திருவாசகமே மணி வாசகம்

  • Thread starter Thread starter ramachandran girija
  • Start date Start date
Status
Not open for further replies.
படமாடக் கோயிலும் நடமாடும் கோயிலும்

இறைவன் இருவகையான கோயில்களில் இருக்கிறான் என்கிறார் திருமூலர். ஒன்று, படமாடுகின்ற கோயில்கள். இதில் படம் அல்லது சிலை வடிவில் இருக்கின்றான்; இரண்டாவது, நடமாடும் கோயில்களான உயிர்களுடன், குறிப்பாக மனிதர்களுடன் வாழ்கிறான் இறைவன்.


ஏழைகளின் உள்ளே வாழும் இறைவன் பசித்திருக்கையில், படமாடக்கோயிலில் இருக்கும் இறைவனுக்குப் பொருளைக் காணிக்கையாக அளித்தால், அது நடமாடும் கோயில்களான ஏழைகளுடன் பசியில் வாடும் இறைவனுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் கோயிலான ஏழைகளுக்குத் தரும் பொருள், படமாடும் கோயிலில் வாழும் இறைவனுக்கு உடனே சென்று சேர்ந்துவிடும் என்கிறார் திருமூலர்.

 
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே - திருமந்திரம்

“நான் மிகவும் ஏழை. என் வயிற்றுப்பாட்டுக்கே துன்பப்படுகிறேன். என்னைப் போன்றவர்கள் இறைவனிடம் காதல் செய்ய முடியுமா?” என்று கேட்பவர்களுக்கு, மனம் அன்பால் நிறைந்தால் எவரும் ஒருகைப்பிடி உணவாலும், பசுவுக்கு ஒருவாய்ப் புல்லாலும், இறைவனுக்கு ஒரு பச்சிலையாலும், பணம் இல்லாதவர்களும், பிற ஏழைகளுக்கு இனிய வாழ்த்துரையாலும் அன்புசெய்ய இயலும் என்கிறார் திருமூலநாயனார்.

 
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. திருமந்திரம்

உண்மையாகவே இறைவனிடம் காதல் செய்வது எப்படி என்று அறிந்துகொண்டோம். திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை சுவைப்போம்.
 
ஏழைகளுக்கு உதவி செய்வதும், உண்ணும்போது ஒரு கைப்பிடியும் அனைவரும் செய்யக் கூடிய இறைக்காதல் என்று கண்டோம். அவரவர் தகுதிக்கு ஏற்பத் தொண்டுசெய்யும் இறைக்காதல் குறித்த விளக்கம் கேட்டு அன்பர்கள் பலரும் பேசியதால், இன்னும் இரு கட்டுரைகளில் அது பற்றி விளக்கிய பின், திருவடிப் பேறு கிடைத்ததும் மணிவாசகர் உணர்ந்த இறைக்காட்சி அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனைப் பருகுவோம்.

 
செய்தனவே தவமாகும்

மணிவாசகர் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய ‘தவம்’ செய்யும் முறை அது. ‘நம் சிந்தனையில் சிவம் என்னும் அன்பு நிறைந்தால், நாம் செய்யும் அன்புத் தொண்டு எதுவாக இருந்தாலும், அத்தொண்டையே இறைவன் ‘தவம்’ ஆக்குவான்’ என்பதே.

சித்தம் ‘சிவம்’ ஆக்கி, செய்தனவே ‘தவம்’ ஆக்கும்

‘அத்தன் கருணை’யினால் தோள் நோக்கம் ஆடாமோ! - திருவாசகம்:15-6

திருவாசகத்தின் அடிநாதமே இந்தச் செய்திதான்.


சலவைத் தொழிலாளி நாயனார் ஆனார்


சலவைத் தொழிலாளியாக ஏழ்மையில் வாழ்ந்தாலும், தினந்தோறும் ஒரு சிவனடியாரின் உடையைச் சலவை செய்யும் தொண்டைச் செய்த பின்பே மற்றவர் உடைகளைச் சலவை செய்யும் கொள்கையுடன் வாழ்ந்துவந்த ஒரு அன்பரைத் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ என்னும் நாயனாராக உயர்த்திப் பெருமை தந்து அவரைச் சிவபெருமான் ஆண்டுகொண்டான்;


 
இறைவனிடம் அன்புடன் தொண்டு செய்வோர் வாழ்வின் கடைநிலையில் இருந்தாலும், அவர் செய்யும் தொண்டை வானுயர உயர்த்துவான் இறைவன். சிவாலயங்கள் தோறும் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராகச் சிவனடியார்களால் வழிபடப்படுகிறார். வானுயர அரண்மனைகளில் வாழ்ந்த மன்னர்கள் பலரும் கால ஓட்டத்தில் காணாமல் போயினர்; இறைப்பேறு அவர்களுக்குக் கிடைத்ததா என்பதும் நமக்குத் தெரியாது; ஆனால், அன்புடன் தன்னால் இயன்ற தொண்டு செய்த சலவைத் தொழிலாளி ‘திருக்குறிப்புத் தொண்ட’ராக இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, மக்கள் இதயங்களில் என்றும் குடியிருக்கிறார்.

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி - திருவாசகம் - 2:125-126

எப்படிப்பட்ட பெருந்தன்மை யையும், எவ்வகைப்பட்டவர் திறத்தினையும், அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற தன்மைகளால், ஆண்டுகொண்டு அருளுவான் இறைவன்.


 
குயவனார் நாயனார் ஆனார்

மண்பாண்டங்கள் செய்யும் தொழிலைச் செய்யும் குயவர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டர், சிவனடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுக்கும் திருத்தொண்டை செய்துவந்தார். அவரின் நடத்தையில் ஐயம் கொண்ட அவர் மனைவி, ‘எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்’ என்று இறைவனின் மேல் ஆணையிட்டுக் கூறிவிட்டார்; எனவே, மனைவியை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காமல் இளமையைத் துறந்தார்;

திருநீலகண்டர் கடினமாக முயன்று பெண் இன்பத்தைத் துறக்கவில்லை; நஞ்சைக் கண்டத்தில் கொண்ட சிவனின் தியாக வடிவான ‘திருநீலகண்டம்’, மேல் கொண்ட அளவற்ற அன்பு கூடிய பக்தியால், பெண்கள் நினைவுகூட அவரின் சிந்தையிலிருந்தே போயிற்று. முதுமையை அடைந்திருந்த திருநீலகண்டரின் அன்புத்தொண்டை உலகோருக்கு அறிவிக்கத் திருவிளையாடல் நிகழ்த்தி, கணவன், மனைவியைச் சேர்த்து வைத்து, மீண்டும் இளமையைத் தந்து, பின் ஆட்கொண்டு, திருநீலகண்ட நாயனாராக உயர்த்தினார் சிவபெருமான்.


 
இத்தகைய மக்கள் தொண்டினைச் சிறப்பிக்கும் பெரியபுராணத்தின் காப்பிய நாயகன் ‘தொண்டு’ என்னும் பண்பே. எனவே, இறைவனின் அன்பைப் பெற, ஒவ்வொருவரும் இறைத்தொண்டு செய்ய வேண்டும்; பலர் கூடி, கோயிலுக்குச் சென்று உழவாரப்பணி செய்யும் திருத்தொண்டு சிறப்பானதே! திருக்குறிப்புத் தொண்டரைப் போல, திருநீலகண்டரைப் போல, அவரவர் செய்யும் தொழில் அல்லது உழைப்பின் ஒரு சிறு பகுதியை, சக ஏழை மனிதர்களுக்குப் பயன்படும்படி செய்யும் தொண்டு அதனினும் மிகச் சிறப்பானது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை ஒரு ஏழையின் படிப்பு, மருத்துவம், திருமணம், தொழில் போன்ற ஏதாவது ஒரு காரியத்துக்காகச் செலவிடலாம். அத்தகைய தொண்டு செய்ய, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு, ‘அன்பு மனம்’ ஒன்றே!

 
ஞானமும் கல்வியும்

உயிர்ப் பிறவிகளிலேயே அரிதான மனிதப் பிறவியில் “கூன், குருடு, செவிடு” போன்ற குறைகள் இல்லாமல் பிறந்த ஒருவனுக்கு ஞானமும், கல்வியும் கைவரப்பெற்று, இறைச் சிந்தனையால், தானமும், தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறுவது உறுதி என்பது அவ்வையார் வாக்கு. கல்வி உலகியல் அறிவையும், ஞானம் தொண்டோடு கூடிய இறையன்புடன் இணைந்த பேரறிவும் தரும். ஞானமில்லாத கல்வி பயனற்றது என்பதால் ஞானத்தை முதலிலும், கல்வியை அடுத்த இடத்திலும் வைத்தார் அவ்வையார்.

 
ஆபரணங்களை ஆண்டவன் விரும்புவதில்லை
அதேபோல, ‘தானம்’ என்னும் ‘தொண்டு’ இல்லாத இறை வழிபாடு பயனற்றது என்பதால், தானத்தை முதலிலும், தவத்தைப் பின்னும் வைத்தார். உலகில் தோன்றிய செல்வங்கள் யாவும் அனைத்து உயிர்களும் துய்ப்பதற்கானவை; உயிர்களுக்குத் தொண்டு செய்வதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் காதலும், நன்றியும் வணக்கமும் என்ற ஞானம் இல்லாததால், பெரும்பணம் வேண்டித் தங்க, வைர நகைகளைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, பணம் சேர்ப்பது ஒன்றே குறியாகக் கொண்டு வாழ்நாளை வீணடிக்கிறார்கள் மனிதர்கள்; வேண்டுதல்-வேண்டாமை இல்லாத இறைவன் இத்தகைய ஆபரணங்களை ஒருபோதும் விரும்புவதில்லை.

 
அத்தகைய தொண்டு வழிபாட்டை ‘வாளாத் தொழும்பு’, அதாவது அன்பில்லாத வெறும் தொண்டு என்கிறார் மணிவாசகர். முன்பு தாம் அத்தகைய வாளாத்தொண்டு செய்து கடைப்பட்டதாகவும், சிவத்தைக் கூடியபின் தம்முடைய தொண்டு அன்புகூடிய தொண்டாகியது என்னும் திருவாசகம் காண்போம்.
சுடர்பொன் குன்றை, தோளா முத்தை, ‘வாளா தொழும்பு’ உகந்து
கடைபட்டேனை, ஆண்டுகொண்ட கருணாலயனை, கருமால், பிரமன்,
தடைபட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆரமுதை,
புடைபட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? - திருவாசகம்:27-1

 
(தோளாமுத்து - துளையிடப்படாத முத்து, பொல்லாமணி - செதுக்கப்படாத மாணிக்கம்) முத்து துளைக்கப்பட்டே பயனைத் தரும்; இறைவனோ இயல்பாகவே பயனைத் தருபவனாதலால், ‘தோளாமுத்தேஎன்றும், மணி செதுக்கினால்தான் ஒளிதரும்; இறைவன் இயல்பாகவே ஒளியுடையவன்; எனவே, ‘பொல்லா மணியைஎன்றார்..
விதிப்படிஎன்றால் இறைவழிபாடு எதற்கு?
ஏழ்மையில் பிறப்பதோ, செல்வச் சூழலில் பிறப்பதோ, யாருடைய கையிலும் இல்லை; அவரவர் செய்த முன்வினைப் பயனால் பிறவி வாய்க்கிறது என்கிறது சைவசித்தாந்தம். வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடு கூட எதற்கு என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இதற்கான விடை கூறும் திருவாசகத் தேனை சுவைப்போம்.
 
வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடுகூட எதற்கு என்ற கேள்விக்கு விடைகாணும் திருவாசகத் தேனை இப்போது காண்போம்.
விதியை வெல்ல மனிதனுக்குச் சுதந்திரம்
ஒருவருக்கு மிக மோசமான சூழலில் பிறப்பு அமைவது அவர் முன் செய்த வினைப்பயன். தன் பெற்றோரை, தன் பிறவிச் சூழலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையின்மை, மனிதருக்குச் சுதந்திரம் இல்லாததை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பிறந்த பின் செயலாற்றுவதற்கு உயிர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கின்றன நம் திருமுறைகள். விளையாட்டுத் துறையில் உயர்ந்த வாய்ப்புக் கிடைத்த ஒருவர் சிறப்பாக உழைத்து ‘பாரத் ரத்னா’ வாங்கும் நிலைக்கு உயர்வதோ அல்லது முறையற்ற வழியில் கிடைக்கும் பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டு, சூதாடி சிறை செல்வதோ அவரின் சுதந்திரம்.
மாற்றுத் திறனாளியாகப் பிறந்தாலும், உழைத்து, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதோ அல்லது அவ்வாறு பிறந்துவிட்டோமே என்று வருந்தியே காலத்தை முடிப்பதோ அவரவர் சுதந்திரமே. திருநீலகண்டரைப் போன்று, திருக்குறிப்புத் தொண்டரைப் போன்று, பெற்ற பிறவியைப் பயன்படுத்தி, இறைக்காதல் தொண்டு செய்து, நாயனாராக உயரலாம்;
 
அல்லது உலக-உடலின்பங்களில் மட்டும் ஈடுபட்டு, வினைகளைப் பெருக்கித் துன்பமடையலாம் என்பதும் உயிர்களின் சுதந்திரமே.

இறைவனின் கருணை

இத்தகைய சுதந்திரத்தை உயிர்களுக்குத் தந்த இறைவன், அறிவு தரும் ஐந்து பொறி-புலன்களுடனான உடலும், மனதும், நினைவும் தந்துவிட்டு எங்கோ வானத்தில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஆனந்தமாக இருக்கிறானா என்றால் அதுதான் இல்லை என்கிறார் மணிவாசகர். குழந்தையை விளையாட்டு மைதானத்திலே சுதந்திரமாக விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தொலைவில் இருந்து தாய், தந்தையர் கவனித்துக்கொள்வார்கள்; இறைவன் அவர்களைவிடப் பன்மடங்கு கருணையானவன். நம் ஊன், உடம்புகுள்ளே புகுந்து, நாம் அறியாவண்ணம் நம்மைக் கவனித்துக்கொள்கிறான் என்று குயிலிடம் சொல்கிறார் மணிவாசகர்.


 
“தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே! நீ இதைக் கேள்! நம் இறைவன் வானத்தை உதறிவிட்டு, இந்த மண்ணுலகுக்கு வந்து மனிதர்களை ஆட்கொள்ளும் வள்ளல்; மனிதர்கள் நல்லபடியாக ஞானமும் கல்வியும் பெற வேண்டுமே என்ற கருணையால் இவர்களின் ஊன்-உடம்பில் கலந்து மறைந்து வாழும் இறைவனை, நான் சற்றே தேடத் தொடங்கியதும், கருணையால் அன்பு பொங்க, என் ஊன்-உடலை உதறிவிட்டு, என் உள்ளம் புகுந்து, என் உணர்வோடு உணர்வாகக் கலந்துவிட்டான்; மானின் பார்வையிலும் இனிமையான பார்வையையுடைய உமாதேவியின் மணாளனை என்னிடம் வரச் சொல்லிக் கூவுவாயாக!” என்று குயிலைத் தூதுவிடும் அழகு தமிழ் மணிவாசகம் சுவைப்போம்:

 
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,
வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்! திருவாசகம்:18-4


எளிய மனிதர்களை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே வான் பழித்து, மண்ணுலகிற்கு வந்தான் என்கிறார் மணிவாசகர்; நாம் பணக்காரனாக, அறிவாளியாக, தாசில்தாராக, அதிகாரியாக, கல்விமானாக, ஞானிகளாக, பேராசிரியர்களாக, அர்ச்சகர்களாக, பண்ணையாராக, வேத விற்பன்னராக இன்னும் எது எதுவாகவோ இருக்கிறோம்; மனிதராக இல்லை; இத்தகைய செருக்கில் இருக்கும் நமக்கு இறைவன் வசப்பட மாட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார் மணிவாசகர். நாம் எது எதுவாகவோ இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து இறங்கி, நம் மனங்களை அன்பினால் நிறைத்து மனிதர்களாகி, நம் எளிய சக-மனிதர்களின் துயரங்களை நீக்கத் தொண்டு செய்யும்போது, அத்தொண்டின் வடிவத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்படுவோம்.

 
மனிதப்பிறவியை மதிப்போம்

நாம் இறைக் காதலால் மனிதர்களுக்குச் செய்யும் திருத்தொண்டால் மனித குலம் அறிவில், ஆள்வினையில், வாய்மையில், இன்பத்தில் செழித்துக் குலுங்க வேண்டும்; “வாய்த்தது-நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடு மின்” என்ற அப்பர்பெருமானின் ஆணையை நிறைவேற்றுவோம். இன்னாததாக, துன்பம் நிறைந்ததாக இருக்கும் உலகத்தை உழைப்பால், தொண்டால் இனிமையாக்குவது மனிதனின் கடமை. “இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க” என்கிறது புறநானூறு. நம் அன்புத்தொண்டு துன்பத்தை மாற்றும்; வாழ்க்கை செழிக்கத் தடையாயுள்ள கேடுகளைக் களையும். இதன்மூலம் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.

 
தனக்குச் சுற்றமும் விதியும் தானே

ஒருவருக்கு வரும் நன்மை, தீமைகளுக்கு, அவர் செய்யும் செயல்களே காரணம் என்பதால் அவருக்குச் சிறந்த நண்பரும் உறவினரும், பகைவரும் அவரே. ஆதலால், “அடியவர்களே, நீங்கள் எல்லோரும், நாம் யார், எம்முடையது என்பது யாது, எம்மைப் பிடித்த அறியாமையாம் பாசம் எது, இவையெல்லாம் என்ன மயக்கங்கள் என்று உணர்ந்து, இவை நம்மை விட்டு நீங்க, இறைவனுடைய பண்டைத் தொண்டரொடும் சேர்ந்து, இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக்கொண்டு, திருத்தொண்டு செய்வதன் மூலம் பொய் வாழ்வை நீத்து, எமையாளும் பெருமானின் பொன்திருவடியின் கீழ் போய்ச்சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்” என்று அருளினார் மணிவாசகர்.
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,
கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,
போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே. - திருவாசகம்:45-3

 
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’’ என்றார் கணியன் பூங்குன்றனார். நாம் நம்மை அறிவதற்காகவே இறைவனால் தரப்பட்ட உடல் உலகம் தொடர்ந்து மாற்றங்களை அடையும். அவை நிலையாமை உடையவை. அவற்றிடம் வைத்த கடும்பற்று நீங்கி, இறைவனிடம் இணைய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, 'யாமார்? எமதார்? பாசமார்? என்ன மாயம்' என்று அருளினார் மணிவாசகர்.

 
கற்றதனால் வரும் பயன் பெறுக!

மனிதப் பிறவிக்கு வந்த உயிர்கள் அனைத்தும் வீடுபேறு எய்த வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளக் குறிப்பாகையால், ஆறாம் அறிவாம் பகுத்தறிவைத் தந்துள்ளான்; மனிதர்கள் அனைவருக்கும் 'இறைவனின் குறிப்பே குறிக்கொண்டு பொன்னடிக்கே போமாறு அமைமின்' என்று அறிவுறுத்துகிறார் பெருமான்.
சிவனடியார் கூட்டத்தில் இருப்பதே இறைவனை அடையச் சிறந்த வழி என்பதைச் சொல்லவே கோமான் பண்டைத் தொண்டரொடும்என்றது மணிவாசகரின் அனுபவ அறிவுரை. தொண்டின் மேன்மை உணர, இறைவன் நம்முள் கலந்தது எப்போது என்பதைப் பற்றி விளக்கும் திருவாசகங்களை சுவைப்போம்.
 
சூரியன் மறைவதால் நம் கண்கள் காணும் ‘புறஇருள்’, எல்லாப் பொருள்களின் ‘இருப்பை’ கண்ணுக்கு மறைத்தாலும், ‘இருள் உள்ளது’ என்னும் ‘தன்னிருப்பை’ மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதால், நாம் செயற்கை மின்னொளியை உருவாக்கி, இருள் நீக்கி வாழ்கிறோம்.
‘அறியாமை’ என்னும் ‘அகஇருள்’ நம்மைப் பிடித்துள்ளது என்பதே நமக்குத் தெரியாததால், நாம் அறியாமையில் இருந்து விடுபட இயலாது; நம்மிடம் பெருங்கருணை கொண்ட இறைவன் நம்மைப் பிடித்த ‘அறியாமை’ என்னும் அகஇருளை நீக்க, கண் முதலிய அறிவுக்கருவிகளுடன் கூடிய உடல் பிறவிகளைத் தருவதால், நல்வினை, தீவினை செய்து அதன் பலன்களைப் பெறுவதன் மூலம், நாமே நம்மை அறிகிறோம்; நம் தலைவனாம் இறைவனையும் அறிகிறோம்.

 
கருணையினால் நம்முள்ளே மறைந்து வாழும் இறைவன், நாம் அறியாமலேயே நமக்கு அருள் வழங்குகிறான். அறியாமை நீங்கிய நாம், இதே இறைப்பண்புடன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் துன்புறும் சகமனிதர்களுக்குச் செய்யும் தொண்டினால் இறைவனின் அன்புக்கு உரியவர்களாகி ஆட்கொள்ளப்படுவோம். இச்செய்தியின் உள்ளீடே திருவாசகத்தில் பல இடங்களிலும் பேசப்படுகின்றது.

 
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து

இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மணிவாசகர் தில்லையில் அருளிய கண்டபத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார். உடல் பிறவிக்கு வருவதற்கு முன்பே, அதாவது, உடலற்ற அருவமாக, அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் போதே, கருணை கொண்டு உள்புகுந்தான் இறைவன்; தன் உள்ளத்தில் நிலையாக அமர்ந்து, ‘கருத்து’ என்னும் சிந்தனையை வைத்து, பின் உடலில் புகுந்து, பெருங் கருணையினால் ஆண்டுகொண்டு, தன்னுடைய மறைப்புச் சக்தியினால் உயிர்களுக்குத் தெரியாமலேயே அவைகளுடன் இறைவன் வாழ்கிறான்; உயிர்களின் செயல் சுதந்திரங்களில் இறைவன் தலையிடுவதில்லை.

 
வாழ்வின் நெடும் பயணத்துக்குப் பின், மணிவாசகர் இறையருளால் தன் பிறவி நோக்கத்தை அறிந்துகொண்டது போல், நாமும் ஊனுக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்ள வேண்டும்; “திருத்துருத்தி என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் தித்திக்கும் சிவபதத்தை, ஆசை(அருத்தி)யினால் நாயடியேன் தில்லையில் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர். (மன்னி-நிலைத்து)

உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,
கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!
– திருவாசகம்: 31-3

 
Status
Not open for further replies.
Back
Top