Quotable Quotes Part II

#866 to #868

#866. ஆயிரம் ஆண்டுகள் வாழலாம்

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வளத்திட்ட்டுப்
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.


சிறந்த சந்திரனின் நோக்கு இடக் கண் நோக்கு. கதிரவனின் நோக்கு வலக் கண் நோக்கு. குரு அருளிய வழியில் இடக் கண் நோக்கினை வலக்கண் நோக்குடன் பொருத்தி அது முறை தவறாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு உடல் கெடாது வாழலாம்.

#867. ஞானம் தோன்றும் முன் நாதம் கேட்கும்!


பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

சீவக் கலை உடலில் மேலே மேலே செல்லும் போது கதிரவனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் தீபஒளி போலத் தோன்றுவார்கள். சீவக் கலை ஸஹஸ்ரதளத்தை அடையும் போது தலையில் ஒரு நாதம் ஒலிக்கும். அந்த நாதத்தில் சிவ பெருமான் திகழ்வான். கதிரவனின் உதயத்துக்கு முன்பு சங்கொலி மக்களைத் தட்டி எழுப்புவது போன்றே ஞான சூரியன் உதிக்கும் முன்பு தலையில் இந்த நாதம் ஒலிக்கும்.

#868. ஈசன் வெளிப்படுவான்!


கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிர் அவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்டப்புறம் சென்று அடர்ப்ப,
எதிரவன் ஈசன் இடம் அது தானே.


காலத்தைக் கணிப்பதற்குச் சூரிய சந்திரர்களின் இயக்கம் பயன்படும். உடலில் இவர்கள் இருவரும் ஒன்றாகப் பொருந்தியுள்ள பிரணவ நிலையில் சிவ சக்தியர் விளங்குவர். அவர்கள் இருவரும் ஒன்று சேரும் போது அங்கே அமுதம் விளையும். நாதத்துடன் கூடி உடலில் உள்ள அண்டத்தின் எல்லையான துவாதசாந்தத்துக்குச் செல்லும் போது ஈசன் அங்கே வெளிப்பட்டு நமக்கு எதிர்ப்படுவா
ர்.
 
#869 to #871

#869. சிவ ஒளியும் சீவ ஒளியும்

உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.


மணிபூரகம் கதிரவனுக்கு உரியது. சுவாதிஷ்டானம் சந்திரனுக்கு உரியது. மணிபூரகத்தில் வெளிப்படும் ஒளியை அடைந்து பிரணவத்தின் உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதை யாரும் அவ்வாறு அறிவதில்லை. பிரணவத்தை அடைந்து, பிரணவத்தை அறிந்து கொண்டவர்களுக்குச் சிவ ஒளி சீவ ஒளிக்கு முன்பு தோன்றும்.

(சிவ ஒளியே சீவ ஒளிக்கு ஆதாரம் ஆவதால் அவை முறையே தந்தையாகவும் ,மகனாகவும் குறிப்பிடப் பட்டுள்ளன.)


#870. ரசவாதம் போலச் சிவம் வெளிப்படும்


ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படும் தானே.


அறிவிலிகள் உண்மையத் தாமே உணர் வல்லார் அல்லர். பிறர் அந்த உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் அவற்றை அறியார் அறிவிலார். திங்களின் முதல் கலையாகிய மேதாவை இறுதிக் கலையாகிய உன்மனியுடன் சேர்க்க அறிந்து கொண்டால் ரசவாதம் நிகழ்வது போல அங்கே சிவம் வெளிப்படும்.

#871. சிவன் நீங்கிச் செல்ல மாட்டான்


பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பது
தாங்கு கதிரையும் சோதித்து அனல் உறும்;
பாம்பும் மதியும் பகை தீர்ந்து உடன் கொளீ இ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே.

குண்டலினி சக்தியாகிய பாம்பு திங்கட் கலையை வளர விடாது. குண்டலினி சுவாதிஷ்டானத்தில் பொருந்தி அங்கே விந்து நீக்கத்தைச் செய்து கொண்டிருக்கும். குண்டலினி மணிபூரகத்தில் உள்ள கதிரவனை அசைத்துக் அனல் வீசும்படிச் செய்யும். குண்டலினி மதியின் மீது கொண்ட பகைமையை நீங்கச் செய்ய வேண்டும். குண்டலியும் மதியும் பகைமை இன்றி சிரசின் மேல் இணைந்து இருந்தால் அப்போது அருள் கொண்ட சிவபெறுமான் அந்த யோகியை விட்டு ஒரு நாளும் அகன்று செல்ல மாட்டான்.

விளக்கம்

சிவனை தியானிப்பதால் குண்டலினி சக்தி உடலின் கீழேருந்து மேலே செல்லும். அதனால் திங்கட் கலை நன்கு வளரும். அதனால் வெப்பம் மிகுந்த கதிரவனும் தன் வெப்பத்தைத் தராமல் இருப்பான். மனம் சிவனிடம் பொருந்தி இருக்கும் போது குண்டலினிப் பாம்பு, கதிரவன், மதி என்ற மூன்றும் தலையில் நிலை பெறும். அவை தீங்கு செய்யும் ஆற்றலை இழந்து விடு
ம்.
 
#872 to #874

#872. விழித்திருக்க வேண்டும்

அயின்றது வீழ்வு அளவும் துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழிதில் துயின்று
நயம் தரு பூரணை உள்ள நடத்தி
வியன் தரு பூரணை மேவும் சசியே


குண்டலினியுடன் மேலே சென்ற திங்கள் சிரசின் மீது நிற்கும் போது அதை உறங்காமல் கவனிக்கும். அதன் பின் கீழே இறங்கும் திங்கள், இறங்கிய போது உறங்கியும் நன்மையைத் தரும். ஒளியை மனத்தில் பொருந்தி இருக்கச் செய்தால் அப்போது முழுமையாகத் திங்கள் யோகியினிடம் பொருந்தும்.

#873. திங்கள் இறங்கியதும் யோகி உறங்கலாம்


சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி,
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச்
சசிசரிக் கின்ற அளவு துயிலாமல்
சசிசரிப் பின்கட்டன் கண் துயில் கொண்டதே

திங்கள் தலையில் தோன்றும் அளவும் உறங்காமல் ஒரு யோகி தியானம் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் யோகி தியானம் செய்ய வேண்டும். தலையில் திங்கள் தோன்றிய பிறகே உணவை உட்கொள்ள வேண்டும். சந்திரன் தலையில் சஞ்சரிக்கும் வரையில் யோகி உறங்காமல் இருக்க வேண்டும். சந்திரன் கீழே இறங்கிய பின்பு யோகி உறங்கலாம்.

#874. தன்னொளி பெற்று விளங்குவர்.


ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வர் உலகினில்
தாழவல் லார்இச் சசிவன்ன ராமே.


ஊழிக்காலம் வரையில் பிரியாதிருப்பர் யோகியர். இவர்கள் நாழிகையைக் கொண்டு காலனின் காலத்தையே அளந்து விடுவர். ஐந்தொழில்களை ஆற்றும் ஊழி முதல்வனான சதாசிவனின் நிலையைப் பெறுவர். ஆணவம் என்பதே சிறிதும் இல்லாமல், சிவனை ஆதாரமாகக் கொண்டு, அமுத மயமான கதிர் ஒளியுடன், தண்ணொளியாகிய தன்னொளி பெற்று இவர்கள் திகழ்வார்கள்.
 
#875 to #877

#875. அமுதத்தைப் பருகுவர்.

தண்மதி பானுச்சிச் சரி பூமியே சென்று,
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு,
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்த பின்
தண்மதி வீழ்வள வில்கணம் இன்றே.

குளிர்ந்த திங்களும், கதிரவனும் உச்சி வழியில் சென்று தலையில் ஸஹஸ்ரதளத்தை அடைந்தால், யோகி மண்ணுலகத்தோர் மதிக்கும் வண்ணம் முக்காலங்களையும் உணர முடியும். முழுத் திங்களையும் காண முடியும். அப்போது அதிலிருந்து விளையும் குறைவில்லாத அமுதம்.

#876. யோகியர் அறிவர்.


வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந்து ஏழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை ஆர் அறிவாரே.


கதிரவனின் ஆறு கலைகள் மேடம், ரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் வளரும், சந்திரனின் ஆறு கலைகள் அகரம். உகரம், மகரம், விந்து, அர்த்த சந்திரன், நிரோதினி குறையும். மூச்சு தொண்டைக்குகே கீழே எட்டு விரற்கடை ஓடுவதையும் தொண்டைக்கு மேலேயும் குறையாமல் நான்கு விரற்கடை ஓடுவதையும் அறிய வல்லவர் யார்?

#877. திங்கட் கலை பூரணமாகும்


ஆம் முயிர்த்தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி; எங்கும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையின்; கட்டுண்ணும் மூலத்தில்
ஓம் மதியத்துள் விட்டு, உரை உணர்வாலே.


விந்து கழியும் வழியே உயிர் தேயும் வழியாகும். யோகியருக்கு காமத் தொடர்பு இராது. அதனால் விந்து நீக்கமும் இராது. யோகியின் விந்து மூலாதாரத்தில் கட்டுப் பட்டு விடும். யோகி தன் உணர்வை பிரணவம் விளங்கும் மதி மண்டலத்தில் செலுத்த வேண்டும். அப்போது திங்கட் கலை பூரணம் அடையும்.
 
#878 to # 880

#878. பௌர்ணமி நாள் போலாகும்

வேறுஉறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூறுஉற நான்கும் தொடர்ந்து அற வேநிற்கும்
ஈறு இல் இனன் கலை ஈரைந் தொடேமதித்
தாறுள், கலியுள் அகல் உவா ஆமே.

சிரசின் வலப் பக்கத்தில் மேடராசி முதல் கன்னி ராசி வரை விளங்கும் கதிரவனின் கலைகள் ஆறு. இவற்றுடன் மூலாதாரத்தில் உள்ள அக்கினிக் கலைகள் நான்கும் கலந்தே விளங்கும். கதிரவன், அக்கினியின் பத்துக் கலைகளுடன் திங்கள் விளங்கும் துலா ராசி முதல் மீன ராசி வரை உள்ள ஆறு கலைகளும் அறிவில் பொருந்தும் போது அந்தத் திங்கள் பௌர்ணமி நாலின் முழு நிலவாக விளங்கும்.

#879. நுண்ணுடல் பருவுடல் ஒக்க நிற்க வேண்டும்


உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசும் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.


உணர்வுகளால் ஆன விந்து சுரோணிதத்துடன் உறவு கொண்டால் கதிரவன் மிகுந்த ஒளி வீசுவான். கதிரவனின் ஆற்றல் குறைந்து இருந்தால் புணர்ச்சியில் வெளிப்படும் விந்து தலையின் மீது ஒளியாக விளங்கும். யோகியின் நுண்ணுடல், பருவுடல் ஒளிமயமான இந்த உணர்வு இவை மூன்றும் ஒத்து நின்றால் அவை மூன்றுமே அழியா.

#880. ஐம்புலன் கட்டுண்ணும்


விடாத மனம் பவனத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவிக்
கடா விடா ஐம்புலனும் கட்டுண்ணும்; வீடு
படாதன இன்பம் பருகார் அமுதே.


வெளியே செல்லாமல் கட்டுப் படுத்தப்பட்ட மனம் காற்றுடன் சென்று இடப் பக்க மூளையில் பொருந்தி விடும். யாவற்றுக்கும் காரணமான் சிவபெருமானின் சங்கொலியைக் கேட்டு ஐம் புலன்களும் தம் ஆசைகளைத் துறந்து நிற்கும். அங்கனம் அவை பிரணவத்தால் கட்டப் படும் போதே ஒரு யோகி இன்பமயமான அமுதத்தை அருந்த முடியும். அன்றேல் முடியாது.
 
#881 to #883#

881. அழிவே இல்லை


அமுதப் புனல் வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக் குள்சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண்டு ஓட்டித் தரிக்க வல்லார்க்கு
நமன் இல்லை, நற்கலை, நாள் இல்லை தானே.

சந்திர மண்டலத்தின் ஒளி வெள்ளம் பிடரிக் கண்ணிருந்து பாயும். ஸஹஸ்ரதளத்தில் குமிழ் போல உயர்ந்து நிற்கும் அதன் கரணிகையில் சிவம், சக்தி, நாதம், விந்து, சீவன் என்ற ஐந்தையும் ஒன்று படுத்த வேண்டும். மூலாதாரத் தீயைச் சுழுமுனையில் செலுத்த வேண்டும். இதைச் செய்ய வல்லவருக்கு என்றும் அழிவே இல்லை.

#882. மூச்சின் இயக்கம்


உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர் சமாதி யமர்ந்து தீரா நலங்
கண் ஆட்றோடே சென்று கால் வழி மாறுமே.


அமுதம் என்னும் அனுபவிக்கக் கூடிய ஊரலைத் திறக்க வேண்டும். பிரபஞ்சத்தின் கலப்பினால் மாற்றம் அடையாது விளங்கும் கதிரவன் சந்திரன் பொருந்திய ஸஹஸ்ர தளத்தை அடைய வேண்டும். அங்கே தெளிந்த நீரினுள் இருப்பது போன்ற ஒரு உணர்வு நிலவும். அங்கே சமாதியில் நிலைக்க வேண்டும். முடிவில்லாத இன்பத்தை விளைவிக்கும் சிவன் உணர்த்தும் வழியில் இருந்து கொண்டு மூச்சின் இயக்கத்தை மாற்ற முடியும்.

#883. இன்பம் பொங்கும் எங்கும்


மாறு மதியும தித்திரு மாறின்றித்
தாறு படா மற்றண் டோடே தலைப் படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாவின்பம் பார்மிசைப் பொங்குமே.

கீழ் நோக்குதல் இல்லாத சந்திர கலையை என்றும் மாறுபடாமல் போற்றுங்கள். சுழுமுனை வழியே ஸஹஸ்ரதளத்தை அடைந்தால் உடல் அழியாது. செய்யும் யோகம் கைக் கூடும். எங்குமின்பம் பொங்கும்.

இத்துடன் மூன்றாம் தந்திரம் முற்றுப் பெற்றது.

 
திருமூலரின் திருமந்திரம்

திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.

நான்காம் தந்திரம்

1. அசபை

உச்சரிக்கப் படாமல் பிரணவத்துடன் சேர்ந்து இயங்கும் மந்திரம் அசபை.

பிரணவம் என்பதும் இதுவேயாகும். மந்திரம் என்பதும் இதுவேயாகும்.

இது ஓம் என்னும் ஓரெழுத்துச் சொல்லாகும்.

மனத்திலேயே உணரத் தகுந்தது பிரணவம்.

அனைத்து மந்திரங்களுக்கும் ஆதாரமாக நிற்பது.

#884 to #887

#884. பிரணவத்தைப் போற்றுவீர்

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்

தேற்றுகின்றேன்சிந்தை நாயகன் சேவடி;
சாற்றுகின் றேன் அறையோ சிவயோ கத்தை;
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.

நான் போற்றுகின்றேன் புகழ்ந்து பேசப்படும் ஞானத்தைப் பற்றி. தெளிவடைகின்றேன் மனத்தில் உலகத்தின் நாயகன் சிவன் திருவடிகளே நமக்குத் துணையாகும் என்று. அந்தச் சேவடிகளை அடையும் சிவ யோகநெறியைக் கூறுகின்றேன். அந்த சிவபெருமானுடைய ஓரெழுத்து மந்திரமான பிரணவத்தை நான் ஓதுகின்றேன்.

#885. யாவும் பிரணவமே!


ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி,

ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவர் ஆய்,
மூஎழுத்தாலே முளைக்கின்ற ஜோதியை
மா எழுத்தாலே மயக்கம் உற்றதே.

ஓம் என்ற ஓரெழுத்தில் ‘அ’ என்பது முதல் பகுதி. இது சிவன் உலகம் எங்கும் பரவிப் பல உயிர்களாக இருப்பதைக் குறிக்கும். ‘உ’ என்பது இரண்டாம் பகுதி. இது சீவனின் உடலினுள் சிவசக்தியர் பரவியுள்ளதைக் குறிக்கும். மூன்றாம் பகுதியாகிய ‘ம்’ என்பது மாயையைக் குறிக்கும். இதுவே ஒளிரும் சிவனை சீவனிடமிருந்து மறைத்து அதற்கு மயக்கத்தைத் தருவது.

விளக்கம்:
அ = சிவம், உ = சக்தி, ம் = மாயை எனலாம்.


மற்றொரு விளக்கம்
அகரம் = விழிப்பு நிலை = சாக்கிரம்
உகரம் = சொப்பன நிலை = கனவு நிலை
மகரம் = சுழுத்தி நிலை= மயக்கமான நித்திரை நிலை

#866. வலப்பக்கம் அம்பலம் ஆகும்.


தேவ ருறைகின்ற சிற்றம் பலமென்றும்

தேவ ருறைகின்ற சிதம்பர மென்றும்
தேவ ருறைகின்ற திருவம் பலமென்றும்
தேவ ருறைகின்ற தென்பொது வாமே.

சிரசில் வலது புருவத்துக்கு மேல் உள்ள வலப் பக்கத்தைத் தேவர்கள் உறையும் சிற்றம்பலம் என்றும், வானவர் உறையும் சிதம்பரம் என்றும், விண்ணவர் உறையும் அம்பலம் என்றும் கூறுவார்கள். சிற்றம்பலம் என்பது சிதாகாய ஒளியுடைய மண்டலம் ஆகும். சிதம்பரம் என்பது அறிவு விளங்குகின்ற ஆகாயம் ஆகும். திருவம்பலம் என்பது ஒரு அழகிய அம்பலம் ஆகும். சீவனின் உடலில் இதுவே சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் ஆகும்.

#887. கூத்தம்பலம்


ஆமேபொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்

ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அத்தாண்டவம்
ஆமே சங்காரத்து அருந்தாண்ட வங்களே.

பொன்னம்பலத்தில் அற்புதத் தாண்டவமும், ஆனந்தத் தாண்டவமும் நிகழும். அனவரதத் தாண்டவமும் அங்கேயே நடக்கும். பிரளயத் தாண்டவமும் அங்கேயே நடக்கும். சங்காரத் தாண்டவமும் அங்கேயே நடக்கும்.

அற்புதத் தாண்டவம் = உயிர்களின் படைப்பை நிகழ்த்தும் செயல்.

ஆனந்தத் தாண்டவம் = உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் செயல்.

அனவரதத் தாண்டவம் = உயிர்களின் இயக்கத்துக்குக் காரணமான செயல்

பிரளய தாண்டவம் = உயிர்களுக்கு உறக்கத்தைத் தந்து ஓய்வைத் தரும் செயல்.

சங்காரத் தாண்டவம் = உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் செயல்.




 
#888. பொன்னம்பலக் கூத்து

தாண்டவம் ஆன தனிஎழுத்து ஓர் எழுத்து;

தாண்டவம் ஆனது அனுக்கிரகத் தொழில்;
தாண்டவக் கூத்து தனி நின்ற தற்பரம்;
தாண்டவக் கூத்து தமனியம் தானே.


பிரணவம் என்னும் ஒப்பற்ற ஓரெழுத்தே திருக்கூத்து ஆகும். அருள் புரிவதற்கென்றே நிகழும் இயல்புடையது அந்தக் கூத்து. எல்லாவற்றுக்கும் மேலான சிவ தற்பர நிலையே அந்தக் கூத்து. இது பொன்னம்பலத்தில் நிகழும் அற்புதக் கூத்து.


#889. யாவற்றுக்கும் ஆதாரம் இதுவே


தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்

தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலந்தானே.


இதுவே ஒப்பில்லாத பேரொளிப் பிழம்பு ஆகும். எக்காலத்துக்கும் அழிவில்லாத ஒன்றினைப் போல எங்கும் நிறைந்திருக்கும் உண்மைப் பொருள் இதுவே ஆகும். அகார, உகாரமான பிரணவத்தின் உறுப்புக்கள் இதுவே ஆகும். தன் ஒளியைத் தந்து அனைத்துத் தத்துவங்களை இயக்கும். ஆயினும் இதற்கு வேறொரு ஆதாரம் தேவை இல்லை, தனக்குத் தானே ஆதாரமாக நிற்கும்.


#890. வேறு வேறு நிலைகள்


தராதல மூலைக்குத் தற்பரம் மாபரன்

தராதல வெப்பு ‘நமசிவாய’ வாம்
தராதலம் சொல்லின் தான் ‘வா சிய’ ஆகும்.
தராதலம் யோகம் தயாவாசி ஆமே.


மூலாதாரத்தில் எழுந்தருளிய சிவன் அக்கினி மண்டலத்தில் ‘நமசிவாய’ என்ற பெயரால் விளங்குவான். மேலே திகழ்கும் ஒளி மண்டலத்தில் இதுவே “வாசிய’ என்று மாறிவிடும். அதற்கும் மேலே உள்ள சஹாஸ்ரதல்தில் இது ‘யவாசி’ என்று மாறிவிடும்.


விளக்கம்

‘ந’ , ‘ம’ என்ற எழுத்துக்கள் குறிப்பது நான்முகன், திருமால் இவர்களைத்
தலைவர்களாக் கொண்ட ஸ்வாதிஷ்டன, மணிபூரகச் சக்கரங்கள்.

சக்தியையும், சிவத்தையும் உணர்த்தும் எழுத்துக்கள் ‘வா’, ‘சி’.

ஆன்மாவை உணர்த்தும் எழுத்து ‘ய’.

#891. பேரின்பம் வாய்க்கும்

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்;

ஆமே பரங்கள் அறியா இடம் என;
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே.


நான்முகனும், திருமாலும் சீவனின் அறிவு, உணர்வு, பக்குவம் இவற்றைப் பொறுத்துப் பாசத்தையும், பாச நீக்கத்தையும் அமைக்கின்றனர். ‘ய’ என்னும் ஆன்மா சிவத்தை அடையும் போது தத்துவங்களை உணராது. கூத்தை நடத்தியவன் கூத்தை ஒழித்துவிட்டு உயர்ந்த அறிவு பெற்றுவிடுவான். அதனால் சித்தி கிடைக்கும். அதனால் பேரின்பம் விளையும். சிற்பரமாகிய சிவத்தில் கலக்கும் உயிரும் பரமாகிவிடும்.
 
#892 to #895

#892. சிவாய என்றிருப்பதுவே ஆனந்தம்

ஆனந்தம் மூன்றும், அறிவு இரண்டு, ஒன்று ஆகும்;

ஆனந்தம் ‘சிவாய’ ; அறிபவர் பலர் இல்லை;
ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.


‘அ ‘, ‘உ ‘ , ‘ம’ என்ற மூன்றும் ஆனந்தம் ஆகும். விந்து நாதம் இவையிரண்டும் அறிவு ஆகும். இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரணவம் என்ற ஒன்றாகும். ‘சி ‘என்னும் சிவனை ‘நம’ என்பதுடன் பொருத்தாமல் ‘வாய’ என்று சக்தியால் ஆன்மாவிடம் பொருத்தினால் சிவானந்தம் உண்டாகும். இந்த உண்மையைப் பலரும் அறிவதில்லை! இந்த உண்மையை அறிந்து கொண்டவர்களுக்குச் சிவன் ஆனந்தக் கூத்தன் என்ற உண்மை விளங்கும். அவன் நிகழ்த்தும் ஆந்தக் கூத்தும் புலப்படும்.


#893. பயன் விந்து நாதமே ஆகும்!


படுவது இரண்டும் பலகலை வல்லார் ;

படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் ;
படுவது சங்காரத்தாண்டவப் பத்தி;
படுவது கோணம் பரந்திடும் வாறே.


பல நூல்களைக் கற்று தேர்ந்தவர்கள் விந்து, நாதம் இவற்றைப் பெறுவர். பிரணவம் ஆகிய ஓங்காரம் அல்லது திரு ஐந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ இவற்றைக் கொண்டும் நாதம், விந்து விளங்கும் குருமண்டலத்தை அடைய முடியும். இதை விளக்குவது ஈசனின் சங்காரத் தாண்டவம் ஆகும். அது சஹஸ்ர தலத்தில் விந்துத் திரி கோணம் என்ற பெயரில் விரிந்து பரந்து உள்ளது.

விளக்கம்

பிரணவ யோகத்தால் நாதம் விந்து விளங்குவது குருமண்டலதில். பஞ்சாக்ஷர யோகத்தால் விளங்குவது ‘சிவாய’ என்னும் சக்தி மண்டலம். செபம் அற்ற போது இந்தச் சக்தி மண்டலம் விந்து நாதமாக ஆகிவிடும். இரண்டு யோகங்களுக்கும் பயன் ஒன்றே. அதுவே விந்து நாதத்தைப் பெறுவது.


#894. பொதுச் சபையும் சிவமும்


வாறே சதாசிவ மாறுஇலா ஆகமம்;

வாறே சிவகதி வண்துறை; புன்னையும்;
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே.


சதாசிவனால் அளிக்கப்பட்ட ஆகமம் சிவ நெறிக்கு மாறாத வேத நெறியாகும். வளமை மிகுந்த இவற்றை அடைந்தால் பாச நீக்கம் ஏற்படும். இதுவே சைவ ஆகமங்கள் கூறும் உண்மை அறிவு. இதுவே எல்லோருமே சென்று அடையும் பொதுச் சபையாகும். இதுவே குற்றமற்ற சிவன் விளங்கும் இடம் ஆகும்.


#895. சதாசிவம் என்னும் ஆதாரம்


அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் ;

அமலம் திரோதாயி ஆகும் ஆனந்தமாம்;
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக் கூத்து அங்கு ஆம் இடம் தானே.


அமலனான சிவனே பதி, பசு, பாசங்களுக்கு ஆதாரம் ஆனவன். அந்தச் சிவமே மாயையின் மறைப்புக்கும், சீவனின் ஆனந்தத்துக்கும் ஆதாரம். ஆணவம் கன்மம், மாயை இவற்றுக்கும் அந்த அமலன் சிவனே ஆதாரம். அந்தச் சிவன் விலங்குகின்ற இடம் சங்காரத் தாண்டவம் நிகழும் இடமாகும்.



 
#896 to #899

#896. சிவன் ஒப்பற்றவன்

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மைலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனு மாமே.

சிவசக்தியாக ஒன்றி விளங்குவதால், தானே தன் உடலின் ஒரு பாதியில் உள்ள சக்திக்குத் தலைவன் ஆவான். தான் விளங்கும் மலையாகவும் தானே விளங்குகின்றான் சிவபெருமான். பிறவற்றுடன் கலந்து விளங்கும் போதும் தன்னுடைய இயல்பில் எந்த மாறுபாடும் இல்லாமல் குறையின்றி விளங்குகின்றான். தன்னை ஏவும் தலைவன் என வேறு யாருமில்லாததால் தனக்குத் தானே தலைவன் ஆக விளங்குகின்றான்.

#897. தானே அனைத்துக்கும் தலைவன்


தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனை
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.


நிர்மலமான சிவனே உயிரினத்துக்குத் தலைவன் ஆவான். அந்த சிவனே அந்த உயிர்களைத் தாங்கும் தலைவனாகவும் உள்ளான். சஹஸ்ரதளத்தில் விளங்கிச் சீவன்களுக்கு ஞானத்தைத் தரும் கதிரவனும், மதியும் அவனது இரு திருவடிகள் ஆகும்.

#898. எழுத்துக்கள் எல்லாம் சிவனே!


இணை ஆர்திருவடி எட்டு எழுத்து ஆகும்;
இணை ஆர்கழல் இணை ஈரைஞ்சு அதுஆகும்;
இணை ஆர்கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும்;
இணை ஆர்கழல் இணை ஏழாயிரமே.

‘எட்டு’ என்னும் எண்ணைக் குறிக்கின்ற ‘அ ‘ சிவபெருமானின் திருவடிகள் ஆகும்.
(ஈரைஞ்சு) பத்து என்ற எண்ணைக் குறிக்கும் ‘ய’ சிவன் ஆன்மாவில் விளங்குவது ஆகும்.
ஐம்பத்தொன்று எழுத்துக்களிலும் விளங்குபவன் சிவபெருமானே ஆவான்.
சிவபெருமான் எழுத்து வடிவில் உள்ள ஒலியுலகமாக எங்கெங்கும் விளங்குகின்றான்.

ஏழு வகை சக்திகள் அல்லது ஆற்றல்கள் இவைகள்:

ஏழு சக்தியர்…………….தொழில்கள்…………………தலைவியர்

1. கலைமகள்………….. படைத்தல்………………….வாணி

2. அலைமகள்…………. காத்தல்…………………….திருமகள்

3. உலைமகள்…………. அழித்தல் …………………..உமை

4. சலமகள்……………. மறைத்தல்………………….மகேசை

5. மலைமகள்………….. அருளல்……………………மனோன்மணி

6. நிலைமகள்………….. கலப்பித்தல்…………………விந்து

7. தலைமகள்………….. களிப்பித்தல்………………..சக்தி


#899. மந்திரங்களின் வகைகள்


ஏழா யிரமாய், இருபதாய், முப்பதாய்,
ஏழா யிரத்தும் எழுகோடி தான் ஆகி,
ஏழா யிரத்து உயிர் எண் இலா மந்திரம்
ஏழாய், இரண்டாய் இருக்கின்ற வாறே.


ஏழாயிரம் என்று கூறப்படும் மந்திரங்கள் இருபது, முப்பது என்ற எண்ணிக்கையில் அமைந்த எழுத்துக்களால் ஆனவை. இந்த ஏழாயிரம் மந்திரங்களுக்கும் முடிவு ஏழு வகைப்படும். எண்ணிலடங்காத பிரிவுகளை உடைய ஏழாயிரம் மந்திரங்களில், இந்த ஏழு முடிவுகளைக்கொண்ட மந்திரங்கள் யாவும் விந்து, நாதங்களில் முடிவடையும்.

மந்திரங்களின் ஏழு முடிவுகள் இவையாகும்:

1). நம:, 2). சுவதா, 3). சுவாஹா, 4). வஷடு, 5). வௌஷடு, 6). ஹூம், 7). ஹூம்பட்

 

#900 to # 903

#900. மந்திரமே சிவன் வடிவம்

இருக்கின்ற மந்திர மேழா யிரமாம்

இருக்கின்ற மந்திர மெத்திற மில்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்றிரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ் வண்ணந் தானே.


அசபை என்னும் பிரணவ மந்திரமே ஏழாயிரம் மந்திரங்கள் ஆகும். எத்திறம் பெறவில்லை அசபை மந்திரம்? அசபை மந்திரமே சிவபெருமானின் திருமேனியாகும். அசபை மந்திரமே யாவுமாக உள்ளது.


#901. மந்திரங்களின் இயல்பு


தானே தனக்குத் தகுநட்டந் தானாகும்

தானே யகார விகாரம தாய் நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே யுலகில் தனிநடந் தானே.


பிறர் ஒருவரின் தூண்டுதல் இல்லாமலேயே, சிவன் தானே தகுந்த கூத்தை நடத்துவான். தானே தன்னிடமிருந்து சக்தியை பிரித்துப் பிறப்பிப்பான். தானே மஹாமாயையால் நடைபெறும் ஐந்தொழில்களுக்கும் ஏற்ற நிகரற்ற கூத்தைக் கைக் கொள்ளுவான்.


# 902. கூத்தின் பயன்


நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும்

நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம்
நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே.


‘நடம்’ என்னும் கூத்து இரண்டு வகைப்படும்.
அவை ( 1) . சங்காரக் கூத்து; ( 2) . அற்புதக் கூத்து.

சங்காரக் கூத்து என்பது சிவன் உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பத் தன்னிடம் அவற்றை இணைத்துக் கொள்வது ஆகும். ஆதலால் அது நம்மை தருவது ஆகும்.

மற்றொரு கூத்தாகிய அற்புதக் கூத்து உயிர்களைப் பிறவியில் செலுத்துவது. இதுவே யமனுக்கு வேலை தரும் கூத்து.

சங்காரக் கூத்து நன்மை பயப்பதால் அதுவே பழிப்புக்கு ஆளாகாத பிரணவ மந்திரம். சென்பு பொன்னாக மாறுவதைப் போல இந்தக் கூத்தினால் உடல் சிவமயமாக ஆகிவிடும்.


#903. மலம் நீங்கும்


செம்பு பொன்ஆகும் சிவாய நம என்னில்;

செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்;
செம்பு பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயும் எனச்;
செம்பு பொன் ஆன திருவம்பலமே.


‘சிவாயநம’ என்னும் திரு ஐந்தெழுத்தை ஓதினால் உயிரின் மலங்கள் நீங்கிவிடும். செம்பு பொன்னாக மாறுவதைப் போல உடலின் குற்றங்கள் நீங்கித் தூய்மை அடையும். அறிவு மயமான சிற்பரம் உடலில் பொருந்தும். ஸ்ரீம், ஹ்ரீம் என்று உச்சரிக்கும் போதும் உடல் தூய்மை அடையும். செம்பு பொன்னாகும் போது அதில் திருவம்பலம் வந்து பொருந்தினால் சீவனின் மலங்கள் நீங்கப் பெற்று அது சிவமாகத் திகழும்.



 
#904 to #906

#904. திருவம்பலச் சக்கரம்

திருவம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத்
திரு அம் பலம் ஆக ஈராறு கீறித்
திரு வம்பு அலமாக இருபத்தைஞ்சு ஆக்கி
திருவம்பலம் ஆகச் செபிக்கின்ற வாறே.

திருவம்பலச் சக்கரத்தை அமைக்க ஆறு கோடுகள் குறுக் கும் நெடுக்குமாக வரைந்து அதை இருபத்திஐந்து அரைகளாக ஆகவேண்டும். அவற்றில் திரு ஐந்தெழுத்தை முறையாக அமைத்து உச்சரிக்கவேண்டும்.
0


#905. இன்பம் தரும்

வாறே சிவாயநம, நமச்சி வாயநம
வாறே செபிக்கில், வரும் பேர் பிறப்பு இல்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே.

“சிவாயநம சிவாயநம” என்று உறுதியாக செபித்தால் பிறப்பு உண்டாகாது. வளர்ச்சியைத் தரும் திருக் கூத்தினைக் காண இயலும். சீவனின் ஆன்மா மலம் நீங்கிப் பொன்னைப் போல விளங்கும்.

#906. செபிக்கும் முறை

பொன்ஆன மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்ஆன மந்திரம் பொறிகிஞ்சு கத்து ஆகும்;
பொன்ஆன மந்திரம் புகை உண்டு, பூரிக்கின்
பொன்ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொற்பாதமே.

பொன்போன்ற திரு ஐந்தெழுத்து மந்திரத்தை வாய் விட்டு உரக்கச்
சொல்லக் கூடாது. இந்த பொன் போன்ற மந்திரத்தை ஓசை இல்லாமல் உதட்டளவில் மட்டும் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தைத் தியானிக்கும் போது சிரசின் தென்கிழக்கு (அக்கினியின்) திசையில் இருந்து வட கிழக்கு (ஈசான) திசைக்கு உணர்வு பாய்ந்து பெருகும். இங்ஙனம் பெருகிப் பாய்ந்தால் உடல் பொன்னாக மாறும். ஈசனின் திருவடிப் பேறும் கிடைக்கும்.

 
#907 to #910

#907. சிறந்த மாணவர் அமைவர்

பொற்பதங் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பதத் தாணையே செம்பு பொன்னாயிடும்
பொற்பதம் காணத் திருமேனி யாயிடும்
பொற்பத நன்னடஞ் சிந்தனை செல்லுமே.

திருவைந்தெழுத்தைத் தியானித்தால் திருவடிகளின் காட்சியைப் பெறலாம். சிறந்த ஆசானாக உருவாகலாம். சிறந்த பல மாணவர்கள் வந்து அமைவர். அவர்களின் குற்றங்களும் சிவன் அருளால் அகன்று செல்லும். பொன்னடிகளைக் காணும் தகுதி வந்து சேரும். அதனால் எப்போதும் திருவடிக் கூத்தினைச் சிந்தித்த வண்ணம் இருங்கள்.

#908. திருக்கூத்தின் பயன்கள்

சொல்லு மொரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துடனே வரும்
சொல்லிலும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே.

திருவைந்தெழுத்துத் தியானத்தால் மற்றொரு உடலில் புகுந்து சுகமுறலாம். அழகியர் இத்தகையவரை நயந்து அணுகுவர். இவர் சொல்லலும் சொல்லால் பிறரின் பந்த பாசம் நீங்கி விடும். இவை அனைத்தும் திருக் கூத்தினால் விளையும் பயன்கள் ஆகும்.

#909. தியானத்தின் பயன்

சூக்குமம் எண்ணா யிரம்செபித் தாலும், மேல்

சூக்கும மான வழியிடைக் காணலாம்;
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்குமமான சிவனது ஆனந்தமே.

மெளனமாக தியானிக்கப்படும் திருவைந்தெழுத்தைத் ஆயிரம் முறை ஜபித்தாலும், நுண்மையான சஹஸ்ர தளத்தைக் காண இயலும். சஞ்சித வினைகள், ஆகாமிய வினைகள் அனைத்தையுமே அழித்து விடலாம்.

#910. பீஜ எழுத்துக்கள்

ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறிந்தி இட
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்ற ஐந்து இடம்;
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் அம்-ஹ்ரீம்-ஹம்-க்ஷம்-ஆம் ஆகுமே

சீவன் சஹஸ்ரதளத்தை அடைந்து, சிவனுடன் ஒன்றிவிடும் நிலைக் கூறுவது ஆனந்தம் தரும். ஆ, ஈ, ஊ, ஏ , ஓம் என்னும் படிச் சிவனின் தன்மையும் சீவனின் தன்மையும் பிரிக்க முடியாதபடி ஒன்றாக இருக்கின்ற இடத்தைச் சென்று அடைவது அதைவிடவும் ஆனந்தம் தரும். இவை அனைத்தும் ஒன்றாகும் நாதாந்தத்தை அடைவது அதை விடவும் ஆனந்தம் தரும். விந்து எழுத்துகளாகிய அம், ஹ்ரீம், ஹம், க்ஷம் , ஆம் என்ற ஐந்தும் சிறந்த ஆனந்தத்தைத் தரும்.

 
#911 to #913

#911. குருமுகமாகக் கற்கவும்

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள

மேனி இரண்டும் மிக்கரா, அவிகாரி ஆம்
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்று
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்ததே.

#912. ஒளி பொருந்தும் விதம்

கூத்தே சிவாய நமநம சிவாயிடும்

கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம வாயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும்
கூத்தே இ ஊ ஏ ஓம் நமசிவாய கோளொன்றுமாறே

#913. ஈசன் ஆடினால் இயங்கும் உலகு!

ஒன்றில் இரண்டு ஆட, ஒன்றொன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட, ஓரேழும் ஒத்து ஆட
ஒன்றினில் ஆட, ஓர் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.

வான் ஒன்றாக விளங்கும். காற்று இரண்டாக விளங்கும். தீ மூன்றாக விளங்கும். இந்த மூன்றுமே ஈசனின் கூத்தினால் இயங்கும். அப்போது வானில் இந்த மூன்றின் ஒளியும் விளங்கும். பஞ்ச பூதங்களின் அணுக்களுடன், விந்து அணுக்களும், நாத அணுக்களும் சேர, இவை ஏழும் இந்த மூன்றின் ஒளியில் ஆடும். சிவன் ஒருவனாக ஆடுவான்.

சிவன், சக்தி, நாதம், விந்து, சாதாக்கியம் , மகேசுரம், உருத்திரன், திருமால், நான்முகன் என்ற ஒன்பது தத்துவங்களும் ஆடும்படிச் சிவன் சிற்றம்பலத்தின் சிவந்த ஒளியில் நடனம் ஆடுவான்.

சிவன் இயங்கினால் உலகு முழுவதும் இயங்கும் என்பது கருத்து .

 
2. திருவம்பலச் சக்கரம்

திருவம்பலச் சக்கரம் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளை வரைந்து அந்தக் கட்டங்களில் எழுத்துக்களை எழுதி வழிபடுவதற்கு உரியது. சிதாகாசத்தில் ஆனந்த நடனமாடும் சிவன் சக்தியுடன் மந்திர வடிவாக இருப்பதை விளக்கும் சக்கரம் இது.

#914 to #918

#914. அம்பலச் சக்கரம் அமைப்பது

இருந்த இவ்வட்டங்கள் ஈராறு ரேகை;
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி,
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.

இந்தச் சக்கரம் வரைவதற்கு பன்னிரண்டு கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக வரைய வேண்டும். இதில் 121 அறைகள் அமைத்திருக்கும். நடுவில் உள்ள அறையில் சிவன் இருப்பான்.

#915. சிவம் பொருந்துமிடம்

தான் ஒன்றி வாழ் இடம் தன் எழுத்தே ஆகும்;

தான் ஒன்றும் அந் நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்;
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்தெழுத்து ஆகும்;
தான் ஒன்றிலே ஒன்றும் அவ்வரன் தானே.

சிவம் வீற்றிருக்கும் இடம் ‘சி’ என்ற எழுத்து இருக்குமிடம். ‘வ’, ‘ய’, ‘ந’, ‘ம’ என்ற நான்கு எழுத்துக்கள் அவன் திருப் பெயரை உணர்த்துவன. நாற்கோணத்தில் சூழ்ந்து இருப்பதது சிவனின் திருவைந்தெழுத்து. நடுவில் உள்ள அறையில் ‘சி’ அமைந்திருக்கும். அதைச் சுற்றி உள்ள சதுரக் கட்டங்களில் முறையே ‘வ’, ‘ய’, ‘ந’ , ‘ம’ விளங்கும். நான்கு மூலைகளிலும், நான்கு திசைகளிலும் ‘சி’ என்ற எழுத்து அமையும்.

#916. பிறவியை அழிக்கும் “அரகர” தியானம்

அரகர என்ன அரியது ஒன்றுஇல்லை;
அரகர என்ன அறிகிலர் மாந்தர்;
அரகர என்ன அமரரும் ஆவர்;
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே.

‘அரகர’ என்று தியானிப்பவர்களுக்குச் செய்வதற்கு அரியதென்று எச்செயலும் இராது. எதையுமே எளிதாகச் செய்ய முடியும். இந்தப் பெயருக்கு அத்துணை சிறப்பு இருந்த போதிலும் அதை ஓதிப் பயன் அடைவதை மக்கள் அறிந்திருக்க வில்லை. ‘அரகர’ தியனம் ஒளிமயமான உடலைத் தரும். ‘அரகர’ என்று தியானித்தல் வினைகள் அற்றுவிடும். அதனால் பிறவி அழிந்து விடும்.

அரன் + கரன் = அரகரன்

அரன் = சீவனின் வினைகளை அறுப்பவன்.
கரன் = மாயையின் காரியத்தை ஒடுக்குபவன்.

#917. ஒன்பது வடிவில் சிவலிங்கம்

எட்டு நிலை உள எங்கோன் இருப்பிடம் ;
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்;
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பால்மொழிபாலே.

சிவன் வீற்றிருக்கும் எட்டு இடங்கள் அம்பலச் சக்கரத்தின் நான்கு திசைகளிலும், நான்கு கோணங்களிலும் உள்ளன. இந்த எட்டு இடங்களிலும் திருவைந்தெழுத்துப் பொருந்தும். இந்த எட்டு இடங்களுடன் மையத்தில் இருக்கும் இடத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒன்பது இடங்கள் சிவனின் இருப்பிடங்கள் ஆகும். சிவனுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன .

இவை : நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவன்.

இவ்வாறு சிவனை வழிபடும் போது, வழிபடுபவருடைய சிரசில் விந்துவின் ஒளியும் நாதத்தின் ஒளியும் பொருந்தும்.

#918. உடலில் உயிரை நிறுத்தலாம்

மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே.

தேன் சிந்துகின்ற சஹஸ்ர தளத்தில் சிவனும், சக்தியும் பொருந்தி இருக்கும் உண்மையைப் பலரும் அறியவில்லை . கதிரவன், மதி இவற்றின் செயல்களை மாற்றிவிட அறிந்து கொண்டவர்கள், தம் உடலில் உயிரை நிலை நிறுத்தும் வல்லமை பெறுவர்.


 
#919 to #923

#919. இறைவன் இருக்குமிடம்

ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம்
ஆலயம் ஆக அமர்ந்த இத்தூலம் போய்,
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம்
ஆலயம் ஆக அமர்ந்திருந் தானே.

பஞ்சாக்ஷரம் இறைவனின் ஆலயமாக விளங்கும். சீவனின் தூல உடலும் இறைவனின் ஆலயமே. இந்த பருவுடலைக் கடந்த சூக்கும உடலிலும் சிவன் கோவில் கொண்டுள்ளான்.

#920. ஐந்தெழுத்தின் பயன்

இருந்த இவ்வட்டம், இரு மூன்று இரேகை

இருந்த அதனுள் இரேகை ஐந்தாக,
இருந்த அறைகள் இருபத்தைஞ்சு ஆக,
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே.

இந்தச் சக்கரம் ஆறு கோடுகளை உடையது. அதில் கட்டங்களையும் ஐந்து ஆக்கினால், அறைகள் (ஐந்து X ஐந்து) இருபத்து ஐந்து ஆகும். அதில் நடுக் கட்டத்தில் சிவனைக் குறிக்கும் ‘அ ‘ சென்று பொருந்தும்.

# 921. நுண்ணிய சிவாயலாம் அமைக்கலாம்

மகாரம் நடுவே; வளைந்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி,
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரம் நற்காலது நாடுமே.

மண்டலமிட்ட குண்டலினி சக்தியை கீழே நோக்க விடாமல் மேலே ஏற்றிச் செல்ல வேண்டும். அகாரமும், உகாரமும் பொருந்துகின்ற இடமாகிய புருவ மத்திக்கு அதைச் செலுத்த வேண்டும். சிவன் அறிவு மயமாக விளங்கும் இடமே தலை. அவன் அக்கினி விளங்கும் இடமே இரு கண்கள். சுவாதிஷ்டனத்தில் உள்ள நகாரமும், விசுத்தியில் இருக்கும் வகாரமும் சுழுமுனை வழியே விருப்புடன் அடையப் படும்.

#922. பிரணவம்

நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
பாடும் அவர்வாய் பரந்து அங்கு நின்றது
நாடும் நடுவுள் முகம் நமசிவாய
ஆடும் சிவாய புறவட்டத்து ஆயதே.

பிரணவ மந்திரத்தை புருவ மத்தியில் இரண்டு கண் பார்வையையும் பொருத்தி நோக்க வேண்டும். அப்போது அண்ணாக்கு பகுதியில் ஓர் உணர்வு தோன்றிப் பரவும் அதுவே ‘நமசிவாய’ என்பது ஆகும். பிறகு அந்த உணர்வே சிரசை அடைந்து தலையைச் சுற்றியுள்ள பகுதியில் ‘சிவாயநம’ என்று விளங்கும்.

#923. மாறி மாறி அமையும்

ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவாய யநமசிவா
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே

சக்கரத்தில் ‘நமசிவாய’ என்பது மாறி மாறி அமையும். ‘சிவாயநம’, ‘மசிவாயந’, ‘நமசிவாய’, ‘யநமசிவா’, ‘வாயநமசி’ என்று மந்திரம் ‘சி’ என்ற எழுத்தில் தொடங்கிச் ‘சி’ என்ற எழுத்தில் முடியும்.

 
#924 to #928

#924. சக்கரத்தில் ஐம்பத்தோரு எழுத்துக்கள்

அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்
அடையும் அறை ஒன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி ,
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம்பதொன்றும் அமர்ந்ததே.

‘க்ஷ’ என்ற எழுத்தைத் தவிர மற்ற ஐம்பது எழுத்துக்களையும், இருபத்து ஐந்து அறைகளில், அறைக்கு இரண்டாக அடைக்க வேண்டும். இறுதியில் பிரணவ வட்டமாகிய நடு அறையில் ‘க்ஷ’ என்ற எழுத்தை மூன்றாவதாக அமைக்க வேண்டும். இப்போது ஐம்பத்தொன்று எழுத்துக்களும் அம்பலச் சக்கரத்தில் அடங்கிவிடும்.

#925. சக்கர அமைப்பு

அமர்ந்த அரகர ஆம் புற வட்டம்

அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த அசபை ஆம் அதனுள் வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.

அச்சக்கரத்தின் வெளிவட்டத்தில் ‘அரகர’ என்பதையும், அதன் உள்வட்டத்தில் ‘அரிகரி என்பதையும், அதற்கும் உள்வட்டத்தில் ‘அம்சம்’ என்கின்ற அசபையையும் இடவேண்டும். சக்கரத்தின் கோடுகளின் முடிவில் சூலத்தை இடவேண்டும்.

#926. சிவன் பொருந்தும் இடம்

சூலத் தலையில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவது வாமே.

சூலத்தின் முடிவில் சக்தியின் எழுத்தான ‘ஹ்ரீம்’ என்பதை எழுத வேண்டும். சூலத்தை வளைத்துச் சுற்றி ‘ஓ’ என்பதை எழுதவேண்டும்.சூலத்தின் இடைவெளியில் ஐந்தெழுத்தை எழுத வேண்டும். இதுவே சிவபெருமான் பொருந்துகின்ற இடம் ஆகும்.

#927. சக்கரத்தின் அமைப்பு

அதுஆம் அகார இகார உகாரம்
அதுஆம் எகார ஒகாரம் அது அஞ்சாம்;
அதுஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம்
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே.

அ , இ , உ , எ , ஒ என்பவை அந்த ஐந்து திரு எழுத்துக்கள் ஆகும். சக்கர வட்டத்தில் இடைவெளியில் இவற்றை எழுத வேண்டும். இவற்றைச் சுற்றி சிவ சிவ என்பதை ஒரு வட்டமாகச் சூழ்ந்து இருக்கும் வண்ணம் எழுத வேண்டும். சூலத்தின் இடைவெளியில் இந்த ஐந்து எழுத்துக்களை எழுதி, அவற்றைச் சுற்றி ஒரு வட்டம் அமைத்து, அதில் சிவ சிவ என்பதை அமைக்கலாம்.

#928. தரும் பெரும் சம்பத்து

பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது
சேர்வுற்ற சக்கர வட்டத்துக் சந்நிதியில்
நேர் பெற்று இருந்த இடம் நின்றது சக்கரம்
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே.

அ , இ, உ , எ , ஒ ஆகிய ஐந்து குறில் உயிர் எழுத்துக்களை முதலில் அடைத்த பிறகு ‘சிவ சிவ’ என்னும் புகழ் பெற்ற பெயரை இடைவெளி இல்லாமல் மேல் வட்டத்தில் அமைக்க வேண்டும். இந்தச் சக்கரத்தை வழிபட்டால் அது பெரும் சம்பத்தைத் தரும்.

 
#929 to #932

#929. ஐம்பூதங்களின் தானங்கள்

இயலும் இம்மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண் விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.

திருவம்பலச் சக்கரத்தில் நிலம், நீர், தீ, வலி, வெளி என்ற ஐம் பூதங்களுக்கும் உரிய எழுத்துக்கள் ல, வ, ரம், ய, அ என்பவை ஆகும்.

நம் உடலில் ஐம்பூதங்களின் இடம் இவை:

நிலம் ….மூலாதாரம்


நீர்………..கொப்பூழ்


தீ………….இதயம்


வளி……..கழுத்து


வெளி…..புருவ மத்தி


#930. மும்மலங்கள் நீங்கும்

ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்

ஏறிட்டு அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று, ‘சிவாய நம’ என்ன,
கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

( 6 x 8 = 48 ) நாற்பத்தெட்டாவது எழுத்தாகிய ‘ஸ’காரத்தை, ஆறாவது எழுத்தாகிய ‘ஊ’காரத்துடனும், பதினான்காவது எழுத்தாகிய ‘ஔ’ காரத்துடனும் சேர்த்தால் பராசக்தியின் பீஜ அக்ஷரமாகிய ‘சௌ’ கிடைக்கும். இதனுடன் விந்துவும் நாதமும் பொருந்தும் வண்ணம் அமைக்க வேண்டும். அதை மேலே எழும்பும் வண்ணம் செய்து ‘சிவாய நம’ என்று ஜபிக்க வேண்டும் அப்படிச் செய்தால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஜபம் செய்பவரின் உடலை விட்டு ஓலமிட்டபடி ஓடி மறைந்து விடும்.

ஸ + ஊ = ஸூ
ஸூ + ஔ = சௌ

சௌ என்பது பராசக்தியின் பீஜ அக்ஷரம் ஆகும்.

#931. நாத ஒலி கேட்கும்

அண்ணல் இருப்பது அவள் அக்கரத்துளே;
பெண்ணின் நல்லாளும் பிரான் அக்கரத்துளே;
எண்ணி இருவர் இசைந்து அங்கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே.

‘சௌ’ என்ற பீஜாக்ஷரத்தில் சிவனும் இருப்பான், சக்தியும் இருப்பாள். சிவசக்தியர் இங்ஙனம் இணைந்து சிரசில் ஈசானத்தில் இருப்பதை அறிந்து கொண்டவர், அதைப் பின்பக்க மூளையில் நாத ஒலியாகக் கேட்பர்.

#932. சிவதாண்டவம்

அவ் இட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து

இவ் இட்டு பார்க்கில் இலிங்கம் – அதாய் நிற்கும்;
மவ் இட்டு மேலே வளி உறக் கண்டபின்
தொம் இட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

ஈசானிய திசையில் ‘ஹர’ என்று சிவாக்கினியைத் தூண்ட வேண்டும். அப்போது ஹரி என்னும் ஞானலிங்கம் விளங்கும். தொண்டையிலுள்ள விசுத்திச் சக்கரத்திலிருந்து, சுழுமுனை வழியே, பிராணவாயு தொண்டைக்கு மேலே செல்லும் போது, தொம் தொம் என்று கூத்தாடும் ஒளிவடிவான இறைவன் விளங்குவான்

 
#933 to #937

#933. சக்தியின் தலைவன் சதாசிவன்

அவ் உண்டு, சவ் உண்டு, அனைத்தும் அங்கு உள்ளது
கவ்வுண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்
சவ் உண்டு சத்தி சதாசிவன் தானே.

‘ஹம்சம்’ என்ற அசபை மந்திரத்தில் ‘ஹ’ என்ற எழுத்துச் சிவனையும், ‘ச’ என்ற எழுத்துச் சக்தியையும் குறிக்கும். உடலில் சிவலிங்கம் அமையும் போது அதில் சிவசக்தியர் விளைவிக்கும் உலகப் பொருட்கள் யாவையும் நுண்ணியமானவைகளாக காரண வடிவில் அமைந்திருக்கும். காரண வடிவில் சூக்குமமாக இவை அமைந்துள்ளதை அறிந்தவர் எவருமில்லை. காரண வடிவாக உலகப் பொருட்கள் கலந்து அமைந்துள்ளதை கண்டு அறிய வல்லவரிடம் சக்தியின் தலைவனாகிய சதாசிவன் திகழ்வான்.

#934. ஐந்தெழுத்துக்கள்

அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்

அஞ்செழுத்தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத்து ஆகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத்துள்ளே அமர்ந்திருந் தானே.

சிவன் ஐந்தெழுத்துக்களின் வடிவாக விளங்குகின்றான்.
பஞ்சாக்கரம் ஐந்து சொற்களின் முதல் எழுத்துக்களால் ஆனது.
இந்த ஐந்தெழுத்துக்களாலேயே சக்கரங்கள் அமைக்கப்படும்.
இந்த ஐந்தெழுத்துக்களில் அமர்ந்துள்ளவன் ஆதி பிரான் ஆன சிவன்.

#935. கூத்தபிரானைக் காணுவது எவ்வாறு?

கூத்தனைக் காணும் குறி பல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றியி கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறிஅது ஆமே.

கூத்த பிரானைக் காண்பதற்கு உள்ளன பல நெறிகள். அவன் பெயரின் முதல் எழுத்தாகிய ‘சி’ என்பதை ஓதுபவர்கள் சிவனிடமிருந்து பிரிவே இல்லாது விளங்குவர். அவனை எளிதில் காணும் நெறி இதுவே ஆகும்.

#936. சிவன் உறவினன் ஆவான்

அத்திசைக்கு உள்நின்ற அனலை எழுப்பியே

அத்திசைக்கு உள்நின்ற ‘ந’ எழுத்து ஓதினால்
அத்திசைக்கு உள்நின்ற அந்த மறையனை
அத்திசைக்குள் உறவு ஆக்கினன் தானே.

மூலாதாரத்தில் இருக்கும் மூலக் கனலை எழுப்ப வேண்டும். ‘ந’ காரத்தை நன்கு அறிந்து கொண்டு ஓதினால் மறைந்து உறையும் சிவனை நம் உறவினன் ஆக்கிக் கொள்ள முடியும். ‘ந’ காரம் என்பது ‘நமசிவாய’ என்பதைக் குறிக்கும். இந்த நாமத்தை உச்சரிக்கும் போது அது ஆதாரத் தானங்கள் கழுத்து, இதயம், உந்தி, சுவாதிஷ்டானம் இவற்றின் வழியே சென்று மூலாதாரத்தை அடையும்.

#937. குண்டலினி சக்தி

தானே யளித்திடும் தையலை நோக்கினால்

தானே யளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே யளித்த மகாரத்தை யோதிடத்
தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி விட்டால் மற்ற அனைத்தும் தானே நடைபெறத் தொடங்கும். அந்த குண்டலினி சக்தியே அருளை வாரி வழங்கும். அதுவே சஹஸ்ர தளத்தின் மேல் சென்று பொருந்தும். ‘ம’ காரத்தை ஓதினால், அது தலையின் மீது தோன்றும் ஒளியில் சென்று பொருந்தும்

 
#938 to #942

#938. மணி போல ஒளிர்வான்

கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்றனன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டி நின்றானே.

சிரசில் மூளையின் இடப்பக்கத்தில் ( தலையின் வடக்கு திசையில்) சிவபெருமான் எழுந்தருளுவான். என்றாலும் முகத்தின் முன்புறத்திலும் (இந்திரனின் திசையாகிய கிழக்கிலும் ) ஒளி வீசியது. இவ்வாறு ஒளிரும் சிவபெருமான் எனக்கு அக்கினியின் நிறத்தில் ஒரு மணியைப் போலத் தோற்றம் அளித்தான்.

# 939. சிந்திப்பவருக்குச் சிவன் வெளிப்படுவான்

தானே எழுகுணம், தண்சுட ராய் நிற்கும்;
தானே எழுகுணம், வேதமு மாய் நிற்கும்;
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடின்
தானே எழுந்த மறையவன் ஆமே.

பிரறால் வேண்டப்படாத போது சிவன் குளிர்ந்த சந்திர கலையில் விளங்குவான். பிறரால் அறிவிக்கப் படாமலேயே தானே அறிவு மயமாக விளங்குவான். உண்மையில் எல்லா நற்குணங்களும் சிவனே ஆவான். அவனையே எப்போதும் சிந்திப்பவருக்கு அவன் தன்னை வெளிப்படுத்துவான்.

#940. ஐந்தெழுத்தின் வடிவம்

மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக, மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்துள் நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்தாம் அது வாகுமே.

பிறவி அளிக்கப் பட்டது சிவத் தன்மைக் காண்பதற்காகவே.
சிவத்தன்மையை அடைந்தால் பிறர் எல்லோரும் மதிப்பர்.
நாத வடிவினனாகிய சிவன் ஐந்தெழுத்தில் அடங்குவான்.
நாத வடிவம் அடைந்த சீவனும் ஐந்தெழுத்து வடிவம் பெறும்.


#941. ஐந்தெழுத்தில் திருமேனி

ஆகின்ற பாதமும் அந் ‘ந’ ஆய் நின்றிடும்;
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்;
ஆகின்ற ‘சி’ இரு தோள், ‘வ’ ஆய்க் கண்டபின்,
ஆகின்ற அச்சுடர் அவ் இயல்பு ஆமே.

பாதத்தில் பொருந்தும் ‘ந’காரம்.
நாபியுள் பொருந்தும் ‘ம’காரம்.
இரு தோளில் பொருந்து ‘சி’காரம்
வாயில் அமையும் ‘வ’காரம்
இதுவே ஐந்தெழுத்தில் திருமேனியாகும்.


#941. பிரணவத் தியானம்

அவ் இயல்பு ஆய இரு மூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்;
‘ஒ’ இயல்பு ஆகா, ஒளி உற ஓங்கிடின்
‘ப’ இயல்பு ஆகப் பரந்து நின்றானே.

பஞ்சாக்கரத்தில் உள்ள இரண்டு எழுத்துக்கள் ‘ நம’ . மூன்று எழுத்துக்கள் ‘சிவாய’. இந்த இயலை அறிந்தவர்களிடம் சிறந்த முறையில் சிவம் என்னும் பர பொருள் விளங்கும். ‘ஒ’ என்ற பிரணவத்தை ஒளி பொருந்தும் படித் தியானம் செய்தால் சிவ பரம் நாத மயமாக எங்கும் பரவி நிற்கும்.

 
#948. அமுதம் தருவான்

நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்
மன்றுஅது ஆய்நின்ற மாய நல் நாடனைக்
கன்றுஅது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

சிதாகாயப் பெருவெளியில் நாத மாயமான சக்கரம் திகழும். அது உலகம் முழுவதும் பரவும் இயல்புடையது. சித் என்ற திருவம்பலத்தையே தன் இடமாகக் கொண்டு அங்கு மறைந்து நிற்பவன் சிவன். கன்று மடியில் பால் அருந்தும் போது பசு அதற்கு ஒளிக்காமல் பாலை வழங்கும். அது போல இந்தச் சக்கரத்தை பூசிப்பவருக்குச் சிவபெருமான் தன் அருளை மறுக்காமல், மறைக்காமல் வழங்குவான். அவருக்குச் சிரசில் அமுதத்தை விளைவித்து இன்பம் தருவான்.

#949. சக்கரத்தில் திருக் கூத்து

கொண்டவிச் சக்கரத் துள்ளே குணம் பல

கொண்டவிச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டவிச் சக்கரங் கூத்த னெழுத்தைந்துங்
கொண்டவிச் சக்கரத் துண்ணின்ற கூத்தே.

திருவம்பலச் சக்கரத்தின் சிறப்புகள் பலப் பல. ருத்திரன், நான்முகன், திருமால், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து தெய்வங்கள் இதில் உள்ளனர். கூத்த பிரானின் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்கள் இதில் உள்ளன. இறைவனின் திருக் கூத்தும் இங்கேயே நடை பெறுகின்றது.

#950. விந்துவும் நாதமும் உண்டாகும்

வெளியில் இரேகை, இரேகையில் அத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால் கொன்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந் திரமே.

சிதாகாயப் பெருவெளியில் சந்திர கலை உள்ளது. அந்தப் பெருவெளியில் ஸஹஸ்ர தளம் உள்ளது. அதில் உகாரத்தால் வளைக்கப்பட்ட அக்கினிக் கலை உள்ளது. சஹஸ்ர தளத்தை அசைக்கும் உள்ள கொம்பினால் விந்து நாதம் உண்டாகும். இதை அறிந்து கொண்டு அவற்றைப் பெறும் வடிவில் சக்கரம் அமைக்கப் பட்டுள்ளது.

#951. சதாசிவன் தோன்றுவான்

அகார உகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்து நின்றானே.

மூலாதாரத்தில் விளங்குவது குண்டலினி சக்தி. இதை மூல வாயுவினால் மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். ஆறு ஆதாரச் சக்கரங்களையும் கடந்து புருவ மத்தியை அடைய வேண்டும். புருவ மத்தியில் உள்ள சிவாக்கினியில் சிவனைத் தியானம் செய்தால் பிரணவத்தின் நாயகனாகிய சதாசிவன் விருப்பத்துடன் அங்கே தோன்றுவான்.

#952. சீவனின் குற்றங்கள் மறையும்

அற்ற விடத்தே யகாரம தாவது

உற்ற விடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்ற மறுத்த பொன் போலும் குளிகையே.

உடலைக் கடந்து சுழுமுனை மேலே செல்பவரிடம் ‘அ’ காரமாகிய சந்திர கலை நன்றாகப் பொலியும். உரிய பொருளை உயிர்கள் அறிய முடியாததற்குக் காரணம் அவற்றின் குற்றமாகிய இருள் ஆகும். சிதாகாயப் பெருவெளியில் இந்த இருளை மாற்றிச் சிவந்த ஒளியாகச் சிவன் தோன்றுவான். பொன்னின் மாசை நீக்கும் குளிகையைப் போலவே ஒளிரும் சிவன் உயிர்களின் குற்றங்களைப் போக்கி விடுவான்.
 
#948 to #952

#948. அமுதம் தருவான்

நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்
மன்றுஅது ஆய்நின்ற மாய நல் நாடனைக்
கன்றுஅது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே.

சிதாகாயப் பெருவெளியில் நாத மாயமான சக்கரம் திகழும். அது உலகம் முழுவதும் பரவும் இயல்புடையது. சித் என்ற திருவம்பலத்தையே தன் இடமாகக் கொண்டு அங்கு மறைந்து நிற்பவன் சிவன். கன்று மடியில் பால் அருந்தும் போது பசு அதற்கு ஒளிக்காமல் பாலை வழங்கும். அது போல இந்தச் சக்கரத்தை பூசிப்பவருக்குச் சிவபெருமான் தன் அருளை மறுக்காமல், மறைக்காமல் வழங்குவான். அவருக்குச் சிரசில் அமுதத்தை விளைவித்து இன்பம் தருவான்.

#949. சக்கரத்தில் திருக் கூத்து

கொண்டவிச் சக்கரத் துள்ளே குணம் பல

கொண்டவிச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டவிச் சக்கரங் கூத்த னெழுத்தைந்துங்
கொண்டவிச் சக்கரத் துண்ணின்ற கூத்தே.

திருவம்பலச் சக்கரத்தின் சிறப்புகள் பலப் பல. ருத்திரன், நான்முகன், திருமால், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து தெய்வங்கள் இதில் உள்ளனர். கூத்த பிரானின் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்கள் இதில் உள்ளன. இறைவனின் திருக் கூத்தும் இங்கேயே நடை பெறுகின்றது.

#950. விந்துவும் நாதமும் உண்டாகும்

வெளியில் இரேகை, இரேகையில் அத்தலை

சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால் கொன்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந் திரமே.

சிதாகாயப் பெருவெளியில் சந்திர கலை உள்ளது. அந்தப் பெருவெளியில் ஸஹஸ்ர தளம் உள்ளது. அதில் உகாரத்தால் வளைக்கப்பட்ட அக்கினிக் கலை உள்ளது. சஹஸ்ர தளத்தை அசைக்கும் உள்ள கொம்பினால் விந்து நாதம் உண்டாகும். இதை அறிந்து கொண்டு அவற்றைப் பெறும் வடிவில் சக்கரம் அமைக்கப் பட்டுள்ளது.

#951. சதாசிவன் தோன்றுவான்

அகார உகார சிகார நடுவாய்

வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்து நின்றானே.

மூலாதாரத்தில் விளங்குவது குண்டலினி சக்தி. இதை மூல வாயுவினால் மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். ஆறு ஆதாரச் சக்கரங்களையும் கடந்து புருவ மத்தியை அடைய வேண்டும். புருவ மத்தியில் உள்ள சிவாக்கினியில் சிவனைத் தியானம் செய்தால் பிரணவத்தின் நாயகனாகிய சதாசிவன் விருப்பத்துடன் அங்கே தோன்றுவான்.

#952. சீவனின் குற்றங்கள் மறையும்

அற்ற விடத்தே யகாரம தாவது

உற்ற விடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்ற மறுத்த பொன் போலும் குளிகையே.

உடலைக் கடந்து சுழுமுனை மேலே செல்பவரிடம் ‘அ’ காரமாகிய சந்திர கலை நன்றாகப் பொலியும். உரிய பொருளை உயிர்கள் அறிய முடியாததற்குக் காரணம் அவற்றின் குற்றமாகிய இருள் ஆகும். சிதாகாயப் பெருவெளியில் இந்த இருளை மாற்றிச் சிவந்த ஒளியாகச் சிவன் தோன்றுவான். பொன்னின் மாசை நீக்கும் குளிகையைப் போலவே ஒளிரும் சிவன் உயிர்களின் குற்றங்களைப் போக்கி விடுவான்.

 
#953 to #957

#953. தியானத்தின் மேன்மை

‘அ’ என்ற போதினில் ‘உ’ – எழுத்து ஆலித்தால்
உவ் வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
ம என்று என் உள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

அகரக் கலையாகிய சந்திரன் இடக் கண்ணில் தோன்றும். உகரக் கலையாகிய சூரியன் வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கத்துக்கு மாற வேண்டும். ஈசான திசையில், இடப்பக்க மூளையில் அ , உ , ம என்ற மூன்றும் பொருந்த வேண்டும். உகரமாகிய கதிரவனின் ஒளியினால் மறைந்திருப்பது அப்போது வெளிப்படும். ‘ம’ என்று என் உள்ளே நான் வழிபடும் என் தந்தை நந்தியம் பெருமானின் பெருமையை எங்கனம் கூறுவேன்?

#954. தலை எழுத்து இனி இல்லை

நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை’
யார் இவ்வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் ஆமே.

உலக அறிவு நீரில் மேல் எழுதப்பட்ட எழுத்தைப் போன்றே நிலைத்து நிற்காது. சிதாகாசத்தில் திகழும் அந்த ஒரு எழுத்தை கண்டு அறிபவர் இல்லை. இந்த ஓரேழுத்தைக் கண்டு கொண்டு விட்டால் பிறகு அவர்களுக்குப் பிரமன் எழுதும் தலை எழுத்து என்பதே இராது. பிறவிப் பிணி நீங்கி விடும்.

#955. வீடு பேறு கிட்டும்

காலை நடுஉற, காயத்தில் அக்கரம்
மலை நடுஉற ஐம்பதும் ஆவன
வேலை நடுஉற வேதம் விளம்பிய
மூலம் நடு உற முத்தி தந்தானே.

உடலில் ஆறு ஆதாரங்களில் சிவன் ஐம்பது எழுத்துக்களாகப் பிரிந்து அமைந்துள்ளான். உயிர் மயக்கத்தை அடைந்துள்ள போது இந்த ஐம்பது எழுத்துக்களும் தெளிவாகத் தோன்றி அமையும். சுழுமுனை வழியே சிரசை அடைந்து, அங்கே மறையால் புகழப்படும் பிரணவத்தை சஹஸ்ர தளத்தின் அமைக்கும் போது ஐம்பது எழுத்துக்களும் பிரணவத்தில் சென்று அடங்கி விடும். அப்போது சிவன் வீடு பேற்றை அளிப்பான்.

#956 . சக்தியும் சிவனும் அருள்வர்

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று

பாவிக ளத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

நாபியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தின் கீழே அமைந்துள்ளது சுவாதிஷ்டனச் சக்கரம். அதற்கு உரிய எழுத்து ‘ந’காரம் ஆகும். அந்த எழுத்தின் சிறப்பைப் பாவிகள் அறிவதில்லை. அங்கு அமர்ந்துள்ள நான்முகனாலும் அதன் சிறப்பைச் சொல்ல இயலாது. அந்த எழுத்தில் சக்தியும் சிவனும் சிறப்புடன் அமர்ந்துள்ளனர்.

#957. அம்ச மந்திரம்

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரு மறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரு மறிந்தபின்
அவ்வொடு சவ்வு மனாதியு மாமே.

அம்சம் என்பது அரனாகிய சிவன் விளங்குகின்ற மந்திரம். இந்த மந்திரத்தை எவரும் உண்மையாக அறியவில்லை. உண்மையில் இந்த மந்திரம் உடல் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய மந்திரம் என்பதை இதை அறிந்தவர் அறிவர்.

 
#958 to #962

#958. தேவையில்லை ஆரவாரம்!

மந்திரம் ஒன்றுஉள் மலரால் உதிப்பது,

உந்தியின் உள்ளே உதயம் பண்ணா நிற்கும்,
சந்தி செய்யா நிற்பர் தாம்அது அறிகிலர்,
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே.

சந்திரகலை ஒரு பிரசாத கலை. அது உடலில் உள்ள மூலாதாரத்திலிருந்து தோன்றுவது. அது மூலாதாரத்தில் உள்ள தீயிலிருந்து தோன்றுவது. உடலில் உள்ள கதிரவனையும், சந்திரனையும் சேர்த்து வழிபட அறியாமல், அந்தியிலும் சந்தியிலும் சந்தியா வந்தனம் செய்பவர்கள், கதிரவன் சந்திரன் சேரும் நேர்த்தை அறிந்திவர்கள் அல்லர். அவர்கள் வீணே ஆரவாரம் செய்பவர்கள் . உண்மையை அறிவதிலிருந்து தவறியவர்களே ஆவர்.

#959. அம்ச மந்திரமும், ஐம்பொறிகளும்!


சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற

ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்குஅற நோக்கில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே.

அம்ச மந்திரம் உபாசனையால் உடல் முழுவதும் பரவும் ஆற்றல் படைத்தது. மூலாதாரத்தில் தொடங்கி அனைத்து ஆதாரச் சக்கரங்கள் வழியாகப் பாய்ந்து செல்ல வல்லது. இது ஒளி மயமானது. இது எங்கும் செல்லவோ எங்கிருந்தும் வரவோ தேவை இல்லை. அங்குசம் போல ஆவியில் பொருந்தி இந்த மந்திரம் ஐம்பொறிகள் என்னும் யானைகளைக் கட்டுப் படுத்தும் வலிமை பெற்றது.

#960. பிரணவம் சிறப்படையும்


அருவினில் அம்பரம் அங்கு எழும் நாதம்

பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி, யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறு மந்திரமே.

பரவெளி கண்களால் காண முடியாதது. நாதம் தோன்றுவது அந்தப் பரவொளியில்! அந்த ஒலியில் தோன்றுவது ஒளியாகிய விந்து. சிகாரம் ஆகிய இரு கண் பார்வைக்கும் நடுவே யகாரம் ஆகிய ஆன்மாவை தியானிக் வேண்டும். அப்போது பிரணவம் சிறப்புற்று விளங்கும்.

புருவங்களின் மத்தியில் . இரு கண்களுக்கு நடுவில், தியானம் செய்தால் அம்ச மந்திரம் தோன்றும். தலையின் இடப் பக்க மூளையில் ( வடகிழக்குப் பகுதியில்) அ + உ + ம + நாதம் + விந்து சேர்ந்த ‘அசபை’ விளங்கும்.

#961. பிரணவமே சிறந்த ஆகுதி


விந்து நாதமு மேவி யுடன் கூடிச்

சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

சிரசில் வடகிழக்கில் (இடப் பக்கத்துக்கு மூளையில்) ஒளியும், ஒளியும் (நாதமும், விந்துவும்) பொருந்துமானால் பரம ஆகாயத்தில் ஒளி வீசும். அமுதம் ஊறிடும். அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் பிரணவமே சிறந்த ஆகுதியாகும்

#962. பிரணவத்தால் உயிர் விளங்கும்

ஆறெழுத் தோது மறிவா ரறிகிலர்

ஆறெழுத் தொன்றாக ஓதி யுணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்ப வல்லார்கட்கு
ஒரேழுத்தாலே யுயிர் பெறலாமே.

‘ஓம் நமசிவாய’ என்று ஆறு எழுத்துக்களால் ஓதுபவர்கள் ஒரே எழுத்தில் இந்த ஆறு எழுத்துக்களை தோன்றச் செய்வதை அறியவில்லை. திருவைந்தெழுத்து தியானத்தால் அந்த ஓரேழுத்தைத் தோன்றச் செய்வதையும் அறியவில்லை. பிரணவத்துடன் வேறு எழுத்துக்களைச் சேர்க்காமலேயே பிரணவ வித்தையை அறிந்து கொண்டவர்களுக்கு அந்த பிரணவமே உயிரை நன்கு விளக்கும்.
 
Back
Top