பொறி தெறித்த அறை.
விசாகா சென்ற புதிது.
தெலுகு பேச வராது!
சிம்மாசலம் பார்க்கப்
போனோம் பஸ் பயணம்.
அம்மாவிடம் சின்னவன்,
ஆறு மாதக் குழந்தையாக!
என்னிடம் என் பெரியவன்,
மூன்றரை வயதுப் பையன்.
தரிசனம் முடிந்து பஸ்ஸில்
ஏறினால் சரியான கூட்டம்!
காய்கறிக்காரர்கள் அட்டஹாசம்
சொல்லாமலேயே தெரிந்துவிடும்.
தூங்கும் குழந்தை தோளில்,
ஒரு கையில் கம்பியைப் பற்றி,
காலை ஊன்றிச் செய்த பயணம்
'தொங்கும் ஊர்தி'யில் போலவே .
அம்மா கதவுக்கு நேரே circus !
அம்மாவுக்கு பின்புறம் நான்.
காய்கறிக் கூடைகள் வழி நெடுக!
காலை வைக்கவும் இடமில்லை!
கூடைகள் வித்தியாசமானவை;
வட்டம் அதிகம், உயரம் குறைவு!
ஒருத்தி அம்மாவைத் தொடர்ந்து
பிடித்துத் தள்ளிக் கொண்டே இருக்க,
வில் போல உடலை வளைத்து,
அம்மாவும் குழந்தையுடன் சமாளிக்க;
தெலுங்கில் திட்டிக்கொண்டே அவள்
தொடர்ந்து பிடித்துத் தள்ளவே எனக்குள்
நிகழ்ந்தது நரசிம்ஹ அவதாரம்!
கம்பியை விட்டு விட்டு நின்று,
கொடுத்தேன் அவளுக்கு ஒரு அறை!
செவிட்டில் பொறி பறக்கும் அறை!
எனக்குத் தெரிந்த 'மொழி'யில் பேசினேன்!
எனக்கு வேறு வழி தெரியவில்லை!
விழுந்தால் அம்மாவும் குழந்யையும்,
விழுவது எங்கே எனக் குலை நடுங்கியதால்!
இப்போதோ அவளுக்கு ஆவேசம் வந்தது!
பத்திரகாளி போலத் திரும்பினாள்.
ஓங்கிய அவள் கையைத் தடுத்தேன்!
உடைந்த கண்ணாடி வளையல் பட்டு,
ஒரு துளி ரத்தம் வந்ததும், ஆவேசம்
எல்லை மீறிவிட்டது எல்லோருக்கும்!
சம்பேஸ்தானு (கொன்று விடுகிறேன்)
என்று மொத்தக் கூட்டமும் நெருங்க;
ஆஞ்சநேயரே என் உதவிக்கு வந்தார்;
ஆஞ்சநேயலு என்னும் மனிதர் வடிவில்!
அவருக்குத் தெரிந்து விட்டது உடனேயே
எங்கள் நிலைமை என்னவென்று!
எங்கள் கம்பெனி security officer அவர்
என்று அப்போது எனக்குத் தெரியாது.
அவரும், அவருடைய நண்பர்களும்,
அமைத்தனர் வியூகம் எங்களைச் சுற்றி!
அத்தனை பேரையும் தடுத்தும், விரட்டியும்,
அண்ணன் போலக் காப்பாற்றினார் அவர்.
வீடு வரையிலும் துணைக்கு வந்து
மாடியேறிச் செல்லும் வரை நின்றார்.
உடன் வந்த இவர் என்ன செய்தார்?
"கதை கதையாம்" என்று பலநாட்கள்
கதை போலச் சொல்லிச் சொல்லி
அதைக் கேட்பவர்களுடன் சிரித்தார்!
அன்று மட்டும் அந்த ஆஞ்சநேயலுகாரு,
அந்த பஸ்ஸில் வராமல் இருந்திருந்தால் ...!
அன்றிலிருந்து தெரிந்து கொண்டேன்
அழைக்காமலே உதவுது யார் என்று!
வாய் விட்டுச் சொன்னாலும் கூட,
வந்து செய்யாதவர்கள் மனிதர்கள்.
மனத்தால் "நீயே கதி!" என்று உறுதியாக
நினைத்தவுடன் வந்து உதவுபவன் அவன்!
தெய்வம் மனித வடிவில் வரும்!
தெய்வ மனிதர்கள் பலரைக் கண்ட
பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.
நம்பினார் கெடுவதில்லை உண்மை!