-kurai ondrum illai - குறையொன்றுமில்லை

Status
Not open for further replies.
-kurai ondrum illai - குறையொன்றுமில்லை

KURAI ONDRUM ILLAI- குறையொன்றுமில்லை

Part1, Chapter 1


அத்தியாயம் 1

யமுனை நதி புண்ணியத்தை தேடி கொண்டது. கோதவரியோ களங்கத்தை தேடிக்கொண்டது. எப்படி என்கிறீர்களா?

"தூய பெருநீர் யமுனை துறைவனை" என்று பாடிய ஆண்டாள், கண்ணனுடைய அவதார காலத்தில் உபகாரம் பண்ணின யமுனை நதிக்கு நற்சான்றிதழ் தருகின்றார். என்ன உபகாரம்?


வசுதேவர் கண்ணனை தூக்கிக்கொண்டு நந்தகோகுலத்துக்கு போகையில், அவர் கேட்காமலேயே இடுப்பளவுக்கு வடித்து வழி விட்டது அந்த யமுனை நதி. புண்ணியத்தை, தூய்மையை தேடிக்கொண்டது.

ஆனால் கோதாவரி நதியோ களங்கத்தை தேடிக்கொண்டது. எப்படி? ஸ்ரீ ராமாவதாரத்தின்போது ராவணன் சீதாபிராட்டியை அபகரித்து போகிறான். அப்போது பிராட்டி கதறி அழுகிறார் "ஹே கோதாவரி, நீயும் பெண் நானும் பெண். எனக்கு நேரும் துன்பத்தை நீ இப்படி பார்த்துக்கொண்டு இருக்கியே, என் பர்த்தா வந்து என்னை தேடுவார். அப்போதாவது சொல்லு ராவணன் என்னை அபகரித்துப் போனான் என்று தவறாமல் சொல்லு".

ராமன் வந்து தேடியபோது "சீதையை கண்டீர்களா"? என்று மரம் மட்டையிடம் எல்லாம் கேட்டபோது கோதாவரி பதிலே சொல்லவில்லையாம். ஒரு அலை கூட அடிக்கலை. ராவணனிடம் இருந்த பயத்தினால் பேசாமல் இருந்து விட்டாள்.

உண்மை தெரிந்தவர்கள், உரிய சமயங்களிலே அதை சொல்ல வேண்டும் - வெளிபடுத்த வேண்டும். அப்படியில்லாமல் "நமக்கு அதில் நேரடி சம்பந்தமில்லைன்னு" வாய் பொத்தி இருந்துட்டா களங்கம் வந்துடும். அப்பேர்ப்பட்ட களங்கம்தான் கோதாவரிக்கு ஏற்பட்டது.

திரேதா யுகத்திலே கோதாவரிக்கு ஏற்பட்ட இந்த களங்கம் கலியுகத்திலே தீர்ந்து போயிற்று... எப்போது தீர்ந்தது என்று கேட்டால் ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆண்டாள் பிறந்தப்போ, பெரியாழ்வார் அந்தக் குழந்தைக்கு "கோதா" (கோதை) என்று பெயர் வைத்தாரே ... அப்போது தீர்ந்தது கோதாவரியின் களங்கம்.

இந்தக் கதையை சொல்லி அடியேன் ஆரம்பிக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு... "நாம சாம்யம்" - பெயர் ஒற்றுமை என்கிறதன் பெருமை நேயர்களுக்குப் புரிய வேண்டுமில்லையா...? அதனால் சொன்னேன்.

நம் குழந்தைகளுக்கும் தெய்வீகத் திருபெயர்களைச் சூட்டுவது இந்த"நாம சாம்யம" கருதிதான். பெயர் சூட்டப்படுபவர்களுக்கும் ராமா, கிருஷ்ணா என்று அந்தப் பெயர்களைச் சொல்லி அழைப்பவர்களுக்கும் ஒருசேர நன்மைகள் உண்டாகும் என்றுதான்.

"பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்" என்கிறது கருடபுராணம். பகவானின் கல்யாண குணங்களைச் சொல்லும் திருநாமங்கள் ஒரு மூட்டை என்று இதற்கு அர்த்தம்.
மூட்டை என்றல் சுமையல்லவா? என்று யோசிக்க கூடாது. பூர்வகாலத்தில் ஊர் விட்டு ஊர் செல்பவர்கள் நடந்து தான் போவார்கள். கையில் ஒரு மூட்டையை எடுத்துப் போவார்கள். கட்டுச் சாத மூட்டை. வழியிலே குளக்கரையிருக்கும். மரத்தடியில், குளக்கரையில், மூட்டையைப் பிரித்து வைத்துச் சாப்பிடுவார்கள். களைப்பும் தீரும், போய்ச் சேர வேண்டிய இடத்துக்கும் போய்ச் சேரலாம்.

வாழ்க்கை என்கிற பயணத்துக்கான கட்டுச்சாத மூட்டைதான் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம். சிரமத்தை, களைப்பை, அலுப்பைப் போக்கும் மூட்டை. பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள் "நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே"... பகவானை எண்ணிக்கொண்டே நாம சங்கீர்த்தனம் பண்ண வேண்டும். சங்கீர்த்தனம் என்றால் இடைவிடாது எப்பவும் சொல்லிக் கொண்டேயிருப்பது என்று பொருள்.

இடைவிடாது சொல்கிற அளவுக்கு அப்படி என்ன பெருமையிருக்கிறது, ஏன் சொல்ல வேண்டும் என்று தர்க்கம் பண்ணலாம். நமது ஹிந்து மதத்துக்குப் பரம பிரமாணம் வேதம் தான். பக்தி, பிரபத்தி, சரணாகதி, கர்ம யோகம், ஜானயோகம் எல்லாம் வேதத்தில் உள்ளவை தான். பகவானே கூட அந்த வேதத்தைத்தான் மேற்கோள் கட்டிச் சொல்கிறார்.
ஏகாதசி தினம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஈரவாடை சேவை. ஆபரணங்களை எல்லாம் களைந்து விட்டு வெறும் துளசி மாலை அணிவித்திருக்கிறார்கள். ஈரம் படிந்த வஸ்திரம் திருமேனியில் கிடக்கிறது. கற்பூர ஹாரத்தி நடக்கிறது. கொள்ளமாளா இன்ப வெள்ளமாய் - ஆச்சர்யமாய் தோற்றமளிக்கிறார் பகவான்.


அப்போது ஜீவாத்மாவுக்கும் பரமாத்வுக்கும் பெரிய சண்டையே வந்ததாம். "நான் சுதந்திரன்" என்று வாதடியாதம் ஜீவாத்மா. "இல்லை நீ எனக்குக் கட்டுப்பட்டவன்" என்றான் பகவான். "எதுனால அப்படிச் சொல்கிறாய்" என்று எதிர்த்துக் கேட்டதாம் ஜீவாத்மா.


இந்த சமயத்திலே பகவான், நான் சொல்றேன், அதனால் நீ என் அடிமை என்று பதில் சொல்லலை.

"வேத மூல ப்ரமாணாத்" என்று பதில் சொல்கிறார். அதாவது, வேதத்தின் மூலமான ஓம்காரத்தை ஆராய்ந்தால் உன் எதிர் கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்று சத்தியம் பண்ணுகிறார்.


"நான்" என்ற சப்தமே ஒலிக்காமல், அந்தப் பெருமானே "வேதத்தில் பதில் தேடு" என்று சொன்னதன் மூலம் வேதத்தின் உயர்வைப் புரிஞ்சுக்கணும். அவனையும் நம்மையும் சேர்த்து வைக்கிறது அந்த வேதம்தான்.


அப்பேர்ப்பட்ட வேதத்திலே.. திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா? திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது. நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது " பகவான் கட்டிப் பொன் போலே.. அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே"
கட்டிப்பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வச்சுக்க முடியுமா? கழுத்திலே போட்டுக்க முடியுமா? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா?

ஆனால் பகவானின் திருநாமன்களோ உடனே எடுத்தாளக்கூடிய ஆபரணங்கள். அணிந்தும், அணியச் செய்தும் மகிழலாம், அழகு பார்க்கலாம்.


பிள்ளைலோகாச்சார்யார் தமிழில் மூன்று அழகான சூத்திரங்கள் மூலம் இந்த வேதப் பொருளை விளக்குகிறார்.


"வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம் "


வாச்யன் - பகவான்; வாசகம் - அவன் நாமம். பகவான் கைவிட்டாலும் விட்டுவிடுவான். ஆனால் அவன் நாமம் கைவிடாது.


"அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்" ஹே விஷ்ணு! இதை ஏற்றுக்கொள் என்று சொல்லி ஹோமம் பண்ணுகிறோம். அவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கட்டுமே, அவன் பெயரைச் சொல்லி அளிப்பது அவனுக்குப் போய்ச் சேருகிறது.


"திரௌபதிக்கு ஆபத்திலே ஆடை சுரந்தது கோவிந்தா நாமமிறே"
வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரௌபதி கூப்பிடுகிறாள். "ஹே கிருஷ்ணா... ரக்ஷமாம் சரனாகதாம்" என்று . அனால் பகவான் அவளை ரட்சிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார். "ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு குறை உண்டு. கிருஷ்ணாவதாரத்திலே திரௌபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை... என்கிறார்.

திரௌபதிக்கு ஆடை சுரந்ததே? உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம் என்று கேட்டால் பகவான் சொல்கிறார் "
நானில்லை, என் கோவிந்தா நாமம் அவளை ரக்ஷித்தது"
அதனால்தான் ஆண்டாள் பாடினாள் "இப்படியெல்லாம் குறைப்பட்டுக் கொள்கிறாயே, உன்னிடம் கூட குறை என்பது இருக்குமா? என்று அர்த்தமாகும்படி திருப்பாவையில் "குறையொன்றும் இல்லாத கோவிந்தா" என்று அவனை அழைத்தாள். கோவிந்தா என்கிற நாமம் இருக்கும்போது உனக்குக் குறை இல்லை. உன்னை ஆச்ரயிக்கிறவர்களுக்கும் குறையில்லை என்றாள். பகவானின் நாமமே நம்மை ரட்சிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.


எல்லாம் சரிதான். இப்படி இடைவிடாது கோவிந்தா என்று சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் உலகக் கடமைகளைச் செய்ய வேண்டாமா? அவனுடைய பல நாமங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளனவே, வாயிலே நுழைய வேண்டாமா? இப்படி நியாயமான சந்தேகங்கள் பல பேருக்கு வரத்தான் செய்யும். அவற்றுக்கான பதில்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.


தொடரும் ...


TO BE CONTINUED
http://vmuralidharanji.blogspot.in/2014/05/part-1-chapter-45.html
 
Status
Not open for further replies.
Back
Top