Quotable Quotes Part II

திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#461. உடல் அமைந்த விதம்

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்

செம்பால் இறைச்சி திருத்த மனை செய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே.

உடல் எலும்புகளால் பின்னப்பட்டு நரம்புகளால் கட்டப் பட்டுள்ளது. ரத்தம் இறைச்சி இவற்றால் திருத்தமாக அமைக்கப் பட்டுள்ளது. இன்பம் பெறுவதற்காக உயிர் உடலைத் தாங்குகின்றது. இவ்வாறு உடலை அமைத்த இறைவன் மீதுள்ள அன்பால் நான் அவனை வணங்குகின்றேன்.
 
#462. வேகத்தைத் தணித்தான்

பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்

இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து,
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யுமாறே விதித்து ஒழிந்தானே.

பால் போன்ற நிறமும், கதிரவனின் ஒளியும் உடையவன் சதாசிவன். அவன் உயிர்களைப் பக்குவம் செய்கின்றான். உடல் எங்கும் பரவியும் விரவியும் நன்மைகள் புரிவான். மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற அக்கினியின் வேகத்தைத் தணிப்பதற்காகவே அவன் உயிர்கள் இன்பம் பெறும் முறையினை அமைத்தான்.
 
#463. சிசுவைக் காத்தல்

ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே

வழி பல நீராட்டி வைத்து எழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே.

வினை பொருந்தி வரும் காலத்தில் வினைகளை ஒழிப்பான் இறைவன். பல வழிகளிலும் சிசுவைத் தூய்மை செய்வான். பழிக்கப்படும் பல செயல்களைச் செய்கின்ற பாசத்தில் கட்டப் பட்ட சிசுவை துன்பம் அடையாமல் பலவகைச் சுழிகளில் இருந்தும் அவனே காப்பான்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#464. எண் சாண் உடல்

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிரமத்தே தோன்றும் அவ்வியோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எய்யும் எண் சாண் அது ஆமே.

சுக்கில நாடியில் தோன்றும் வெண்ணிறச் சுக்கிலம் எட்டு விரற்கடை செல்லும். யோனியில் தோன்றும் செந்நிற சுரோணிதம் நான்கு விரற்கடை செல்லும். ஆண் பெண் கூட்டுறவால் இவை இணையும் பொழுது எண் சாண் உடல் ஒன்று உருவாகும். பஞ்ச பூதங்களாகிய ஐந்து அக்ஷரங்களும் பிரணவத்தின் மூன்று அக்ஷரங்களும் அதை உருவாக்கும்.
 
465. முப்பத்தொரு தத்துவங்கள்

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மொவைந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.

போகத்தில் ஆணும் பெண்ணும் பொருந்தும் போது இறைவன் தன் கொடைச் செயலைச் செய்தான். அவர்கள் இருவரது மயக்க நிலையில், முப்பதொரு தத்துவங்களைச் சேர்த்து, கருவாகிய ஒரு முட்டையை உருவாக்கினான்.
 
466. செயலற்று இருக்கும்

பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலனைந்தும்

பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந்தானே.

அறியாமை வாய்ந்தவை ஐம் புலன்கள். உடல் தோன்றும் போது அவைகளும் தோன்றின. உடல் அழியும் போது அவைகளும் அழிந்தன. கருவில் உருவான உடலும் அது போன்றே ஆண்ட கோசத்தில் கோசத்தில் செயலற்று இருந்து நாதத் தத்துவத்தில் அடங்கும்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#467. கருவை அமைக்கும் விதம்

இலைப்பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலைப் பொறி யில் கரு ஐந்துடன் நாட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.

மாயையால் சதாசிவன் கருவின் உடலை உண்டாக்குவான். துலாக் கோலைப் போல் செலுத்த வல்ல சிவ தத்துவமாகிய ஐந்தினால் ( அ, உ , ம, நாதம், விந்து இவற்றால்) அந்தக் கருவை இயக்குவான். ஆன்ம தத்துவம் இருபது நான்கையும் வித்தியா தத்துவம் ஆறையும் அந்த உயிரின் தன்மைக்கு ஏற்றபடி அத்துடன் இணைப்பான். உடல் என்னும் பொறியில் ஒன்பது துளைகளையும் அமைப்பான்.
 
468. கருப்பை ஒரு சூளை

இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்

துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.

சிற்றின்பம் அனுபவிக்கும் தாய் தந்தையர் மனம் ஒன்றுவர். அவர்கள் உருவாக்கிய துன்பக் கலசம் ஆகிய மண் குடத்துக்குள் (உடலுக்குள்) சேர்வான் ஓர் ஆத்மா. அந்தக் கருப்பை என்னும் சூளை யில் ஒன்பது துளைகள் உடைய நீர்ச்சாலும், சூக்கும உடலாகிய எட்டும், ஞான இந்திரியங்கள் கர்ம இந்திரியங்கள் பத்தும் வெந்து பக்குவம் அடையும்.
 
469. சித்திகள் தேவையில்லை

அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்

பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்டது
அறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே.

உடலில் பொருந்தியுள்ள ஆறு துன்பங்களை நீங்கள் அறியவில்லை. மனதில் பொங்கி வழியும் முக்குணங்களில் இருந்து பிரியாது உள்ளீர். அங்கே சித்திகள் அமைவதை விரும்பாதீர். பத்து மாதங்களின் இந்த உடல் தயாராகி விடும்
 


14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#470. உய்யும் வழியை உணர்வீர்

உடல் வைத்த வாறும் உயிர் வைத்தவாறும்

மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைக் கலந்தேனே.

மாயையில் இருந்து உடலைத் தோற்றுவித்தான். உடலுள் உயிரைப் புகுத்தினான். மடையுடன் கூடிய திறந்து மூட வல்ல ஒன்பது துவாரங்களை அமைத்தான். உறுதி வாய்ந்த ஆயிரம் இதழ்த் தாமைரையை சஹஸ்ரதளத்தில் இறுதியாக அமைத்தான். அந்த இறைவனை நான் சுழுமுனை நாடி வழியே சென்று சிரசின் உச்சியில் அடைந்தேன்.
 
#471. நேர்படல்

கேட்டு நின்றேன் எங்கும் கேடில் பெருஞ்சுடர்

மூட்டுகின்றான் முதல் யோனி மாயன் அவன்
கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர்ப்பட்டவாறே.

நூல் அறிந்தவரும் நுட்பமான அறிவுடையவரும் ஓதுகின்ற முறையைக் கேட்டு நின்றேன். அவர்கள் கூறுவது யாது? இறைவன் எக்காலத்தும் எங்கும் விளங்குகின்றான். கேடில்லாத உயிர்களை அவர் அவர்கள் வினைக்கு ஏற்ற உடல்களில் பொருத்துகின்றான். சுக்கிலச் சுரோணிதக் கலப்பில் கருவைக் குழம்பு போல உருவாக்குகின்றான். கருவை உருவாக்கி அதன் உடலை நன்கு வளர்க்கின்றான். அதனுடன் எப்போதும் நேர்படுகின்றான் (அதாவது கலந்து நிற்கின்றான்).
 
#472. சீவ அணுக்கள்

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பறந்து எட்டும் பற்றுமே.

பெண்ணின் யோனி மலரைப் போன்றது. ஆணின் லிங்கம் மொட்டைப் போன்றது. இவை இரண்டும் பொருந்தும் போது அலரும். அப்போது சுக்கில சுரோணிதங்கள் கலக்கும் . அப்போது ஒளிமயமான சீவ அணுக்கள் தோன்றும். நீரின் குமிழி நீரில் கலப்பது போல சீவ அணுக்கள் கருவின் உடல் முழுவதும் பரவிக் கலந்துவிடும்.
 
14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#473. தூலமும், சூக்குமமும்.

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்

கட்டிய மூன்று கரணமுமாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பை
கட்டி யவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே

நுண் உடலில் ஐம்பொறிகள் (கண், நாசி, செவி, மெய், வாய் ) தோன்றும். மனம், புத்தி, அஹங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் தோன்றும். இவற்றுடன் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப உண்டாக்கிய உடலை இறைவனே முதலில் சேர்ப்பான். பின்பு அவனே அவற்றைப் பிரித்துஅவிழ்த்து விடுவான்.
 
#474. பசு, பாசம் நீங்கும்!

கண்ணுதல் நாமம் கலந்து உடம்பு ஆயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முதலாக வகுத்து வைத்தானே.

இறைவனின் திருப் பெயர் ஆகும் பிரணவம். அதைக் கலந்து அந்த உடலில் நாதம் விளங்கச் செய்வான். மூலாதாரம் ஒரு நான்கு இதழ்த் தாமரை ஆகும். சக்கரங்களால் உணர்த்தப்படும் பரப்பை மண் முதலாகத் தொடங்கும் முறையை இறைவன் வகுத்து அமைத்துள்ளான்.
 
475. செவிலித் தாய்கள்

அருள் அல்லது இல்லை; அரனவன் அன்றி

அருள் இல்லை ; ஆதலின் அவ் ஓர் உயிரை
தருகின்ற போது இரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே

சக்தி இல்லாமல் சிவம் இல்லை. சிவம் இன்றிச் சக்தியும் இல்லை. ஆகவே ஓர் உயிருக்கு உடலைத் தரும் போது அத்துடன் இரண்டு செவிலித் தாய்களையும் அன்புடன் தந்தான்.
 

திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#476. உயிருக்கு உயிராவர்

வகுத்த பிறவியின் மாது நல்லாளும்
தொகுத் திருள் நீக்கிய சோதியவனும்
பகுத்துணர்வு ஆகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றதோர் மாண்பது ஆமே.

சீவனின் வினைகளுக்கு ஏற்ப அதன் பிறவி அமைக்கப் படுகின்றது. அந்தப் பிறவியில் சக்தி தேவியும், இருளை நீக்கும் சோதியாகிய சிவனும் அந்த சீவனின் உயிருக்கு உயிராக இருப்பர். மேலும் பலவகை உயிர்களுக்குப் பலவகை உணர்வுகளை வகுத்து வகை செய்வர்.
 
477. உயிர் ஒளி மயமானது!

மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்

காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான்; அச்சோதிதன் ஆண்மையே.

பெருமையுடன் வளரும் அந்த உயிர் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல. அப்படி எண்ணுவது வெறும் கற்பனை ஆகும். அது தன் பெற்றோரின் தன்மைகளுடன் விளங்கும். அத்தகைய உயிருக்கு ஏற்றவாறு உடலைப் படைப்பது சிவபெருமானின் ஆற்றல் ஆகும்
 
#478. ஆண், பெண் உருவாவது!

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்

பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண் மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

ஆண், பெண் கூடும் போது ஆண் பண்பு அதிகமாக இருந்தால் அந்த உயிர் ஆணாகும். பெண் தன்மை மிகுந்திருந்தால் அந்த உயிர் பெண் ஆகும். ஆண், பெண் பண்புகள் சரி சமம் ஆனால் அந்த உயிர் அலியாகும். ஆள்வினை மிகுந்து இருந்தால் சிறந்த சிசு பிறக்கும். அது வளர்ந்து உலகை ஆளும். தாழ்வு மனப்பான்மை இருந்தால் சுக்கிலம் பாயாது.
 
I thank the readers for the impressive traffic of 480 in the past 24 hours.

You may read the same poems and explanations at peace without having to

hop up and down the pages and search for the relevant poems.

Everything has been presented neatly in the form of books with index.

Just visit my website using the link given below to read these and much more.

http://visalakshiramani.weebly.com/
 

திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை).

#479. யோகியின் ஆற்றல்

பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்;

பாய்ந்த பின் நால் ஓடின் பாரினில் எண்பதாம்;
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

ஆணிடமிருந்து பிரிந்த சுக்கிலம் ஐந்து விரற்கடை தூரம் ஓடினால் பிறக்கும் உயிரின் ஆயுள் நூறு ஆண்டுகள். அந்தச் சுக்கிலம் நான்கு விரற்கடை ஓடினால் அந்த உயிரின் ஆயுள் எண்பது ஆண்டுகள். தான் விரும்பியபடி சுக்கிலத்தைப் பாய்ச்சும் ஆற்றல் யோகிக்கு உண்டு. அதனால் ஒரு யோகியினால் தான் விரும்பிய குழந்தையைப் பெற இயலும்.
 
480. குழந்தையின் அங்கங்கள்

பாய்கின்ற வாயு குறையின் குறள் ஆகும்;

பாய்கின்ற வாயு இளைக்கின் முடம் ஆகும்;
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்;
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லைப் பார்க்கிலே.

சுக்கிலத்தைச் செலுத்தும் வாயு குறைவாக இருந்தால் குழந்தை குட்டையாகப் பிறக்கும். பாய்கின்ற வாயு மெலிந்திருந்தால் பிறக்கும் குழந்தை முடம் ஆகும். பாய்கின்ற வாயு தடைப்படில் குழந்தை கூனனாகப் பிறக்கும். பெண்களுக்கு இதைப் போன்று பாய்கின்ற வாயு என்பது இல்லை.
 
481. தாயின் வயிறு பாதிக்கும்

மாதா உதரம் மலம் மிகின் மந்தன் ஆம்;

மாதா உதரம் சலம் மிகின் மூங்கை ஆம்;
மாதா உதரம் இரண்டும் ஒக்கின் கண் இல்லை;
மாதா உதரத்திலே வந்த குழவிக்கே.

அன்னையின் வயிறு கருவில் வளரும் குழந்தையைப் பாதிக்கும். அன்னையின் வயிற்றில் மலம் மிகுந்து இருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் பிறக்கும். அன்னை வயிற்றில் நீர் மிகுந்திருந்தால் குழந்தை ஊமையாகிவிடும். அவள் வயிற்றில் மலம், நீர் இரண்டுமே மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை குருடனாகிவிடும்.
 
திருமூலரின் திருமந்திரம் ( இரண்டாம் தந்திரம் )

14. கர்ப்பக் கிரியை

(கர்ப்பத்தில் உருவாகும் உயிர்களை இறைவன் காக்கும் முறை)

#482. மூச்சுக் காற்றும் பாதிக்கும்

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்ததுவாகில்
குழந்தையும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.

இன்பம் துய்க்கும் போது ஆண் மகனின் மூச்சுக் காற்று சூரிய கலையில் (வலது நாசித் துவாரத்தில்) இயங்கினால் ஆண் குழந்தை கருவில் உருவாகும். சந்திர கலையில் (இடது நாசித் துவாரத்தில்) மூச்சுக் காற்று இயங்கினால் கருவில் பெண் குழந்தை உருவாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் பொழுது மலக் காற்றகிய அபான வாயு அதை எதிர்த்தால், சுக்கிலம் இரண்டாகப் பிரிந்து கருவில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும். சூரிய கலையும், சந்திர கலையும் ஒத்தவாறு இயங்கினால் அலி ஆகிவிடும் பிறக்கும் குழந்தை.
 
Back
Top