• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவாசகமே மணி வாசகம்

  • Thread starter ramachandran girija
  • Start date
Status
Not open for further replies.
ஒருவர் இவ்வுலக வாழ்நாளில் செய்யும் நன்மை-தீமைகளின்(வினை) பயன் அவரை மட்டுமே சேரும். குழந்தைகளுக்காகவும், வாழ்க்கைத் துணைக்காகவும் சொத்துசேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள், வினைகள் சேர்வதைக் கவனிப்பதில்லை. அறமற்ற வழியில் ஒருவர் சொத்து சேர்க்கும்போது, அதனால் விளையும் தீவினைகள் அவரிடம் தானாகவே வந்துசேரும். துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும், சுற்றமும், நட்பும் ஒருவரின் வினைப்பயனில் பங்கெடுக்க முடியாது; ஒருவர் உண்ட உணவை எப்படி வேறொருவர் செரிமானம் செய்ய முடியாதோ, அதைப் போன்றதே வினைப்பயன்.

 
ஒரு உயிரின் வினைப்பயனை வேறு உயிர்கள் பங்கிட இயலாது. ஆதலால், மணிவாசகர் உயிரை ‘ஆதம் இலியான்’(ஆதரவற்றவன்) என்கிறார்; கடலிற்பெருகிய நஞ்சை உண்ட என்னுடைய பரம்பரனே! வினைப்பயனால், சுற்றத்தார் யார் துணையும் இல்லாமல் ‘பிறப்பு இறப்பு’ என்னும் தப்ப முடியாத அருநரகில் அழுந்தி மூழ்கிக்கொண்டிருந்த அடியேனுக்கு, ஐயோ என்று இரங்கி, உன் திருவடி மலர் காட்டி ஆட்கொண்டது உனது திருவருள் அல்லவா என்று பரவசம் அடைகிறார் மணிவாசகர். (ஓதம் மலி - கடலிற்பெருகிய, ஆர் தமரும் இன்றியே - சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே)

ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,

ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு, `ஆ! ஆ!' என்று,
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம் பரனே!
- திருவாசகம்:38-3
 
இங்கு பெருமான், மிகவும் துன்பமுடைய பிறப்பு இறப்புகளையே நரகம் என்று கூறினார். அழிக்க வந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்களைக் காத்ததைபோல, பிறவியாகிய நரகத்தில் விழுந்து அழுந்துகின்ற என்னையும் திருவடியைக் காட்டிக் காத்தது உன் திருவருளே என்று வியக்கிறார்.

 
வாழ்க்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப, பேரன்போடு செய்த மக்கள் தொண்டையே சிறப்பித்து, நாயன்மாராக உயர்த்திய இறைவன் தரும் செய்தி அன்புடன் செய்யும் மக்கள் தொண்டே என்னை அடையும் வழிஎன்பதே.
திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த விஸ்வரூப இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.
 
உடல், பொறி, புலன்களில் கட்டுப்பட்டு, புறஉடலையே முழுவதும் பார்க்கமுடியாத நமக்கு, முகம் பார்க்கவே ஒரு நிலைக்கண்ணாடி தேவை; நம்உயிருக்கோ, தன்னை அறிய குரு என்னும் அறிவுக்கண்ணாடி தேவை; உடல் முழுவதையும் காண, முன்னும்,பின்னுமாக இரண்டு நிலைக்கண்ணாடிகள் தேவை; மனிதன் முழுமை பெற, குருவருளும், இறையருளுமான இரண்டு அறிவுக்கண்ணாடிகள் வேண்டும். மணிவாசகரோ, இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு பெற்றார். கருவிலேயே இறையருள்பெற்று, சிறந்த கல்வி, கேள்வியறிவும், முதலமைச்சராக உலக அனுபவமும், கவிஞராகப் படைப்பனுபவமும் கொண்டு திகழ்ந்த மணிவாசகரைத் திருவாசகம் தேர்ந்தெடுத்தது.

 
இறைவனின் திருக்காட்சி

மணிவாசகரை எதிர்பார்த்துத் திருப்பெருந்துறையில் மனிதவடிவில் குருவாகக் காத்திருக்கிறான் இறைவன். படை, பரிவாரங்கள்சூழ, குதிரை வாங்குவதற்காக திருப்பெருந்துறை வந்த பாண்டியநாட்டின் முதலமைச்சர் திருவாதவூரர், நொடிப்பொழுதில் மணிவாசகரானார்.

கருணையின் பெருமை கண்டேன் காண்க

புவனியில் சேவடி தீண்டினான் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க – (அண்டப்பகுதி:60-63)

தவத்தால், அன்பால், முயற்சியால் தேடிச்சென்று அடையவேண்டிய பொருளே
இறைவன் என்று அதுவரைக் கருதியிருந்த கல்விமானான முதலமைச்சர் திருவாதவூரார், கருணையால் இப்பூமியில் தன் திருவடிகளைப் பதித்த பரம்பொருளை, ‘சிவபெருமான்’ என்று ஒருவாறு தெரிந்து, தான் தேறியதாகக் கூறுகிறார்.


 
முதலமைச்சர் மாணிக்கவாசகரானார்

குருவாகத் தோன்றிய இறைவனை மனிதரென்றே முதலில் கருதிய முதலமைச்சர் திருவாதவூரர், அக்குருவின் ஈர்ப்புச்சக்தி தம்மை முழுவதும் ஆட்கொள்வதை உடனடியாகக் கண்டுகொண்டார்; இத்தகைய ஆற்றல்மிக்க ஈர்ப்பு அதிர்வுகளை எந்த மனிதனாலும் உருவாக்க இயலாது என்பதை உள்ளுணர்வினால் உணர்ந்துகொண்டதால், ‘சிவன் என யானும் தேறினேன் காண்க’ என்றார். இறைக் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு, குருவின் தாள்பணிந்து, உபதேசம் பெற்று மாணிக்கவாசகர் ஆனார். காளைவாகனமுடைய, திருப்பெருந்துறையில் உறையும் மனவாசகம் கடந்த இறைவன், மணிவாசகருக்குத் தன்னைத் தான் என்பது அறியாது, பகல் இரவுஆவதும் அறியாது, உன்மத்தனாக்கி ஆண்டுகொண்டார்; இந்த முதல் அனுபவத்தை உயிருண்ணிப்பத்துப் பதிகத்தில் ஒரு திருவாசகம் அழகாகக் கூறுகிறது.:

 
எனை நான் என்பது அறியேன்; பகல் இரவாவதும் அறியேன்;
மனவாசகம் கடந்தான் எனை மத்தோன் மத்தனாக்கிச்
சினமால் விடைஉடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனைச் செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே! – திருவாசகம்: 34-3

மணிவாசகரின் திருவாசகம், பதிகத்துக்குப் பத்துப்பாடல்கள் என்றில்லாமல், ஊற்றாகப் பெருக்கெடுத்த மணிவாசகரின் இறையனுபவங்களுக்கு ஏற்ப, பத்துப்பாடல்களுக்குக் குறைவாகவோ, பத்துப்பாடல்களாகவோ, பத்துக்கும் அதிகமாகவோ அமைந்தன.
கல்வி, கேள்வி, உலக அறிவு போன்றவற்றால் உருவான ‘திருவாதவூரர்’, இறையன்பில் கரைந்து, காணும் அனைத்திலும், நீக்கமற நிறைந்த கடவுளைக் காணும் மணிவாசகரானார். இறைவனைப் பூசிக்க மலர் பறிக்க முற்பட்டால், ‘பார்க்கின்ற மலர் ஊடும் நீயே இருத்தி’ என்ற தாயுமான சுவாமிகளின் நிலையும், ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்ற பாரதியின் நிலையும் இதற்குச் சான்று.

 
இறைவன் பெரிதினும் பெரியவன்

குளியலறையில் இருந்தால், படுக்கையறையைப் பார்க்க முடியாத ‘நான்’ என்னும் உணர்வுடைய உடலில் வாழும் உயிருக்குப் புலனாகாதவன் இறைவன். திருவடிப்பேறு கிட்டி, இறைக்காட்சி வசப்பட்டதும் இறைவன் மட்டுமல்ல, இப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களுமே, உள்ளும் புறமுமாக, ஒரே நேரத்தில் மணிவாசகர் கண்களுக்குப் புலப்படுகின்றன. இதுவரை அவர் கண்ணால் கண்டுஅறிந்திராத, தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்தில் (Ever-Expanding Universe), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவப் மிகப்பெரிய பெருங்கோள்களைத் காண்கிறார்; அக்கோள்கள் ஒன்றனை ஒன்று மோதிக்கொள்ளாமல், இயற்பியல் விதிகளின்படி, அவை, அவற்றின் நியமப்பாதையில் இயங்கும் அழகு, கண்ணுக்கு வளமையான காட்சி என்று வியக்கிறார் பெருமான்.

 
எம் இறைவனின் விஸ்வரூப தோற்றத்தை ஒப்பிட, அத்தகைய மாபெரும் பிரபஞ்சம் என்னும் அண்டப்பகுதியில் மிதக்கும் பிரம்மாண்டமான உருண்டைவடிவக் கோள்கள் மிகச் சிறிய துகள்களாகக் காட்சியளிக்கின்றன; எதைப்போல் என்றால், ஓலைவேய்ந்த வீட்டுக்கூரையின் சிறியதுளை வழியே நுழையும் சூரியஒளிக்கற்றையில் மிதக்கும் மிகநுண்ணிய தூசுகளைப்போல மிகச்சிறியனவாகத் தெரிகின்றன என்கிறார் பெருமான். பெரிதினும் பெரியவனான பரம்பொருளாம் சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய உருண்டைவடிவக் கோள்களுடன் ஒப்பிட்டு அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் மாணிக்கவாசகர்.
 
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழைக் கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின் – (அண்டப்பகுதி:1-6)

நாம் வாழும் பூமிப்பந்து உள்ளிட்ட ஒன்பது கோள்களைக் கொண்ட சூரிய மண்டலத்தைப் போல, பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் பால்வெளியில் உள்ளன என்றும், பால்வெளியைப் போல் பல்லாயிரக்கணக்கானவை அண்டவெளியில் உள்ளன என்றும், அண்டத்தின் விளிம்பு, ஒளி அலைகளின் வேகத்தைவிட எல்லாத்திசைகளிலும் விரிவடைந்துகொண்டே செல்வதால் விரிவடையும் அண்டம் என்றும் இன்றைய வானியல் அறிவியலாளர் கூறுகின்றனர். இத்தகைய வியத்தகும் வானியல் அறிவியல் உண்மைகளை, போகிற போக்கில் மிக எளிதாகக் கூறிவிட்டார் மாணிக்கவாசகர்.

 
அண்டப்பகுதி இவ்வாறு விரிந்து செல்வதை மணிவாசகப் பெருமான் ‘பிறக்கம்’ என்றும் ‘விரிந்தன’ என்றும் குறிப்பிட்டார். எதை அறிந்தால் அனைத்தையும் அறிவோமோ, அதை அறிந்த மணிவாசகருக்கு, எந்த அறிவியற் கருவியின் உதவியுமில்லாமல் இம்மாபெரும் காட்சியை நுட்பமாகவும், விரிவாகவும் நான்காம் நூற்றாண்டிலேயே கூறமுடிந்தது. வாலறிவனாம் இறைவனை அறிந்த மணிவாசகருக்கு இது இயல்பாக முடியக்கூடியதே! திருவாசகத்தின் இந்தப் பதிவை வைத்துத் தமிழர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே வானியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் அறிந்து வைத்திருந்தார்கள் என்று கருதுவது தவறாகவே முடியும்.

 
எல்லைகாண முடியாததாய் விரிந்துகொண்டே இருக்கும் பேரண்டப்பகுதியின் பருண்மை வடிவத்தை உலகோருக்குக் காட்சிப்படுத்திய மணிவாசகப்பெருமான், அத்துணைப்பெரிய பேரண்டக் கோள்களும் நுண்ணிய தூசுகளைப் போல சிறியது (இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய’) என்று சொல்லுமளவு ஒப்பீட்டில் இறைவன் பெரியவனாக இருக்கிறான் என்று பிரபஞ்சத்தினும் பெரிதான இறைவனின் வடிவத்தை நமக்கெல்லாம் அற்புதமாகக் காட்சிப்படுத்துகின்றார். சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியின் பல்வேறு பரிமாணங்களையும் தொடர்ந்து தரிசிப்போம்.
 
ல்லாம் வல்ல இறைவன் இப்பிரபஞ்சத்தில் மிகப்பெரிதினும் மிகப்பெரியவனாகியும், மிகமிகச் சிறியதைக் காட்டிலும் நுண்ணியனாகவும் உள்ளதையும் ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட மணிவாசகர், தம்முடைய அனுபவக் காட்சியை அற்புதமான அறிவியல் சொல் வளமையால் நமக்கு விளக்குகின்றார். இறையருளால் இறைக்காட்சி வசப்பட்டதன் விளைவாக, இறைவனும், தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்திலுள்ள (Ever-Expanding Universe with innumerable Galaxies), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவ மிகப்பெரிய பெருங்கோள்களும், உள்ளும் புறமுமாக ஒரே நேரத்தில் அவர் கண்களுக்குப் புலப்பட்டதால், இரண்டையும் ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தும் மணிவாசகரின் அறிவியல் சொல்லாடல்கள் நம்மை மீளமுடியாத வியப்பில் ஆழ்த்துகின்றன.

 
இயற்பியலைக் கடந்த விண்பகுதியும் மாயையும்

நாம் காணும் மாபெரும் கோள்கள், அண்டப்பேரொலியின் விளைவாகக் காணும் பருப்பொருளாக உருவாகும் முன்பு, எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமும் உடைய காணஇயலாத நுண்ணிய(சூக்கும) நிலையில், இயற்பியல் விதிகளுக்கு உட்படாத பகுதியாக இருந்தது. இத்தகைய காணஇயலாத அனைத்திற்கும் தோற்றுவாயான நுண்ணிய(சூக்கும)ப் பகுதியை ‘மாயை’ என்று சைவசித்தாந்தம் கூறும். மாயை என்னும் மூலப்பொருளில், அணு நிலைக்கு முற்பட்ட, இயற்பியல் விதிகளுக்கு உட்படாத, காணவியலாத, இத்தகைய பகுதிகளும் கருந்துளைகளும் எப்போதும் உள்ளன.

 
கோள்கள் ஒன்றினையொன்று மோதிக்கொள்ளாமல், அவையவற்றின் நியமப்பாதையில் இயற்பியல் விதிகளின்படி இயங்கும் பிரபஞ்சப்பகுதியை ‘அண்டம்’ என்று சொல்லாமல் ‘அண்டப்பகுதி’ என்று மிகச் சரியாகப் பெயரிட்டு அழைக்கும் மணிவாசகரின் நுண்ணறிவு அபாரம். அவர் இறைவனிடம் பெற்ற ‘வாலறிவு’ என்னும் முற்றறிவைக் கண்டு வியந்தல்லவா போகிறோம் நாம்! காணும் நிலையில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பெரிய மாபெரும் கோள்கள், இறைவனை ஒப்பிடும்போது, சிறிய அணுக்கள் போன்று காட்சியளிப்பதால், இறைவன் மிகப்பெரியவன் என்று நிறுவுகிறார் மணிவாசகர்.

 
நுண்மையிலும் நுண்ணியனான இறைவனின் தரிசனம்
இனி, பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.
வேதியன் தொகையுடன் மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து
எறியது வளியில்
கொட்கப் பெயர்க்கும் குழகன்; – திருவாசகம்:அண்டப்பகுதி-7-12
 
1968 முதல் 1995 வரை ஹுபலே, ஸ்டீவன் ஹாக்கின்ஸ், ரோகர் பென்ரோஸ், எல்லிஸ், டேவிட் சிரம் போன்ற அறிவியலாளர் கண்டுபிடிப்புகளால் அனைத்துக் கோள்களும், விண்மீன்களும் அவைகளின் காலமுடிவில் காணஇயலாத பழைய நுண்ணிய நிலையை மீண்டும் அடையும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டது. பரமாணு என்னும் கடவுள்துகள்(God Particle) குறித்த கோட்பாடும் பெறப்பட்டுவிட்டது.

 
கோள்களும், விண்மீன்களும் தோற்றத்திற்கு வருவதும், இயற்பியல் விதிகளின்படி அவை இயங்குவதும், அவைகளில் உயிர்கள் உடல்வாழ்வுக்குத் தோன்றுவதும், வாழ்வதும், பின் மடிவதும், ஊழிக்காலமுடிவில் அக்கோள்களும், விண்மீன்களும் மீண்டும் அழிவதுமான பிரபஞ்சச் சுழற்சியை (தோற்றநிலையிலிருந்து காணஇயலாத நுண்ணியநிலை அடைதல்), இறைக்காட்சி கிட்டிய மாணிக்கவாசகர் அருமையாக விவரித்துள்ளார். நான்முகன், படைத்தலையும், திருமால் காத்தலையும் செய்கின்றனர். கணக்கிலடங்காத உலகங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளமையால், நான்முகர்கள் பலரும், திருமால்கள் பலரும் உள்ளனர் என்கின்றார் மணிவாசகர்.

 
நூறு கோடி பிரமர்கள் நுங்கினர்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே! – திருமுறை:5:100-3
என்று தேவாரத்தில் இச்செய்தியை அப்பர் பெருமான் காட்சிப்படுத்தியுள்ளார்.
 
ஊழிக்காலத்தில் அனைத்தும் இறைவனிடத்தில் ஒடுங்குதல்
பெரும் எண்ணிக்கையிலான பிரமர்களும், அவர்கள் கூட்டத்திற்குத் தலைவரான திருமாலும், அவர்கள் செய்யும் படைத்தலும், காத்தலும் ஒருசேர முடிவுக்கு வரும் மகாப் பேரூழிக் காலமும், பேரூழிக்கால நீக்கமும், மீண்டும் பிரமர்களையும், திருமால்களையும் தானே படைத்து, அவர்கள் மூலம் படைத்தலும், காத்தலும் செய்தல் என மாறி,மாறிச் சுழலச் சுழற்றும் குழகன்(இளையோன்) என்று இறைவனின் நிலைத்த, நுண்ணிய, எல்லையற்ற ஆற்றலை விவரிக்கிறார் மணிவாசகர். இரவு, பகல் போன்ற கால தத்துவத்துக்கு உட்படாத இறைவன் என்றும் மாறாத இளமை நிலை உடையவன் என்பதால், ஊழிக்காலத்தில் பிரமர்களையும், கூட்டத் தலைவரான திருமால்களையும் அழிக்கும்(நீக்கும்) சிவபெருமானே, மீண்டும் அவர்களைப் படைப்பவராகவும் உள்ளார்; இதையே, ‘மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்’ என்று கூறுகின்றார் பெருமான்.

 
கோள்களும், அண்டங்களும் தூலம் என்னும் பருமை பொருட்களாதலால், அவைகளைப் படைத்தும், காத்தும் வரும் தலைவர்களான பிரமர்களும், திருமால்களும் நுண்ணிய உயிர்களாக உள்ளனர் என்பது தெளிவு. நுண்ணிய உயிர்களான பிரமர்களையும், திருமால்களையும் தன்னுள் ஒடுக்கும் சங்கார இறைவன், அவர்களிலும் நுண்ணியன்; எனவே, இறைவனே நுண்மைக்கெல்லாம் நுண்ணியன் (nano of all nanos) என்கிறார் பெருமான். (புரைய போல, கொட்கல்-சுழலல், குழகன்-இளையோன், சூறை மாருதம்-சூறைக்காற்று, வளி-சிறுகாற்று)
சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் நமக்குத் தந்த மணிவாசகர் இறைவனைக் காண மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் விவரித்து, அவற்றால் இறைவனைக் காண முடிந்ததா என்பதற்கான விடையையும் கூறும் திருவாசகத்தை காண்போம்.
 

சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியையும், எங்கும் நிறைந்த நுண்மைக்காட்சியையும் ஒரே சமயத்தில் காணமுடிந்த மணிவாசகர், இறைவனை அடைவதே பிறவியின் பயன் என்ற இறையுணர்வு பெற்ற மனிதர்கள் செய்யும் பல்வகைத் தவமுயற்சிகளையும் காண்கிறார்; இறைவனைக் காண இயலாத நிலையும், அதற்கான விடையும் மனிதகுலத்திற்குப் பயன்பெறும் அற்புதமான திருவாசகமாகப் பூத்தன. நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.
 

அற்புதன் காண்க அநேகன் காண்க
சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
(திருவாசகம்:அண்டப்பகுதி:39, 41-42)

பிரமனும், மாலும் காண இயலாத பெரியோன் பரமன்; சொல்லும், சொல்லின் பொருளுமான நிலையைக் கடந்து நிற்கும் அற்புதன் காண்க; அநேக வடிவங்களில் தோன்றும் ஒருவனேயான இறைவன் காண்க; புறமனம், உள்மனம், மேல்நிலைச் சித்தம் ஆகியன கடந்த ஆழ்நிலைச் சித்தத்தாலும் எட்ட முடியாத பரமன், அன்பர்களின் பக்தி என்னும் அன்பு வலையில் தானே வந்து சிக்கிக்கொள்வதைக் காணுங்கள் என்கிறார் பெருமான்.

 
தன் முனைப்பு இல்லாத முயற்சி

ஆழ்நிலைச் சித்தம் கொண்டு இறைவனைக் காணச் செல்வது ‘நான் முயற்சிக்கிறேன்’ என்னும் ‘தன் முனைப்பு’ காரணம் என்பதால் இறைவன் எட்டமுடியாதவனாகிறான். ஆனால், பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகுபவனிடம் ‘தன் முனைப்பு’ அறவே இல்லையாதலால், அருள் சுரந்து, தானே வந்து, பக்தனின் அன்புவலையில் அகப்படுகின்றான் இறைவன். இந்த நுட்பம் உணராமல், மனிதர்கள் இறைவனை அடையச் செய்யும் பல்வேறு முயற்சிகளையும், அவற்றால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் நமக்கு அறிவிக்கிறார் பெருமான்.

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top