Quotable Quotes Part II

4. ஆதனம்

4. ஆதனம் = இருக்கை
இதில் யோகத்தை மேற்கொள்வதற்குத் தகுந்த இருக்கை நிலைகள்
மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிக் கூறப்படும்.

#558 to #560

#558. சுவத்திகாசனம்

பங்கயம் ஆதிப் பரந்தபல் ஆதனம்
இங்குள வாம் இருநாலும் அவற்றினுள்
சொங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.


பத்மாசனம் முதலிய பல ஆசனங்கள் உள்ளன. அவற்றில் எட்டு ஆசனங்கள் மிக முக்கியமானவை. சோர்வு அடையாமல் சுவத்திக ஆசனத்தில் பொருந்தி இருக்கும் திறமை பெற்றவன் ஒரு நல்ல தலைவன் ஆவான்.

#559. பத்மாசனம்


ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்டு
ஆர வலித்ததன் மேலவைத் தழகுறச்
சேர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.


ஒரு பக்கம் அணைந்த காலை தொடையின் மேல் ஏற்றி நன்கு இழுத்து வலது தொடையில் இடது காலையும் இடது தொடையில் வலது காலையும் வைக்க வேண்டும். இரு தொடைகளின் நடுவில் இரு கைகளையும் மலர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இதுவே உலகம் போற்றும் பத்மாசனம் ஆகும்.

(மூக்கு முனையில் பார்வையைப் பதித்து, மார்பில் முகவாய்க் கட்டையைப் பதிக்க வேண்டும்)

#560. பத்திராசனம்


துரிசுஇல் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உருகியிடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெரும் அது பத்திராசனமே.


குற்றம் இல்லாத வலக்காலை இடது பக்கம் தொடையின் மீது வைக்க வேண்டும். கைகளை முழங்கால்களின் மீது நீட்ட வேண்டும். தளரும் உடலைச் செம்மையாக இருத்த வேண்டும். இதுவே பத்திராசனம்.





 
#561 to #563


#561. குக்குட ஆசனம்


ஒக்க அடி இணை உருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கைதனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.


பத்மாசனத்தில் சொல்லப் பட்டது போல இரண்டு பாதங்களையும் தொடைகளின் மேல் ஏற்றி வைக்க வேண்டும். கணுக் காலுக்கும் தொடைக்கும் இடையே இரு கைகளையும் நுழைத்துத் தரையில் பதிக்க வேண்டும். முக்கி உடலை மேலேற்றி முழங்கை வரையில் தூக்க வேண்டும். சம நிலை அறிந்து கொண்டு உடல் அசையாதபடி இருத்தல் குக்குட ஆசனம் ஆகும்.


#562. சிம்மாதனம்


பாதம் முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுறக்
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச்
சீர்திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.

அமர்ந்து பாத நுனிகளை நிலத்தில் ஊன்ற வேண்டும். கைகளை முழங் கால்களின் மீது நீட்ட வேண்டும். வாயை அகலத் திறந்து கொண்டு கண் பார்வையை மூக்கின் நுனியில் இருத்த வேண்டும். இதுவே சிங்க ஆசனம் ஆகும்.


#563. ஆதனங்கள் பல


பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் மோரேழும்
உத்தமு மாமுது வாசன மெட்டெட்டுப்
பத்தோடு நூறு பல்லாசனமே.

பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சோத்திரம், வீர, சுகாதனம் என்ற ஏழும் மேலானவை. இவ்வண்ணம் நூற்று இருபத்தாறு வகைப்பட்ட ஆசனங்கள் உள்ளன.



 
5. பிராணாயாமம்

5. பிராணாயாமம்
பிராண வாயுவைக் கட்டுப் படுத்துவது பிராணாயமம் ஆகும்.
ஏதாவது ஒரு ஆசனத்தில் இருந்தவாறு இதைச் செய்ய வேண்டும்.


#554 to #556

#564. பிராண ஜெயம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.


ஆன்மா ஐம் பொறிகளின் தலைவன். உடலுக்கும் ஆன்மா தலைவன். அந்த ஆன்மா உய்வதற்கு உதவிடவும் மனம் என்னும் குதிரையைக் கட்டுப் படுத்தவும் பிராணன் என்ற ஒன்று உள்ளது. உடலைப் பற்றாமல் அகண்டதைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை வயப்படும். உடலைப் பற்றி நிற்பவர்களுக்கு அவை வசப்படா.

#565. குருவருள் வேண்டும்


ஆரியன் நல்ல குதிரை இரண்டு உள,
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.


மனம் என்னும் ஆரியனுக்கு உள்ளன இரண்டு குதிரைகள். அவை பிராணன் அபானன் என்பவை
ஆகும். அவற்றைச் வீசிப் பிடிக்கும் உபாயத்தை அறிவது மிகவும் கடினம். பிராண ஜெயம் பெற்றுள்ள குருநாதரின் அருள் கிடைத்தால் அவ்விரு குதிரைகளையும் சேர்த்துப் பிடித்து பிராண ஜயத்தை அடைய முடியும்

#566.சோம்பல் நீங்கும்


புள்ளினு மிக்க புரவியை மேல்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களி தரும்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் முணர்வுடையோர்க்கே.

பறவையை விட வேகமானது பிராணன். அது சிரசை நோக்கிச் செல்லும் பொழுது கள் அருந்தாமலேயே மனிதனுக்கு மகிழ்ச்சி ஏற்படும். சோம்பல் மறைந்துவிடும். சுறுசுறுப்புத் தோன்றும். பிராணனும் மனமும் சிரசை நோக்கிப் பாயும். மனம் உடைய மனிதருக்கு இந்த நன்மையைக் கூறினேன்.

 
#567 to #570

#567. பிறவி நீங்கும்

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடை மாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் அடைபேறு பெற்று உண்டீர் நீரே.

நாமங்களும் ரூபங்களும் வேறு வேறான உலகத்தை எண்ணாது இறைவனை எண்ணி இருந்தால் மனமும் பிராணனும் கட்டுக்குள் அடங்கும். அப்போது பேச்சு இராது. பிறப்பு இறப்பு என்பவை இல்லாமல் போகும். பிராணன் கீழ் நோக்கிச் செல்லும் பொழுது பேச்சு உண்டாகும். பிராணன் ஒடுங்காதவர் பிறப்பு இறப்பு இவற்றில் சிக்கி உழல்வர்.

#568. பிராணாயாமம் செய்யும் விதம்


ஏறுதல், பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபது நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுத லொன்றின்கண் வஞ்சகமாமே.

பூரகம்: பதினாறு மாத்திரையளவு இடது நாசித் துவாரத்தால் காற்றை உள்ளுக்கு இழுத்தல்.
கும்பகம்: இழுத்த காற்றை அறுபத்து நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்துதல்
ரேசகம்: வலது நாசித் துவாரத்தால் நிறுத்திய காற்றை மெல்ல வெளியேற்றுவது .
இதற்கு மாறாக வலது நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து இடது நாசித் துவாரத்தின் வழியே வெளியேற்றுவது வஞ்சனை ஆகும்.

#569. மாறாத இளமை


வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனுமாமே.


காற்றை இழுத்துத் தன் வயப்படுத்திப் பிராணாயாமம் செய்தால் உடல் பளிங்கைப் போலத் தூய்மை அடையும். முதுமை எய்தினாலும் தோற்றத்தில் இளமை நிலவும். குருவின் அருளையும் பெற்று விட்டால் அவன் உடல் காற்றை விட மென்மையானதாகி விடும். அவன் எங்கும் செல்லும் வல்லமை பெற்று விடுவான்

#570. இடகலை தரும் சிறப்பு


எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கிக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.


எந்த இடத்தில் பிராணாயாமம் செய்தாலும் இடது நாசி வழியாகவே பூரகம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் உடலுக்கு அழிவு என்பதே இல்லை. கும்பகம் செய்து பிராணன் மேலே செல்லும் அளவுக்கு ஏற்பச் சங்க நாதம் ஏற்படும். மேன்மைகள் கிடைக்கும்.
 
#571 to #574

#571. கும்பகத்தின் பயன்.

ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.


இடைக்கலை பிங்கலை வழியாகக் காற்றை உள்ளே இழுத்துப் பூரித்துக் கும்பகம் செய்யும் முறையை அறிந்தவர்கள் இல்லை. அங்ஙனம் கும்பகம் செய்யும் முறையினை அறிந்தவர் யமனின் வருகையை விலக்கும் ஆற்றலைப் பெறுவார்.

#572. அருள் பெறலாம்


மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.


தொண்டை, மூலாதாரம், விலாப் பகுதிகள் ஆகியவை காற்றால் நிரம்பும் வண்ணம் செய்ய வேண்டும். ரேசகத்தால் உறுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பதியும்படிச் செய்ய வேண்டும். வயிற்றில் கும்பகம் செய்து கொண்டு வந்தால் ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

#573. கும்பகத்தின் அளவு


வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏம்உற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.


இடக்கலை வழியே பதினாறு மாத்திரை பூரகம் செய்ய வேண்டும். பிங்கலை வழியே முப்பத்திரண்டு மாத்திரை ரேசகம் செய்ய வேண்டும். கும்பகம் அறுபத்து நான்கு மாத்திரைகள் செய்ய வேண்டும். காற்றை வெளியே விட்ட பின்பு காற்றை மீண்டும் உட்கொள்ளாமல் அறுபத்து நான்கு மாத்திரைகள் இருக்க வேண்டும்.

#574. காலனைக் கடக்கலாம்


இட்டத் தவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப்படத் தச நாடியும் பூரித்து,
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே.


இவ்வுடல் தளர்ச்சி அடையாமல் இரேசகம் செய்ய வேண்டும். பத்து நாடிகளும் விம்மும்வண்ணம் காற்றை உள்ளே இழுத்து நிரப்ப வேண்டும். பிராணன் அபானன் இரண்டும் சேர்ந்து நேராய் நிமிர்ந்து இருந்தால் யம பயம் இராது.

தச நாடிகள்:
சுத்தி, அலம் புடை, இடை, காந்தாரி, குரு, சங்கினி, சிங்குவை, சுழுமுனை, பிங்கலை, புருடன்.


பிராணன் அபானன் கும்பித்தல்:
மூலாதாரமும் தொண்டையும் நெருக்குண்ணலால், பிராணனும் அபானனும் நெருக்குண்டு சுழுமுனை திறந்து இருத்தல்

 
#575 to #577

#575. உடலில் மாற்றம் தோன்றும்

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்படவுள்ளே நின்மலமாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.


உயிர்ப்பாக வெளியே திரிகின்ற காற்றை முறையாக உடலின் உள்ளே கும்பகம் செய்து தூய்மைப் படுத்தினால், உடலில் ரத்த ஓட்டம் நன்றாகும். உடல் சிவந்த நிறம் அடையும். தலை முடி நன்கு கறுக்கும். ஒளி வடிவான ஆத்மா உடலில் நிலையாக நிற்பான்.

#576. திருவைந்தெழுத்து


கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின் கோல அஞ்செழுத்து ஆமே.


குழந்தையாக இருக்கும் போது பிராண சக்தி பன்னிரெண்டு விரல் அளவு உடலின் உள்ளே சென்றும் புகுந்தும் இருந்தது . வயது முதிரும் பொழுது பிராண சக்தி வெறும் எட்டு விரல் அளவே செயல்படுகின்றது. தொண்டைக்கு மேலே நான்கு அங்குலம் தலைக்குள் செல்வதில்லை. தடைப்பட்ட அந்த நான்கு விரல் அளவு தலையில் செல்லுமாறு பிராணாயாமப் பயிற்சி செய்தால் அவர் திருவைந்தெழுத்தின் வடிவத்தைப் பெறுவார்.

ஐந்தெழுத்து: அ , உ , ம , நாதம், விந்து.

#577. துரிய நிலை


பன்னிரண் டானைக்குப் பகலிர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாக னறிகிலன்
பன்னிரண் டானையைப் பாக னறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகலிர வில்லையே.


பன்னிரண்டு விரல் அளவுச் செயல்படும் பிராணன் என்னும் கதிரவனுக்குப் பகல், இரவு என்ற கால பேதங்கள் உண்டு. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாயும் பிராணனை ஆன்மா அறிவதில்லை. கீழே பாயாமல் மேலே தலையில் பாயும் பிராணனை ஆன்மா அறிந்து கொள்ளும் அப்போது இரவு பகல் என்னும் பேதம் இன்றிக் கதிரவன் எப்போதும் ஒளி வீசுவான். அப்போது நாம் இரவு பகல் அற்ற துரிய நிலையில் இருக்கலாம்.
 
6. பிரத்தியாகாரம்

6. பிரத்தியாகாரம்

வெளி நோக்கிச் செல்லும் மனத்தை அடக்கி உள்ளேயே நிறுத்துவது பிரத்தியாகாரம்.

இது அடயோகம், இலய யோகம், நியமம், ஆசனம், இலம்பிகா யோகம், மந்திர யோகம், ராஜ யோகம், சிவயோகம் என்னும் பல வகைப்படும்.


#578 to #580

#578. சிவனை உணரலாம்

கண்டு கண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ள குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே.

வெளியே சென்று பழக்கப்பட்டுவிட்ட மனதை உடலின் உள்ளேயே பொருந்தும்படிச் செய்தால் சிறிது சிறிதாக மன இருள் விலகும். எங்கும் எப்போதும் மறைகளால் தேடப்படும் பரம்பொருளை நம் உடலின் உள்ளேயே நம்மால் உணர முடியும்.

#579. மனத்தை மந்திரம் உள்ளிழுக்கும்


நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்த பின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே.

குண்டலினி சக்தி நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத் தொலைவில் மூலாதாரத்தில் உள்ளது. அதை எழுப்பி மேலே செலுத்தும் பிரசாத மந்திரத்தை எவரும் அறியவில்லை. அந்த மந்திரத்தை நாம் அறிந்து கொண்ட பின்னர் ஈசன் நாத மயமாக நம் தலையில் விளங்குவான்.

#580. செழுஞ்சுடர்


மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலினி உள்எழும் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே.

குண்டலினி சக்தி மண்டலமிட்டு இருக்கும் இடம் எது?

குண்டலினி மூலாதாரத்துக்கு இரண்டு விரல் அளவு மேலே இருக்கும். யோனிக்கு இரண்டு விரல் அளவு கீழே இருக்கும். மண்டலமிட்டு வட்ட வடிவமான குண்டலினியில் எழும் செஞ்சுடர் கொப்பூழுக்குக் கீழே நான்கு விரல் தொலைவில் உள்ளது. இது தலை உச்சியில் இருக்கும் பிரமதந்திரம் என்னும் தொளை வரையில் செல்லக் கூடியது.



 
#581 to #582

#581. அழியாத உடல்

நாசிக்கு அதோமுகம் பன்னிரண்டு அங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப் பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லையாகுமே.

நாசிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத் தொலைவில் இதயம் உள்ளது. மனத்தை இழுத்து அந்த இதயத்தின் மேல் பொருத்தி செழுஞ்சுடரை நினைக்க வேண்டும் அப்போது அஷ்ட மாசித்திகளும் அரச யோகமும் சித்திக்கும் . இவ்வகை தியானம் உடல் அழியாமல் பாதுகாக்கும்.


#582. ஆனந்தப் பரவசம்


சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடின்
கோதுஇல் பரானந்தம் என்றே குறிக் கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலஒளி எய்தினால்
ஓதிய தன் உடல் உன்மத்தம் ஆமே
.


இரண்டு மின்னற் கொடிகள் பின்னிக் கொண்டு ஓடுவது போல ஓர் ஒளி தோன்றினால் அது குற்றமற்ற மேலான ஆனந்தத்தைத் தரும். நிலவின் ஒளி கழுத்துப் பகுதியில் தோன்றினால், பிரத்தியாகரப் பயிற்சி செய்பவனின் உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும்.


 
# 583 to #587

மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே


மூலத் துவாரம் என்பது சுழிமுனையின் நுழை வாசலில் இருக்கும் துவாரம்
மேலைத் துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியின் உச்சியில் இருக்கும் துவாரம்:
சுழு முனையின் நுழைவுத் துவாரத்தை, குருவின் உபதேசப்படிப் பூட்டிக் கொண்டு அசைவுகள் எதுவும் இன்றி இருப்பாய் சுழு முனையின் உச்சி துவாரத்தில் மனத்தை நிலை இருத்துவாய். கண்கள் திறந்து இருக்க, வெட்ட வெளியை
ப் பார்த்தும் பாராமல் இருப்பாய்! இங்ஙனம் சுழுமுனையில் மனமும் கண்களும் லயித்து அசைவற்று நோக்கியிருந்தால் நீ யமனையும், காலத்தை வென்று விடலாம்.

#584. மனத்தை ஜோதியில் நிறுத்து

எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருஇடும் சோதியை உள்க வல்லார்க்குக்
கருஇடும் சோதி கலந்து நின்றானே.


மலம் இடும் துவாரத்துக்கு இரண்டு விரல் மேலேயும், கரு இடும் துவாரத்துக்கு இரண்டு விரல் கீழேயும், உள்ள இடத்தில் விளங்கும் குண்டலினியின் சோதியினை இடையறாது நினைப்பவர்களுடன், உயிர்களுக்குப் பிறப்பைத் தருகின்ற ஈசன் பேரொளி வடிவத்தில் கலந்து நிற்பான்.

#585. எது பிரத்தியாகாரம்?


ஒருக்கால் உபாதியை, ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்து உணர்வு உன்னல், கரைதல் உள்நோக்கல்
பிரத்தியாகாரப் பெருமையது ஆமே.

சுழுமுனையை மாயை இருளாக மறைத்து நிற்கும். அதன் மூலம் ஜீவனுக்குச் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் போன்ற பல விதமான அவஸ்தைகளை உண்டாக்கும். இவை விந்துதானத்தில் இருந்து நாபியின் கீழ் வரையில் குண்டலியினால் நடைபெறும். ஆனால் புருவ மத்தியில் இருள் இராது. அது ஒளி மயமாக இருக்கும். தாம் இருக்கும் இருளை விடுத்து மேலே ஒளியை நோக்கிச் செல்பவர்கள் அவஸ்தைகள் இல்லாத ஒரு தூய நிலையில் இருப்பார்கள். அவர்களின் ஜீவபோதம் அழிந்து விடும். ஆகவே மனம், உடல், நினைவு, அறியும் தன்மை ஆகியவை தாமே நின்று போகும். இதுவே உண்மையான பிரத்தியாகாரம் ஆகும்.

#586. அடையும் பயன்


புறப்பட்ட வாயுப் புகவிடாவண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டு போகன் பெருந்தகையோனே.


மனம் அசைந்தால் அத்துடன் கூடப் பிராணனும் சலிக்கும். வெளியே புறப்பட்டுப் போன வாயு கழிந்து விடாதபடி உறுதியாக அதை உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலிமை அடையும். அப்போது பெருமை வாய்ந்த இறைவனும் அந்தப் பேரொளியில் நிலைத்து நிற்பான். வெளியே புறப்பட்டுப் போக மாட்டான்.

#587. இறவாத தன்மை


குறிப்பினுள் உள்ளே குவலயம் தோன்றும்
வெறிப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புஉறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புஉறு காட்சி அமரும் ஆமே.


பிரத்தியாகாரத்தில் நாம் இருக்கும் நிலையில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் அறிந்து கொள்ளலாம். வெறுக்கத் தக்க இருளை நீக்கி நல்லதொரு வேறுபாட்டினைச் செய்வான் ஈசன். அவனை நாடுங்கள். சிவனை விரும்புவதில் உறுதியாக இருந்தால், சிவஞானம் பெற்று, இறவாத தன்மை கொண்ட ஒரு தேவனாக ஆகிவிடலாம்.



 
Last edited:
#588 to #590

#588. வாணாள்

கோணா மனத்தைன் குறிக் கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக்
காணக்கண், கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழி அதுவாமே.

வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்ட மனத்தை ஜாலந்தர பந்தம் செய்யா வேண்டும். கழுத்தை மார்பில் நெருக்கி வைத்துக் கீழ் நோக்காமல் தடுக்க வேண்டும். நடு நாடியில் மனத்தையும் மூச்சையும் ஒன்றாகப் பொருத்த வேண்டும். வானத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும். காணாத கண்களுடனும், கேளாத செவிகளுடனும் இவ்வாறு இருப்பவர்களுக்கு வாழ்நாள் வளரும்.

#589. ஒலியும் ஒளியும்


மலைஆர் சிரத்துஇடை வான்நீர் அருவி
நிலை ஆரப்பாயும் நெடுநாடி ஊடுபோய்ச்
சிலைஆர் பொதுவில் திருநடம் ஆடும்
தொலையாத ஆனந்தச் சோதியைக் கண்டேனே.

மலை போன்ற தலையில் வான கங்கை எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும். சுழுமுனை நாடியின் வழியே சென்றேன். பரநாதம் ஒலிக்கும் சிற்சபையில், அற்புதக் கூத்தாடி, அகலாத ஆனந்தத்தை அளிக்கும் அந்தப் பேரொளியை நான் கண்டேன்.

590. இளமை திரும்பும்


மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.


தலையின் மேல் எழுந்தருளியுள்ள சிற்சக்தி பல மாற்றங்களைச் செய்ய வல்லவள் ஆவாள். மூலாதாரத்தில் கிரியா சக்தியுடன் பொருந்தி இருக்கும் மூர்த்தியைத் தாரணையால் சிரசின் மீது கொண்டு சென்று அங்குள்ள சிற்சக்தியுடன் இணையச் செய்தால் வயது முதிர்ந்தவனுக்கும் இளமை திரும்பும். இது சிவபெருமானின் ஆணையாகும்.
 
A real life miracle!
I was stunned to notice that the once-white-hair of the super seniors is turning black through shades of brown when they started using the Pathanjali hair oil!
 
#591 to #593

#591. உடல் அழியாது

கடைவாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிது உள்இருத்தி
மடைவாயில் கொக்குப்போல் வந்தித்திருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.


மூலாதாரத்தில் உள்ள காம வாயுவை மேல் நோக்கிச் செல்லும்படிச் செய்ய வேண்டும். நடுநாடியாகிய சுழுமுனையில் மனத்தை நிலை நிறுத்த வேண்டும். மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போலத் தன் முயற்சியில் மாறாத நாட்டம் கொள்ள வேண்டும். அப்போது உடல் பல ஊழிகள் வரையிலும் சிதையாமல் இருக்கும்.

#592. இல்லை கால எல்லை!


கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
கலந்த உயிர்அது கால்அது கட்டின்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

ஓர் உடலில் அதன் உயிர் பொருந்தியிருக்கும் கால எல்லை அந்த ஜீவனின் பிராண இயக்கத்தைப் பொருத்து அமையும். அந்த உயிரில் பிராணனின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்திவிட்டால், அந்த உடலுடன் அதன் உயிர் கூடியிருக்கும் காலமும் அழியாமல் இருக்கும்.

#593. மௌனம் ஒரு செல்வம்

வாய்திற வாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய்திறப் பாரே வளி இட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதி இட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடில் கோழையும் ஆமே.


மௌனமாக இருப்பவர்களின் மனமண்டலத்தில் பிராணன் என்னும் ஒரு செல்வம் இருக்கும். வாய் திறந்து பேசிக் கொண்டே இருப்பவர்கள் அந்தப் பிராணச் செல்வத்தை வீணாக்கி விடுவார்கள். மெளனமாக இருப்பவர் பிராணனைச் செலுத்தி உள்ளே உள்ள ஜோதியை அறிந்து கொள்வார். சஹஸ்ரதளம் என்னும் செப்பைத் திறந்து பாராதவர்கள் வெறும் கோழைகள் ஆவர்.
 
#594 to #596

#594. பெரிய பள்ளியறை

வாழலும் ஆம்பல காலும் மனத்திடைப்

போழ்கின்ற வாயுப் புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியது ஓர் பள்ளி யறையிலே.


மனத்திலிருந்து இறங்கும் வாயுவை வெளியேறி விடாதபடி நடு நாடியிலே செலுத்த வேண்டும். அப்போது ஏழு சாளரங்களையும், இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட தேவரின் கோவிலில் உள்ள பெரிய பள்ளியறையிலே பல காலம் வாழலாம்.


விளக்கம் :

ஏழு சாலேகம் = ஏழு பலகணிகள் = 2 கண்கள் + 2 காதுகள் + 2 நாசிகள் + வாய்

இரண்டு பெரு வாய்தல் = கரு வாய் + எரு வாய்

பள்ளியறை = சஹஸ்ரதளம்


#595. மனம் என்னும் குரங்கு


நிரம்பிய ஈரைந்தில் ஐந்தவை போனால்

இரங்கி விழித்திருந்து என் செய்வை பேதாய்?
வரம்பினைக் கோலி வழி செய்வார்க்குக்
குரங்கினைக் கொட்டைப் பொதியலும் ஆமே.


புலன்களைத் துய்த்து நிரம்பியுள்ளன ஐந்து ஞான இந்திரியங்களும், ஐந்து கர்ம இந்திரியங்களும்.. இவற்றில் ஐந்து ஞான இந்திரியங்களும் தம் செயல்களில் இருந்து நீங்கி விட்டால், ஐந்து கர்ம இந்திரியங்களால் என்ன செய்ய இயலும்? ஐம் பொறிகளின் எல்லையைத் தாண்டிவிட்டால் மனம் என்னும் குரங்கை எளிதாக அடக்கிவிட முடியும்.


#596. தாரணைப் பயிற்சி


முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்

பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி யுறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.


முன்னம் பிறந்தவர்கள் இந்தத் தாரணைப் பயிற்சி இல்லாததால் அழிந்து போனார்கள். பின்னால் வருபவர்களும் அழிய மாட்டார்கள் என்பதற்கு என்ன பிரமாணம்? இவ்வாறு அழிகின்றவர்களின் நிலையைப் பற்றிப் பேசினால் அது அளவில்லாதது ஆகும்! ஆற்றின் கரையே கரைந்து போகும் போது அழியக் கூடிய உடல் மட்டும் அழியாமல் இருக்குமே!




 
# 597

#597. எது தாரணை?

அரித்த உடலை ஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்த மனாதி சத்தாதியிற் செல்ல
தரித்தது தாரணை தற்பரத்தோடே.


ஐம்பொறிகளால் அரிக்கப்பட்ட உடலை ஐம்பூதங்களில் ஒடுக்க வேண்டும்.

அந்த ஐம்பூதங்களை ஐந்து தன்மாத்திரைகளில் அடக்க வேண்டும்.

ஐந்து தன்மாத்திரைகளை நான்கு அந்தக் கரணங்களில் ஒடுக்க வேண்டும்.

நான்கு அந்தக்கரணங்களை மாயையில் அடக்க வேண்டும்.

மாயையை ஆன்மாவில் அடக்கி விட்டு ஆன்மாவைச் சிவத்தில் ஒடுக்க வேண்டும்.

ஆன்மா சிவத்துடன் பொருந்தி இருப்பதே தாரணை ஆகும்.

வானத்தில் உள்ள நாதத்தில் அந்தக்கரணங்கள் பொருந்தும் போது மனம்

சிந்திப்பதை விட்டு விடும். புத்தி நிச்சயம் செய்வதை விட்டு விடும்.

சித்தமும் அஹங்காரமும் சிவத்துடன் ஆன்மா பொருந்தும் போது அழிந்து

போய்விடும். அப்போது மிஞ்சி நிற்பவை ‘தத்’ என்ற சிவமும் ‘பரம்’ என்ற

ஆன்மாவுமே ஆகும்.

ஐம்பொறிகள் : கண்கள் , காதுகள் , மூக்கு, நாக்கு, தோல்.

ஐம் பூதங்கள் : நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி.

ஐந்து தன்மாத்திரைகள்; சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரசம், கந்தம்

நான்கு அந்தக்கரணங்கள் : சித்தம், புத்தி, மனம் அஹங்காரம்

 
8. தியானம்

இடையறாது நினைவு கூர்வது தியானம்.

#598 to #601

#598. இருவகை தியானங்கள்

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்

பொருவாத புந்தி புலன் போக மேவல்;
உருவாய சத்தி பரத்தியானம்; உன்னும்
குரு ஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

தாரணையில் கூறியபடி புத்தியும் புலன்களும் நீங்கி இருப்பது தியானம். வடிவோடு கூடிய சக்தியைக் குறித்து எண்ணுவது பரத்தியானம்.. ஒளியுடைய சிவனைக் குறித்து சிந்திப்பது சிவத்தியானம் ஆகும். சக்தியை உன்னுவது சகளத் தியானம் என்றும் சிவனை எண்ணுவது நிஷ்களத் தியானம் என்றும் கூறுவர்.

#599. பரம் பொருளின் பேரொளி


கண்ணாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துள்

பண்ணாக்கி நின்ற பழம் பொறு ளொன்றுண்டு
அண்ணாக்கி னுள்ளே அகண்ட வெளி காட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

பஞ்ச ஞானேந்திரியங்கள் ( கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்பவை ) கூடும் இடத்தில் நாதத்தை எழுப்புகின்ற ஒரு பழமையான வஸ்து உள்ளது. அதுவே நம் அண்ணாக்குப் பகுதியில் எல்லை இல்லாத பேரொளியைக் காட்டும். நம் மனம் வெளியே செல்லாதவாறு தடுக்கும். நம்மை உலக வாழ்விலிருந்து பிழைக்கச் செய்யும்.

வாயில் நாவுக்கு மேலே உள்ள அண்ணாக்கிலிருந்து பிரமரந்திரம் வரை ஒளி பாயும் வழி உள்ளது.


# 600. பெருவெளியில் பேரொளி


ஒண்ணா நயனத்தில் உற்ற ஒழி தன்னைக்

கண்ணாரப் பார்த்துக் கலந்து அங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே.

ஞானக் கண்ணில் பொருந்தியுள்ள சோதியை, இரண்டு ஊனக் கண்களாலும் பார்த்து, சலனம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்தச் சுழுமுனை தியானத்தைச் செய்யும் பொழுது வான கங்கை சிதாகாசத்தில் பாய்வது நன்கு புலப்படும். உளியால் செதுக்கிச் செய்யப் படாத சுயம்பு மூர்த்தியையும் அங்கே காண முடியும்.

#601. சிவனைச் சிந்தையுள் சிந்திப்பீர்!


ஒரு பொழு துன்னார் உடலோ டுயிரை

ஒருபொழு துன்னா ருயிருள் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.

உடலுடன் பொருந்தி இருக்கும் உயிரைக் குறித்து ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள்.

உயிருக்கு உயிராக உள்ள சிவனைக் குறித்து ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள்.

சிவன் அமர்ந்திருக்கும் சிந்தையைக் குறித்தும் ஒரு போதும் சிந்திக்க மாட்டார்கள்.

சந்திர மண்டலத்தில் விளங்கும் நாத மயமான சக்தியைக் குறித்தும் சிந்திக்க மாட்டார்கள்.

இவர்கள் அறிவின்மையின் எல்லை தான் என்ன?






 
#602 to #605

#602. சிவன் என்னும் சோதி

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

உள்ளத்தில் உள்ள ஜோதியை மேல் நோக்கிச் செல்ல வைக்க வேண்டும். சினம் என்னும் தீயினை நெருக்கி அழிக்க வேண்டும். அனைத்தையும் விளங்கச் செய்யும் சிவ ஒளியைச் சுழுமுனை என்ற திரியில் பொருத்த வேண்டும். அப்போது சிவம் என்ற ஜோதி மனதில் மங்காத விளக்காக எப்போதும் ஒளிரும்.

#603. உள்ளம் ஒளிர வேண்டும்


எண்ணாயிரத் தாண்டு யோகம் இருக்கினும்
கண்ஆர் அமுதினைக் கண்டுஅறி வார் இல்லை;
உள்நாடி, உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடிபோலக் கலந்து நின்றானே.


எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் செய்தாலும் கண் ஆர் அமுதனைய சிவனைக் காண இயலாது. நம் உள்ளத்தின் உள்ளேயே அவனை நாட வேண்டும். நம் உள்ளத்தை ஒளி மயமாக ஆக்க வேண்டும். அப்போது கண்ணாடியில் நம் உருவத்தைக் காண்பது போலத் தெளிவாகச் சிவனையும் நம்மால் காண இயலும்.

#604. கண் பார்வை எங்கே இருக்க வேண்டும்?


நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவுஇல்லை
ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே.

இருகண் பார்வையையும் நடுமூக்கில் பொருத்தி வைக்க வேண்டும். அப்போது சோர்வு உண்டாகாது. உடலுக்கும் அழிவில்லை. மனமும் கட்டுக்குள் அடங்கும். உணர்வுகள் தாமே ஒடுங்கும். தான் என்னும் எண்ணம் குறையும். வெளியே செல்லும் திறன் இராது. அதனால் அவனே சிவனாக மாறிவிடலாம்.

# 605. புருவ மத்தியில் பார்வை


நயன மிரண்டும் நாசி மேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே யடக்கித்
துயரற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.


இரு கண் பார்வையையும் புருவ மத்தியில் வைக்க வேண்டும். உயர்வினின்றும் தாழாத பிராணனை உள்ளே அடக்க வேண்டும். துன்பம் தரும் மனம் போன்றவற்றை நீக்க வேண்டும். இவ்வாறு யோக நித்திரை செய்பவருக்கு, அவர் உடல் தான் பிறந்த பயனைத் தரும். கூற்றுவனக்கு அஞ்ச வேண்டிய அவசியம் இராது.
 
#606 to #609

# 606. ஒலிக்கும் ஒலிகள்

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளை பேரிகை யாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே.


மணியோசை, கடலோசை, யானையின் பிளிறல், புல்லாங்குழலோசை, மேகத்வனி, வண்டின் ரீங்காரம், தும்பியின் ஒலி, சங்கொலி, பேரிகை நாதம், யாழிசை என்ற நுட்பமான ஒலிகள் பத்தையும் தியானத்தில் உள்ளவர்களால் கேட்க இயலும்.


#607. வலிய ஓசைகளும், மெல்லிய ஓசைகளும்


கடலோடு மேகம் களிறொடும் ஓசை
அடஎழும் வீணை யண்டரண்டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கி னோசை
திடமறி யோகிக்கல்லால் தெரியாதே.

கடல், மேகம், யானை இவைகள் செய்யும் ஒலிகளும், வீணையின் நாதமும், வானத்தில் உள்ள மறையொலி, சுருங்கிய வாயை உடைய சங்கு போன்றவற்றின் ஓசைகளைத் திடமான யோகிகளால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மற்றவர்களால் அறிய முடியாது.


# 608. நாத வடிவானவன் சிவன்


ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும்
ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
ஓசையாம், ஈசன் உணரவல் லார்க்கே.


இறைவனின் இயல்பு நாதம். தேவர்களின் கூட்டமும் நாதம். பாசத்தின் இயக்கமும் நாதம். பாசத்தை விட்ட உயிராக இருப்பதும் நாதம். இந்த நாதத்தை உணர வல்லவர்கள் பூவில் உள்ள மணம் போல நாதத்தில் உள்ள ஈசனை உணர்ந்து கொள்வர்.


# 609. நாதந்தத்தில் உள்ளான் ஈசன்


நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே.


நாதத்தின் முடிவிலே தேவி பராசக்தி உள்ளாள்.
நாதத்தின் முடிவிலே யோகத்தின் முடிவு உள்ளது.
நாதத்தின் முடிவிலே நம் நாட்டம் இருக்க வேண்டும்.
நாதத்தின் முடிவிலே நஞ்சுண்ட கண்டன் உள்ளான்.




 
#610 to #613

#610. ஈசன் திருவடிகளை அடைய…

உதிக்கின்ற ஆறினும் உள்அங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுஉடைத் தூங்கு இருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல் சேரல் ஆமே.


ஆறு ஆதாரங்களில் உள்ளன ஐந்து வகையான அக்கினிகள். இவற்றை நன்கு அறிந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும். துதிக்கின்ற ஒலியுடன் கூடிய நீல ஒளி அகல வேண்டும். ஐந்து தன்மாத்திரைகளில் நாதம் ஒடுங்க வேண்டும்.அப்போது கொன்றையணி ஈசனின் கழலடிகளைச் சென்று சேர முடியும்.

ஆறு ஆதாரங்கள் :
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞை


ஐந்து அக்கினிகள்:
மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்னி, சூரிய அக்னி, சந்திர அக்னி.

ஐந்து தன்மாத்திரைகள்:
சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்.

# 611. ஒளிமயமானது!

பள்ளி யறையில் பகலே இருள் இல்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியில் ஓர் ஓசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவு இல்லைதானே.


சஹஸ்ரதளம் என்னும் ஆயிரம் இதழ்த் தாமரையே ஐம்பொறிகள் ஓய்வு எடுக்கும் பள்ளியறை ஆகும். இந்தப் பராவஸ்தை நிலையில் ஒளி மட்டுமே இருக்கும். இருள் இராது. ஒளி இருப்பதனால் இங்கு வேறு அக்கினியைக் கொளுத்த வேண்டிய தேவை இல்லை. இந்த ஒளி நான்கு காத தூரம் வரையில் நீளும். இது தியானத்தால் மட்டுமே அடையப் படுவது. இங்கு இருள் இல்லாததால் விடியலும் இல்லை.

#612. உடல் அழியாது!


கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி,
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே.

தான் மேற்கொண்ட விரதம் குறையாமல் காத்து, சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கிச் செல்லும் யோகியின் அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றும் ஒருங்கிணைந்து வளரும். அங்ஙனம் வளர்த்த பின்னர் அவன் எடுத்த உடல் ஊழிக் காலம் வரை ஜீவனை விட்டு நீங்காது.

#613. சீவனுக்கு உதவுபவர்


அவ்வவர் மண்டலம் ஆம்பரிசு ஒன்று உண்டு;
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்;
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றோர்க்கே.


ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு; ஒவ்வொரு தலைவன் உண்டு. அக்கினி, கதிரவன், திங்கள் மண்டலங்களுக்குத் தலைவர்கள் நான்முகன், திருமால் உருத்திரன் ஆவர். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொருவர் ஆட்சி நடை பெறும் என்றாலும் ஒவ்வொரு மண்டலமும் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்.
 
#614 to #617

# 614. ஒளியுண்டாகும்

இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை யுள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும்பாசம் துருவிடு மகிழ்
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே.

உலக வாழ்வில் மயங்கித் தவிக்கின்ற உள்ளம் ஒரு இருட்டறை போன்றது . மூன்று அக்கினி மண்டலங்களிலும் பொருந்தித் தலை உச்சியில் உள்ள துளை வழியே சிவனிடம் அன்பு கொண்டு ஆராய்ந்து மேலே செல்பவரின் துன்பங்கள் எல்லாம் நீங்கி விடும். அவர்களால் விடியற் காலை போன்ற ஒளியைக் காண இயலும்.


#615. உடல் அழியாது இருக்க…


முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க,
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

முக்குணங்களின் இருள் நீங்க வேண்டும் என்றால் மூலாதாரத்தில் உள்ள அபான வாயுவை மேலே எழுப்ப வேண்டும். வலப் பக்கம் உள்ள கதிரவன் கலை இடப்புறம் உள்ள திங்களின் கலையுடன் பொருந்தும்படிக் காலையில் ஒரு நாழிகை நேரம் சாதிக்க வேண்டும். அப்போது உடலில் உள்ள உயிர் அழியாத வண்ணம் காப்பான் சிவபெருமான்.


#616. ஆத்ம தரிசனம்


நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருத வல்லார்கள்
சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே.

உடலில் உள்ள ஆன்மாவை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும்?
அசைவை ஏற்படுத்தும் கொப்பூழ் சக்கரத்துக்கு (மணிபூரகத்துக்கு) நான்கு விரல் மேலேயும்;
வாக்கு வெளிப்படும் தொண்டைக்கு (விசுத்தச் சக்கரத்துக்கு) இரண்டு விரல் கீழேயும் உள்ள;
அநாஹதச் சக்கரத்தில் பொங்கி எழுகின்ற கடல் ஒலியைத் தியானம் செய்ய வேண்டும்.


#617. இன்பம் எய்துவர்


அறிவாய், அசைத்து என்னும் ஆறாறு அகன்று,
தெளிவான மாயை சிதைத்து, அருளாலே
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந்தாரே.

அறிவு வடிவான ஆன்மா அறிவற்ற முப்பத்தாறு தத்துவங்களில் இருந்து நீங்கப் பெற வேண்டும். அது மாயையைச் சிதைத்து அழிக்க வேண்டும். சிவனுடன் பிரியாமல் இருக்கும் அருளைப் பெற வேண்டும். சிவநெறியில் நின்று சிவனைத் தியானம் செய்பவரே துன்பம் நீங்கி இன்பம் எய்துவர்.




 
9. சமாதி

9. சமாதி

சிவனும் சீவனும் ஒன்றி இருத்தல் சமாதியாகும்

#618 to #620

#618. சமாதி நிலை

சமாதிய மாதியில் தான் சொல்லக் கேட்கின்
சமாதிய மாதியில் தான் எட்டும் சித்திக்கும்
சமாதிய மாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதிய மாதி தலைப்படும் தானே.


இயமம் முதல் சமாதி வரை செல்லும் முறையைக் கேளுங்கள். இயமம் முதல் சமாதி வரை உள்ள படிகளை முறையாகக் கடந்தால் அட்டாங்க யோகத்தின் கடைசிப் படியாகிய சமாதியும் தானேக் கைக் கூடும்.

#619. சமாதியில் பேரொளி தோன்றும்


விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்;
அந்தம் இலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.


விந்துவும், நாதமும் தலையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரையில் விளங்கும் பொழுது சமாதி யோகத்தில் சீவன் பொருந்தி இருக்கும். அப்போது சிவனுடைய ஞான வடிவம் ஒரு பேரொளியாகக் காட்சி அளிக்கும்.

#620. மனம் அடங்கும்


மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு;
மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை;
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே
.

நினைக்கின்ற மனம் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பிராண வாயுவும் உண்டு. மனம் சிந்திப்பதை விட்டு விட்டால் பிராண வாயுவில் அசைவு ஏற்படாது. சிந்திப்பதை விட்டு விட்டு மகிழ்வோடு இருப்பவரின் மனம் தானே மனோலயம் அடைந்து அடங்கி விடும்.

 
[h=1]#621 to #624[/h]
#621. பிராணன் அடங்குதல்


விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டுஉணர் வாகக் கருதி இருப்பார்கள்
செண்டு வெளியில் செழுங்கிரி யத்திடைக்
கொண்டு குதிரைக் குசைசெறுத் தாரே.


நீர் ஊற்றைப் போன்று பிளந்து கொண்டு வெளிப்படும் சிவசோதி. சிவம் என்பதே ஒரு ஞானக் காடு ஆகும். இதைக் கண்டு உணர்வு மயமாக இருப்பவர், பிராணன் என்னும் குதிரையைத் தலை என்னும் மலை மேல் செலுத்திவிட்டு, அதை மனம் என்னும் கயிற்றால் கட்டி விடுவர்.

#622. காலன் கனவிலும் இல்லை


மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவில் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்ட பின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.


தலை உச்சியில் உள்ள சஹஸ்ரதளத்தில் சிவனை நாடி, முகத்தில் உள்ள நான்கு ஞான இந்திரியங்களும் பொருந்தும்படி இருப்பவர்களே! பரந்த சஹஸ்ர தளத்தின் மேலே உள்ள அகண்டத்தைக் கண்ட பின் உங்களுக்கு யமன் என்ற சொல் கனவிலும் இல்லை.

#623. சிவயோகி


மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பிருத்வீ முதலிய மண்டலங்கள் ஐந்து; அகரம் முதல் உன்மனி வரை உள்ள கலைகள் பன்னிரண்டு, ஆதாரச் சக்கரங்களில் அட்சரங்களை இடமாகக் கொண்ட தேவதைகள் நாற்பதெட்டு. இவற்றை நிராதாரத்தில் கண்டு, எங்கும் பரந்துள்ள சிவனைடியைச் பொருந்தி அனுபவிப்பான் சிவயோகி.

#624. சிவக்கனி


பூட்டுஒத்த மெய்யில் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து
நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.


கிணற்றுச் சகடையின் உதவியுடன் கயிறு மேலும் கீழும் போக இயலும். அது போன்றே மனதில் எழும் எண்ணங்களுக்கு ஏற்பப் பிராண வாயு மேலும் கீழும் போகும். அந்த பிராண வாயுவை மேலே பிரமரந்திரத்தில் பொருத்த வேண்டும். இதையும் அதையும் தேடி, இங்கும் அங்கும் அலையாமல், விழிப்புடன் இருந்தால், சிவன் என்னும் தோட்டத்து மாங்கனியுடன் அசைவின்றிப் பொருந்தி இருக்கும் பேறு சித்திக்கும்.


 
Last edited:
#625 to #628

#625. மனம் அடங்கினால் கிடைப்பது?

உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார்;
அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார்
திருவரை யாமனம் தீர்ந்துஅற்ற வாறே.


ஆன்ம வடிவை அறிந்து கொள்ளும் வழி இது. தேவர்கள் கடலைக் கடைந்து அமுதம் பெற்று அதனை உண்டார்கள். அதனால் அவர்கள் சிரசின் உச்சியில் சென்று அங்குள்ள அமுதத்தைப் பருகவில்லை. மனத்தை அடக்கித் தலையின் மேல் பொருத்துவதே உண்மை ஸ்வரூபத்தை அறியும் வழி ஆகும்.

#626. சிவனுடன் கூடி இருத்தல்


நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொன்னின் உள்ளே திகழ்க்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி, அருத்தி ஒடுங்கிப் போய்க்
கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே.

சிவபெருமான் நம்பிக்கைக்கு உரியவன்; முழு முதல் பொருளாவான்; நான் மறைகளை ஓதியவன்; செம்பொன்னின் நிறம் கொண்டவன்; சோதியாக விளங்குபவன்; அவன் மேல் அன்பு கொண்டு தன் ஆசைகளை அடக்கிச் சஹஸ்ரதளத்தில் நின்று பயிற்சி செய்பவனின் நிட்டையில் சிவபெருமான் கலந்து நிற்பான்.

#627. குண்டலினி சக்தி


மூலத்து மேலது முச்சதுரத்தது
கால் அத்திசையில் கலக்கின்ற சந்தியில்
மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.


குண்டலினி சக்தி நான்கு இதழ்த் தாமரையாகிய மூலாதாரத்தில் முக்கோண வடிவு கொண்டிருக்கும். அபானன் மூச்சுக் காற்றுடன் சேரும் இடத்தில், நெற்றியின் நடுவே உள்ள அர்த்த சந்திரன் வடிவில் பல வேறு கலைகளாகத் தோன்றும்.

#628. திங்கள் மண்டலம்


கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத்
தற்பரமாகத் தகும் தண் சமாதியே.


வீணான எண்ணங்களைத் துறந்து விட வேண்டும்; மூலத் தீயுடன் கலந்து மேலே செல்ல வேண்டும்; சிற்பத் திறன் வாய்ந்த இந்த அழகிய உலகங்களை உருவாக்கிய பேரொளி வீசும் சிவனைத் தேட வேண்டும். மதி மண்டலத்தில் அவனுடன் பேதமின்றிப் பொருந்தி இருக்க வேண்டும். இதுவே சாந்தம் மிகுந்த சமாதி நிலை ஆகும்.
 
#629 to #631

#629. நடுவு நிலைமை

தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்;
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்;
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும் ;
துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே.


இத்தன்மை வாய்ந்தவர்களுக்கு ஆன்மத் தத்துவம் நன்கு விளங்கும். சிவனுடன் சேர்ந்திருக்கும் சக்தியின் அருள் மிகுந்திடும். காமக் குரோதங்கள் போன்ற மன மாசுகள் அகன்று விடும். நடுவு நிலைமை என்பது தானே வந்து சேரும்.


#630. நீங்காத அன்பு கொள்வர்


சோதித் தனிச்சுடராய் நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகுமால்
ஆதி பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடி பணிந்து அன்பு உறுவாரே.


ஒளி வீசும் ஒப்பில்லாத சுடர் ஆவான் சிவன். மன மலம் நீங்கிச் சமாதியில் பொருந்தியுள்ள சீவனும் சிவனும் சமாதியில் ஒன்றேயாவர். படைப்புக் கடவுள் பிரமனும், கடல் வண்ணனாகிய திருமாலும் சிவனிடம் கொள்ளும் அன்பை அந்தச் சீவனிடமும் கொள்வர்.


#631. சமாதி தேவையில்லை!


சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்;
சமாதிதான் இல்லை தான் அவன் ஆகில்;
சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே.

சமாதியில் இருப்பவர்களுக்கு அனேக யோகங்கள் கைக்கூடும். எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவர்களுக்குச் சமாதி தேவையில்லை. ஆன்மாவே சிவம் என்று ஆகிவிட்டால் சமாதி தேவையில்லை. சமாதியினால் அறுபத்து கலை ஞானங்களும் தானே வந்து சேரும்.




 
10. அட்டாங்க யோகப்பேறு

10. அட்டாங்க யோகப் பேறு
அட்டாங்க யோகத்தால் அடையும் நன்மைகள்

#632 to #635


#632. உகந்ததை ஈவான் ஈசன்

போதுகந் தேறும் புரிச்சடையானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவ னென்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால் விடை யோனே.


சஹஸ்ரதளத்தில் விளங்கும் சிவன் திருவடிகளை அடைய விரும்பியவர் அவற்றை எப்படியேனும் அடைந்து விடுவர். அவர்கள் விண்ணுலகப் பேற்றினையும் அடைவர். காளையை ஊர்தியாகக் கொண்டு உமை அன்னை மனம் மகிழும்படி நடனம் செய்யும் பிரான், தன் அடியவர் விரும்புவது என்ன என்று அறிந்து கொண்டு அவற்றையே அவர்களுக்கு ஈவான்.


#633. சிவபதம் சேரலாம்


பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன் புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவ ரெதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே.


சிவன் திருவடிகள் மேல் அன்பு வைத்து, அவன் புகழையே கேட்டும், அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டும் இருப்பவர்களுக்கு, முனிவர்கள் நேரே வந்து எதிர் கொண்டு அழைத்துச் செல்லும் அரிய சிவபதம் கிடைக்கும்.


#634. இம்மையிலும் இன்பம்


வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வனிவ னெனத்
தருந்தண் முழவங் குழலு மியம்ப
இருந்தின்ப மெய்துவ ரீசன் அருளே.


வருந்தித் தவம் செய்பவர் அடைவது என்ன?
தேவர் உலகத்துக்குத் தலைவனாக, தேவர் உலகம் செல்லும் தகுதி வாய்ந்தவன் இவன் என்று முரசும், குழலும் ஒலிக்கும்படி அவன் இம்மையிலும் சிவன் அருளால் இன்பம் அடைவான்.


#635. பூரண கும்பம்


செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம் வந்தெதிர் கொள்ள
எம்பொன் தலைவ னிவனாம் எனச்சொல்ல
இன்பக் கலவி யிருக்கலு மாமே.

பொன்னொளி வீசும் சதாசிவ மண்டலத்தை அடையும் பொழுது பூரண கும்பத்துடன் தேவர்கள் எதிரே வந்து அழைத்துச் செல்வர். “எங்கள் பொன் மண்டலத்தின் தலைவன் இவனே!” என்று சொல்லும்படி இன்பச் சேர்க்கையில் இருக்க இயலும்.







 
Back
Top