Krishna Jayanthi 2024

praveen

Life is a dream
Staff member
கிருஷ்ண ஜெயந்தி 2024

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 09.13 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதே சமயம், ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 09.41 மணிக்கே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 மணி வரை ரோகிணி நட்சத்திரம். இருந்தாலும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் இரவு நேரமே கிருஷ்ணர் அவதரித்த நாளாக கருதப்படுவதால் ஆகஸ்ட் 26ம் தேதி மாலையே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும்.

26/8/24 முனித்ரய வைகானச ஸ்ரீஜயந்தி ஜன்மாஷ்டமி

27/8/24 ஸ்ரீபாஞ்சராத்ர ஜெயந்தி

மற்றும் உங்கள் வழக்கபடி


பொதுவாக கடவுளுக்குரிய நல்ல நாட்களில் விரதம் இருந்து அதற்கான பலன்களை அடைந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் விரதம் இருப்பது எவ்வளவு பலன்களை தரும் என்று.

விரதத்திற்கான பலன்கள் கிடைக்கும் என்பது உங்களுக்களுக்கான நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதே போல் கிருஷ்ண ஜெயந்தி அன்று என்ன பலன்கள் கிடைக்கும்?
கிருஷ்ண ஜெயந்தியன்று எந்த நேரத்தில் விரதம் இருக்கவேண்டும்.?எப்படி கிருஷ்ணனை வழிபாடு செய்யவேண்டும் ?என்கிற விபரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கிருஷ்ண ஜெயந்தி விரதம்:

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு நாள் தான் வரும்.

ஏன் இரண்டு நாட்கள் என்று பல பேருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.

இந்த இரண்டு நாட்களில் எந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடவேண்டும் என்றும் யோசிப்பீர்கள்.

ஒருசில மரபினர்கள் அஷ்டமியை கணக்கிட்டு வரக்கூடிய ஜெயந்தி நாளை கிருஷண ஜெயந்தியாக கொண்டாடுவார்கள்.

வைணவர்கள் ரோகிணி நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்நாளை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.

அஷ்டமியுடைய சொச்சம் அதிலிருந்து ரோகிணி நட்சத்திரம் எப்போது வருகிறதோ அப்போது தான் ஸ்ரீ ஜெயந்தி என்கிற நாள் கொண்டாடபடுகிறது.

இதுவே ஸ்ரீ ஜெயந்தி என்னும் கிருஷ்ண ஜெயந்திக்கும் அஷ்டமி என்கிற கோகுலாஷ்டமிக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்தான் கோகுலாஷ்டமி.

அதாவது ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார்.

இதைத்தான் கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணர் பிறந்தது ரோகிணி நடத்சத்திரம். ஆவணி மாதம் அதாவது சிம்மத்தில் சூரியன் இருக்கும்போது அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய
நாளை பஞ்சராத்ர ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள்.


பஞ்சராத்ர ஜெயந்தி என்றால் என்ன?

வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்திரம், வைகானஸம்
என்ற இரு ஆகமங்கள் உண்டு.

பஞ்சராத்ர ஆகமம் என்பது பத்திரிகாஸ்ரமத்தில் மகாவிஷ்ணு தானே மனிதனுமாகி, அந்த மனிதனுக்கு அவர் உபதேசித்த
பூஜா முறை.

இந்த உபதேசம் ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் இதற்கு பஞ்சராத்திரம் என்று பெயர் வந்தது.

மகாவிஷ்ணு, வைகானஸ முனிவராக வந்து சவுனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த முறையே வைகானஸ ஆகமம் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சராத்திர ஜெயந்தி என்பது ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியைத்தான் சொல்கிறார்கள்.

அன்றைய தினம் சூரிய உதயத்தில் சப்தமியோ, கிருத்திகையே ஒரு வினாடிகூட இல்லாமல் இருக்க வேண்டும்.

அப்படி இருந்துவிட்டால் மறுநாள்தான் இந்த ஸ்ரீஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம் நள்ளிரவில்
ரோகிணி நட்சத்திரம் உள்ள நாளில் வைகானஸ ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

இப்படி பல விதங்களில் கிருஷ்ணரின் பிறந்தநாள் விரதங்கள் அனுசரிக்கப்படுகின்றன

பல வருடம் இந்த இரண்டும் ஒன்றாக வரும்,சில ஆண்டு இரண்டும் தனியாக கூட வரும்

அதற்கு ஏற்றது போல் அந்நாளை வழிப்படுகிறார்கள்.

இரண்டில் எந்த நாளை கொண்டவேண்டும் என்றால் இரண்டுமே நல்ல நாள் தான்.

அஷ்டமி என்பது கிருஷ்ணன் அவதரித்த திதி, ரோகிணி என்பது கிருஷ்ணனுடைய அவதார நட்சத்திரம் .அதனால் நல்ல நாள் தான் .எந்த நாள் வேண்டுமானலும் கொண்டாடலாம்

மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் ஆகிய இந்த இரண்டு அவதாரங்கள் தர்மத்தை நிலை நாட்ட நிகழ்ந்தது ஆகும்.

நம்மை சுற்றியிருக்கும் அதர்மத்தை அழிக்கவும், நாம் அதர்மத்தை எதிர்த்து தர்மத்தின் வழியில் நடக்கவும், கிருஷ்ணர் அருள் பெறவும், எல்லா செல்வங்களும், மழலைச் செல்வமும் பெற வேண்டியவர்கள் இந்த கோகுலாஷ்டமி வழிபாட்டை செய்யலாம்.

கோகுலாஷ்டமியில் காலை முதல் பூஜை முடியும் வரை உணவேதும் உண்ணாமல் கிருஷ்ண லீலைகள் படித்தும், கேட்டும் விரதம் இருக்கலாம்.

முழு விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவைத் தவிர மற்ற எளிய உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

கோகுலாஷ்டமியில் கிருஷ்ணரை மையப்படுத்தி அவருக்கு மிகவும் பிடித்தமான பால், தயிர், வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை, தட்டை, அப்பம், அவல் பாயாசம், அவல் லட்டு, நாட்டு சர்க்கரை, விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றை வைத்து வழிபடுவது சிறப்பு.

இதில் அவல் மற்றும் வெண்ணை மிகவும் முக்கியம்.

எனவே எதுவும் செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டினை வைத்து வழிபட்டாலே கிருஷ்ணருடைய பரிபூரண அருளைப் பெறலாம்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதியில் இரவு வேளையில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கிருஷ்ணருடைய படம் அல்லது விக்ரகத்தை மஞ்சள் தடவிய மனையில் அமர்த்த வேண்டும்.

அவருக்கு முன்பாக வாழை இலை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது செம்பு கலசம் ஒன்றை வைத்து அதில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள்.

பின்னர் அதில் மாவிலை விரித்து, தேங்காயை கலசம் போல் வையுங்கள்.

கலசத்திற்கு வலது புறத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வையுங்கள். எல்லாவற்றிற்கும் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் வாசற்படியில் இருந்து பூஜை அறை வரை ஸ்ரீ பாதம் வரைய வேண்டும்.

நீங்கள் வரையும் பாதம் சின்னஞ்சிறு குழந்தையின் பாதமாக இருப்பது சிறப்பு.

எனவே உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடைய காலடி தடத்தை வரையலாம்.

அல்லது உங்கள் கைகள் கொண்டு படம் வரைந்து விரல்களை இடலாம்.

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த நைவேத்தியங்களை இலையில் வைத்து படைக்கவும்.

அன்றைய நாளில் ஏழை குழந்தைகளுக்கு தானம் செய்ய விரும்புபவர்கள் பூஜையில் நோட்டு, புத்தகம் போன்றவற்றை புதிதாக வாங்கி வையுங்கள்.

பின்னர் நெய் ஊற்றி விளக்கை ஏற்றவும். முதலில் பிள்ளையாரை வழிபட்டு பின்பு கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்களையும், மந்திரங்களையும் பாராயணம் செய்து கொண்டே தூப, தீப, ஆரத்தி காண்பியுங்கள்.

ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கியமான மந்திரங்கள்

ஓம் ஸ்ரீம் நம: ஸ்ரீ கிருஷ்ண பரிபூர்ணத்மயே ஸ்வாஹா!!!

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்!

கிருஷ்ணர் ஸ்தோத்திரம்


கிருஷ்ணர் சுலோகம்

ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்வ சித்யந்த ஹேதவே l
விஸ்வேஸ்வராய விஸ்வாய
கோவிந்தாய நமோ நமஹ ll
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே l
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ!’

குழந்தை வரம் பெற என்ன செய்ய வேண்டும்?

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய no சந்தான பாக்கியம் தேஹிமே ஸ்வாஹா

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு இந்த கிருஷ்ணர் மந்திரத்தை 108 முறை ஜபித்து பின்னர் தம்பதியராக அந்த வெண்ணெயை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்ய விரைவில் கிருஷ்ணரே உங்களுக்கு பிள்ளையாக அவதரிப்பார் என்பது ஐதீகம்.

பூஜையை எப்படி நிறைவு செய்வது?

பூஜைகள் முடிந்த பின்பு குழந்தைகளுக்கு கிருஷ்ண லீலை, கிருஷ்ணன் பிறந்த கதை ஆகியவற்றை கண்டிப்பாக அருகில் அமர வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இதனால் குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

இறை நம்பிக்கையும் மேம்படும். கிருஷ்ணன் அவதரிக்கும் பொழுது தாய், தந்தை ஆகிய தேவகி, வசுதேவரும் உடன் சந்திரனும் மட்டுமே விழித்து இருந்ததாக புராணங்கள் கூறுகிறது.

எனவே ஜன்மாஷ்டமியில் சந்திர தரிசனம் செய்வது எல்லா வகையான நன்மைகளையும் பெற்று தரும்.

நம் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்தும்.

பின்னர் கலசத்தை வலது புறமாக நகர்த்தி எல்லாவற்றையும் கலைத்துப் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், உணவு, உடை, கல்விக்கு உதவி செய்தல் போன்ற தானங்களை செய்து மகிழலாம்.

இதனால் குழந்தை கிருஷ்ணருடைய அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

1724426813619.webp
 
@praveen thank you so much for posting useful guidelines for the community. For krishna janmashtami is there an English or Sanskrit version for poojakramam ? If not, it will be very useful to have in future. Thank you again.
 
Back
Top