• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 79

அதிசயப் பாதையாய், ஒரே நேர் கோடாய் ஐம்பது மைல் உள்ளது
அதிசய GRAND CANYON க்கு WILLIAMS-இலிருந்து செல்லும் ஹைவே!

ஒரு மலைச் சிகரம் எதிரே தெரிய, அதை நோக்கி நேராய்
ஒரே பாதை அத்தனை தூரத்திற்கு நீண்டு செல்லுகின்றது.

DSCN4169.JPG


எல்லா வாகனங்களும் GRAND CANYON பார்க்கிங்கில் நின்றன;
எல்லாப் பயணிகளும் 'ஷட்டில் பஸ்' ஏறக் 'க்யூ'வில் நின்றனர்.

பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு 'ஷட்டில்' இருக்கிறது. சுமார்
பதினைந்து நிமிடம் பயணித்தால், VIEW POINT ஒன்று வருகிறது.

சில வினாடிகள் நடந்ததும், நம் முன் விரிகிறது, இயற்கையின்
பல அதிசயங்களில் சிறந்த GRAND CANYON வண்ண மயமாய்!

DSCN4108.JPG


நினைத்துப் பார்க்கவே முடியாத பிரமிப்பு வண்ணங்கள்.
நினைத்து நினைத்து வியக்க வைக்கும் புதிய எண்ணங்கள்.

எட்டாயிரம் அடி கடல் மட்டத்தின் மேலுள்ள நிலத்தில், திடீரென
ஆறாயிரம் அடி இறங்கும் அதல பாதாளத்தை என்ன சொல்ல?

உறைந்த ஐஸ் யுகப் பனி உருகி, ஆறு வழி ஓடிய நீரா, நம்மை
உறைய வைக்கும் வண்ண GRAND CANYON - ஐ உருவாக்கியது?

எறும்பு ஊரக் கல் தேயுமே? அதுபோல் இந்த விநோதமும் ஒரு
குறும்பு COLORADO ஆற்றின் இருநூறு கோடி ஆண்டு ஓட்டமே!

ஆறு ஓடிச் செல்ல, ஆண்டுகளும் பல ஓட, தோன்றினவாம்
இரு வேறு பயங்கரப் பிளவுகள், இந்த பூமிப் பகுதியில் முன்பு!

அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன், கிழக்கும் மேற்கும்
இருந்த இரு பிளவுகள் கூடி, ஒன்றானதாக உரைக்கின்றார்.

DSCN4215.JPG


இதன் நீளம், இருநூற்று இருபத்தியேழு மைல் நீண்டு செல்ல,
இதன் அகலமோ, நான்கு முதல் பதினெட்டு மைல் செல்கிறது.

வெய்யில் தாக்கம் குறைய என்னதான் 'க்ரீம்' போட்டாலும்,
வெய்யில் தரும் கருமை உடனே உடலில் படர்ந்து பரவியது!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 80

DSCN4082.JPG


எல்லா விஷயங்களும் நம் உடல் நிலைக்கு எதிராயிருக்கும்.
நல்ல ஆரோக்கியம் இருப்போரே, இங்கு நன்கு உலவ முடியும்!

ஏற்றமுள்ள ஆக்சிஜன் குறைந்த, உயர்ந்த நிலப் பகுதி.
ஏற்ற இறக்கம் நிறைந்த நீண்ட நடை பாதைகள் - கடும்

சூரியக் கிரணங்கள் தரும் சூட்டினால் வரும் நா வறட்சி;
கூரிய கத்தி போல் உடலெங்கும் குத்தும் கடும் வெய்யில்.

நிறைய திரவங்கள் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தும்
நிறைய அறிவிப்புப் பலகைகள் உள்ளன, வழியெங்கும்.

முதல் VIEW POINT வந்ததும், மிக உற்சாகமாய் இறங்கி,
முதல் முறை காணும் அரிய காட்சியை எதிர்நோக்கி,

கடகடவெனப் படிக்கட்டுகளில் இறங்கி ஓடினேன்;
படபடவென இதயம் துடிக்க, பயத்தில் ஆடினேன்!

DSCN4225.JPG


பொதுவாகப் பார்வைப் பகுதிகளில் பல படிகள் உள்ளதால்,
மெதுவாக நடக்குமாறு எம் செல்ல மகன் உரைத்தான்.

ஆனாலும் இந்தப் படபடப்பு எனக்குப் புதிதே - இனி எங்கு
போனாலும் என் வயதும் நினைவில் கொள்ள வேண்டும்!

கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து, சூரிய அஸ்தமனம் அங்கு
காட்டும் 'வண்ண மய நிழலாட்டத்தை' ரசிப்பதை எதிர்நோக்கி,

துரும்புகளாய் அடுத்த பார்வைப் பகுதியில் நிற்பது தென்பட,
துரும்புகளே நாம் இயற்கையின் பிரம்மாண்டத்தில், என்று

பணிவான எண்ணம் மனதில் உதித்தது! மனித எண்ணங்களில்
பணிவு தோன்ற வைக்கவே இது இயற்கையின் ஒரு சாகசமோ?

DSCN4088.JPG


 
Last edited:
Dear friends,

I am surprised that there was no feed back from the readers that the photos taken at the US are not uploaded! Actually, I knew about this only yesterday when my sister was unable to view the images that I uploaded in another thread of this forum, where our grand father's compositions are posted.

Anyway, I am sharing a few pictures now.

Regards,
Raji Ram :typing:
 
Last edited:
Whale watch near Boston

01.%20Jumping%20whale.jpg


Houses without electricity in Amish village

House%20of%20Amish%20people.jpg


Hard working lady in Amish village

Hard%20working%20maid.jpg


 
Last edited:
Double rainbow, Santa Fe

[
Rainbow.jpg


Denver Airport

Denver%20airport.jpg


Chipmunk, Rocky mountains

chipmunk.jpg


Raising clouds, Rocky mountains

Raising%20clouds%2C%20%20Rocky%20mountains.jpg


 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 81


வானத்தின் பல வித நீல வண்ணங்களும், அதில்
மேகத்தின் பல வித வடிவங்களும், அந்த மேகத்தின்

நிழல்கள் பாறைகள் மீது வரையும் கோலங்களும், பாறை
நிழல்கள் பல இடங்களில் நீளும் ஜாலங்களும், நிழல் படாத

அடுக்குகள் காட்டும் பளீர் வண்ணங்களும், கோவில் போல்
அடுக்குகளாய்த் தூரத்தில் கூரிய குட்டி குட்டிச் சிகரங்களும்,

நடுவில் COLORADO ஆறு சிறு புழு போல ஓடுவதும், அதன்
நடுவில் நுரைகளின் வரிகளும், பாறைகள் மேல் வளரும்

உருண்டை மரங்களும், மரங்களின் பல விதப் பச்சைகளும்,
தி்ரண்டு எழும் சின்னக் காட்டுத் தீப் புகையும் காணக் காண,

இரு கண்கள் போதாதோ என மனம் எண்ணிடும்!
துறுதுறுக் கைகள் உடனே காமராவை நாடிடும்!

நாய்க்குடை ஒன்றை இந்திரன் கீழே போட்டது போல,
நாய்க்குடை வடிவத்தில் ஒரு மழை மேகம் காலிறங்கியது.

நடுவில் தெரிந்த ஒரு பாறை மீது, ஒரு மனிதன் தலையை
நடுவில் வெட்டி நிறுத்தியதுபோல் ஒரு பயங்கர வடிவம்!

ஜெமினி ராசி இருந்தால் கற்பனை மிகுந்திடுமே! எனினும்
ஜெமினி ராசி கொண்ட என் கற்பனை கொஞ்சம் அதிகமே!

DSCN4130.JPG


DSCN4091.JPG


கம்பிகளைக் கட்டி வைத்த பார்வைப் பகுதிகளில், ஒருபோதும்
நம்பி நாம் குறும்புக் குழந்தைகளைத் தனியே விட முடியாது!

நீண்ட வாரைக் குழந்தையின் கழுத்தில் இணைத்துத் தாய் பிடிக்க,
நீண்ட பாதையில் அக் குழந்தை, செல்ல நாய்க்குட்டி போல் ஓடியது!

முக்கோண வடிவ ஸ்டாண்டில் காமராவைப் பொருத்தி,
அக்கணம் முதல் வண்ண ஜாலம் பதிவு செய்தார் ஒருவர்.

சூரிய தேவன் அன்றைய பணி முடித்து, ஓய்வெடுக்க,
சீரிய முறையில் மேற்குப் பாறைகள் நோக்கி நகர்ந்தான்.
 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 82

சூரியக் கதிர்கள் பாறைகளில் நேரே விழுந்தால் சில நிறங்கள்;
சூரியக் கதிர்களை மேகம் மறைத்தால் காணும் வேறு நிறங்கள்.

நொடிக்கு நொடி மாறிய வண்ணங்கள் போதாதென்று,
அடிக்கடி காமரா 'செட்டிங்' மாற்றி நான் 'கிளிக்' செய்தேன்.

வடிகட்டி இடாத படங்களில் பளீரென்று பல நிறங்களிருக்க,
வடிகட்டி இட்ட படங்களில் வயலெட் நிறம் மேலோங்கியது.

DSCN4125.JPG

DSCN4126.JPG


நிழல்களின் நீளம் அதிகமாகிச் செல்லச் செல்ல, பல வித
நிறங்கள் மாறி மாறி, எல்லா மனங்களையும் மயக்கி வெல்ல,

ஒவ்வொரு நொடியிலும் வண்ண வேறுபாடுகள் தோன்றும்;
ஒவ்வொரு நாளுமே இங்கு ஒரு அதிசய உலகு தோன்றும்.

உறக்கம் கண்களைத் தொற்ற, Williams - இல், ஹோட்டலில்
உறங்கச் சென்றோம், ஒரு மணி நேரப் பயணத்தின் பின்.

காலை உணவாக ஜூசும், பழங்களும், waffles - ம், ரொட்டியும்,
மேலை நாட்டு இனிப்பு bun வகையும், காபியும் வைத்திருக்க,

மகிழ்ச்சியுடன் உண்டு, செக் அவுட் செய்ய வந்ததும்,
மகிழ்ச்சியைக் கெடுக்க, ஆபீஸில் ஒரு சம்பவம் நடந்தது.

எங்களுடன் வேறு சில இந்தியர்களை முன் தினம் கண்டு,
எங்களிடம் அதிகத் தொகை தருமாறு கேட்டாள் ஒருத்தி!

தம் குடும்ப நபர்களின் சரியான எண்ணிக்கை தராமல்,
தம் காசு மிச்சம் செய்கின்றார், இந்தியர்கள் சிலர் இங்கு.

இருவர் அதிகமானால் உயரும் பத்து டாலர் மிச்சம் பண்ண,
அறுவராய் வந்தவர்கள், நாங்கள் நால்வர்தான் என்கின்றார்.

அறுவர் வந்து நால்வராய்க் கணக்குத் தந்தவரை விட்ட அவள்,
நால்வராய்ச் சென்ற எங்களிடம் அறுவர் தங்கிய காசு கேட்டாள்!

விளக்கம் சொன்ன பின், மனதார மன்னிப்பும் அவள் கேட்டாள்.
இளக்காரமாய் இந்தியரை எண்ணும்படி ஏன் சிலர் செய்கின்றார்?

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 83


அதே நேர் கோட்டுப் பாதையில், மீண்டும் பயணித்தோம்,
அதே GRAND CANYON - னின் காலை வண்ணங்கள் காண.

மாலை நேரத்தின் தங்க நிறம் மாறியிருந்தது;
காலை நேர வெயிலில் கண்கள் கூச மிளிர்ந்தது.

வேறு இடமே உலகில் இல்லாதது போல், மலை அணில்,
பாறை ஒன்றில் அமர்ந்து, தானும் வேடிக்கை பார்த்தது!

DSCN4193.JPG


பயங்கரங்களை ரசிக்கும் அமெரிக்காவில், அதிசயமில்லை
பயங்கரமாக உள்ள CANYON அடிவரை செல்லும் பாதை!

சிலர் நடந்து பயணம் மேற்கொள்ள, கோவேறு கழுதை மேல்
சிலர் அமர்ந்து பயணம் மேற்கொள்ள, வளைவுகள் நிறைந்த

அந்த வேலியில்லாப் பாதையை மேலிருந்து கண்டு,
அந்த பயமில்லாப் பயணிகளை எண்ணி வியந்தேன்!

DSCN4237.JPG


விரும்பியே வெயிலில் காயும் அவர்களின் பயணம்,
எறும்புகள் வரிசையாய் ஊர்ந்து செல்வது போலிருக்க,

அந்த வெளிச்சத்திலும், அதே சேறு நிறத்தில் ஆறு இருக்க,
எந்த மேகமும் தடுக்காது, சூரியனும் தாக்கத் தொடங்க,

கிழக்கு திசையில், தூரத்தில் PAINTED DESERT தெரிய,
வழக்கமாகப் போவதைவிட, சீக்கிரம் 'ஷட்டிலில்' சென்று,

வேகமாய் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, உணவகம் சென்றோம்.
வேகமாய் உண்டு, நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு,

சிறியவர் இருவரும், தெற்கு விளிம்பு நடை பாதையில்
சிறிது நேரம் நடந்து சென்று, போட்டோக்கள் எடுக்க,

நான் சென்று குட்டி ஷாப்பிங் செய்து வர, என்னவரோ,
தான் கொண்டு வந்த புத்தகமொன்றில் மூழ்கினார்!

படிகள் வைத்த சின்னக் கோட்டை வழியில் இருந்தது.
படிகள் ஏறினால், CANYON அழகை நன்றாய் ரசிக்கலாம்.

DSCN4365.JPG


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 84

DESERT VIEW WATCH TOWER என்ற அது, PAINTED
DESERT காண வசதியாய் அமைக்கப்பட்டுள்ளது.

எழுபத்தியேழு ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட இது,
எழுபது அடி உயரத்திற்குக் கல்லால் கட்டப்பட்டது.

சுவற்றில் படங்கள் காணலாம்; படிகளில் ஏறிப் போகும்போது,
சுவற்றில் அமைந்த துவாரங்கள் வழியே வெளியே காணலாம்.

இரு சுற்றுலாப் பயணிகள் ஒரு படத்தில் திருத்தம் செய்துவிட, அவர்கள்
இருவரும் இனி எந்த தேசியப் பூங்காவிலும் நுழையவே முடியாதாம்!

அருமையான தேசியச் சின்னங்களை நன்கு பாதுகாத்திடக்
கடுமையான சட்டங்களை அரசாங்கம் இங்கு இயற்றியுள்ளது.

PETRIFIED FOREST நோக்கி அடுத்த பயணம் ஆரம்பம்.
PETRIFIED என்றால் 'கல்லானது' என்று அர்த்தமாகும்.

மரம் எப்படிக் கல்லாகுமென வியந்த எங்களுக்கு
விவரம் தந்தது, அங்கு பார்த்த செய்தித் திரைப்படம்.

இருநூற்றி இருபத்தைந்து மில்லியன் ஆண்டுகள் முன்
ஆற்றுப் படுகைகளில் வெள்ளத்தால் வந்தன மரங்கள்.

மாறி மாறி, வெள்ளமும் வெய்யிலும் வர, அங்கிருந்த
எரிமலை மண்ணின் தாக்கதால் மரம் சிலிகா ஆனதாம்.

இரும்பு, மாங்கனீஸ் போன்றவை நிறங்களைத் தர, மனம்
விரும்பும் பல வண்ணங்களில், மரம் கல்லாகிப் போனதாம்.

இத்தனை கால இயற்கை மாற்றத்தைக் காக்க முயன்றாலும்,
எத்தனையோ டன்கள் திருட்டுப் போகிறதாம் ஒரு ஆண்டில்.

மனம் மயக்கும் வண்ணங்களில் மரங்களைக் கண்டோம்.
இனம் பிரித்து வகை வகையாய் விற்பதும் கண்டோம்.

DSCN4398.JPG


DSCN4399.JPG


DSCN4401.JPG


எப்போதும் போல் 'ஜன்னல்' ஷாப்பிங்தான் செய்ய முடியும்;
தப்பாது யானை விலைப் பொருட்களே உள்ளன இங்கும்!
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 85

DSCN4496.JPG


அழகான வண்ணங்களில் கல்லான மரத் துண்டுகள்;
அழகாக வரிசைகளில் அடுக்கி வைத்திருந்தார்கள்.

பெரிய அளவு 'கல் மரங்களில்', அலங்காரம் செய்ய,
பெரிய அளவில் செதுக்கிய, மனம் கவரும் பொருட்கள்.

ஐயாயிரம் டாலர்கள் வரை விலை இருந்தது; நான்
ஐந்து டாலர் காந்த ஸ்டிக்கரை வாங்கி மகிழ்ந்தேன்!

TRIASSIC காலம் மரம் கல்லாகிப்போன காலம்; இதையடுத்து
JURASSIC காலம் வந்தது என்றும் அறிந்து கொண்டோம்.

அக்கால மிருகங்களின் எலும்புக் கூடு மாதிரிகளை,
இக்கால 'மியூசியத்தில்' வைத்துள்ளார் வரிசையாக.

DSCN4438.JPG

DSCN4439.JPG


DSCN4463.JPG


இந்தப் நிலப் பரப்பில் பல வண்ணங்களில் சிறு குன்றுகள்
வந்த வழியில் கண்டோம். இதையடுத்து PAINTED DESERT.

கடுமையான வெயிலில் பயணம் செய்த களைப்பினால்,
அருமையான பாலைவனம் வரை பயணிக்கவில்லை.

இந்தப் பயணத்தின் முன் தங்கிய ஹோட்டல் பற்றி
இந்தப் பக்கத்திற்கு முன்னே எழுத மறந்து விட்டேன்!

'கல் மரங்கள்' காண முந்தைய நாள் நேரம் போதவில்லை.
கண்ணயர்ந்து ஓய்வெடுக்க இன்னொரு விடுதி சென்றோம்.

அறையுள் சென்றதும், குளிக்க விரும்பி, குளியல்
அறையைத் திறந்தால், அதுவோ திறக்க மறுத்தது!

உதவியாளர் ஒருவர் வந்து, பலவித உபகரணங்களின்
உதவியுடன் முயன்றாலும், திறக்க முடியவில்லை!

வேறு அறை கொடுத்தால் நன்றாயிருக்குமென உரைக்க,
வேறு அறைச் சாவியை இன்முகத்துடன் உடனே அளித்தார்.

நேசம் பலவிதமாய்க் காட்டவும் மனிதர்கள் உள்ளனர்! மனித
நேயமின்றி, முன் தினம் வரவேற்பாளினி கத்தியது வேறு விதம்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 86

'வண்ணமிட்ட பாலைவனம்' காணும் ஆவல் மனதில்
வட்டமிட்டாலும், நேரம் கருதி அதைத் தவிர்த்தோம்.

வழியெல்லாம் மண்ணின் நிறம் மாறி மாறி வர,
விழியெல்லாம் வண்ணக் கலவைகளால் நிறைய,

அடுத்த பார்வைப் பகுதியில், கடைசி நிறுத்தமாகக்
கிடைத்த சில நிமிடங்களில் வெயிலில் சுற்றினோம்.

பழங்காலத்தில் காடாய்க் கிடந்த நிலங்கள், இப்போது
வெறும் தரிசாய் பல நிற மண்ணுடன் இருக்கிறது.

பல வகை மிருகங்கள் அங்கு வாழ்வதாய் உரைத்தாலும்,
ஒரு வகை ஓணானை மட்டுமே, அன்று அங்கு கண்டோம்..

இளமையும் மகிழ்ச்சியும் அதற்கு ஒளிரும் நிறம் தருமாம்!
முதுமையும் கவலையும் அதற்கு ஒளிராத நிறம் தருமாம்!

தன் வயது, மன நிலைக்கு ஏற்ப நிறம் மாறுவது, அன்று
தன் பச்சை நிறத்தால் இளமையும் மகிழ்ச்சியும் காட்டியது.

DSCN4469.JPG


DSCN4544.JPG


மலையைக் குடைந்து பாதை அமைத்திருக்க, வழியில்
மலைப் பாறைகள் பல நிறங்களில் அமைந்திருக்க,

ஒரு இடத்தில் நாங்கள் நிறுத்தி இறங்கியதும், பாதையில்
வரும் சிலரும் ஏதோ அதிசயம் கண்டதுபோல் இறங்கினர்!

உயரம் மலையில் ஏற ஏற, மரம், செடி வகைகளும்
உருவம் வேறாகி, வகை வகையாக மாறி இருந்தன.

உயிரினங்கள் தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறும்போது,
உயிருள்ள தாவரங்களும் மாறுவதில் வியப்பேது?
 
தங்கள் பாலைவனக் கவிதை எனது வளைகுடா நாட்டில் கழித்த நாட்களை நினைவுபடுத்துகின்றன. படங்கள் கவிதைகளின் அழகை கூட்டுகின்றன. வணக்கம்,
Brahmanyan.
 
இப் பகுதியை நான் அளிக்கும்போது, மலருகின்றன மீண்டும் இனிய நினைவுகள்!

தாங்கள் படித்து மகிழ்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.

ராஜி ராம்
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 87

நம் பிள்ளைகள் கொடுத்த இன்பத்தைவிடப் பல மடங்கு
நம் பிள்ளைகளின் குழந்தைகள் நமக்குத் தருவது நிஜமே!

அக்கா மகனின் வாரிசைக் கண்டதும் அளவிலா மகிழ்ச்சி;
இக்காலக் குழந்தை விளையாட்டுக்கள் காண நெகிழ்ச்சி.

தாயின் தந்த நிறமும், கரும் திராட்சைக் கண்களும்,
தந்தையின் வட்ட முகமும், குட்டி மூக்கும் கொண்டு,

தன் அழகுச் சிரிப்பால், எங்களை மயக்கிவிட்டாள்;
தன் அழுகை ஒலியால், எங்களை அதிர வைத்தாள்!

நிமிடத்துக்கு ஒரு முறை தந்தை தோள் தேடினாள்;
நிமிடம் ஐந்துக்கு மேல், எவரிடமும் இருக்கவில்லை.

இந்தியாவைப் போல இங்கு விருந்தாளிகள் வராததால்,
இங்குள்ள குழந்தைகளுக்கு 'வேற்று முக' பயம்தான்!

பெற்றோர் இருவரும் பணி செய்யச் சென்றால்,
உற்ற துணை குழந்தைக்குக் காப்பகம் மட்டுமே!

காப்பகத்தில் நாலு மாதக் குழந்தையை விடுவதை
ஏற்பதற்கு மிகவும் மன வேதனையாய் இருக்கிறது.

இதை விடச் சின்னக் குழந்தைகளும் அங்கு இருக்குமாம்!
இதை விடக் கொடுமையை நாம் எங்கு காண முடியும்?

பொருளாதாரச் சீர்கேடு மிகுந்துவிட்ட காலத்தில், நன்கு
பொருள் ஈட்ட இருவரும் வேலை செய்ய வேண்டுமே?

மில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை, நான்
துல்லியமாக ஆராய்ச்சி செய்திருக்க, என் பெரிய அக்கா,

அந்த ஆராய்ச்சியை விட அதிசயமானது, இப்போது
இந்தத் தலைமுறையின் பரிணாம வளர்ச்சியே என்றாள்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 88

மாலை மருத்துவரிடம் போக வேண்டியிருந்ததால், இரவு
வேளை சமையல் வேலை எங்களிடம் வந்துவிட்டது.

இந்த ஊர் சமையற்கட்டு நன்றாகப் பழகிப் போய்விட்டதால்,
எந்தத் தடுமாற்றமுமின்றி, பெண்ணரசியுடன் சமைத்தேன்.

மருத்துவர் குறித்த நேரம்தான், நாம் அங்கு செல்ல வேண்டும்;
மருந்து வாங்கவும், அவரிடம் சீட்டு எழுதி வாங்க வேண்டும்.

அவசரம் என்றால் மட்டும், மருத்துவர் போனில் கூப்பிட்டு,
அவசர மருந்தைக் கொடுக்க, அக் கடையில் சொல்லுகிறார்!

'மருத்துவக் காப்பீடு' கார்டைக் கொண்டு சென்றால்,
மருந்து குறைந்த விலைக்கே வாங்கலாம் இங்கு.

நம்ம ஊர் பார்மசிகள் போல, இங்கு உள்ளவர்கள்,
சும்மா எல்லா மருந்துகளையும் விற்பதில்லை.

நாங்கள் சென்னையை விட்டு வந்து, சுமார் மூன்று
மாதங்கள் ஆகப் போவதைக் காலண்டர் காட்டியது.

அன்று ஆகஸ்ட் ஒன்று! BOTANICAL GARDEN -க்கு மறு நாள்
சென்று வர முடிவு செய்து, உறங்கச் சென்றோம் - அங்கு

நிறையச் செடிகள் பெரிய அறைகளில் இருப்பதாலும்,
நிறைய மரங்கள் நிழல் தருவதாலும் இந்த முடிவு.

காலை எழுந்து நீராடி, குழந்தையுடன் விளையாடி, மதிய
வேளை உணவு முடித்து, BOTANICAL GARDEN சென்றோம்.

US01Cacti%20for%20sale%21.jpg


கள்ளிச் செடிகளுக்குப் பெயர் பெற்ற இடமல்லவா?
கள்ளிச் செடிகளே நுழைவில் உள்ளன, விற்பனைக்கு.

ஆரஞ்சுகள் பொன்னிறத்தில் தொங்க, சைனா நாட்டு
ஆரஞ்சுகள் அவை; புளிப்புச் சுவை; என அறிந்தோம்.

பெரிய ஹால் ஒன்று அடுத்ததாக இருக்க, அங்கு
பெரிய அளவில் ஒரு தும்பியின் மாதிரி கண்டோம்.

US02Dragonfly%20model.jpg


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 89

US03jurassic%20animal.jpg


பெரிய அளவுத் தும்பியைக் கண்டு திரும்பினால், ஒரு
பெரிய அளவு ஜுராசிக் மிருகம் நின்று பயமுறுத்தியது.

ஒரு பெரிய வண்டின் மாதிரியும் தரையில் கிடக்க,
மற்றொரு ஜுராசிக் உருவம் மறைந்திருந்து பார்த்தது!

காட்டிற்குள் இருக்கும் உணர்வு வர வைக்கவே, அங்கு
காட்டு மிருக மாதிரிகளைப் பெரிதாக வைத்துள்ளார்.

காட்டு மிருக ஒலிகளும், பட்சிகளின் பாட்டும், சிறிய
காட்டு ஓடைச் சப்தமும் அங்கே மெல்ல ஒலிக்கின்றன.

நம் நாட்டு அன்னாசிப் பழம், அழகாகத் தொங்கியது;
நமக்குச் சிரம் தாழ்த்துவதுபோல், தலைகீழாய் இறங்கியது.

பல வகை கள்ளிகளை அங்கே கண்டாலும், அதில்
சில வகை கள்ளிகளே மனதை அதிகம் கவர்ந்தன!

தன்னைக் கண்டால் 'ஆக்டோபஸ்' மாதிரி இருக்கிறதா? என
நம்மைக் கேட்டபடி, ஒன்று இலைகளை வளைத்து நின்றது!

US04young%20cactus.jpg


தன் கிளைகளை சஷ்டியப்த பூர்த்திக்குப் பிறகு விடும் கள்ளி,
தன் இளமையைக் கிளைகள் விடாததால் பறைசாற்றியது!

US05flowers%20in%20cactus.jpg


'முள்ளும் மலரும்' என்று தலைப்புக் கொடுக்க ஏற்றவாறு,
முள்ளும் மஞ்சள் வண்ண மலருமாய் அழகாக ஒன்று!

தங்க முள்ளம் பன்றி என்ற GOLDEN HEDGEHOG வகை,
தங்க நிற முட்கள் நிறைந்திருக்கத் தகதகத்து நின்றது.

US07Prickly%20pear.jpg


'அழகு மட்டும் இல்லை; கனிகளும் தருவோம்', என்பதுபோல
அழகிய PRICKLY PEAR கள்ளி வகையில் இருந்தன பழங்கள்.

சூரியனின் திசை நோக்கிச் சூரியகாந்தி திரும்புவதுபோல,
சூரியனை நோக்கி வளைந்து வளரும் கள்ளி வகை ஒன்று.

கொஞ்ச தூரம் இன்னும் நடக்க வேண்டும் என்பதால், அங்கு
கொஞ்ச நேரம் மரத்தடியிலுள்ள இருக்கையில் அமர்ந்தோம்.

தொடரும் .....
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 90

tall%20cactus.jpg


நீண்டு வளர்ந்த பனை மரம் போல நடுப்பகுதி; அது
நீண்ட பூவா? இல்லை வேறா? என வியந்தோம்!

பட்டாம்பூச்சி போலச் சிறகுகளோடு படமெடுக்கப்
பட்டாம்பூச்சி வடிவில் மரத்தால் அமைத்துள்ளார்.

பட்டாம்பூச்சியாக இருந்ததை, என்னுடன் சேர்ந்து
பட்டாம்பூஜியாக மாற்ற, அதன் பின் மறைந்தேன்!

சொட்டு நீர் இருந்தாலும் உயிர் வாழும் கள்ளிகளுக்குச்
சொட்டு நீர்ப் பாசனத்தையே அங்கும் அமைத்துள்ளார்.

விளக்கங்கள் கூற அங்கு வழிகாட்டிகள் தேவையில்லை.
விளக்கங்கள் எல்லாமே பலகைகளில் எழுதி வைத்துள்ளார்.

உயர்வான அந்த இயற்கைச் சூழலில் வாழும் பல
உயிரினங்கள் பற்றியும் அங்கு குறிப்பு வைத்துள்ளார்.

வண்ண மலர்களையும் பல விதச் செடிகளையும் எங்கள்
எண்ணத்தில் கொண்டபடி வந்துகொண்டிருக்க, ஒரு

US08Humming%20bird%20on%20its%20eggs%21.jpg


பெரிய மரத்தில் இருந்த தன் கூட்டில், HUMMING BIRD,
அரிய காட்சி தந்தது, தன் முட்டையை அடைகாத்து!

அருகே சென்று அதைப் படமெடுக்க முனைந்தும்,
ஒரு பயமும் இல்லாமல், சிலை போல அமர்ந்தது.

தாய்மை உணர்வு என்பது உயர் பிறவிக்கு மட்டும் உரியதல்ல;
தூய்மை மிகுந்த அந்த உறவு, எல்லா ஜீவன்களுக்கும் உண்டு!

மனம் நெகிழ அக்காட்சி கண்டு, காமராவில் க்ளிக்கினோம்.
மனம் விரும்பும் பல நிறக் கற்கள் கீழே கிடக்கக் கண்டோம்.

US09Designer%20stones.jpg


டிசைன்கள் வரைந்ததுபோல் சில கற்கள் கிடக்க,
டிசைன் இல்லாமல் முட்டைபோல ஒன்று கிடக்க,

வீட்டிற்குக் கொண்டு செல்ல விழைந்தாலும், கண்டுவிட்டால்
தீட்டிடும் அபராதத்திற்கு அஞ்சி, இனிய இல்லம் திரும்பினோம்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 91


வெய்யிலில் காய்ந்து கருகாமல், A C - யில் அமர்ந்து
மெய்யான ஓய்வெடுத்து, அளவளாவி மகிழ்ந்தோம்.

இருபது அடி உயர ஹாலில் குளுமை பரவுகையில்,
எழுபத்தியெட்டு டிகிரியும், கொஞ்சம் நடுங்க வைக்கிறது.

ஆசியக் கடை ஒன்றில் ஒருநாள் ஷாப்பிங் செய்யச் சென்றேன்.
ஆசிய நாடுகளின் விசேஷப் பொருட்கள் கிடைக்கும் அங்கு.

அரிசி புதியதே கிடைப்பதால், குழைந்து விடுகிறது சாதம்!
அரிசிப் பை வீட்டில் இருந்ததில், உள்ளது நீல அணில் படம்.

வேறு அரிசி மாற்ற எண்ணிய நாங்கள், பச்சை நிறத்தில்
வேறு அணில் படம் உள்ள அரிசிப்பை எடுத்து வந்தோம்.

'Bucaalaa rice is good' என அங்குள்ள சீன மங்கை சொல்ல,
'Bucala' என்ற எழுத்து உள்ள பையை நான் தேடிச் செல்ல,

Blue colour என்பதையே Bucaalaa எனச் சொன்னாள் என்று
நீலக் கலர் அணில் பையையே மறுபடியும் மகன் எடுத்தான்!

ஊர்வன பறப்பன எல்லாம் பலர் இங்கு உண்பதால், அந்த
ஊர்வன பறப்பனவின் கறி வாடை மூக்கைத் துளைத்தது.

மற்ற சூப்பர் மார்க்கெட் போல இங்கு தூய்மை இல்லை;
சுற்றுச் சூழலில் அழுக்குடன், நாற்றமும் கூடியிருந்தது!

கடைக்குச் செல்லும்போது உடன் வரும் குழந்தை, இந்தக்
கடைக்கு ஒரு போதும் வருவதில்லை என அறிந்தேன்.

மிக நல்ல முடிவுதான் என்று உரைத்த நான், அவனுடன்,
மிக விரைவில் பிராணாயாமம் செய்தபடி வெளியேறினேன்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 92

குழந்தைகள் வளர்ச்சி மிகவும் விரைவுதான். அந்தக்
குழந்தைகளின் ஆடைகள் சில மாதங்களில் சிறிதாகும்.

மூன்று மாதத்தில் விளையாடிய பொம்மைகளும், மேலும்
மூன்று மாதம் சென்றால் விளையாட இயலாது போகும்.

குழந்தைகள் பற்றி Jurassic Park பட ஹீரோ சொன்னதுபோல,
குழந்தைகளின் சத்தமும், செலவுகளும் இக்காலத்தில் அதிகமே!

எட்டு தொங்கும் பொம்மைகள், சின்ன இசை, தரை விரிப்புள்ள
எண்பது டாலர் விளையாட்டுப் பொருளொன்று வாங்கினோம்.

அழகான விளையாட்டு பொம்மைகளை உருவாக்கி,
அழகாகப் பெட்டியிலிட்டு, அதிக விலைக்கு விற்கின்றார்.

ஆனால், குழந்தைக்கு Second hand பொம்மைகள் வாங்கப்
போனால், பாதி விலைக்கும் குறைவாய்க் கிடைக்கிறது.

Internet யுகமல்லவா? எனவே, Second hand பொருட்களை,
Internet மூலம் விளம்பரம் செய்து, விற்றுவிடுகிறார்கள்.

சிலர் வீட்டு விலாசம் கொடுத்து, வாங்கிக் கொள்ளச் சொல்ல,
சிலரோ நம் வீட்டிற்கே வந்து விற்றுவிட்டுப் போகிறார்கள்.

இவ்வாறு பொம்மைகள் முதல் கார்கள் வரை, எல்லாமே
இன்டர்நெட் விளம்பரங்கள் மூலம் கை மாறுகின்றன!

ஊர் மாற்றிச் செல்பவர்கள், தானமாய் அளிப்பவையும், அந்த
ஊரில் உள்ள காப்பகங்களுக்கு எடுத்துச் செல்லுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து வரும் மென்பொருள் பொறியாளர்கள்,
இந்தியாவிற்குத் திரும்பும்போது, இந்தச் சேவை தேவையே!

நன்றாயிருந்தால் மட்டுமே பொருட்களை எடுக்கிறார்கள்.
நல்ல விலைப் பொருளானாலும், அழுக்கானால் எடுப்பதில்லை.

உதவும் கரங்கள் போல அமைப்புகள், சென்னையில் இவ்வாறு
உதவும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 93

ஊர் மாறி வந்துவிட்டால், உணவும் மாறிவிடுகிறது. அந்த
ஊர் சாப்பாட்டை ருசிக்கவும், ரசிக்கவும் தெரிந்துவிடுகிறது.

அரைவேக்காடுக் காய்களை சைனீஸ், தாய்லாந்து உணவில்,
அரை நாள் கூட என்னால் சாப்பிடவே முடியவில்லை!

இங்கு வரும் பிள்ளைகளோ, இவற்றைச் சாப்பிட்டுவிட்டு,
இந்த ருசியும் சிறந்தது என்று பாராட்டவும் செய்கின்றார்!

கொஞ்சமேனும் நான் ருசித்த மெக்சிகன் வகைகளும்,
மஞ்சள் பொடி இல்லாது, வேறு நிறமாய் இருக்கின்றன.

பரிசுப் பொருட்கள் வாங்க ஷாப்பிங் செய்ய, மாலையில்
சிறிது நேரம் எல்லோரும் வெளியிலே சென்றோம்.

இரவு வேளை வீட்டிற்குத் திரும்பியபோது, ஹாலில்,
இரவு உலவும் குட்டி வௌவ்வால் ஒன்று பறந்தது!

எங்கேயாவது அது அமர்ந்தால்தானே பிடிக்கலாம்? அது
எங்குமே அமராது, அயராது, மேலும் கீழும் திரிந்தது.

Animal control board - க்கு போன் செய்ய வேண்டுமோ?
என எண்ணி, அத் தொலைபேசி நம்பர் தேடிக்கொண்டிருக்க,

கைப்பிடி இணைத்த ஒரு சிறு வலையை வைத்து,
கைக்கு அது எட்டியதும், என்னவர் drop shot அடிக்க,

குறி தவறாது அதன்மேல் பட்ட வலையின் தாக்கத்தால்,
எரி நக்ஷத்திரம் வானில் விழும் வேகத்தில் விழுந்தது!

கீழேயுள்ள சோபாவைத் தொட்ட பின் விழுந்ததால், அதன்
மேலே அடி படாது பிழைத்தது; கொஞ்சம் மயங்கியது.

மெதுவாக அதை எடுத்து வாசலில் விட்டவுடன்,
விரைவாக விடுதலையைக் கொண்டாடிப் பறந்தது!
 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 94

'நெட்'டால் அடித்த வௌவ்வால் வெளியேறினாலும் 'இன்டெர்
நெட்'டில் மறுநாள் துருவினால், பல பயங்கர விஷயங்கள்!

பொதுவாக அவை சுபாவத்தில் சாதுவானாலும், மூலையில்
மெதுவாகத் தள்ளினாலும், எதிர்த்துக் கடிக்கத் தயங்காதாம்!

பற்கள் சிறியவையாம்; ஜீன்ஸ் உடைக்குள் போகாதாம்; ஆனால்
பற்கள் நம் மீது பட்டால், 'ராபீஸ்' நோய் தாக்கும் அபாயமாம்!

நம்மால் அவற்றை வெளியேற்ற முடியாவிட்டால், உடனே
தம்மை அணுகுமாறு Animal control board அறிவிக்கிறது!

புதிய அப்பாக்கள் படும் பாடு அலாதிதான்! இன்றைய
புதிய விதியாக ஆண் பெண் சமத்துவம் வந்திருக்க,

வீடு சுத்தம் செய்வது, உணவு தயாரிப்பது, துணி துவைக்க
ஓடுவது, கடைகளை நாடுவது என்றவற்றில் பங்கீடுகள் போக,

குழந்தை சுமப்பதும் இப்போது சேர்ந்துவிடுகிறது! இந்நாட்டில்
குழந்தை சுமக்கவும் பல்வேறு முறைகள் கண்டுள்ளார்!

'ஒக்கலில்' வைத்துக் கொண்டு ஊர் சுற்ற முடியாதே!
தக்கவாறு தூளி வாங்கிக் கழுத்தில் மாட்டுகின்றார்.

வயது பத்து நாளேயானாலும், குழந்தையை எடுத்துத்
தனது கழுத்தில் போடும் மாலை போல அணிகின்றார்!

ஒரு வாரம் குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்தோம்.
மறு வாரம் பாஸ்டனுக்குத் திரும்பி வர விழைந்தோம்.

எங்கள் இருவரையும் 'ஷட்டில்' பஸ்ஸில் ஏற்றிவிட்டுத்
தங்கள் வேலையை கவனிக்குமாறு சொன்னோம்!

மதிய உணவு முடித்து, பிரியா விடை பெற்று, Tucson - இல்
புதிய 'ஷட்டில் பஸ்' ஏறி, Phoenix 'ஏர்போர்ட்' சென்றோம்.

சென்ற முறை நேரக் குறைவால் கடைகளைப் பார்க்கவில்லை;
இந்த முறை ஏர்போர்ட் கடைகளைச் சுற்றிவர மறக்கவில்லை!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 95

தங்க ஆபரணங்கள் போல மின்னும், குறைந்த விலைத்
தங்க நிற ஆபரணங்களை நம் நாட்டில் செய்வது போல,

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள்
அழகாக அடுக்கி வைத்திருந்தனர், ஒரு கடையில்.

கண்ணைப் பறிக்கும் கழுத்தணிகளில், அமெரிக்க வைரங்கள்.
எண்ணி வியக்கும் வடிவங்களில், தங்க நிறச் செயின்கள்.

செட்டாக அவற்றுக்கு ஏற்ற காதணிகளும் வைத்து,
செட் ஒன்று பத்து டாலர் என அறிவிப்பும் இருந்தது.

இங்கு உள்ள விலைகள் பார்க்க வியப்பாக இருந்தது!
முன்பு பார்த்த கடைகளில், காதணிகளே ஆறு டாலர்!

டிசைனர் கைக்கடிகாரங்கள் பல நிறங்களில் வைத்து,
டிசைன்கள் பல கொண்ட கைப்பைகளும் இருந்தன.

எது எடுத்தாலும் பத்து டாலர் விலைதான்;
எதுவும் வாங்காது வருவதும் கடினம்தான்.

'ஜன்னல் ஷாப்பிங்' எனக்குக் கைவந்த கலையானாலும்,
மின்னல் போல மின்னும் ஒரு செட் வாங்கி வந்தேன்.

காசு செலவில்லாத Paid call பழகிய என்னவர்,
காசு செலவில்லாது பிள்ளையிடம் பேசினார்.

ஒரே நாடாக இருப்பினும் இங்கு நேரங்கள் மாறும்;
ஒரு Time zone தாண்டினால் ஒரு மணி நேரம் மாறும்.

'பாஸ்டன்' - 'அரிசோனா'வுக்கு மூன்று மணி நேர வித்தியாசம்.
'பாஸ்டன்' செல்ல விமானத்தில் ஐந்து மணி நேரப் பயணம்.

மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்த பயணம், இரவு
வேளை முடிந்தது பாஸ்டனில், பதினோரு மணிக்கு.

பின்னிரவில் எங்களைக் கூட்டிச் சென்ற பிள்ளைகள்,
நள்ளிரவில் தயிர் சாதம் பரிமாறிப் பசியாற்றினர்.
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 96

நாலாம் ஆண்டுத் திருமண நாள் வந்தது பிள்ளைகளுக்கு.
நலம் தரும் இறையை வேண்ட, கோவில் செல்லணும்.

விடுமுறை நேரத்தை இதற்கு ஒதுக்கி வைப்பதால், ஞாயிறன்று
பலமுறை இவர்கள் போகும், ஸ்ரீ லக்ஷ்மி கோவில் சென்றோம்.

வைகாசி மாதம் சென்றபோது, ஸ்ரீ முருகனின் அலங்காரம்,
கைராசியான பூசாரி செய்திருக்க, திரை மூடியே இருந்தது.

அன்று அரை மணி நேரம் காத்திருந்தும், பயனின்றி,
சென்றுவிட்டோம் இனிய இல்லம், தரிசனம் இன்றி.

கற்கள் பதித்த கிரீடம், திலகம், ஒளிரும் கரங்கள் கொண்டு,
சொற்களில் அடங்கா அழகு மிகு தெய்வங்கள் இங்கு உண்டு!

ஐயப்பன் பதினெட்டுப் படிகளுடன் அமர, சிந்தூர ஆடையை
ஐங்கரன் அணிய, செந்நிற உடையில் திருமகள் மிளிர, பாலாஜி,

பொங்கும் அழகுடன் அலங்காரனாய் நிற்க, முத்து அங்கியும்,
தங்க வில்வ மாலையும் அணிந்த நடராஜர் பதம் தூக்க, தங்க

மாலைகள் பல அணிந்து சிவகாமி திகழ, தங்கக் கவசங்கள்
மாலை நேர உற்சவ மூர்த்திகளை நன்றாய் அலங்கரிக்க,

அழகு மிகு தேவியர் சகிதம் கந்தன் சிரிக்க, மாருதியின்
அழகுத் திருமேனி முழுதும் இட்ட வெண்ணைக் காப்பில்,

கருப்பு, சிவப்பு திராட்சைகளும், 'ஸ்டிராபெரி'யும், நல்ல
பொருத்தமாய் வண்ணமளிக்க, 'டாலர்' நோட்டுக்களும்,

காசுகளும் சன்னதிகளில் கொட்டிக் கிடக்க, தரை
தூசு துரும்பின்றித் தூய்மையாகத் துலங்க, ஸ்ரீ லக்ஷ்மி

ஆரத்தி முடிந்ததும், பிரசாதம் பெற்றுக்கொண்டு, இரவு
நேரத்தில் நாங்கள் இனிய இல்லம் திரும்பினோம்!

 

Latest ads

Back
Top