அன்னையின் அழகிய நாமங்கள் சில.
தௌர்பாக்யமாக இருக்கின்ற பஞ்சுப் பொதியை
சிதறடிக்கும் சூறாவளிக் காற்றாக இருப்பவளே!
அழகிய முகவிலாசம் ஆகிய தடாகத்தில் விளையாடும்
மீன்களுக்கு நிகரான கண்களை உடையவளே!
தன்னை வணங்கும் பக்தர்கள் உள்ளத்தின் அஞ்ஞான இருளைத்
தன் கால் நகங்களின் காந்தியால் அகற்றுபவளே !
பிரபஞ்சத்தைப் படைக்கும் எண்ணம் கொண்ட
காமேஸ்வருடைய இடது தொடைமேல் அமர்ந்து
அச்செயலுக்கு அவருக்கு துணை புரிபவளே !
சிருஷ்டி கர்த்தாக்களாகிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்,
ஈஸானன், சதாசிவம் ஆகிய ஐந்து மூர்திகளைக் கொண்டு
அமைக்கப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளி இருப்பவளே!
சுருதிகள் என்று சொல்லப் படுகின்ற பெண்களுடைய
கூந்தல் வகிட்டில் அமைக்கப் பெற்ற சிந்தூரத்தைத் தன்
பாத தூளிகைகளாகக் கொண்டவளே!
சாமரங்களைக் கைகளில் ஏந்திய லக்ஷ்மி தேவியும்,
சரஸ்வதி தேவியும் இட, வலப் பக்கங்களில் நின்று
சேவிக்கப் பெற்றவளே!
காமேஸ்வரருக்கும் அம்பிகைக்கும் இடையே
நடக்கும் விளையாட்டின் விளைவாக,
அண்டங்கள் என்னும் அலைகளை,
சதா சர்வ காலமும் தோற்றுவிப்பவளே.
தியானமாகவும், தியானம் செய்பவனாகவும்
தியானத்தின் இலக்காகவும் இருப்பவளே!
கண்களைத் திறப்பதாலும், மூடுவதாலும்
பிரபஞ்சத்தின் உற்பத்தியையும், ஒடுக்கத்தையும்
நிகழ்துபவளே! ,
மஹா கல்பம் என்ற பெறும் பிரளயத்தின் போது
மகேஸ்வரர் புரியும் மஹா தாண்டவத்துக்கு
சாக்ஷி யாக இருப்பவளே!