சிற்பக்கலை காண அற்புதப் பயணம் - 8
உண்டி முதற்றே உலகு அல்லவா? நிறைவாக
உண்டு, மீண்டும் பயணித்து, பேருந்து நிறுத்தம்
வந்தால், அங்கும் அழகிய சிற்பச் செதுக்கல்கள்!
அந்தக் காலத்தில் யானைகள் பிரபலம் போலும்!
அழகிய யானைகள் ஓர் ஒற்றைப் பெரிய கல்லில்!
அழகிய மண்டபம் தூண்களுடன் மிகவும் அருகில்!
தெய்வ உருவங்களும், இடையில் காண்கிறோம்;
தெம்புடன், அன்புடன், பேன் பார்க்கும் ஒரு குரங்கு!
மேல் நோக்கிச் செல்லச் சாய்வான ஒரு கற்பாதை;
மேலே சென்றால், அழகிய மண்டபம் ஏறப் படிகள்!
ஹரியும், சிவனும் ஒண்ணு என்ற தத்துவம், அங்கு
அரிதான கடற்கரைக் கோவிலிலே கண்டோம்; ஒரு
புறம் லிங்கம், மற்றும் ஈசன் அம்மை இருக்க, மறு
புறம், பள்ளிகொண்ட பெருமாள் காட்சி தருகிறார்!
இந்த மண்டபச் சுவரில், ஒருபுறம் அனந்த சயனர்;
அந்தப் புறச் சுவரில், தாய் மகிஷாஸுரமர்த்தினி!
நடுவிலே கர்ப்பக் கிருஹம் போன்ற ஓர் அமைப்பு;
அதனுள்ளே ஈசன் அம்மையுடன் கொலுவிருப்பு!
இளைய தலைமுறை வேகமாகச் சென்று, மேலே
வளைய வருகின்றார், மாமல்லை நகரம் கண்டிட!
இன்னும் சிறிது தூரத்திலே, கலங்கரை விளக்கம்!
மின்னும் விளக்கோடு கம்பீரமாய் உயர்ந்திருக்கும்!
வளைந்தேறும் படிகள் உண்டு அதனுள்; மேலேறி,
கலை நயம் மிகுந்த நகரைக் கண்டு களிக்கலாம்!
தொடரும் ........................