• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

30 Interesting Titbits about Krishna Jayanthi

praveen

Life is a dream
Staff member
இதோ, கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டது.

எத்தனை குதூகலம்? ஒரு குழந்தையின் ஜென்ம தினத்தை உலகெல்லாம் கொண்டாடும் மகத்தான திருநாள் அல்லவா இது! இந்த நன்னாளில் கிருஷ்ணரைப் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வோமே! அதற்குத்தான் இந்த முத்துக்கள் முப்பது!


1. கோகுலாஷ்டமி வேறு, ஜெயந்தி வேறா?

பஞ்சாங்கங்களில் இரண்டு தினங்கள் கிருஷ்ண ஜெயந்தி போட்டிருக்கும். பொதுவாக ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கிருஷ்ண ஜெயந்தி ஆகும். ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுவார்கள். வடநாட்டில் பெரும்பாலும் கோகுலாஷ்டமிதான். அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்ளப்
படுகிறது.

2. கிருஷ்ணன் - பொருள் என்ன?

கிருஷ்ணன் - ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் ''கிருஷி' மற்றும் ''நித்திய அமைதி' என்பதைக் குறிக்கும் ''ண' ஆகிய இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன்
கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான்..

3. வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருஷ்ணனின் இளமைக்கால வாழ்வை நடிப்பதாகும்.

4. எப்பொழுது கண்ணன் அவதாரம் எடுத்தான்?

பரமபதத்தில் பகவானுக்குத் திருமஞ்சனம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே நித்யசூரிகள் கண்ணிமைக்காமல் திருமஞ்சனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணாவதாரம் எடுத்தாக வேண்டும்.சந்தனக்காப்பு நடந்து நறுமணப் புகை போடப்பட்டது. அடர்த்தியான புகை, மூடி விலகும். அந்த இடைவெளி நேரத்தில் பகவான் பூலோகத்துக்கு வந்து கிருஷ்ணாவதாரம் எடுத்து, லீலைகளைச் செய்து, பாரதப்போர் முடித்து, தன் ஜோதிக்கு வந்துவிட்டாராம்.

'சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண.'' என்று இதை நம்மாழ்வார் பாடுகின்றார்.

5. கண்ணன் ஏன் வெண்ணெயை விரும்பினான்?

பாலோடு தண்ணீர் சேர்த்தால் சேர்ந்துவிடும். தயிர் ஆக்கி தண்ணீரைக் கலந்தாலும் தயிர் மோர் ஆகிவிடும். கடைந்து வெண்ணெய் எடுத்த பின்பு தண்ணீரில் போட்டால் தண்ணீரில் மிதக்கும். உலகியலில் பால் தண்ணீரோடு சேர்ந்ததுபோல, என்னதான் ஓரளவு பயிற்சி பெற்றாலும், பக்குவம் இல்லாத ஆன்மா உலக வாழ்வில் கரைந்து விடுகிறது. என்னதான் இந்த உலகத்திலேயே இருந்தாலும் தன்னைப் பாதிக்காத பக்குவப்பட்ட ஆத்மாவாக இருக்கக் கூடிய வெண்ணெயை பகவான் விரும்புகின்றான்.

6. எல்லா ஆழ்வார்களும் கண்ணனை அதிகம் பாடியிருக்கிறார்கள்

கண்ணனைப்பாடாத ஆழ்வார்கள் இல்லை. நாலாயிரத்தில் அதிகப் பாடல்கள் கண்ணனுக்குத்தான். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகவே பாவித்து, திருமொழி பாடினார். அது பெரிய திருமொழி என்று அழைக்கப்பட்டாலும், ''கண்ணன் பிள்ளைத்தமிழ்'' என்று போற்றப்பட்டு, தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகப் பெரியாழ்வார் கருதப்படுகிறார்.

7. ஏன் அரிசி மாவினால் பாதம் போடுகிறோம்?

கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணன் நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது, கீழே சிதறிய வெண்ணையில் அவன் பாதங்கள் வீடு முழுவதும் இருக்குமாம். கண்ணன் வந்து போயிருக்கிறான் என்ற அடையாளம் அது. பழைய காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவார்கள். பின்னாட்களில் அரிசி மாவினால் பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள். எப்படியோ நம் வீட்டிற்கு கண்ணன் வந்தால் மகிழ்ச்சிதானே!

8. இந்து மதத்தில் கண்ணன்

கண்ணன் இல்லாத இந்துமதக் கதைகளை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒரு குழந்தையாக, குறும்புக்காரனாக, காதலனாக, தர்மம் தெரிந்தவனாக, மாயங்கள் செய்பவனாக, எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பவனாக, பிரச்சினைகளைத் தேடாமல் தீர்வுகளைத் தேடுபவனாக, எளிமையோடு எல்லோரிடமும் கலந்து இருப்பவனாக, தோழனாக... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம், மஹாபாரதம் போன்ற நூல்களில் கண்ணனைப்பற்றி ஏராளமான குறிப்புக்கள் உண்டு.

9. சங்க இலக்கியங்களில் கண்ணன்

கண்ணன் வழிபாடு 4வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கண்ணனை வழிபட்ட ஆயர்களையும், அவர்கள் கண்ணனை திருமால் எனும் பெரும் தெய்வமாகக் கருதிப் பாடியது குறித்தும் விரிவாகக் கூறியிருக்கிறார். சங்க நூல்களில் கண்ணனைப்
பற்றியும் பலராமனைப் பற்றியும் குறிப்புகள் உண்டு. கி.பி 6-9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் (கண்ணன்) வழிபடப்பட்டுள்ளார்.கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கிருஷ்ணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. 1960 களில் உருவாக்கப்பட்ட இஸ்கான் அமைப்பு கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய
நாடுகளுக்கும் கொண்டு சென்றது.

10. இராமனைவிட கண்ணன் மீது அதிக அன்பு ஏன்?

இதற்கு அருமையான காரணங்களைக் கூறுகிறார்கள் உரையாசிரியர்கள். முதலில் ராமனை எடுத்துக் கொள்வோம். 1. இராமன் 10 திசைகளை வென்ற தசரதனுக்குப் பிள்ளை. தசரதன் சம்பராசுரனை வென்று இந்திரனுக்கு பதவியைத் தந்தவன். 2.சகோதரர்கள் நால்வருமே வீரம் உடையவர்கள் நற்குணம் பொருந்தியவர்கள் 3. வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்ற மகரிஷிகள் குருமார்கள். 4. சூர்ப்பனகையைச் சந்திக்கின்ற வகையில் அவருக்கு நேர் பகை கிடையாது. 5. பிறந்த ஊர் பகைவர்கள் எவரும் புகமுடியாத அயோத்தி. 6. ராமபிரான் அவதரித்த யுகம் தர்மம் நிறைந்த திரேதா யுகம்.

11. இவன் பாதுகாப்புக்கு ஆழ்வார்கள் அஞ்சினர்

கண்ணன் எளிய பெற்றோர்களுக்கு பிறந்தவன். பிறந்ததே சிறைக்கூடம். தகப்பனார் சாது நந்தகோபன். வளர்ந்தது பாதுகாப்பில்லாத இடைச்சேரி. பிறக்கும்போது இவனைக் கொன்று விடவேண்டும் என்று கம்சன் பகையோடு காத்திருந்தான். கண்ணனும் பலராமனும் தீமை செய்வதில் வல்லவர்கள். திரும்பிய பக்கம் எல்லாம் கொலை வெறியோடு பகைவர்கள். வழிகாட்டுகின்ற குருமார்களையோ துணை நின்று போராடுகின்ற சகவாசமோ இல்லை. ஊரிலும் பலருடைய பழிச் சொல்லை ஏற்றுக் கொண்டவன். கண்ணன் அவதரித்த காலம் கலியுகத்திற்கு மிகவும் சமீபமான துவாபரயுகம். எனவே ராமனை விட கண்ணனிடத்தில் ஆழ்வார் களுக்கு அதிக அன்பு இருந்தது.

12. கண்ணை உருட்டி விழித்து பயமுறுத்துவான்

குழந்தைகள் ஒருவரை ஒருவர் பயமுறுத்திக் கொண்டு விளையாடுவதை 'அப்பூச்சி காட்டுதல்' என்று சொல்வர். கண்களின் இமையை உட்புறம் வெளிப்புறம் ஆகும்படி மடக்கி, சிவந்த விழி பெரிதாகச் செய்து, பயமுறுத்துவது. ஆனால், கண்ணன் எப்படி அப்பூச்சி காட்டினான் என்பதை ராமானுஜர் விளக்குகிறார். அவன் கண்ணை உருட்டி காண்பிப்பதற்கு சாதாரண குழந்தை அல்லவே! அவன் மற்ற சிறுவர்களை பயமுறுத்த வேண்டும் என்று சொன்னால், திடீரென்று கைகளில் சங்கு சக்கரங்களை ஏந்திக்கொண்டு பயமுறுத்துவானாம். மற்ற சிறுவர்கள் பயந்து ஓடுவார்களாம். இதற்கு உதாரணமாக, '.... நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே' என்ற பாடலையும் ''கண்ணை உருட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரான்'' என்ற பாடலையும் ராமானுஜர் சொல்லுவார்.

(கழகண்டு = தீம்புகள்)

13. கடம்ப மரம் எப்படித் துளிர்த்தது?

காளிங்க நர்த்தனத்தின்போது நதிக்கரையில் இருந்த ஒரு கடம்ப மரத்தின் மீது கண்ணன் ஏறி, காளிங்கன் தலையில் குதித்தான் என்று வருகிறது. அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய நதியும் மரங்களும் காளிங்கனின் விஷத்தால் பட்டுக்கிடக்க, இந்த கடம்ப மரம் மட்டும் எப்படி கண்ணன் ஏறி குதிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் என்ற ஒரு கேள்வி எழுந்தது. பட்டர் சுவாரஸ்யமாக விடையளித்தார். 'கடம்ப மரத்தின் மீது ஏறுவதற்கு முன், அவன் ஒரு பார்வை பார்த்து இருப்பான். அவருடைய பார்வையின் சிறப்பினால் பட்ட மரமும் துளிர் விட்டது' என்றார். கண்ணனின் விழிகளை நாம் பார்த்தாலே பட்டுப்போன நம் வாழ்வும் கடம்பமரம் போல் துளிர்க்கும் என்பது உள்ளே இருக்கும் விஷயம்.

14. வேறு விளக்கம் சொன்ன நம்பிள்ளை

இதற்கு நம்பிள்ளை என்ற ஆச்சாரியார் வேறுவிதமாக விளக்கம் அளித்தார். பாரதப்போரில் அஸ்வத்தாமன் விட்ட பிரம்மாஸ்திரத்தால் அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை வெறும் கரிக்கட்டையாக பிறந்தது. குழந்தை இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் கதறி அழுதனர். கண்ணனைச் சரணடைந்தனர் அப்பொழுது கண்ணன் தன்னுடைய திருவடியால் தொட்டான். அகலிகை இராமபிரானின் திருவடியால், கல் பெண்ணானதுபோல, கரிந்து கட்டியாகியிருந்த பிண்டம் உயிர்த்து எழுந்தது. அது அவனது திருவடி மகிமை. அப்படிப்பட்ட திருவடியால் பட்டுப்போன கடம்ப மரத்தின் மீது ஏறினான். அதனால் கடம்பவனம் பூத்துக் குலுங்கியது என்று நம்பிள்ளை விளக்கினார்.

15. கண்ணனுடைய வாய்ச் சுவையும் நாற்றமும்

''கண்ணனுடைய வாய்ச் சுவையும் நாற்றமும் சொல்லாழி வெண்சங்கே'' என்று ஆண்டாள் விரும்பினாள். கண்ணனுடைய வாய்ச் சுவையை நன்கு அனுபவித்தது சங்கமும் புல்லாங்
குழலும். பாஞ்சசன்யம் கடலின் ஆழத்தில் கிடைப்பது. புல்லாங்குழல் மூங்கில் மரத்தின் உச்சியில் இருப்பது. கண்ணன் கீழே கிடக்கும் சங்கையும், மேலே கிடக்கும் மூங்கிலையும் வைத்துக்கொண்டு அழகான இன்னிசையைப் பாடினான். எங்கே இருந்தாலும் பகவான் கீழே மேலே என்று பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் சமமாகவே பாவிக்கிறான்.

16. பாஞ்சசன்யத்தின் முழக்கம்

கண்ணன் புல்லாங்குழல் ஊதினாலும் சரி, பாஞ்சஜன்யம் ஊதினாலும் சரி, அது சிலருக்கு பிடிக்குமாம். சிலருக்குப் பிடிக்காதாம். காரணம், அந்த ஒலிக்கு இரண்டு குணங்கள் உண்டு என்று ஆசாரியர்கள் சொல்லுகின்றார்கள். ஒன்று பக்தர்களுக்கு அது ஆனந்தத்தைத் தரும். பாகவத எதிரிகளுக்கு சங்கின் ஒலியே பரம நாசத்தைத் தருமாம். குருக்ஷேத்ர யுத்தத்தின் கண்ணனுடைய பாஞ்சஜன்ய ஒலியைக் கேட்டவுடனே அந்தச் சங்கின் ஒலி துரியோதனுக்கு நெஞ்சு வலியைத் தந்ததாம்.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்|
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந் ||கீதை 1-19||
(பாஞ்சசன்யத்தின் ஒலி திருதராஷ்டிரக்
கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது)

17. கண்ணன் குழலிசைக்கும் காட்சி

கண்ணன் குழலிசைக்கும் காட்சியை
ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச்
செய்ய வாய் கொப்பளிப்ப
கூடலிப்ப கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.

குழலிசைக்கும்போது குழலின் துளைகளில் புதைக்க வேண்டுவது, புதைத்துத் திறக்க வேண்டுவது, திறக்கைக்காக கைவிரல்களால் தடவ வேண்டியது, கண்கள் ஓர் வகையாக மேல் நோக்கி வக்கரிக்க வேண்டியது, இரண்டு கடை வாயையும் குவித்துக்கொண்டு ஊதுகிறபோது, வாயினுள் உள்ள காற்றின் பூரிப்பாலே வாய்குமிழ்த்து 'உப்' என்று தோன்ற புருவங்கள் மேற்கிளர்ந்து வளைய வேண்டியது என்று அப்படியே படம் பிடிக்கிறார்.

கண்ணபிரான் குழலூத, அதன் ஓசையைக் கேட்ட பறவைகள், தாமிருக்குங் கூடுகளை விட்டோடி வந்து, காட்டில் வெட்டி வீழ்ந்த மரங்கள்போல் ஆடாது அசையாது நிலத்தினில் விழுந்து கிடந்தனவாம். பசுக் கூட்டங்களும் மெய்மறந்து கால்களைப் பரப்பிக் கொண்டும் தலையைத் தொங்க விட்டுக் கொண்டும் உணர்வற்று திகைத்து நின்றனவாம். உயர்திணைப் பொருள்களோடு அஃறினைப் பொருள்களோடு வாசியற எல்லாப் பொருள்களும் ஈடுபட்டு மயங்குமாறு கண்ணபிரான் குழலூதினான் என்று பாடுவதை நினைத்துப் பாருங்கள். பரவசமாகும்.

18. புல்லாங்குழலும் உடலும்

புல்லாங்குழல் அற்புதமான இசைக்கருவி. திருவள்ளுவர் 'குழல் இனிது' என்று முதலில் புல்லாங்குழலைக் கொண்டாடுகிறார். புல்லாங்குழலுக்கும் மனித உடம்பிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலுமே ஒன்பது துவாரங்கள். புல்லாங்குழலுக்குள் செல்லும் காற்று இசையாகவும், மனித உடலுக்குச் செல்லும் காற்று ஆசையாகவும் பரிமளிக்கின்றன. புல்லாங்குழலை ஒழுங்காகக் கையாண்டால் அற்புத இசை பிறக்கும். நாமும் இந்த உடலை ஒழுங்காகக் கையாண்டு வாழ்ந்தால் ஒவ்வொரு கணமும் இனிமை பிறக்கும். தெய்வீகம் சிறக்கும்.

19. உன் பிறப்பும் என் பிறப்பும்

வேதம் கண்ணனைச் சொல்லுகின்ற பொழுது ''அஜாயமானோ பஹு தா விஜாயதே'' என்று ஓதுகிறது.அதாவது பிறப்பே இல்லாதவன்; பலபடியாகப் பிறக்கிறான். தனக்குரிய தாய் தந்தையர்களை சங்கல்பத்தால் தேர்ந்தெடுத்துக் கொண்டு
பிறக்கிறான். கண்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறன்.
'உனக்கும் பிறப்பு உண்டு எனக்கும் பிறப்பு உண்டு.'.
அர்ஜுனன் சட்டென்று கேட்கிறன்.
'அப்புறம் நீயும் நானும் ஒன்று தானே..'.

கண்ணன் சிரிக்கிறான்...' ஒரு கிணற்றில் தவறி விழுந்தவனும், விழுந்தவனை தூக்க விழுந்தவனும், எப்படியடா ஒன்றாக முடியும்? சிறைக்குள் இருந்தாலும் ஜெய்லரும் கைதியும் ஒன்றாகி விடமுடியுமா? நீ கர்மத்தின் வசப்பட்டு பிறக்கிறாய்? நான் என் சங்கல்பத்தால் பிறக்கிறேன். உன் பிறப்பை நீ செய்த வினைகள் தீர்மானிக்கின்றன. என் பிறப்பை நானே
தீர்மானிக்கின்றேன்.

20. திருவடியை பிடித்துக்கொண்டு கதறுகிறானே

ஒரு காட்சி. யசோதை கண்ணனைக் குளிப்பாட்ட அழைக்கின்றாள்.
குழந்தை அவ்வளவு எளிதாகவா குளிக்க வந்துவிடும்?
'பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும்
கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய்;
நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்க மே என் மணியே மஞ்சன மாட நீ வாராய்' என்று பாட்டு.

'கண்ணா! நீ விளையாடிவிட்டு புழுதி படிந்த தலை, உடம்போடு வருவது பார்க்க எனக்குச் சந்தோஷம்தான். ஆனாலும், மற்றவர்கள் உன்னைப் பரிகாசம் சொல்வார்களடா. நப்பின்னை உன்னைப் பார்த்துச் சிரிப்பாள். உனக்கு வெட்கமே இல்லையா? என் மாணிக்கமே! என் மரகத மணியே! நீராட வாடா!' என்று சொல்லி இழுத்து வந்து, காலை நீட்டி, கவிழ்த்து போட்டு, வெந்நீர் விளாவி ஊற்ற, அவனோ, ''என்னை விட்டுவிடு, என்னை விட்டுவிடு'' என்று யசோதையின் காலைக் கட்டிக்கொண்டு அழுகிறானாம்.

21. யார் பெரிய தவம் செய்தவர்?

அப்பொழுது சகல முனிவர்களும் பிரம்மாதி தேவர்களும் விண்ணகத்திலிருந்து பார்த்தார்களாம்.
யாருக்கும் கிடைக்காத பெருமை இந்த யசோதைக்குக் கிடைத்ததே? எவன் திருவடியைப் பிடிக்க வேண்டுமென்று சகல வேதங்களும், வேதங்களைக் கற்ற வேதியர்களும் முயற்சிக்கின்றார்களோ, அந்த திருவடிகளை உடையவன், இந்த யசோதை திருவடியை பிடித்துக் கொண்டு கதறுகிறானே, இவள் செய்த பாக்கியம் என்ன? தவம் என்ன? இந்த காட்சியை ஊத்துக்காடு வேங்கட கவி எப்படி அனுபவிக்கிறார் தெரியுமா?
என்ன தவம் செய்தனை யசோதா?

எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா
என்றைழைக்க (என்ன)
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட (என்ன)

யசோதா என்றால் யசஸ்ஸை (புகழை) உடையவள் என்று பொருள்.
பரம்பொருளை குழந்தையாக அடைந்த புகழ் வேறு யாருக்கு உண்டு.?

22. ஹஸ்தத்திலிருந்து எண்ண வேண்டும்

கண்ணன் எந்த நட்சத்திரத்தில் பிறந்தான் என்பதைப் பெரியாழ்வார் பாடுகிறார். ''தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள்
தோன்றிய அச்சுதன்' என்று பாடுகிறார்.

அத்தம் என்பது ஹஸ்த நட்சத்திரத்தைக் குறிக்கும்.
இப்படி ஏன் அவர் பாடினார்? நேரடியாகவே அவனுடைய திரு நட்சத்திரத்தைப் பாடி இருக்கலாமே. இப்படிக் கணக்கு போட்டு ஏன் பாட வேண்டும் என்ற கேள்விக்கு விளக்கமளித்தார் உரையாசிரியர். ஆழ்வார்கள் கண்ணனுக்கு ஏதேனும் ஆகிவிடுமே என்று அஞ்சுபவர்கள். அவன் பெயர், நட்சத்திரம் சொன்னால். கம்சனுக்குத் தெரிந்து
விடுமாம். அதனால் மறைத்துச் சொல்கிறார்களாம். அத்தத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக மேலே எண்ணினால் ரோகிணியும், கீழே எண்ணினால் திருவோணமும் வரும். இரண்டுமே பெருமாள் நட்சத்திரம் தானே.

23. புல்லாங்குழல் ஏன் மூங்கில் மரமாக வளர வில்லை?

அது வேறு ஒன்றும் இல்லை... இறைவன் நினைத்துவிட்டால் மறுபிறவி இல்லாமல் செய்து விடுவான். மோட்சத்திற்கு சென்ற ஜீவன் ''ந புனர் ஆவர்த்ததே'' என்று வேதத்தில் (பிரம்ம சூத்திரம்) சொல்லப்பட்டபடி, மறுபடி பிறப்பதில்லை. அதைப்போல கண்ணனின் கைபட்ட அந்தப் புல்லாங்குழல், மோட்ச நிலையை அடைந்தது. அதனால் அது மறுபடி தன் நிலையை அடைய வேண்டிய அவசியம் இல்லை.

24. கண்ணன் எடுத்த வித்தியாசமான அவதாரம்

கண்ணன் எத்தனையோ அவதாரங்களை எடுத்தான். அவன் எடுத்த அவதாரங்களில் ஒன்று விசித்திரமானது. திரௌபதி துரியோதனன் அவையில் துகிலுரியப்பட்டபோது, கண்ணா என்னைக் காப்பாற்ற மாட்டாயா' என்று அழுகின்றாள்.

ஆறாகி இருதடங்கண் அஞ்சன வெம் புனல் சோர,
அளகஞ் சோர,
வேறான துகில் தகைந்த கைசோர,
மெய்சோர, வேறோர் சொல்லும்
கூறாமல், கோவிந்தா கோவிந்தா என்று
அரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்துஊற, உடல் புளகித்து,
உள்ளமெலாம் உருகி னாளே!

என்று அவள் நிலையை வில்லிபுத்தூராழ்வார் எடுத்துக் காட்டுகின்றார். அப்பொழுது கண்ணன் துவாரகையில் இருந்தானாம். உடனடியாக புறப்பட்டு வர இயலவில்லை. இருந்தாலும் அங்கு அவளுடைய மானத்தைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? உடனே, வண்ணப் புடவை அவதாரமெடுத்து அவளை காப்பாற்றினானாம். எனவே 'புடவை அவதாரமும்' அவன் எடுத்த அவதாரங்களில் ஒன்று என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள்.

25. சேலை வியாபாரம் செய்த கண்ணன்

ஒருவர் தெருவிலே கண்ணனுடைய லீலை களைப் பாடிக் கொண்டே போனார். ஒரு வரி
வித்தியாசமாகக் கேட்டது. அர்த்தம் புரியவில்லை. அவன் பாடிய வரி இதுதான்.
''அத்தினத்துக்கும் ஓட்டகைக்கும் ஆயிரம் காதம்:

ஆனாலும் நடக்குதய்யா சேலை வியாபாரம்''
'இது என்னவோ பாடுகின்றான். இதற்கு என்ன பொருள்?' என்று அவனை அழைத்து கேட்டவுடன் அவன் சொன்னான். ஓட்டை என்றால் துவாரம். ஓட்ட + கை என்று சொன்னால், துவாரகை. அத்தினம் என்றால் அஸ்தினாபுரம். அஸ்தினாபுரத்தில் திரௌபதி மானபங்கம் செய்யப்பட்டபோது, அவள் கதறிய கதறல், துவாரகையில் இருந்த கண்ணனின் காதில் விழுந்ததாம். இந்த துவாரகைக்கும் அத்தினாபுரத்திற்கும் ஆயிரம் காதம் தூரமானாலும், தூரம் தடையாக இல்லையாம். கண்ணன் வண்டி வண்டியாகச் சேலை அனுப்ப, சேலை
வியாபாரம் நன்றாக நடந்ததாம் என்று சுவாரஸ்யமாகச் சொன்னாராம்.

26. கூப்பிடு தூரத்தில் கண்ணன்

ஒருவர் கேட்டார்: ''ஐயா, பரமபதம் என்று சொல்லுகிறார்களே, வைகுந்தம் என்று சொல்லுகிறார்களே, அது இந்த பூலோகத்தில் இருந்து எவ்வளவு தூரம் என்று சொல்ல முடியுமா?''
சற்று நேரம் யோசித்தவர் சட்டென்று பதில் சொன்னாராம்.''அதிக தூரமில்லை கூப்பிடு தூரம்தான்?'' ''அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்! அருகாமைதான் என்றால் கண்ணுக்குத் தெரியவில்லையே.''''கண்ணுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இங்கிருந்து பகவானைக் கூப்பிட்டால் அது எங்கோ இருக்கிற பகவானின் காதில் விழுந்து அவன் உங்களுக்கு பதில் சொல்வான். அப்படியானால் அந்த வைகுண்டம். பரம பதம். திருப்பதி, ரங்கம், எங்கே இருந்தாலும் நீங்கள் இருந்த இடத்தில் கூப்பிட்டவுடன் வரும் தூரத்தில்தானே இருக்கிறான். அதனால் அது கூப்பிடு தூரம்தான்.

இதை பிள்ளை பெருமாள் ஐயங்கார் ''இருந்த இடத்திலிருந்தேனும் ஒருகால் எம்மை நினைக்கிலாய்'' என்று பாடுகின்றார். ''கண்ணா' என்று எங்கிருந்து அழைத்தாலும் அவன் உங்கள்
குரலுக்கு செவி சாய்ப்பான்.கவியரசர் பாடலிலிருந்து ஒரு வரி.
'அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்'

27. கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் கண்ணபிரான் கோவர்த்தனகிரி மலையைத் தூக்கிக் குடையாக பிடித்து ஆயர்ப்பாடியைக் காத்த நிகழ்ச்சியை, ''கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்'' என்று பாடினார். இதிலே சுவை என்னவென்றால், அப்போது சாதாரண மழை பொழியவில்லையாம். பெரிய பெரிய கற்களைப்போல ஆலங்கட்டி மழை விடாமல் பெய்ததாம். இந்த வரிக்கு விளக்கம் செய்த பராசரபட்டர் சுவையாகச் சொன்னார். இந்திரன் கல் மழையாகப் பெய்தான். அதனால் கல்லை எடுத்து கண்ணன் காப்பாற்றினான். இந்திரன் நீர் மழை பொழியச் செய்திருந்தால், கடலைக் குடையாக எடுத்து காப்பாற்றி இருப்பான்? இதைச் செய்தவன் அது செய்திருக்க மாட்டானா? எதைச் செய்தும் தன்னை நம்பியவர்களைக் காப்பான் என்று விளக்கம் சொன்னார், பராசரபட்டர்.

28. ஏழுமலைவாசன்

இந்திரன் அனுப்பிய கல்மழை ஏழு நாட்கள் விடாமல் பெய்தது. கண்ணன் ஏழு நாட்கள் தன்னுடைய ஒற்றை விரலால், தன்னை நம்பிய ஆயர்பாடி மக்களுக்கும், ஆயர்கள் நம்பிய மாடு கன்றுகளுக்கும் எந்த ஆபத்தும் வராமல் கோவர்த்தனகிரியை தூக்கிக் காப்பாற்றினான். இதற்கு பிரதி உபகாரமாக கலியுகத்தில் ஏழு மலைகளும் சேர்ந்து கண்ணனை தாங்கியதாம். அதனால்தான் அவனுக்கு ஏழுமலைவாசன் என்று பெயர்.'குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன், சென்று சேர் திருவேங்கட மாமலை' என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

29. அந்த இலை எங்கே இருந்தது?

கண்ணனிடம் பொய்கை ஆழ்வார் ஒரு கேள்வி கேட்டார். 'அது சரி; எல்லா உலகங் களையும் நீ உன் வயிற்றில் அடக்கி ஒரு ஆல இலையில் படுத்துக் கிடந்தாய் என்று சொல்கிறார்களே, அந்த இலை எங்கே இருந்தது? கடலில் இருந்ததா? ஆகாயத்தில் இருந்ததா? பூமியில் இருந்ததா? எல்லா உலகங்களையும் நீ தாங்கினாய் என்றால் உன்னைத் தாங்கிய அந்த இலைக்கு சக்தி எங்கிருந்து வந்தது? என்று கேள்வி கேட்க, அது ஒரு பாடலாக வருகிறது

பாலன் தனது உருவாய் ஏழ் உலகு
உண்டு ஆல்இலையின்
மேல்அன்று கண்துயின்றாய் மெய்
என்பர் -- ஆல் அன்று
வேலைநீர் உளதோ ? விண்ணதோ?
மண்ணதோ?
சோலைசூழ் குன்று எடுத்தாய் சொல்..

இந்தக் கேள்விக்கு என்ன பதில்? பராசரபட்டர் விளக்கம் சொன்னார். எம்பெருமானே எல்லாவற்றுக்கும் ஆதாரம். அவனைத் தவிர ஒருபொருள் மற்றொரு பொருளுக்கு ஆதாரமாக முடியுமா? எனவே அந்த ஆலிலைக்கு அவனே ஆதாரமாக இருந்து, தாங்கிய இலையையும் தாங்கினான். எனவே எல்லாப் பொருட்களுக்கும் ஆதாயமாக அவன் இருக்கிறான்.
இந்த சம்பந்தத்தை வேதாந்தத்தில் 'ஆதார ஆதேய சம்பந்தம்' என்று சொல்வார்கள். அதாவது தாங்கப்படும் பொருளும் தாங்குகின்ற பகவானும் என்று பொருள்.

30. கால் கட்டை விரலை ஏன் சுவைக்கிறான்?

பக்தர்கள் எல்லோரும் கண்ணனுடைய திருவடிகளை மிகப் பிரமாதமாகப்பாடுகிறார்கள். அந்த திருவடிகளில் தேன் சொட்டுகிறது; இனிமையாக இருக்கிறது என்றெல்லாம் பாடுகிறார்கள். ''தேனே மலரும் திருப்பாதம்'' என்பது ஆழ்வார் வாக்கு. இப்படிச் சொல்லச் சொல்ல, நிஜமாலுமே தன் திருவடி இனிமையாக இருக்குமா என்கின்ற சந்தேகம் பகவானுக்கு வந்துவிட்டதாம். சரி; இதை எப்படி பரீட்சித்து பார்ப்பது? எப்பொழுதும் நித்யசூரிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே, தேவிமார்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மத்தியில்தான் தன்னுடைய திருவடியை எடுத்து வாயில் வைத்தால் கேலி செய்வார்களே என்று யோசித்தானாம். இதற்காக பிரளய காலத்திலே எல்லாவற்றையும் மறையச் செய்து, தன் வயிற்றில் அடக்கிக்கொண்டு, தான் மட்டுமே தனியாக இருக்கக்கூடிய காலமாக மாற்றிக் கொண்டானாம். ஆலம் இலைமேல் ஜாலியாகப் படுத்துக்கொண்டு, தன்னுடைய கால் கட்டைவிரலைத் தானே சுவைத்துப் பார்த்து, ''ஆஹா, அவர்கள் சொன்னது சரிதான்'' என்று ஒரு முடிவுக்கு வந்தானாம். அதைத்தான் நாம் சித்திரமாகப் பார்க்கின்றோம். பிரம்ம வித்தையில் தெளிவு கிடைக்க அந்தப் படத்தை ஆராதிக்க வேண்டும் என்பார்கள்.இப்படி கிருஷ்ண விஷயமாக ஏராளமான முத்துக்கள் உண்டு. அந்த முத்துக்களில் முப்பதை, மாலையாக்கி உங்களுக்குத் தந்திருக்கிறோம்.

1630119644496.png
 

Latest ads

Back
Top