திருப்பாவை திவ்ய பிரவாகம்

திருப்பாவை திவ்ய பிரவாகம்

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 1


தனியன்கள்


(பட்டர் அருளியது)


நீளா துங்க ஸ்தன கிரி தடீ
சூப்த முத் போத்ய கிருஷ்ணம்


- நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைச் சாரலிலே கண்ணுறங்கும் கிருஷ்ணனை


பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதிசத சிரஸ்
ஸித்த மத்யா பயந்தி


- நூற்றுக்கணக்கான வேதாந்த நூல்களிலே விளக்கப் பட்ட மற்ற அசேதனங்களிலிருந்து மாறுபட்டு, ஆனால் அவற்றை இயக்கும், அவன் சிறப்பை ஓதி உணர்த்தி (பாரதந்தர்யம்*)


ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம்
யா பலாத் க்ருத்ய புங்த்தே


- அவனை திருப்பள்ளி எழுப்பி, தான் சூடிக் களைந்த மாலையால், கண்ணனை அன்போடு விலங்கிட்டு,


கோதா தஸ்யை தம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய:


- தனக்குள்ளேயே இன்பம் அனுபவிக்கும், கோதைப் பிராட்டிக்கே (எங்கள்) நமஸ்காரங்கள் ஆகட்டும்!


பாரதந்தர்யம் - வைத்த இடத்தில் இருக்கும் இருப்பு - உள்ளத்தில் வைப்பவர்கள் மனதினிலேயே படிந்து விடுபவன். தானே அவ்வகை சேதனா சேதனர்களின் (திருமால் அன்றி மற்ற எல்லாமும்.எல்லாரும்) தேவைகளை, போதும் போதும் என்றாலும் குசேலருக்கு ஆற்றியதைப் போலே மேலே வீழ்ந்து நிறை வேற்றுபவன்.


யசோதை தாம்புக் கயிற்றினால் கட்டினாலும் அவளுக்குக் கட்டுப்பட்டவன், பாசக் கயிற்றில் கட்டி வைத்தால் நம்மையும் விட்டு என்றும் அகலாதவன். கோதை தான் சூடிக் களைந்த மாலையால் விலங்கிட்டு உகந்ததால் தன்னோடு அவளை ஐக்கியமாக்கியவன், நாமும் உள்ளம் உருகி வணங்கினால் தானே கட்டுப்படுவான், எப்பொழுதுமே விலகிட மாட்டான்.


((உய்யக் கொண்டார் அருளிய தனியன்கள்)


1. அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு,
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


- உடையவர், ஆளவந்தார் போன்ற மஹானுபாவர்கள், அன்னப் பறவை போன்றவர்கள். பாலையும் நீரையும் (நல்லவற்றையும், தீமைகளையும்) தனித் தனியாய்ப் பிரியச் செய்யும் வித்தை அறிந்தவர்கள்.


இன்னொரு கோணத்தில், பக்தி வயலில் ஞானப் பயிர் வளர்க்கும் உன்னத உழவர்கள். ஆச்சார்ய ஆழ்வாராதிகள் புழங்கிய பக்தி என்னும் வயலில், ஒரு புதிய பெண் பறவை பிறந்து, வயலையே புது நகரமாய் ஆக்கியது.


இந்தப் புதிய பெண் பறவை அன்னமல்ல. அவளோர் இன்னிசைக் குயில். குழலோசையால் உலகை மயங்கிடச் செய்யும் முரளீதரனுக்கு இன்னிசைப் பாமாலை சூட்டியவள்,


இவள் சூட்டிய திருப்பாவை என்ற அந்த திவ்ய புஷ்ப மாலைக்கு, என்ன தான் கைம்மாறு செய்ய முடியும் கண்ணனால்.


அகம்பாவம் என்பது சிறு கீற்றேனும் இல்லாத அரங்கன், தந்தை அணிந்து கழட்டி வைத்த மலையை, தன் கழுத்தில் அணிந்து கொண்டு பரவசப்படும் சிறு குழந்தையாக மாறி, அனு தினமும், அவள் சூடிக் களைந்த மாலைகளை தான் அணிந்து மகிழ்ந்து,


அவளை இன்னும் தனிமைப் படுத்தி உருக்கி எடுப்பது தகாது என்றெண்ணி, ஓர் நாள், அன்னவளையே மாலையாகச் சூட்டிக்கொண்டு, தன் திண் தோள்கள் மற்றும் விரிந்த மார்புகளில் வாத்சல்யத்தோடு தவழ வீட்டுக் கொண்டான்.
 
திருப்பாவை திவ்ய பிரவாகம் -2
தனியன்


2. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருள வல்ல பல் வளையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதியென்ற இம்மாறு
நாம் கடவா வண்ணமே நல்கு.


(அடியேன் சமர்ப்பிக்கும் தனியன்)


'கோதை மொழி இன் தமிழில்
கோர்வையாய் சொல்லாதது இல்லை
வல்ல மெய்ஞ் ஞானம், மறைகள்,
நல்லிசை, மொழி, நல் நயங்கள்
கல்லாதவர்க்கும் பக்தி, எல்லைக்
கரை புரண்டோடச் செய்தாள்
இல்லாளாய் ஆனாள் மாயவர்க்கு,
இனிமை செய்திடுவாள் நமக்கு'


(முதலில் சொன்ன உய்யக் கொண்டார் அருளிய தனியனின் - விளக்கம்)


சொர்ணமயமான மாலனுக்கு, தான் அணிந்த பூ மாலையையும், பாடி அனுபவித்த 'தொல் பாவைப்' பதிகங்களையும் மாலையாகச் சூட்டியதால், இவளும் அவன் மேல் பரவிப் படர்ந்த தங்கக் கொடி மாலை யாகி (சுடர்க் கொடி) விட்டாள்.


தொன்மையான சதுர் வேதங்களின் சாரங்களைப் பிழிந்து முப்பது பாசுரங்களில் அளித்ததால், அவள் பாடி அருளியவை தமிழில் அருளிச்செயலாய் 'தொல் பாவை' ஆனது.


ஒவ்வொரு பாவைப் பாட்டும் ஒவ்வொரு அழகு வளையாய், அவள் கையில் ஜொலிக்கிறது (பல் வளையாய்).


'நான் பிறந்ததே அரங்கனாயும், வேங்கடவனாயும் இருக்கும் ஒரே பரமார்த்திக்குத் தான்', 'மானிடவற் கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்' என்னும் விதிக் கங்கணமும் நினைவு தெரிந்த நாள் க் கொண்டு அவனோடு இணைந்தாள் கோதை.


அடியோங்கள், அல்ப மனிதப் புழுக்கள். எங்களுக்கு ஞானமோ, விதிக் கங்கணம் அணிந்து கொள்ளும் பக்குவமோ, வேதப் பாடல்கள் புனையும் வல்லமையோ கிடையாது.


எங்களுக்கும் ஏற்ற வண்ணம் 'அவனுடன் நீ இணைந்த வழி முறையை, சிறிதாவதுக் காட்டி அருள்வாய் அன்னையே'.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பாவை திவ்ய பிரவாகம் - 3


திருப்பாவை அவதார வியாக்கியானம் -


தன் உடலையும் உயிருக்குமே முக்கியத்துவம் தரும் பல கோடி மனிதர்களுக்கு இடையிலும், 'நான் யார்' என்ற ஆத்ம தரிசனம் அடைந்த பல்லாயிர ரிஷி, முனிகளுக்கு இடையிலும், நெடிதாய் உயர்ந்து விரிந்த மலைகளாகவும், பிரிக்கவே முடியாத சிறிய அணுக்கள் பற்றித் தெளிவாய் ஆராய்ந்து அறிந்த மேதாவிகளுக்கு இடையிலும், பெரியஆழ்வார், மற்றும் இதர ஆழ்வாராதிகளுக்கு இடையிலும், ஆண்டாளாய் அவதரித்த கோதைப் பிராட்டியின் சிறப்பு:


'அநாதி மாயயா' என்னும் சம்சார மாயையில் அகப்பட்டு மயங்கிக் கிடந்தவர்களை, அந்தப் பரமார்த்தி தானே அருள் செய்து தட்டி எழுப்பித் தன்னை யாரென்று அவர்களுக்குக் காட்டிக் கொண்டான்.


ஆண்டாளோ, பைந்நாகப் படுக்கையிலே அயர்ந்து கிடந்தவனைத் தட்டி எழுப்பி, தன் அபிலாக்ஷைகளைத் தெரிவித்துக் கொண்டாள். நமக்குத் தானே வந்து சேரும் ஐஸ்வர்யங்களினும், நாம் தேடிச் சேர்ப்பவை, எளியதாய் இருந்தாலும் மிகச் சிறப்பானவை, என்பதைப் போலே.


இதர ஆழ்வாராதிகளும் திவ்ய புருஷர்களும், ஆண்களாய் அவதரித்து, நாயகி பாவம் கொண்டு திருமாலை மோகித்தார்கள், பெண்ணாகவே அவதரித்ததாலும், பால்ய பருவம் முதலே அவனைச் சிலாகித்துக் காதல் செய்தவள் என்பதாலும், நாச்சியாருக்கு இன்னும் சிறப்பு.


பிறப்பு முதலே இவளுக்குள் இருந்த பக்தி வேட்கை, 'பதி சம்யோக சுலபம்' என்னும் வகையிலே, யவ்வனம் அடைந்த போதில் பெருகி, 'ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும்' என்ற கொள்கையோடு,


'கோல் தேடி ஓடும், கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்' ஆகி, இவள் மனிதர்க்கு பிறவாமல் தானே ஸ்வயம்புவாய் அவதரித்ததால், மனித ஆண் மேல் விருப்பு ஏற்படாமல் 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்', என்ற விரதம் கொண்டாள்.


வட பத்ர சாயனுக்குத் தன்னை முழுதாய் பரிமாற வேண்டும் என்றவள் கோரிக்கைக்கு, எளிதாய் மாலன் செவி சாய்க்க வில்லை. தன் போலவே உருகி, இவனுக்குத் தம்மை பரிமாறியவர்கள் இது வரை எங்குமுண்டோ என ஆராய்ந்து பார்த்தாள்.


அவன் அவதரித்த காலத்திலே 'அவன் உலாவிப் போன அரிச்சுவடும், அவனும் பெண்களுமாய்த் திளைத்த யமுனையும், அவனெடுத்த கோவர்த்தனமும், கிடந்ததாகில் அவற்றைக் கண்டேனும் தரிப்போம் , என்று எண்ணினாள்.


கண்ணன் பிறந்த காலத்துக்கோ, யமுனைக் கரைக்கோ யார் கூட்டிக் கொண்டு போவார்கள் ஆண்டாளை?


ஜனக ராஜன் மகளை, மாலன் அடையும் வகையில் 'வில் உடைக்கும்' சம்பவம் காரணமாக அமைந்தது. யசோதையின் தம்பி கும்பனின் மகள் நப்பின்னையை அடைய, கும்பன் ரிஷபங்கள் என்று எண்ணி வளர்த்த, ஏழு அரக்கர்களை,சிறுவனாக உள்ள போதே, அடக்கி வதைத்தது காரணமானது.


தனக்கும் கண்ணனை அடைய அப்படி காரணங்கள் ஏதும் இல்லாதது ஆண்டாளுக்கு பெரும் துயர் ஆனது.


ஆண்டாளிடம், சிலர் சொன்னார்கள். திருவாய்ப்படியிலே நன்னீராடும் கோபிகைளோடு களித்திருந்த கண்ணன், இன்ப ரசத்திலிருந்து வேடிக்கையாய் மாற்றம் செய்வதற்காக, எங்கோ ஒளிந்து கொண்டு, கோபியரை, துயருக்குள்ளாக்கினான். அவர்களும் உரிமையோடும் கோபத்தோடும் 'நீ ஓர் அரக்கன்' என்று கண்ணனை விளித்தார்கள்.


கோபியர்களைப் பற்றி கேள்வியுற்ற ஆண்டாளுக்கு ஒரு எண்ணம் வந்தது. வில்லிபுத்தூரை, ஆய்ப்பாடியாக்கி, வடபத்ர கோவிலை நந்த கோபன் அரண்மனையாக்கி, உள்ளே நின்றவனை கிருஷ்ணனாக்கி, திருவாய்ப்பாடியிலே வசிக்கத் துவங்கினாள்.


கண்ணன் யவ்வன பருவத்தினனாகி, சேர்ந்து விளையாடிய கோபிகைகளும் யவ்வனர்களாகி கண்ணனையே எண்ணிக் கிடந்ததால், பெண்களின் பெற்றோர்கள் கோபம் கொண்டு, இனியும் கண்ணனை சந்திக்கக் கூடாது, அவன் கொடியவன் என்று மிரட்டி, அவர்களை வீட்டிற்குள்ளேயே சிறை அடைத்தார்கள்.


பெற்றோர்களின் இந்தக் கடும் செயல், ஆயர்பாடியில் மழை பொய்க்கக் காரணமானது. மழையின்றி மனிதரும் பசுக்ககளும் தவித்திருக்க, ஆயர் சிறுமியர்கள் நோன்பிருத்தலே ஒரே உபாயம் என்று முடிவு கொண்டு, கண்ணனே எல்லா விதத்திலும் இதற்கு தகுதியானவன் என்பதால் அவனை அதற்கு 'வழி நடந்துவாய்; என்று பணிக்கிறார்கள்.


கண்ணனும் கோபிகைகளோடு இணைந்திருக்க, நல்லதொரு சாதனமாகக் இதைக் கொண்டு, அவர்களிடம் சொல்லுகிறான். 'முன்னிரவில் ஆயாசம் போகத் தூங்கி, பின்னிரவில் எழுப்பிடுங்கள் என்னை, நீராடிப் பின் நோன்பிருக்கலாம்' என்று விளித்தான்.


நோன்பை எண்ணித் தூங்கிடாமல் விழித்துக் கொண்டிருந்த கோபிகைகளும், சிறு உறக்கம் முடித்து கண் விழித்த கோபியர்களும், கண்ணனின் லீலா விநோதங்களில் ஆழ்ந்து உறங்கிப் போனவர்களையும், மற்றவர்கள் துயிலெழுப்பி, நப்பின்னையோடு அயர்ந்திருக்கும் கண்ணனை துயில் எழுப்ப நந்தகோபனின் திருமாளிகைக்கு ஏகினார்கள். பரதாழ்வான் மற்றும் அருச்சுனன் போன்று, கண்ணன் துயில் விழிக்க அவன் பள்ளியறை வாசலில் சிரம் தாழ்த்திக் கிடந்தார்கள்.


ஆய்பாடியர்கள், நெய்யுண்ணாது பாலுண்ணாது நோற்பது கண்ணனுக்கு விடும் ஒரு சங்கேதம்.


மஹாராணி உஞ்சவிருத்தி செய்துக் கிடந்தால், ராஜனுக்கு அவமானகமாகக் கூடுவது போல், இவர்கள் பசியோடு நோற்கும் நோன்பும் கண்ணனை விசனப்படுத்தி, அவன் அருள் பொழியக் கட்டாயம் ஆவது தான், இவர்கள் நோன்பின் முக்கியக் குறிக்கோள்.


மூலம்: பெரியவாச்சான் பிள்ளை அருளிய மூவாயிரப்படி
 
திருப்பாவை திவ்ய பிரவாகம் -4


(சற்றே நீண்ட பதிவு, மன்னிக்கவும்)


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்


சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்


ஏரார்ந்த கண்ணீ யசோதை இளஞ் சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்


நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


'மார்கழித் திங்கள்' - 'ந அதி சீதா, ந கர்மதா' என்னும் வகையில் அதிகக் குளிரோ, வெம்மையோ இல்லாத சுகமான மாதம். ஒவ்வொரு நாளுக்கும் முகூர்த்த நேரம் இருப்பது போல, வருடத்தின் முகூர்த்த கால மாதம்.


'மாசானாம் மார்கசீர்ஷோ அஹம்' என்று கண்ணன் கீதையில் உரைக்கும், மாதங்களில் நான் மார்கழி என்னும் உன்னத மாதம்.


தேவர்களுக்கு நம்முடைய ஒரு ஆண்டு, ஒரு நாளுக்கு சமம் என்ற நியதியால், உத்தராயண காலம் தொடங்கும் தை மாதத்திற்கான முந்தைய மாதமான மார்கழி, தேவர்களுடைய ஒரு நாளின் அதி காலை என்னும் உஷத் கால ப்ரஹ்ம முகூர்த்தம் என்ற விசேஷத்திற்கான அம்சம் கொண்டது.


'ஒழிவில் காலமெல்லாம்' என்ற அருளிச் செயல் வாக்கியப்படி, ஒழிவே இல்லாத நம் நித வாழ்க்கையில், பரமனை யோசித்துப் பிரார்த்தனை செய்து நம் மனோ எண்ணங்கள் பலிதம் பெரும் மாதம்.


'புஷ்பிதா கானான' என்பது போல கானகங் களையும், நந்தவனங்களையும் பூக்கள் மலர்ந்து நிறைக்கும் காலம்.


தமிழ் மாதங்கள் மட்டுமே, இந்தியாவில் சூரியனின் சுற்றைப் பின் பற்றி அமைந்து, மாறிடும். ஸ்ரீ வில்லி புத்தூரை வடக்கு மாநிலமான 'ஆய் பாடியாய்' ஆண்டாள் வரித்ததால் 'மார்கழித் திங்கள் (நிலவு)' மாதமாகக் கொண்டாடப் படுகிறது.


மற்ற மாதங்களில் மாலனை பக்தன் பிரார்த்திக்க வேண்டியதாய் இருக்க, மார்கழி மாதத்தில் மாலன் பக்தனைத் தானே தேடி வருபவன் என ஐதீகம். இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது:


உடலுக்கு நலம் பயக்கும் ஓசோன் படிமங்கள் பூமிக்கு அருகில் சஞ்சரிப்பது இம்மாதத்தில் என்று. அதனாலேயே ஆண்களும் பெண்களும் தெருவில் பஜனைகள் செய்துத் திரிந்தோ, முதுகினை வளைத்து பெரு நெடுங்கோலங்களை தெருவாயிலில் இட்டோ, ஓசோனை அதிக அளவில் உடல் க்ரஹித்துக் கொள்ள ஏது செய்வார்கள்.


மதி நிறைந்த நன்னாளால்: கோதையின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும், வரிக்கும் சிறப்பு அர்த்தங்கள் உண்டு. ஆய்ப்பாடியில் பின்னிரவில் (அதி காலை 3 - 4 மணிக்கு) நிறைந்த பவுர்ணமி நாளில் மார்கழி மாதம் பிறந்தது.


இரவு நேரத்தை, நள்ளிரவு, பின்னிரவு என்றல்லாமல், 'நன்னாள்' என்று பிராட்டி விளிப்பது, நிலவொளியால் இரவே பகல் போல ஒளிர்ந்த்தால். கண்ணனையும் கோபியர்களையும் சேர விடாமல் தடுத்த பெற்றோரும் ஊராருமே, கண்ணன் நிர்வகிக்க, கோபியர்களை நோன்பிருக்குமாறு பணித்ததால் 'நன்னாள்' ஆனது.


'நீராடப் போதுவீர்' - 'நீராட' என்ற சொல் ஆச்சார்யர்களுக்கு பாத நீர் ஆராதனைத்தைக் குறிக்கிறது. தன் தந்தை பட்டருக்கு பாதாபிஷேகம் செய்வதாக ஆண்டாள் மனத்தால் வரித்து சொன்ன பதங்கள்.


நீராடலில் ஆத்ம சிந்தனையும் கலந்து தூய்மையை வேண்டி செய்யும் செய்கையாகவும், குளித்தல் என்ற பொதுவான சொல் உடலின் தூய்மையை மட்டுமே உணர்த்துவதாகவும் குறிப்புண்டு.


எல்லையில்லா விரக தாபத்தினால் ஆளுகைப் பட்ட கோபியர்களின் வெம்மையைக் குளிர்ச்சி செய்ய யமுனையில் இளங்காலை நேரத்தில் நீராடச் சொல்வதாய் அறியப் படுகிறது.


கண்ணனோடு நீராடப் போகும் பக்தைகளுக்கு போதும் என்ற நிறைவு விரைவில் ஏற்படாததால்
'போதுமினோ' (நீராடல் போதுமா?) என்று விளிக்கப் பெறுகிறது. அதீத பக்திக் குறிக்கோளோடு முன் செல்லும் பக்தர்களின் பின் தொடர்ந்து சென்றிடல் என்பதையும் இப்பதங்கள் உணர்த்துகின்றன.


கண்ணன் எப்போது அணைத்திடுவான் என்ற ஒரே நேர் விருப்பத்தோடு இருக்கும் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய' என்னும் வகையில், கண்ணனின் மேல் பிரேமை என்ற ஒரே ஆபரணத்தை அணிந்ததனால், ' 'நேரிழையீர்' என்றழைக்கப் படுகிறார்கள். நேர்த்தியான உயர்ந்த ஆபரணங்களை அணிந்த பெண்கள் என்பது, பொதுவான பொருள்.


கிருஷ்ணனின் வரவை எண்ணி எப்போதும் அலங்காரத்தோடு காத்து இருப்பவர்கள் கோபியர்கள் என்ற வியாக்கியானம் உண்டு.


'சீர்மல்கும் ஆய்பாடி' - கண்ணன் தோன்றிய ஒரே காரணத்தால் எப்போதுமே சிறப்பை அணிந் திருக்கும் ஆய்ப்பாடி என்ற பொருள். 'கோ ஸம்ருத்தி' என்னும் வகையில் பசுக்கள் பேணிக் காக்கப் பெறுவதால் ஐஸ்வர்யம் மிகுந்த ஆய்ப்பாடி ஆனது. 'மாடு' என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் செல்வம்.


பூலோக வைகுந்தமான, பரம பதம் போலவோ, ஞானம் மிகுந்த ஆச்சார்யாதிகளோ வசிக்காத, இடது வலது கைகளுக்கு வேறுபாடுகள் அறியாத வெகுளிக் கோபர்களும் / கோபியர்களும் வாழுமூர், கோகுலம்.


'செல்வச் சிறுமீர்காள்' - கண்ணன் மேல் பிரேமை என்னும் உயர்ந்த செல்வத்தை மனத்தில் சுமந்த ஆய்ச்சியர் சிறுமிகள் என்னுமாப்போல, அவர்களுக்கு இகச் செல்வங்கள் தூசி போலவும் கண்ணனின் திவ்ய சேர்க்கை அடைவதே ஒரே செல்வமாய் ஆனபடியாலும் 'செல்வச் சிறுமிகளானார்கள்'. கண்ணனோடு சம வயதினர்கள் ஆனதால் 'சிறுமிகள்' என்று அழைக்கப் பெறுகின்றனர்.


பாகவத சம்பந்தம் தான் செல்வம் என்பதற்கு, தனக்குத்தானே ஸ்வதந்திரத்தைக் கட்டுக்குள் வைத்து, ராமன் ஒருவனையே ஸ்வாமியாகக் கொண்ட இளையாழ்வான் (லக்ஷ்மணன்), ஸ்வதந்த்ரம் இல்லாமையால் ராவணனுக்கு அடிமையாய் இருந்தவன் விபீஷணாழ்வான், ஸ்வதந்த்ரம் மிக்கவனாய் இருந்து முதலை காலைப்பற்றிட ஸ்வந்தரத்தைத் தொலைத்தவன் கஜேந்திராழ்வான்.


இவர்கள் மூவருக்கும் திருமாலின் சம்பந்தம் மனத்தால் பூரணச் செல்வம் கொடுத்து அவன் திருவடிகளையே எந்நாளும் ஆச்ரயிக்கச் செய்தது.


'கூர் வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்' - 'கால் மிதித்து நடந்தால் பசும்புல் மாயுமோ' என்றஞ்சிக் கிடந்தவன், பலராம, க்ருஷ்ணர்கள் பிறப்பினால், அவர்களைக் காக்க வேண்டிய ஒரே காரணத்தால், கூர் வேல் ஏந்திக், கொடுங்கோலன் ஆகினான். தொட்டில் அடியில் எறும்பு ஊர்ந்தால் கூட எங்கே பிள்ளைகளைக் கடித்து விடுமோ என அஞ்சி வேலைக் கையிலெடுப்பவனாகி விட்டான்.


நந்தகோபனிடம் ஊரார் வந்து முறையிடுவார்கள். கண்ணன் வெண்ணை திருடினான், பெண்களை களவு கொண்டுபோனான், ஊரில் அடிதடிக் குழப்பங்களுக்குக் காரணமானான், என்ற பலவகையில்.


நந்தகோபன் சொல்வானாம். 'என் முன்னால் இப்படிச் செய்கைகள் எதுவும் கண்ணன் செய்தால் கண்டிப்பாய் அவனைத் தண்டிப்பேன்' என்று. ஆனால் தந்தையின் முன்னர், மிகவும் சாந்தனாய், பவ்யத்தோடு இருக்கும் கண்ணனைப் பார்த்து ஊரார், இந்த சத்வமானவனையோ குறை சொன்னோம் என வெட்கிப்பாராம்.


'ஏரார்ந்த கண்ணீ யசோதை இளஞ்சிங்கம்' - அழுகு நிறைந்த அகன்ற கண்களைக் கொண்ட யசோதையின் இளம் சிங்கம் போன்ற கண்ணன் என்ற பொதுப் பொருளாகிலும், ஒரு நொடி கூட கண்ணயறாது காவல் காப்பவள் என்பதால், அவள் கண்கள் எப்போதும் விரிந்திருக்குமாம். கண்ணனென்ற இளஞ் சிங்கத்தைக் காவல் காப்பது கடினம்.


எதிரிகள் யாரும் வந்தால் பாய்ந்து சென்று தாக்கிடும். 'சிங்கக் குருகு' என்று பட்டர் விளிப்பார்.


கார் மேனிச் செங்கண் - நீர் சொரிந்த மேகம் போல் அருள் பொழிய காத்துக் கிடக்கும் கரிய மேனியன். கோபியர்களைச் சேரும் ஆவலாலும், பகைவரைத் தாக்கும் கோபத்தாலும் சிவந்த கண்கள் கொண்டவன்.


கதிர் மதியம் போல் முகத்தான் - சூரியனைப் போல ஒளி மிகுந்த முகம், ஆனால் சந்திரனனின் குளுமையை வாரிக் கொட்டிக் கிடக்கும். இரணியனுக்குக் கடுமையானவனாயும், துருவனுக்கு கருணையானவனாகவும் காட்சி தரும் லாவண்ய முகம்.


நாராயணனே நமக்கே பறை தருவான் - ஆழ்வார்கள் அருளிச்செய்த வண்ணம் 'நன்மை தீமைகள் ஒன்றுமறியேன் நாரணா வென்னும் இத்தனையல்லால்' என்ற அவன் ஒரு நாமமே கோபர்களுக்கும்/ கோபியர்க்கும் அடைக்கலமானது,


அதுவல்லாது எப்போது தம் குலத்தில் தோன்றினானோ 'நமக்கே' நமக்கு மட்டுமே பறை என்னும் வீடு/ மோக்ஷம்/சுவர்க்கம் என்னும் பரம பதத்தினை படிப் படியாய் அவன் கண்டிப்பாய் அருளுவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.


பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் - நம்முடைய கண்ணனின் சேர்க்கையை எதிர்த்த உலகமே நம்மை கண்ணனோடு சேர்ந்து நோன்பிருக்கப் பணிவதால், எங்களோடு சேர்ந்து பின் படிவாய் பாவையர்களே என்று மற்ற கோபியர்களை அழைக்கிறார்கள்.


மூலம்: பெரியவாச்சான் பிள்ளை அருளிய மூவாயிரப்படி
 
Back
Top