நவராத்திரியின் போது கொலு வைப்பது ஏன்?
அண்ட சராசரத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள். அவள் அருளால்தான், எல்லாம் உயிர் வாழ்கின்றன. இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. பலவிதமான பொம்மைகளை இஷ்டப்படி வைக்காமல், கொலுவை முறையாக வைக்க வேண்டும்.
ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் கொலு வைக்க வேண்டும். ஒன்பது படிகள் என்ற முறையில் கீழிருந்து வரிசையாக, முதல் படியில் ஓரறிவுள்ள செடி, கொடி, மரங்கள் முதலானவற்றை வைக்க வேண்டும்.
இரண்டாவது படியில் ஈரறிவுள்ள சங்கு, நத்தை, அட்டை முதலான, மெதுவாக ஊரும் உயிரினங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
மூன்றாவது படியில் கறையான், எறும்பு முதலான, சற்று வேகமாக ஊர்ந்து போகும் மூவறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்கவேண்டும்.
நான்காவது படியில் பறவை, வண்டு முதலான நான்கறிவுள்ள உயிரினங்கள்.
ஐந்தாவது படியில் பசு முதலான ஐந்தறிவுள்ள உயிரினங்கள்.
ஆறாவது படியில் குறவன்-குறத்தி, செட்டியார், பாம்புப் பிடாரன் முதலான ஆறறிவுள்ள மனிதர்களின் பொம்மைகள்.
ஏழாவது படியில் ஞானிகள் மகான்களின் வடிவங்கள்
எட்டாவது படியில் தசாவதாரம் முதலான தெய்வ வடிவங்கள்.
ஒன்பதாவது படியில் அதாவது மேல் படியில் பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவடிவம் மட்டுமே இருக்க வேண்டும். அவள் அருளால்தான் பலப்பல ஜீவராசிகள் உருவாகி, படிப்படியாக உயர்ந்து மேல் நிலையை அடைகின்றன என்பதை உணர்த்தவே இந்தக் கொலு அமைப்பு.
.