Quotable Quotes Part II

#718 to #720

#718. சிவத்தில் சீவன் அடங்கும்

கிடந்தது தானே கிளர்பயன் மூன்றும்;
நடந்தது தானே உள் நாடி உள்நோக்கி
படர்ந்தது தானே அப் பங்கயம் ஆகத்
தொடர்ந்தது தானே அச்சோதியுள் நின்றே.


இதனால் கிடைக்கின்ற பயன்கள் மூன்று வகைப்படும். அவை இம்மையின்பம் , மறுமையின்பம் வீடு பேறு என்பவை. உள் நாடியகிய சுழுமுனைவழியே செலுத்தப்பட்ட சீவன் ஆயிரம் இதழ்த் தாமரையை அடையும் . அங்கே சீவன் சிவத்துடன் பொருந்தி விடும்.

#719. உடலே ஓர் ஆலயம் ஆகி விடும்.


தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்து எம்உள்ளே இருந்திடும்,
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலயம் ஆகுமே.


தான் அனைத்துக்கும் ஆதாரம் ஆனவள் சக்தி தேவி. தனக்கு என்று ஒரு ஆதாரமும் இல்லாதவள் சக்தி தேவி. சீவர்களின் உடலில் அவள் வசிப்பாள். தேவர்களுக்கும் தாயாகிய அவள் நம் உடலில் இடம் கொண்ட இன்பத்திலும், அது தரும் ஒளியிலும் ஆழ்ந்து திளைக்கும் ஒரு சிவயோகியின் உடல் ஓர் சிவாலயமாக மாறிவிடும்.

#720. பேரொளியில் கலந்து விடலாம்.


திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.


நிறைந்து விளங்கும் பிராண வாயு ஒடுங்கும் நிலையை எவரும் அறியவில்லை. பிராணவாயு ஒடுங்கும் நிலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால், அதன் பின்னர் வான மண்டலத்தில் இருக்க முடியும். சிவப் பேரொளியில் கலந்து ஒன்றாக முடியும்.
 
#721 to #723

#721. சிவகுருவைப் பணிவீர்!

சோதனை தன்னில் துரிசு அறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னில் பிரியும் நாள்;
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக் கொள்ளீரே.


சோதனைக்கு உட்படுத்தி நான் கூறும் உண்மையைக் குற்றம் இல்லாமல் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உயிர்புக் காற்று குண்டலினியை விட்டு மேலே செல்லும் பொழுது சிவயோக சமாதியை அடையலாம். எனவே சிவ குருவைப் பணிவீர்! யோகப் பெருஞ் செல்வதைப் பெறுவீர்!

#722. உடல் என்றும் அழியாது.


ஈர்ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிது உண்ணவல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்தாண்டும்
பேராது காயம், பிரான் நந்தி ஆணையே.


இடைகலை பிங்கலை என்ற இரண்டு நாடிகளின் வழியே எழுகின்றது பிராண வாயு என்னும் புரவி. அந்தப் புரவியைத் தலை மேல் கொண்டு சென்று அசையாமல் நிறுத்தி விட்டு; அங்கேயுள்ள அமுதத்தை உண்ண அறிந்து கொண்டு விட்டால்; நீரிலோ நிலத்திலோ ஆயிரம் ஆண்டுகள் சமாதியிலிருந்த போதிலும் உடம்பு அழியாது. இது சிவன் தந்த உறுதி மொழி.

#723. சிவன் செய்யும் அருட் செயல்.


ஓசையில் ஏழும் ஒளியின் கண் ஐந்தும்
நாசியில் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னிற் பிரியும்நாள்
மாசுஅறு சோதி வகுத்து வைத்தானே.


குற்றம் ஒன்றும் இல்லாத சிவன், குண்டலினியும் பிராணனும் உடலை விட்டுப் பிரியும் பொழுது இந்தத் தன்மாத்திரைகளின் இந்தத் தொழில்களை முற்றிலுமாக ஒடுக்கி அருள் செய்வான்.

ஓசை என்ற வானத்தின் தன்மாத்திரையில் வெளிப்படும் ஏழு செயல்கள் இவை:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எரித்தல், சேர்த்தல்.


ஒளி என்னும் தன்மாத்திரையில் நிகழும் செயல்கள் இந்த ஐந்து:
சுவை, ஒளி, நாற்றம், வெம்மை, எரித்தல்.

நாசியில் பொருந்தியுள்ள மூன்று நிகழ்வுகள் இவை:நாற்றம், உயிர்ப்பு, உணருதல்.

நாவில் பொருந்தியுள்ள தொழில்கள் இவை இரண்டு: எடுத்தல், சுவைத்தல்.

 
13. சரீர சித்தி உபாயம்

13. சரீர சித்தி உபாயம்
உடலை அழியாமல் காப்பாற்றும் வழி

#724 to #727


#724. உடல் பெற்ற பயன் ஞானம் பெறுவது

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே.


உடல் அழிந்தால் உயிர் நீங்கி விடும். உடலைப் பெற்ற பயன் ஞானத்தைப் பெறுவது ஆகும். உடல் உறுதி குறைந்தால் உறுதியான ஞானம் கிடைக்காது. ஞானம் கிடைக்கா விட்டால் உயிர் நீங்கி விடும். எனவே உடலைப் பேணும் முறையை அறிந்து கொண்டு என் உடலையும், உயிரையும் காத்தேன்.

உடலை வளர்க்கும் முறை :
உடல் சிவன் குடியிருக்கும் கோவில் என்று அறிந்து கொண்டு உடலுள்

சிவனைக் காணுவது.

உயிர் வளர்க்கும் முறை :

உடலுடன் இருக்கும்போதே தனியாக இயங்கும் சக்தியைப் பெறுவது.


#725. உடலை ஏன் பாதுகாக்க வேண்டும்?


உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.


உடல் குற்றம் குறைகள் நிறைந்தது என்று முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் உடம்புக்குள்ளே சிவனைக் கண்டேன். உடலில் அந்த உத்தமன் கோவில் கொண்டதை அறிந்த பின்னர், உடலை நான் நன்கு ஓம்புகின்றேன்.

#726. பிரணவ உடல் உண்டாகும்


கழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே.


உலகத்தை நோக்கிச் செல்லும் மனத்தின் பாதையை மாற்றி அதைச் சிவனை நோக்கித் திருப்பினால் மனத் தூய்மை உண்டாகும். சிவ சிந்தனையால் மனம் தூய்மை அடைந்த பின்னர், கவிழ்ந்த ஆயிரம் இதழ்த் தாமரையை மலரச் செய்யவும் அதை நிமிரச் செய்யவும் இயலும். அப்போது வெப்பமான உடல் நீங்கி விடும். குளிர்ந்த பிரணவ உடல் கிடைத்து விடும்.

#727. இளமையும், உடல் நலமும் கிடைக்கும்


அஞ்சனம் போன்றுடல் ஐயுறும் அந்தியில்
வஞ்சக வாத மறுமத் தியானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

மாலை வேளையில் யோகம் பயின்றால் கபம் அகன்று விடும். நண்பகலில் யோகம் பயின்றால் வாத நோய் நீங்கிவிடும். சிற்றஞ் சிறு விடியற் காலையில் செய்தால் பித்தம் அகன்று விடும். சுக்கிலம் நீங்காமல் இருக்கும். நரை, திரை, முதுமை இவை அருகில் நெருங்கா.



 
#728 to #731

#728. இரு கண்பார்வையும் மேல் நோக்க வேண்டும்

மூன்று மடக்குஉடைப் பாம்பு இரண்டும் எட்டும் உள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்ற இம்முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றியிருக்க உடம்பு அழியாதே.


இரண்டு பாம்புகள் போலப் பின்னிப் பிணைந்துள்ளன சூரியகலை, சந்திரகலை என்ற இரண்டு நாடிகள். இவற்றில் அமைந்துள்ளன உடலில் உள்ள மூன்று முடிச்சுக்கள். இயந்திரம் போல இயங்கும் உடலை இயக்குவது பன்னிரண்டு அங்குலம் செல்லும் பிராணவாயு. கீழே நோக்கும் இரு கண்களின் பார்வையை ஒன்றாக்கி மேலே நோக்கி அதிலேயே நிலைத்திருந்தால் அப்போது பிராணன் லயம் பெறும். உடல் அழியாது.

#729. தத்துவத்தைக் கடந்து நிற்கலாம்


நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.


நூறு நாடிகள், அறுபது தாத்துவிகங்கள், ஆறு அத்துவாக்கள் இவை அனைத்தும் பிங்கலையையும் இடகலையையும் பற்றி இயங்குகின்றன. பயிற்சியாளர் இடையறாத சாதனைகளால் இவற்றைத் தூய்மைப் படுத்தலாம். முற்றிலுமாக மாற்றி அமைத்து விடலாம். அப்போது அவர் இவற்றைக் கடந்து மேலே உள்ள நிலைக்குச் செல்லலாம்.

விளக்கம்:
நூறு நாடிகள் தலையிலிருந்து கீழ் நோக்கிச் செல்கின்றன. ஒரு நாடி மட்டும் மேல் நோக்கிச் செல்கிறது . மேல் நோக்கிச் செல்லும் நாடி சிறப்படைய வேண்டும் என்றால் மற்ற நாடிகளின் தன்மையை மாற்ற வேண்டும்.

தொண்ணூற்றாறு தத்துவங்களில் தாத்துவிகங்களாக உள்ளவை அறுபது. அந்த அறுபதையும் மாற்றிவிட வேண்டும்.

உடலில் உள்ள அத்துவாக்கள் (வழிகள்) ஆறு ஆகும். அவைகள் எல்லாம் எல்லாக் குற்றங்களில் இருந்தும் தூய்மை அடைய வேண்டும். இவை அனைத்தும் தூய்மை அடைந்து விட்டால் அப்போது பிரணவம் தூய்மை ஆகிவிடும்.


#730. சிவ நடனம் காணலாம்


சத்தியார் கோயி லிடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி யாணையே.


சந்திரகலை சூரியகலையிடம் பொருந்தும்படிச் சாதனை செய்தால், நண்பகலில் பிரணவ ஒலியைக் கேட்க இயலும். இனிய சிவ நடனத்தைக் காணவும் இயலும். இது சத்தியம்! இறைவன் மீது ஆணை!

#731. அம்ச வித்தை


திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெறவே நினைந்து ஓதும் சகாரம்
மறிப்பது மந்திரம், மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே.

மிகத் தூய்மையுடன் பொருந்தியுள்ளது அகரம். அத்துடன் பொருந்தியது சகரம் . இவ்விரண்டின் சேர்க்கையாகிய ‘அம்சம்’ என்பதே யோகி மனனம் செய்வதற்குரிய மந்திரம் ஆகும். இதனால் அவன் பெறும் நாதமே அவன் வழிபடுகின்ற மூர்த்தி ஆகும்.

“அம்சம்’ என்பதை உச்சரித்தால் அது தொண்டையின் வழியாகச் சென்று மேலே சிவனின் ஸ்தானமாகிய சிரசில் படரும். அப்போது ஒரு நாதம் உண்டாகும். இதுவே ‘அம்ச வித்தை’ எனப்படும். ‘அசபை’ என்பதுவும் இதுவே ஆகும்.
 
#732 to #735

#732. சிவம் ஆகும் தன்மை

உந்திச் சுழியி னுடனே பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டி னிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.


சிவனை நினைத்துக் கொண்டு கொப்பூழ்த் தாமாரையில் தோன்றும் பிராணனை உச்சித் துளையில் நிறுத்த வேண்டும். காற்று கீழ் நோக்கிச் செல்லாமல் தடுத்து அதை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்பவன் சிவமாகும் தன்மையை அடைவான்.

#733. கூறா உபதேசம்


மாறா மலக்குதம் தன்மே லிருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலு மங்குளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே.

எப்போதும் நீங்காமல் மலம் பொருந்திருப்பது குதம். அதற்கு இரண்டு விரல் அளவு மேலேயும், விவரிக்க முடியாத பாலுணர்வைத் தம் குறிக்குக் கீழேயும் உள்ளது மூலாதாரம். அதைத் தியானம் செய்யுங்கள் அங்கே ஜீவர்களை வழி நடத்தும் சிவம் குடிகொண்டுள்ளது. அதனிடம் உபதேசம் பெற்று இவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

#734. இளமை வாய்க்கும்


நீல நிறனுடை நேரிழை யாளொடும்
சாலவும் புல்லிச் சதமென்று இருப்பார்க்கு
ஞால மறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி யாணையே.


நீலநிற ஒளியுடன் விளங்குவாள் பராசக்தி. அவளுடன் பொருந்தி அவளையே அடைக்கலாமாகக் கொண்டு விட்டால் உலகத்தோருக்கு ஏற்படும் நரை திரை இவை மாறி இளமையான தோற்றம் அமையும். இது சிவனது ஆணை.

#735. நீலகண்டன் ஆகலாம்


அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்
உண்டி சுருங்கில் உபாய பலவுள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

கருவாய் செயலின்றி இருந்தால் மனிதனுக்கு எந்த இழப்பும் இராது. உடல் மெலிந்திருந்தால் சத்துவ குணம் மேற்படும். பிராணனை எளிதாக வெல்ல முடியும். உணவைக் குறைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. யோக நெறியைப் பின்பற்றுவோர் நீல கண்டப் பெருமானாக ஆக முடியும்
 
#736 to ##739

#736. பெண்களும் விரும்புவர்

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
யண்டத்து ளுற்று அடுத்தடுத்து ஏகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்கு நற் காயமுமாமே.


உடலில் மூலாதாரத்தில் காம வாயு பொருந்தி இருக்கும். அதைத் தலையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்து வந்தால் அவர் அழகிய வடிவம் பெறுவார். வண்டுகள் விரும்பும் மலர்களைச் சூடிய அழகிய பெண்டுகள் இவரைக் கண்டு இச்சிப்பர்.

#737. காலனை வெல்ல இயலும்


சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே.


யாவரும் அஞ்சும்படிச் சினத்துடன் வருபவன் இயமன். ஒளி பொருந்திய மூலாதாரத்தில் உள்ளது அதோமுகச் சக்கரம். அதில் விளங்குபவன் சிவன். அவனது கழல்கள் ஒலிக்கும் திருவடிகளைக் கண்ட பின்னர் நம்மால் யமனிடம் அஞ்சாமல் அவனிடமே வெகுண்டெழ முடியும். இவ்வுலகிலும் மேல் உலகிலும் வாழ்பவராக ஆக முடியும்.

#738. இன்பமாக வளர உதவும்


நான்கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
தான்கண்ட வாயுச் சரீரம் முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வும் மருந்தாக
மான் கன்று நின்று வளர்கின்ற வாறே.

நான்கு அக்கினிக் கலைகளாகிய கதிரவன், திங்கள், அக்கினி, விண்மீன் இவற்றில் உள்ளான் சிவன். உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களிலும், சஹஸ்ரதலத்திலும் உள்ளான். பிராணனாக உடல் முழுவதும் பரவி அதில் உணர்வாக வெளிப்படுகின்றான். அவன் அதோமுகனாக இருந்து கொண்டு சீவன் இன்பத்துடன் வளர உதவிகள் புரிகின்றான்.

#739. ஒளியை சேமிப்பாய்


ஆகுஞ்சன வேத சக்தியை அன்புற
நீர்கொள நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்
பாகுபடுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்குமே.


ஆகுஞ்சன ஆசனத்தில் வேதசக்தி வெளிப்படும் . அதை அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். பயிர் செய்த நெல்லைப் பிரித்து விதைக்காகவும், உண்பதற்காகவும் சேமித்து வைப்போம் அதைப் போன்றே அளவற்ற பயிற்சியால் இருளை வென்று, ஒளியைச் சேமித்து அதில் ஒடுங்க வேண்டும்.
 
14. காலச் சக்கரம்

14. காலச் சக்கரம்
முடிவில்லாமல் தொடருவதால் காலம் ஒரு சக்கரம் என்று கூறப்படும்

#740 to#742

#740. காலத்தைக் கடக்கலாம்

மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி,
இதுவிட்டு அங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதிவட்டதுள் நின்று பாலிக்கும் மாறும்,
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற்றேனே.


திங்கள் மண்டலத்தில் உள்ளன வியாபினி, வியோமரூபை, அநந்தை, அநாசிருதை, உன்மனி என்ற ஐந்து கலைகள். இவற்றின் இயல்பை ஆராய்ந்து இவற்றை நீக்க வேண்டும். தலையின் மேல் துவாதசாந்தப் பெருவெளியில் அமரவேண்டும். சிவசக்தி அருளும் வகையையும், காலச்சக்தியைக் கடக்கும் நிலையையும் ஆராய வேண்டும்.

விளக்கம்

வியாபினி முதல் உன்மனி வரையில் உள்ள ஐந்து கலைகள் உயிர்களை மேல் நோக்கும் வண்ணம் செய்யும்.

கீழே
குறிப்பிடப்பட்ட வண்ணம் உயிர்களை முன்னேறச் செய்யும்.

நிவிர்த்தி கலை => பிரதிட்டை கலை => வித்தியா கலை => சாந்தி கலை => சாந்தியதீதை கலை.


#741. மக்கள் ஏன் அழிகிறார்கள்?


உற்றறிவு ஐந்தும், உணர்ந்தறிவு ஆறு ஏழும்
சுற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றறியாது அழிகின்ற வாறே.


ஐம்புலன்களில் ஐம்பொறிகள் பொருந்தி அறிந்து கொள்வது ஐந்து வகை அறிவு ஆகும். இந்த அறிவை அவற்றினின்றும் வேறாக இருந்து அறிந்து கொள்வது ஆறாவது அறிவு ஆகும். பொருட்களின் நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு ஏழாவது அறிவு ஆகும். கல்வியால் பெறுவது எட்டாவது அறிவு. அனுபவத்தால் பெறுவது ஒன்பதாவது அறிவு. இந்த ஒன்பது அறிவுக்கும் காரணம் ஆனவர் சிவ சக்தியர் என்று அறிந்து கொள் வது பதிஞானம் என்னும் பத்தாவது அறிவு ஆகும். இத்தனை அறிவினையும் அறிந்து கொண்டு, அதற்கேற்ப நடக்காமல் இருப்பதனாலேயே மக்கள் அழிகின்றனர்.

#742. வாழ்க்கையில் நான்கு கண்டங்கள்


அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும் மூன்றும்.
மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறு பத்திரண்டு என்பது
எழுகின்றது ஈரைம்பது எண் அற்று இருந்ததே.

மனிதனுக்கு வாழ்க்கையில் நான்கு கண்டங்கள் உள்ளன. இருபத்தைந்து முதல் இருபத்தெட்டு வரையில் முதல் கண்டம். முப்பது முதல் முப்பத்து மூன்று வரையில் இரண்டாவது கண்டம். அறுபது முதல் அறுபத்து இரண்டு வரையில் மூன்றாவது கண்டம். நான்காவது கண்டம் நூறு ஆண்டுகளில். இவ்வாறு மனிதனின் வாழ்வில் நான்கு கண்டங்கள் உள்ளன.

 
#743 to #745

#743. யோகப்பயிற்சி தொடங்க உகந்த நாள்

திருந்து தினம்அத் தினத்தி னொடு நின்று
இருந்துஅறி நாள்ஒன்று; இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளோடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனைபுக லாமே.


பிறந்த நாள், அதனுடன் பொருந்தி நின்ற பிறவி விண்மீன் கூடிய நாள் ஒன்று, பிறவி விண்மீனுடன் பதினாறு நாட்கள் கூடியப் பதினேழாவது நாளும், ஆறு கூடிய ஏழாவது நாளும் தவிரப் பொருந்திய நாளை ஆராய்ந்து அறிந்து யோகப் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

#744. சிவம், சக்தி, நாதம், விந்து


மனைபுகு வீரும் அகத்திடை நாடி
எனஇருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து, ஏறட்டு, தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே.


ஞான யோகத்தை விரும்பி அதைச் செய்கின்றவர்களே! இருபத்து ஐந்து தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிகளில் செல்கின்ற கதிரவனாகிய அறிவினால் அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்து நன்கு பக்குவப்பட வேண்டும். சிவபெருமான் விளங்குகின்ற ஆறு ஆதாரங்கள் செயல்படும் வழிகளை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றைக் கடந்து செல்லும்போது சிவம், சக்தி, நாதம் விந்து என்ற நான்கும் நன்கு விளங்கும்.

#745. ஆன்மாவை தரிசிக்க வேண்டும்


நாலும் கடந்தது நால்வரும் நால் அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே?


நான்முகன் திருமால் உருத்திரன், மகேசுவரன் என்பவை உருவங்கள் நான்கு ஆகும். விந்து, நாதம், சக்தி, சிவம் என்பவை அருவங்கள் நான்கு ஆகும். இவற்றுடன் அருவுருவம் சேரும் போது ஒன்பது பேதங்கள் உருவாகும். ஒன்பது வடிவங்களாக விளங்குகின்றதும், நெற்றியைக் கடந்து இருபத்து ஐந்து தத்துவங்களால் விளங்குவதும், ஆறு ஆதாரங்களையும் தாண்டுகின்றதும் ஆகிய ஆன்மா என்ற கதிரவனைக் காணவேண்டும்.
 
#746 to #748

#746. நாற்பத்தெட்டு எழுத்துக்கள்

ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சும் மூன்றுக்கும்
தேறும் இரண்டு இருபத்தோடு ஆறு இவை
கூறும் மதிஒன் றினுக்கு இருபத்தேழு
வேறு பதியங்கள் நாள்விதித் தானே.

ஆறு ஆதாரங்களில் நாற்பத்தெட்டு எழுத்துக்கள் கொண்ட ஆறு தாமரைகள் இருப்பதை அறிந்து கொள்வீர்.
‘ உ ‘ என்ற எழுத்தால் குறிப்பிடப்படும் கதிரவன் இருபத்தாறாவதாக அமைந்துள்ளது. ‘அ ‘ என்று குறிப்படப்படும் சந்திர வட்டம் என்பது இருபத்தேழாவது ஆக அமைந்துள்ளது.

விளக்கம்

தாமரை இதழ்களின் எண்ணிக்கை:

மூலாதாரம் ………………….4

ஸ்வாதிஷ்டானம் ……….6

மணிபூரகம்…………………10

அனாஹதம்………………..12

விசுத்தி ……………………….16

உடலில் உள்ளன 25 தத்துவங்கள்.

‘உ’ என்பது கதிரவனைக் குறிக்கும். இது இருபத்தாறாவது ஆகும்

‘அ ‘ என்பது சந்திரனைக் குறிக்கும். இது இருபத்தேழாவது ஆகும்


#747. குருமுகமாகக் கேட்க வேண்டியது.


விதித்த இருபத்தெட்டோடு மூன்று அறையாக
தொகுத்து அறி முப்பத்து மூன்று தொகுமின்;
பதித்துஅறி பத்தெட்டுப்பார் ஆதிகள் நால்
உதித்துஅறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே


#748. மறைபொருளை மறைவாகப் பெற வேண்டும்.


முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறை இறை யார்க்கும் இருக்க அரிது;
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறைஅறை யாது பணிந்து முடியே.


குருவின் உபதேசப்படி பயிற்சியாளர் முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிடில் இறைவனுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம். உபதேசத்தை இங்கே மறைத்துக் கூறியதன் காரணம் இதுவே! உபதேசத்தை உங்கள் குருவிடம் மறைவாகவும் முறையாகவும் பெற வேண்டும் என்பதே. மறையைப் பெறுவது போல இந்த மறை பொருளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்!




 
#749 to #751

#749. நிலைத்து வாழும் வழி

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்;
இடிஞ்சில் இருக்க விளக்கு எரிகொண்டு
கடிந்து அனல் மூளக் கதுவ வல்லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.


உடலை நிலைத்து இருக்கச் செய்யும் வழியை மறைத்து வைத்துள்ளதை அறியாமல் வீணே முயற்சி செய்பவர்கள் முழு மூடர்கள். உடல் நிலைத்து இருக்க விரும்புபவர்கள் மூலாதாரத் தீயை அடக்க வேண்டும். நிலையற்ற உலகில் நிலையாக வாழ அது ஒன்றே வழியாகும்.

#750. ஓவியம் போல நில்லுங்கள்


நண்ணும் சிறுவிரல் நாண்ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.


ஒரு கையில் உள்ள சிறுவிரல், அணி விரல், நடு விரல் என்ற மூன்று விரல்களுடன் மறு கையில் உள்ள மூன்று விரல்களையும் கண்கள் புருவங்களில் நெறித்துப் பிடித்தால் பிராணனும் அபானனும் சமமாக நிற்கும். அதனால் அக்கினி, கதிரவன், சந்திரன் என்னும் மூன்று மண்டலங்களும் ஒத்து நிலை பெறும். அங்கே காணப்படும் ஒளியில் அசையாமல் ஓவியம் போல நில்லுங்கள்.

#751. மூன்று மண்டலங்கள்


ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்;
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை;
தீவினையாம் உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

ஓவியம் போல அசையாமல் நிற்பதை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறிந்திட முடியாது. தீவினைகளுக்குக் காரணம் ஆன இந்த உடலில் அக்கினி, கதிரவன், சந்திரன் இந்த மூன்றின் மண்டலங்களும் சுழுமுனையில் பொருந்திச் சஹஸ்ரதளத்தில் விளங்கும்.
 
#752 to #754

#752. ஞானிகள் அழிய மாட்டார்கள்.

தண்டுஉடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர்; காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.


முதுகுத் தண்டுடன் பிணைந்து மேலே சென்று பிரமரந்திரத்தை அடைவார் ஒரு யோகி. அவர் உடலில் திங்கள், கதிரவன், அக்கினி மண்டலங்கள் மூன்றும் ஒத்துப்போய் உடல் மகிழும்படி அமைந்திருக்கும். இதைக் கண்டறிந்தவர்கள் மெய்ஞானிகள். அவர்கள் அழியவே மாட்டார்கள். இதை அறியாதவர்கள் வினைப் பயனாக விளைந்த உடலை அழிய விட்டு விடுகின்றனர்.

#753. காமச் செயல் வாழ்வைக் கெடுக்கும்


பிணங்கி அழிந்திடும் பேறு அது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குடனே வந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.


உடல் எப்படி அழியும் என்பதையும் கேட்டு அறிந்து கொள்வாய் நீ! கதிரவன் என்னும் அறிவு, குண்டலினி வழியே சென்றுக் காமச் செயல்களைச் செய்யுமானால் உயர்ந்த உன் வாழ்வு தாழ்ந்து போய் விடும். ஒரு நாய் மலம் தின்ன எப்படி அலையுமோ அதுபோலவே உன் அறிவும் காமச் செயலைப் புரிய அலையும்.

#754. கூத்தன் அங்கே தோன்றுவான்


சுழல்கின்ற வாறுஇன் துணைமலர் காணான்
தழல்இடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காண வல்லார்க்குக்
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.


காம வயப்பட்டு அலையும் மனிதனால் சஹச்ரதளத்துக்கு மேலே விளங்கும் இறைவனின் திருவடிகளை உணர முடியாது. மேலே தன் இடமாகிய அக்கினி மண்டலத்தில் இல்லாமல் கீழே மூலாதாரத்தில் உள்ள தீயினால் மக்கள் அழிந்து படுகின்றனர். இறைவனின் காற்சில
ம்பு ஓயைக் கேட்டு, அதை நாடிச் செல்பவருக்குச் சுழுமுனையில் கூத்த பிரானாகிய சிவன் காட்சி தருவான்
 
#755 to #757

#755. இறைவன் கலந்து நிற்பான்

கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்கள்
சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்திரும் ஒன்றே.


நாதத்தைக் கேட்பதால் சீவனுக்குப் பல பயன்கள் விளையும். அவற்றைக் கண்டு அறிந்தவர் சாத்திரங்களின் பொருளை உணர்ந்து அதன் வழியே நிற்பார். யோகி சிவனைத் தியானம் செய்து கொண்டு இருந்தால் அவனும் விருப்பம் கொண்டு யோகியுடன் வேறுபடாமல் ஒன்றி இருப்பான்.

#756. குன்றின் மேல் கூத்தன் தோன்றுவான்


ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடை பொன்திகழ் கூத்தனும் ஆமே.


இவ்வாறு இறைவனுடன் வேறுபாடு இன்றிப் பொருந்தி இருப்பவரின் வாழ்நாள் வளரும். அவருக்கு அழிவும் இல்லை. நன்மை தரும் என்று எண்ணிப் பூராகம், இரேசகம், கும்பகம் இவற்றைச் செய்தால் வாழ்நாள் குறைந்து விடும். இவற்றை விடுத்து முப்பது நாழிகை சமாதியில் இருந்தால் சஹஸ்ர தளத்தில் உள்ள பொன்னொளியில் கூத்தபிரான் தோன்றுவான்.

#757. நூறாண்டு வாழலாம்


கூத்து அவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து, பதுமரை நோக்கிடில்
சாத்திடும் நூறு தலைப் பெய்ய லாமே.

உடலில் கூத்தை நிகழ்த்துபவன் சிவபெருமான். பிராணன் நுட்பமாக அடங்கும் இடத்தை அறிந்து கொள்ள வேண்டும் அங்கே அகரத்தையும், உகரத்தையும் பொருத்த வேண்டும். அதில் எட்டு இதழ்க் கமலத்தை விளங்கச் செய்ய வேண்டும். அந்தக் கமலத்தில் சிவனைக் கண்டு மகிழ்ந்தால் ஒருவன் எடுத்த உடலில் நூறாண்டு காலம் வாழலாம்.

2 = அகரம் – சந்திர மண்டலம்

8 = உகரம் – கதிரவன் மண்டலம்

2 + 8 = 10
 
#758 to #760

#758. பலகாலம் வாழலாம்

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்து உடன் கோடி யுகம் அது ஆமே


நூறாண்டு காலம் வாழும் முறையை அறிந்தவர் இந்த உடலை ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதபடிக் காத்துக் கொள்ள இயலும் இது போன்று ஆயிரம் ஆண்டுகள் வாழ அறிந்தவர்கள் அறிவால் முதிர்ந்து பல யுகங்கள் வாழ இயலும்.


#759. இரண்டற ஒன்றி விடுவர்


உகம்கோடி கண்டும் ஒசிவு அற நின்று
அகம்கோடி கண்டு உள் அயல் அறக் காண்பர்கள்
சிவம்கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு
உகம்கோடி கண்டு அங்கு உயர்உறு வாரே.


இங்ஙனம் பல நாட்களைக் கண்டவர் சிறிதும் தளர்ச்சி என்பதே இல்லாமல் இருப்பார். உள்ளத்தால் சிவனை இடைவிடாது தியானிப்பார். சிவம் வேறு தான் வேறு என்னும் சிந்தனையே மறைந்து விடும்படி அவனோடு ஒன்றி விடுவார். சிவனோடு ஒன்றாக உணர்ந்து நீண்ட காலம் வாழ்ந்து உயர்வினை அடைவார்.


# 760. சக்தியை அறியாதவர் ஆவார்


உயர்உறு வார், உலகத்தொடும் கூடிப்
பயன்உறு வார் பலர்தாம் அறியாமல்
செயல்உறு வார் சிலர் சிந்தை இல்லாமல்
கயல்உறு கண்ணியைக் காணகி லாரே.


சிவம் என்ற தன்மையுடன் ஒன்றறக் கலந்தவரே உண்மையில் உயர்வு அடைந்தவர் ஆவார். அவரே உலகத்தோடு கூடிப் பயன் அடைந்தவர் ஆவார். ஆனால் பலர் இந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் மேலும் மேலும் கன்மங்களை ஈட்டுகின்றனர். வேறு சிலர் இதை முற்றிலும் மறந்து விடுவர். இமைக்காத மீன் போன்ற கண்களை உடைய பராசக்தியையும் கூட அறியாதவர்களாக ஆகிவிடுவார்கள்.




 
#761 to #763

#761. தொண்டாற்ற என்ன தேவை?

காணகி லாதார் கழிந்து ஓடிப் போவார்கள்;
நாணகி லாதார் நயம் பேசி விடுவார்கள்;
காணகி லாதார் கழிந்த பொருள் எல்லாம்
காணகி லாமல் கழிகின்ற வாறே.


இறையொளியைக் காண இயலாதவர் பிறவிப் பயனை அடைய மாட்டார். வாழ்க்கை வீணாகி விடும். நாணம் இல்லாதவர் நயமாகப் பேசிப் பேசிக் காலத்தை வீணாக்கிச் செல்வார்கள். பராசக்தியின் ஒளியைக் காண இயலாதவர்களால் தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது. அதனால் அவர்கள் தொண்டுகள் எதுவும் செய்யாமல் காலத்தைக் கழித்துச் செல்வார்கள். இறையருள் உடையவரே தொண்டுகள் புரிய இயலும்.


#762. எங்கும் நிறைந்தது சிவம்


கழிகின்ற அப்பொருள் காணகிலாதார்
கழிகின்ற அப்பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.


அழிகின்ற உலகப்பொருட்கள் அனைத்தும் நம்மிடம் பிணைப்பை ஏற்படுத்தும். அவற்றைப் புறக் கண்களால் நோக்காதவருக்கு மட்டுமே அவற்றை அகக் கண்களால் நோக்க இயலும். அழியும் அந்தப் பொருட்களின் உள்ளே ஒருமைப் பட்ட மனத்துடன் நோக்கினால், அவை அனைத்திலும் நீங்காது விளங்குகின்ற சிவத்தைக் காணலாம்.


#763. யோகியர் பெறும் பயன்


கண்ணன், பிறப்பு இலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்;
திண் என்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாடவல் லார்கட்கே.


சிவபெருமான் முக்கண்ணன்; பிறப்பு அற்றவன்; நந்தியம் பெருமான். அவனை மனத்தில் ஆராய்ந்து அறிய வேண்டும். அப்போது அவன் பத்துத் திசைகளில் இருப்பதும் தெரியும். அதே சமயத்தில் தனித்து ஏகாந்தனாக இருப்பதும் தெரியும். உறுதியான சிவகதியும் கிடைக்கும். ஆராய்ச்சி செய்யும் யோகியர் பெறுகின்ற பெரும் பயன் இதுவே.




 
#764 to #766

#764. அக நோக்கு

நாடவல் லார்க்கு நமன் இல்லை, கேடு இல்லை,

நாடவல் லார்கள் நரபதி யாய் நிற்பர்;
தேடவல் லார்கள் தெரிந்த பொருள் இது
கூடவல் லார்கட்குக் கூறலும் ஆமே.


இப்படி நந்தியம் பெருமானை ஆராய்ந்து அறிபவர்களின் வாழ்நாட்களுக்கு எல்லை இல்லை. அதனால் அழிவும் இல்லை. இவ்வாறு ஆராய்ந்து அறிந்தவர் மக்களின் தலைவர் ஆவார். சிவனைச் சேர வண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு இதைக் கூற வேண்டும்.


#765. சிரசில் சிவன் தோன்றுவான்


கூறும் பொருள் இது அகார உகாரங்கள்

தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல்வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.


தகுதி உடையவர்களுக்கு உணர்த்த வேண்டியவை அகார உகாரங்கள். இவை இரண்டும் மனதில் நிலை பெற்று விட்டால் அப்போது மகரம் சுழுமுனை நாடி வழியே உயரச் சென்று அங்கு நாதமாகி விடும். அப்போது ஆறு ஆதாரங்களும் ஒன்றாக இணைந்துவிடும். மூலாதாரத்துக்கும் சஹஸ்ர தளத்துக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டு விடும். சிரசில் சிவன் தோன்றுவான்.


#766. சிந்தித்தால் சிவம் ஆகலாம்


அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்

அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள் வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே.


சிவபெருமான் உறையும் இடத்தை எவரும் அறியவில்லை. அந்தப் பெருமான் ஓசையாகவும், ஒளியாகவும் நம் உடலில் உறையும் இடத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டு விட்டால், அதன் பின் சிவன் அவன் உள்ளத்தை விட்டு அகலாமல் இருப்பான். அப்படிக் காண முடிந்தவனே சிவனாக ஆகி விடுவான்.




 
#767 to #769

#767. ஒலியுள் ஒளியுள் உறைவான் சிவன்

அவன்இவன் ஆகும் பரிசுஅறி வார்இல்லை
அவன்இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம் அது ஆகி நின்றானே.

தானே சிவன் ஆகும் இயல்பை அறிந்தவர் யாரும் இல்லை. தானே சிவன் ஆகும் தன்மையினை நீ கேட்பாய்! சிவன் ஆன்மாவின் நுண்ணிய ஒளியிலும், நுண்ணிய ஒளியிலும் பொருந்துவான். சிவன் இவனது வானக் கூற்றில் நன்றாக விளங்குவான்.

#768. இன்பம் இருக்கும் இடம் இதுவே


வட்டங்கள் எழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்துஉள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.

ஆதாரச் சக்கரங்கள் ஆகிய ஏழு வட்டங்களும் மலர்ந்து நிமிரும் போது, அங்கே மேன்மை உடைய சிவம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வீர். ஓர் உபாயத்தால் சிவனுடன் பொருந்தி இருக்க முடியும். அதை அறிந்து கொண்டால் சர்க்கரைக் கட்டியைப் போல இனிக்கும் சிவன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளலாம்.

கீழ் நோக்கிய ஆயிரம் இதழ் தாமரையை மேல் நோக்கச் செய்ய வேண்டும்.
நாதம் விந்து இவற்றில் சிவன் வெளிப்படுவதை அறிந்து கொள்வதே அந்த உபாயம்.


#769. உள்ளே உள்ளான் இறைவன்


காணலும் ஆகும் பிரமன் அரி என்று
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்து உடன் வைத்ததே.

ஆதாரத் தாமரைகளில் நான்முகன், திருமால், நீலகண்டன், சதாசிவன், சக்தி தேவி இவர்களைக் காண இயலும். நம் உடலிலும் உயிரிலும் இறைவன் பொருந்திருப்பதையும் அறிய முடியும்.
 
15. ஆயுட்பரீட்சை

15. ஆயுட்பரீட்சை
வாழும் காலத்தை அறிவதற்குச் செய்யும் பரீட்சை இது.

#770 to #773


#770. அளவான கை

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தம மிக்கிடி லோராறு திங்களாம்
அத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்த லுயிர்கொரு திங்களி லோசையே.

தலை இடத்தில் வைத்த கை பருத்தோ சிறுத்தோ இராமல் அளவாக இருந்தால் நன்மை விளையும். கை பெருத்து இருந்தால் ஆறு மாதங்களில் இறப்பு ஏற்படும். கை இரண்டு பங்கு பருத்து இருந்தால் ஒரே மாதத்தில் இறப்பு வரும்.


#771. நாதாந்தத்தில் ஈசன்


ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ;
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்;
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வுஇது ஆமே.


உள்ளத்தில் உண்டாகும் வாக்குகளின் ஓசையும் ஈசனுக்கு ஒப்பானவை. நாதத்தைக் கடந்து விட்டவர் ஈசனை நினைந்து நாதாந்தத்தில் இருப்பார். அவர்கள் மனதில் ஈசனும் ஓசையால் உணரும் உணர்வாக இருப்பான்.


#772. ஞானம் பெற்றவர் ஞாலத்தின் தலைவர்


ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமேல் உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகின் தலைவனும் ஆமே.


உள் நாக்கின் மேலே உள்ள நான்கு அங்குல அளவு தொழிற் படாததால் பிராண வாயு அழிந்து விடுகிறது. அந்த வாயுவை அழியாமல் உடலில் பொருத்த வேண்டும். அப்படிச் செய்தால் உள் நாக்கின் மேலே அடைந்துள்ள பகுதி திறந்து கொள்ளும். மூச்சுக் காற்று பிரமரந்திரம் நோக்கிப் பாயும். சஹஸ்ர தளம் விரிந்து கொள்ளும். ஞானம் நிலை பெறும். அப்போது யோகியால் ஐம்புலன்களின் துணை இல்லாமலேயே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஞானம் பெற்றவர் ஆவார் ஞாலத்தின் தலைவர்.


#773. நூறாண்டு வாழலாம்


தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை;
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்;
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.


தலைவன் வாழ்வது இடக்கண் பார்வையில். இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையுடன் பொருத்தும் வகையை அறிந்தவர் இல்லை. இடக் கண்ணால் வலக் கண்ணுக்கு மேல் நோக்கினால் அங்கு சக்தியாகிய ஒளி விளங்குவாள். இதைச் செய்ய வல்லவருக்கு ஐந்து ஞானேந்திரியங்களும் வசப்படும். அவர் நூறாண்டு காலம் வாழ்வார்.







 
#774 to #777

#774. உயிர்ப்பும், ஆயுளும்!

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளியிவ் வகையே.


மூச்சுக் காற்று ஆறு விரல் அளவு வெளியேறினால் ஒருவன் எண்பது ஆண்டுகள் உயிர் வாழலாம். ஏழு விரல் அளவு மூச்சுக் காற்று வெளியேறினால் வாழும் காலம் அறுபத்திரண்டு ஆண்டுகள் ஆகும்.

#775. மூச்சின் அளவும் வாழும் காலமும்


இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
முவ்வகை யாம்அது முப்பது மூன்றே.


எட்டு விரல் அளவு மூச்சு நீண்டு இயங்கினால் அவ் வகையினரின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள் ஆகும். ஒன்பது விரல் அளவு மூச்சு நீண்டு இயங்குமானால் அந்த மனிதனின் ஆயுள் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகும்.

#776. பிற உயிர்ப்புக்களும் ஆயுளும்


மும்மூன்றும் ஒன்றும் முடிவு உற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்;
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே.

பத்து விரல் அளவு மூச்சு வெளியேறினால் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆயுள் ஆகும். பதினைந்து விரல் அளவு மூச்சு வெளியேறினால் ஆயுள் இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகும்.

#777. சுழுமுனையில் அக்கினிக் கலை


பார்க்கலும் ஆகும் பகல்முப் பதும்ஆகில்
ஆக்கலும் ஆகும் அவ் ஆறிரண்டு உள் இட்டுப்
போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில்
தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே.


பகல் பொழுது முப்பது நாழிகைகளும் கதிரவன் இல்லாத திங்கள் பகுதியில் சேர்ந்து நின்றால், தலையின் ஈசான திக்கில் உணர்வு உதிக்கும். சுழுமுனையில் மூச்சுக் காற்றுப் போகும். அகரம், உகரம் என்ற இரு சந்திர சூரிய நாடிகளும் செம்மைப்படும். அக்கினிக் கலை சுழுமுனையில் விளங்கும். இதைக் காண முடியும்.
 
#778 to #781

ஆயுறு ஆறு என்று அளக்ககலும் ஆமே.

ஏய்இரு நாளும் இயல்பு உற ஓடிடில்
பாய்இரு நாலும் பகை அற நின்றிடும்
தேய்வுஉற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆயுறு ஆறு என்று அளக்ககலும் ஆமே.


மேலே சொன்னவாறு இரு நாட்கள் சுழுமுனையில் மூச்சியின் இயக்கம் இருந்தால், கீழ் நோக்குதலை உடைய அபானனும், வியாபித்து இருக்கும் திங்களும் சீவனுக்குப் பகைமை பாராட்டாமல் நன்மை செய்வர். இவ்வறு கீழ் நோக்கும் சக்தியைக் குறைத்து மூன்று நாட்கள் இருந்தால் பயிற்சியாளரின் வாழ்நாள் நீடிக்கும்.


#779. சுழுமுனையில் நிற்க வேண்டும்


அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒரு நாளும் மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகை ஐந்தும் தூய்நெறி ஓடில்
களக்கம் அறமூன்றில் காணலும் ஆமே.


இந்த வகையில் நன்கு நாட்களுக்குச் சுழுமுனை வழியே மூச்சுக் காற்று இயங்கினால் சிவன், சக்தி, விந்து, நாதம் என்னும் நான்கையும் காண முடியும். ஐந்து நாட்களுக்குத் தூய்மையான இந்த வழியில் மூச்சுக் காற்று இயங்கினால் சிவன், சக்தி, ஆன்மா என்ற மூன்றையும் காணலாம்.


#780. சிவனைக் காணமுடியும்!


காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பு அற மூ ஐந்தேல்
காணலும் ஆகும் கருத்து உற ஒன்றே.


முன்னே கூறியவாறு சுழுமுனையில் பத்து நாட்களுக்கு அறிவு பொருந்தி இருந்தால், தன்னுள்ளே கலந்து உறையும் சிவ சக்தியரைக் காணலாம். காலத்தன்மையை விட்டுவிட்டு பதினைந்து நாட்கள் சுழு முனையில் அறிவு பொருந்தி இருந்தால் உள்ளத்தில் சிவபெருமானைக் காணலாம்.


#781. அனைத்தும் விளங்கும்


கருதும் இருபதில் காண ஆறு ஆகும் ;
கருதிய ஐயைந்தில் காண்பது மூன்றாம்
கருதும் இருபதுடன் ஆறு காணில்
கருதும் இரண்டுஎனக் காட்டலும் ஆமே.


இரு முனைகள் சுழுமுனையில் நிலை பெற்றால் வானக் கூறில் இருந்து ஆறு ஆதாரங்களையும் அறிந்து கொள்ளலாம். இருபத்தி ஐந்து நாட்கள் இந்த விதமாக இயங்கி வந்தால் ஒளி, வளி, வெளி என்னும் மூன்றும் நன்றாக விளங்கும். இன்னும் இருபது நாட்கள் இதே போன்று இயங்கி வந்தால் ஒளி, வெளி என்ற இரண்டும் இன்னமும் சிறப்புற விளங்கும்.




 
#782 to #785

#782. பிறருக்கும் உணர்த்த முடியும்!

காட்டலும் ஆகும் கலந்த இருபத்தேழில்
காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று எனக்
காட்டலும் ஆகும் கலந்த இருபத்தெட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே.


சுழுமுனையில் ஒரு யோகி இருபத்தேழு நாட்கள் நிலை பெற்றிருந்தால் அவரால் ஜோதி வடிவமாகிய சிவபெருமானைப் பிறருக்குக் காட்டி உணர்த்த முடியம் . இருபத்தெட்டு நாட்கள் சுழு முனையில் நிலை பெற்றிருந்தால் பத்தாவது நிலையில் மேல் நோக்கிய சஹஸ்ரதலத்தில் விளங்குகின்ற ஆன்மாவையே பிறருக்கு உணர்த்த முடியும்.

#783. காலம் செல்வதை அறியார்!


ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பார்அஞ்சி நின்ற பகை பத்துநாள் ஆகும்
வாரம்செய் கின்ற வகை ஆறஞ்சு ஆமாகில்
ஓர்அஞ்சொடு ஒன்று ஒன்று என ஒன்றும்தானே.

பத்து, ஐந்து, ஆறு, எட்டு என்ற இருபத்து ஒன்பது நாட்கள் யோகிகளுக்குப் பத்து நாட்களைப் போலத் தோன்றும். இறைவனுடன் கலந்து இருக்கும் அன்பைப் பெருக்கும் முப்பது நாட்கள் வெறும் ஏழு நாட்களைப் போல தோன்றும்.

#784. காலம் நின்றுவிடும்


ஒன்றிய நாள்கள் ஒருமுப்ப தொன்றுஆகில்
கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும்
சென்று உயிர் நால் எட்டும் சேரவே நின்றிடின்
மன்று இயல்பு ஆகும் மனையில் இரண்டே.


இறைவனுடன் பொருந்தி இருக்கும் முப்பதொன்று நாட்கள் வெறும் மூன்று நாட்கள் போலத் தோன்றும். இறைவனுடன் ஜீவன் முப்பத்திரண்டு நாட்கள் பொருந்தி இருந்தால் அவை வெறும் இரண்டு நாட்களைப் போலத் தோன்றும்.

#785. சும்மா இருந்தால் சிவன் ஆகலாம்!


மனையினில் ஒன்றாகும் மாதமும் மூன்றும்
சுனையினில் ஒன்று ஆகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனைஉற நின்ற தலைவனும் ஆமே.


மூன்று மாதங்கள் சிவமும், ஆன்மாவும் இரண்டறப் பொருந்தி இருந்தால் சிவன் அந்த யோகிக்கு சஹஸ்ரதளத்தில் ஒரு சூக்ஷுமமான வாக்குக் கேட்கும்படிச் செய்வான். யோகி பரமாகாயத்தில் நிமிர்ந்து நின்றுச் செயல் ஒன்றும் இன்றிச் சும்மா இருந்தால் சிவனுடன் பொருந்திச் சிவனாகவே ஆகிவிடமுடியும்.
 
#786 to #789

#786. யாரும் அறியாததை நாம் அறியலாம்!

ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆறும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆறும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆறும் அறியார் அறிவு அறிந்தேனே.

பரவெளியில் சூக்ஷ்மமாகக் கலந்து எங்கும் பரவியுள்ள தீயாகிய பூதத்தை யாரும் அறிய இயலாது.
பரவெளியில் சூக்ஷ்மமாகக் கலந்து எங்கும் பரவியுள்ள காற்றாகிய பூதத்தை யாரும் அறிய இயலாது.
எல்லாவற்றையும் தனக்குள் ஒடுக்கிக் கொண்டுள்ள சிவனையும் யாரும் அறிய இயலாது. எவருமே அறியாத அறிவினை நான் எங்கனம் அறிந்து கொண்டேன் தெரியுமா? சிவத்துடன் கூடி இவற்றை அறிந்து கொண்டேன்.

#787. சிவத்தின் இயல்பு என்ன ?


அறிவது, வாயுவொடு, ஐந்து அறிவு ஆய,
அறிவு ஆவதுதான் உலகுஉயிர் அத்தின்
பிறிவு செய்யா வகை பேணி உள்நாடின்
செறிவது நின்று திகழும் அதுவே.


காற்று முதலிய ஐந்து தன்மாத்திரைகளை அறிந்து கொள்ளும் அறிவே சிவம் ஆகும். உலகம், உயிர்கள் இவை
எல்லாவற்றையும் அறிந்து கொள்வதே சிவம் ஆகும். சிவத்தை மற்றவற்றிலிருந்து பிரித்துக் காண முயலக் கூடாது. சிவத்தை எல்லாப் பொருட்களுடனும் ஒன்றாகக் கண்டால் அந்தச் சிவமே எல்லாப் பொருட்களையும் நமக்கு நன்கு விளக்கித் தானும் நன்கு விளங்கும்.

#788. பராசக்தி தரும் பரிசு


அது அருளும் மருள் ஆனது உலகம்
பொது அருளும்; புகழாளர்க்கு நாளும்
மது அருளும் மலர் மங்கையர் செல்வி
இதுஅருள் செய்யும் இறையவன் ஆமே.


சிவன் அருளிய உலகம் மயக்கத்தைத் தருவது ஆகும். ஆனால் ஞானியாருக்கு அதுவே பொது அறிவை அருளும். இன்பத்தைத் தரும் சஹஸ்ர தளத்தில் விளங்குபவள் பராசக்தி. அவளே ஞானியரைச் சிவத்துடன் சேர்த்து வைப்பவள்.

#789. பற்று நீங்கும்! அறிவு ஓங்கும்!


பிறப்புஅது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்புஅது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி ஆவது பற்று அறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.


படைப்புச் செயலைக் குறித்து எண்ணிய பெருமையை உடையவன் சிவன். பிறப்பு இல்லாதபடிச் செய்பவரின் அழகிய உடல் அவனுக்குப் பழமையான இருப்பிடம் ஆகும். இந்த உண்மையை அறிந்து கொண்டு விட்டால் உள்ளத்தி உள்ள பற்று தானே அகன்று விடும். பாசமே ஆசைக்கும் துன்பங்களுக்கும் காரணம். அதை விலக்கி விட்டால் ஆழ்ந்த அறிவு உதயமாகும்.
 
16. வார சரம்

16. வார சரம்
வாரம் = வாரத்தின் நாள்
சரம் = மூச்சின் இயக்கம்

#790 to #793

#790. நாட்களும் நாடிகளும்

வெள்ளிய வெண் திங்கள் விளங்கும் புதன் இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே.


வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் இட நாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் வல நாடி வழியே மூச்சு இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக் கிழமைகளில் இடைகலையிலும், தேய்பிறை வியாழக் கிழமைகளில் வலது நாடியிலும் மூச்சு இயங்க வேண்டும்.

#791. உடம்பு அழியாததன் காரணம்


வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்று
தள்ளி யிடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூனமிலை என்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத்தானே.


இயல்பாகவோ அல்லது பயிற்சியினாலோ திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடைகலை வழியாக நடைபெறின் அந்த உடல் அழியாது. இதை வள்ளல் ஆகிய சிவபெருமான் நமக்கு உரைத்துள்ளான்.

#792. ஆனந்தம் கூடும்


செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறேயென்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டு
அவ்வா றறிவார்க்கு அவ்வானந்த மாமே.


செவ்வாய்க் கிழமை, தேய்பிறை வியாழக்கிழமை, சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்க நாடி வழியே அறிந்து கொள்ளும் யோகி இறைவன் ஆவான். இந்த நாட்களில் மூச்சு இட நாடியில் நடந்தால் அதை மாற்றி வல நாடியில் புரிய வேண்டும். அப்போது ஆனந்தம் கூடும்.

#793. நாசியில் சிவம் விளங்கும்


மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறியும் இழியு மிடைபிங் கலைஇடை
ஊறுஉயிர் நடு வேயுமி ருக்கிரன்
தேறி யறிமின் தெரிந்து தெளிந்தே.


சந்திரனும், சூரியனும் இடகலை, பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். இடகலை வழியே ஏறிப் பிங்கலை வழியே இறங்கும், பிங்கலை வழியே ஏறி இடகலை வழியே இறங்கும். நாடு நாடியில் மூச்சு ஊர்ந்து போகும். நாசிகள் வழியே இயங்கும் மூச்சில் சிவம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்



 
#794 to #796

#794. இராசியைப் பொருத்தி அறிக

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி உணர்ந்து கொளுற்றே.


பிராணம் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் தோன்றும். அகன்றும் தணிந்தும் மாறி மாறி ஓடாமல் ஒரே நாடியில் மிகுதியாக ஓடினால் பிறந்த ராசியைப் பொருத்தி கதிரவன் நாடி, சந்திரன் நாடி அறிய வேண்டும்.

#795. தீப ஒளி தோன்றும்!


நடுவுநில் லாம லிடம் வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின் பணிசேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண் டென் றானே.

இரண்டு நாடிகளின் வழியே சமமாக நிற்காமல் இடம் அல்லது வலமோடிப் பாய்கின்ற வாயுவை சுழுமுனையில்
பொருத்த வேண்டும். நாடிகள் இரண்டையும் ஒத்து இயங்கச் செய்து, குண்டலினியைப் புருவமக்தியில் கொண்டு பொருத்தினால் அப்போது நடுநாடியான சுழுமுனையின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும்.

#796. ஆயுளை மூச்சு தீர்மானிக்கும்


ஆயும் பொருளும் அணி மலர் மேலது
வாயு விதமும் பதினாறு உளவலி
போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகுர்த்தமும் ஆமே.

ஆராய்ச்சிக்கு உரிய சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் பதினாறு கலைகள் பொருந்திய சந்திரன் நன்கு விளங்குவான். அந்தக் கலையே நமது ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கும். அதுவே நாட்களாகவும், தியான காலத்துக்குரிய முகூர்த்தமாகவும் அமையும்.
 
17. வார சூலம்

17. வார சூலம்
வாரம் = கிழமை. சூலம் = குற்றம்
பிரயாணத்துக்கு நன்மை தராத தோஷங்கள்.


#797 & #798

#797. தவிர்க்க வேண்டிய நாட்களும், திசைகளும்

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.


திங்கள்,சனிக் கிழமைகளில் கிழக்கே சூலம் ஆகும். செவ்வாய், புதன் கிழமைகளில் வடக்கே சூலம் ஆகும். ஞாயிறு, வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் ஆகும்.


#798. சூலமும் தீமைகளும்


தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வளமுன்ன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.


வியாழக் கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு இடப் பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு வலப்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ இருந்தால் தீமை விளையும்.








 
Back
Top