• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 54

பானைகள் மிக அழகு என்று அருகில் சென்றால்,
யானை விலையாக 5000 டாலர் என்கின்றார்கள்!

பெரிய ஹால் ஒன்றில் நான்கடிக்கும் மேல் சதுர வடிவில்
பெரிய அளவுப் புகைப்படங்கள் பல இருக்கக் கண்டோம்.

என்ன அதிசயம்! நம் நாட்டுக் கும்பமேளா விழா அங்கு
சின்னத் தூரிகையால் வரைந்ததுபோல் பாங்காகத் திகழ்கிறது.

mail


மீன் பிடிக்கும் படகுகளில், கழுத்தில் வளையம் கொண்டு,
மீன் பிடிக்க உதவக் CORMORANT பறவை உபயோகிப்பதும்,

மிகப் பெரிய சைனாச் சுவரும், ஆதிவாசிகளும் என
மிக அழகான புகைப்பட வரிசைகள் கண்டு வியந்தோம்!

mail


கடைகள் பல சுற்றி, ஒன்றும் வாங்க முடியாமல்
விலைகள் விரட்டினாலும், ஒருவாறு தேடித் துருவி,

டாலர் ஆறு கொடுத்து ஒரு சின்னத் தொங்கட்டானும்,
டாலர் ஐந்து கொடுத்து T SHIRT ஒன்றும் வாங்கினேன்.

இந்த ஊரில் மழை மக்களின் தோழன்தான்,
வந்த சில நிமிடங்களில் குளிர்வித்து மறைகிறது.

ஓயாமல் பெய்து எல்லோரையும் வருத்துவதுமில்லை.
பேயாமல் மறைந்து பயிர்களை வாட்டுவதுமில்லை!

அந்த மழையும் அனுபவித்தபின் நாங்கள் சென்றோம்
அந்த ஊரின் மிக விசேஷ மெக்சிகன் உணவகத்துக்கு.

நம் பெயரைப் பதிவு செய்து, ஒரு மேசை காலியானதும்
நம் பெயரைக் கனிவுடன் சொல்லி உள்ளே அழைக்கின்றார்.

குழந்தைக்கு உயர இருக்கை தந்து, பெரியவர் உயரம்
குழந்தையும் வரும்படி செய்து நன்கு உதவுகின்றார்.

சாப்பாடு மீதியானால், தெர்மோகோல் பெட்டிகள் தந்து,
சாப்பாடு வீணாக்காமல் எடுத்துச் செல்ல உதவுகின்றார்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 55


அருமையான BRADBURY SCIENCE MUSEUM பார்த்தோம்;
பொறுமையாகச் சுற்றி வந்து பல செய்திகள் அறிந்தோம்.

விஷப் பூச்சிகள் முதல் அணுகுண்டு வரை, பல்வேறு
விஷயங்கள் குறித்து விளக்கம் இருக்கக் கண்டோம்.

தன் இனத்தை அழிக்க மனிதனே உருவாக்கிய அணுகுண்டைக்
கண் பார்க்க, குளிரை மீறி, உடல் வியர்த்து. நடுங்கியது அன்று!

mail


ஆராய்ச்சி மையம் NASA உருவான கதையுடன், இந்த
ஆராய்ச்சி மையம் உருவாக்கிய இருவர் சிலையும் உள்ளன.

மாலை CALDERA VALLEY காண மலைப் பாதைப் பயணம்;
சோலை போல இருந்த மரங்களிடையே கருகிய பல மரங்கள்.

சின்னக் காட்டுத் தீயாய் உருவான ஒன்று, மரங்கள் பல உண்டு,
விண்ணை முட்டும் தீயாயாகிப் போனதாம் 2000 ஆம் ஆண்டு!

உயிரிழந்த மரங்களைப் பார்க்க மனம் கலங்கியது! மனிதர்களை
உயிரிழக்கச் செய்த செப்டெம்பர் பதினொன்று நினைவில் வந்தது.

mail


பல வீடுகள் தீக்கிரையானாலும், ஆண்டவன் அருளால்,
சில உயிர்ச் சேதங்கள் கூட அங்கு ஆகவில்லையாம்!

நம் நாட்டின் சில குடிசைவாசிகளைப் போல இங்கும் சிலர்,
தம் மதிப்பு மிக்க பொருட்களை வேறு இடத்தில் பாதுகாத்து,

தாமே தம் வீட்டைக் கொளுத்திவிட்டு, INSURANCE -ஐ
தாமே அணுகி, பணம் கேட்டுப் பெற்றுக் கொள்வாராம்.

எந்த நாட்டிற்குப் போனாலும், தில்லுமுல்லு செய்து பணம்
சொந்தமாக்கிக் கொள்ளும் மனிதர்கள் உள்ளார்களே!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 56


ஒரு மில்லியன் மற்றும் ஒன்று புள்ளி நாலு மில்லியன்
வருடங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறிய எரிமலைகளின்

நடுப்பகுதியே பள்ளத்தாக்காக மாறியதாம்! நினைத்தாலே
நடுங்க வைத்த எரிமலைகள் ஓய, இப்போது அமைதியே!

பசுமை திகழும் பதினான்கு 'மைல்' விட்டத்தில் அது மிக
அருமை! புகைப்படமெடுக்கப் பலரும் கூடியிருந்தார்கள்.

mail


தூரத்தில் தெரியுமோ? என பைனாக்குலர் வழியே ஒரு
ஓரத்தில் நின்று சிலர் மிருகங்களைத் தேடினார்கள்.

காமராவின் புகைப்படத்தில் முழு அழகும் வாராது! எனவே
காமராவில் MOVIE எடுக்க முயன்றேன், முதன் முறையாய்.

ஆரம்பத்திலும் முடிவிலும் மட்டும் 'க்ளிக்' செய்ய அறியாமல்
ஆரம்பம் முதல் நான் க்ளிக்கிக் கொண்டே இருக்க - முடிவில்

என்னை அறியாமல் தரை நோக்கி 'லென்ஸ்' திரும்ப,
என் முதல் MOVIE முடிந்தது என் செருப்பு அதில் தெரிய!

ELK ஒன்று ஒருவர் கண்டுவிட்டார் நிமிட நேரம் - உடனே
எல்லோருக்கும் ஆர்வம் எழ, அங்கு ஒரே ஆரவாரம்!

வானவில் இரட்டையாய் கீழ் வானத்தில் படர - அந்த
வானவில் பூமியருகே செங்குத்தாய்த் தெரிந்தது.

mail


காணக் காண உற்சாகத்தைத் தூண்டும் அந்தப் பெரிய
வானவில் அழகு ஒரே புகைப்படத்தில் அடங்கவில்லை.

இந்நாட்டில் பிறை நிலவு C யைத் திருப்பியதுபோல.
நம் நாட்டில் தெரிவதுபோல U வடிவம் இங்கு இல்லை!

வரும் வழியில் ஒரு மானும் ஒரு ELK கும், திரும்பிப்
போகும் வழியில் இரு ELK களும் நாங்கள் பார்த்தோம்.

இயற்கை அன்னையின் சில பரிமாணங்கள் கண்டு
இல்லம் திரும்பினோம் மன நிறைவு கொண்டு.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 57


கடல் கடந்து வந்து பொருள் தேடும் ஜோடிகள்,
உடல் நொந்து போகிறார்கள் குழந்தை வளர்ப்பினால்.

குழந்தை உருவாகி வளரும் காலத்தில், பெண்ணைக்
குழந்தை போல் பேண அவள் தாய் உடன் இருப்பதில்லை.

பேறு காலத்தின் கடைசி நிமிடம் பறந்து வந்து சேர்ந்திடுவாள்.
வேறு வேலைகள் அனைத்தும் ஒதுக்கி, உதவி செய்திடுவாள்.

ஆறு மாதத்திற்கு மேல் இருக்க விடாத விசா கெடுபிடிகளால்,
ஊருக்கு அன்னை சென்றதும், வருவாள் துணைவனின் அன்னை!

ஓராண்டு இவ்வாறு ஓடியபின், சிலருக்கு மறுபடியும்
ஓராண்டு காலம் action replay யாகச் சென்றுவிடும்.

பெற்றோரும் முதியோராய்ப் போவதால், அடிக்கடி வந்து
உற்ற துணையாக இருந்து உதவ முடியாது போய்விடும்.

சின்னக் குழந்தைச் சிணுங்கலுக்கும் பயந்துகொண்டு - இவர்கள்
என்ன செய்வதென அறியாது திகைத்து நின்றிடுவார்.

வேலைக்கு இருவரும் செல்வதால் குழந்தை காக்கும்
வேலைக்கு day care - காப்பகங்களை நாடிடுவார். அங்கு

டாலர் செலவுக்கும் பஞ்சமில்லை! ஒரு மாதத்திற்கு எழுநூறு
டாலர் கொடுத்தால், ஒரு வாரத்தில் நாலு நாட்கள் 'காத்திடுவார்'!

குழந்தை பிறந்தது முதல் 'பிளாஸ்டிக் நாப்பி'யைக் கட்டுவதால்,
குழந்தையின் நல்ல விளையாட்டும் தடைபட்டுப் போகிறது.

குழந்தை வளர்ப்பு பற்றிப் பாடங்களைக் கற்று வந்தாலும்,
குழந்தை வளர்க்க இந்தத் தலைமுறை திண்டாடி நிற்கிறது!

(இப்பகுதியை 'ஓ அமெரிக்கா' - விலும் இணைத்துள்ளேன்)

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 58

அடுத்த பயணமாக DENVER செல்ல, பெட்டிகளை
அடுக்கி வைத்து, பின்னிரவு உறங்கச் சென்றோம்.

காலை விரைவில் எழுந்து நீராடி, சாலைகளில் மக்களின்
வேலை நேரக் கூட்டம் தவிர்க்க, உடனே புறப்பட்டோம்.

எடுத்த வாடகை வண்டியை ஒப்படைத்து, ஷட்டிலில்
அடுத்த விமானம் ஏற, மீண்டும் பயணம் செய்தோம்.

அதிக நேரத் தாமதமின்றி விமானம் புறப்பட்டதால், அன்று
அதிக நேரம் வீணாகாமல் DENVER அடைந்தோம். வழியில்

முன்பு கண்ட வானம் போல மேகப் பஞ்சுக் கூட்டமில்லை.
அன்று கண்ட வானம் தெளிந்து, நிர்மலமாய் இருந்தது.

வட்ட வட்டப் பச்சை நிலங்கள் விமானத்திலிருந்து தெரிய,
வட்ட வடிவப் பயிரிடும் ஒரு யுக்தி அதுவென அறிந்தோம்.

நிறைய வெள்ளைக் கூடாரங்களை அடுக்கியதுபோல ஒரு
அரிய அமைப்பில் DENVER விமான நிலையம் இருக்கிறது.

mail


இங்கு வாடகை வண்டி எடுக்க ஷட்டிலில் ஏறினால்,
தங்குதடையின்றி அது பல மைல் தூரம் பறக்கிறது.

நீண்ட நேரம் அதில் பயணித்து, நீண்ட நேரம் காத்திருந்து,
வேண்டிய கார் கிடைத்ததும், BOULDER நோக்கிப் புறப்பட்டோம்.

அழகிய வளைவுப் பாதைகளில் சென்று, அக்கா மகனின்
அழகிய 'அபார்ட்மன்ட்' சென்றடைந்தோம் மதிய உணவுக்கு.

அவர்களின் திருமணம் முடிந்து இரண்டாண்டுக்குப் பின்
அவர்களை சந்தித்ததில் எங்களுக்கும் மிக மகிழ்ச்சியே.

அன்புடன் இனிய வரவேற்பு; ஆசையுடன் உபசரிப்பு;
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 59


வானிலை ஆராய்ச்சி துல்லியமாகச் செயல்பட்டாலும்,
தன் நிலையைத் தானே தீர்மானிக்கிறாள் இயற்கை அன்னை!

எந்த ஊரில் THUNDER STORM எச்சரிக்கை வந்தாலும்,
அந்த ஊரில் சில இடங்களுக்குத்தான் அது பொருந்துகிறது.

மைலாப்பூரில் மழை கொட்டும்போது, அங்கிருந்து சில
மைல்கள் தள்ளியுள்ள கே கே நகர் காய்வதுபோல.

அந்த வாரம் முழுதும் THUNDER STORM எச்சரிக்கை இருந்தாலும்,
அந்தச் செவ்வாய் விடியல் நல்ல சூரிய ஒளியுடன் வந்தது.

இமயமலை காணும் பேறு பெறாத நான் அங்கு வேண்டியது
இமயமலை போல் 'ஐஸ் தொப்பி' ROCKY MOUNTAINS காண்பது!

நல்ல வானிலை இருந்ததால், அன்றே அந்த மலைக்குச்
செல்ல முடிவெடுத்துக் காலையில் புறப்பட்டோம்.

எழுவர் அமரும் குட்டி வேன் தான் இம்முறை வாடகை வண்டி.
ஐவர் அமர்ந்து, எங்கள் சாப்பாடும் வைக்க வசதியான வண்டி.

கடல் மட்டத்திலிருந்து பன்னிரண்டாயிரம் அடி உயரம்.
அதன் அழகு காண ஆயிரம் கண்கள் வேண்டும்!

முதல் நிறுத்தத்தில் எங்களை ஆவலுடன் வரவேற்று
முதல் மரியாதை கொடுத்தன சில CHIPMUNK கள்!

mail


குட்டி அணில் போல முதுகில் கோடுகள் கொண்டு
எட்டிச் செல்லாமல் பயமின்றி அருகில் வந்தன.

பயணிகள் பலரைக் கண்டுவிட்ட அவைகள், எல்லாப்
பயணிகளையும் நெருங்கி உணவு எதிர்பார்க்கின்றன.

MOVIE எடுக்க அறிந்த என் கை துறுதுறுக்க, இரு முறை
MOVIE எடுக்காமல் என்னால் இருக்க முடியவில்லை!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 60


மலைப்பாதை வளைவுகளில் பாதுகாப்பே கிடையாது!
அலை மோதும் பயத்தில் நடுங்கி நான் பயணித்தேன்.

பத்தடி தூரம்கூடப் பார்வையில் படாத இடத்திலும்
எத்தகு பாதுகாப்பு வேலியும் போடப்படவில்லை.

ஒரு நொடி வண்டியின் 'திருப்பும் பகுதி' கெட்டால்,
பெரும் அதல பாதாளத்தில் கதிமோக்ஷம் கிடைக்கும்!

ஆனால் எல்லோரும் துணிவாகச் செல்கின்றார் - அங்கு
போனால் கிடைத்திடும் அரிய காட்சிகளை எதிர்பார்த்து!

வேக எல்லை மிகக் குறைவாக வைத்ததால் - அந்த
வேக எல்லைக்குள் செல்வதுதான் கொஞ்சம் ஆறுதல்.

பனியும் மேகமும் படர்ந்த சிகரங்கள் அருகே வர,
இனியும் அழகு கூடி, எங்கள் கண்களை நிறைத்தன.

எட்டாயிரம் அடி தாண்டியதும், "பார்க்கிங்"கில் நிறுத்தி,
எட்டாத தூரத்தில் தெரியும் பள்ளத்தாக்கு கண்டோம்.

இன்னும் சில மைல் சென்றபின் 9450 அடி உயரத்தில்
மின்னும் குளிர் நீர் நிறைந்த BEAR LAKE உள்ளது.

கரடி வடிவம் போலக் கரை கொண்டதால் இதைக்
'கரடி ஏரி' என்று அழைப்பதை அறிந்தோம்.

mail


mail


வண்ண மரங்களும், பூக்களும் நிறைந்த சூழலில்,
பல விதப் பாறைகள் நடுவில் இந்த ஏரி உள்ளது.

பாறைகள் மீது அமர்ந்து ஓய்வெடுக்கலாம். இந்தப்
பாறைகள் மீது ஏறி, ஏரியை ''பைனாகுலரால்" பார்க்கலாம்.

ஒருமுறை சுற்றி வந்து, அதன் அழகைப் படம் பிடித்து - அங்கு
ஒருவரின் உதவியுடன், எங்கள் போட்டோ க்ளிக்கிக் கொண்டோம்.

எங்கு சென்றாலும் நம் காமராவில் ''க்ரூப்'' படமெடுக்க
அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கு உதவினார்கள்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 61


பல வண்ணக் குட்டிப் பூக்கள் ஏரியைச் சுற்றி நிறைந்திருக்க,
பல அழகுப் புகைப்படங்கள் எடுத்து, மீண்டும் பயணித்தோம்.

பத்தாயிரம் அடி உயரம் தாண்டும்போது எழுந்தது,
பத்தடி தூரம் கூடக் காண விடாத மேகக் கூட்டம்!

பல மைல் தூரத்துக்கு மரங்கள் தெரியும் ஒரு பகுதியில்,
சில அடிகள் கூடக் காண விடாது அடர் மேகம் மறைத்தது.

சக்தி விநாயகரை நான் வேண்டி, குளிரை அனுபவித்தபடி,
பக்தியுடன் வேனில் மற்றவருடன் பயணம் தொடர்ந்தேன்.

பற்கள் தட்டும் அந்தக் குளிரிலும், சாலை ஓரம் இருக்கும்
கற்கள் மீது, புறாவைப் போன்ற மலை வாழ் பறவைகள்.

mail


உச்சியை அடைந்ததும் எங்கள் அனைவருக்கும்
உச்சி குளிர்ந்தது; களிப்பாலும், குளிராலும்!

காதுகளை மறைத்தால் குளிர் தாக்காது என எம்
காதுகளில் சொன்ன தந்தை சொல் நினைவு வர,

என் வெள்ளைத் துப்பட்டாவை உடனே எடுத்துக் மடித்து
என் காதுகள் மறையும்படிக் கட்டிக் குளிரை விரட்டினேன்.

இந்திய உடைகள் பலவிதத்திலும் நமக்கு உதவிடும்! மிக
விந்தையாக வெய்யில் பனியிலிருந்து நம்மைக் காத்திடும்!

பனி படர்ந்த பல சிகரங்கள்! தொலை தூரத்தில் பள்ளத்தாக்குகள்.
இனிது சென்றன பல நிமிடங்கள். பைனாகுலரில் பல தேடல்கள்.

mail


மிக தூரத்தில் கீழே இரு ELK கள் ஒருவர் கண்டுவிட,
மிக வேகமாய் அனைவரின் பார்வைகளும் அத்திசையில்.

சிறுவர் இருவர் எச்சரிக்கைப் பலகை சொல்வதை மீறி,
பெருகும் ஆவலுடன் அந்த ELK களைக் காண ஓடினர்.

பெற்றோர் இருவரும் பரிதவிக்க, அந்த இளசுகள்
உற்ற துணை போல, அந்த மிருகங்களை அணுகினர்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 62


சிறியவர் ஓட்டத்திற்குத் தடை போட முடியாததால்,
பெரியவர் இருவரும் அவர்களின் பின் ஓடினர்!

தன் பிள்ளைகளை அவர்கள் நாடி ஓட, மறுபடியும் நான்
என் காமராவில் சிகரங்களின் அழகைச் சிறைப் பிடித்தேன்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் முழு அழகும் ஒரே பிரேமில்
ஏற்ற முடியாததால், மறுபடியும் MOVIE சில எடுத்தேன்.

கீழிருந்து எழும் மேகக் கூட்டங்கள் நம்மைத் தாண்டி
மேலெழுந்து சென்றன, வான் திசையை நோக்கி.

தட்டையாக விளங்கும் மலைப் பகுதிகளில், மழை நீர்
குட்டையாகச் சேர்ந்து, மாறின வட்டப் பனிகளாய்.

வெள்ளையாகத் தெரியும் அந்தப் பனிக்கட்டிகள் - ஆனால்
கொள்ளையாக இருந்தன அதில் கரும் புள்ளி தூசுகள்!

mail


கண் மறைக்கும் ஒரு சில வெண் பனி மேகங்கள், ஒரு
கண் இமைக்கும் நேரத்தில் மறைந்தன, சூரிய ஒளியால்.

மேகம் சூரியனை மறைத்தால் எழும் கடும் குளிர்,
மேகம் விலகியதும் மாறியது சுளீர் வெய்யிலாய்!

ஒவ்வொரு நிமிடமும் அதிசயிக்க வைத்தன.
வெவ்வேறு காட்சிகள் எம் கண் முன் விரிந்தன.

மனம் நிறைய அக் காட்சிகள் கண்டபின், எங்கள்
மனம் மகிழ, அடுத்த பார்வைப் பகுதிக்கு விரைந்தோம்.

உயரமான ஒரு சிகரப் பகுதியில் வெள்ளைப் பனி தெரிய,
உயரமேறப் பயந்த என்னைப் புகைப்படம் எடுக்க விட்டு,

பனியருகில் சென்ற மற்ற நால்வரும், எனக்கு வேண்டிப்
பனியைத் தோண்டி, என்னிடம் தந்தனர் இரு SNOW BALL கள்.

ஜன்ம சாபல்யம் பெற்றதுபோல் மகிழ்ந்து, கைகளில் இந்த
ஜன்மத்தில் கிடைத்த முதல் SNOW BALL களைப் பிடித்தேன்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 63

அடுத்த பார்வைப் பகுதியில் இருந்த பள்ளத்தாக்கில்,
படுத்த நிலையில் ஓய்வெடுக்கும் பதினோரு ELK கள்.

பெண் ELK ஒன்று கூட அந்தக் கூட்டத்தில் இல்லை!
ஆண் ELK சாம்ராஜ்யமோ அவ்விடத்தை ஆளவில்லை!

கோபம் கொண்டு தம்மைப் பெண் இனம் விரட்டியதுபோல்
பாவமாய் அவைகள் வெறுமையில் கிடந்து தவித்தன.

mail


பரிதாபமாய் இருந்த அந்தக் காட்சியால் எங்களுக்கு
அனுதாபம் தோன்ற, அதைப் படமெடுத்த பின், அருகில்

அறிவிப்பு ஒன்று CONTINENTAL DIVIDE என்றிருக்க, அதுபற்றி
அறிந்து கொள்ள அனைவரும் அங்கு போய்ச் சேர்ந்தோம்.

மழை, உருகு பனி நீர்களை இரு வேறு கடல்களில் வடிக்கும்
இதை GREAT CONTINENTAL DIVIDE என அழைக்கின்றார். இது

வட மேற்கு அமெரிக்காவில், அலாஸ்காவில் ஆரம்பித்து ஓடித்
தென் அமெரிக்காவில் CAPE HORN வரை உள்ள கற்பனைக் கோடு.

கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த ROCKY MOUNTAIN - இல்
கடல் மட்டத்திலிருந்து இந்த இடம் 10,759 அடி உயரம்.

கிழக்குப் பகுதி நீரெல்லாம் MISSISSIPPI ஆறு வழியே ஓடி,
கிழக்கிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் இணைந்து,

பெரிய அட்லாண்டிக் சமுத்திரத்தைச் சென்று அடையுமாம்!
அரிய GRAND CANYON நடுவிலுள்ள COLORADO நதியில் இணையும்

மேற்குப் பகுதி நீரெல்லாம், கலிபோர்னியா வளைகுடா வழியே
மேற்கிலுள்ள பசிபிக் சமுத்திரத்தைச் சென்று அடையுமாம்!

அப்போது அந்த இடத்தில் அமர்ந்து 'க்ளிக்'க நினைக்க
அப்போது அங்கு வந்த ஒரு உல்லாசப் பயணி உதவினார்.

இன்னும் மேலே சென்று 12,000 உயரம் காண, நாங்கள்
இன்னும் உற்சாகம் மேலிடத் தொடர்ந்து சென்றோம்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 64


பன்னிரண்டாயிரத்து ஐந்தடி உயரத்தில் அமைந்த பகுதி.
என்னிடம் ஆர்வமிருந்த அளவு உடலில் இல்லை சக்தி!

அங்கு சென்று பார்த்து வரச் சிறியவர் சென்றனர். தம்
பங்குக்குப் போட்டோ எடுத்து, முகம் மலர்ந்து வந்தனர்.

தோற்றத்தில் கம்பீரமாக 4800 கிலோமீட்டர் படர்ந்திருக்கும்
ஏற்றமுள்ள இந்த மலைத்தொடரில், Colorado பகுதியை,

அன்று கண்டு வந்ததால் மனம் மிக மகிழ்ச்சி கொண்டது.
என்றும் மனதில் நிலைத்திடும் நினைவாய் அது இருந்தது.

சிருஷ்டியின் இந்த அரிய அழகைக் காணுமிடத்தில்,
திருஷ்டி பரிகாரமாய் இங்கு சில இடங்கள் உள்ளன.

தூய்மையாகக் கழிவறைகள் அமைக்கும் இந்நாட்டில்,
தூய்மைக்கு மிக எதிரிடையாய் இங்கு கழிவறைகள்!

பெரிய பள்ளம் பாறைகளில் தோண்டி, அதன் மீது
பெரிய அளவு கழிவு இருக்கை வைத்து, தண்ணீர்

கொஞ்சம் கூட இல்லாது, 'டிரை க்ளீன்' செய்ய வைத்து,
அஞ்சும்படி அமைந்த இவற்றை என்னவென்று சொல்ல?

மூச்சுப் பயிற்சி பழகியதால், நான் அதனுள் பிரவேசிக்க
மூச்சுப் பிடித்து, சில நொடிகளில் வெளியே ஓடி வந்தேன்!

கைகளைச் சுத்தம் செய்யக் கிருமி நாசினி 'லோஷன்' ஒன்றை
கைக்கு எட்டும் தூரத்தில் நல்ல வேளை வைத்துள்ளார்.

நல்ல உணவகங்கள் உள்ள இடங்களை நாடி, அங்கு
நல்ல தண்ணீர் கிடைக்க, கைகளைச் சுத்தம் செய்தோம்.

சின்ன இந்த இடரைத் தவிர வேறு பல வசதிகள் அருமை.
எண்ண எண்ண மலைக்க வைக்கும் பனி மலையும் அருமை!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 65


உணவகமும், கடைகளும் ஒரே ஹாலில் இருந்ததால்,
உணவு உண்டபின், கொஞ்சம் ஷாப்பிங் செய்தோம்.

துணிகளின் விலை அதிகமாக இருந்தாலும், நல்ல
துணியில் செய்த பொம்மைகள் நன்கு கிடைத்தன.

காலை முதல் சுற்றிய களைப்பு மேலோங்கிவிட்டதால்,
மாலை நேரம் விரைவாய் வீடு நோக்கிப் பயணித்தோம்.

மேகம் சூழ்ந்து சிறிது நேரம் பாதையை மறைத்தாலும்,
வேகம் குறைவாய்ச் சென்றதால். பயம் மறந்து போனது.

பாதைகளைச் சீர் செய்ய, பெரிய இயந்திர வண்டிகள்;
பாதைகளை நிமிடங்களில் கெட்டியாகச் செய்கின்றன.

mail


சாலை போடுவதை 'போட்டோ' பிடித்ததும், வளைவுச்
சாலை தாண்டும் ஒரு பெரிய ELK நாங்கள் கண்டோம்.

வியப்பு மேலிட, நாங்கள் வண்டியை ஓரமாய் நிறுத்த, மிகச்
சலிப்புத் தோன்றியதுபோல். பின் வந்தவர் ஒலி எழுப்பினார்.

பல முறை அவ்வழி வந்து அவர் பழகியவரோ?
பல முறை மிருகங்களை அங்கு பார்த்தவரோ?

தாண்டிச் செல்ல வழி விடமுடியாத சாலையானதால், அவர்
வேண்டியபடி உடனே எங்கள் வண்டியைச் செலுத்தினோம்.

பனி மலையும், கற்பனைக் கோடு CONTINENTAL DIVIDE - ம்
இனிதே மனதை நிறைக்க, இனிய இல்லம் வந்து சேர்ந்தோம்.

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 66


எந்த இடத்தில் காமரா கொண்டு சென்றாலும், நான்
அந்த இடத்தில் எடுக்கும் படங்களின் எண்ணிக்கையால்,

காமராவின் பாட்டரி தீர்ந்து போகும். இம்முறையோ, என்
காமராவின் மெமரியே தீர்ந்து போனது, movie எடுத்ததால்!

மறுநாள் ஜுலை 29, Denver Zoo செல்ல வேண்டும்.
அதனால் காமராவில் 'மெமரி'யும் இருக்க வேண்டும்.

தங்கள் வேலைகளை ஒதுக்கிய சிறியவர், எனக்கு வேண்டித்
தங்கள் கம்ப்யூட்டரில், போட்டோ, மூவிகளை ஆல்பமாக்கினர்.

வெளியே பயணம் தொடங்கும் முன், நாங்கள் அதுவரை
வெளியே செல்ல அணிந்த துணிகளைத் துவைக்க வேண்டும்.

ஒண்ணரை டாலர் துவைக்க, பாஸ்டனில் தரவேண்டும். அதே
ஒண்ணரை டாலர் காசு, காய வைக்கவும் தரவேண்டும்.

இந்த ஊரில் இரு டாலருக்கே துவைத்துக் காயவைக்கலாம்.
எந்த ஊர் சென்றாலும், செய்யும் செலவுகள் மாறுகின்றன.

வரி விதிப்பும் ஒரே போல எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை.
வரி குறைந்த நியூ ஜெர்சி சென்றால், ஷாப்பிங் மறப்பதில்லை.

மதிய உணவு முடித்து, Zoo - வை நோக்கிக் கிளம்பினோம்.
போதிய ஓய்வு கிடைத்ததால், சக்தியுடன் விளங்கினோம்.

இடி மழை எச்சரிக்கை அன்று இருந்தாலும், அந்த
இடி மழையும் நட்புடன் இருப்பதால் பரவாயில்லை.

பலவித மிருகங்களைப் பெரிய பரப்பளவில் காணும்
ஒருவித ஆவலுடன் Zoo -வைச் சென்றடைந்தோம்.

கார்கள் பல நிறைந்து பார்க்கிங் வழிந்திருக்க, எங்கள் வேனைக்
கார்கள் நிறுத்தும் மேல் தளத்தில் வெய்யிலில் நிறுத்தினோம்.

சீனியர்களுக்கு டிக்கட் விலையில் தள்ளுபடி உண்டு - இங்கு
சீனியர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பும் மிக நன்று.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 67


சீனியர்களை மிக மதிப்பார் என்று சொன்னதால், இங்கு
சீனியர்கள் பெறும் வசதிகள் பற்றிச் சொல்லுகிறேன்.

'நடக்க முடியாவிட்டால் "சிவனே!" என்று ஒதுங்கி வீட்டிலேயே
கிடக்க வேண்டியதுதானே!' - என இம்மக்கள் நினைப்பதில்லை.

எல்லாச் சுற்றுலாத் தலங்களிலும், இவர்கள் மிகவும்
நல்ல முறையில் சீனியர்களைக் கவனிக்கின்றார்கள்.

குறைந்த விலை டிக்கட் தருவதுடன், அங்கு சுற்றி வரக்
குறைந்த வாடகையில் அவர்களுக்குச் சின்ன வண்டிகள்.

இயக்க மிக எளிதாய் இருக்கும் மோட்டார் பொருத்திய அவற்றை,
வியக்க வைக்கும் வண்ணம் இந்த முதியோர் செலுத்துகின்றார்.

அன்புடன் அழைத்துச் செல்லச் சிறியவர் இருந்தால், முதியோரைத்
தன்னுடன் அழைத்துச் செல்லச் சக்கர நாற்காலியும் தருகின்றார்.

வழிகாட்டிகளை நியமித்து, அவர்களைச் சில இடங்களில்
வழிகாட்டியாய் முதியோருக்கு அனுப்பியும் வைக்கின்றார்!

விமான நிலையத்தில் முதியோர் பெறும் உதவிகளுக்கு அளவில்லை.
விமானம் ஏறுவதற்கு முன் பெட்டிகளைச் செக்-இன் செய்வதும்,

சிறிய மோட்டார் வண்டியில் அவர்களை ஏற்றிச் செல்வதுமென,
சிறிய இடரும் ஏற்படா வண்ணம் நன்கு சேவை செய்கின்றார்.

எப்போதும் மெட்ரோ ரயில்களில், இடது ஓர இருக்கைகளைத்
தப்பாது முதியோர் இருக்கை என ஒதுக்கீடு செய்கின்றார்.

பேருந்துகள் சிலவற்றை 'மண்டியிடும் வண்டி' போலச் செய்து
பேருந்துப் படிகளை அழகாகத் தரையருகில் இறக்குகின்றார்.

தனியாக அனேக முதியோர்கள் இங்கு வாழ்வதால், இது போன்ற
மணியான ஏற்பாடுகளால் சின்ன சந்தோஷங்கள் பெறுகின்றார்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 68


இயற்கைக் காட்சிகள் மனதார அனுபவித்தோம் நேற்று.
இயற்கை சூழலில் உலவும் மிருகங்கள் காண்போம் இன்று.

உள்ளே நுழைந்தவுடன் உணர்ந்தோம், மதியப் பசியாற
உள்ளே உணவு தள்ளிய ஜீவன்களின் மயக்கத்தை!

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா?
உண்ட மிருகங்களும் மயங்குவது இயல்பல்லவா?

'இங்கு ஏன் எங்களை அடைத்தீர்கள்?' என்பது போன்று
அங்கு கண்ட பல உயிரினங்களின் கண்களில் கேள்வி!

தன் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தது ஒரு பறவை,
தன் சூரியக் கதிர் தங்கக் கொண்டை, செந்தாடி சகிதமாய்.

mail


வான் கோழிகள் இரண்டு, இறக்கைகளை அலகு கொண்டு
பேன் பார்ப்பதுபோல விடாது கீறி நின்றன! நடைபாதையில்,

'என்னைக் கூண்டில் அடைக்கவே முடியாது' என்ற வீராப்பில்
தன்னைப் படமெடுக்க விடாது சுற்றியது ஒரு அணில் ஒன்று.

வரிகள் அதன் மீது பதிமூன்று இருக்குமாம்! வெள்ளை
வரி், பிரவுனில் வெண்புள்ளியுடன் வரி என அடுத்தடுத்து.

பூமிக்குள் கூடுகள் அமைத்து, ஒளிந்து வாழும் இவற்றுக்கு
பூமியில் முதல் எதிரி, கூரிய நகங்கள் கொண்ட கரடிகளாம்.

mail


கூடுகளை மரத்தின் உயரத்தில் அழகுற அமைத்த குருவிகள்,
கூடுகளிலே அடங்கிக்கொண்டு, வெயிலில் வாராது ஒளிந்தன.

களித்த சில வரிக்குதிரைகள் சுற்றி வந்த பரப்பில், இயற்கை
அளித்த ஒரு விந்தையை நாங்கள் அறிந்து கொண்டோம்!

mail


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 69


வரிக்குதிரையும் நெருப்புக் கோழியும் ஒரே இடத்தில் இருந்தன;
நெருக்கடியைத் தவிர்க்க, பரஸ்பரம் உதவிக்கொள்ளுமாம் இவை!

தன் உயரத்தால் தூரத்தில் வரும் எதிரியைக் காணுமாம் ஒன்று. மற்றதோ
தன் நுண்ணிய வாசனை உணர்வாலே எதிரி வரவை உணருமாம்.

ஒன்றாய்ச் சேர்ந்து கூடிக் காட்டில் வாழும் இவை இரண்டும்,
நன்றாய் நல்ல நட்பின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.

'தொடாதே என்னை' என்ற எச்சரிக்கை வைத்த கூண்டில்
தொடவே பயம் தோன்ற வைக்கும் சிறுத்தை இருந்தது.

கண்ணாடியில் செய்த அந்தக் கூண்டில், உலவ இடமின்றித்
தள்ளாடி அது நடந்ததைக் கண்டு, மனம் கொஞ்சம் கலங்கியது.

பெரிய நிலப்பரப்பில் உலவ விட்டிருந்தாலும், புலி ஒன்று,
பெரிய கண்ணாடிச் சுவர் மீது தன் கை வைத்துப் படுத்தது.

சில குழந்தைகள் அதைத் தொந்தரவு செய்து எழுப்ப, அது
சில நிமிடம் உறுமிவிட்டு, மீண்டும் தன் தூக்கம் தொடர்ந்தது!

mail


ஒட்டகச்சிவிங்கிகள் சில அழகாக அணிவகுத்து நின்றன. குட்டி
ஒட்டகச்சிவிங்கி மீது புள்ளிகளும் மிக அழகாய் இருந்தன.

மிக உயர்ந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று, ஒரு மரத்தருகில் சென்று
மிக ரசனையுடன் அந்த மரப் பட்டைகளை நக்கி நக்கி மகிழ்ந்தது.

முதிர்ந்த அந்த மரப் பட்டையில், ஒருவேளை அது
உணர்ந்ததோ மிக நல்ல வெனிலா வாசனையை?

mail


திறந்த வெளியில் நடந்து போனது பெருமையுடன்,
சிறந்த அழகிய நம் நாட்டு தேசியப் பறவை ஒன்று!

தன் நண்பர்கள் எல்லோரும் வேறு இடத்தில் கூடியிருக்க,
தன் தோகை அழகை விரிக்காமலே காட்டி நடை போட்டது.

mail


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 70


தன் தோகை அழகு காட்டி நடந்த மயிலை அடுத்து வந்தது
'என் அழகிலும் குறைவில்லையே?', எனக் கேட்பதுபோல் வாத்து.

mail


கருப்புக் கழுத்துடன் சில; வெள்ளைக் கழுத்துடன் சில; அவை
விருப்பமாய் நீந்துவது தன் போல நிறம் கொண்ட இணையுடன்.

'ஒரே மாதிரி இறகு கொண்ட பறவைகள் கூடும் ஒன்றாய்', எனும்
ஒரு ஆங்கிலப் பழமொழி அப்போது எங்கள் நினைவில் வந்தது.

போலார் வெள்ளைக் கரடி, குகை போன்ற அமைப்பில் நடந்தது
'போலார் பகுதி செல்ல வழியுண்டோ?' எனக் கேட்பது போல!

mail


பெரிய கண்ணாடி நீர்த்தொட்டியில் அது நீச்சலடித்தால், அந்த
அரிய காட்சியை இறங்கிக் காண, படிகள் அமைத்துள்ளார்.

மிகப் பெரிய பாதங்கள் கொண்டவை மற்ற கரடிகளைவிட.
மிகக் குளிர்ந்த போலார் பகுதி ஐஸ் மேல் அவை நடப்பதால்.

மனிதன் நடந்தால் உடையும் மெல்லிய ஐஸின் மீது
எளிதில் நடந்து போகுமாம் இந்த போலார் கரடிகள்!

இயற்கையின் படைப்பு விநோதங்களில் இதுவும் ஒன்று,
இயற்கையாய் இவை வாழ ஏற்ற உடலமைப்பு என்று.

உயரம் சுமார் பத்து அடிகள் கொண்ட இதன் படத்தருகில், நம்
உயரம் அறிந்து கொள்ள ஓர் அடிக்கோல் நட்டு வைத்துள்ளார்.

கை கால்கள் நடுங்கக் கரடியை நோக்கும் நான், படக் கரடிக்குக்
கை கொடுப்பதுபோல் போஸ் கொடுத்து க்ளிக்கிக் கொண்டேன்.

அப்போதைக்கப்போதே அல்ப ஆசைகளைத் தீர்க்க வேண்டுமென
எப்போதும் எம் தந்தை சொல்வது நினைவில் நிழலாடியது.

இரண்டு குட்டி நரிகள், தாவி குதித்து ஓடிக்கொண்டு,
ஒளிந்து விளையாடுவதுபோல விளையாடி மகிழ்ந்தன.

செல்ல நாய்க்குட்டிகள் விளையாட்டு இதேபோலத்தானே! மனது
மெல்ல நினைத்தது 'எல்லாக் குட்டிகளும் ஒருபோலத்தானே!'

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 71


பெரிய நீர் நிலை ஒன்றில் நீந்தும் இரண்டு SEA LION - கள்.
பெரிய வித்தியாசமில்லை இவற்றுக்கும் SEAL - களுக்கும்.

காலை நேரம் இவற்றின் SHOW முடிந்து போனது. எனவே
மாலை சென்ற எங்களுக்குக் காணும் வாய்ப்புப் போனது.

செந்தாமரையும், அல்லியும் மலர்ந்த ஒரு குளத்தில்,
செம்மீன்கள் கூட்டமாக மேலும் கீழும் நீந்தின.

அடைத்து வைத்த மிருகங்கள் போல் கவலையே இல்லை;
கொடுத்து வைத்த ஜீவன்கள் இவை! நீந்துவதே வேலை.

சுறுசுறுப்பு இன்றிச் சோம்பலாய்க் கிடந்தன ஓணான் வகைகள்;
சுறுசுறுப்பாய் கொறித்துக் கொண்டு திரிந்தன அணில் வகைகள்.

இவைகளின் பற்கள் எலிகள், முயல்கள் போல இருக்குமோ?
இவைகள் கொறிப்பதை நிறுத்தினால், பற்கள் நீண்டு போகுமோ?

படை நடுங்க வைக்கும் பாம்பு வகைகள் பல உள்ளன;
இரை தின்ற மயக்கத்தால் சுருண்டு மரத்தில் கிடந்தன.

எத்தனை அழகிய வண்ணங்கள்! எத்தனை அழகிய 'டிசைன்'கள்!
அத்தனை அழகும், இயற்கை விஷப் பாம்புகளுக்கு அளித்தது.

mail


அழகும், கெட்ட எண்ணமும் கொண்ட மனிதரை, தவறாது
அழகும், விஷமும் கொண்ட பாம்பிற்கு நாம் ஒப்பிடலாம்!

பெரிய கண்ணாடித் தொட்டிகளில் வைத்துள்ளார்,
அரிய பல மீன் வகைகளை வரிசையாக - இதில்

பல வகைகளை BOSTON AQUARIUM வைத்திருக்கவில்லை.
சில வகைகளை மட்டுமே அடையாளம் காண முடிந்தது.

mail


கடல் ஆமைகள் பொறுமையாய் நீந்திப் போஸ் கொடுக்க, தம்
உடல் செடிக்குள் மறையுமாறு சென்றன புது நிறத் தவளைகள்.

எத்தனை குண வேறுபாட்டை மனிதர்களில் காண்கிறோம்!
எத்தனை குண வேறுபாட்டை உயிரினங்களில் காண்கிறோம்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 72


mail


பச்சை நிறச் சூழலில் அசைவே இல்லாமல் இருந்த
பச்சை நிறத் தவளையும் ஒரு அதிசயமே! பக்கத்தில்

குட்டி நீல நிறத் தவளை, போட்டோவில் சிக்காமல்,
எட்டிச் சென்று கல்லிற்குள் தன்னை மறைத்தது.

வயது முதிர்ந்த இரட்டைத் திமில் ஒட்டகத்தைக் காண
மனது நெகிழ்ந்தது! அதன் திமில்கள் மடிந்து தொங்கின.

வயதானவர்களுக்குக் கன்னம் இரண்டும் கீழே சரியுமே!
வயது செய்யும் கோளாறுகளில் இல்லை அதிசயமே!

இளமை துள்ளும் இன்னொரு ஒட்டகமும் இருந்தது.
முதுமை தள்ளும் ஒட்டகத்தின் அருகிலே நின்றது.

வெள்ளி மூக்குக் குதிரை என்றால் கழுதையைக் குறிப்பது;
வெள்ளி மூக்குக் கொண்ட காட்டுக் குதிரை இங்கு உள்ளது.

mail


கருப்பு நிற சடை கொண்ட காட்டெருமைகள் நின்றன.
விருப்பமுடன் போஸ் கொடுத்து 'காமரா'வில் சிக்கின.

மண்ணும் புழுதியும் உடல் மீது இல்லாவிட்டால்,
இன்னும் கருமை நிறம் கூடி இருந்திருக்கும்.

mail


ஒற்றைத் திமில் ஒட்டகம், ஒருவர் துணையுமின்றி,
ஒற்றையாகச் சுற்றிச் சுற்றி அங்கு வலம் வந்தது.

இளைய காட்டுக் காளையும், பசுவும், மிகப் பெருமையாய்
இனிய தங்கள் கன்றுக் குட்டியுடன் பாசமுடன் நின்றன.

ஒவ்வொரு ஜீவனுக்கும் பெயரும், வயதும் குறித்து
ஒவ்வொரு இடத்திலும் அறிவிப்பு வைத்துள்ளார்.

ஒரு நாள் முழுதும் அங்கு சுற்றி வந்தால்தான், நமக்கு
இதுபோல் பல விஷயங்களும் குறிக்க நேரமிருக்கும்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 73


மலைச் சிங்கமொன்று இருந்தது அடுத்த கூண்டில் - கூண்டு
மலை போல அமைத்திருந்தும், அதன் கண்களில் சோகம்!

பெருகி வரும் ELK களின் எண்ணிக்கை குறைக்க
உறுதி தரும் இந்த மலைச் சிங்கக் கூட்டங்கள்.

இயற்கையே காட்டு விலங்குகளின் கட்டுப்பாட்டுக்கு
இயற்கையான எதிரிகளைப் பார்த்து அளிக்கிறது!

வேட்டையாடும் காலமாகச் சில மாதங்களை அறிவித்து,
வேட்டைக்காரர்கள் ஒவ்வொருவரும், தம் துப்பாக்கியால்

ஒரு ELK கைக் கொல்ல உரிமை அளிக்க, DELAWARE - இல்
ஒரு சட்டமே இருப்பதாக அறிந்தோம்! இல்லையெனில்,

தங்கள் இனம் பெருக்கி, நாடு முழுதும் பரவி, அவைகள்
மக்கள் இனத்திற்கே பலவிதத் தொல்லைகள் தருமாம்!

சடை எருமை YAK ஒன்று, தண்ணீரே காணாத அழுக்குச்
சடை தொங்க, காச்சாங்குறிச்சியாகச் சுற்றி வந்தது.

'காச்சாங்குறிச்சி' என்றால் புரியாதவர்களுக்கு; அந்தக்
காச்சாங்குறிச்சி ஊரில் கடவுளுக்கு அபிஷேகமே கிடையாது!

கல் மீது வளைந்த கொம்பு கொண்ட ஆடு ஒன்று - 'என்
சொல் பேச்சைக் கேட்கிறீர்களா?' எனக் கேட்கும் பாவனையில்,

அங்கு நம் அரசியல்வாதி மேடை போட்டுப் பேசுவதுபோல்,
இங்கு ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்து, நிமிர்ந்து நின்றது.

mail


பறவைகள் விதவிதமாய்ப் பல கூண்டுகளில் அடைந்து,
பல வித இனிய ஓசைகளை எழுப்பியபடிப் பறந்தன.

வெள்ளைக் கிளிகள் இரண்டு, இந்த உலகையே மறந்து,
கொள்ளை அழகாய்க் கொஞ்சும் கிள்ளை மொழி பேசின!

mail


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 74


பறவைச் சிறகுகளில் என்னென்ன அதிசயங்கள்! வண்ணக்
கலவை பல நிறைந்து காட்டிடும் பல்வேறு ஜாலங்கள்!

'காட்டின் ஆபரணங்கள்' என்ற Jewels of the forest பகுதி.
காட்டில் வாழும் வண்ணப் பறவைகள் நிறைந்த தொகுதி.

முதுமையே நெருங்க இயலா இளந்தளிர்த் தோற்றம்;
பதுமைகளாய் அமர்ந்து தத்தம் சிறகு அழகைக் காட்டும்!

முத்தான படங்களில் அந்த அழகைச் சிறைப் பிடித்தோம்;
புத்தாண்டு வாழ்த்துக்கள் செய்ய அவற்றைச் சேகரித்தோம்.

mail


mail


கெட்டித் தோல் மிருகங்கள் இருந்த கட்டிடப் பகுதியை
எட்டியதும், உண்ட உணவு வெளியே வர முயன்றது!

mail


குண்டோதரன்போல நீர்யானை உணவை உள்ளே தள்ள,
உண்ட மயக்கத்தில் காண்டாமிருகம் கீழே விழுந்து கிடக்க,

தம் கழிவுகளை யானைகள் தம் உடலெங்கும் பூசியிருக்க,
தன் மேல் சுண்டெலி ஓடுவது தெரியாது Tapir உறங்க,

மறுபடியும் பலன் கண்டோம், பிராணாயாமப் பயிற்சியில்;
ஒரு நொடியும் வீணாக்காது, ஓடி வந்தோம் வெளியில்!

இந்தப் பக்கம் சுத்தம் செய்ய யாரும் வரவே மாட்டாரோ?
வந்து உணவை வைத்துவிட்டு, வெளியே ஓடிவிடுவாரோ?

நேரக் குறைவினால் மனித மூதாதையர்களை காண
நேரம் கிடைக்காது, வேகமாக நடந்தோம். மறுபடியும்

திறந்த வெளியில் கண்டோம் இரு சிறுத்தைகளை. வெளியே
திரிந்த ஒன்று போட்டது ராஜ நடை; மற்றதற்கோ மயக்கநிலை.

வேலியே போடாமல் சிறுத்தைகளை விட்டுள்ளார்!
வெளியே பாயாதிருக்க அந்தச் சின்ன அகழி போதுமோ?

தூறல் மழை பெய்து, கொஞ்சம் குளிர் ஆரம்பித்தது. வெகு
தூரம் நடந்த களைப்பினால் நல்ல பசியும் ஆரம்பித்தது,

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்...... 75

மலை போன்ற பல கல் அமைப்புக்கள்! அவற்றில்,
இலை தழைச் சூழலின்றிப் பல வித ஆடுகள்.

இரு குட்டிகள் இருந்த ஆடு, முட்டும் பயிற்சியை
இரு குட்டிகளும் செய்யும்போது, பார்த்து மகிழ்ந்தது.

சிறு குழந்தைகளிடம் 'யானை முட்டு, முட்டு' எனக் கூறி,
சிறு விளையாட்டு விளையாடுவது நினைவில் வந்தது.

mail


mail


வெண்மையான ஆடு ஒன்று, தான் ஈன்ற குட்டியை,
பெருமையாக அருகில் வைத்து, கற்கள் மேல் கிடந்தது.

சிறகில் அடிபட்ட பெலிகன் பறவை ஒன்று, தன்
சிறகு பார்த்து மனம் உடைந்து, பாவமாக நின்றது!

mail


mail


'கரடி குகை' அடுத்ததாயிருக்க, அதனருகில் உள்ள
கரடிப் பாத மாதிரி பார்த்து, உடல் வியர்த்துப் போனது!

கரடியின் வெட்க சுபாவம் மனிதருக்கு நல்லது! அது
ஓரடி மெல்ல வைத்தாலே மனித உடல் தாங்காது.

குகை வாசலில் கயிற்றாலான பெரிய ஊஞ்சல் இருந்தது;
மிகையான அதன் எடை தாங்கும் அமைப்பாய் இருந்தது.

பல நண்பர்களைக் கண்டதுபோல் மனம் ஆனந்தித்தது;
சில நிமிடத்தில் எங்கள் கார் வீடு நோக்கிப் புறப்பட்டது.

காலாற நடந்து சென்று வெகு தூரம் சுற்றியதால் எழுந்த
பசியாற எல்லோருக்கும் SNACK வேண்டியிருந்தது.

DRIVE-IN TACO BELL வழியில் கண்டவுடன், உடனே உள்ளே
டிரைவ் செய்து சென்று, அந்தச் 'சப்பாத்தி ரோல்' வாங்கினோம்.

இந்த முறை என் 'காமரா பாட்டரி' மட்டும் தீர்ந்தது;
எந்த 'மூவி'யும் எடுக்கவில்லை! 'மெமரி' தீராது தப்பித்தது.

இனிய இல்லம் சேர்ந்தவுடன் சூடான 'டின்னர்' இருந்தது;
புதிய TOFU அரைத்துப் விட்ட அவியல், ருசியாய்க் கிடைத்தது!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 76

'வீகன்' (vegan) என்போர் பால் தயாரிப்புகளைத் தவிர்த்து,
வேஜிடேரியனை விட நாங்கள் மேலானோர் என்றிடுவார்.

Animal product என்று முத்திரையிட்டு, மிருகங்களின்
தோல் தயாரிப்புகள் முதல், தேனீயின் எச்சில் தேன் வரை,

அனைத்தையும் கையால் கூடத் தொடுவதில்லை; மேலும்
அனைவரும் விரும்பும் பட்டுத் துணியும் அணிவதில்லை.

சென்னையில் மாமிகள் எல்லோரும் இவ்வாறு மாறினால்,
சென்னையில் பட்டுத் துணிக் கடைகளெல்லாம் 'கோவிந்தா'!

ஒரு விதத்தில் வீகன்கள் உயர்ந்தவரே! சோயாவை
ஒரு மிகப் பெரிய பொருளாக இன்று மாற்றிவிட்டவரே!

சீஸ் கட்டி இங்கு நிறைய வகை உணவில் இடுவதால்,
சீஸ் போல சோயா பாலில் Tofu வைச் செய்கின்றார்.

சிறு வயதில் பால் தயிரே விரும்பி உண்ட N R I சிலர்,
பெருமளவு மாறி, இன்று வீகன்களாய் இருக்கின்றார்.

அடுத்த பயணமாக அரிசோனாவுக்குச் செல்லவேண்டும்;
எடுத்து வைத்த பொருட்களைச் சரிபார்த்த பின், நான்

எடுத்துக்கொள்ள மறந்த, 'வீட்டு மாங்காய்' ஜாம் கொஞ்சம்
எடுத்து வைத்தேன் கைப்பையில், விமான விதிகள் மறந்து!

பிரியா விடை பெற்று, வாடகை வண்டி திருப்பிக் கொடுத்து,
உரிய நேரத்தில் சென்றோம், Phoenix -இல் விமானம் ஏற.

'செக் இன்' செய்ய 'ஸ்டயிலாய்' நான் செல்ல, நெடிய ஒரு
'செக் இன்' அதிகாரி என் கைப்பையை எடுத்து வந்தார்.

சரியாகக் குறி வைத்து 'ஜாம் பாட்டிலை' எடுத்தார்; நான்
பரிதாபப் பார்வை பார்த்தும், அதைக் கொடுக்க மறுத்தார்!

புரியுமா அவருக்கு அந்த 'ஜாம்' செய்ய நான் பட்ட பாடு?
தெரியுமா அதிலுள்ளது என்னவர் பறித்த மாங்காய் என்று?

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 77

வயது முதிர்ந்த மூதாட்டி ஜன்னல் இருக்கைக்கு வர,
வயதின் காரணமாய், அடிக்கடி எழுந்து போவாரோ என

எண்ணி, கனிவுடன் நான் தந்த ஓர இருக்கையை மறுத்து,
என்னிடம் உள்ள பெட்டியில் உள்ளது என் நாய் என்றார்!

என்னவர் அந்தப் பெட்டியை மேலே வைக்க முயன்ற
பின்னர்தான் பார்த்தார், அதில் உள்ள ஜீவன் ஒன்றை!

பெட்டியை மூதாட்டி வாங்கித் தன் காலடியில் வைத்தார்;
குட்டி நாயோ அதிலிருந்து ஒரு சத்தமும் போடவில்லை!

ஒரு வாய்த் தண்ணீர் கூட அந்த மூதாட்டி கேட்கவில்லை;
இரு முறை ஜூஸ் குடித்தும், எங்களுக்கோ பசித் தொல்லை.

நாலு மணி நேரத்திற்கும் மேல் உள்ள பயணத்திலும்,
நாலு டாலர் Snack கூட விமானத்தில் தருவதில்லை.

புத்தகம் ஒன்றைப் படித்தபடி மூதாட்டி அமர்ந்தார்; அவரால்
எத்தகைய தொல்லையுமில்லை; எழுந்திருக்கவேயில்லை!

தெளிந்த வானத்தில் விமானம் பறந்து சென்றது;
குனிந்து பார்த்தால், தரையில் வெறுமை தெரிந்தது.

பச்சை காலிபிளவரைக் கிள்ளிக் கவிழ்த்ததுபோல் காணும்
பச்சை நிற மரங்கள் இந்தப் பகுதியில் காணவில்லை.

மணல் நிறைந்த பாலைவனம் போல் வறண்ட பகுதிகள்;
மணல் குன்றுகள் போலச் சுற்றிலும் மலைத் தொடர்கள்.

வெய்யில் சூட்டில் அரிசோனா சென்னையை மிஞ்சிவிடும்.
வெய்யில் தாக்கத்தால் நம்' பிரவுன் கலரும்' கருப்பாகிவிடும்.

கோடைக் காலம் ஆரம்பம்; சூட்டின் அளவு கொஞ்சமும்
சோடை போகாது; நூற்றிப்பத்துகளில் இருக்கும். என்றாலும்,

அதிசயங்கள் நிறைந்த Grand Canyon காண வேண்டுமே!
புதிய வரவான அக்காவின் பேத்தியைப் பார்க்க வேண்டுமே!


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 78

விமான நிலையம் PHOENIX - இல் மிகவும் பெரியது;
விமானம் தரை இறங்கியதும், நீண்ட நடை உள்ளது.

நேரம் கடத்தாமல், ஷட்டிலில் சென்று, வாடகைக் கார் எடுத்து,
வேகம் குறைக்காமல் GRAND CANYON நோக்கி விரைந்தோம்.

mail


ஒரு ஏர்போர்ட்டில் கார் எடுத்து வேறு ஏர்போர்ட்டில் தந்தால்,
ஒரு வழிச் செலவே தரவேண்டும் முன்பு! நிறையக் கார்களை

ஒரு பெரிய வண்டியில் ஏற்றிக் கடத்திச் செல்வார்கள்
மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கே! ஆனால் இப்போது

இப்போது இருவழிச் செலவும் கேட்பதால் இது போல வண்டிகள்
இப்போது அரிய காட்சியாக உள்ளது பல இடங்களில் - இங்கோ

பல முறை இவ்வாறு கார்கள் கொண்டு செல்லக் கண்டோம்.
பல பணக்காரர்கள் வந்து போகும் மாநிலமல்லவா? ஆனால்

பலர் வறுமையில் வாடுவதையும் வழியிலே கண்டோம்;
பலர் பழைய வேன்களிலேயே குடியிருப்பது கண்டோம்.

ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததுதானே இவ்வுலகம்?
போற்ற முடியாத இந்நிலையால் மனம் கசந்தது!

mail


கள்ளிச் செடிகளில் ஒரு வகை நீண்டு வளரும். அந்த
முள்ளுச் செடிக்கு ஒருவித விசேஷத் தன்மை உண்டாம்.

ஒரு அடுக்குக் கிளைகள் தோன்ற அறுபது ஆண்டுகளாகும்;
இரு நூற்றாண்டுகள் வாழும் கள்ளிகளும் இங்கு உண்டாம்!

ஆனால் கடல் மட்டத்திற்கு மிகவும் மேலுள்ள இடங்கள்
போனால், இவைகள் வளருவது மிகவும் கடினமாம்.

நீண்ட கள்ளிச் செடிகள் அடர்ந்து இருந்த நிலங்கள் தாண்டி,
நீண்ட பசும் மரங்கள் நிறைந்த நிலங்களும் தாண்டி,

வெற்றிடமாய்ப் போன தரிசு நிலங்களும் சில தாண்டி,
வெற்றி பெற்ற களிப்புடன் GRAND CANYON அடைந்தோம்!

 

Latest ads

Back
Top