சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 11
முட்டுக்காடு படகுத் துறையில், விடுமுறையில்
முட்டி மோதும் கூட்டமிருக்கும்! ஆனால், அன்று
வேலை நாள் என்பதால் வெறிச்சோடிக் கிடந்தது;
வேலை இன்றிப் படகோட்டிகள் உலவி வந்தனர்!
அறுவர் செல்லும் மோட்டார் படகு வாடகையைத்
தருமாறு நுழைவுச் சீட்டு தருபவர் கேட்க, அதுவும்
நலமே என்றெண்ணி, மூவரும் புறப்பட்டோம்! நம்
நலம் வேண்டி வைத்திருந்த உயிர்க் காப்பு சட்டை.
சுத்தமே செய்யப்படாது, பல மாதங்கள் அழுக்கேறி,
புத்தம் புதிதில் கொண்ட வெண்மை நிறம் இழந்து,
அதைத் தொடவே தயங்க வைத்தாலும், நாங்கள்
அதையும் அணிந்தோம், எங்கள் பாதுகாப்புக் கருதி!
சென்ற முறை காணாத பல காட்சிகள், கண் முன்
அன்று விரிந்தன; குளிர்ப் பிரதேசங்களில் வாழும்
பல வகைப் பறவைகள், பனிக் காலத்திலே இங்கே
பல ஆண்டுகளாக வருவது வழக்கமாம்; இப்போது
இந்தச் சூழலில் சுகம் கண்ட பறவைகள், தாம் இங்கு
வந்த வேலை முடிந்தும், திரும்பவே இல்லையாம்!
அழகிய பெலிகன்கள், வண்ண வண்ண நாரைகள்,
அழகாய் நீரில் தத்திச் செல்லும் குட்டிப் பறவைகள்
மனதைக் கொள்ளை கொள்ள, எங்கள் காமராவில்
மனம் நிறைத்த காட்சிகளைச் சிறைப் பிடித்தோம்!
இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால், படகோட்டி,
இன்னும் கொஞ்ச தூரம் ஓட்டுவதாகச் சொன்னான்!
:fish2: . . தொடரும் ......................