• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Ariyalur District Temples-அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோ&#29

Status
Not open for further replies.
Ariyalur District Temples-அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோ&#29

Ariyalur District Temples-அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்


அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், காமரசவல்லி, திருமானூர்அரியலூர்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


T_500_1703.jpg


தல சிறப்பு:

கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

கடக ராசி, கடக லக்னக்காரர்கள் சவுந்தரேஸ்வரர் என்கிற கார்க்கோடஸ்வரரை வழிபடுவது விசேஷம். தவிர திருமணப் பேறு வேண்டுவோர், குழந்தைப் பேறு வேண்டுவோர், இல்லறம் செழிக்க விரும்புவோர், நாக தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.


சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

பொது தகவல்:

இங்கு பெரிய விநாயகர், நந்திதேவர், ஈசனுக்குக் கார்க்கோடகன் பூஜை செய்த காட்சியை விளக்கும் சிற்பம், புராணத்தைச் சொல்கிறது. மண்டபத் தூண்கள் சிற்ப நயம் பேசுகின்றன. பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீவிநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருமேனிகள் உள்ளன. மடப்பள்ளியும், நடராஜர் மண்டபமும் அமைந்துள்ளது. நாக தோஷம் போக்கும் தலம் என்பதால், சில நாகர் விக்கிரங்களையும் தரிசிக்கலாம்.


தலபெருமை:

இங்கு கிழக்குப் பார்த்த திருக்கோலத்தில் ஈசனும்,தெற்குப் பார்த்த கோலத்தில் அன்னை பாலாம்பிகாவும் அருள்பாலிக்கின்றனர். நாகங்களின் அரசரான கார்க்கோடகன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவம் இருந்து, ஈசனை பூஜித்த தலம் காமரசவல்லி, கார்க்ககோடகன் பூஜித்த ஈசனான சவுந்தரேஸ்வரர், பின்னாளில் கார்க்கோடேஸ்வரர் ஆனார், புராணங்கள் ஒரு பக்கம் இந்தக் கதைகளைச் சொன்னாலும், ஆலயத்தில் அமைந்த சுமார் 45 கல்வெட்டுக்களும் காமரசவல்லி ஆலயத்தின் புராதனத்தை நாம் பிரமிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்கின்றன.

காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கோடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்று பல பெயர்கள் உண்டு. இங்குள்ள கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், சுந்தர சோழன் என்கிற ராஜகேசரிவர்மனால் (கி.பி 957-974). கி.பி962 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் தாத்தாவே இந்த ராஜகேசரிவர்மன் ஆவான். கி.பி. 1260 ஆம் ஆண்டில் போசள மன்னன் வீர ராமநாதன் என்பவனின் தளபதி ஸ்ரீரங்க தண்டநாயக்கரால் இந்த ஆலயம் சீர்செய்யப்பட்டது.

சோழர்கள் தவிர பாண்டியர்கள், போசளர்கள் போன்ற மன்னர்கள் வழி வழியாக இந்த ஆலய வழிபாட்டில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். சுந்தர சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன், கடாவர்மன் போன்ற மன்னர்கள் தங்கள் காலத்தில் காமரசவல்லி திருக்கோயிலை நிர்வாகித்து வந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் நடந்த வேத பாராயண போட்டி பற்றியும், மார்கழி மாதத்தில் நடக்கும் திருவாதிரை விழா பற்றியும், அந்த விழாவில் நடைபெறும் சாக்கக் கூத்து என்கிற கூத்து பற்றியும் கல்வெட்டுகளில் தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த ஊரில் நடந்த ஒரு நிலத் தகராறு பற்றிய வழக்கை விசாரிக்க கி.பி. 1240-ல் போசள மன்னன் வீரசோமேஸ்வரன் காமரசவல்லிக்கு வந்து தீர்ப்பு வழங்கிய விவரத்தையும் ஒரு கல்வெட்டு சொல்கிறது. ஆலய வழிபாடுகளுக்கு மாலைகள் கட்டுவதற்கு நந்தவனம் அமைத்த பகுதி பிச்சதேவன் நந்தவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நந்தவனத்தைப் பராமரித்து வந்தவர்கள் வசிப்பதகென ஒரு பகுதியை இருந்துள்ளது. அது திருத்தொண்டன் தொகையன் வளாகம் என வழக்கப்பட்டுள்ளது. காமரசவல்லியில் திருஞானசம்பந்தர் திருமடமும் இருந்து வந்துள்ளது.

காஞ்சி மகா பெரியவா 1950 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்துக்கு வந்து தன் கையாலேயே ஸ்ரீகார்க்கோடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.



தல வரலாறு:

கிடைத்தற்கு அரிய பேரின்பத்தைப் பலரும் தேடி அலைந்த காலத்தில், சிற்றின்ப வேட்கையில் நாட்டம் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தவர்களும் இருந்தார்கள். காமம் அவர்களைப் படாத பாடு படுத்தியது. இதன் காரணமாக நித்தமும் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழிபாடுகளையும், நியதிகளையும் பலர் மறந்து போயினர். இத்தகைய காலத்தில் உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை அல்லவா? எனவே, தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று மக்களின் இந்த நிலையை மாற்றுமாறு வேண்டினார். இதனால்தான் காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே. தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி. காமனை அழித்து விட்டதால், இனப்பெருக்கம் அப்போது குறைந்து போனதாலும், தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது. இதுவே பின்னாளில் காமரசவல்லி ஆகி விட்டது.
ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்றுப்போய் விடவில்லை. இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது. தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திருமேனி. காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள். இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது. ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்ததுபோல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லிக்கு வந்து வணங்கினால் சிறப்பு. முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம். ரதிதேவிக்கே மாங்கல்ய பிச்சை அளித்த திருத்தலம் என்பதால், நிலைத்த மாங்கல்ய பேறு வேண்டுவோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். ஆதி காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் பெருமளவில் காமரசவல்லியில் வசித்து வந்தார்களாம் எனவே, சதுர்வேதி மங்கலம் என்கிற சிறப்புப் பெயருடன் இந்த ஊர் விளங்கி வந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தத் திருக்கோயிலை அந்தணர்கள் சபையை நிர்வகித்து வந்ததாகவும், அவர்களுக்காச் சில கிராமங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்றும் கலவெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. வேத பாராயணங்களும், சத் சங்கக் கூட்டங்களும் இங்கு அதிகம் நடந்துள்ளன.

பாண்டவர் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜாவை அறிவோம். இவன் அர்ஜுனனின் பேரன். அபிமன்யுவின் மகன். உத்திரையின் வயிற்றில் பரீட்சித்து இருந்தபோது மகாபாரத யுத்தம் நடந்தது. கருவிலேயே பரீட்சித்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அஸ்வத்தாமன் எய்த அஸ்திரத்தை ஸ்ரீமந் நாராயணன் காத்து அருளினார் என்பது புராணம். எனவே, பிறப்பதற்கு முன்னரே மாலவனின் அருள் பெற்றவர் பரீட்சித்து. கானகத்தில் வேட்டையாடச் சென்றபோது, ஒரு முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்யும் விதமாக அவரது கழுத்தில் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து மாலையாக அவரது கழுத்தில் போட்டார் பரீட்சித்து மகாராஜா. இதைக் கண்டு வெகுண்டான் முனிவரின் மகன். இன்றையில் இருந்து ஏழாம் நாள் இந்த மகாராஜா பாம்பு கடித்துச் சாவான் என்று சாபம் விட்டான். இந்த சாபத்தைத் தன் தவ வலிமையாலும், பிற ரிஷிகளின் மூலம் அறிந்து கொண்டாலும், இறப்பில் இருந்து பரீட்சித்தால் தப்ப முடியவில்லை. சரியாக ஏழாவது நாள் அன்று பாம்பு கடித்து இறந்தான். இவனைக் கடித்த பாம்பு கார்க்கோடகன் என்று தேவி பாகவதத்தின்

ஒரு குறிப்பு உண்டு. கத்துருவின் புத்திரன்தான் கார்க்கோடகன். அஷ்டமாநாகங்களில் ஒருவன். நாகங்களுக்கெல்லாம் தலைவனாகப் போற்றப்படுபவன். யாரோ ஒரு முனி புத்திரனின் சாபத்தால் தன் தந்தை பாம்பு தீண்டி பலியானார் என்ற தகவல் அறிந்த பரிட்சித்துவின் புதல்வன் ஜனமேஜயன் கோபமடைந்தான். ஒரு விசேஷமான யாகம் நடத்தத் துவங்கினான். அக்னியை வளர்த்தான். அந்த யாக அக்னியில் பூலோகத்தில் உள்ள பாம்புகள் அத்தனையும் தீயில் விழுந்து பொசுங்கச் செய்தான். ஆயிரக்கணக்கான நாகங்கள் எங்கெங்கிருந்தோ வந்து யாகத் தீயில் விழுந்து பொசுங்கின. நாகங்களுக்கெல்லாம் அரசனான கார்க்கோடகன், தான் எப்படியும் இதில் இருந்து தப்ப வேண்டும் என்று சிந்தித்தான். மகாவிஷ்ணுவிடம் சென்றான். இந்த யாகத் தீயில் தான் பாதிக்கப்படாமல் இருக்க அருள் வேண்டும் என்று வரம் கேட்டான்.

அதற்கு மகாவிஷ்ணு சவுந்தரேஸ்வரர் அருள் பாலித்து வரும் திருத்தலம் ஒன்று உள்ளது. அங்கு உறையும் மகாதேவனை பூஜித்து வணங்கினால், நீயும் உன் குடும்பமும் காப்பாற்றப்படுவாய் என்று சொல்லி, காமரசவல்லி என்று இன்று அழைக்கப்படுகிற திருத்தலத்துக்குச் செல்லும் வழியைக் கூறினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் பூலோகத்தில் காமரசவல்லி திருத்தலத்துக்கு வந்து சவந்தரேஸ்வரரை பக்தியுடன் தொழுதான் கார்க்கோடகன். ஈசனும் அருளி, நீ சார்ந்த இனத்துக்கு இனி எந்த ஒரு ஆபத்தும் இருக்காது, தவிர இந்தத் திருத்தலத்தில் வசிக்கும் எவரையும் கால சர்ப்ப தோஷம் அணுகாது. அத்தகைய தோஷம் இருந்தால், அவர்கள் நலம் பெறுவர் என்று கார்க்கோடகனுக்கு அருளினார் சவுந்தரேஸ்வரர். இந்த நிகழ்வுக்குப் பிறகு சவுந்தரேஸ்வரர் கார்க்கோடேஸ்வரர் எனவும் அழைக்கப்படலானார். ஈசன் தந்த வாக்குப்படி அன்று முதல் இன்றுவரை கிராமமான காமரசவல்லியில் பாம்பு தீண்டி எவரும் பலியானதில்லை. இதை இங்குள்ள கல்வெட்டே உணர்த்துகிறது. இந்த வரத்தை ஈசனிடம் இருந்து கார்க்கோடகன் பெற்றது கடக ராசி, கடக லக்னம் அமைந்த தினத்தில், எனவே இந்த ராசி மற்றும் லக்ன அன்பர்கள் இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு.


இருப்பிடம் :

திருமானூரில் இருந்து சுமார் 20 கி.மீ! அரியலூர் இருந்து சுமார் 18 கி.மீ! திருவையாற்றில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவு. அரியலூர், தஞ்சவூர், திருமானூர் போன்ற ஊர்களில் இருந்து பேருந்து மூலம் காமரசவல்லியை அடையலாம். திருவையாறு அல்லது அரியலூரில் இருந்து கார் மூலமாகவும் பயணிக்கலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
அரியலூர்
ரோலக்ஸ் லாட்ஜ் போன்: +91-4329-222 185
ரம்யாஸ் லாட்ஜ் போன்: +91-4329-220 369
காவேரி லாட்ஜ் போன்: +91-4329- 222 224
லிங்கம் லாட்ஜ் போன்: +91-4329-222 042
நடராஜா லாட்ஜ் போன்: +91-4329-222 333.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top