Quotable Quotes Part II

#636 to # 639

#636. “யாமே இவன்!” என்பான் சிவன்

சேருறு காலம் திசைநின்ற தேவர்கள்
ஆரிவ னென்ன வரனாம் இவனென்ன
ஏருறு தேவர்க ளெல்லா மெதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய் கண்டவாறே.

சிவகதியை அடையும் காலம் வந்தவுடன் திக்பாலகர்கள் முதலான தேவர்கள் “யார் இவன் ?” என்று வினவும் போது “யாமே இவன்!” என்பார் சிவபெருமான். அழகிய தேவர்கள் எதிர்க் கொண்டழைக்கக் கருமை நிறம் கொண்ட கழுத்தை உடைய சிவனை நேரில் காணக் கிடைக்கும்.

#637. எங்கும் செல்ல வல்லவர்


நல் வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்காப் பெருங்கொடை
இவ்வழி யாள ரிமையவ ரெண்டிசைப்
பல் வழி எய்தினும் பார் வழி யாகுமே.


பிரணவ உபாசகர் நல்ல வழியை நாடுவார். நமன் வழியை மாற்றுவார். குறையில்லாத கொடை வள்ளல் போன்ற இந்த யோகியர் தேவர் உலகில் எங்கு சென்றாலும் அது நன்கு தெரிந்த வழி போலவே இருக்கும்.

#638. சிவயோகியின் பெருமை


தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலி செய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்கவல் லார்க்கும் தன்னிடமாமே.

அறிதுயில் கொள்ளும் திருமாலுக்கும், ஏழு உலகங்களைப் படைக்கும் பிரம்மனுக்கும், அழிவில்லாத ருத்திரனுக்கும், அமுதம் உண்டு வாழும் தேவர்களுக்கும் இருப்பிடம் சிவயோகியரே ஆவார்.

#639. சமாதியின் பயன்


காரியமான வுபாதியைத் தான் கடந்து
ஆரிய காரண மேழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே
.

ஆணவ மலத்தின் மறைப்பினால் ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பம் ஏழு வகைப்படும். சிவனுடைய இறைத் தன்மைகள் ஏழு வகைப்படும். ஜீவனின் உபாதிகளைத் தொலைத்விட்டு சிவனுடைய இறைத் தன்மைகளில் பொருந்தி. மாயையை விலக்கிச் சிவனுடன் பொருந்துவதே சமாதியின் பயன்.

ஜீவனின் ஏழு துன்பங்கள்:

இறையின்மை, சிற்றறிவு, சிறிய அளவு, மாயை, சிறிய ஆற்றல், சுதந்திரம் இன்மை, காணாமை.


இறைத் தன்மைகள் ஏழு:

இறைமை, பேரறிவு, எல்லையின்மை, மாயையின்மை, பேராற்றல்,
முழுச் சுதந்திரம், ஒன்றி உணர்தல்.



 
11. அட்டமா சித்திகள்

11. அட்டமாசித்தி

எட்டு சித்திகள் இவை :


அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம்.


#640 to #643

#640. எட்டு சித்திகளும் கிட்டும்

பணிந்து எண்திசையும் பரமனை நாடித்

துணிந்து எண்திசையும்தொழுது எம் பிரானை
அணிந்து எண்திசையினும் அட்டமாசித்தி
தணிந்து எண்திசைச் சென்று தாபித்தவாறே.

எண்திசைகளிலும் சிவனே உயர்ந்தவன் என்று துணிந்து அந்தப் பரமனை நாடிப் பணிய வேண்டும். எண்திசைகளிலும் சிவனைத் தொழுதல் எட்டு சித்திகளும் தாமே வந்தடையும்.

#641. பிறவி நீங்கும்


பரிசுஅறி வானவர் பண்பன் அடியெனத்

துரிசுஅற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி
பெரிது அருள் செய்து பிறப்பு அறுத்தானே.

தேவர்களின் பக்குவத்துக்கு ஏற்ப அருளை வழங்கும் பண்புடையவன்
சிவன். அவன் திருவடிகளே அடைக்கலம் என்று நான் அடைந்த போது என் குற்றங்கள் நீங்கிப் பரவெளியைக் கண்டேன். அரிய பொருள் என்று எனக்கு எதுவும் இல்லை. எ ட்டு சித்திகளையும் எனக்குத் தந்து என் பிறவிப் பிணியையும் நீக்கினான் சிவன்.

#642. சிவப்பேறு


குரவன் அருளில் குறி வழி மூலப்

பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசை சேரப்
பெரிய சிவகதி பேறு எட்டாம் சித்தியே.

குருவின் அருளால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை ஜீவசக்தியுடன் பொருத்த வேண்டும். அது குறிவழியே வெளியே பாய்வதைத் தடுத்து மேலே ஏற்ற வேண்டும். சாம்பவி அல்லது கேசரி என்ற இரண்டு முத்திரைகளில் ஏதோ ஒன்றைச் செய்தால் சிவகதியைப் பெறலாம் அதன் பயனாக எட்டு சித்திகளையும் பெறலாம்.

சாம்பவி :
கண் பார்வையை மூக்கு நுனியில் நிறுத்தி அனாஹதச் சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல்


கேசரி:

கண் பார்வையை புருவ மத்தியில் நிறுத்தி ஆக்ஞா சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல்.

#643. பரகாயம் பெறலாம்


காயதி பூதம், கலை, காலம், மாயையில்

ஆயாது அகல அறிவு ஒன்று அனாதியே
ஓயாப் பத்தி அதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.

வான் முதலிய பஞ்ச பூதங்கள், கலை,காலம் ,மாயை என்ற தத்துவங்கள் இவற்றில் தோயாமல் அகன்று செல்லவேண்டும். ஆன்ம அறிவுடன் நீங்காத சக்தியைக் கூட்டினால் அழியாத மேலான உடலைப் பெறலாம்.



 
#644 to #647

#644. கர்மயோகம்

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்மமாம் அந்த யோகம்
தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
அரும் இரு நான்காய் அட்ட மாசித்திக்கே.


கர்ம யோகம் இருபதாயிரத்து எண்ணூறு பேதங்களை உடையது. இவைகள் அனைத்துமே உடல் உழைப்புக்கள் ஆகும். அஷ்டாங்க யோகத்தில் இவைகள் அடங்குவதால் அட்டமா சித்திகளை அளிக்கும் வல்லமை கொண்டது கர்ம யோகம்.


#645. கேவல கும்பகம் சித்திக்கும்


மதிதனில் ஈராறாய் மன்னும் கலையில்
உதயம்அது நால் ஒழியர் ஓர் எட்டுப்
பதியும்; ஈராறு ஆண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திகள் ஆமே.


சந்திர நாடியாகிய இட கலையில் இழுக்கப் படும் மூச்சு பன்னிரெண்டு அங்குலம் உள்ளே செல்லும். பிங்கள நாடி வழியாக வெளிப்படும் மூச்சு நான்கு அங்குலம் மட்டுமே. மீதி எட்டு அங்குலம் மூச்சு உள்ளே தங்கும். உலகப் பற்றை விட்டு விட்டு இதை உறுதியாகக் கவனித்து வந்தால் பெரும் சித்திகள் கைக் கூடும்.


#646. சித்திகள் வந்து சேரா!


நாடும் பிணியாகும் நம் சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலை, கல்வி, நீள் மேதை கூர் ஞானம்
பீடு ஒன்றினால் வாயாச் சித்தி பேதத்தின்
நீடும் துரம் கேட்டால் நீள் முடிவு ஈராறே.


நம் உறவினர்கள் நம்மைச் சூழ்ந்து இருந்தால் அதனால் பந்தம் உண்டாகும். கலையறிவு, கல்வி, கூர்மையான அறிவு, நிறைந்த அறிவு இவை நமக்குச் சித்திக்கா! பேதமாக இருந்து கொண்டு பெருகும் ஒலியினைப் பன்னிரண்டு ஆண்டுகள் விடாமல் கேட்டால் நமக்குச் சித்திகள் சித்திக்கும்.


#647. பெறும் பயன்கள் இவை


ஏழா னதில் சண்டவாயுவின் வேகியாம்;
தாழா நடை பல யோசனை சார்ந்திடும்;
சூழான ஓர் எட்டில் தோன்றா நரை திரை ;
தாழான ஒன்பதில் தான் பரகாயமே.

நாதத்தை அறிந்து கொண்டவர் ஏழு ஆண்டுகளில் சண்ட மாருதம் போலச் செல்லும் வேகத்தைப் பெறுவார். நடை தளராமல் வெகு தொலை செல்ல வல்லவர் ஆவார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் நரை திரை இவை தோன்றா. ஒன்பது ஆண்டுகளில் அழியாத, மேலான, ஓர் உடல் கிடைக்கும்.



 
A person should not be too honest..

Straight trees are cut first and honest people are ruined first..

- Great Chanakya

Like sanghu suttalum venmai the straight tree will be first used for making the best part of any thing made of that tree
 
#648 to #650

#648. பெறும் பிற பயன்கள் இவை.

ஈரைந்தில் பூரித்துத் தியான ருத்திரன்
ஏர்வு ஒன்று பன்னொன்றில் ; ஈராறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல்ஏழ் கீழ்ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே.


பத்து ஆண்டுகள் தொடர்ந்த தியானப் பயிற்சியால் கீழே போகும் சக்திகளை மேலே நிரப்பிக் கொண்டு ஒரு ருத்திரன் போல விளங்கலாம். பதினோரு ஆண்டுகளில் எட்டு சித்திகள் சித்திக்கும், பன்னிரண்டு ஆண்டு தியானப் பயிற்சியால் கீழ் உலகங்கள் ஏழு, மேல் உலகங்கள் ஏழு இவற்றில் எதற்கும் சென்று வரும் ஆற்றல் கிடைக்கும்.


#649. யோகியரின் சித்திகள்


தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும், பரகாயத் தேகமும்,
தான் ஆவது பரகாயம் சேர் தன்மையும் ,
ஆனாத உண்மையும், வியாபியும் ஆம் எட்டே.


தானே மிகச் சிறிய அணிமாவாகவும்; உலகத்தைப் போன்ற பெரிய மகிமாவாகவும்; அளக்க முடியாத கனத்தை உடைய கரிமாவாகவும், வானத்தைப் போன்று லேசான லகிமாவாகவும், அழிவில்லாத உடலைப் பெறும் பிராப்தியாகவும், அயலான் உடலை அடைய வல்ல பிரகாமியமாகவும்; உண்மையான ஈசத்துவமாகவும்; உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தும் வசித்துவமாகவும் பெருமையுடன் கூறப்படும் யோகியர் அடையும் எட்டு சித்திகள்.


விளக்கம்:


1. அணிமா: மிகவும் நுட்பமான உடலை எடுத்தல்

2. மகிமா : மிகவும் பருமனான உடலை எடுத்தல்

3. கரிமா : மிகவும் கனமான உடலை எடுத்தல்

4. லகிமா : மிகவும் லேசான உடலை எடுத்தல்

5. பிராப்தி : அழியாத உடலை எடுத்தல்

6. பிராகாம்யம் : விரும்பிய பிற உடலில் புகுதல்

7. ஈசத்வம் : எல்லோருக்கும் மேம்பட்டு இருத்தல்

8. வசித்வம்: எல்லோரையும் தன்வசப்படுத்துதல்


#650. முக்தி சித்திக்கும்


தாங்கிய தன்மையும் தான் அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்று ஓர் குறை இல்லை,
ஆங்கே எழுந்த ஓம் அவற்றுள் எழுந்தும் மிக்கு
ஓங்கிவர முத்தி முந்தியவாறே.

சிவயோகி அணுவின் தன்மையை அடைந்த போதும், பல வேறு உடல்களைத் தாங்கிய போதும், அவற்றை மீண்டும் வாங்கி ஒடுக்கிய போதும் ஒரு மாற்றமும் நிகழாது. ‘ ஓம்’ என்னும் பிரணவ நாதம் மேலே எழுந்து சென்று சஹஸ்ரதளத்தை அடையும் பொழுது யோகிக்கு முக்தி உண்டாகும்.



 
#651 to #654

#651. பிரணவ யோகம் செய்யும் காலம்

முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான் முதலாயிடச்
சிந்தை செய் மண் முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்து எழுமாறே.

கதிரவன் தோற்றம் முதல் உள்ள முப்பது நாழிகைகள் வான், காற்று, தீ, நீர், பூமி என்ற பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு நாழிகையாகக் கொள்ளப்படும். இரவும் முப்பது நாழிகைகள். இதுவும் நிலம், நீர், தீ, காற்று, வானம் என்ற வரிசையில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு நாழிகைகளாகக் கொள்ளப் படும். இதை அறிந்து கொண்டு கதிரவனின் உதயத்துக்கு முன்னும் பின்னும் உள்ள வானத்துக்குரிய ஆறும் ஆறும் ஆகிய பன்னிரண்டு நாழிகைகளை பிரணவ யோகத்துக்குப் பயன் படுத்தினால் கொப்பூழில் உள்ள கதிரவனை மேலேற்றித் தலைக்குக் கொண்டு போக இயலும். இதனால் நாதமும், விந்துவும் வந்து அமையும்.


#652. உடலைக் கடந்த இன்பம் கிடைக்கும்


சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்தும்உற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத்தோரே.

வெளியில் செல்லாமல் அடக்கப்பட்ட மனம் மாறிச் சிவமயம் ஆகிவிடும். முக்தியை ஆராய்ந்து, அதை அறிந்து கண்டு கொண்ட சிவயோகியர் மோனத்தில் இருப்பர். அவர்கள் ஐம்பொறிகளுடன் தொடர்பு அற்றவர்கள். அதனால் மனத் தூய்மை பெற்றவர். அறிவு என்ற வானத்தில் தத்துவங்களைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இருப்பர். அதனால் அவர்கள் உடலைக் கடந்த ஒரு தெய்வீக இன்பம் அடைவர்.


#653. ஒன்பது வாயுக்கள்


ஒத்த இவ்ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்து இவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.


உடலில் இயங்குகின்ற ஒன்பது வாயுக்களும் சமமாக இருக்க வேண்டும். ஏதொன்றும் மிகுதியாகவும் கூடாது. குறையவும் கூடாது. இவ்வொன்பதைத் தவிர தனஞ்சயன் என்ற பத்தாவது வாயுவும் உடலில் உள்ளது. ஒத்து இயங்கும் இவ்வொன்பது வாயுக்களுடன் தனஞ்சயனும் கூடி இயங்கினால் உடலும் உயிரும் நீங்காமால் கூடி இருக்கும்.


உடலில் உள்ள பத்து வாயுக்கள்:

பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்.


#654. தனஞ்சயனின் அவசியம்


இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்;
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்,
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே
.


தனஞ்சயன் என்ற வாயு மற்ற வாயுக்கள் உள்ள நாடிகளில் பொருந்தி இருக்கும் . அது இருநூற்று இருபது மூன்றாவது மண்டலம் ஆகிய அகந்தை மண்டலத்தில் பொருந்தி இருக்கும். தனஞ்சயன் உடலில் இல்லாவிட்டால் அந்த உடல் வீங்கி வெடித்துவிடும். அதனால் எல்லா வாயுக்களும் உடலில் இருந்து நீங்கிய பிறகே தனஞ்சயன் என்னும் வாயு நீங்கும்.


முக்கியமான பத்து நாடிகள்

இடை, பிங்களை, சுழிமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அஸ்தி, அலம்புடை, சங்கினி, குரு
.




 
#655 to #658

#655. தனஞ்சயன் திரிபால் உண்டாகும் நோய்கள்

வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனு முடமாதாய்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.


கழலை, சிரங்கு, குட்டம், சோகை, வாதம், கூன், முடம், கண்ணில் தோன்றும் வியாதிகள் இவை தனஞ்சயன் மாற்றத்தால் உண்டாகும்.

#656. கூர்மன் திரிபால் உண்டாகும் நோய்கள்


கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில் இவ்ஆணிகள் காசம் அவன் அல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணனில் சோதி கலந்ததும் இல்லையே
.

தனஞ்சயன் என்ற வாயுவின் திரிபினால் நோய்கள் உண்டாகும். கண்களில் உண்டாகும் பூக்களும் காச நோயும் தனஞ்சயனால் தோன்றுவதில்லை. கண்ணில் கூர்மன் என்ற வாயு பொருந்தா விட்டால் கண் நோயுண்டாகும். கண்ணில் ஒளியும் இராது.

#657. நாடியி னோசை நயன மிருதயம்

தூடி யளவுஞ் சுடர் விடு சோதியைத்
தேவருளீசன் றிருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந்தாரே.


கண்கள் இதயம் இவற்றில் நாடியின் ஓசை விளங்கும். சிறிய ஒலியை உண்டாக்கும் அந்தச் சுடரை மும்மூர்த்திகளும் இடைவிடாது அங்கே பொருந்தி உணர்ந்திருந்தனர்.

#658. ஒன்பது வாயில்கள்


ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையது ஓர் ஓர் இடம்;
ஒன்பது நாடி ஒடுங்க வல்லர்கட்கு
ஒன்பது வாசல் உலை; நல ஆமே.


உடலில் உள்ள ஒன்பது வாயில்களையும் அடைத்துவிட்டால், மற்ற ஒன்பது நாடிகளும் பத்தாவது நாடியாகிய சுழுமுனையில் சென்று ஒடுங்கும். அங்கனம் அவற்றைப் பொருத்தித் தவம் செய்பவர்கள் அழியாத உடலைப் பெறுவார்கள்.
 
#659 to # 662

#659. குருவின் உபதேசம்

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி, மதி வழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட,
ஆங்குஅது சொன்னோம் அருவழி யோர்க்கே.


குண்டலினி சக்தியான தீயின் கீழே சுழுமுனை செல்லும்படிச் செய்ய வேண்டும். கதிரவன் கலையில் இயங்கும் பிராணனைத் திங்கள் கலையில் செல்லும்படிச் செய்ய வேண்டும். இதை ஏழு உலகங்களையும் தாங்க யோக நெறியில் நிற்பவருக்கு உரைத்தோம்.

#680. சுழுமுனைத் தியானம்


தலைப்பட்ட வாறு அண்ணல்தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்கு உண்ணா வைத்தோர் வித்துஅது ஆமே.


பிரமரந்திரத்தில் விளங்குகின்ற சிவசக்தியரை நாட வேண்டும். வலையில் அகப்பட்ட மான் எங்கும் போகாமல் இருப்பது போல, மூச்சுக் காற்றைச் சுழுமுனையிலேயே செலுத்த வேண்டும். இத்தகைய சுழுமுனைத் தியானம் இதைச் செய்பவருக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் பயன் தரும்.

#661. பிரணவ உபாசனை


ஓடிச் சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்;
தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் காட்டுமே.

மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியே மேலே சென்றால் சஹஸ்ர தளத்தை அடைந்து அங்கே இருக்கும் சிவ சக்தியரை வணங்கலாம். இவ்வாறு வணங்குபவர் அங்குள்ள நாடியின் உள்ளே இருக்கும் நாதத்தை வெளிப்படுத்துவார். அங்கு உண்டாகும் அமுதத்தை அருந்துவார். உடல் என்னும் பாசறையில் குடியிருக்கும் காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் என்ற ஆறு பகைவர்களைச் சிறைப்படுத்துவார்.

#662. ஒன்பது கன்னியர்


கட்டிட்ட தாமரை ஞானத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி ஊடு போய்ப்
பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே.

சஹஸ்ரதளத்துடன் கட்டப்பட்ட சுழுமுனை நாடியில் ஒன்பது சக்தியர் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து ஜீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டு உள்ளனர். ஜீவர்கள் பக்குவம் அடைந்த பிறகு அவ்வொன்பது சக்தியரும் செயல் அற்றுச் சக்தியுடன் பொருந்தி நின்றனர். அப்போது மூலாதாரத்தில் இருந்த குண்டலினி தொண்டைச் சக்கரமாகிய விசுத்தியின் வழியே சென்று புருவ மத்தியில் உள்ள ஆக்ஞை சக்கரத்தை அடைந்து அங்கே முழுச் சக்தியானது.
 
A person should not be too honest..

Straight trees are cut first and honest people are ruined first..

- Great Chanakya

Like sanghu suttalum venmai the straight tree will be first used for making the best part of any thing made of that tree

Thank you for the quotes. But I will rather have them in my thread 'Think or Sink' in the same section than in between the verses of Thiru Moolar.
 
#663 to #666

#663. பராசக்தியே செய்விப்பவள்!
பூரணச் சத்தி ஏழு மூன்று அறை ஆக
ஏர்அணி கன்னியர் எழு நூற்றஞ்சு ஆயினர்
நாரணன், நான்முகன் ஆகிய ஐவர்க்கும்
காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே.

பராசக்தியே ஏழு கன்னியர்களாக ஆவாள். இச்சை, ஞானம், கிரியை இவற்றின் வேறுபாடுகளால் அந்த ஏழு கன்னியர் இருபத்தொரு அழகிய கன்னியர் ஆவார்கள். ருத்திரன், நான்முகன், திருமால், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவருக்கும் காரணமாகி அந்த இருபத்தொரு கன்னியர்களே நூற்று ஐந்து கன்னியர்களாக ஆவார்கள். இவ்வாறு ஐந்து மூர்த்திகளின் அனைத்துத் தொழில்களையும் செய்விப்பவள் பராசக்தி தேவியே ஆவாள்.


#664. நாதத்தில் விளங்குவாய்!


விரிந்து குவிந்து விளைந்த இம்மங்கை
கரந்து உள்எழுந்து, கரந்து அங்கு இருக்கின்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்து எழுவாயு இடத்தில் ஓங்கே.

இவ்வாறு விரிந்து நிற்கும் சக்தியே பிறகு மீண்டும் ஒடுங்கி விடுவாள். பலவகையான போகங்களையும் விளைவிப்பாள். சிவத்துடன் நின்று அதன் பின்னர் மறைந்து ஒடுங்கி விடுவாள். மேலே எழுகின்ற நாதத்தில் நீ ஓங்கி விளங்குவாய்.


#665. விந்துத் தானம்


இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடும் வாயுவும் மாறியே நிற்கும்.
தடைஅவை ஆறு எழும் தண்சுடர் உள்ளே
மிடை வளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

நாதத்தில் ஒடுங்கி விட்டவர்களுக்கு இடைகலை பிங்கலை என்னும் இரண்டும் அடைபட்டுவிடும்.
சுழுமுனை திறந்து கொள்ளும். அவர்களின் சுவாசம் மெல்ல இயங்கும். ஆறு ஆதாரங்களும், ஏழு சக்திகளும் நீங்கிச் சந்திர மண்டலத்தில் புருவ மத்தியில் விந்துத் தானத்தில் அடங்கும்.


#666. சிவன் தன்னை அறியச் செய்தல்


ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடும் மன் உயிருள்ளே
நடங் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே.

உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும். சீவன் வெளி உலக நோக்கம் இல்லாமல் அகத்தின் மீது நோக்கம் கொண்டு விடும். அப்போது உயிரில் கலந்து விளங்கும் ஈசன், சீவனுக்குத் தன்னை வெளிப்படுத்துவான்.




 
#667 to #670

#667. தூண்டா விளக்கு

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிடும்
மாடில் ஒருகை மணிவிளக்கு ஆனதே.

பாயும் இடத்தில் நாத ஒலியுடன் சென்று, அங்கு நிலை பெற்று விளங்கும் சிவ சக்தியரைப் பொருந்தும் சுழுமுனை ஒரு தூண்டா விளக்கு ஆகும். அது பாசறையில் தங்கி இருக்கும் இருள் என்னும் கொடிய பகைவனை அடையாளம் காட்டுகின்றது.


#668. எண் சித்திகள்


அணிமாதி சித்திக ளானவை கூறில்
அணுவி லணுவின் பெருமையி னேர்மை
இனுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குத் தானாதல் என்றெட்டே.


அணிமா முதலிய எட்டு சக்திகள் இவை:

1. அணுவில் அணுவாதல்.

2. பெரியதில் பெரியது ஆதல்.

3. அசைக்க முடியாத கனம் அடைதல்.

4. இறகு போல லேசாதல்.

5. மேலே உள்ள வானத்தைத் தொடுதல்

6. எல்லா பூதங்களிலும் கலந்து எழுதல்.

7. உயிர்களுக்கு எல்லாம் கருத்தாக ஆதல்.

8. எங்கும் தானாக இருத்தல்.


#669. அமுதம் உண்பர்


எட்டாகிய சித்தி யோரெட்டி யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

அட்டாங்க யோகத்தால் அடக்கி ஆள இயலாத மூச்சுக் காற்றை ஒருவர் அடக்கி ஆளலாம். அவர் எட்டுப் பெரிய சித்திகளையும் அடையலாம். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி, சுழுமுனை நாடி வழியே மேலே செல்லலாம் . அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம் இவற்றைக் கடந்து செல்லலாம். சந்திர மண்டலத்தில் உள்ள அமுதத்தையும் உண்ணலாம்.


#670. திரிபுரை சக்தி


சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தால்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திக லெண் சித்தி தானந் திரிபுரைச்
சக்தி அருள்தரத் தானுள வாகுமே.

பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் அடைவிக்கும் அட்டாங்க யோகம். அதைப் பயின்று மேலே செல்லச் செல்ல பலன்கள் பலப்பல கிடைக்கும். எட்டு சித்திகள் கிடைக்கும்; ஞானம் தானே வெளிப்படும்; எண் சித்திகளும் திரிபுரை சக்தியே ஆனதால் அவள் அருளால் சித்தியும், புத்தியும் தாமே கிடைக்கும்.




 
#671 to #673

#671. அணிமா சக்தி

எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டமது உள்ள இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடம்தான் நின்று எட்டுமே.


எட்டு பெரிய சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் பெற்ற ஒருவர் சித்தர் ஆகி விடுவார். இவர் சிவலோகத்தை அடைந்து, தனக்கு மிகவும் விருப்பமான சிவபெருமானுடன் பொருந்தி இருப்பார்.

#672. விரும்பும் உலகம் சேரலாம்!


மந்தர மேறு மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியில் கசடுஅற வல்லோர்க்குத்
தந்துஇன்றி நற்கமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி ஆமே.


மலையாகிய தலையில் சந்திர, சூரிய கலைகளை மாற்ற வேண்டும். சுழுமுனையை அடிக்கப் பட்ட ஒரு முளையைப் போல ஆக்கி விட வேண்டும். விந்துவின் நீக்கம் என்பதே இருக்கக் கூடாது. இப்படிப்பட்டவருக்கு நரம்புகள் இல்லாத ஒரு பிரணவ உடல் கிடைக்கும். அவர் அதன் மூலம் நல்ல உலகத்தை அடைய முடியும். அந்த உலகம் தன்னை அடைந்தவருக்கு எட்டு சித்திகளையும் அளிக்க வல்லது.

# 673. வெல்ல இயலாது


முடிந்திட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமா கைதானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான் நொய்யது ஆகி
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே.

விந்து நீக்கம் இல்லாமல் சேமித்து வைத்துக் கொண்டு ஓராண்டு யோக முயற்சியில் ஈடுபட வேண்டும். அப்போது அணிமா சக்தி கிடைக்கும். அது கிடைத்தால் அந்த சித்தன் மெலிந்த நுட்பமான பஞ்சை விட மிகவும் மெலிந்து இருப்பான், அவனை வெல்ல முடியாது..
 
#674 & #675

#674. இலகிமா

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற ஐயாண்டில் மா லகு ஆகுமே
.

பராசக்தி ஆக்கத்தைத் தருபவள். மூலாதரத்தில் இருந்து மேலே செல்லும் எல்லா தத்துவங்களிலும் அந்த சக்தி தேவையான் காலத்துக்குத் தன்மயமாகி நின்றால் இலகிமா என்னும் சித்தி ஐந்து ஆண்டுகளில் கைவரும்.

#675. சிவ தரிசனம்


மாலகு ஆகிய மாயனைக் கண்டபின்
தான்ஒளி ஆகித் தழைத்து அங்குஇருந்திடும்
பால்ஒளி ஆகிப் பரந்து எங்கும் நின்றது
மேல்ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே.

இலகிமா என்னும் சித்தியைப் பெற்ற ஆன்மா தானே ஒளியாக விளங்குவான். அந்தப் பேரொளியில் திளைத்து இருப்பான். பால் போன்ற ஒளியுடன் பரவி நிற்கும் ஆன்மாவுக்கு அப்போது மேலான சிவ தரிசனம் கிடைக்கும்.
 
#676 to #678

#676. மகிமா

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தத்பொருள் ஆகிய தத்துவம் கூடிடக்
கைப்பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின்
மைப்பொருள் ஆகும் மகிமாவது ஆகுமே.

மெய்யான ஞானத்தை உணர்த்துபவள் சக்தி. இவள் விந்து வடிவானவள். ‘தத்’ என்ற சொல்லால் குறிக்கப்படும் பரம்பொருள் சிவன். இவன் நாத வடிவானவன் . இவ்விருவரும் நாதமும், விந்துவுமாக இணைந்தால் மகிமா என்னும் சித்தி ஒரே ஆண்டில் உள்ளங்கையில் உள்ள ஒரு பொருளைப் போலக் கிடைத்து விடும்.

#677. காலத் தத்துவத்தைக் கடக்கலாம்


ஆகின்ற கால்ஒளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம்
மெனொஇன்ற காலங்கள் வெளியுற நின்றபின்
தானின்ற காலங்கள் தன்வழி ஆகுமே.


இடைகலை பிங்கலை என்ற இரண்டு நாடிகளைப் பெற்றுள்ளது சுழுமுனை. இதன் வழியே சென்று தலையின் மேல் உள்ள ஒளியைக் கண்டுவிட்ட ஒருவருக்கு ஆயுட்காலம் அழியாது. இனி வரும் காலங்களில் மற்ற தத்துவங்கள் எல்லாம் அவர் வழியாகும்.

#678. மகிமா பெற்றவன் மகிமை


தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழி தன்னரு ளாகி நின் றானே.
மகிமா என்னும் சித்தியைப் பெற்ற ஒருவனால் ஞானம் தழைத்து ஓங்கும். அவனால் உலகம் செழிப்பு அடையும். எல்லாப் பொருட்களும் அவன் வயப்பட்டு நிற்கும். அவன் சிவனருள் வயப்பட்டு நிற்பான்.
 
#679 to #682

#679. பிராப்தி

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்

கண்டன பூதப்படையவை எல்லாம்;
கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்திய தாகுமே.


தூலமாகக் காணப் படும் பொருட்கள் அனைத்துமே பராசக்தியிடம் நுண்மையாக ஒடுங்கி இருக்கும். அத்தகைய நுண்மையான ஒளி வீசும் பொருட்களைக் கண்டு அவற்றின் மீது ஓராண்டு காலம் தாரணை செய்துவந்தால் பிராப்தி என்னும் சித்தி சித்திக்கும். அப்போது உலகப் பொருட்கள் எல்லாமே நம்மிடம் பொருந்தி இருப்பதைக் காண இயலும்.


#680. கரிமா


ஆகின்ற மின்ஒளி ஆவது கண்டபின்

பாகின்ற பூவில் பரப்புஅவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே.


அத்தகைய மின் ஒளியைக் கண்ட பின்னர் விரிந்த ஆயிரம் இதழ்த் தாமரையில் உலகப் பொருட்களின் விரிவைக் காண இயலும். அப்போது காலத் தத்துவம் மாறுபட்டு நிற்கும்,. கழிகின்ற காலம் கழியாமல் நிற்கும்.


#681. மின் ஒளியைக் கண்டவர் பெருமை


போவதொன்று இல்லை வருவது தான் இல்லை

சாவது ஒன்றில்லை தழைப்பதுதான் இல்லை
தாமதம் இல்லை தாமே அகத்து இன்னொளி
ஆவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே.


மின் ஒளியைக் கண்டவர் எங்கும் செல்ல வேண்டியதில்லை. எங்கிருந்தும் வர வேண்டியதில்லை. அவருக்கு இறப்பு இல்லை. இறப்பு இல்லாததால் இனிப் பிறப்புமில்லை. முக்குணங்கள் இனி இல்லை. பிரமரந்திரத்தில் உள்ளேயுள்ள சுழுமுனையில் இருக்கும் பல விதமான ஒளிகளும் உண்மையை உணர்வதற்கு இல்லாகும்.


#682.பரகாயம் புகுதல்


அறிந்த பராசக்தி உள்ளே அமரில்

பறிந்தது பூதப்படைஅவை எல்லாம்
குவிந்தவை ஓர் ஆண்டுகூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலும் ஆமே.


தத்துவக் கூட்டங்களை அமைப்பவை பூதக் கூட்டங்கள். பராசக்தியுடன் ஆன்மா பொருந்திருந்தால் பூதக் கூட்டங்கள் நீங்கும். உள்ளம் பராசக்தியின் மீது ஓராண்டு காலம் குவிந்து இருந்தால் பரகாயம் புகுதல் என்னும் சித்தி கைக் கூடும்.




 
#683 to #686

#683. பிரகாமியம்

ஆன விளக்கொளி யாவது அறிகிலர்
மூல விளக்கொளி முன்னே உடையவர்
கான விளக்கொளி கண்டு கொள்வார்கட்கு
மேலை விளக்கொளி வீடுஎளிதாம் நின்றே.


தன்னை விளக்கிக் காட்டும் ஒளி ஆன்மாவிடமே உள்ளது. ஆனால் இதை பலரும் அறியார். மூலாதாரத்தில் மூலக் கனல் ஒன்று உள்ளது. அதை ஒலியாகவும் ஒளியாகவும் மாற்றித் தரிசிக்கக் கற்றுக் கொண்டால் தலைக்கு மேலே உள்ள சிவ ஒளியைக் காண்பது எளிதாகும். அதனால் முத்தி அடைவதும் எளிதாகி விடும்.

#684 . ஈசத்துவம்


நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில்
பண்டைய ஈசன் தத்துவம் ஆகுமே.

சிவ சக்தியர் எப்போதும் ஜீவர்களிடம் நிலை பெற்று இருப்பர். தலைக்கு மேலே உள்ள விந்து மண்டலத்தில், நுண்ணிய பார்வைக்கு மட்டும் புலப்படும் ஒளி அணுக்களை, ஓராண்டு காலம் பாய்ச்சி வந்தால் சதாசிவத் தத்துவம் வாய்க்கும்.

#685. ஈசத்துவம் பெற்றவர் பெருமை


ஆகின்ற சந்திரன் தன்ஒளி யாவான்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான்அவன் ஆமே.


சக்தியின் ஒளியைத் தன் நெற்றியின் நடுவில் அமையப் பெற்றவன், அந்தச் சந்திரனைப் போலவே ஒளி பெறுவான். அந்தச் சந்திரனைப் போலவே குளிர்ச்சி பெறுவான். வளரும் திங்களைப் போல வளர்ந்து அவன் சக்தியும் முழுமை அடைந்து விட்டால், அந்த சீவன் அப்போது சதாசிவனின் நிலையை அடைந்து விடும்.

#686. தமக்குத் தாமே நிகர் ஆவர்


தானே படைத்திட வல்லவன் ஆயிடும்;
தானே அளித்திட வல்லவன் ஆயிடும் ;
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்;
தானே இவன் என்னும் தன்மையன் ஆமே.


ஈசத்துவம் என்னும் சித்தியை அடைந்தவர்கள் தாமே படைப்புத் தொழிலைச் செய்யும் வல்லமை பெறுவார். அவரே காக்கும் தொழிலையும் செய்யும் வல்லமை பெறுவார். அவரே அழிக்கும் தொழிலைச் செய்யும் வல்லமையும் பெறுவார். அப்போது அவருக்கு நிகர் அவரே ஆவார்
 
#687 to #690

#687. சந்திர கலையில் நீல ஒளி

தன்மையது ஆகத் தழைத்த கலையினுள்
பன்மையது ஆகப் பரந்த ஐம்பூதத்தை
வன்மைய தாக மறித்திடில், ஓராண்டின்
மென்மையது ஆகிய மெய்ப்பொருள் காணுமே.

குளிர்ந்த கதிர்களுடன் இருக்கும் சந்திர கலையில் ஒளி அணுக்கள் விளங்கும். பலவகையான பஞ்ச பூதங்களின் ஒளி அணுக்களை வேறு வேறாகக் காணாமல், நீல ஒளியாக ஓராண்டு காலம் கண்டு வந்தால் அப்போது ஆன்மா சிரசின் மேலே ஒரு ஒளியாக விளங்கும்.

#688. வசித்துவம்


மெய்ப்பொருளாக விளைந்தது ஏதெனில்
நற்பொருளாகிய நல்ல வசித்துவம் ;
கைப்பொருள் ஆகக் கலந்த உயிர்க்கு எல்லாம்
தற்பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே.

தாரணை முதலிய யோகப் பயிர்ச்சிகளால் விளையும் நன்மை எது?
அது எல்லோரையும் கவர்ந்திடும் வசித்துவம் என்னும் தன்மையாகும். தன் விருப்பப்படி நடக்கும் உயிர்களுக்கு எல்லாம் அவன் சிவன் போல ஆகிவிடுவான்.

# 689. வசித்துவம் பெற்றவன்


தன்மையதாகத் தழைத்த பகலவன்
மென்மையது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மையதாகப் புலன்களும் போயிட,
நன்மையது ஆகிய நற்கொடி காணுமே.


சிவத்தன்மை பெற்றுவிட்ட சித்தன் சிறப்பு அடைவான். அவன் நுண்ணிய தன் ஆன்மாவையும் அறிந்து கொண்டுவிட்டால், அதன் பின்னர் அவனால் பொன்னொளியுடன் கூடியிருந்தும், ஐம்புலன்களிடமிருந்து உடலை விடுவித்தும், உலகுக்கு நன்மை செய்யும், சதாசிவ நாயகியைக் காண இயலும்.

#690. புவனங்கள் போய் வரலாம்!


நற்கொடி ஆகிய நாயகி தன்னுடன்
அக்கொடியாகம் அறிந்திடில் ஓர் ஆண்டு
பொற்கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
கற்கொடி ஆகிய காமுகன் ஆமே.


சதாசிவ நாயகி நன்மைகளைச் செய்யும் ஒரு மெல்லிய கொடியாவாள். அந்தக் கொடி போன்ற சக்தி தன்னிடம் நிலை பெறுவதாக ஒருவன் ஓராண்டு காலம் தியானம் செய்து வந்தால், அவன் எந்த உலகத்திற்கும் நினைத்த மாத்திரத்தில் போய் வரும் அற்புதமான சித்தியைப் பெறுவா
 
#691 to #694

#691. படைக்கும் ஆற்றல் கிடைக்கும்
காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம்அது ஆயிடும்;
மாமரு உன்இடை மெய்த்திடும் மானன் ஆய்
நாமரு வும்ஒளி நாயகம் ஆனதே.

யாவற்றையும் தன் வயப்படுத்தும் வசித்துவம் என்ற சித்தியை அடைந்த பிறகு, ஆயிரம் இதழ்த் தாமரையில் இருக்கும் தன்மாத்திரையின் ஒளி அணுக்கள் அவற்றின் பெருமைக்கு ஏற்ப உலகங்களாக விரிந்து நிற்கும். அருட்சக்திக்கும், வசித்துவம் கைவரப் பெற்றவரின் சக்திக்கும் எந்த வேறுபாடுமிராது. அது அவனை வாக்கு ரூபமான ஒளித் தன்மை பெற்ற ஒரு நாயகன் ஆக்கி விடும்.

#692. பேரொளியைக் கண்டவர் நிலைமை


நாயகம் ஆகிய நல்லொளி கண்டபின்
தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும்
போய்அகம் ஆன புவனங்கள் கண்டபின்
பேய்அகம் ஆகிய பேரொளி காணுமே.

சிவப் பேரொளியைக் கண்டு தரிசித்தவன் அந்த ஒளியையே தன் வீடாக எண்ணுவான். அதில் மகிழ்ச்சியுடன் குடி இருப்பான். வேறு உலகங்களுக்குச் சென்று அவற்றைக் கண்டாலும், காமம் குரோதம் போன்ற உணர்வுகளுடன் வாழும் ஜீவர்களிடையே வாழ்வதை அவன் சிறிதும் விரும்ப மாட்டான்.

#693. பிரணவ ஒளி


பேரொளி ஆகிய பெரிய அவ்எட்டையும்
பார்ஒளி யாகப் பதைப்பு அறக் கண்டவன்
தார்ஒளி யாகத் தரணி முழுவதும்ஆம்
ஓர்ஒளி ஆகிய கால்ஒளி காணுமே.

பேரொளி ஆகிய இறைவனின் ஒளியைச் சிறிதும் அசைவில்லாமலும், சலனமில்லாமும், உலகத்தில் உள்ள ஒளியைப்போல காணக் கற்றறிந்தவன், ஆன்மாவின் ஒளியுடன் பூமண்டலம் முழுவதிலும் வியாபித்துள்ள பிரணவ ஒளி ஒன்றையே காண்பான்.

#694. நாடிகளின் இயல்புகள்


காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லின்
கால்அது அக்கொடி நாயகி தன்னுடன்
கால்அது ஐஞ்ஞூற்று ஒருபத்து மூன்றையும்
கால்அது வேண்டிக் கொண்டஇவ்வாறே.


சுழுமுனை மின்னொளி போல விளங்கும். பராசக்தியின் ஒளியும் உடன் நிற்கும். சுழுமுனை இடைகலை, பிங்கலை என்னும் இரு நாடிகளை அனுசரித்து இருக்கும். உடலில் உள்ள முக்கியமான பத்து நாடிகள் இவை. இடை, பிங்களை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அஸ்தி, அலம்புடை, சங்கினி, குரு. இவை மேலும் ஐந்நூறு நாடிகளுடன் தொடர்பு உடையன. இங்ஙனம் சுழுமுனையின் ஆளுமை இந்த ஐந்நூற்றுப் பதின்மூன்று நாடிகளிலும் இருக்கும். உயிர் இந்த நாடிகளில் கலந்து இருப்பது இவ்வாறே ஆகும்.
 
#695 to #697

#695. சிவ சக்தியர்

ஆறுஅது ஆகும் அமிர்தத் தலையினுள்
ஆறுஅது ஆயிரம் முன்னூற்றொடுஐஞ்சு உள
ஆறுஅது ஆயிரம் ஆகும்; அருவழி
ஆறுஅதுஆக, வளர்ப்பது இரண்டே.

அமிர்தத்தைப் பெருக்குவதற்கு தலையில் நிரோதினி என்னும் ஒரு கலை உள்ளது.. அங்கே பலவித மாற்றங்களைச் செய்து அமிர்தத்தைப் பெருக்குவதற்கு ஆயிரத்து முன்னூற்று ஐந்து நரம்புகள் உள்ளன. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைக்குச் செல்லும் வழி இதுவே. இதன் வழியே சீவனின் உயிரை ஒம்புவது சிவ சக்தியர்.

விளக்கம்

சந்திர கலைகளில் ஆறாவது கலை நிரோதினி. இந்த நிரோதினி அமைந்த பின்னர் பாசக் கூட்டம் பெருகாது. இதன் இருப்பிடம் நெற்றியின் மேல் பகுதி. நிரோதினி அமைந்த பிறகே தலையில் ஒளி மண்டலம் சிறிது சிறிதாகத் தோன்ற ஆரம்பிக்கும். சிவசக்தியரை நினைப்பதால் திரோதினி அமையும். அமைந்து பாசம் பெருகுவதைத் தடுக்கும். அதற்கும் மேலே பரையின் வியாபகத்துக்கு வழி செய்யும்.

#696. காலத்தைக் கடக்க உதவுபவள்

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டுஅது கால்கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டுஅது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்
திரண்டது காலம் எடுத்தும் அஞ்சே.


சிவதத்துவதில் மகேசுவரத் தத்துவத்துக்கு மேல் சாதாக்கியத்தில் விளங்குவாள் மனோன்மணி என்னும் சதாசிவ நாயகி. இவள் இடகலை, பிங்கலை என்ற இரண்டு நாடிகளின் மீது தலைக்குச் சென்று விளங்குவாள். இந்த நாடிகள் இரண்டும் ஆயிரம் இதழ்த் தாமரையை அடையும் முன்னர் ஆதாரச் சக்கரங்களில் விரிந்துள்ள ஐம்பத்து ஒன்று எழுத்துக்களைக் கடந்து செல்லும். அப்போது ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ நாயகியே யோகி காலத்தைக் கடக்க உதவி செய்வாள்.
காலம் என்பது உடலுக்கே அன்றி உயிருக்கு அல்ல. சதாசிவ வடிவம் தாங்கும் பொழுது காலத்தத்துவத்துக்கு உட்பட்ட உடல் இருக்கும். தலைக்கு மேலே போய் உருவத்தைக் கடந்து விட்டால் காலம் என்பதே இல்லாமல் போகும்.

#697. சதாசிவ நாயகி


அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
அஞ்சு அது அன்றி, இரண்டுஅது ஆயிரம்
அஞ்சு அது களம் எடுத்துளும் ஒன்றே
.

பத்து திசைகளிலும் பத்து முகங்களை உடையவள் சதாசிவ நாயகி. அவளுக்குப் பத்து வாயுக்களும் பத்துக் கருவிகள் ஆகும். ஐந்து முகங்கள் கொண்ட சக்திக்கு கவிழ்ந்த ஆயிரம் இதழ் தாமரை, நிமிர்ந்த ஆயிரம் இதழ்த் தாமரை என்னும் இரண்டும் கருவிகள் ஆகும். உருவம் அற்ற நிலையில் அந்த சக்தி பத்து வாயுக்களையும், பத்து திசைகளையும் கடந்த வெளியாக விளங்குவாள்.
 
#698 to #700

#698. பராசக்தியை நினைக்க வேண்டும்

ஒன்றுஅது ஆகிய தத்துவ நாயகி
ஒன்றுஅது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்,
ஒன்று அது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்று அது காலம் எடுத்துளும் உன்னே.

அகன்று விரிந்து பரந்த ஒரே சக்தியாகிய பராசக்தி கவிழ்ந்த ஆயிரம் இதழ்த் தாமரையில் காலத்தில் விளங்குபவள் ஆக இருப்பாள்..நிமிர்ந்த ஆயிரம் இதழ் தாமரையில் அவளே காலத்தைக் கடந்தவளாக இருப்பாள். அவளை எப்போதும் உன் நினைவில் கொள்ள வேண்டும்.


#699. காற்று அடங்கும் வகை


முன்எழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னூறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னூறும் ஐம்பதொன்றுடன் அஞ்சுமாய்
முன்னூறு வாயு முடிவகை ஆமே
.


தலையின் முன் பக்கத்தில் விளங்கும் நிமிர்ந்த ஆயிரம் இதழ்த் தாமரை. அதில் விளங்குவாள் பராசக்தி. அந்த சக்தியுடன் முன்னோக்கிப் பாயும் வாயுக்கள் முடிவுறும் வகை இதுவே ஆகும். ஐம்பத்தொன்று எழுத்துக்களைக் கொண்ட, ஆறு ஆதாரச் சக்கரங்களை இயக்கிக் கொண்டிருத்த, ஐந்து முகங்கள் கொண்ட சக்தியானவள் பராசக்தியாகும் பொழுது, முன்பு விளங்கிய வாயுக்கள் எல்லாம் அடங்கி விடும்.


#700. வாயு அடங்குதல்


ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொடு ஒன்பது
மாய்வரு வாயு வளப்புள் இருந்ததே.


ஆராய்ச்சியினால் அறிய முடியாதவள் பராசக்தி. ஆராய்ந்து காற்றின் அளவைக் கூறப் போனால், மூச்சுக்காற்று ஒரு நாளைக்கு ஐந்நூற்று முப்பது ஒன்றாகக் குறைந்துவிடும் போது பராசக்தியுடன் இரண்டறக் கலக்கும்.


( இத்தகைய ஒரு நீண்ட மூச்சுக் காற்றின் நீளம் ஏறக் குறைய நூற்று அறுபது வினாடிகள் !!!)



 
#701 to #703

#701. பிரணவத்துடன் பொருந்தும்

இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கும் நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

ஒளிமண்டலம் ஆகிய பெரிய செல்வத்தில் விளங்கும் சிவனிடம் செல்லும் போது, மூச்சுக் காற்று இருநூற்று முப்பத்தி எட்டாகக் குறைந்து விடும். அது பிரணவத்துடன் பொருந்தி விடும்.


(இந்த நீண்ட ஒரு பெருமூச்சின் நீளம் ஏறக்குறைய ஆறு நிமிடங்கள்! )


#702. மூலத்தீயே பேரொளியாகும்


எழுகின்ற ஜோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பான்அது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்தது இவ்வாறே.


மூலாதாரத்திலிருந்து எழுகின்ற ஜோதியுள் சக்தி உறைவாள். சுழுமுனை வழியே பாய்ந்து செல்லும் மூச்சுக் காற்றின் இடம் எது என்று அறிவீரா? எழுநூற்று இருபத்தொன்பது நாடிகளிலும் அது கலந்துள்ளது. நான்கு இதழ்த் தாமரையாகிய மூலாதாரத்தில் எழும் ஒளியே இந்தப் பேரொளியாகின்றது.


#703. மூச்சின் இயக்கம் நின்றுவிடும்


ஆறுஅது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழுஅது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டு அது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே


சந்திர கலைகளுள் ஆறாவது கலையாகிய நிரோதினியை, நெற்றியின் மேல் பகுதியில் தியானித்து வந்தால், புகை போன்ற ஒரு நிறம் தோன்றும். அது ஏழாவது சந்திர கலையாகிய நாதத்தைப் பெருக்கி அதன் மூலம் யோகியின் ஆனந்தத்தை இரு மடங்கு ஆக்கும். எட்டாவது கலையாகிய நாதாந்தத்தில் மனம் எண்ணுவதை விட்டு விட்டு உணருவதை மட்டும் மேற்கொள்ளும். ஒன்பதாவது கலையாகிய சக்தி கலையில் உடலை இயக்கி வந்த மூச்சுக் காற்று அடங்கி விடும்.


பதினாறு சந்திர கலைகள்:


1. அகரம். 2. உகரம். 3. மகரம். 4. விந்து. 5. அர்த்த சந்திரன். 6. நிரோதினி.

7. நாதம். 8. நாதாந்தம். 9. சக்தி. 10. வியாபினி. 11. வியோமரூபிணி . 12.

அகந்தை. 13. அநாதை . 14. அநாசிருதை. 15. சமனை. 16. உன்மனி



 
#704 to #707

#704. சிவமாகி விடும் யோகி

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான்ஆம் சகமுகத்து
உந்தி சமாதி உடைஒளி யோகியே.

நிமிர்ந்த ஆயிரம் இதழ் தாமரையில் சந்திரகலை, சூரியகலை ஆன்மா என்னும் மூன்றுமே விளங்கும். உலகில் உயிருடன் வாழும்போதே சீவ ஒளியைச் சிவ ஒளியுடன் பொருத்திச் சமாதி நிலையை அடைந்த யோகியால் மட்டுமே சிவம் ஆகும் தன்மையை அடைய முடியும்.

#705. யோகியர் அறிவர்.


அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
சிணங்குற்ற வாயார் சித்தி தூரம் கேட்டல்
நுணங்கற்றி ரோதல்கால் வேகத்து நுந்தலே.


ஆசையை அழிப்பது, சுற்றத்தினரிடமிருந்து விலகி இருப்பது, பணிவைத் தருகின்ற சிவஞானத்தை அதிகரிப்பது , பேச்சைச் சுருக்குவது, தொலைவில் நடப்பதைக் கேட்பது, நுண்மையாக மறைந்து இருப்பது, உடலில் காற்றை மேலே செலுத்துவது இவை யோகியர் செய்கின்ற சில சாதனைகள்.

#706. யோகியர் அறிவன


மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் திருவுரு வாதன் மூவேழங்
கரனுறு கேள்விக் கணக்கறி ந்தோனே


இறப்பு, மூப்பு இவற்றைக் கடப்பது; அயல் உடலில் புகுவது; இறந்தவருக்குப் பொன்னுலகத்தை அளிப்பது; தனக்குப் பிரணவ உடலைப் பெறுவது; மூண்டு எழுகின்ற சிவ சூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் அடைவது; இவை யோகியர் புரிய வல்ல சில சாதனைகள் ஆகும்.

#707. தலயாத்திரை தேவையில்லை!


ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாத னிருந்த நகரறி வாரே.


கடல் சூழ்ந்த இந்த உலகை வலம் வந்து கால் தேயத் தலயாத்திரைகள் செய்யத் தேவையில்லை. நம் தலைவன் எங்கும் இருக்கின்றான் என்றுணர்ந்து அவன் மேல் அன்பு கொண்டவர்கள் அவனை எங்கும் வழிபட்டு இன்பம் அடைவர்.
 
#708 to #711

#708. பரைபரன் பாதமே.

மூல முதல் வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சக்தி பரைபரன் பாதமே.


மூலாதாரத்துக்கும் மேலே உள்ள சுவாதிஷ்டானத்தில் நான்முகன் இருக்கிறான். அதற்கும் மேலே மணிபூரகத்தில் திருமால் இருக்கிறான். அதற்கும் மேலே அநாஹதத்தில் உருத்திரன் இருக்கிறான். அதற்கும் மேலே நெற்றி முதல் தலை உச்சி வரையில் பரந்துள்ளான் சிவனின் அம்சமாகிய சதாசிவன். அதற்கும் மேலே பரவிந்து, பரநாதம், நாதாந்தம் இவற்றைக் கடந்தது இருப்பது அருள் புரியும் சிவசக்தியின் இருப்பிடமாகும்.

#709. ஆனந்தம் மேவும் யோகம்


ஆதார யோகத்து அதிதே வொடும் சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி ஈரெண் கலை செல்ல , மீதுஒளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.


ஆறு ஆதாரங்களுக்கும் உரிய பிரமன் முதலான தேவதைகளுட ன் பொருந்திய பின்னர், இன்னும் மேலே செல்லும் பராத்பரை, மேலான பரனொடு பொருந்துகின்றாள். அப்போது பதினாறு கலைகளான பிரசாத நெறியில் விளங்கும் ஒளியில், வாக்கும் மனமும் இல்லாத ஒரு நிலை ஏற்படும். மனோ லயம் அடைந்து எண்ணங்கள் அற்றுப் போகின்ற அந்த உயர்ந்த நிலையே ஆனந்த யோகம் ஆகும்.

#710. வீடுபேறு அடையலாம்


மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித்
துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
விதி அது செய்கின்ற மெய்யடியார்க்குப்
பதி அது காட்டும் பரமன் நின்றானே.


இடைகலை, பிங்கலை பொருந்தியுள்ள சுழுமுனையின் உச்சியில் நான்முகன் முதலிய தேவர்கள் சிவனை வணங்குவர். ஆனால் சித்தர்கள் இடைகலை, பிங்கலை இரண்டையும் ஒடுக்கி விட்டுப் பிரசாத நெறிப்படி இறைவனைத் தேடித் செல்வர். இத்தகைய அடியவருக்கு முக்தியை அளித்து இறைவன் அருள் புரிவான். இத்தகைய முத்தரைச் சித்தரை நான்முகன் போன்ற தேவர்களும் வணங்குவர்.

#711. சிவனை அறிந்தால் நமன் இல்லை!


கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான்ஆவர்;
மட்டு அவிழ் தாமரை யுள்ளே மணம்செய்து
பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டுஇட்டு
நட்டு அறிவார்க்கு நமன்இல்லை தானே.

மூச்சுக் காற்றைக் கட்ட வல்லவர் எங்கும் மறைந்து எல்லா இடங்களிலும் இருக்கும் ஈசத்துவத்தை அடைந்து விடுவர். தேன் மிகுந்த தாமரையாகிய சுவாதிஷ்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை உண்டு பண்ணுகிறது. ஐம்பொறிகளின் அறிவு நீங்கி, உச்சித் துளைக்குச் சென்று, சுழுமுனையில் நின்று, அங்கே நடனம் புரியும் சிவனை அறிந்து கொண்டவர்க்கு நமன் இல்லை என்று அறிவீர்!
 
12. கலை நிலை

சந்திர கலை, சூரிய கலை, அக்கினிக் கலை இவை இயங்கும் முறையைக் கூறுவது.

#712 to #714


#712. உயிரை அழியாது காக்கும்

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில்
காதல் வழி செய்து கங்கை வழிதரும்
காதல் வழி செய்து காக்கலும் ஆமே.


காதல் வழியினைப் படைத்தவன் முக்கண்ணன். அந்த சிவனைக் காதலுடன் இரண்டு கண்களையும் மேலே செலுத்தி நோக்கினால், காதல் வழியான கங்கை வெள்ளம் பெருகும். அப்படிக் காதல் செய்வது நம் உயிரை அழியாமல் காக்கும்.

சந்திர கலை சூரிய கலை ஆகிய இரண்டு கண்களையும் மேலே செலுத்தி நோக்க வேண்டும். தலையில் உள்ள திரிவேணி சங்கமம் இது:

இடைகலையை கங்கை என்றும், பிங்கலையை யமுனை என்றும் , சுழுமுனையை சரஸ்வதி என்றும் நூல்கள் கூறும்.


#713. கருத்துற நிற்க வேண்டும்


காக்கலு மாகும் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்த நல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே.


நமது அந்தக்கரணங்கள் நான்கு ஆகும். அவை முறையே மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்பன. இவரைப் பாச வழியில் செலுத்தினால் உலக வாழ்வில் மேலும் மேலும் அழுந்தி விடுவோம். ஆனால் இவற்றைப் பதியாகிய சிவன் வழியில் செலுத்தினால் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். சந்திர கலைகள் பதினாறும் பரந்து நிற்குமாறு அவற்றையும் காக்க இயலும். பாசத்துக்கு முக்கிய காரணம் நம் மனம். இது சிவ ஒளியைப் பற்றிக் கொள்ளும் பொழுது பிராண வாயுவும் சிவ ஒளியில் சேர்ந்து கொண்டு விடும். எனவே எப்போதும் சிவன் திருவடிகளில் கருத்தை ஊன்றி நிற்க வேண்டும்.


#714. சலனம் அற்ற மனம்


நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலை வழி நின்ற கலப்பை அறியில்
அலைவுஅறவு ஆகும் வழி இது ஆமே.


சுழுமுனையில் செல்லும் வாயு நிலைத்து நிற்கும். அது காற்று இல்லாத இடத்தில் வைத்த ஒரு தீபத்தைப் போலவும், அசைவற்றை மலையைப் போலவும் நிலையாக இருக்கும். சந்திர கலைகள் பதினாறிலும் சிவ சக்தியர் பொருந்தியுள்ளனர். இதை அறிந்து கொண்ட பின்னர் நம் மனம் சிறிதும் சலனமற்று அசையாமல் நிற்கும்.







 
#715 to #717

#715. விடையில் ஏறி வீற்றிருப்பான் சிவன்

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றில் ஏறியே வீற்றிருந் தானே.


எவ்விடத்திலும் நிறைந்து நிற்பவன் பூத நாயகனாகிய சிவன். அவனைச் சிறு சிறு நாடிகளின் வழியே சென்று தேடாமல், நடு நாடியகிய சுழுமுனை வழியே சென்று தேட வேண்டும். மூச்சுக் காற்று என்ற பிராணன் சுழுமுனையில் பொருந்தி நிற்கும் பொழுது, அந்தக் கதிர்சடையோன் சிவனும் விந்து மண்டலம் என்ற விடையில் ஏறி அமர்ந்தபடி காட்சி தருவான்.


#716. காலத்தை உணரார்.


இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே.

சமாதியில் பொருந்தி இருக்கும் காலத்தை ஒரு நல்ல யோகி உணர மாட்டான். பெருகும் காலத்தின் பெருமையை எதிர் நோக்கி இருப்பான் . சுழுமுனையில் ஒன்றி இருக்கும் ஆயிரம் இதழ்த் தாமரையில் பிராணனைப் பொருந்தி இருக்கச் செய்து விட்டுச் செருக்கு என்பதே இல்லாமல் இருப்பவனே நல்ல யோக சாதனை செய்பவன்.


#717. உடலில் நடக்கும் ரசவாதம்


சாதக மான அத்தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதகமாக விளைந்து கிடக்குமே.

இங்ஙனம் சாதகமான தன்மையை ஆராய்ந்து பெருந்தவமான அந்த வழிபாட்டைச் செய்யுங்கள். பிராண வாயுவை ஆயிரம் இதழ்த் தாமரையில் புகுத்தினால் உடலில் ரசவாதம் நிகழும். உடலில் உள்ள குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும். உடல் புடமிட்ட பொன்னைப் போல ஆகிவிடும்.


(அப்போது சாதகனின் ஆவியும் சிவனாகவே மாறிவிடும்)



 
Back
Top