same child? By the bye, Jeyaraman, I have some bad news for you."

"அந்த ஏழுமலை?"

"நேத்து ராத்திரி கோமாவிலேயே காலமாய்ட்டார். Several neurological complications as I told you."

*** *** ***
 
[13]

"என்ன மன்னிச்சிடுங்க வாசு சார்! அன்னைக்கு உங்ககிட்ட ’எங் கொய்ந்தய அடகுதான் வெக்கறேன். எங்கூட்டுக்கார்க்கு ஒடம்பு சொகமானதும் எப்டியாச்சும் கஷ்டப்பட்டு உங்க பணத்தக் கொடுத்திட்டு எம்மவள மீட்டுக்குவன்’னு சொன்னேன். இப்ப அவரும் போய்ட்டாரு, என்கிட்டயும் பணமில்லை! தங்கம்னு நம்பித்தாங்க உங்ககிட்ட அடகு வெச்சேன். நீங்க ரெண்டு பேரும் பாசத்தால புடம்போட்டு சொந்த மவளா வளர்த்தீங்க. இன்னிக்கு அது வெறும் பித்தளையாய்ட்டதுன்னு தெரிஞ்சதுக்கப்பறம் நான் திரும்ப வாங்கிக்கிறது தாங்க நியாயம். இருந்தாலும்---"

வாசு ஒரு நெடிய பெருமூச்சுடன் இடம்வலம் தலையாட்டி, கையை உயர்த்தி, அவள் மேலே பேசுவதைத் தடுத்தான்.

அவர்கள் மூவரும் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். கீதா கைகளில் முகத்தை முட்டுக் கொடுத்து கர்ச்சீப்பால் வாய்பொத்தி சப்தமில்லாமல் விசித்துக்கொண்டிருந்தாள். அவளது அழுது சிவந்த கண்கள் லட்சுமியை நோக்கி உயர்ந்தபோது மேலும் பளபளத்தன.

உதவி கமிஷனர் முகத்தை சிலைபோல் வைத்துக்கொண்டு நிலைத்த கண்களால் வாசுவை அளந்துகொண்டிருக்க, அவர் அருகில் ஶ்ரீதர் சலனமின்றி அமர்ந்திருந்தான்.

எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாசு அமைதியான குரலில் தொடங்கினான்:

"நடந்த எல்லாத்துக்கும் நான் முழுப் பொறுப்பு ஏத்துக்கறேன், உதவி கமிஷனர் சார். I plead guilty of your charges. சட்ட விரோதமான முறையில ஒரு குழந்தையை சுவீகாரம் பண்ணிகிட்டது, அந்த உண்மையை உங்ககிட்ட மறைச்சது. தவிர என்னோட செய்கை மூலமா தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பாவமும் அறியாத ஒரு உயிரோட மரணத்துக்குக் காரணமாய்ட்டேன்! ப்ளீஸ், என்னைக் கைது செய்ங்க, மத்தவங்களை விட்டுடுங்க."

"அய்யா வேண்டாங்க! அவரை விட்டுடுங்க. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னை அரஷ்டு பண்ணுங்க."

"நீங்க செஞ்ச குற்றத்துக்கு உங்க மூணுபேரையும் குறைஞ்சது மூணு வருஷம் உள்ள தள்ளலாம் தெரியுமா?"

லட்சுமி பயந்துபோய், "அய்யா, தப்பு எம்மேலதாங்க. கொளந்தையும் வித்துட்டுப் புகாரையும் கொடுத்தது நான் தானுங்களே? வேற வழியில்லாமத்தான் உண்மையை மறைக்க வேண்டியிருந்ததுங்க. அய்யாதான் எப்டியாச்சும் எங்க மூணு பேரையும் மன்னிச்சு என் புகாரை நான் வாபிஸ் வாங்கிக்க அனுமதிக்கணும்."

உதவி கமிஷனரால் அவள் சொற்களில் ஆச்சரியப் படாமலிருக்க முடியவில்லை. ஶ்ரீதர் தன் வியப்பை வார்த்தைகளில் வெளியிட்டான்:

"உன் வீட்டுக்காரர் தானம்மா புகார் பண்ணது. நீ எப்படி அதை வாபஸ் வாங்கிக்க முடியும்?"

"அவரால கையெளுத்துப் போடமுடியாம நாந்தானுங்களே உங்க காயிதத்தில கையெளுத்துப் போட்டது! நான் தீர ரோசனை பண்ணி மனப்பூர்வமாத்தான் எங்கொளந்தயை அவங்களுக்கு சுவீகாரத்துக்குக் கொடுத்தங்க. எங்கிட்ட இருக்கறதக் காட்டிலும் இவங்ககிட்ட அது இளவரசி மாதிரி இருக்கும் இல்லீங்களா? எங்க பொளப்புத்தான் இப்படி ஆய்ட்டதால, எம்மவ நல்லார்க்கறது தானுங்களே எனக்கு வேணும்? எதோ எம் புருசனுக்கு வைத்தியம் பாக்கப் பணம் தேவைப்பட்டதாலதான் வாசு சார்கிட்ட பணம் வாங்கிக்கிட்டங்க. இதுல தயவுபண்ணி சட்டம்லாம் பாக்காதீங்கய்யா! ஒரு வேளை இப்ப வாசு சார் கொளந்தைக்கு வைத்தியம் பார்க்க இஸ்டப்படலேன்னா எங்கிட்ட திருப்பித் தந்திரட்டுங்க. கஸ்டமோ நஸ்டமோ நானே பாத்துக்கறேன். விதியிருந்தா பொளச்சுக்கிது..."

"என்னைக்கு நாங்க பாசத்தோட உங்கிட்டேர்ந்து வாங்கிட்டமோ அன்னைக்கிலேர்ந்து ரம்யா உன் குழந்தை இல்லேம்மா...", என்றாள் கீதா முதன்முறையாக.

உதவி கமிஷனரின் கண்கள் அவள்மேல் விழுந்து பின் வாசுமேல் நிலைத்தன.

"நான் உங்களை விட்டுவிட முடியாது வாசுதேவன்! நீங்க ஒரு படித்த இளைஞர், பொறுப்பான வேலையில இருக்கீங்க. ஏய்யா சட்டத்தை ’இவேட்’ பண்ண நினைச்சீங்க? நீங்க மூணுபேரும் எங்க டிபார்ட்மென்டுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்துட்டீங்க!"

வாசு பதில்பேசத் தொடங்கும் முன் அவர் ஶ்ரீதரிடம் "எதுக்கும் எஃப் ஐ ஆர் ரெடி பண்ணிருங்க" என்றார்.

குரலில் கோபம் பொதிந்திருக்க வாசு பேசத் தொடங்கினான்:

"கேரி ஆன், ஜென்டில்மென்! உங்களைப் பொறுத்தவரைக்கும் சட்டம்தானே முக்கியம்? என்னைக் கைது செய்யறதால என்னோட வேலை போய், எதிர்காலம் பாழடைஞ்சு, என் குடும்பம் தெருவில நிக்கப்போகுது. ரம்யாவும் வியாதியில பட்டுப் போய்டப் போறா. உங்களுக்கென்ன நஷ்டம்? இந்தக் கேஸை வெற்றிகரமாக ஸால்வ் பண்ணினதுக்கு இந்த இளம் இன்ஸ்பெக்டருக்குப் ப்ரொமோஷன் கிடைக்கும். ஒரு பெரிய போலீஸ் ஆஃபீஸர் தன் பல்வேறு அலுவல்களுக்கிடையில ஒரு எளிய, நலிவுற்ற குடும்பத்தோட புகாரை சிரமேற்கொண்டு கேஸை வெற்றிகரமா நடத்திக் கொடுத்ததற்காக உங்களுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்கும்!...

"ஐ யம் சாரி சார், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட்டேன்! ப்ளீஸ் சார், நான் என்னுடைய செயலை நியாயப் படுத்தறதா நினக்காதீங்க. நான் செஞ்சது குற்றமில்லை, ஒரு அட்வென்சர்தான்! ஒரு குற்றத்தை வேணும்னா ஒருத்தன் திட்டமிட்டு செய்யலாம். ஆனால் ஒரு துணிகரமான செயலையும் அதன் விளைவுகளையும் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. சமயத்தில அட்வென்சர் விபத்தாகிவிட வாய்ப்பு இருக்கு, என்னுடைய இந்த அட்வென்சர் மாதிரி!

"என்னோட முதல் குழந்தை ரம்யா ஒரு விபத்தில உயிர் இழந்தாள்னு கண்டுபிடிச்சீங்க இல்லையா? அந்த விபத்துக்கு என்னோட முன்கோபம்தான் காரணமாக இருந்தது இன்ஸ்பெக்டர்! ஒரு நாள் நான் வீட்டு வாசல்ல தெருவில வெச்சு என் ஸ்கூட்டரைத் தொடச்சிக்கிட்டிருந்தபோது ஆசையா பக்கத்தில வந்து தானும் தொடைக்கறேன்னு தொட்ட குழந்தையை, அது ஸ்பார்க் ப்ளக்கில கையை வெச்சிரப்போறதேன்னு பயந்து கோவத்துல ’போ அந்தாண்ட’ன்னு பிடிச்சுத் தள்ளினேன். குழந்தை தெருவில நிலைதடுமாறி விழுந்ததும் அந்தக் கார் அவள்மேல ஏறினதும் ஒரே சமயத்தில நடந்தது!... இதை விதின்னு சொல்லறதா, இல்லை நான் குற்றவாளின்னு சொல்லறதா? ரம்யாவோட மறைவு எங்க மனசையும் குடும்ப வாழ்க்கையையும் ஆழமா பாதிச்சதுல நான் இம்போடன்ட் ஆகிவிட, இன்னொரு குழந்தைகூட பெத்துக்க முடியாத நிலையிலதான் இந்த ரெண்டாவது ரம்யாவைக் கடவுள் தந்த பரிசா நினைச்சு சுவீகாரம் பண்ணிக்கிட்டேன் சார்! It was never my intention to evade the Law. இப்ப நீங்க அனுமதிச்சீங்கன்ன சட்டப்படி இந்தக் குழந்தையை நான் என் மகளா ஏத்துக்க்கறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்!"

மூச்சடைக்க நிறுத்தியவன், குரலைக் கொஞ்சம் தாழ்த்திக்கொண்டு சொன்னான்:

"எனக்கு உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான் சார்! இந்தக் கேஸை ஒரு ’ஹ்யூமன் ஆங்கிள்ல’ பாருங்க. நான் லட்சுமியோட குழந்தையை விலை கொடுத்து வாங்கவும் இல்லை, அவள் அதை விற்கவும் இல்லை! அவளுக்கு நான் என் பணத்தால உதவி செஞ்சிருக்கேன், அவ்வளவுதான். ஒரு விதத்தில பார்த்தா நான் குற்றவாளிதான். அதையே இன்னொரு விதத்தில பார்த்தா, நான் இந்தம்மாவோட கணவனுக்கு சிகிச்சை செய்துகொள்ளப் பண உதவி செஞ்சிருக்கேன்; ஏறக்குறைய அநாதையாகத் திருவில திரிஞ்சிக்கிட்டிருந்த ஒரு குழந்தையை எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன்; இப்ப அந்தக் குழந்தைக்கு வந்திருக்கற தொழு நோயையும் குணப்படுத்த என்னோட பணத்தையும் நாட்களையும் செலவிடப்போறேன். நான் சட்டத்தை மீறியிருக்கலாம், என்னோட சொந்த சந்தோஷத்துக்காக. ஆனால் என் நேர்மையை மட்டும் சந்தேகிக்காதீங்க சார்! ஒருவேளை உங்களுக்கு ரம்யா மாதிரி ஒரு குழந்தை இருந்து அது ஒரு நாள் அகாலமா திடீர்னு இறந்துபோயிருந்தா அந்த புத்திர சோகம் உங்களுக்குப் புரியலாம். மற்றபடி, ஏற்கனவே கடவுள் எங்களுக்கு தண்டனை கொடுத்திட்டார். அதுக்குமேல சட்டப்படியும் எங்களை நீங்க தண்டிக்க விரும்பினா, வி ஆர் அட் யுவர் டிஸ்போஸல்."

வாசுவின் ’ஒரு வேளை உங்களுக்கு ரம்யா மாதிரி’ பேச்சில் ஶ்ரீதர் கொஞ்சம் திடுக்கிட்டு அவர் முகத்தை நோக்க, உதவி கமிஷனரிடம் இருந்து ஒரு மெல்லிய, நீண்ட பெருமூச்சு வந்தது. நெற்றியில் சோக ரேகைகள் படர எழுந்துகொண்டவர் வாசுவின் தோள்களில் கை வைத்தார்.

"Alright, young man! We police officers do appreciate human values. லட்சுமி அவள் புகாரை வாபஸ் வாங்கிக்க நான் அனுமதிக்கிறேன். ரம்யாவை நீங்க சட்டப்படி சுவீகாரம் பண்ணி ஒரு கோர்ட் ஆர்டர் வாங்கிக்கங்க. சொந்த விஷயமா சொன்னா நானும் அந்த புத்திர சோகத்தை அனுபவிச்சவன்தான். என்னோட ஒரே பையன் சுரேஷ்--இப்ப இருந்த அவனுக்கு உங்க வயசிருக்கும்--ஏழு வயசில கான்சர் நோயில உயிர் விட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதனாலதான் நான் இந்த கேஸ்ல நான் பர்சனலா அக்கறை காட்டினேன். ஶ்ரீதர், இந்தக் கேஸை இப்படி முடிக்கிறது பத்தி உங்க கருத்தைச் சொல்லுங்க."

"எனக்கு சம்மதம்தான் சார். காணாமல் போன குழந்தையை நாம் வெற்றிகரமா ட்ரேஸ் பண்ணிட்டோம். அந்த சுவீகார விஷயத்தைப் பொறுத்தமட்டில குழந்தையோட நலன்தானே முக்கியம்? எனவே, நாம் கேஸை இப்படி முடிச்சிறலாம் சார்."

"ஆனால் ஒரு கண்டிஷன், வாசுதேவன். குழந்தையோட சேர்த்து அதோட முன்னாள் தாயாரையும் நீங்கதான் கவனிச்சுக்கணும்."

"எங்களுக்கு அதில் முழு சம்மதம் சார். லட்சுமி எங்க வீட்டிலேயே தங்கட்டும். சரிதானே லட்சுமி? உன் உடைமைகளை எடுத்திட்டு காலையில வந்திரும்மா", என்றாள் கீதா.

*** *** ***
 
[14]
(இறுதிப் பகுதி)

மறுநாள் காலை வாசு செய்தித்தாளைப் பிரித்தபோது, உள்ளிருந்து ஒரு கவர் விழுந்தது.

கவரைப் பிரித்தபோது சில பத்து ரூபாய் நோட்டுகளும் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தன.

காகிதத்தில், "என்னை மன்னிச்சிடுங்க. உங்க வாள்க்கைல குறுக்கிட எனக்கு உரிமை இல்லை. தகுதியும் இல்லை. அப்படியே இருந்தாலும் எனக்கு மன நிம்மதி இருக்காது. இன்னைக்கு நான் என் கஷ்டமர் ஒருத்தரோட பம்பாய் போறேன். நெசமாவேதான்! அதிரிஸ்டம் இருந்ச்சினா சினிமாத் திரையில வருவேன். இல்லாங்காட்டி இருக்கவே இருக்கு திரை மறைவில என் தொளில். எப்படியும் சினிமாவில வருவேன்னு நம்பிக்கை இருக்கு. என்னத் தேட வேண்டம். உங்கள் ரம்யாக்கு என் அன்பு.--இப்படிக்கு, லெச்சுமி" என்று எழுதியிருந்தது.

(முற்றும்)

*** *** ***
 
பயணம்
நாவல்
ரமணி

முகவுரை

து ஒரு ரொமான்டிக் நாவல். அதாவது, காதலிக்க முற்பட்ட ஒரு சங்கோசப்படும் (timid), அகமுக (introvert) இளைஞனின் கதையைப் படர்க்கையில் (third person) சொல்லும் சுயசரிதம். கதையின் காலம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது--எழுபதுகளில். களம் தமிழகத்தின் கிராம நகர வாழ்க்கை. கதை மாந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த ஒரு பிராம்மணக் குடும்பத்தின் சம்ப்ரதாய, சற்றே முற்போக்கான உறுப்பினர்கள், உறவினர்கள்.

ஆங்கிலத்தில் stream of consciousness என்று ஒரு நாவல் உத்தியுண்டு. இந்த உத்தியில் ஆசிரியரின் குறுக்கீடு இல்லாமல் பாத்திரங்களின் மனவோட்டத்தின் மூலமே கதை சொல்லப்படும். James Joyce, Virginia Wolf போன்ற நாவலாசிரியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி இலக்கிய அந்தஸ்தும் புகழும் பெற்றனர். இந்த நாவலில் இந்த உத்தி கொஞ்சம் நீர்த்த வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

தடாலடி திருப்பங்களும் நிகழ்வுகளும் கதையோட்டத்துக்கு முக்கியம் இல்லை எனும்போது, கதையின் வளர்ச்சியில் கதைமாந்தர்களுடைய குணநலன்களின் வளர்ச்சி (அல்லது வீழ்ச்சி), அவர்களின் ஊடாட்டம், உள்வினைகள் போன்ற கூறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கை என்பதே இவ்வகைக் கூறுகள் அடங்கியதுதானே?

கதையின் ஒவ்வொரு வரியையும் ஊன்றிக் கவனித்து, கணித்து, ஒவ்வொரு சொல்லையும் மனதில் வாங்கி, சொற்களில் பயிலும் கவிதையை அனுபவித்து, வருணனைகளை ரசித்துப் பின் எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டுக் கதாசிரியர் எழுதியதுபோலவே வாசகரும் படித்தால் கதையின் முழுத் தாக்கம் கிடைக்கும்.

பயணம் என்ற தலைப்புடன் கூடிய இந்த நாவலில், ஒரு சங்கோசப்படும் அகமுக இளைஞனின் இல்லறம் நோக்கிய வாழ்க்கைப் பயணம் ஒரு ரயில் பயணத்துடன் தொடங்குகிறது. ரயிலில் பயணிக்கும்போதே அவன் மனம் அவனது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பின்னோக்கிப் பயணம் செய்கிறது...

கனவுகளில் முன்னோக்கியும் நினைவுகளில் பின்னோக்கியும் காலத்தில் எப்போதும் பயணம் செய்யும் மனம், யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது முதலில் தடுமாறிப் பின் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு, கிடைத்ததை உத்தமாக்க முயலும்போது வாழ்க்கை சிறக்கும் என்பதை உணர்ந்துகொள்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னரே நான் இந்த நாவலின் பெரும் பகுதியை எழுதியிருந்தபோதிலும், மனதுக்கு சமாதானம் தரும் சரியான முடிவு கிடைக்காமல் நாவலின் இறுதி வடிவத்தை ஒத்திப்போட்டு வந்தேன். ஒரு வழியாக அந்த சரியான முடிவு மனதில் உதித்து நான் தொண்ணூறாம் ஆண்டுத் தொடக்கத்தில் நாவலை என் மனதுக்குப் பிடித்த வகையில் முடிவு செய்தேன். என்னைப் பொறுத்தவரையில் என் இலக்கிய முயற்சிகளின் சிகரமாக நான் இப்படைப்பைக் கருதுகிறேன். அதே சமயம் வாசகர்களின் நேர்மையான பின்னூட்டங்களையும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தினத்தந்தி செய்தித்தாளில் வந்த (வரும்?) சிந்துபாத் தொடரின் அளவிடக் கொஞ்சம் கூடுதலான, சிறிய தவணை முறைகளில் கதையை இங்குப் பதிய எண்ணியுள்ளேன். ஒரு கவிதையைப் படிப்பதுபோல் மனம் விட்டு, மனம் இட்டு வாசகர்கள் படிக்கவேண்டும் என்று விழைகிறேன். உங்கள் பின்னூட்டங்களை இந்த நூலிலேயே பதிவு செய்யலாம்.

இந்த நாவல் இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவில்லை. இதைப் பகிர்ந்துகொள்ளும் வாசகர்கள், தனியே படியெடுக்காமல் இந்த ’லிங்க்’ கொடுத்துப் பகிர்ந்துகொள்ளக் கோருகிறேன்,கொஞ்சம் கொஞ்சமாக நான் இந்த நாவலை என் வலைதளத்தில் பதிவு செய்வதால்.
ரமணி
01/09/2012

*** *** ***
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top