• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jagatguru Sri Maha Periyava Messages

Status
Not open for further replies.


பெரியவா சரணம் !

நீயே எடுத்துக்கோ!
ஸுமார் 50 வர்ஷங்களுக்கு முன் நடந்த அருமையான ஸம்பவம்.

ஒரு ஐப்பஸி மாஸத்தில், ஸ்ரீமடத்தில் பெரியவா பக்தர்களுடன் ஏதோ பேசிக்கொண்டும், விஜாரித்துக் கொண்டும் தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கு முன் மூங்கில் தட்டுகளிலும், தாம்பாளங்களிலும் அநேகவிதமான பழங்கள் கொட்டிக் கிடந்தன.

அந்தக் கூட்டத்தில், ஒரு மூன்று வயஸுப் பெண்குழந்தை ஸந்தோஷமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பெண் குழந்தைகளுக்கு எத்தனைதான் விதவிதமாக குட்டையான கவுன், ஸ்கர்ட் என்று போட்டாலும், தழைய தழைய பாவாடை கட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், ஏனோ ஒருவித தெய்வீகக்களை, தானாகவே வந்துவிடும். அன்று அந்தக் குழந்தையும், பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருந்தது.

பெரியவா அந்தக் குழந்தையை அருகில் அழைத்தார். பெரியவாளிடம் ஓடியது....

"என்ன உம்மாச்சி தாத்தா?..."
மழலையில் கேட்டது.
தன் முன்னால் இருந்த தட்டுக்களை அதனிடம் காட்டி, அதுக்கு choice வேற குடுத்தார்....

"இந்தா....இதுலேந்து ஒனக்கு என்ன பழம் வேணுமோ, அதை நீயே, ஒன்னோட குஞ்சுக்கையால எடுத்துக்கோ"
அந்தக் குட்டிக்கு படு குஷியாகி விட்டது!

ஒவ்வொரு தட்டாக inspect பண்ண ஆரம்பித்தது.....
அன்னாஸி, ஆப்பிள், ஆரஞ்சு, த்ராக்ஷை, வாழைப்பழம் எல்லாம் கொட்டிக் கிடந்தது.
குழந்தை இல்லையா? குழந்தை மாதிரிதானே கேட்கும்?
இதுவும் கேட்டது.........
அங்கே இல்லாத ஒரு பழத்தை!

"உம்மாச்சி தாத்தா...! எனக்கு மாம்பழம் வேணும்... காணுமே!..."
மாம்பழம் எங்கிருந்து வரும்? மாவடு ஸீஸன் கூட ஆரம்பிக்கவில்லை!

"மாம்பழம் அதுல இல்லியா?...."
கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். பிறகு வேதபுரி மாமாவைக் கூப்பிட்டார்....

"வேதபுரி! உள்ள போய், மேட்டூர் ஸ்வாமிகிட்ட எதாவுது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா பாரு!...."
வேதபுரி மாமா சென்றதும், கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
ஸரியாக அந்த ஸமயத்தில், கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆந்த்ராவிலிருந்து ரெண்டு பேர், ஆளுக்கொரு பழத்தட்டுடன் வந்தார்கள்.

பெரியவா முன் பழத்தட்டை கீழே வைத்துவிட்டு, நமஸ்காரம் பண்ணினார்கள்.

குழந்தை அவர்கள் வைத்த தட்டைப் பார்த்தது.

"உம்மாச்சி தாத்தா..! மாம்பழம்!..."
அழகாக குண்டு குண்டு மாம்பழங்கள் மேலாக இருந்தது. பெரியவா கண்களைத் திறந்தார்.

அந்தக் குழந்தையிடம் மாம்பழத்தைக் காட்டி, "எடுத்துக்கோ!..." என்றதும், அழகாக ஒரே ஒரு மாம்பழத்தை இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கி எடுத்துக் கொண்டது.
முகமெல்லாம் ஒரே ஸந்தோஷம்!
வேதபுரி மாமா திரும்பி வந்து பெரியவாளிடம் " அங்க ஒண்ணுமே இல்ல...." என்று சொல்லிவிட்டு குழந்தையின் பக்கம் திரும்பியவர், அதன் கைகளில் உள்ள குண்டு மாம்பழத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனார்!

"ஏண்டா ! மாம்பழம் எப்டி வந்துது?..."
தெரியாதவர் போல் பெரியவா அதிஸயமாகக் கேட்டதும், தெரிந்தே, மிக அழகான பதிலை வேதபுரி மாமா கண்களில் கண்ணீரோடு சொன்னார்.......

"பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!..."

மாம்பழம் கொண்டு வந்த ஆந்த்ராக்காரர்கள் அதன்பின் அங்கே காணப்படவில்லை!
ஒண்ணுமே தெரியாத சின்னக் குழந்தை மாம்பழம் கேட்பது, அழகாக இருக்கும்.ஆனால் எல்லாம் தெரிந்த பெரிய குழந்தைகளான நாமும், மாம்பழத்தைத்தான் கேட்போம்! அதில் தவறேதும் இல்லை!

அதன் அர்த்தம் அறிந்து இப்படிக் கேட்போமே!
[மா+பழம்] மாமஹாப் பழமான பெரியவாளிடம், 'மாம்பழ'மான பெரியவாளையே கேட்போம்!
அல்லது....
[மாம்-என்னை, பழம்-பழமை ] "பழமையான, அனாதியான, என்னையே எனக்கு குடு" என்று கேட்டுக் கொண்டே இருப்போம்!
தராமலா போவார்? கட்டாயம் தருவார்.

Source: Sriram Sivasubramanian / தீர்த்த யாத்திரை - Pilgrimage

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்!


ஒரு வைஷ்ணவர் பெரியவாளிடம் வந்து உபதேசம் செய்யுமாறு ப்ரார்த்திது வந்து நின்றார்.


'உங்களுக்கென்று தனி ஆசாரியார்கள் இருக்கிறார்கள்.. ஜீயர்ஸ்வாமிகள், ஆண்டவன் ஸ்வாமிகள் எந்றெல்லாம்.. அவாளிடம் போய் பரந்யாசம் பண்ணிக்கறதுதான் முறை' என்று சொன்னார் பெரியவா. ஆனால் வைஷ்ணவர் மனம் சிறிதும் தளராமல் அங்கேயே நின்று''எம்பெருமான் ஆக்ஞை ...தங்கள் திருவாக்கால் ஏதாவது சொல்லணும்'.. என மன்றாடினார்.
வியாசாசாரியர் மாதிரி விளங்கிய பெரியவா சொன்னார்கள்..


'வாஸநான் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத் த்ரயம் |
ஸர்வபூத நிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்துதே ||
..இதையே ஜபம் மாதிரி ஸதா சொல்லிண்டிருக்கலாம்' என்று சொல்லி ப்ரஸாதமாகக் கல்கண்டும், பழமும் கொடுத்தார்கள்.


வைஷ்ணவருக்கு பாற்கடல் போன்ற சந்தோஷம்! ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று சொல்லிட்டா! என்று அணுக்கத் தொண்டர்களிடம் சொல்லி த் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.


இன்னொரு வைஷ்ண்வருக்கு பரமேச்வரனிடத்தில் அளவற்ற பக்தி. திரு நீறு அணிந்து, ருத்ராக்ஷமும் கழுத்தில் போட்டுக்கொள்ள ஆவல்! அவ்வப்போது பெரியவா தரிசனத்துக்கு வருவார் அவர். ஒருதடவை வந்தபோது பெரியவாளிடம் ப்ரார்த்தித்துக் கொண்டார். பிரதோஷத் தன்னிக்கு நான் பஸ்ம தாரணம் பண்ணிக்கணும்..., நிறைய ருத்ராக்ஷ மாலை போட்டுக்கணும். ஸ்ரீருத்ர சம்கம் சொல்லி ஈஸ்வரனுக்கு அபிஷேகம் பண்ணணும்... னோ ..வைஷ்ணவன்.. நான் இப்படிச் செய்யலாமா
என்று பெரியவாதான் சொல்லணும்...''


அவர் சொல்வதை பொறுமையாகக் கேட்டு கொண்டிருந்தார் பெரியவா.


பிரதோஷ காலத்திலே உன் வழக்கப்படி பன்னிரண்டு திருமண் இட்டுக்கோ. அனுஷ்டானம் செய். லக்ஷ்மி நரசிம விக்ரஹம் அல்லது சாளக்ராமத்துக்கு திருமஞ்சனம்
திருவாராதனம் பண்ணு, அது போதும் சம்பிராதயங்களை மாற்றக் கூடாது, விடவும் கூடாது.


''பிரதோஷ காலத்தில் அஹோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகள் லக்ஷ்மி நரசிமஸ்வாமிக்கு திருவாராதனம் செய்வது வழக்கம், உனக்குத் தெரியுமோ?''..
'தன்யனானேன்'... என்றார் வந்த வைஷ்ணவர்.


சம்பிரதாயத்துக்கு விரோதமாக எந்தசடங்கினையும் செய்யச் சொன்னதில்லை பெரியவா. மாறாக மரபுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது
நம் கடமை என்பதையே வலியுறித்தினார்கள்.


தகவல் கோதண்டராம சர்மாவின் அனுபவ தரிசனங்கள்.


ஜய ஜய சங்கரா....

Source: WhatsApp
 


பெரியவா சரணம் !

மஹா பெரியவா அற்புதங்கள் - 17

”பேஷா நடக்கட்டுமே”

பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.

ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.

அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து
முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.

உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.
காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.

”ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.
சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்

ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.

இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.

வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக…

ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.

திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.

”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்…
லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.
அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.
திடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.

”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.
பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?”

”ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார்.

”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ?” – இது பெரியவா.
உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.
ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு.

நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ.
நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!

‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.
சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”

தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.
ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.

”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!

”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.

அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!”

இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார்.

எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.

பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.

Source: Ramjee N/ Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
உருவத்தை வெச்சு எடை போடாதே!
========================================

1979-ல் வடதேஸத்துக்கு பாதயாத்ரையாக பெரியவா கிளம்பியபோது, கர்நாடகாவில் ஒரு க்ராமத்தில் முகாமிட்டிருந்தார். பெரியவாளுக்கு இயற்கை சூழலில் வஸிக்க மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கிருந்த ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ஶனம் தந்து கொண்டிருந்தார். மெட்ராஸிலிருந்து ஒரு பெரிய டாக்டர், தன் குடும்பத்துடன் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்திருந்தார்.

அப்போது பெரியவாளை தர்ஶனம் செய்ய ரெண்டு ப்ராஹ்மண பையன்கள் வந்தனர். குடுமியையும், பூணூலையும் வைத்துத்தான் அவர்கள் ப்ராஹ்மணர்கள் என்று சொல்ல முடியும்!

காரணம், அவர்கள் அணிந்திருந்த வேஷ்டியும், மேல் வஸ்த்ரமும் மஹா அழுக்கு! முகமும் உடம்பும் பார்த்தாலே தெரிந்தது, குளிக்காமலேயே வந்திருக்கிறார்கள் என்று! படிப்பறிவே இல்லாத களைத்த முகத்தோடும் இருந்த அவர்களை பார்த்த அந்த டாக்டர் ‘மேற்கூறிய’ எண்ணத்தால், முகம் சுளித்தார்.

” என்ன பஸங்க? பெரியவாளை பாக்க வரச்சே இப்டியா வரது? அட்லீஸ்ட் குளிச்சுட்டு ஶுத்தமா வரணும்கற ‘பேஸிக் நாலேட்ஜ்’ கூட இல்லியே?” …..

இருவரும் நேரே பெரியவாளிடம் போய், பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும், அவர்கள் குளித்தார்களா? அழுக்காக இருக்கிறார்களா? என்பதெல்லாம் பெரியவா கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் உள்ள விலைமதிப்பே இல்லாத ஒன்று, அவர்களுடைய ஹ்ருதயத்திலும், நாவிலும் இருந்த ஒன்றே ஒன்றுதான் பெரியவாளுக்குத் தெரிந்தது!

ஆம்! வேதம்தான் அது!

“அத்யயனம் ஆய்டுத்தா?”
தலையை ஆட்டினார்கள்.

“ரிக்வேதம் சொல்லுங்கோ”

பெரியவா சொன்னதுதான் தாமதம், அப்படியே உயரமான மலையிலிருந்து “ஹோ!” வென்று கொட்டும் [பெரியவா சொல்வது போல் “ழும்” என்ற ஶப்தத்தோடு கொட்டும்] அருவி, ப்ரவாஹமாக பெருக்கெடுத்து வந்தது போல் ரிக் வேதத்தை கணீரென்று சொல்லத் தொடங்கினார்கள்.

ஆஹா! ஆனந்தமான காக்ஷியாக பெரியவா கண்களை மூடியபடி ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருந்தார். கைலாஶத்திலும், ஶ்ரீவைகுண்டத்திலும் பகவான் எப்படி ஆனந்தமாக வேத பாராயணத்தை கேட்டுக் கொண்டிருப்பான் என்பதை, இந்த காக்ஷி மூலம், நம் மனஸில் கல்பனை பண்ணி மெய் சிலிர்க்கலாம்.

பெரியவா கொஞ்ச நேரம் கழித்து, அவர்களை ஆஸிர்வதிப்பதாக, கையமர்த்திய பின்புதான் ஓதுவதை நிறுத்தினார்கள்.
“எங்கேர்ந்துடா…. கொழந்தேளா… வரேள்?”

பெரியவாளுடைய குரலில், வேதத்தின் மேல் உள்ள காதலும், வேதவித்யார்த்திகள் மேல் இருந்த ப்ரேமையும், இந்தக் காலத்திலும் தான் சொல்லியபடி வேதத்திலும், வேஷத்திலும் இருக்கும் குழந்தைகளிடம் பொங்கிய பரிவும் எல்லாமாக சேர்ந்து, அப்படியொரு குழைவு…. குரலில் பொங்கியோடியது!

ஏதோ ஒரு க்ராமத்தின் பேரை சொன்னார்கள்.

“இங்கேர்ந்து எத்தன தூரம்?….”

“அநேகமா…..இருவது மைல் தூரம் இருக்கும் பெரியவா…..”
“எப்டிப்பா வந்தேள் கொழந்தேளா ?”
” பெரியவாளை பாக்க நடந்துதான் வந்தோம்”
“திரும்பி எப்டிடா போவேள் ?”
“நடந்துதான் போவோம் பெரியவா….”

என்ன ஒரு பக்தி! ப்ராஹ்மணன், தன் கையில் காஸில்லாமல்தான் இருக்க வேண்டும் என்று பெரியவா சொல்வதை கனகச்சிதமாக பின்பற்றி, கையில் காஸில்லாததால், அதை ஒரு சாக்காகவோ, குறைவாகவோ எண்ணாமல், மனஸ் முழுக்க பெரியவாளை எப்படியாவது தர்ஶனம் பண்ணிவிட வேண்டும் என்ற ஒரே ஆசையால்….. பாவம்! இருபது மைல் நடந்தே வந்திருக்கிறார்கள்!!

பின்னே….அப்போதுதான் மலர்ந்த ரோஜா புஷ்பம் போலவா இருப்பார்கள்? உடம்பில் அழுக்கும், துணியில் புழுதியும், கலங்கிய முகமும் ஏன் இருக்காது?
“போங்கோப்பா….கொழந்தேளா…..போயி மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டு, ஸாப்டுங்கோ…..”
அவர்களிடம் அன்பொழுகக் கூறிவிட்டு, பாரிஷதரிடம்
“இவாளை அழைச்சிண்டு போயி, ஸ்நானம் பண்ணச் சொல்லு, வேஷ்டி, அங்கவஸ்த்ரம் புதுஸு ஆளுக்கு ரெண்டு குடு… நன்னா வயராற ஸாப்பாடு போடு…”
“ஸெரி…..பெரியவா…..”
அவர்கள் நகர்ந்ததும், மெதுவாக டாக்டரின் பக்கம் திரும்பினார் பெரியவா.
“எப்பவுமே….. மனுஷாளோட…. வெளில தெரியற உருவத்த வெச்சு, அவாளோட நெஜமான யோக்யதையை புரிஞ்சுக்காம மனஸை கொழப்பிக்கப்டாது”
டாக்டர் மனஸில் நினைத்த தவறுக்கு பதில் கொடுக்கும் சாக்கில், நம் எல்லாருக்கும் ஏற்ற உபதேஸமாக கூறினார்.

Courtesy: CHAMARTHI SRINIVAS SHARMA

Source: Ramjee N/ Brahmana Sangam/Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

"நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்""

கேரளத்தில் இருந்து பெண்ணொருத்தி பெரியவாளைத் தரிசிக்க வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தபோது, தரையில் தடுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு விட்டதாம். அதிலிருந்து அடிக்கடி ஃபிட்ஸ் மாதிரியான பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வந்தாள்.
அவளின் கண்பார்வையும் பறிபோனதாம். காலக்கிரமத்தில் குழந்தை பிறந்தது என்றாலும், அவளின் பார்வை திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர்களின் குடும்பத்துக்குப் பரிச்சயமான நண்பர் ஒருவர் பிரஸ்னம் பார்க்கச் சொன்னாராம். அவரே நம்பூதிரி ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறார்.

பெண்ணின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த நம்பூதிரி, ”கவலைப்படாதீங்க, கண்பார்வை கிடைச்சுடும். ஆனால், நீங்க க்ஷேத்திராடனம் செய்யணும். குருவாயூரில் துவங்கி, கும்பகோணம், திருவிடைமருதூர்னு புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் போயி வேண்டிக்கோங்க. முடிந்தால் அந்தத் தலங்களில் தீர்த்தமாடுறதும் விசேஷம்”னு சொல்லியிருக்கார்.

அதன்படியே க்ஷேத்திராடனம் கிளம்பிய அந்தப் பெண்மணி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் சென்றாளாம். அங்கே ஸ்வாமி சந்நிதியில், குருக்கள் தீபாராதனை முடிந்து தட்டை நீட்டியதும், ஆரத்தி எடுத்துக்கொண்டவள், தட்டில் நூறு ரூபாய் தக்ஷணை வைத்தாளாம்.

குருக்களுக்கு ஆச்சரியம். இவளுக்குப் பார்வை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டவர், ”அம்மா… இது பத்து ரூபாய் இல்ல; நூறு ரூபாய் நோட்டு” என்று சொல்லியிருக்கிறார்.

இவளும், ”பரவாயில்லை… எடுத்துக்கோங்க” என்றாளாம்.

உடனே அந்தக் குருக்கள், ”நீங்க பெரியவாளைப் பார்த்ததில்லையா?” என்று கேட்டாராம்.

அவர் யாரைச் சொல்கிறார் என்று இந்தப் பெண்மணிக்குத் தெரியவில்லை. குருக்களிடமே விசாரித்திருக்கிறாள்.
“காஞ்சிபுரத்தில் இருக்காரே, சங்கர மடத்தில்… அவரை தரிசனம் செய்யுங்கோ” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருக்கள்.
இவளும் உடனே அங்கிருந்து புறப்பட்டு, சிதம்பரம் சென்றுவிட்டு, அப்படியே காஞ்சிபுரத்துக்கும் வந்தாளாம். அன்று, சென்னையில் ஒரு பிரமுகர் வீட்டில் உபநயனம். அவர்களுக்குப் பிரஸாதம் எல்லாம் அனுப்பிவிட்டு, மடத்தில் அமர்ந்திருந்தார் பெரியவா.
அந்த நேரம் அங்கே வந்த இந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த பழங்களை அருகில் இருந்த நாற்காலியில் வைத்துவிட்டு, தனது நிலைமையை விவரித்தாள்.
வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்னபடி, காஞ்சி முனிவரைத் தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தையும் கண்கலங்கச் சொன்னாள்.

உடனே அவளின் புருஷனைக் கூப்பிட்ட பெரியவா, ”என்னைத் தெரியறதான்னு உங்க சம்சாரத்துக்கிட்டே கேளுங்க!” என்றார். அத்துடன், அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து, தன் முகத்தில் வெளிச்சம் அடித்துக் கொண்டார் மஹா பெரியவா.
அதே நேரம் அந்தப் பெண், ”குருக்கள் சொன்ன சந்நியாஸி இதோ தெரிகிறாரே!” என்றாளாம் சத்தமாக… பரவசம் பொங்க!
ஆமாம்… காஞ்சி தெய்வம் அவளுக்குக் கருணை புரிந்தது. ‘நம்பினார் கெடுவதில்லை… இது நான்கு மறைத் தீர்ப்பு’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்! காஞ்சி முனிவரின் சந்நிதானத்தில் அந்தப் பெண்மணிக்குப் பார்வை கிடைத்தது.

அவளுக்கு கண்பார்வை மீண்டும் கிடைக்க பிராப்தம் இருந்தது. அதற்கும் மேலாக தெய்வத்தின் மீதும், வைத்தீஸ்வரன் கோயில் குருக்கள் சொன்ன பிறகு மஹாபெரியவா மீதும் அவள் வைத்திருந்த அதீத நம்பிக்கையும் வீண்போகவில்லை.
ஆனால் இது குறித்து மஹா பெரியவாளிடம் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன் பூர்வ ஜன்ம பலன், உன்னோட நம்பிக்கை, நான் தினம் தினம் தியானம் செய்யற அம்பாள் காமாக்ஷியோட கருணை… எல்லாம்தான் காரணம்!’ என்றார்

Source: Siva Sankaran / Brahmana Sangam/ Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம்.

அதிதி போஜனம் - மஹாபெரியவா
Thanks to Original Uploader of this Article

1938 - 1939-னு ஞாபகம் நம்ம ஆச்சார்யாள் மடம் கும்பகோணத்தில் இருந்தப்போ, நடந்த ஒரு சம்பவம். எல்லாரும் ஸ்ரத்தையா கேட்டுட்டாலே, இதோட மஹிமை நன்னா புரிஞ்சுடும்.

கும்பகோணத்தில் கும்பகோணம் மாமாங்க குளத்தில மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு.அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா. செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயஸ் இருக்கலாம். அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது.
செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பெறும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்யமா இருந்தா.
இதெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி, ஒரு விஷயம் என்னன்னா, அந்த தம்பதிகள் பல வர்ஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டிருந்தா. பிரதி தெனமும் மத்யான்னம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு முகம் கோணாம, அவாளோட கால்களை வாசத்திண்ணையில் ஒக்காரவெச்சு அலம்பி, வஸ்த்ரத்தால தொடச்சு, சந்தனம் குங்குமம் இட்டு, கூடத்ல ஒக்காரவெச்சு, ஏதோ இருக்கறதப் போடாம, ஒவ்வொரு அடியாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடுவா. ஆத்ல சமையலுக்கு ஆளெல்லாம் இல்லே. அந்த அம்மாவே தன் கையால சமைச்சுப் போடுவா. அப்டி ஒரு ஒசந்த மனஸ்.

எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியுங்கறேளா? நம்ம மடத்துக்கு வந்துண்டு இருந்த சுந்தரமையர்தான் செட்டியாரோட கணக்கு வழக்கெல்லாம் பாத்துண்டு இருந்தார். அவர்தான் இதெல்லாம் சொன்னார். ஒருநாள் நல்ல மழை. ஒரு அதிதியை கூட காணோம். செட்டியார் ஒரு கொடையை எடுத்துண்டு, மஹாமகக் கொளத்தண்டை வந்து பார்த்தார். கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் ஒர்த்தர் இருந்தார். ஏன்னா, வழியெல்லாம் தேவாரம் சொல்லிண்டே வந்தார். வீட்டுக்கு போனதும், "என்ன காய் பிடிக்கும்? போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடறோம்"...ன்னு சொன்னார். வந்தவருக்கோ நல்ல பசி போல இருக்கு! "வெறும் மொளக்கீரை கூட்டும், கீரைத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்"ன்னார்.

கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார். செட்டியாரும் இன்னொரு பக்கம் கீரை பறிக்க ஆரம்பிச்சார். ஆச்சியோ இவா ரெண்டு பெறும் பறிக்கறதை கொல்லைப் பக்கமா நின்னுண்டு பாத்துண்டே இருந்தா. தட்டுக்கள் வந்ததும், அந்த அம்மா என்ன பண்ணா தெரியுமா? ரெண்டு கீரையையும் தனித் தனியா அலம்பி தனித்தனியா வேக வெச்சு பக்குவம் பண்ணா. இதை சிவனடியார் கவனிச்சுண்டே இருந்தார். எல்லாம் பண்ணினதும், சிவனடியார் பறிச்ச கீரையை மட்டும் ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு, இவருக்கு பரிமாறினா.

அடியாருக்கோ பெருமை பிடிபடலை போஜனம் முடிஞ்சதும், தான் பறிச்ச கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினதப் பத்தி கேட்டார். அந்த அம்மா சொன்னா " ஐயா, கொல்லைல கீரை பறிக்கரச்சே நான் பாத்துண்டே இருந்தேன். என் கணவர் "சிவ சிவ" ன்னு நாமம் சொல்லிட்டே பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. மறுபடி நிவேதிக்க அவஸ்யமே இல்லே. அதான் நீங்க கொண்டு வந்த கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினேன்". அடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணின்ட்டு போய்ட்டார்.

இப்படி அதிதி போஜனத்த விடாம பண்ணிண்டு இருந்ததுக்கு "பல ப்ராப்தி" என்னன்னா, ஒரு சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரர் கோவில்ல நாலு கால பூஜைக்கும் ஒக்காந்து தரிசனம் பண்ணா, வீட்டுக்கு வந்த ஆச்சி, தனக்கு "ஒச்சலாயிருக்கு"ன்னு சொல்லிட்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ, அப்பிடியே சாஞ்சுட்டா. பதறிப் போய் "சிவகாமி" ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும் அந்தம்மா பக்கத்துலயே சாஞ்சுட்டார்...!

அவ்வளவுதான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்"

அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான். "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள்.

Source: Ramjee N / Brahmana Sangam/ Brahmins Association / Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?

பெரியவாளுடைய இந்த அறிவுரை நம் எல்லோருக்கும் ஒரு சம்மட்டி அடி !

சிமிழி பிரஹ்மஸ்ரீ வெங்கட்ராம சாஸ்த்ரிகள் பெரியவாளுடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் ரொம்ப அருகதை உடையவர். அப்படியொரு அனுஷ்டானம் ! பெரியவாளிடம் பக்தி!

அவர் மறைந்ததும், அவருடைய பிள்ளைக்கு பால்யத்திலேயே ரெண்டு சன்யாசிகள் மூலமாக தேவி உபாசனை உபதேசிக்கப்பட்டது. பல ஆண்டுகள் உபாசித்தும் “உபாசனையில் வாக்கு, சரீரம் ரெண்டும் ஈடுபடர அளவு, மனஸ் ஈடுபட மாட்டேங்கறது. அதனால மனசுக்கு சாந்தி கெடைக்கவேயில்லை” என்ற இந்த உண்மையான எண்ணம் ரொம்ப வலுத்துக் கொண்டே போனது. பல வழிகளை கையாண்டும் ஒன்றும் பிரயோஜனமில்லை. பெரியவா மட்டுமே இதற்கு வழி காட்டமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியவாளிடம் வந்தார்.

கார்வேட் நகரில் ஒரு குளக்கரையில் அழகாக வேய்ந்திருந்த ஒரு சிறு கொட்டகையின் வாசலில் அமர்ந்திருந்தார். எத்தனைதான் அறிமுகம் இருந்தாலும், பூர்வர்கள் யார் யார் என்பதெல்லாம் தெரியாதது மாதிரி கேட்டுக் கொள்வார். நாம் இன்னாரது வம்சத்தில் வந்திருக்கிறோம் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வதை அவர் மிகவும் விரும்புவதாக இருக்கும். இந்த உபாசகரும் தான் சிமிழி சாஸ்த்ரிகள் பிள்ளை என்று சொல்லிவிட்டு, தன் மனஸ் படும் கஷ்டத்தை சொல்லி, வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார். அப்போது நடந்த சம்பாஷணை………..

“தேவி உபாசனை பல வர்ஷங்களா பண்ணிண்டு இருக்கேன். ஆனா, மனஸ் துளிகூட ஈடுபடலை. ரொம்ப உறுத்தறது. எனக்கு ஒரு வழி காட்டணும் பெரியவா”

“என்ன சொல்றே? அதனால என்ன தப்பு?”

“மனஸ் தனி வஸ்துவா இருக்கறதால, பூஜை முழுமையாகாத மாதிரி இருக்கு”

“அதுக்கு நா என்ன பண்ணறது?”

“மனஸ் ஈடுபட ஒரு வழி காட்டணும்”

“என்ன படிச்சிருக்கே?”
…………சொன்னார்.

“இத்தனை படிச்சும், ஒனக்கு விவேகமில்லே! ஒன் மனஸை நா திருத்த முடியாது”

“என்னாலேயே என்னை திருத்திக்க முடியலை. அதான் பெரியவாட்ட வந்தேன்”

“என்னை என்ன செய்ய சொல்றே?”

“மனஸ் சாந்தி அடையணும்”

“நீ என்ன பூஜை பண்றே?”

“அம்பாளை படத்துலேயும், விக்ரஹத்துலேயும், யந்த்ரத்துலேயும் பூஜை பண்ணறேன்”

“ரொம்ப சரி. படத்ல அம்பாள் இருக்கறதா நெனச்சுதான பூஜை பண்றே?”

“ஆமாம்”

“அப்போ…….இந்த கொறையைக் கூட அவகிட்டயே சொல்லியிருக்கலாமே? நெறைய படிச்சிருக்கே. படம், விக்ரஹம், யந்த்ரம்….ன்னு எல்லா எடத்துலேயும் அவ இருக்கறதா பூஜையும் பண்றே. ஆனா, ஒண்ணுலயும் ஒனக்கு பிடிப்போ, நம்பிக்கையோ இல்லை. அம்பாள் ஓங்காத்துலேயே, ஒன் பக்கத்துலேயே இருக்கறச்சே, ஒன் கொறையை அவட்ட சொல்லி அழத் தெரியலையே! இனிமே அவகிட்டயே சொல்லி அழு! இங்க வராதே. நான் என்ன பண்ண முடியும்?”
மிகவும் சூடாக பதில் வந்ததும், உபாசகர் விக்கித்து நின்றார். மனஸ் இந்த பேரிடியை தாங்கமாட்டாமல், கண்களில் ஜலம் முட்டி நின்றது. நமஸ்காரம் பண்ணிவிட்டு உத்தரவு வாங்கிக் கொள்ள யத்தனித்தார். அம்பாள் மனஸ் இறங்கினாள்………..

“ரொம்ப கோவிச்சுண்டுட்டேனா ! நீயே ரொம்ப ஆசையா அம்பாளை உபாசனை பண்றே! மனஸ் ஈடுபடலை..ன்னு ஒனக்கே தெரியறது. உபாசனை…ன்னா சமீபத்ல இருக்கறதுன்னு அர்த்தம். ஒனக்கு எப்பவுமே பக்கத்ல இருக்கறவள் கிட்டே ஒன்னோட கொறையை சொல்லாம, நீட்டி மொழக்கிண்டு எங்கிட்ட வந்தியே!….ங்கறதாலதான் கொஞ்சம் அப்பிடி ஒரைக்கறா மாதிரி சொன்னேன்.

இனிமே……….என்ன கொறையானாலும், எதுக்கும் அவளைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது ! நீ பூஜை பண்ற தெய்வத்துகிட்ட, அது அம்பாளோ, சிவனோ, விஷ்ணுவோ, பிள்ளையாரோ….யாரா இருந்தாலும் சரி, அவா கிட்டேயே கேட்டாத்தான் ஒன்னோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி அனுக்ரகமும் கெடைக்கும். உன் உபாசனா தெய்வம் ஒன்னோட பேசும். என்ன? புரிஞ்சுதா?……..நம்பிக்கைதான் எல்லாம். அவளோட அனுக்கிரகம் ஒனக்கு நிச்சயமா உண்டு! கவலைப்படாதே…..க்ஷேமமா இரு!” என்று அபயஹஸ்தம் “கொடுத்தாள்” !

இனி ?…………. எனக்கென்ன மனக்கவலை? என் தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலை.

Source: Siva Sankaran / Brahmana Sangam/ Brahmins Association / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”

பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை!

அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!

அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.

“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.

“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.
உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.

நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.

“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.

இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு,

“அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !

அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.

“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.

“என்னம்மா?….”

“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”

“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”

குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி

“எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.

“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”

மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!

“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!

பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!

உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்

Source: Siva sankaran / Brahmana Sangam / Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 



பெரியவா சரணம் !!

"எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?"-பெரியவா (கடவுள் எதிர்ப்புக் கூட்டத்தினருக்கு காட்டிய கருணை கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு நிச்சயமாக எல்லை இல்லை)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-176
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் எதிரில் ஓர் அரசியல் கட்சியின் பிரசாரக் கூட்டம்.
கோயிலுக்கு எதிரிலேயே கோயில் எதிர்ப்புக் கூட்டம். நல்ல காலமாக,கச்சபேஸ்வரர் சந்நிதியில் ஒலி பெருக்கி கட்டப்படவில்லை.கட்டப்பட்டிருந்தால், தனக்கு எதிரான காட்டுக் கத்தலைக் கேட்டு வெளியே ஓடிப் போயிருப்பார்.(ஸ்வாமி)இனிமையான தேவாரத் தமிழைக் கேட்ட திருச்செவிகள், தெய்வத் தமிழை இவ்வளவு ஆபாசமாக உபயோகப் படுத்த முடியுமா? என்று பயந்து பதறிப் போயிருக்கும்.

ஸ்ரீ மடத்தில் வாசலில் தண்ணீர் மற்றும் நீர்மோர் விநியோகம் செய்து கொண்டிருந்த தெலுங்குப்
பாட்டியை வெகு அவசரமாக அழைத்து வரச் சொன்னார்கள், மகா சுவாமிகள்.

"என்ன உத்தரவு ஆகப் போகிறதோ?" என்ற கவலையுடன் வந்து பெரியவாளை
நமஸ்கரித்தார் பாட்டி.

"இன்னிக்கு நிறைய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டாவிலே நீர் மோர் தயார் பண்ணிவை.
பெருங்காயம்,கடுகு தாளிச்சுப் போடணும்.கறிவேப்பிலை கசக்கிப் போடணும். ரெண்டு பச்சை
மிளகாய் நறுக்கிப் போடலாம். இஞ்சித் துண்டு போடற வழக்கம் உண்டோ?"-பெரியவா.

தொண்டு செய்பவர்களுக்கும் தரிசனத்துக்காக வந்திருந்தவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை.
இவ்வளவு வக்கணையாக நீர் மோர் தயாரிக்கும் கலை பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? அத்துடன் கவலையும் ஏற்பட்டது.அன்றைக்கு

ஸ்ரீமடத்தில் சிறப்பு நிகழ்ச்சி எதுவுமில்லை. வாசலில் நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு.
அப்படியே போகிற திருவிழாக் காலமும் இல்லை. 'ரெண்டு அண்டா நீர் மோர் வீணாகப் போகிறது,

ஹூம்!' என்று முணுமுணுப்பு.

கடவுள் எதிர்ப்புக் கூட்டம் சரியாக,பிற்பகல் ஒரு மணிக்கு முடிந்தது. எல்லாக் கோயில்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு.தொழிற்சாலைகள் கட்டி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கப்
போவதாக சூளுரை உரைத்தார் தலைவர். இருநூறு கரங்கள் ஒலி எழுப்பின.
புன்னகை மாறாமல்,சட்டை கசங்காமல் காரில் ஏறிப் போய்விட்டார் தலைவர்.

கடல் போல் குழுமியிருந்த (நூறு பேர் !) கூட்டம், அவரவர் கிராமத்துக்குப் போக வேண்டுமே?
சித்திரை தேதி பதினெட்டு. தலைக்கு மேலே நெருப்பைக் கொட்டிக் கொண்டிருந்தான் சூரியன்.

ஸ்ரீ மடத்துக்கு அருகில் பேருந்து நிறுத்தம்.நடந்து வந்ததில் தாகமோ தாகம். நகரசபைக் குழாய்களில் உஷ்ணக் காற்று பாம்புச் சீறலாக வந்தது.

"அங்ஙன பாரு...நீர் மோர் கொடுக்கிறாங்க போல."பாட்டியிடம் வந்தார்கள்.

பாட்டிக்குக் கை வலி வந்தது. பத்து நிமிஷத்தில் நூறு பேருக்கு நீர்மோர் கொடுத்து பழக்கமில்லை.
கடைசிச் சொட்டு வரை தீர்ந்துவிட்டது.

"கன்னையா..சாமியைப் (பெரியவா) பார்த்துட்டுப் போகலாமா?" என்று முணுமுணுத்தார் ஒருவர்.

"ஆமாண்ணே! எனக்கும் ஆசையாயிருக்கு.. கூட வந்தவங்க திட்டுவாங்களே?"

நூறு பேருக்கும் இதே கவலைதான்.

என்ன தைரியத்தில் மடத்தின் உள்ளே நுழைவது?

ஸ்ரீ மடம் வாசலில் பரபரப்பு. மகா சுவாமிகள்
நாலைந்து பண்டிதர்களின் வேதாந்த விசாரம் செய்து கொண்டு வெளியே வந்தார்கள். மெல்ல நடந்தார்கள் எதிர்ப்பக்கம் இருந்த கங்கை கொண்டான் மண்டபத்து
ஆஞ்சனேயரைத் தரிசிக்க.

வறுத்தெடுக்கும் தெருப் புழுதியில் நூறு பேரும் விழுந்து மகா சுவாமிகளை வணங்கினார்கள்.
கடைசியாக மண்டபத்துக்குள் நுழையுமுன்,

"எல்லாருக்கும் நீர் மோர் கிடைச்சுதா?" என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார்கள் பெரியவாள்.
கடவுளின் கருணைக்கு எல்லை இருக்கலாமோ என்னவோ? காஞ்சி முனிவரின் கருணைக்கு
நிச்சயமாக எல்லை இல்லை.

Source: Ramjee .N / Brahmana Sangam / Brahmins Association/ Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Last edited by a moderator:


பெரியவா சரணம்

"இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?"

சேங்காலிபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். அவர் பெண்ணுக்குப்
பதினைந்து வயதாகி விட்டதாம்.சரியான வரன் குதிரவில்லையாம். அதனால் அந்தணர்களில் வேறு உட்பிரிவைச் சேர்ந்த பையன் கிடைத்தால் விவாகம் செய்து கொடுக்கலாமா என்று கேட்டார்.

"கூடாது" என்று நிர்த்தாட்சண்யமாகப் பதில கூறிவிட்டார்கள் பெரியவா.

அதே சமயம் ஒரு கல்யாணப் பத்திரிகையுடன் ஒரு தம்பதி வந்தனர்.
"பெண்ணுக்குக் கல்யாணம்..."
"பையனுக்கு சொந்த ஊர் எது.?" சொன்னார்.
"அங்கே எல்லோரும் பிருஹசரணம் ஆச்சே.? நீ வடமன்..."

தகப்பனார் நெளிந்தார். இந்த மாதிரி கேள்வியை எதிர்பார்க்காததால் சங்கடப்பட்டார்.
"பெண்ணுக்கு இருபத்தொன்பது வயசாயிடுத்து வடமப் பையன், தகுந்த வரன் கிடைக்கல்லே..."

பெரியவாளின் ஜாடையைப் புரிந்து கொண்டு புடவை, திருமாங்கல்யம், பூர்ணபலம் (மட்டைத்
தேங்காய்) எல்லாம் கொண்டு வைத்தார் சிஷ்யர்.

பெரியவா தொட்டு, ஆசிர்வதித்துத் தம்பதியிடம கொடுக்கச் சொன்னார்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வந்தனம் செய்து விட்டுப் போனார்கள்.

தீட்சிதரைப் பார்த்தார்கள் பெரியவா.
"என்னடா இது.!...இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?"

தீட்சிதர் பதில் சொல்லவில்லை. "த்விஜர்களுக்குக் கன்னிகா விவாகம் தான்
சொல்லப்பட்டிருக்கு. சாரதா சட்டத்துக்குப் பயந்து அந்தப் பழக்கம் போயே போச்சு.!

"பெண்கள் விவாகம் ஆகாமல் இருக்கக் கூடாது. சாஸ்திரத்தில் உட்பிரிவுகளுக்குள் கொடுக்கல்-வாங்கல் கூடாது என்று சொல்லப்படல்லே, ஆனா, ரொம்பக் காலமாக ஒரு சம்பிரதாயத்தை நாம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கோம். முடிந்தவரை அதை மாற்றாமல் இருப்பது தான் சரி.

"இந்தப் பொண்ணுக்கு என்ன வயசுன்னு சொன்னாரே, கேட்டியோ.? இப்போ கல்யாணம் தப்பிப் போனால், மறுபடி எப்போ வருமோ.? அதனால், இவர்கள் விஷயத்தில் சம்பிரதாயத்தை விட விவாகம்
நடைபெற வேண்டியதுதான் முக்கியம்.

"அதோடு அவர்கள் லௌகிகர்கள்.சாஸ்திரத்திலிருந்து எத்தனையோ விலகிப் போய் விட்டார்கள்.

உன் சமாசாரம் அப்படியில்லை.அக்னி ஹோத்ரிகள் குடும்பம். அதனாலே நீ சம்பிரதாயத்தை மீறக்கூடாது..கவலைப்படாதே.."தீட்சிதர் அடுத்த மாதமே பெண்ணின் கல்யாணப் பத்திரிகையுடன் வந்தார்.

"சம்பிரதாய விரோதமில்லாமல் நடக்கிறது"
அவருக்கு தாராளமாகவே அருள்புரிந்தார்கள் பெரியவாள்.

Source: Siva Sankaran / Brahmana Sangam / Brahmins Association/ Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”

பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.

ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”

அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.

“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”

“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”

“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”

“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.

ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?

அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !

“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள். இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை!
ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.

பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.

“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.

மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……

“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.

“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!

என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!

“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.

” வலிக்கறதா?”

“இல்லை”

“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”

“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது

இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி, பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.

Source: Siva Sankaran / Brahmana Sangam / Brahmins Association/ Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

பெரியவா சரணம் !!

காஞ்சிப் பெரியவருக்கு ஒரே சந்தோஷம் – இஸ்மாயிலைப் பார்த்ததில்...!

யார் இந்த இஸ்மாயில்..?
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப்
பணியாற்றியவர் இந்த மு. மு. இஸ்மாயில்..!
இஸ்லாமியராக இருந்தபோதிலும் ,
கம்ப ராமாயணத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டிருந்தவர் ..!
.
சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கி அதன்
ஆரம்ப நாள் முதல் , தன் அந்திமக் காலம்வரை அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்..!
“கம்பன் கண்ட சமரசம்” , “கம்பன் கண்ட ராமன்” இன்னும் பல இலக்கிய நூல்களை இனிக்க இனிக்க எழுதியவர்..!
அந்த கம்பனின் ரசிகரான நீதிபதி இஸ்மாயிலும் , காஞ்சிப் பெரியவரும் ஒருமுறை சந்தித்து , சந்தோஷமாக உரையாடினார்கள்..!
இலக்கியம்... கம்பராமாயணம்.... இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர்...!
.
இருவரும் விடை பெறும் நேரம்..!
இப்போது மடத்திலிருந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு பெருத்த சந்தேகம்..!
.
வழக்கமாக தன்னை வந்து சந்தித்தவர்கள் விடை பெற்று செல்லும்போது ,
பிரசாதம் கொடுத்து அனுப்புவது மஹா பெரியவரின் வழக்கம்..!
இப்போது .. இந்த நீதிபதி இஸ்மாயில் விடை பெற்றுப் புறப்படும்போது...என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் காஞ்சிப் பெரியவர் ..?
இந்துக்கள் என்றால் விபூதி , குங்குமம் கொடுப்பார் ..!
ஆனால் ஒரு இஸ்லாமியருக்கு , இந்து மத பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்க முடியும்....?
இதோ... இஸ்மாயில் விடை பெற எழுந்து விட்டார்...!
அனைவரும் ஆவலோடு உற்று நோக்க....
காஞ்சிப் பெரியவர் ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்து , இஸ்மாயிலைப் பார்த்து
“இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது... நம் இரு மதத்தினருக்கும் பொதுவான அம்சம் இந்த சந்தனம்...! உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு இருக்கிறது...எங்கள் கோவில்களிலும் சந்தனம் இருக்கிறது... இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள்”
என்று வழியனுப்பி வைக்க ,
சந்தனத்தோடும் , சந்தோஷத்தோடும் புறப்பட்டுச் சென்றாராம் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்..!

படிக்கும்போதே சந்தனமாக மணக்கிறது இந்த சந்திப்பு...!
அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்....!
இது போன்ற பெரியவர்கள் இருக்க இருக்க
இந்த நாட்டில் சமாதானம் இருக்கும்...!

Source: Abul Hasan/
இன்று ஒரு தகவல் /Information Today/Face Book.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Last edited by a moderator:


பெரியவா சரணம் !!

"இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து
கிடக்கிறாள்.உடனே தோண்டி கண்டுபிடியுங்கள்"

பல வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் இது.
அப்போது ஒருநாள், காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை
தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.
வரும் வழியில், பழவந்தாங்கலில் ஓரிடத்தில்

சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.
அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார்.மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்....தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள்.அதை வாங்கிப்
பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை
காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தை கூறி, "யார் அந்த சிறுமி,தண்ணீரை நீங்கள்தான்
சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, "இல்லையே...
அந்த சிறுமி யாரென்றே தெரியாது" என்று வியப்புடன் கூறினார்களாம்.

தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார்.வந்தது சாட்சாத் அந்த
அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உணர்ந்து,

அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும்,ஊர் மக்களையும் அழைத்து,

"இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள்.உடனே தோண்டி கண்டுபிடியுங்கள்"
என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.

மகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின்
குழந்தை வடிவிலான விக்ரகமும்,தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.
இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப் பட்டது.அவரும் மகிழ்வுற்று,அந்த இடத்தில்திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற திருநாமத்தை வைத்தார்.

இதுதான்,நங்கநல்லூரில், பழவந்தாங்கல் ..நேரு காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில்.

இங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி வடிவத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்தக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது.

Source: Siva Sankaran / Brahmana Sangam / Brahmins Association/ Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 

பெரியவா சரணம் !!


அன்று நடந்தது!! அர்த்தமுள்ளது!!
ஒரு சோம்பலான மதியம் மூன்றரை மணி!!

அதாவது மதியத்தின் முடிவு--மாலைப் பொழுதின் ஆரம்பம் என்ற இரண்டுங்கெட்டான் பொழுது
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது!!


காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்ததும் மடம் -தீ பிடித்துக் கொண்டதைப் போல் ஆகிறது??


ஆம்!! காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!!


எந்தவித முன் அறிவிப்பும் இல்லை?? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??

மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள்?? காரணம்??

அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை!! முதல்வர் என்றால் முறைப்படி பூரண
கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்??

மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்!!

ஏன் இந்தப் பரபரப்பு??


அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது!!


மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்??

இவ்வளவு தானே?? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்?? பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்??


மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி??

நம் மனதிலோ பிரமிப்பில் நெடிலை நோக்கி??/


இப்படி வருத்தப் படுகிறது முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி??

உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை??


அதனால் என்ன?? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!! என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி??


இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!! அந்த ஒரு சிலரில் எம்,ஜி,ஆரும் ஒருவர்!!!

ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!!

நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி--திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு!! அதுக்கு தேக சிரமம்--கால விரயம்--பணச் செலவுன்னு ஆகிறது!!

ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்!!


இவ்வளவு தானே?? இந்த சின்ன விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும்-----தங்கற இந்த மடாதிபதி--அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க---

உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை?? என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்???


நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா!! அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து!! நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி!!


இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!!!!


எம்,ஜி,ஆர்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது...!!!

Source: Anithakannan/இன்று ஒரு தகவல் /Information Today/Face Book.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!




 
Last edited by a moderator:

பெரியவா சரணம் !!

எங்கள் கோசாலையை காப்பாற்றிய மஹா பெரியவா!

முக்தியான பிறகும் அவர்களுடைய சமீபத்திய லீலை!!


சிரிக்கும் தெய்வமும்!!! சிரிக்க வைத்த தெய்வமும்!!!


வாழும் தெய்வமும்!!! வாழ வைக்கும் தெய்வமும்!!!


இது ஒரு உண்மை கதை

உரைப்பவன் ரமேஷ் (எ) ஜி.பி.ராமன்

பிறப்பு:உத்தமதானபுரம்—தாய் கோகிலாம்பாள் – தந்தை கணேசய்யர்--- வளர்ப்பு – பெரியம்மா ஜானகி-பெரியப்பா துரைராஜய்யர்.

படிப்பு: தஞ்சாவூர்
மனைவி --செல்லா-வழுத்தூர் திரு. ராமன்-ஜானகி புத்திரி.
பிழைப்பு ஹைதாரபாத்.
குடும்பம் : குழந்தைகள் இல்லை.

வளர்ப்பு குணம் பெரியப்பா துரைராஜய்யரிடம் இருந்து ரத்ததில் வந்தது - நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும்.


பிறருக்கு உதவவேண்டும்,மாடு வளர்க்க வேண்டும், பால் குழந்தைக்களுக்கு தானம் செய்தல், படிப்பு, கல்யாணம் போன்றவைக்கு உதவ வேண்டும். கடவுளை பக்க பலமாக கொண்டு என் காரியங்களை செயய வேண்டும். அவன் மீது முழு பாரத்தையும் போட்டு குதிரை ஓட்டக்கூடாது.உழைக்க வேணடும்.

மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு பசு மாடு வாங்கினோம். இந்த கிராமத்து ஆசையை, நகரத்தில் நடத்த முயற்சி.

கோ பூஜை ஆரம்பம் ஆனது. குழந்தைகள் இல்லாதது பசுவின் மீது பாசத்தயும், அரவணைப்பையும் அதிகரித்தது.SPONGE, ரப்பர் ஷீட், போட்டு பசு அனுபவிக்கும் சுகத்தில் எங்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தது. உபயோகம் போக மீதி பால் தானமாக மாறி, குழந்தைக்களுக்கும் கேன்சர் நோயளிகளுக்கு,கர்ப்ப பெண்மணிகளுக்கும் ஆகாரமாகியது.

மனைவியின் கிராம வளர்ப்பு இதற்கு உறுதுணையாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக்கியது.

வீட்டில் கோ பூஜை, பசு கன்றுகளின் ஆட்டம், மாதம் ஒரு பசு டெலிவரி, பெயர் வைத்தல், பிறந்த நாள் கொண்டாடுவது, பால் கொடுத்தல், எல்லாம் மகிழ்ச்சியின் உச்ச கட்டததில் போய்க்கொண்டு இருந்தது.

பக்க துணையாக பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!

வருடங்கள் ஓடியது, கோமாதாக்களின் எண்ணிக்கை கூடியது, பால் தானம் பெறுபவரின் எண்ணிக்கை 400 ஐ எட்டியது. செலவு வருமானத்தை முழுங்க ஆரம்பித்தது.

இதில் உபகார சிந்தனை தலை தூக்கியது. கால் உடைந்த பசுக்கள், உடல் நலமற்ற பசுக்கள் வீட்டில் கொண்டுவந்தது,என் சகோதரன் சபேசன் கொடுத்த மருத்துவ செல்வத்தால் அதை குணபடுத்தி அதன் மகிழ்ச்சியில், எங்கள் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

சிகிச்சை தொடங்கும் போது பெரியவரை குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தொடங்குவோம். வெற்றி பெற்றால் ஒரு நன்றி சொல்வேன், இல்லை என்றால் அவரிடம் ஏன் எனக்கு துணை நிற்க்கவில்லை, என்று கத்துவேன் .என்னை மற்றவர்கள் பைத்தியக்காரன் என்பார்கள்.

ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருப்பார்!

வருமானத்தை ஈடு கட்ட கோவில் பூஜை,அபிக்ஷேகம் ,ஹோமம் நிறுத்தப்பட்ட்து. கார் உபயோகம் குறைக்கபட்டது.

ஆடம்பர ஆடைகள் தவிர்க்கபட்டது. ஏசி இரயில் பயணம், விமான பயணங்கள் குறைக்கபட்டது.உழைப்பை அதிகரித்தேன்.

பஞ்சகவ்ய முறையில் 26 பொருள்களை செய்தேன்.கொஞ்சம் வருமானம் கூடியது.

12 வருடங்கள் ஓடியது. பசுக்களின் எண்ணிக்கை 60தை தாண்டியது. பசுக்களின் வயது முதிர்ந்தது. பசு பால் கொடுப்பது குறைந்தது. ஆனால் பால் தானம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியது. கேன்சர் பேஷன்ட் மற்றும் பேறு கால மகளிர் எண்ணிக்கை கூடியது.

எனக்கும் என் மனைவிக்கும் எங்களை அறியாமல், செயின் ஸ்மோக்கர் எப்படி ஒரு சிகெரட்டில் ஆரம்பித்து தொடர்ந்து சிகெரட் குடித்து, நிறுத்த முடியாமல் தவிக்கின்றார்களோ ,அது போல் எங்கள் இரத்தத்தில் கலந்து இந்த சேவ மனப்பான்மையை நிறுத்த முடியாமால் தவித்தோம்.
ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!

பால் தானம் 3,60,000 லிட்டரை எட்டியது. வாழ்க்கையில் 5 இலட்சம் லிட்டரை எட்ட ஆசை. பசு பால் கொடுப்பது குறைந்ததால் தினம் 30 லிட்டர் பால் வாங்கும் நிலை. பால் இல்லை என்று சொல்ல மனம் இல்லை. பணத்தட்டுபாடு அதிகமானது. கடன் சுமை ஏறியது. பசு உணவு கடையில் கடன் ரு.2,50,000/- எட்டியது.புல் காரனிடம் கடன் ரு.60,000/- தொட்டது.

பொருள்களை விற்று பசு உணவிற்க்கும் பேங்க் வட்டிக்கும் கொடுத்தோம். ரு.18 இலட்சம் நகைகள் பேங்கில் குடியேறியது. வீட்டு பத்திரங்கள் பேங்கில் இடம் பிடித்தது.

ஆனால் பால் கொடுப்பது நிறுத்தப்படவில்லை. முழு பைத்தியக்காரன் பெயர் பரவியது.

ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!

பால் வாங்க முடியாமல் திணறினோம். பெரியவரிடம் ஏன் இந்த சோதனை என்றேன்.

ஆந்திரா தெலுங்கானா பிரிவு வந்தது. பால் வாங்க முடியவில்லை. கையில் இருந்த பணத்தில் பாலை வாங்கி கொண்டு பாதி பேருக்கு இல்லை என்று சொல்ல வேண்டுமே என்று தலையை தொங்கப் போட்டு கொண்டு பால் கொடுக்க போனேன். அங்கு 40 பேர் மட்டுமே இருந்தர்கள். ஆந்திரா மக்கள் ஆந்திராவிற்க்கு போய்விட்டார்கள். பால் இல்லை என்று சொல்லாமல் கையில் 10 லிட்டர் பாலுடன் வீடு திரும்பினேன்.

பெரியவரிடம் "ஏன் இந்த சோதனை"என்றேன் ஆனால் பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!!

வாசலில் ஒரு வேன் வந்தது 30 மணி நேரம் கூட ஆகாத 2 குழந்தை கன்று குட்டிகளை இறக்கினார்கள். ஒன்று கால் உடைந்து துடித்து கொண்டு இருந்தது .அதற்க்கு தொப்புள் கொடியில் முழுவதும் புழு. மற்றது இறக்கும் நிலை.

வந்தவர், "சார் , தாய் பசுக்கள் இறந்துவிட்டன . முடிந்தால் காப்பாற்றுங்கள்"என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள்!.

இது என்ன சோதனை. கையில் இருந்த பாலில் கால்சியம் சேர்த்து ஃபீடீங்க் பாட்டில் ஊற்றி கொடுத்தேன். நன்றாக குடித்தது. காலில் சிறு கட்டயை கட்டி PAIN RELIEF ஆயிலை ஊற்றினேன். தொப்புள் கொடியில் பெட்ரொலை ஊற்றி 65 புழுக்களை வெளியே எடுத்தேன். குழந்தை முகம் தெளிந்தது!

நானும் சிரிதேன். பெரியவரும் சிரித்தார்!!

கடைசியாக அம்மாவின் நகையை, ஒரு பக்கம் கஜ லட்சுக்ஷ்மியும் மறு பக்கம் தாமரை பூ வும் உள்ள கோல்ட் காயின்களாக மாற்றி கோ பூஜைக்காக வந்தவர்களிடம் அதை கொடுத்து அதன் மூலம் பூஜை செய்து, மகிழ்சி அடைந்தோம். அது மட்டும் தான் கையில் இருந்தது. இரண்டு இலட்ச ரூபாய் ஆட்டோவை 40,000/- ரூபாய் க்கு விற்றது பசுவின் ஆகார கடனை அடைத்தது.

கடைசியாக லக்ஷ்மி காயின் பேங்கில் குடியேறிய பொழுது என் மனைவியின் கண்கள் சிறிது கலங்கியது. கோ மாதாவுக்கு உணவுக்கு வேண்டும் என்றால் மானத்தை காக்கும் புடவை தவிர எல்லாவற்ரையும் கொடுக்க கூடிய நடமாடும் தெய்வம் அவள்! அந்த தொகை இரண்டு மாதத்தை ஓட்டியது.

ஒரு நாள் லயன் மேன் வந்தான் "இரண்டு மாத பில் கட்ட வேண்டும் ,அரசாங்க உத்தரவு."! நான் பத்து நாள் டயம் கேட்டேன். அவன் "என் கையில் இல்லை "என்றான். நான் "சரி "என்று சொல்லி விட்டேன்.

பெரியவா இது என்ன சோதனை? இது நகரம். கிணறு கிடையது. BORE தான் உள்ளது. 60 பசுகள் குடிக்க குளிக்க தண்ணீர் வேண்டும். ஒரு மணி நேரம் என்ன செய்யவது என்று புரியாமல் தவித்தேன்.

திடீர் என்று மோட்டர் ஓடும் சத்தம் கேட்டது. லயன் மேனை கேட்டேன்.! “சார் ,FUSE ஐ எடுத்ததாக பேப்பரில் எழுதிவிட்டேன் ஆனால் எடுக்கவில்லை. கொஞ்சம் சீக்கிரம் கட்டிவிடுங்கள் "என்றான்!

அப்போது பெரியாவாளை ஓர கண்ணால் பார்தேன் அவர் சிரித்து கொண்டு இருந்தார்!

சரி என்று ஒரு முடிவுக்கு வந்தேன். பூஜையை முடித்தேன் இன்னும் 3 நாள்கள் தான் உணவு இருந்தது. அதற்கு மேல் உணவு வாங்க எந்த வழியும் இல்லை.

நானும் என் மனைவியும் பெரியவா போட்டோ முன்னால் உட்கார்ந்தோம். கையை தூக்கி கொண்டு "ஆண்டவனே, நான் தோற்று விட்டேன். இனி என்னால் பசுக்களை காப்பாற்ற முடியாது . பசுக்களை கட்டி போட்டு உணவு போடாமல் இருந்தால் அது எனக்கு பெரிய பாவம்.

அதனால் உன் போட்டோவை வாசலில் உள்ள கோவில் அரச மரத்தடியில் வைத்து என் பசு குழந்தைகளை, ஒவ்வொன்றாக கூட்டி வந்து, அதன் பெயரை சொல்லி, உன்னிடம் ஒப்படைத்து விடுகிறோம். தினமும் என் வருமானத்தில் எந்த அளவிற்கு உணவு வாங்க முடியுமோ அதை வாங்கி உன் முன் வைத்து விடுகிறேன். அதை எல்லா பசுவிற்கும் கொடுத்து எப்படி அவைகளின் வயிறை ரொப்புவாயோ எனக்கு தெரியாது. அதன் பிறகு உன் பொறுப்பு "என்று வேண்டி கொண்டோம்!

Contd..../2


 
Last edited by a moderator:
Contd...... --:2:--
இரண்டு நாள் ஒடிவிட்டது இன்னு
ம் ஒரு நாள் தான் உள்ளது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மறு நாள் காலை 2 பேர் வந்தார்கள். உள்ளே நுழைந்ததும் பெரியவாளை கும்பிட்டார்கள். "உங்கள் பசுக்களை பார்க்க வந்து இருக்கிறோம். நாங்கள் பெரியவரின் பக்தர்கள்" என்றார்கள்.

நான் என் மனதில் சிரித்து கொண்டேன் என் மனது கூறியது! ஆம் நீங்கள் பெரியவரின் பக்தர்கள். மாதம் ஒரு முறை கூடுவீர்கள். அவர் பாதத்தை வைத்து பூஜை செய்வீற்கள். அவர் நாமத்தை நன்றாக ஒலிப்பீர்கள். பிறகு அனைவரும் உணவு அருந்துவீர்கள்.

அதற்க்கு ஒரு பெரிய தொகை நிச்சயம் செலவாகும். அத்துடன் அந்த தினத்தில் எல்லோரும் ஒரு சின்ன காரியத்ததை சேர்த்து கொண்டால் நிச்சயம் பெரியவர் சந்தோஷப்படுவார்.

அந்த தினத்தன்று ஒரு சிறு தொகையை பசுக்களுக்கு உணவிற்க்கும், ஊனமுற்ற குழந்தைகளுக்கு பகிர்ந்து கொண்டால் நிச்சயம் நம் பெரியவர் இன்னும் ஆனந்த பட்டு போவார் என்று என் மனம் கூறியது.

நம்மிடையே இன்றும் நடமாடும் தெய்வமாகிய மஹா பெரியவா தம் வாழ் நாளில் பெரும் பகுதியை பசு மாட்டு க்கொட்டிலில்தான் இருந்திருக்கிரார்கள்.. Camp செல்லும்பொழுது கூட பசுமாடுகள் கொட்டடில் இருக்கும் இடம் வந்தால் உடன் தம் plan ஐ மாற்றி அங்கு அன்றைய பூஜையை வைத்துக்கொள்வார்கள்! . கோஸம்ரக்ஷணம் அவர்களது உயிர் நாடி.

அவர்கள் "பெரியவர் பக்கத்தில் உக்கார்ந்து பேசி இருக்கிறோம்".ஒருவர் சொன்னார் "நான் பெரியவரிடம் சொல்லுவேன், எனக்கு பூஜை,அபிஷேகம் இதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. நான் நேரிடையாகவே வேண்டிய உதவியை வேண்டியவற்கு செய்வதில் தான் என் மனம் ஈடுபடுகிறது" என்றேன். பெரியவர் "சந்தோஷம் நீ மனதில் பட்ட படியே செய், நன்றாக இருப்பாய்" என்று சொன்னார்கள்.

எனக்கு தூக்கிவாரி ப்போட்டது ,என் மனதையே அவர் படிப்பது போல் தோன்றியது நிமிர்ந்து உட்கார்தேன்.

கோசாலை முழுவதும் சுற்றி காண்பித்தேன். ஊனமுற்ற பசுக்களுக்கு சிகிக்சை அளித்ததை காண்பித்தேன். சந்தோஷத்தில் ஆழ்ந்து போனார்கள்.
என்னுடைய இயலாமையை அவர்களிடம் சொல்ல என் ஈகோ மறுத்துவிட்ட்து.

அப்போது புல் கட்டுகாரன் வந்தான். கொஞ்சம் கடுமையாக பணம் கேட்டான். எனக்கு அசடு வழிந்தது. அவர்கள் என் நிலைமையை தானாகவே புரிந்து கொண்டார்கள்.அவனிடம் "ஒரு நாள் எவ்வளவு புல் போடுகிறாய் "என்று கேட்டார்கள். அவன் "ஒரு நாளைக்கு ரு.1200க்கு வாங்கிகொண்டு இருந்தார்கள் இப்பொழுது ரு.800/ க்கு வாங்குகிறார்கள் . அதையும் கொடுக்கமுடியாமல் திண்டாடுகிறார்கள் "என்றான்.
அவர் தனது செக் புக்கை எடுத்து ரூ.36000/- எழுதி அவன் கையில் கொடுத்தார் "இதை அட்வான்ஸாக வைத்து கொள். இனி ஒரு நாளைக்கு ரூ.1200/- புல் கட்டு போடு. உன்னுடைய மீதியை ஒரு வாரத்தில் கொடுத்துவிடுகிறேன். சந்தோஷமாக பசுவிற்க்கு நல்ல புல்லாக போடு" என்றார்.
எனக்கு ஓன்றும் புரியவில்லை. பெரியவர் சிரித்து கொண்டே இருந்தார்!

என்னை பார்த்து நீங்கள் நல்ல காரியம் செய்து இருக்கிறீர்கள். இப்பொழுது "உங்களால் முடியவில்லை. எங்கள் மனதில் பெரியவா தோன்றி எங்களை அனுப்பிவைத்தார். வெட்க படாமல் உங்கள் மொத்த கஷ்டத்தையும் எங்களிடம் சொல்லுங்கள் "என்றார்.

நான் பசு உணவு ,கடை கடன்,புல் கட்டு கடன்,நகை கடன்,வீடு பத்திரம் எல்லாம் சொன்னேன்.

என் செய்கையை பார்த்து அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். பெரியவர் போட்டோ முன் சென்று "சரியான இடதில் என்னை அனுப்பி வைத்தீர்கள். நான் நிச்சயம் முடிந்த வரை உதவியை செய்கிறேன் "என்றார்

பிறகு என்னை பார்த்து "இன்றிலிருந்து பசுக்களுக்கு ஆகும் மொத்த செலவையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம்.

நீங்கள் பசுக்களை சந்தோஷமாகவும் கொழு கொழு என்று வைத்து கொள்வது உங்கள் பொறுப்பு "என்றார்." ரூ.1,00,000/- எனது உதவியாளர் இன்னும் 2 மணி நேரத்தில் கொண்டு வந்து கொடுப்பார். ரூ.50,000/ பேங்க்கில் உங்கள் கணக்கில் வரவாகும்" என்றார். "இந்த ரூபாயை வைத்து கொண்டு உங்கள் கடன் தொல்லை செய்பவர்களூக்கு கொடுத்து விட்டு சந்தோஷமாக பசுவிற்க்கு சேவை செய்யுங்கள் "என கூறி சென்று விட்டார்கள்.

நான் பெரியவரின் போட்டோ முன் நின்று அவரை உற்று பார்த்தேன். என் கண்ணில் நீர் பெருகியது. என் உடல் முழுவதும் தூய்மையானது போல் ஒரு உணர்வு வந்தது. என் முன்னே ஒரு சிறிய உருவம் தலை
குனிந்தபடியே போய் கொண்டு இருந்தது. அதில் என் ஆணவம் "நான்தான் செய்கிறேன்!" என்ற எண்ணமும் சேர்ந்து ஆன உருவம் என்று புரிந்தது கொண்டேன்!

கையை கூப்பினேன். "பெரியவரே புரிந்து கொண்டேன். இத்தனை ஆட்டமும் உன் திருவிளையாடல்தானே?!உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். நான் உன் காலடியில் கிடக்கிறேன். இனி நீ கட்டளை இடு ,நான் அதை செய்கிறேன் "என்று கூறி அவர் பாதம் பணிந்தேன்.

குறிப்பு:-
என் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரிக்காமல் அவைகளை சந்தோஷமாகவும் கொழு கொழு என வைத்து கொள், செலவுகள் மட்டும் எங்களது .பெரியவரை தவிர இதை வேறு யாராலும் செய்ய முடியாது. அல்வா பிடித்தவனுக்கு அல்வா திங்க கஷ்டமா?
ஹைதராபாத்தில் இருப்பவர்களும், இந்த ஊருக்கு வருபவர்களும் அவசியம் எங்கள் கோசாலைக்கு வந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்

இப்படிக்கு
ஜீ,பி,ராமன் --- செல்லா.
எங்களை தொடர்பு கொள்ள விபரங்கள்
Address:
G.P.RAMAN
Plot 74 B&C , EASWARIIPURI COLONY,
SAINIKPURI
HYDERABAD-500094
Phone no.
+919848017349 ( WhatsApp ), +919246171330


Source: M.r. Srinivasan/
இன்று ஒரு தகவல் /Information Today/Face Book.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

பேசும் தெய்வம் - 2ம் பாகம். - J.K. SIVAN

தெய்வத்தின் தொலை நோக்கு....

''தாத்தா சார், இன்று அனுஷம். பெரியவா நக்ஷத்ரம். எங்க ஊர் மண்டபத்தில் வேத பாராயணம் பிரசங்கம் எல்லாம் நடந்தது. ''இந்தாங்கோ பிரசாதம்''.

போகும் வழியில் உங்களை பார்த்து கொடுத்து விட்டு ஏதாவது ஒரு விஷயம் கேட்கலாமே என்று ஒரு எண்ணம்.

''ஆஹா ரொம்ப சந்தோஷம் குப்பு ராவ். உங்களுக்கு நானும் பெரியவா பற்றி ஒரு ருசிகர விஷயம் சொல்கிறேன் கேளுங்கோ'' என்றேன்.

ஸ்ரீ நொச்சூர் வெங்கட்ராமன் அற்புதமான ஜனரஞ்சக ஆன்மீக பேச்சாளர்களில் ஒருவர். அவர் ஒரு ஆன்மீகக் பிரசங்கத்தில் தெரிவித்த ஒரு ருசிகர சம்பவம் இது.

திருச்சூரை சேர்ந்த ஒரு கிராமம் புன்குண்ணம். அன்று அந்த க்ராமமே மலையாள வாசனையை வீசிக்கொண்டு ஜேஜே என்று பக்தர்களால் நிறைந்து இருந்தது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள், வாழைமரங்கள் மாவிலைகள் கட்டி இருந்தது. வண்ண வண்ணபடங்கள், பட்டு வண்ண துணிக் கொடிகள் தெருக்களை இருபுறமும் அடைத்துக் கொண்டிருந்தன.பந்தல் அலங்காரம் பற்றி சொல்லவே வேண்டாம். பளபள வென்று முகபடாம் போட்ட யானைகள் அதன் மேல் குடை பிடித்த பாகன்கள். பஞ்சவாத்தியங்கள் முழங்கின. வேதகோஷம். நாதஸ்வரம்.

அந்த கிராமத்தில் பிரதான ஒரு நெசவு மில். டீ.ஆர். ராமச்சந்திரய்யர் 1940களில் நிறுவியது. இப்போது (1957)டீ. எஸ். பலராம அய்யர் மேற் பார்வையில் சிறப்பாக நடக்கிறது. ஏதோ புது மெஷின்கள் வந்து இன்று திறப்பு விழா.

பூஞ்சுண்ணம் நெசவாலை திறப்பு விழாவை ஒட்டி, புஷ்பகிரி அக்ரஹாரம் வேதபிராமணர்களால் நிரம்பி வழிந்தது. சீதாராமஸ்வாமி கோவில் நிர்மாணித்திருந்தார்கள். அங்கு ஸ்ரீ ராமநவமி உத்சவம் சமீபத்தில் மஹோன்னதமாக நடந்தது.

ஆமாம் அன்று கோலாகலம் ஸ்ரீராமனின் தேர்திருவிழா போல் மட்டும் அல்ல. மகா பெரியவாவின் வருகையால். ஊரெங்கும் பெரியவா தரிசனம் பற்றிய பேச்சு.

அன்று ரெண்டு சூரியன் பூங்குண்ணம் கிராமத்தில். சுட்டெரிக்கும் சூரியன் மேலே வானில். . கருணைச்சுடர் விடும் சூரியன் இதோ பூமியில் நடந்து வருகிறதே. பந்தல் அருகே பூர்ண கும்ப வரவேற்பு. துளசி வில்வ புஷ்ப மாலைகளை ஏற்றுக் கொண்டார். எல்லா கண்களும் அவர் மேலே. ஊர்வலம் பலராமய்யர் வீட்டு வாசலுக்கு வந்தது. பெரியவா தங்க சகல ஏற்பாடுகளும் பண்ணியாகிவிட்டது.

எல்லோருக்கும் திருப்தியாக தரிசனம். ஸ்வாமிகளின் பிரசாதம் கிடைத்து திரும்பினார்கள்.
பலராமய்யர் கூட்டுக்குடும்பஸ்தர். வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள் குழாம் வேறு.அண்டை அசல் வேறு. ஒரே கூட்டம். இரவு நெருங்கியது மறுநாள் எப்போது வரும் என்ற ஆவலில். நெசவாலை திறப்பு விழா, பெரியவா வரவு. பேச்சுக்காக.

மறுநாள் காலை ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. பலராமய்யர் குடும்பத்தில் ஒருவருக்கு பெரியவாவின் நெருங்கிய பரிச்சயம் உண்டு. அவர் விடிகாலையில் எழுந்து பெரியவா தங்கியிருந்த அறை வாசலில் நின்றார். பெரியவாளுக்கு ஏதாவது சிஷ்ருஷை செய்ய அறையின் வாசலில் நின்றவர். மஹா பெரியவா அதிகாலை எழுபவர் என்பதால் தனது வரவை கட்டிக்கொள்ள கதவை மெல்லிதாக தட்டியும் பதில் இல்லை. . கதவு திறந்திருந்தது. உள்ளே மெதுவாக சென்றார். யாருமே இல்லையே. பெரியவா எங்கே?

ஒன்றிரண்டு பேரை எழுப்பி கேட்டார். தெரியவில்லை.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நெசவாலை வாசல் தெருவில் சென்ற ஒருவர் பெரியவா நெசவாலைக்குள் நுழைவதை கண்டதாக சொன்னார். ஸ்வாமிகள் சீதாராம் நெசவாலை வாசலில் இருந்தார்.

அன்று காலை பிரமாதமாக மஹா ஸ்வாமிகளை வரவேற்று அந்த நெசவாலையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் எதற்கு அதிகாலையில் தனியாக......

நெசவாலையின் மலையாள காவலாளிக்கு ஆச்சர்யம். இந்த பெரியவரை எவ்வளவு சிறப்பாக வரவேற்றார்கள் கிராமத்தில் நேற்று தானே பார்த்தேன். இன்று காலை இங்கே வரவழைத்து மரியாதை செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்க இப்போது எதற்காக தனியாக இங்கே வந்தார்?

பய பக்தியோடு கதவை திறந்துவிட்டான். உள்ளே செல்ல விருப்பம் என்று அறிந்து அவரை அழைத்து சென்றான். உள்ளே எல்லா இடத்தையும் காலியாக இருந்தபோது பார்வையிட்டார் பெரியவர். ஒரு சிறு நூல் கண்டிலிருந்து பெரிய பெரிய நீள அகலமான வஸ்திரம் தயாராகும் வரை முறையாக, ஒரு கிரமப்படி, செயல் படும் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்தார்.

ஒரு பெரிய ஆலை என்றால் எத்தனை முன் யோசனை. திட்டங்கள். நிர்வாக செயல்பாடுகள். அவர்களை இயக்கும் அபார சக்தி எது ?

எந்த துறையில் ஈடுபட்டாலும் எந்த வகை செயல்பாடானாலும் இத்தகைய நிறுவனர்களிடம் காணப்படும் ஒரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா? மற்றவரிடம் காணமுடியாத கூர்ந்த கவனிப்பு. ஆழ்ந்த சிந்தனை. பூரண தொழில் ஞானம். தைர்யம். தன்னம்பிக்கை. துணிவு. இதுவே அவர்களை வேறுபடுத்துகிறது.

மஹா ஸ்வாமிகளும் இத்தகைய வித்யாசமான சிந்தனா சக்தி, ஊடுருவும் பார்வை உடையவர். ஒரு சிறு விஷயமும் அவர் பார்வையிலிருந்து தப்பமுடியாது.

தான் மற்றவர்களோடு அந்த ஆலையில் நுழையும் போது இதையெல்லாம் சரிவர கவனித்து, சிந்திக்க இயலாது, நேரம் அதிகமாகும் என்பதால் தான், தானே ஒருவருமின்றி உள்ளே நுழைந்து நெசவாலையின் முழு செயல்பாட்டை, ஏற்பாடுகளை, முழுவதையும் நின்று நிதானமாக அலசி பார்த்திருக்கிறார்.

அன்றைய காலை நடந்த விழாவில் ஸ்வாமிகள் பேச்சில் நெசவாலை எப்படி இயங்குகிறது. அதைபோல் ஆன்மீக செயல்பாடும் பக்திமார்க்கமும் எந்தவகையில் சிறப்பாக ரிஷிகளால் அமைக்கப் பட்டிருக்கிறது என்று வேதத்தில் இருந்து அக்கு வேறு ஆணிவேராக அது செயல்படும் முறை எல்லாம் எடுத்து சொல்லி பலராமய்யர் மற்றும் நெசவாலை அதிபர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் திணற வைத்தார் என்று நான் சொல்லி தான் தெரியவேண்டுமா?

Source: Vidhya Srinivasan / Brahmana Sangam / Brahmins Association/ Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத வைத்தியர். சக்திவிலாச வைத்தியசாலையை நிறுவி மருத்துவம் பார்த்தவர். கே.பி. சுந்தராம்பாள், தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் அவரிடம் மருத்துவம் பார்த்தனர். ஓவியரான நாமக்கல் கவிஞர், தன் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்த அவருக்கு, அழகிய முருகன் வண்ணப்படத்தை வரைந்தளித்தார்.

ராமசர்மா, மகாபெரியவரின் பக்தர்.பெரியவர் கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார்.

ஒரு முறை பெரியவர் தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக் காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார்.

அவருடைய மருந்துப் பெட்டியை பார்த்து பெரியவர் முகத்தில் புன்முறுவல்!

'உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு சொல்லலியே!' என்றார். ராமசர்மா திகைத்தார்.
'உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்!' என்றார்.

'உடல் என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான். காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே வருகிறது! அது சரி... நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு! அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது! அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன்!'

ராமசர்மாவுக்குப் புரியவில்லை. அமைதி காத்தார். பெரியவர் தொடர்ந்தார்.

''நீ குளிச்சுட்டுத்தான் வந்திருப்பாய். இரு... நான் இன்னொரு முறை குளிச்சுட்டு வந்துடறேன்!''
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கிறேன் என்கிறாரே! ராமசர்மாவின் மனம் பதறியது. ஆனால் மறுத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பெரியவர் வரும் வரை காத்திருந்தார்.

குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது.

''நல்லது... நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கப் போகிறோம்!' என்றார் பெரியவர்.
இருவரும் இணைந்து ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார்.

என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது!

உடனே பெரியவர் சர்மாவிடம், ''விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன். ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மைதான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ? அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன்.

கடவுள் நாமம் பிறவிப் பிணியைத் தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே நீக்கும்னா, பிறவியிலே வர்ற பிணியை நீக்காதா?

நோயாளிகளுக்கு நீ வழக்கம்போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட வேண்டியதுதான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ரநாமம்கிற மருந்தையும் சேத்துப் பயன்படுத்தலாமே? உன்னைத் தேடி வர்றவாள் கிட்ட, நீ இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கலாம் இல்லையா? அதுக்கு ஒனக்கு நம்பிக்கை வரத்தான், உன்னை வரச்சொன்னேன். காந்தி இயற்கை வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு உனக்கு தெரியும்.

இயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்கு தான் முதலிடம்,'' என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார்.

Source: Dinamalar 29 April 2017

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

"ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு""
1971-ஆம் வருடம். மகா பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாணம் வைபோகம் தான்!.

சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள்.

சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவாள். புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள்.

அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் - பார்கிறார் - வியக்கிறார்.

இரண்டு காசுகள்...!

என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்...!
தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன...? வேறு யாருக்கும் தெரியும்...?
மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.
பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.

"என்ன?" என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

"என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே ..? அதான்.. இன்னொண்ணை..."
பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

"ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..!
அட, அப்படியா?

நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே... பெரியவாள் எதிரில்

அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்...

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்!

கணேச - சுப்பராமன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவாள்
தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை போவார்களா, மக்கள்?
சொக்க தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும்.

Source: Maha Periyava Public Group/ Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

"இருபத்தஞ்சு வருஷ மஹா தப்பை பண்ணினவனுக்கும் அருள் புரிந்த தெய்வமே. உங்கள் கடாக்ஷத்தால் பரிகாரம் உடனே தேடுகிறேன். என் பித்ரு சாபத்திலிருந்து எனக்கு கதி மோக்ஷம் காட்டிட்டேள்''"

நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் பித்ருக்களுக்கு எப்படி காரியங்கள் அங்கேயே செய்வது என்று அடிக்கடி கேட்கிறார்கள்.

மஹா பெரியவா அவர்களுக்காகவே சில அறிவுரை வழங்கி இருக்கிறார்.

பணக்காரர் ஒருவர் பெரியவாவிடம் காஞ்சிபுரத்தில் மடத்தில் இப்படி ஒரு சந்தேகம் கேட்டபோது அருகில் இருந்தவர்களுக்கும் அந்த அறிவுரை பாக்கியமாக கிடைத்தது. ஒரு சம்பவம் சொல்கிறேன்.

வெகுநேரம் வரிசையில் காத்திருந்த அமெரிக்க பணக்கார பிராமணர் குடும்பம் மெதுவாக பெரியவா முன் நகர்ந்து வந்து பேசும் தெய்வத்தின் எதிரே தரையில் அமர்ந்தார்கள். ஒரு கயிரைக் கட்டி இதற்குமேல் அருகே வரக்கூடாது என்று மட சிப்பந்திகள் எல்லை அமைத்திருந்தார்கள். தெய்வத்தின் பார்வை அவர்கள் மேல் விழ அந்த தனவந்தர் பேசினார். அவர் மட்டுமே பேசினார்:
''மகா பெரியவா, இருபத்தைந்து வருஷமா வெளிநாட்டிலே இருக்கேன். இது என் மனைவி, இவர்கள் என் பிள்ளை, பெண்கள். வெளியூர்லே இருக்கேன் என்று பேரே ஒழிய பிராமண சம்பிரதாயத்தை விடலை. ரெண்டு வேளை சந்தி பண்றேன். தோப்பனார், தாயார் ஸ்ராத்த கர்மாவை விடறதில்லை. எல்லா ஸாமக்ரியைகளும் இங்கேருந்து வரவழைச்சுடறேன். பணத்தை லக்ஷியம் பண்ணலை. அப்பா அம்மாவுக்கு எந்த குறையும் இருக்க கூடாதே . இதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு நான் இந்த உடம்போட இருக்க அவா தான் காரணம். அவா மேலே லோகத்தில் நன்னா இருக்க என்னவேணா செலவு பண்ண காத்திண்டிருக்கேன். கடமைப்பட்டிருக்கேன். ரெண்டாவது என் பிள்ளைகள் என்னைப் பார்த்து அவாளும் எனக்கப்புறமும் இதெல்லாம் பால்லோ பண்ணனும். பித்ருக்களை விட பெரிய தெய்வம் யாராவது இருக்காளா? சொல்லுங்கோ பெரியவா?

நான் எதுக்கு சொல்றேன் இதை என்று கேட்டா என்னைப் பார்த்து மத்தவாளும் இதே மாதிரி பண்ணனும்னு தான். பெரியவா நீங்க சொல்லுங்கோ நான் செய்யறது சரி தானே.'' என்று நிறைய பேசினார் அவர்.

இப்படி அவர் பேசினது அங்கிருந்த மற்ற பெரியவா பக்தர்களுக்கு பிடிக்கவில்லை. இப்படியா ஒருத்தன் தன்னைப் பத்தி அதுவும் பெரியவா எதிர்க்க தம்பட்டம் அடிச்சுப்பான். ஐயோ பெரியவா என்ன நினைப்பாளோ? பேசாம தரையைப் பார்த்துண்டு இருக்காளே!

பெரியவா தலையை நிமிர்த்தி அந்த ப்ராமணரைப் பார்த்தார். சில கேள்விகளை கேட்டார்.
'' நீ சொன்னாயே, இங்கிருந்து ஸ்ராத்த சாமான் எல்லாம் உன் அமெரிக்காவுக்கு வரவழைக்க என்ன செலவாகிறது?'

ரொம்ப பெருமிதமாக மற்றவர்கள் காதில் விழும்படியாக உரக்க அந்த மனிதர் எவ்வளவு டாலர்கள், அது எவ்வளவு இந்திய ரூபாய்களுக்கு சமானம் என்று சொன்னார்.

'' ஓ, அவ்வளவு ஆறதா? அது சரி, வைதிக பிராமணாவுக்கு எல்லாம் என்ன ஆகும்?

''அது ஒண்ணும் பெரிசு இல்லை பெரியவா. என்கிட்டே நல்ல பெரிய டேப் ரிகார்டர் இருக்கு. இங்கேயே எங்க குடும்ப வாத்யார் வச்சுண்டு அந்த மந்திரமெல்லாம் பூரா அதிலே பிடிச்சுண்டு போயிடறேன். அதை வச்சுண்டு நான் ஸ்ராத்த கார்யம் எல்லாம் பண்ணிடறேன் அங்கே. மனசிருந்தா மார்க்கம் உண்டு என்பார்கள் இல்லையா. பெரியவா''

'' அடடா, நீ சொல்றப்பலே இப்படி ஒரு மார்க்கம் இருக்கோ? என்கிறார் பெரியவா.

'' சயன்ஸ் விஞ்ஞானம் அந்த அளவுக்கு முன்னேறியிருக்கு பெரியவா''

''ஓஹோ. அப்படின்னா ஸ்ராத்தம் இப்படி கூட விஞ்ஞானத்தை வச்சுண்டு பண்ணமுடியுமோ?''

'' சரியா சொன்னேள் பெரியவா''

''ஒருத்தருக்கு ஒருதடவை இங்கேயிருந்து அங்கே பிளேனிலே போக வர என்ன ஆறது?
அந்த பிராமணருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. எத்தனை விமானம் மாறி ஏறி இறங்க வேண்டும். அதற்கெல்லாம் என்ன சார்ஜ் என்று விலாவரியாக சொன்னார்.

''ஆஹா. இவ்வளவு ஆறதா?

''நான் பணத்தை லக்ஷியம் பண்றதில்லே பெரியவா. முதல் கிளாஸ்லே, பிசினஸ் கிளாஸ்லே தான் போவேன். இந்த சாதாரண க்ளாஸ் ஜனங்களோட சேர வேண்டாம் பாருங்கோ. அவா சகவாசம், . அவர்களோட தொந்தரவு இருக்காது. நமக்கு வசதி இருக்கும்போது மட்ட ரகமானவர்களோடு எதுக்கு சரி சமானமாக பழகணும். இல்லையா பெரியவா?""

'' ஓஹோ அப்படியா. வருஷா வருஷம் வருவியா, எப்பல்லாம் வருவே?

“ அது தான் கஷ்டம். சொல்லவே முடியாது பெரியவா. உத்யோகவேலையா வருவேன். சொந்த விஷயமா வருவேன். எப்ப வருவேன் போவேன் என்று சொல்ல முடியாது பெரியவா. உத்யோக ஜோலியா வந்தா தனியா வருவேன். சொந்த காசிலே வரும்போது கிருஸ்துமஸ் லீவ்லெ வருவோம். நவராத்திரிக்கு குடும்பத்தோடு எப்போதும் வருவேன். அதுக்கும் ரெண்டு காரணம் பெரியவா.

முதல்லே, ''அவள் அகிலாண்ட கோடி நாயகி. லோக மாதா. அவ இல்லைன்னா இந்த உலகத்திலே நாமெல்லாம் ஏது? உலகமே ஏது ? அப்படித்தானே பெரியவா?

ரெண்டாவது இந்த விழாக்கள், அதுக்கு அர்த்தம், பண்ணவேண்டிய அவசியம், எப்படி பண்றது என்றெல்லாம் பார்க்க குழந்தைகளோட வருவோம். அப்போது தானே அடுத்த தலைமுறை இதெல்லாம் செய்யவேண்டும் என்று ஆசைப்படும். செய்யவும் கற்றுக் கொள்ளும். நல்லபடியா தலை எடுக்கவேண்டாமா? பணமா முக்கியம் லைஃலே. இல்லையா பெரியவா?'

Contd....2
 

--: 2 :--

பெரியவா பதிலளித்தார்:

''வாஸ்த்வம். நீ அப்படின்னா நிறைய அங்கே சம்பாதிக்கிறே. உன் குழந்தைகளை நன்னா வளக்கணும். பித்ருக்களை திருப்தி படுத்தணும்,னு நிறைய செலவு பண்றே, உனக்கு அடிக்கடி உத்யோக பூர்வமா இங்கே வரமுடியறது, அதை தவிர செலவு பண்ணிண்டு நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள். நீ சொல்றதை பார்த்தா நீ எல்லோரோடும் பழகமாட்டே. உன் லெவல்லே இருக்கறவாளோடு மட்டும் பழகுவே. உனக்கு கீழ் ரேங்க் லே இருக்கற வாளோடு பார்க்கவோ, பழகவோ, பேசவோ மாட்டே. இல்லையா'' என்கிறார் பெரியவா.
அந்த முட்டாள் மனிதருக்கு புரியவில்லையே தவிர, அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு விஷயம் புரிந்து விட்டது. பெரியவா எங்கே போகிறார்கள் என்று உணர்ந்து ஆர்வமாக கேட்டார்கள்.

''பணம் இருக்கிறதால, இங்கேருந்து எல்லாம் வாங்கிண்டு போறே. அங்கிருந்து நினைச்சபோது வர்றே. யார் உனக்கு இப்படியெல்லாம் பித்ரு காரியம் அங்கே பண்ணலாம்னு சொல்லிக் கொடுத்தது? உன் கிட்டே பிண்டம் பித்ரு தேவதைகள் அந்த பரதேச பூமிலே வந்து வாங்கிக்குவா என்று யார் சொன்னது? எனக்கு தெரிஞ்சு அவா அம்மாவாசை, மாச தர்ப்பணம், மஹாளய தர்ப்பணம் ஸ்ராத்த திதி இதுலே இந்த பாரத புண்ய பூமிலே, பரத கண்டத்தில் மட்டும் தான் வந்து வாங்கிக்கணும்னு கேள்விப்பட்டிருக்கேன். பாவம், நீ கவலைப்பட்ட, அக்கறையா இருக்கிற பித்ருக்கள் எல்லாம் வருஷா வருஷம் அந்தந்த திதிலே ஆர்வத்தோடு, ஆசையோடு, பசியா வந்து உன்கிட்டே பிண்டம் வாங்கிண்டு உன்னை ஆசீர்வாதம் பண்ண வந்தும் அது கிடைக்காம பாவம் வெறும் வயித்தோடு திரும்பி உன்னை சபிச்சுட்டு போயிண்டுருக்கா. இங்கேருந்து கடல் கடந்து பிராமணா வரமாட்டா. போகக்கூடாது என்கிறது சாஸ்திரம். பித்ருக்களுக்கு மேலான தெய்வங்கள் கிடையாதுன்னு சொல்றே. ஆனா அவா சாபத்தை நிறைய இருபத்தஞ்சு வருஷமாக வாங்கி நிறைய மூட்டை கட்டிக்கிறே .

நீ சொல்றாப்பல நவராத்ரிக்கு மட்டும் விடாம இங்கே வந்து பெரிய தெய்வமான அம்பாளை வழிபட றே . ஆனா பித்ரு கார்யம் பண்ண அந்தந்த திதிலே இங்கே வந்து பண்ண மனசில்லே . உண்மையாக நீ சொல்றமாதிரி உன் தோப்பனார் தாயார் மேலே பக்தி இருந்தா இருபத்தஞ்சு வருஷமா அவர்களை பட்டினி போட்டதுக்கு பரிகாரமா உன் குடும்ப வாத்தியார்கள் கிட்டே கலந்து பேசி பித்ரு கர்மாக்களை இங்கேயே உனக்கும் அவர்களுக்கும் சௌகர்யமா ஒரு இடத்திலே பண்ணிடு. அப்பதான் உன் பித்ருக்கள் உண்மையாகவே திருப்தி அடைவா. ஆசிர்வதிப்பா. புரியறதா?''

அந்த மனிதர் ஆடிப்போய் விட்டார். கண்களில் நீர் தாரை தாரையாக வெள்ளமாக ஓட பெரியவா எதிரே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார்.

''மஹா பெரியவா, என் தெய்வமே, ஸாக்ஷாத் பரமேஸ்வரா, என் கண்ணைத் திறந்துட்டேள். முட்டாள் நான் தப்புப் பண்ணிட்டேன். இப்பவே போறேன். இத்தனை வருஷமா பண்ணின அபச்சாரத்துக்கு பரிகாரம் தேடி உடனே ஸ்ராத்தாதிகள் பண்றேன். எங்க எல்லாரையும் மன்னிச்சு பெரியவா பெரிய மனசு பண்ணி பிரசாதம் தரணும்னு வேண்டிக்கிறேன். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.

பெரியவா தட்டுலே கல்கண்டு, பழம், வில்வம், விபூதி குங்கும பிரசாதம் கொடுத்தா. அந்த அம்மாளுக்கு ஒரு ரவிக்கை துண்டு. கொடுத்துட்டு '' எல்லோரும் மடத்துலே ஆகாரம் பண்ணிட்டு அம்பாளையும் தர்சனம் பண்ணிட்டு போங்கோ . ச்ராத்தம், பரிகாரம் எல்லாம் பண்ணிட்டு ஊருக்கு போறதுக்கு முன்னாலே வந்துட்டு போ. க்ஷேமமா இருப்பேள் ''
தெய்வம் கை உயர்த்தி எல்லோரையும் ஆசீர்வாதம் பண்ணியது. இதழோரத்தில் ஒரு காந்தப் புன்னகை.

அந்த குடும்பம் மீண்டும் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்.

''இருபத்தஞ்சு வருஷ மஹா தப்பை பண்ணினவனுக்கும் அருள் புரிந்த தெய்வமே. உங்கள் கடாக்ஷத்தால் பரிகாரம் உடனே தேடுகிறேன். என் பித்ரு சாபத்திலிருந்து எனக்கு கதி மோக்ஷம் காட்டிட்டேள்''

இது எல்லோருக்கும் ஒரு படிப்பினை.

பேசும் தெய்வம் - 2ம் பாகம் - J.K. SIVAN

Source: Siva sankaran/ Maha Periyava Public Group/ Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
Last edited by a moderator:


பெரியவா சரணம் !!

"இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தரமுடியுமா உன்னால?"
(தண்டம் தண்டம்னு,(திட்டு வாங்கிய) வேலை கிடைக்காத
ஒரு பட்டதாரி பையனுக்கு பெரியவா காட்டிய பரிவு)
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப்
(10-05-2017 தேதியிட்ட-இதழ்)

(முன்பு படித்த சம்பவம்-ஆசிரியர் வேறு)
பரமாசார்யா தஞ்சாவூர் பக்கத்துல முகாம்.
தரிசனம் தர ஆரம்பிச்சு மூணு,நாலு மணி நேரம் இருக்கும்.
வரிசைல நின்னுண்ட இருந்த பக்தர்கள் கூட்டத்துல
யாரோ லேசா விசும்பறாப்புல சத்தம் கேட்டுது. நேரம்
ஆக ஆக அந்த விசும்பல் சத்தம் அழுகை சத்தமா மாறி
பெரிசா கேட்கவும் பலரும் திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சா.
இருபது,இருபத்திரண்டு வயசு இருக்கும் அந்தப் பையனுக்கு
பார்க்க படிச்சவனாட்டம் இருந்தான். அவன்தான் அப்படி
அழுதுண்டு இருந்தான்.

பொதுவா வயசானவாளோ இல்லைன்னா, மனசுல பெரிசா
பாரம் ஏதாவது உள்ளவாளோதான் இப்படி பரமாசார்யா
தரிசனத்தைக் கண்டதுமே அழுவா. இவனோ இளைஞன்.
படிச்சவன் மாதிரி நாகரீகமாவேற இருக்கான். அப்படி
இருக்கிற இவன் ஏன் அழறான்? இந்தக் கேள்வி
எல்லாருக்குமே எழுந்தது.

அவனோட அழுகை உச்சஸ்தாயில ஒலிச்ச சமயத்துல,
'அவனைக் கூப்பிடுங்கோங்கற மாதிரி தன்னோட
ஒற்றைவிரலை அசைத்தார்,பரமாசார்யா. அந்த
அர்த்தத்தைப் புரிஞ்சுண்டு, அந்தப் பையனை உடனடியா
ஆசார்யா முன்னிலையில் கூட்டிண்டுபோய் நிறுத்தினார்
ஒரு சீடர்.

பரமாசார்யா முன்னால் போய் நின்னதும் பெரிசா அழறதை
நிறுத்திட்டு, கேவிக்கேவி அழ ஆரம்பிச்சான் அந்த பையன்.
அவனோட கண்ணுலேர்ந்து அருவி மாதிரி ஜலம்
கொட்டியது.

"இந்தாப்பா...அழாதே..அதான் பெரியவா முன்னால
வந்துட்டியோல்லியோ...உன்னோட பாரம் என்னன்னு
இறக்கிவைச்சுடு!" அப்படின்னு சிலர் குரல் கொடுத்தா.

"இருந்த எல்லாத்தையும் அழுது கொட்டிட்டியா? இப்போ
சொல்லு.உன்னோட குறை என்ன?" அன்பா கேட்டார்
ஆசார்யா..

"பெரியவா..நான் படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் ஆறது.
ஆனா,எனக்கு இன்னும் வேலை கிடைக்கலை. அதனால
ஆத்துல எல்லாரும் என்னை தண்டம் தண்டம்னு
கூப்பிடறா...நானும் போகாத கம்பெனி இல்லை. தேடாத
வேலை இல்லை. ஆனா ஏனோ...!" வார்த்தையை முடிக்க
முடியாம மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்டான் அவன்.

"சரி, கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்து இரு!"
அவ்வளவுதான் சொன்னார் ஆசார்யா.

அந்தப் பையன் ஒரு ஓரமா ஆசார்யா பார்வையில்
படறமாதிரியான இடத்துலபோய் உட்கார்ந்துண்டான்.
பக்தர்கள் வந்துண்டே இருந்தா.அந்த சமயம்
சென்னைலேர்ந்து பெரிய கம்பெனியோட இன்ஜினீயர்
ஒருத்தர் வந்தார்.

கொண்டு வந்திருந்த பழத்தட்டை பெரியவா முன்னால
வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணின அவர்கிட்டே,

"நோக்கு இது என்னன்னு தெரியுமோ?" அப்படின்னு
கேட்டு, தன்னோட கையில வைச்சுண்டு இருந்த
சன்யாச தண்டத்தைக் காட்டினார் ஆசார்யா.

என்னடா இது. சம்பந்தமே இல்லாம தன்கிட்டே
இதைப்பத்தி கேட்கிறாரே ஆசார்யான்னு அவருக்கு
திகைப்பு. மத்தவாளுக்கோ, பரமாசார்யா ஏதோ
சொல்லப் போறார்ங்கற எதிர்பார்ப்பு.

"இது சன்யாசிகள் வைச்சுக்கற துறவறத் திருக்கோல்!"
சொன்னார் இன்ஜினீயர்.

"திருக்கோல்னு சொன்னா எப்படி? இதுக்குன்னு
பிரத்யேகப் பேர் இருக்கோல்லியோ,அதைச் சொல்லு!"

"தண்டம்னு சொல்லுவா!"

"சரியாச் சொன்னே...இந்த தண்டத்துக்கு ஒரு வேலை
தரமுடியுமா உன்னால?" கேட்ட பெரியவா கொஞ்சம்
நிறுத்த, எல்லாரும் விஷயம் என்னன்னு புரியாம
விழிக்க, ஓரமா உட்கார்ந்திருந்த அந்தப் பையனை
கையசைச்சுக் கூப்பிட்டார், ஆசார்யா.

"இதோ இவன்தான் அந்த தண்டம்.இவனை அப்படித்தான்
கூப்பிடறாளாம்,பாவம், இவனுக்கு உன் கம்பெனில் ஒரு
வேலை போட்டுத் தரியா?" சொன்னார் பெரியவா.

"பெரியவா உத்தரவு. நிச்சயம் வேலை போட்டு
குடுத்துடறேன்.இப்பவே கூட்டிண்டு போறேன்!"
சொன்னார்,இன்ஜினீயர்.

"எல்லாரும் தண்டம்னா,ஒண்ணுத்துக்கும் உதவாததுனு
நினைச்சுக்கறா. ஆனா இந்த தண்டம் இல்லைன்னா,
எதுவுமே முறைப்படி நடக்காது.சன்யாசிகளுக்கு தீட்சா
தண்டம்தான் காப்பு.பிரம்மசாரிகளுக்கும் தண்டம் உண்டு
ஏன்,நாட்டை ஆள்ற ராஜா கையில இருக்கிற செங்கோல்
கூட ஒரு தண்டம்தான்.அது ராஜ தண்டம். யாரா
இருந்தாலும் அதுக்கு கட்டுப்படணும். நீதி,தர்மத்தை
பரிபாலனம் பண்றதே அதுதான்.புரிஞ்சுதா?".

பரமாசார்யா சொல்லி முடிக்கவும்,புறப்பட உத்தரவு
வேண்டியும் ஆசிர்வாதம் வேண்டியும்,அவரை மறுபடியும்
நமஸ்காரம் பண்ணினான் அந்தப் பையன்.

இப்பவும் அவன் கண்ணுலேர்ந்து ஜலம் வழிஞ்சது.
அது ஆனந்த பாஷ்பம்.

Source: Ramjee/ Maha Periyava Public Group/ Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 
Last edited by a moderator:


பெரியவா சரணம் !!

புண்டரீகனுக்காக அவன் வீட்டு வாஸலில் அவன் குடுத்த "செங்கல்"ஆஸனத்தின் மேல் காலங்காலமாக நிற்பது பகவானுக்கு ஒன்றும் புதுஸு இல்லையே!!

மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பெரியவா முகாம். தினமும் வீதி வலம் வருவார். பக்தர்கள் அழைப்பை ஏற்று அவர்களது வீடுகளுக்குச் சென்று,அவர்களுடைய பூர்ணகும்ப மரியாதைகளை ஏற்று, ஆஸிர்வதித்து விட்டு வருவார்.
அதே மாதிரி, ஒரு நாள் நுங்கம்பாக்கத்தில் வீதி வலம் வந்துகொண்டிருந்தார் . பலர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளும்படி வேண்டுவதையும், பெரியவா அவர்கள் இல்லங்களுக்கு சென்று திரும்புவதையும், பெரியவாளோடேயே நடந்து வந்து கொண்டிருந்த ஒரு குட்டிப் பையன் பார்த்துக் கொண்டே வந்தான். பத்து வயஸுக்குள்தான் இருந்தான்.

குழந்தைதானே! குறுகுறுவென்று எல்லாவற்றையும் கவனித்தான். பூர்ணகும்பம் குடுத்து பெரியவாளை அழைக்கும் வஸதி கூட இல்லாமல்,வறுமையே துணையாக வளர்ந்து கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஆடைகளிலேயே தெரிந்தது.
ஆனால், பெரிய பெரிய மனிதர்களும்,ஆசார ஶீலர்களும் பெரியவாளை வரவேற்பதைக் கண்டதும், அந்தக் குழந்தைக்கு வேறு எதைப் பற்றியும் சிந்தனை செல்லவில்லை. அவனுடைய ஒரே ஆசை.....பெரியவாளை, தானும் தன் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே!

அவனுக்கு பெரியவாளை எப்படி கூப்பிட வேண்டும் என்பது கூட தெரியவில்லை! பெரியவா, பெரிய மடாதிபதி! தானோ....குட்டியூண்டு பையன்,கிழிஸல் நிக்கரும், பட்டன் கூட இல்லாத சட்டையும் போட்டுக் கொண்டு திரியறோம்! தான் அழைத்தால் வருவாரா? ம்ஹும்! அதெல்லாம் அந்த களங்கமில்லா குட்டி மனஸில் கிஞ்சித்தும் உதிக்கவில்லை! .....
அவன் தன் பாட்டுக்கு கர்மயோகியாக,தன்னாலான முயற்சியை, தனக்குத் தெரிந்த பாணியில், செய்ய ஆரம்பித்தான்!
எப்படி?

"ஸார், எங்காத்துக்கு வாங்கோ ! ஸார்,எங்காத்துக்கும் வாங்கோ!.."

அடிக்கொருதரம் பெரியவாளுக்கு அருகாக சென்று அழைத்துக்கொண்டிருந்தான்.

பெரியவாளோடு கூட நடந்து கொண்டிருந்தவர்கள், அவனை"பெரியவாளுக்கு தெரியாமல்'!! விரட்டி கொண்டிருந்தனர்.

"டேய்!...ஷ்ஷ்...போடா அந்தண்ட ....."

சிலர் அந்தக் குழந்தையின் தோளையும்,கையையும் பிடித்து பின்னுக்குத் தள்ளினார்கள். நாம் எல்லாருமே வெளியில் தெரியும் உருவத்தைத்தானே பார்ப்போம்?
ஆனால், அவனோ விடுவதாக இல்லை. பின்னால் தள்ளப்பட்டதும், தள்ளப்பட்ட அதே வேகத்தில், வேற பக்கமாக பத்தடிக்கு ஒரு முறை பெரியவாளை நெருங்கி,
"ஸார்...ஸார்.....எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் "
பெரியவாளை அவன் "ஸார்....ஸார்"என்று அழைத்துகொண்டிருந்தது எல்லாருக்கும் வேடிக்கையாகவும் இருந்தது.
ஆச்சு! இதோ....அவனுடைய வீடு இருக்கும் தெருமுனை வந்துவிட்டது.! பெரியவா வலப்புறமா திரும்பிவிட போகிறாரே என்று அவனுக்கு ஒரே பரிதவிப்பு!

"ஸார்.......ஸார்....அந்தப் பக்கம் போய்டாதீங்கோ! ஸார். ....இந்த பக்கமா வாங்கோ......எங்காத்துக்கும் வந்துட்டு போங்கோ...ஸார்"

கண்ணீரோடு கெஞ்சினான். நமக்கே மனஸ் உலுக்கும் போது,மஹாமாதாவுக்கு...?
பெரியவா புன்முறுவலுடன்,

"கண்ணா.....ஸார் ஆம் [வீடு] எங்கயிருக்குன்னு விஜாரிச்சுண்டு.... அந்த பக்கமா போ...."
என்று கூறியதும், அந்தக் குழந்தைக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை!

"இந்தோ! இந்தப் பக்கந்தான்!...இப்டி வாங்கோ...ஸார்..."
முன்னால் வழி காட்டிக் கொண்டு,ஓடினான். அந்த குழந்தையின் வீடு பக்கத்து தெருவில் தான் இருந்தது.
வீடு வந்ததும், "விர்"ரென்று உள்ளே ஓடினான்.....

"அம்மா!...யார் வந்திருக்கா பாரு! ஸார் வந்திருக்கார்..ம்மா!..."
புண்டரீகனுக்காக அவன் வீட்டு வாஸலில் அவன் குடுத்த "செங்கல்"ஆஸனத்தின் மேல் காலங்காலமாக நிற்பது பகவானுக்கு ஒன்றும் புதுஸு இல்லையே!! இன்றும் அந்தக் குழந்தையின் ஆசைக்காக, அவன் வீட்டு வாஸலில் நின்றான் நம் கருணாமூர்த்தி!

பெரியவா அந்த குட்டி சந்துக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், அத்தனை பேரும் வெளியே ஓடி வந்து, குளித்தோ,குளிக்காமலோ, படார் படாரென்று பெரியவா பாதங்களில் விழுந்தனர்.

இந்த குட்டிப் பையனின் அம்மாவும் வெளியே ஓடி வந்தாள்! பூர்ணகும்பம் குடுத்து அழைக்கக் கூட வஸதியில்லாத அந்த ஏழைக் குழந்தையின் அன்புக்கு மட்டுமே வஸப்பட்டு, இதோ! 'ஸார் 'நிற்கிறார்! காஷாயமும், தண்டமும்,பாதக் குறடும், பக்தர் குழாமுமாக!

அவளால் நினைத்தாவது பார்க்க முடியுமா? இப்படியொரு எளிமையான தர்ஶனத்தை? அதுவும் அவளுடைய பொத்தல் குடிஸை வாஸலில்! ஏழைப்பங்காளன்! நினைத்தாலே மனஸை என்னவோ செய்கிறது. கண்கள் கண்ணீரை கொட்டுவதை நிறுத்த முடியாது.

இதில், அந்தக் குழந்தையான பாகவதனின் ஸம்பந்தத்தால், அன்று அந்த சின்ன தெருவில் உள்ள அத்தனை பேருக்குமே தெய்வத்தை நேருக்கு நேராக தர்ஶனம் பண்ணி, நமஸ்காரம் பண்ணும் பாக்யம் கிடைத்தது. உண்மையான பக்தன், பாகவத ஸம்பந்தம், நிச்சயம் நமக்குப் பெற்றுத் தருவது, தெய்வ தர்ஶனம்! நம் தகுதியின்மை, இங்கே உடைத்து, தூக்கி எறியப்படும்.

அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை...இதெல்லாம் பெரியவாளுடைய அவ்யாஜ க்ருபையாலும், அவனுடைய முன்னோர்கள் ஸ்ரீமடத்திடமோ, பூர்வ ஆச்சார்யர்களிடமோ, பகவானிடமோ வைத்த அன்பாலும்தான் நிகழ்ந்தது.

நம்முடைய ஸந்ததிகள் ஸந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினால், அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் நாயாக, பேயாக ஓடி உழைத்து, பணத்தை, நகைகளை,வீடுகள், நிலங்கள் வாங்கிப் போடுவதை விட, கடவுள் பக்தியை, நம் ஸனாதன தர்மத்தின் பெருமையை,மஹான்களின் அனுபவங்கள்,சரித்ரங்களை அவர்களுக்கு ஸாப்பாடோடு ஊட்டி விட்டால் போறும்!

இந்தக் குழந்தை மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்யமான ஒன்று.....நம் வாழ்விலும், நாம் எதிர் நோக்கும் கஷ்டங்கள், நம்மை பகவானிடமிருந்து பின்னோக்கி தள்ளினாலும், இந்தக் குழந்தையின் mm விடாமுயற்சி போல், நாமும் அவனை நோக்கி கர்மயோகி போல்,முன்னேறினால், அவன் நிச்சயம் நம் வஸப்படுவான்.

Source: Ramjee.N/ Maha Periyava Public Group/ Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

பெரியவா சரணம் !!

உருக வைத்த உண்மை நிகழ்வு!-அதிதி போஜனம் மகிமை

மகா சிவராத்ரி அன்னிக்கே ரண்டு பேரும் ஜோடியா ‘சிவ சாயுஜ்ய’த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கெடச்ச ‘பதவி’ய பாத்தேளா? -பெரியவா.

ப ல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மகா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொரு வராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆசார் யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், ‘‘அடடே... யாரு... பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால வந்ருந்தே. அப்போ... என்னமோ கஷ்டத்தயெல்லாம் சொல்லிண்டு வந்தயே... இப்ப சௌக்யமா இருக்கியோல்லியோ?’’ என்று சிரித்துக் கொண்டே வினவினார்.

உடனே அந்த பாலூர் கோபாலன், ‘‘பரம சௌக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு ‘அதிதி’க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல் கள்ல விளைச்சல் நன்னா ஆறது... முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச் சுப் போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம், நீங்க அநுக்ரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமதான் பெரியவா... தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணுமே இல்லே’’ என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், ‘‘பேஷ்... பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறத புரிஞ்சுண்டா சரிதான்... அது சரி. இன்னிக்கு நீங்க ரண்டு பேரும் கௌம்பி இங்க வந்துட்டேளே... அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?’’ என்று கவலையுடன் விசாரித்தார்.

உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, ‘‘அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட் டுத்தான் பெரியவா வந்ருக்கோம். ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது!’’ என்றாள்.
இதைக் கேட்டவுடன் மகா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். ‘‘அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரகத்த பண்ணி குடும்பத்த காப்பாத் தும்! ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துல வந்து ஒக்காந்து சாப்டுவார். தெரியுமா?’’

_ குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரக வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: ‘‘அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி?’’

உடனே ஸ்வாமிகள், ‘‘ஆமாமா! மோட்சத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ய தர்மம் அது! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!’’ என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டுப் பவ்யமாக, ‘‘எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாள நாங்க அத்தன பேருமா சேந்து பிரார்த்தன பண்றோம்... இந்த அதிதி போஜன மகிமயப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சுக்றாப்ல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருப பண்ண ணும்!’’ என்றார்.
அவரைக் அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

‘‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டு... முப்பத்தொன்பதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீசங்கர மடம் கும்மாணத்ல (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவத்ததான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தயா கேட்டுட்டாலே இதுல இருக்கற மகிமை நன்னா புரியும்! சொல்றேன், கேளுங்கோ.’’ _ சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:

‘‘கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு... அவ ரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்துர சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது. கடத்தெரு மளிகைக் கடய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையன அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.
குமரேசன் செட்டியாருக்கு அப்போ அம்பது... அம்பத்தஞ்சு வயசிருக்கலாம். அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ள இருக்கும். சதாசர்வ காலமும் அவா ரண்டுபேரோட வாய்லேர்ந்தும் ‘சிவ சிவ... சிவசிவ’ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டிருக்கும். வேற பேச்சே கெடயாது! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தமாட்டு வண்டி உண்டு. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஓட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால ரண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா. ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா. அப்டி ஒரு அந்நியோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாள பத்தி, இதயெல்லாத்தயும் துக்கியடிக்கக் கூடிய ஒரு சமாசாரம் சொல்லப் போறேன், பாருங்கோ...’’

-சொல்லிவிட்டு சஸ்பென்ஸாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள். சுவாரஸ்ய மாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: ‘‘பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன கார்யம் பண்ணிண்டு வந்துண்டிருக்கா தெரியுமா? அதிதிகளுக்கு உபசாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ! பிரதி தினமும் மத்யானம் எத்தனை சிவனடியார்கள் அதிதியா வந்தாலும் அவாளுக்கெல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்துல ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசல் திண்ணயில ஒக்காத்தி வெச்சு ரண்டு பேருமா சேந்து கால் அலம்பிவிட்டு, வஸ்திரத்தால தொடச்சுவிட்டு... சந்தனம்- குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சிண்டு போய் ஒக்காத்துவா.

Contd......./2
 

........: 2:.......

அவா கிருஹத்ல சமயக்காரா ஒத்தரையும் வெச்சுக்கல்லே! எத்தன அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையால சமச்சுப் போடுவா! அதுலயும் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னன்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அத அவாள்ட்டயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்டி தெரியும்னு யோசிக்றேளா... அது வேற ஒரு ரகஸ்யமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகள பாத்துண்டுருந்தார். அவர்தான் சாவகாசமா இருக்கச்சே இதயெல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா?’’

சற்று நிறுத்தித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மகா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: ‘‘ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. வாசல்ல வந்து பார்த்தார் குமரேசன் செட்டியார். ஒரு அதிதியக்கூட காணும்! கொடய புடிச்சிண்டு மகாமகக் கொளத்துப் படிகள்ள எறங்கிப் பாத்தார். அங்க ஒரு சின்ன மண்டபத்ல சிவனடியார் ஒத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதியெல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவர பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பிவிட்டுக் கூடத்துக்கு அவர அழச்சிண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்மபத்னி சிவனடியார் கிட்ட போய், ‘ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும்? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமச்சுப் போட்டுடறேன்’ என்று கேட்டா.
சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் ஏந்திருந்து கொல்லப் பக்கம் போய் பார்த்தார். கொல்லயிலே நெறய முளைக்கீரை மொளச்சிருந்ததைப் பாத்தார். உள்ள வந்தார். அந்த அம்மாவ கூப்ட்டு தனக்கு ‘வேற ஒண்ணும் வாண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்’னார். கைல ஒரு மூங்கில் தட்டோடு கீர பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரய நாமும் போய் சேர்ந்து பறிச்சா சீக்ரமா முடியுமேங்கற எண்ணத்ல, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீர பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரண்டு பேரும் கீர பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படிலே நின்னு பாத்துண்ருந்தா. பறிச்சப்றம் ரண்டு பேரும் கீரத்தட்டைக் கொண்டு வந்து உள்ள வெச்சா! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா? ரண்டு தட்டு கீரயயும் தனித்தனியா அலம்பினா. ரண்டு அடுப்ப தனித்தனியா மூட்டினா. ரண்டு தனித்தனி வாணலியிலே கீரய போட்டு... அடுப்ல ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அத பாத்துண்ருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம்! ‘என்னடா இது... ரண்டும் ஒரே மொளக் கீரைதானே. ஒரே பாத்ரத்ல போட்டு சமைக்காம இப்டி தனித்தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே’னு கொழம்பினார்.

சித்த நாழி கழிச்சு, கீர வாணலி ரண்டையும் கீழ எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரய மாத்ரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை ‘ரூம்’ல ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இத பாத்துண்ருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே! அவர் என்ன நெனச்சுண்டுட்டார் தெரியுமா? ‘நாம ஒரு பெரிய சிவபக்தன்... சன்யாசி. அதனால நாம பறிச்ச கீரயத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்’ங்கறத இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்றா’னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந் தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்த அந்தம்மாகிட்டவே கேட்டுடணும்னு தீர்மானம் பண்ணிண்டார்.’’

_ இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களை பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: ‘‘போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவன டியார் தன் சந்தேகத்த அந்த ஆச்சிகிட்ட கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா? ‘ஐயா, கொல்லைல கீர பறிக்கறச்சே நா பாத்துண்டே இருந்தேன். என் பர்த்தா ‘சிவ... சிவ’னு சிவ நாமத்த சொல்லிண்டே கீரய பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாமப் பறிச்சேள். அதனாலதான் தனியா அடுப்பு மூட்டி சமச்சு ஒங்க கீரய மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்’னு சொன்னா. இதக் கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தயும் பாராட்டி, புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா...’’

நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்பு டன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: ‘‘இப்டி விடாம அதிதி போஜனத்த பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச ‘பல ப்ராப்தி’ (பிரயோஜனம்) என்ன தெரியுமா? சில வருஷங்கள் கழிச்சு ‘சஷ்டியப்த பூர்த்தி’ (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மகா சிவராத்ரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்ல நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு ‘ஓச்சலாருக்கு’னு சொல்லிப்டு பூஜ ரூம்ல ஒக்காந்தவ அப்டியே கீழ சாஞ்சுட்டா. பதறிப் போய்... சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்லயே சாஞ்சுட்டார். அவ்ளவுதான். அந்த மகா சிவராத்ரி அன்னிக்கே ரண்டு பேரும் ஜோடியா ‘சிவ சாயுஜ்ய’த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கெடச்ச ‘பதவி’ய பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மகா சிவ ராத்ரி அன்னிக்கும் அந்தத் தம்பதிய நெனச்சுப்பேன். அப்டி அன்னம் போட்ட தம்பதி அவா...’’

முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், ‘‘மணி கிட்டத்தட்ட ரண்டு ஆயிடுத்து போலருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். போங்கோ... உள்ளே போய் நன்னா சாப்டுங்கோ’’ எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.

Source: Ramjee.N/ Maha Periyava Public Group/ Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top