• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

பயணக் க(வி)தைகளை ஊக்குவிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் உளமார்ந்த நன்றியுடன் தொடருகிறேன்!
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 16


காலையில் பேச்சுக் கச்சேரி நடத்தி, 'ஆமிஷ்' மனிதர்கள் காண
மாலையில் சென்றோம் வளைந்து வளைந்து செல்லும் பாதையில்.

தாம் வாழத் தேவையானவற்றைத் தாமே தயாரித்து,
தம் மன நிறைவு காணும் கிராமத்தினர் இவர்கள்.

கிராமத்துள் ஐந்து மணிக்குமேல் செல்லவும் முடியாது;
கிராமத்தில் இவர்கள் வீடுகளில் மின்சாரம் கிடையாது!

mail


பயிர் செய்வது முதல் ஆடைகள் தயாரிப்பு வரை, தாம்
உயிர் வாழ அனைத்தையும் இவர்களே செய்கின்றார்.

டாலரில் முழுகும் இந் நாட்டில், பண்டமாற்றுச் செய்து வாழ்ந்து,
டாலர் நோட்டுக்களையே இவர்கள் கையாள்வதில்லையாம்!

ஆங்கிலம் கற்பிக்க ஒரு அறைப் பள்ளி உண்டாம்,
ஆங்கில பைபிள் படிக்க அது உதவும் என்பதால்!

வெளி உலகத்தைக் காண விடலைப் பருவத்தில் அனுப்புவராம்.
வெளி உலகம் பிடித்தவர்கள் திரும்பாது அங்கேயே தங்குவராம்.

கடின உழைப்புச் செய்யும் மங்கையர் பலர் உண்டு இங்கே.
கடினமான உழவும் ஏழு குதிரை பூட்டிய ஏரில் செய்கின்றார்!

mail


தள்ளு மாடல் சைக்கிள் முதல் மோட்டார் இல்லாப் புல்வெட்டி வரை,
எள்ளளவும் சலிக்காமல் அனைவரும் உபயோகிக்கின்றார்!

'கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு' என்று சொல்வதுபோல்,
கறுப்பு நிற உடைகளையே பெரும்பாலும் அணிகின்றார்.

ஆமிஷ் கிராமத்துள் நாங்கள் செல்ல இயலாவிடினும்,
ஆமிஷ் மக்கள் கலந்து வாழும் பகுதிகளைப் பார்த்தோம்.

வாத்துக் கூட்டங்களும், ஆநிரைகளும், குதிரை வண்டிகளும்,
பார்த்தபின் திரும்பினோம் அதே வளைவு மிகுந்த பாதையில்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 17

அடுத்த வாரக் கடைசி வந்தது; அதில் எங்களுக்கு
அடுத்த பயணம் ஆஷ்லாண்ட் லக்ஷ்மி கோவிலுக்கு!

திருமகளே பிரதானமானாலும், மற்ற மூர்த்திகளும்
அருமையாகவும் அழகாகவும் அமைந்துள்ளனர் அங்கு.

ஐங்கரனும், பெருமாளும், நடராஜரும், அம்பாளும்,
ஐயப்பனும், வள்ளி, தேவசேனா சமேத முருகனும்,

நூற்றியெட்டு உலோக லிங்கங்களின் அமைப்பும்,
நவக் கிரஹங்களும் எனப் பல சன்னதிகள் உண்டு.

முருகனுக்கு வைகாசி விசாக விசேஷ அலங்காரம்;
முருகன் தயாராகாததால் தரிசனம் கிடைக்கவில்லை!

மற்ற சன்னதிகள் தொழுதுவிட்டு, மன நிறைவுடன்,
சற்று நேரத்தில் திரும்பினோம் இனிய இல்லத்திற்கு.

மறுநாள் நண்பன் ஒருவன் வீட்டில் தேநீர் விருந்து;
ஒரு வயதுக் குழந்தைக்குப் பிறந்தநாள் விழாவாம்.

விருந்துக்கு அழைத்த அவன், மறுநாளே கூறினான்
விருந்து ரத்து என்று! மகன் காரணம் கேட்கவில்லை!

நம்ம ஊரில் இதுபோல விஷயம் வந்திருந்தால்,
நம்மவர்கள் உடனேயே விளக்கம் கேட்டிடுவார்.

இந்த ஊரில் தாமே வந்து விஷயத்தைக் கூறாவிட்டால்,
எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. இதுதான் நற்பண்பாம்!

மற்றவர்கள் பற்றித் தோண்டித் துருவினால் அது,
மற்றவர்கள் அந்தரங்கத்தில் தலையீடு ஆகுமாம்!

சுதந்திர தேவியில் சிலையுள்ள நாடல்லவா?
சுதந்திரம் வேண்டுவார் மக்களும் அல்லவா?

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 18


சீன நாட்டு மக்கள் நிரம்பிய அமெரிக்க நாட்டில்,
சீன நாட்டின் விசேஷ விழாக்களும் நடத்துகின்றார்.

DRAGON BOAT FESTIVAL இருந்தது ஞாயிற்றுக் கிழமை;
DRAGON முகம் கொண்ட படகுகள் மிகவும் அருமை!

mail


அழகிய சார்ல்ஸ் ஆற்றின் இரு கரைகளிலும்,
அழகிய உடை அணிந்த மக்கள் கூடியிருக்க,

வண்ண மயமான படகுகள் அணிவகுத்து நின்றிருக்க,
வண்ணம் நிறைந்த விழாக் காண அனைவரும் காத்திருக்க,

சாப்பாட்டுக் கடைகள் எப்போதும்போல நிறைந்திருக்க,
சாப்பாட்டுப் பிரியர்கள் ஆவலுடன் உண்டு மகிழ்ந்திருக்க,

ஒவ்வொரு குழுவாகப் படகுகளில் அமர்ந்து,
ஒவ்வொரு முறைக்கும் சில படகுகள் என்று,

பல முறை வைத்த போட்டிகளைக் கண்டு,
பல முறை ஆர்ப்பரித்து, எல்லோரும் மகிழ,

பெரியவர்கள் சிலர் KUNG-FU DEMO சில செய்து காட்ட,
சிறிய குழந்தைகள் அழகு உடைகளில் நடனங்கள் ஆட,

mail


மக்கள் வெள்ளத்தின் கர ஓசை பலமுறை எழுந்து வர,
மக்கள் உள்ளத்தில் மிக்க சந்தோஷம் நிறைந்து எழ,

சுடும் வெய்யிலைக் கூட உணராது, நாங்கள் காமராவில்
'சுடும்' வேலையுடன் அங்கு சுற்றிக் கொண்டிருந்தோம்.

மதிய உணவு BOMBAY CLUB - ல் மசால் தோசை, இன்னபிற
அதிக அளவு உண்டதால் சக்திமான்களாயிருந்தோம்!

நன்கு நடந்து ஓய்ந்த பின், அருகில் RED LINE ரயில் ஏறி
வந்து, காரில் மீண்டும் பயணித்து, இல்லம் அடைந்தோம்.

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 19

அடுத்த வாரம் தொடங்கியாச்சு; வந்து மூன்று வாரமாச்சு;
அடுத்த பயணம் தங்கை வீட்டிற்கு, ஜூன் மாத முடிவில்தான்.

விடுமுறையை அதுவரை பாஸ்டனில் கழிக்கலாம்; வார
விடுமுறையில் மட்டும் பிள்ளைகளுடன் சுற்றலாம்.

சென்னையில் வெந்நீர்க் குளியலுக்கு வாய்ப்பே இருக்காது.
அண்மையில் வெந்நீர்க் குளியலை ஏற்கிறேன் மறுக்காது.

குளிக்கும் தொட்டியில் பாதி வெந்நீர் நிரப்பிவிட்டு,
குளிக்க அதிலமர்ந்து, எண்ணைக் கால்களை நீவிவிட்டு,

கொஞ்சம் அமர்ந்தபடியே உடற்பயிற்சி செய்துவிட்டு,
நெஞ்சம் குளிரும் (!) வரை வெந்நீரில் அமர்ந்துவிட்டு,

'மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்' புத்தகத்தில் படித்தபடி,
மனம் மகிழக் குளிக்கும் வழக்கத்தில் இருந்தேன் நான்!

நாமே தனி வீட்டில் செலவு செய்தால், இப்படி அனுபவிக்க,
தாமே கட்டணுமாம் ஆயிரம் டாலர் மின்சாரக் கட்டணம்!

மொத்த செலவை எல்லா flat - களும் பகிர்ந்து கொள்வதால்,
அத்தனை பணம் ஆகாது என்றும் அறிந்து கொண்டேன்.

கம்பெனி செலவு என்றால் விமானத்தில் ஏறும் நம்மவர்கள்,
தம் செலவு என்றால், இரண்டாம் வகுப்பு ரயிலில் ஏறிடுவர்!

இதுபோல மன நிலை இருக்கக் கூடாது என எண்ணி,
மெதுவாகச் சில மாற்றங்கள் செய்துவிட விழைந்தேன்.

அன்று முதல் மின்சாரச் செலவைக் குறைக்க எண்ணினேன்.
அன்று முதல் வெந்நீரின் அளவைக் குறைவாகப் பண்ணினேன்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 20


'ரூம்பா' ரோபோ அடித்த லூட்டி கட்டாயம் சொல்லணும்;
ரூம் சுத்தம் செய்ய எண்ணி, நான் பட்ட அவஸ்தையை!

வட்ட வடிவில் மூன்று அங்குல உயரமே உள்ள அது,
இட்ட கட்டளைக்குப் பணிந்து, தரையைச் சுத்தமாக்கும்!

mail


'ரூம்பா' ரோபோவை கட்டிலுக்கு அடியில் விட்டதும்,
ரொம்பப் பாட்டுத் தெரிந்த பாகவதர் போல் பாடிவிட்டு,

உள்ளே சென்று சுற்றும்போது, வசமாய் மாட்டிக்கொண்டு,
உள்ளேயே அமர்ந்தது "ஸ-க, ஸ-க" எனப் பாடிக் கொண்டு!

விரைவில் அதை எடுக்கணுமே என நான் மனம் பதைத்து,
விரைவில் அருகிலிருந்த மடித்த இஸ்திரி டேபிளை எடுத்து,

வெளியே அதை இழுக்க முயற்சிக்க, சண்டித்தனம் செய்து,
வெளியே வருவதற்கு மாறாக, அது சுவர் ஓரம் ஒண்டியது!

கட்டில் மிகப் பெரிது; மெத்தை இரண்டு அடி உயரம்;
கட்டில் அடியில் நுழைந்தால் நான் மாட்டிக்கொள்வேன்.

ஒருபுறமும் கட்டிலை அசைக்க முடியவில்லை;
மறுபுறம் சென்றால் எனக்குக் கை எட்டவில்லை!

என்னவர் ஆபத்பாந்தவராய் வந்து அங்கு நின்றார்;
தன் நீளக் கையால் ரூம்பாவை எடுத்துத் தந்தார்!

'இனி என் மகனுக்கே நீ வேலை செய்', எனச் சொல்லி,
தனியே வைத்தேன் அந்தக் குறும்பு ரோபோவைத் தள்ளி!

 
Last edited:
hi raji,

i have forgotten that it is still a wonder for an indian to visit the usa.

what time period these poems reflect? i think india has gone a long way to match up with the usa in many aspects, though may not be in courtesy or cleanliness.

times in india have changed so much for the better, that in terms of technology, though all may not possess all the conveniences, i suspect, that these may be within the reach of most of the middle class.

re open minds, i think we have a few more years to go, before we catch up with the americans!

best wishes...
 
Our second visit was in 2009.. கடல் கடந்த இரண்டாம் அனுபவம். The first visit in 2003 brought out the pages in ஓ அமெரிக்கா.
Regards. Raji Ram
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 21


கணினியில் மெகாத் தொடரில் மூழ்கிய எங்களை,
பணி முடித்து வந்த பிள்ளைகள் அழைத்தார்கள்.

சூப்பர் மார்கெட் போகலாமா? என்று அவர்கள் கேட்க,
'சூப்பர் ஐடியா' என்று சொல்லி உடனே கிளம்பினோம்.

Costco என்ற நாமம் கொண்ட பெரிய கடை.
காசு மிச்சம் செய்ய உதவும் நல்ல கடை.

பெரிய குடும்பக்காரர்களை மகிழ வைக்கும் கடை.
பெரிய பெட்டிகளில் பொருட்கள் வழங்கும் கடை.

சின்னக் குடும்பமானால் வாங்குவதற்கு அதிகமில்லை.
என்ன சாதனமானாலும் சின்னதாகவே அங்கு இல்லை.

இரண்டு லிட்டர் ஜூஸ் இரண்டு சேர்ந்ததுபோல் பொருட்கள்.
ஐந்து டாலர் விலையில் கிடைக்கும் பத்து டாலர் பொருட்கள்.

எந்தப் பொருள் எடுத்தாலும் சின்னதாக இல்லை; அதனால்
எந்த fridge - ல் வைக்கும் பொருளும் வாங்க வழியில்லை!

சின்னப் பரிசுப் பொருட்கள் பத்து அடங்கிய பெட்டிகளும்,
சின்னப் பாக்கெட் ஆயிரம் உள்ள splenda பெட்டியும் வாங்கி,

எட்டு மணிக்கு இல்லம் திரும்பினோம், அரை மணியில்,
தட்டு வைத்தோம்; சாதமும் potato patti ரோஸ்ட்டும் ரெடி!

பார்க்க நேரமில்லாது 'ஔவை ஷண்முகி' d v d கிடக்க, அதைப்
பார்க்க அமர்ந்தோம் அனைவரும், சிரித்தபடிக் கண்டு ரசிக்க!

Whale watch மறுநாள் சனிக்கிழமை காண முடிவு;
whale watch டிக்கட் உடனே இன்டர் நெட்டில் பதிவு.

பத்தரை மணிக்குப் படுக்கச் சென்றாலும், விடியலின் ஒளியால்
நாலரை மணிக்கே உறக்கம் கலைந்து, உற்சாகம் தொற்றியது!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 22


விரைவில் தயாராக வேண்டி, 'வெஜிடபல்' சாதம் செய்து,
விரைவாய் உணவு முடித்து, ஆர்வத்துடன் புறப்பட்டோம்!

கடலில் குளிர் அதிகமென மகன் சொன்னதால் - என்
உடலில் 'THERMAL' உடையை மறைக்க எண்ணி நான்,

என்னவரின் முழுக்கைச் சட்டையை அதன்மேல் போட,
என்னிடம் விவாதம் செய்யச் மகன் அதிவேகமாய் வர,

'நான் சுடிதார் போட்டுக்கொள்ள முடியுமா அம்மா?
ஏன் பெரிய அளவு சட்டையைப் போடறாய் அம்மா?',

எனக் கேட்க, உள்ளே சென்று, மறுபடியும் என் கம்மீஸை
மெனக்கெட்டு மாற்றிக்கொண்டு, வேகமாகத் தயாரானேன்.

கறுப்புக் கோட்டு ஒன்று குண்டு சைஸில் அவன் கொடுக்க,
வெறுப்புக் காட்டாது அதை எடுத்தேன், கடும் குளிர் தடுக்க!

WHALE WATCH - ல் கொஞ்சமேனும் 'வேல்'களைக் காட்ட, அந்த
வேல் முருகனை வேண்டியபடி, அங்கு சென்றடைந்தோம்.

சின்ன ஊர்தான் அது; நல்ல சில கடைகள் உண்டு. அங்கு
சின்னதாய் ஒரு 'வாக்கிங்' சென்று, காபிக் கடை ஒன்று கண்டு,

கொஞ்சம் தாகம் தணித்து, பெண்ணரசிக்கு ஐஸ்கிரீம் வாங்கி,
நெஞ்சம் கவரும் கப்பல் பயணத்தை நால்வரும் ஆரம்பித்தோம்.

மிக வேகப் புறப்பாடு; சில்லென்ற காற்றின் தாக்கம்;
மிக அழகான டிசைன்களில் கடல் நீர் பிரிந்த வேகம்.

mail


நீர்த் துளி நுனிகள் முத்துக்கள் போல சிதற, கண்-
ணீர் துளிகள் காற்றில் காய்ந்து, கண்கள் சிவந்துபோக,

வழிகாட்டி ஒருவர் விரிவான விளக்கம் கூறி வர,
தலையாட்டி அனைவரும் ஆவலுடன் கேட்டு வர,

இருபத்திமூன்று மைல்கள் கப்பல் கடந்தது;
எண்பத்திமூன்று நிமிட நேரமும் பறந்தது!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 23


வெகு தூரத்தில் 'வேல்' ஒன்று சிறு புள்ளியாய்த் தெரிந்துவிட,
வெகு விரைவில் எல்லோரின் காமராவும் வெளியில் வர,

'அதோ காணுங்கள் அற்புதக் காட்சியை', என்ற மாலுமி
மெதுவாகக் கப்பலை அதனருகில் கொண்டு சென்றார்.

ஒரு தாயும், குட்டியும் அவ்வப்போது வெளியில் வர,
ஒரு கணத்தில் அனைவருக்கும் உற்சாகம் பொங்கியெழ,

குட்டி மிக சுறுசுறுப்பாய் நெட்டுக்குத்தாய் வெளியே வந்து,
சுட்டித்தனம் பல செய்து, வாலை வைத்து நீரை அடித்து,

தலைகீழாக மேலெழுந்து, வெள்ளை வயிற்றை மெல்லக் காட்டி,
கலைஞன் போல பல வித்தைகள் செய்து மகிழ்வித்தது!

தாயோ தன் குட்டியை விட்டகலாது, மெல்லச் சுற்றியது,
'நீயோ சேட்டைக்காரன்! நான் அப்படியல்ல' என்பதுபோல!

நீரின் மேற்பரப்பு தட்டையாக விளங்கினால், அந்த
நீரில் கொஞ்சம் கீழே 'வேல்' உள்ளது எனப் புரிந்தது!

இந்த விஷயம் தெரிந்ததும், படமெடுக்க எளிதானது;
எந்தப் பக்கம் அவை விலகிப் போனாலும் புரிந்தது.

அனைவரும் ஆனந்தித்து, உற்சாகத்தில் துள்ள,
அனைவரின் காமராவும் படங்களைச் 'சுட்டு'த் தள்ள,

மேலும் சில 'வேல்' நண்பர்கள் எங்களுக்குக் காட்சி தர,
மேலும் பல போட்டோக்கள் எடுத்தபடி நாங்களிருக்க,

தினம் காணக் கிடைக்காத காட்சிகள் கண்டு களித்தோம்;
மன நிறைவாய்க் கிடைத்ததில் நன்கு குதூகலித்தோம்.

mail


எங்களுக்கு 'TATA' சொல்வதுபோல கூட்டமாய் அவை வந்தன;
தங்கள் 'ஸ்டையிலில்' வாலின் நுனியை ஆட்டி ஆட்டிச் சென்றன.

குட்டிப் பறவைகள் கடல் மேல் பறந்து, கடல் நீர் மேல் அமர்ந்து,
எட்டிச் சென்றபின் எங்களைக் குறுகுறுப்பாய் நோக்கின!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 24

கடலினுள் இத்தனை தூரம் வந்ததே கிடையாது;
கடலின் அழகைச் சொற்களால் வருணிக்க இயலாது.

நீலக் கடலின் சின்ன அசைவுகளும், தொடுவானம் வரை
நீளும் அதன் பரப்பளவும், ஆகாயத்தின் நீல வண்ணமுமாய்,

எங்கு நோக்கினும் பலவித நீலங்கள்! வானின் நடுநடுவே
தொங்கும் வெள்ளைப் பஞ்சுபோலச் சின்ன மேகக் கூட்டங்கள்.

தொடுவானில் தெரியும் பாஸ்டன் நகரக் கட்டிடங்கள்;
நடுவானில் பறந்து செல்லும் கடல் வாழ் புள்ளினங்கள்.

சூரிய ஒளிக் கிரணங்கள் கடல் மேல் செய்யும் மாற்றங்கள்;
சீரிய முறையில் மின்னும் வைரங்களாய்த் தோற்றங்கள்!

mail


நல்ல விதமாய் எங்கள் அனுபவம் முடிவுக்கு வந்தது;
மெல்லக் கப்பல் திரும்பியது; தரையை நோக்கிச் சென்றது.

உடலில் கொஞ்சம் சோர்வு இருந்தாலும், நீண்ட தூரம்
கடலில் சென்றதால் மனதில் உற்சாகம் நிறைந்தது.

எங்கள் 'காமரா பாட்டரி' காலியாகிவிட்டாலும், ஒருவர்
எங்களை போட்டோ எடுக்க உதவிட முன்வர, அவர்

'க்ளிக்' செய்ததும் தானே 'காமரா' அடங்கியது;
'க்ளக்' என்ற ஓசையுடன் உள்ளே ஒடுங்கியது.

புகைப்படம் வந்ததா எனத் தெரியவில்லை, எனினும்
நகை முகத்துடன் காமராவை வாங்கிக் கொண்டோம்!

போட்டோக்களை ஆல்பத்தில் போட்டேன் மறுதினமே; எங்கள்
போட்டோவும் கடைசியில் இருந்தது மிக அதிசயமே!

முகம் தெரியாத அந்த மனிதருக்குக் கேட்குமோ - நான்
அகம் மகிழக் கூறிடும் என் மனமார்ந்த நன்றி?

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 25


கொஞ்சம் வேக நடைப் பயிற்சி தினமும் செய்வதால்,
கொஞ்சம் கொஞ்சமாய்ப் போகிறது முழங்கால் வலி.

நித்தம் எத்தனை பேர், எம் சுற்றம் நட்பில்,
தத்தம் வலி பற்றிக் கூறிப் புலம்புகின்றார்!

உலகளாவிய பிரச்சனையாய் மூட்டுவலி ஆனது;
பலர் மூட்டு மாற்றம் செய்வதும் அதிகமாகிப் போனது.

பழைய காலம் போல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதும்,
நிறைய எண்ணெய் தேய்த்து, வாரம் ஒரு முறை குளிப்பதும்,

எப்போதும் தரையில் அமர்ந்து உண்பதும், நீண்ட நடையும்,
இப்போது அரிதாகிப் போனதால், எண்ணைப் பசை குறைந்து,

மடக்கும் பயிற்சிகள் குறைந்து, உடலில் மூட்டுக்கள்
இடக்கும் செய்கின்றன; உடல் உபாதைகள் பெருகுகின்றன.

விடலைப் பருவம் வரையேனும் அம்மாவின் கண்டிப்பில்,
விடாது எண்ணைக் குளியல் செய்த நம் வயதினரே,

இந்தப் பாடு படும்போது, பிறந்தது முதல் எண்ணை கூடாதென,
இந்தக் கால மருத்துவர்களின் உபதேசம் கேட்டு நடந்தால்,

'அடுத்த தலைமுறை என்ன பாடு படுமோ?', என்று,
தடுத்தாலும் மனதில் பயம் நிறைவது நிஜமே!

தென்னாட்டு உணவுவகை சரிசம உணவு என்பதும்,
இந்நாட்டு ஆராய்ச்சியாளர் சொன்னால்தான் புரிகிறது!

மேல் நாட்டு நாகரிகம் எனச்சொல்லி pizza தின்று,
மேலான நம் உணவு வகைகளை உண்ண மறந்து,

உடல் காட்டும் உடை முதல், எடை கூட்டும் சீஸ் வரை,
கடல் தாண்டி நம் நாட்டிலும் இளைஞர் ஏற்பது வருத்தமே!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 26


மகன் ஜெர்மனி செல்லுவதற்கு 'விசா' வாங்கணும்;
அவன் அலுவலக வேலையாக slovania செல்லணும்.

'விசா' ஜெர்மனி செல்ல வாங்கியது, மிகவும்
லேசான வேலை போலச் சீக்கிரம் முடிந்தது.

நம்ம சிங்காரச் சென்னையில் 'விசா' வாங்கக் 'க்யூ'வில்
நம்மவர்கள் நிற்கும் பாடு சொல்லத்தான் முடியுமோ?

ஜனத்தொகை அதிகமானால் இப்படித்தான் இருக்குமோ?
ஜனத்திரள் பெருகி, 'க்யூ' வரிசைகள் நீண்டு போகுமோ?

என்னதான் கூட்டமும், கொசுக்களும் பெருகினாலும்,
சென்னை வாழ்க்கை ஒரு சந்தோஷம்தான் தருகிறது!

இது என்ன? Home sick ஆவதற்குத் தொடக்கமா?
மெதுவாக நினைவுகள் சென்னை நோக்கி நடக்குமா?

சென்னையின் வசதிகளில் முதன்மை வேலையாட்கள்;
திண்ணை விட்டிறங்கினால் கிடைக்கும் ஆட்டோக்கள்.

சீருந்து இல்லாமலும் சுக வாழ்வு வாழலாம், நல்ல
சீருந்துகள் குறைவான வாடைக்குக் கிடைப்பதால்!

சில மணி நேரங்கள் வாடகைக்கு எடுத்துக் கொண்டு,
பல வேலைகள் முடித்து வர வசதிகளும் உண்டு.

உடல் நலம் உள்ளோர் சொகுசுப் பேருந்துகளில்
இடம் கிடைக்கும்போது உலா வர வசதி உண்டு.

சிங்காரச் சென்னை மிகவும் சிறந்ததுதான்;
மங்காத புகழுடன் விளங்கிடும் உறுதிதான்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 27

ஒருமுறை 'மைக்ரோவேவிடம்' மாட்டிக்கொண்டேன்.
பலமுறை அதில் சமைத்துப் பழகியிருந்தேன். ஆனால்

தெரியாமல் கடிகார செட்டிங்கை நான் அழுத்த, அது
சரியான மணியை அப்பொழுது முதல் காட்டத் தொடங்க,

'ஆன்' செய்த 'one touch setting' பட்டன்கள்
'ஆன்' ஆக மறுத்தன; அடம் பிடித்து முரண்டின!

மணி காட்டும் கடிகாரம்போல இது மாறியதோ?
இனிமேல் '0' என்பதைக் காணவே முடியாதோ?

'இன்று இதைக் கெடுத்தேனோ?' என்ற பயம் வந்தது.
மூன்று மணி நேரம் தவித்தபின் ஐடியா உதித்தது!

'ஒருமுறை மின்சார இணைப்பைத் துண்டித்தால்,
மறுமுறை 'செட்டிங்' எல்லாம் புதிதாகச் செய்யணுமே?'

மதியம் முதல் என்னைக் கலங்க வைத்ததை,
உதயமான ஐடியாவால் சரியாக்க முயன்றேன்.

மெதுவாகச் சில நொடிகள் மின்சாரம் துண்டிக்க,
அழகாக '0' வந்தது மணி காட்டிய இடத்தில்!

'0' கிடைத்ததும் ஆனந்தப்பட்டேன் முதல் முறை;
'0' மதிப்பெண் வந்தாலோ, மன நிலை எதிர்மறை!

எந்த நம்பரும் வேண்டாமென ஒதுக்க முடியாது.
இந்த '0' இன்று தந்த நிம்மதிக்கு இணையேது?

எல்லா பட்டன்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிட,
எல்லாம் வல்ல இறை அளித்த அறிவுக்கு நன்றி கூறி,

மறுபடியும் போட ஆரம்பித்தேன் மைக்ரோவேவில் டீ;
இரு நிமிடத்தில் தயாராகி வந்தது மிகச் சூடான டீ!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 28


அந்த வார விடுமுறை வீட்டில் கழிந்தது. லைப்ரரி
தந்த புத்தகங்கள், ஸி.டிக்கள் திரும்பிச் சென்றன.

ஒரே வீட்டில் நாலு பேரும் நான்கு விதம் இங்கே.
ஒரே போல சாப்பாடும் இருப்பதில்லை இங்கே.

'அதிகம் சாப்பிட்டால் எடை கூடும்' என மகனின் எண்ணம்.
அதிகம் சாப்பிட்டாலும் மிஞ்சணுமெனப் பெண்ணரசி எண்ணம்.

அதிகம் மிஞ்சியதை மறுமுறை உண்ணாத என்னவர் எண்ணம்.
அதிகம் மிஞ்சிய உணவை வீணாக்க விரும்பாத என் எண்ணம்.

என்னவருக்கோ எப்போதும் வேண்டும் புதிய சமையல்;
எங்களுக்கோ நிறைந்திருக்கும் பல வகைகள் Fridge-ல்!

இது சுவாரசிமாகத்தான் இருக்கிறது, நாங்கள்
எது சமைக்கலாம் என்று தீர்மானிக்கும்போது!

குளிர்காலச் சென்னைபோல இப்போதும் குளிர்கிறது;
தளிர் புதிதாய் வந்து செடிகளில் பச்சை மிளிர்கிறது.

அப்பாக்கள் தினத்தன்று கோடையும் ஆரம்பமாகிறது;
தப்பான அறிவிப்பு போல மழை வந்து நனைக்கிறது.

நம்ம ஊர் வெய்யில் உடல் வியர்வையைப் பெருக்கும்;
இந்த ஊர் குளிரில் நம் உடல் நடுங்கியபடி இருக்கும்.

ஒவ்வொரு மனிதனுமே பலவாறு மாறுபடும்போது,
ஒவ்வொரு ஊரில் பருவநிலை மாறுவதில் வியப்பேது?

அன்று இரவு மகனின் ஜெர்மனிப் பயணம் தொடங்கும்;
நன்று! இம்முறை எம் துணை பெண்ணரசிக்கு இருக்கும்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 29


நிதானமாய் இரவு உணவு முடித்து, மகனுடன்
விமான நிலையம் செல்லப் புறப்பட்டோம்.

கார்மேகத்துடன் வழியெல்லாம் இருந்தது மழைச் சாரல்;
பார்வையை மங்க வைக்கும் மெல்லிய மழைத் தூறல்.

சில அடிகளுக்குமேல் தெரியாத நிலை இருந்ததால்,
சில நிமிடங்கள் அதிகமானது, இந்தப் பயணத்தில்.

திரும்பும்போது பெண்ணரசி சாரதியாக, ஒரு நொடியும்
திரும்பாமல் என்னவர் சாலையையே கவனித்தார்.

உள்ளே செக்-இன் செய்த மகனோ, நாங்கள் வீட்டின்
உள்ளே வரும் முன்னே 'செல்'லில் அழைத்தான்.

ஊருக்கச் சென்றால் உம்மணாம் மூஞ்சி ஆகும் நம்மவர்கள்,
ஊருக்குச் செல்லும் முறை இவர்களிடம் கற்கவேண்டும்!

செய்திகள் பார்த்தால் தெரியும் விபத்துக்கள் பற்றி - என்ற
செய்தி சொல்லித் துன்புறுத்துவர் 'சாடிஸ்டு' கணவர்கள்!

இணையாகத் தெருவில் கூட நடக்க மாட்டாரே நம்மவர்;
துணையாக வரும் போலீஸ் போலத் தள்ளியே வந்திடுவர்.

உயரம் அதிகமிருந்தால் கேட்கவே வேண்டாம் - மிகத்
துயரமே! அவரின் ஓரடிக்கு மனைவி ஈரடி வைக்கணும்!

ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்த மனைவி கீழே விழுந்ததை,
ஸ்கூட்டர் ஓட்டிய கணவர், வீடு வரை அறியாது சென்றதை,

இந்தியாவின் என் நண்பி உரைத்தது நினைவில் வர, இந்த
விந்தையான கணவர்களை எண்ணி வியந்தேன்! - ஆனால்

ஆண்கள் இந்தத் தலைமுறையில் மாறத் தொடங்கிவிட்டார்.
பெண்களின் இன்றைய ஆதிக்கத்திற்கு நன்கு அடங்கிவிட்டார்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 30


'லேனா'வின் ஒரு பக்கக் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் - அவர்
பேனாவில் பலமுறை என் எண்ணங்களும் உதிக்கும்.

நல்ல விருந்தாளி பற்றியும், நல்ல உபசரிப்புப் பற்றியும்,
பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

முதன்மை கருத்து என்னவெனில், நாம் செல்லும் வீட்டாரின்
தன்மைக்கேற்ப நம்மைக் கொஞ்சம் மாற்றிக் கொள்வதே.

கொஞ்சம் கூடத் தம்மை மாற்றிக் கொள்ளாமல்,
நெஞ்சம் நிறையப் பிடிவாதம் இருக்கவே கூடாது.

எந்த வீட்டுக்குச் சென்றாலும், அவர்களுக்குத் தத்தம்
சொந்த வீட்டுச் சலுகை போல் கிடைப்பது கடினமே!

ஒரு வாரத்திற்கு இரு முறை சமைப்பதே அரிதெனும்
ஒரு தேசத்தில் வந்த பின்னும், மூன்று வேளையும்

சமைப்பார்கள் புதியவை என எதிர்பார்க்க முடியாது.
சமைத்தது அதிகமானால் குளிர்ப் பெட்டியுள் செல்லும்.

எப்படியோ ஆறு வாரங்கள் சமாளித்து விட்டேன் இங்கு.
அப்படியே செய்யலாம் மேலும் பத்து வாரங்கள் இங்கு.

சமைக்கும்போது மனக் கவலை இருந்தால் அதுவும்
சமையலை பாதிக்குமென எங்கோ படித்துள்ளேன்!

'cool' என்று எல்லாவற்றுக்கும் சொல்லும் அமெரிக்காவில்
'cool' ஆகவே மனத்தை வைக்க எப்போதும் முயன்றேன்.

சென்ற முறை வந்தபோது இன்டர்நெட் பேச்சு கிடையாது.
இந்த முறை தினம் பேசுவதால் மகிழ்ச்சிக்குத் தடையேது?

அடுத்து வருவது வெர்ஜீனியாப் பயணம், இரு நாட்களில்;
எடுத்து வைத்தேன் வேண்டிய பொருட்களைப் பெட்டிகளில்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 31


விமானப் பயணத்தில் நல்ல உபசரிப்பும் குறைகிறது.
விமானத்தில் check-in பெட்டிக்குச் செலவும் ஆகிறது!

அடைத்தோம் இரண்டு சிறு பெட்டிகளில் அனைத்தையும்;
முடித்தோம் packing வேலை; check-in செலவு இல்லை.

மகனின் நண்பன் நாலு நாள் லீவில் பாஸ்டன் வருவதால்,
அவனுக்கு எளிதாக்க எங்கள் அறையைச் சுத்தம் செய்தோம்.

திங்கட் கிழமை இவ்வாறு ஓடிவிட, மறுநாள் மதியம்
எங்கள் விமானப் பயணம் இருந்தது, புது அனுபவமாக!

சரியான நேரத்தில் விமான நிலையம் அடைந்தும்,
சரியாக boarding pass வாங்கத் தெரியாமல் திணற,

சிறு வயது அமெரிக்கன் ஒருவன் எங்களுடன் வந்து,
பொறுமையாக touch screen முறையைக் கற்பித்தான்.

நன்றி அவனுக்குச் சொல்லி, security check முடித்து,
சென்று அமர்ந்தோம் இருவரும் விமான இருக்கைகளில்.

சொன்ன நேரத்தில் புறப்படுவதுபோலப் பாசாங்கு செய்து,
runway அருகில் வந்து விமானம் நின்றது, பொம்மைபோல!

'அரை மணி காத்திருங்கள்', என்ற அறிவிப்பை ஒவ்வொரு
அரை மணிக்கும் பண்ணும் விமான ஓட்டியை வைதபடி,

பொறுமையின் எல்லைக்கு நாங்கள் வந்துவிட, அவர்களோ
அருமையான ஜூஸ் கொடுத்து எங்களைச் சமாதானம் செய்ய,

இரண்டு மணி நேரம் தாமதமான பிறகு, விமானம்
பறந்து சென்றது வாஷிங்டனை நோக்கி விரைவாக.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 32


வாஷிங்டனில் விமான நிலையத்தை மறக்காதவாறு,
வாஷிங்டன் விமான நிலைய அனுபவங்கள் இருந்தன!

தாமதமாக அங்கு வந்ததாலும், எங்கள் அடுத்த விமானம்
தாமதம் இல்லாது புறப்பட்டுப் போனதாலும் - நாங்கள்

விசாரித்து, customer care இடத்தைக் கண்டுபிடித்து,
விசாரத்துடன் நீண்ட க்யூவைக் கண்டு அஞ்சும்போது,

எனக்கு touch screen ஒன்று கண்ணில் பட, என்னவர்
தனக்கு பாஸ்டனில் சொல்லிக் கொடுத்தபடி முயன்று,

அடுத்த விமானத்தின் boarding pass எடுக்க, அதில்
கொடுத்த புறப்படும் நேரம், அன்று இரவு மணி பத்து!

தங்கைக்கு இதைச் சொல்லத் தொலைபேச வேண்டும்.
அங்குள்ள தொலைபேசிகளை இயக்குவது புரியவில்லை!

சில்லறை காசையெல்லாம் வீட்டிலே நான் வைத்துவிட,
சில்லறை மாற்ற, அங்குள்ள உணவகம் ஒன்றை நாட,

நோட்டு ஒன்று நான்கு குவார்டர்களாய் மாறிவிட,
போட்ட காசுகளை ஒரு 'போன் மெஷின்' துப்பிவிட,

காசு போட்டபின் பேசணுமா, குரல் கேட்ட பிறகுதான்
காசு போடணுமா, எனத் தெரியாமல் தவித்துக் குழம்ப,

நெடிய மனிதர் ஒருவர் புன்னகையுடன் உதவ முயல,
நொடிகள் பல சென்ற பின் முயற்சி வெற்றி பெற்றது!

அன்று மதியம் உண்டது எப்போதோ சீரணம் ஆகிவிட,
என்றும் உண்ணாத pizza வை வேறு வழியின்றி வாங்கி,

மிதமாகச் சீஸைச் சுரண்டி எடுத்துவிட்டு, பசியாற ஒரு
விதமாக வழிகாட்டிய இறைவனுக்கு உரைத்தோம் நன்றி!
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்.... 33


தேசம் முழுதும் புலால் உண்போர் மிகுந்திருந்தால் - அத்
தேசத்தில் 'வெஜிடேரியன்' உணவு தேடுவது கடினமே!

நான் pizza ருசி அறிந்து கொள்ள ஆண்டவன்
தான் இந்தத் திருவிளையாடல் புரிந்தானோ?

விமானமேற அறிவிப்பு வந்ததும், பெட்டிகளுடன்
விமானமேறச் சென்றோம் மிகவும் குஷியாக!

பெட்டிகளை tag போட்டு வாங்கிக்கொண்டு - அந்தக்
குட்டி விமானத்தில் எங்களை அமரச் செய்தார்கள்.

ஒன்றாம் காலத்தில் 'ங்ஙுர்ர்றோம்ம்', 'ங்ஙுர்ர்றோம்ம்'
என்று ஜதியுடன் புறப்பட்ட அது, வேகம் பிடித்ததும்,

இரண்டாம், மூன்றாம் காலங்களில் ஜதியை அதிகரிக்க,
இரண்டாம் விமானத்தில் எம் நாடித் துடிப்பு அதிகரிக்க,

பக்திப் பெருக்குடன் வேண்டினேன் மனமார, எங்கள்
சக்தி விநாயகரை, நல்லபடி Charleston போய்ச் சேர!

இரவு நிசப்தத்தில் சப்தமிட்டுப் பறந்த விமானம் - நடு
இரவுக்கு அரை மணி இருக்கையில் தரை இறங்கியது!

படிகளில் இறங்கி வந்ததும் பெட்டிகள் கிடைக்க - சில
நொடிகளில் சந்தித்தோம் தங்கையின் மாப்பிள்ளையை.

சென்ற முறை அவனைச் சென்னையில் சந்தித்ததால்,
அன்று அடையாளம் கண்டு, அன்புடன் வரவேற்றான்.

இக்கால மாப்பிள்ளைகள் மனைவியின் சுற்றத்திடம்
அக்கால மாப்பிள்ளைகள் போல 'முறுக்கு'வது இல்லை!

இதுபோல மாற்றம் நல்லதென்ற எண்ணம் மனதில்;
மெதுவாக ஏறி அமர்ந்தோம் அவனுடைய சீருந்தில்.

 
Just wanted to share a few nice pictures taken at Longwood gardens.

mail


P.S: Learning to add pics fast! :typing:
 
Last edited:
ஒரு முறை மீண்டும் நன்றி, ஊக்கம் அளிக்கும் உ(ள்ள)ங்களுக்கு!
விடுமுறை இருநாட்கள்... தொடருகிறது பயணக்க(வி)தைகள்...
ராஜி ராம் :nod:
 

Latest ads

Back
Top