original composition - Tamil

Status
Not open for further replies.
I just to follow my guru, Vikrama ji. In this chain, I contribute for "VAYU"

வாயு
ஏ வாயுதேவனே
நீ வடக்கில் இருந்து வீசுவதால்- உன்னை
வடமொழியாலே அழைக்கின்றேன்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார் உலகில்
காற்றற்ற போதோ தூற்றுவார் இப்பாருலகில்
உன்னால் அன்றோ நாங்கள் உயிர் தரிதிருக்கிறோம்
உன்னால் அன்றோ நாங்கள் உணர்வு கொண்டிருக்கின்றோம்

ஏ வாயுதேவனே
கோலமாமாளிகை மீதும் குடிசையின் மீதும் நீயே
பேதமோர் அணுவுமின்றி விளையாடி மகிழ்கின்றாயே
தாயுமாய் சிசுவைக்காக்க தொப்புள்கொடி வழிநீ சென்று
தாய்க்குமோர் தாய்மை தந்தாய் வாழி நீ வாயுவே நாளும்

ஏ வாயுதேவனே
நீ சிந்தும் புன்னகையால் மலர்களாடி மகிழ்ந்தனவே
நீ நடக்கும் மென்னடையால் புள்ளினங்கள் சிலிர்த்தனவே
நீ கடந்து சென்ற பாதை தூய்மையுடன் திகழ்ந்தனவே
நீ நடத்தும் நாடகத்தை யாரறிவார் நாயகனே

ஏ வாயுதேவனே
உன் மைந்தன் அனுமன் என்பார் உன் மைந்தன் பீமன் என்பார்
உண்மையை உணராதார் உலகிலுள்ள மனிதரெல்லாம்
நீயின்றி நாங்கள் ஏது? இப்புவியில் உன் மைந்தர் அல்லால்
வேறொருவர் வாழ்வதற்க்கு இடமேது? வழியேது?

Pranams
 
தெருநாய்

எங்கும் பரவியுள ஈசனுக்கோர் பாமாலை
எழுத முற்பட்டு ஏடெடுத்து அமர்ந்திட்டேன்
எனைப்பாடு எனைப்பாடு என்று ஒரு குறுக்கீடு
எட்டி நான் பார்த்தேன் – சீ, ஒரு தெருநாய்

உனக்கென்ன தகுதி குரைக்காமல் கிட என்றேன்
"எங்குமுளன் ஈசன் எனில் என்னிடத்தில் அவனிலையோ?"
நாய் தொடர்ந்து கூறியதை நம் மொழியில் தருகின்றேன்
"மண்ணில் நான் பிறந்து மாதமொன்று ஆகிறது
புத்தியைக் கொண்டுன் பிழைப்பை நடத்தென்று
தாயும் விரட்டிடவே தனியன் ஆகிவிட்டேன்
கால் கொண்டு சேர்த்தது காலையில் இங்கென்னை
போவோர் பின் போனேன் வருவோர் பின் வந்தேன்
இங்குள்ள மனிதரை என் நண்பனாய் ஏற்றேன்
காலை முதல் பட்டினி, அது எனக்குப் பொருட்டல்ல
எனக்கொரு பிடிசோறு இடினும் இடாவிடினும்
இப்போது வருகின்றான் யாரோ ஒரு வேற்றாள்
அவனிடமிருந்து உமதுடமை காத்திடுதல்
என்தன் கடமை என எண்ணிக் குரைக்கின்றேன்
பணிசெய்து கிடப்பதென் கடன்" என்றுரைத்தது.

நாய் உரைத்த சொல் யாவும் நாயகனின் சொல்லேயாம்
நாய் வடிவில் விளங்கும் ருத்திரனுக்கு நம என்ற
வேதமொழி நினைந்து விம்மிதம் எய்தினேன்.
 
இரண்டல்ல ஒன்றுதான்

இரண்டல்ல ஒன்றுதான்


கணபதி முருகன் வேறானாலும் சைவம் என்பது ஒன்று
விட்டுணு சிவனுடன் வேறுபட்டாலும் இந்து என்பது ஒன்று
இந்து இஸ்லாம் வேறானாலும் தெய்வம் என்பது ஒன்று
நலமும் தீங்கும் வேறானாலும் கடவுள் தருவதால் ஒன்று

ஆணும் பெண்ணும் வேறானாலும் மனிதர் என்பதால் ஒன்று
வறியர் செல்வர் யாரானாலும் வலியின் வேதனை ஒன்று
கீழோர் மேலோர் யாரானாலும் மரணம் என்பது ஒன்று
மனிதர் மிருகம் வேறானாலும் பசியும் தாகமும் ஒன்று

மலையும் மடுவும் வேறானாலும் தாங்கும் பூமி ஒன்று
நதியும் கடலும் வேறானாலும் தண்ணீர் என்பது ஒன்று
பூமி சூரியன் வேறானாலும் ப்ரபஞ்சம் என்பது ஒன்று
வேற்றுமைகள் வெளியே காணினும் உள்ளே ப்ரம்மம் ஒன்று
 
நம: sadhasae

கவிதைகள் பிரிவின் வளர்ச்சி மகோன்னதம். பஞ்ச பூதங்கள் வழிபாட்டில் அக்னியும் வாயுவும் காட்டிய பாய்ச்சல் என்ன! ஒரு நாயின் வாய் வழி ஸ்ரீ ருத்ர மகிமை வெளிப்பட்டது என்ன! அத்வைத சாரம் அனாயாசமாக, அம்ருதவர்ஷினியாக, ஜாலம் காட்டும் லாவஹம் என்ன! இந்த லிஸ்ட்டை முழுமையாக வெளிப்படுத்த மறைந்த கே. பி. சுந்தரம்பாள் தான் வரவேண்டும். (அவர்தான் முருகனின் சிறப்புகளை இந்த பாணியில் பாடிப் பரவியவர்) தொடரட்டும் தமிழில் நடக்கும் இந்த வேள்வி.


அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை
தருவித்தருள் பெருமாளே!
 
உம்மாச்சி! காப்பாத்து !

Namassadhasae.

உம்மாச்சி! காப்பாத்து !

டுபாகூர் ஆசாமிகளிடம் இருந்து அவர்கள் அடிமைகளான வெஹுஜன சாமிகளை!
நீலப்படம் காட்டும் கருப்பு மீடியாக்களிடம் இருந்து வெள்ளை நிற விரும்பிகளை !

ஒரு மதத்தை மட்டுமே சீர்திருத்தப் புலனாய்வு செய்யும் போலி பகுத்தறிவு சிங்கங்களிடம் இருந்து அந்த சனாதன இயக்கத்தை!

உம்மாச்சியின் அசரீரி:
உனக்கும் எனக்கும் ஏன் இந்த இடைவெளி?
நான் என்ன அவ்வளவு தூரத்திலா இருக்கிறேன்?
'Let the buyer be beware'!

அவரவர் இச்சையில் எவை எவை உற்றவை அவை
தருவித்தருள் பெருமாளே!
 
ஓட்டைப் படகு

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.
சேருங்கள் திறனையெலாம், செலுத்திடுவோம் படகினையே.
எல்லையிலாப் பெருங்கடலாம் இதுவென்று தெரிந்தும்
எல்லையதைக் கண்டுவிட எண்ணியிதில் புறப்பட்டோம்

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.
பாருங்கள் படகினையே, பக்கத்தில் நோக்காதீர்.

அடிப்புறத்தில் ஒர் ஓட்டை. அதனாலென் நண்பர்களே?
அஞ்சாமல் செலுத்திடுவோம் அக்கரையை நோக்கிடவே.
ஓட்டை வழி நீர் புகுந்து உட்புகுந்தால் அஞ்சுவதேன்?
ஓயாது இறைத்துவிட உள்ளனவே இரு கரங்கள்.

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை
ஓருங்கள் இக்கூற்றை, உழைப்பொன்றே வெற்றி தரும்.

“இந்த ஒரு படகன்றி ஏற்றமுள வேறொன்றில்
வந்திருக்கலாகாதா?” எனுமிந்த வார்த்தைக்கு
இடமில்லை இங்கே. எடுத்து வந்த படகிதனால்
தடமகன்ற கடலிதனைத் தாண்டிடுவீர், வீரர்களே.

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.
சீர் உங்கள் நோக்கம் எனின் சிறுமதியை நீக்கிடுவீர்.

“புயல்வரும் நேரத்தில் புறப்பட்டுவிட்டோமே,
தயங்கியே நாம் சற்று தாமதித்து வந்தால் என்?”
என்று நீர் முணுமுணுத்தல் என் காதில் விழுகிறது.
வென்றிடப் பிறந்தோர்க்கு வேளையும் நாளும் ஏன்?

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை
போர் உங்கள் வாழ்க்கை. அதில் பொருதே புகழ் காண்பீர்.

பொங்கிவரும் கடல்நீரும் புயற்காற்றும் சேரட்டும்.
எங்கும் இருள். அதனூடே இடிமுழக்கம் கேட்கட்டும்.
மனத்துள்ளே காணுங்கள்- மற்றுமொரு சுழற்காற்று.
மனவேகம் பீறிட்டால் வளிவேகம் என்செய்யும்?

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.
பாருங்கள் புறப்புயலும் பஞ்சாய்ப் பறப்பதையே.

உண்டிங்கே பலவகையும் உடனுறையும் தோழர்களில்.
நொண்டி, குறைகூறி, நோயாளி, கோமாளி,
அச்சத்தால் செத்தவர்கள், அறிவில்லா மூடர்கள்.
மிச்சத்தின் துணை கொண்டு மேவிடுவோம் கரைநோக்கி.

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.
ஊறுங்கள் பக்தியிலே ஓங்குபெரு சக்தியின் பால்.

உள்ளத்தில் நின்று ஊக்குகிறாள் நம் சக்தி.
கள்ளத்தனம் இன்றிக் காட்டுகிறாள் கருணையினை.
தெய்வம் அவள் என்று திடமாய்ப் பற்றிவிட்டால்,
கைவலிமை தந்து அவளே காரியங்கள் நடத்திடுவாள்.

வாருங்கள் தோழர்களே, வலித்திடுவோம் துடுப்புகளை.
ஊர் உங்கள் புகழ் பாடும் உழைப்பின் உயர்வெண்ணி.
 
Status
Not open for further replies.
Back
Top