#54.
'எப்படியும் வாழலாம்' என்று இருப்பவர்கள்
'இப்படித் தான் வாழ வேண்டும்' என்றுறுதி
கொண்டவர்களைக் கண்டு மெச்சாவிட்டாலும்
தொண்டை வரள குறைகள் கூறவேண்டுமா?
இரத்தில், ராஜ பாட்டையில் செல்பவர்கள்
இரக்கம் என்பது எள்ளளவும் இன்றியே;
குண்டு, குழிகள் நிறைந்த சாலைகளில்
திண்டாடுபவரைக் கண்டு நகைக்கலாமா?
தான் மட்டும் நன்றாக வாழ்ந்தாலும்,
தத்தளிக்கும் தன் தம்பி தங்கையருக்கு
பாசத்துடன் உதவும் எண்ணத்தோடு ஒரு
நேசக்கரம் நீட்டவும் மனமில்லையா?
ராகம், துவேஷம் இல்லாத இடங்களில்
ராஜா போல தான் வாழ்ந்து கொண்டு;
நான்கு புறங்களிலும் இடி வாங்கும்
நம்மவரைக் கண்டு வருந்தவேண்டாமா?
எந்த உதவியும் செய்யாவிட்டாலும் சரி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சவேண்டாமே!
சொந்தம் என்று மற்றவரையும் எண்ணாத
அந்த மனிதர்களால் மட்டுமே இது முடியும்.