• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
அன்புடை நண்பர் வாக்மிக்கு,

உங்களது ஆக்கபூர்வமான விமரிசனங்கள் என் கவிதைக்கு மேலும் மெருகூட்டுவது எனக்கு மகிழ்ச்சி.

’துல்லியம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் உள்ள பொருட்களான
’ஒப்பு, உவமை, ஒப்பக்கையெழுத்து, தூய்மை, அப்பிரகம்’ என்பவற்றில்

’துல்லிய மலர்மணம்’ என்றவென் பிரயோதத்தில் நான்
’தூய்மையான மலர்மணம்’ என்ற பொருள்பட எழுதினேன்.
சோலையில் வரும் விதவிதமான மணங்களில் தூய்மையானது
மலர்மணம் என்பது கருத்து.

மற்றபடி, நீங்கள் பரிந்துரைத்த
’சோலைத் தென்னல்’, ’கண்விரி யிளங்கதிர்’ என்னும் மாற்றங்களை
நான் உவகையுடன் ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

இவ்வளவு தூரம் கவிதையை ரசிப்பவர் ஏன் தானும் எழுத முயலுதல் கூடாது என்ற வினா என் மனதில்.

அன்புடன்,
ரமணி

*****
 
அன்புடை நண்பர் வாக்மிக்கு,

உங்களது ஆக்கபூர்வமான விமரிசனங்கள் என் கவிதைக்கு மேலும் மெருகூட்டுவது எனக்கு மகிழ்ச்சி.

’துல்லியம்’ என்ற சொல்லுக்குத் தமிழில் உள்ள பொருட்களான
’ஒப்பு, உவமை, ஒப்பக்கையெழுத்து, தூய்மை, அப்பிரகம்’ என்பவற்றில்

’துல்லிய மலர்மணம்’ என்றவென் பிரயோதத்தில் நான்
’தூய்மையான மலர்மணம்’ என்ற பொருள்பட எழுதினேன்.
சோலையில் வரும் விதவிதமான மணங்களில் தூய்மையானது
மலர்மணம் என்பது கருத்து.

மற்றபடி, நீங்கள் பரிந்துரைத்த
’சோலைத் தென்னல்’, ’கண்விரி யிளங்கதிர்’ என்னும் மாற்றங்களை
நான் உவகையுடன் ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

இவ்வளவு தூரம் கவிதையை ரசிப்பவர் ஏன் தானும் எழுத முயலுதல் கூடாது என்ற வினா என் மனதில்.

அன்புடன்,
ரமணி

*****

Thanks.
 
திருக்குறள் பொழிப்புரை: சென்னைத்தமிழ் குறட்பாக்களில்
(இதுபோல் இன்னும் உரைநடையில் இங்கே:
?????? ??????? ??????????? ??????????...!!!)


121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

பெர்சுங் களுக்கு மருவாதி கொட்த்துநட
வர்ச்சிகினு நிக்காதே மாமு.

127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

வார்த்தையைப் பார்த்துநீ வுட்லேன்னா வெத்தலைப்
பாக்குதான் போடுமும் வாய்.

140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார்.

இன்னாநீ பட்ச்சாலும் சேந்துக்க ஊரோட
இல்லேன்னா பேஜாரு நீ.

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஒம்வார்த்தை யூஸ்-இல்லே னாலூஸ்டாக் கூடாது
கம்முனு நீ-இரு மாமு.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

இன்னாநீ பட்ச்சாலும் நீபட்ச ஜோருக்கு
நின்னுநீ ஷோக்கா இரு.

396.. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குழிதோண்ட்னா தண்ணி குபீர்னு வரல?
பொழியுண்டா பட்ச்சவ னுக்கு!

423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எவன்-எத்தச் சொன்னாலும் எட்துக்கா தேநீ
மவனேவுன் புத்தியையூஸ் பண்ணு.

505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஜபர்தஸ்தாக் கீறியோ சொங்கியா னாவோ
கபர்தார்-உன் டீலிங்ஸ்தான் மாமு!

510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

டுபாக்கூரை நம்பி தொயில்காரன் வுட்டா
தபால்னு வுயவேண்டி தான்.

517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

எவன்கைல இன்னாவே லைனுபாத்து வுட்டா
அவன்கரீட்டா அத்தமுடிப் பான்.

--ரமணி, 14/02/2015

*****
 
பிரதோஷத் துதி
வானப் பிரத்த வேசம்

(எண்சீர் விருத்தம்: தேமா புளிமா விளம் மா அரையடி)

வானப் பிரத்த வயதெனும் போதும்
. வாழும் வகையில் மாறுதல் இல்லை
மோனம் சிறிதும் பயிலுதல் யின்றி
. மூடன் எனவே அலைவதில் இவன்றன்
ஊனின் பெருக்கில் உயிரொளி சுருங்க
. உள்ளம் முழுதும் அல்லவை சேர்த்தான்!
ஞானத் திரளாய்ப் பொலிவுறும் பெம்மான்
. நலியும் இவனை உயர்த்துவ தென்றோ? ... 1

பண்ணும் இசையும் செவியுறும் போது
. பம்மும் இருளைச் சிலகணம் கரைத்தான்
கண்ணும் கரமும் குவிந்திடும் போது
. கட்டுண் டுளத்தைச் சிலகணம் நிறைத்தான்
விண்ணில் நிறங்கள் கலந்திடும் நேரம்
. விஞ்சும் இறைமை விழிகளில் இறைத்தான்
எண்ணம் உடனே இருமையைத் தேட
. எல்லாம் சிதறி இறையுணர் வறுமே! ... 2

கண்ணும் கருத்தும் உலகியல் இனிமை
. காணும் வழியில் சென்றிடும் போதும்
வெண்ணீ றணிதல் பூசனை செய்தல்
. வேசம் எனநீ அறிந்திடும் போதும்
தண்ணென் றுனது திருவருட் தெளிவை
. சற்றே யிவனுக் களித்திவன் வாணாள்
பண்ணும் வினையால் தீமையென் றெதுவும்
. பற்றா திருக்க அருள்புரி வாயே! ... 3

--ரமணி, 02/03/2015, கலி.18/11/5115

*****
 
பிரதோஷத் துதி: புகலாகும் உம்தாள்!
(எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா)*

கருநீல கண்டர் விடைமீது நின்று களியாடும் நேரம் இதுவே
கருவண்டு சூழும் அலர்சூடும் அன்னை கனிவோடு கண்டு மகிழ்வாள்
இருளாகு முன்னர் நிறைவண்ண வானம் இறைசூழும் இன்பம் எனவே
திருவால யத்தில் திருமேனி கண்டு திருநீற ணிந்து பணிவேன். ... 1

சுழல்போன்ற வாழ்வில் சுயமாக எண்ணி சுகமென்று கொள்ளும் எதுவும்
விழலென்று கண்டு வினைசெய்தல் விட்டு விகசித்து வாழ்தல் வருமோ
குழகன்தாள் பற்றி வருநாளில் நின்று குறியேது மின்றி உயர
மழுவேந்தி யென்றன் உளமேவி நின்று மருள்நீக்க வேண்டும் அரனே. ... 2

அகலாத இன்பம் உளையாத உள்ளம் அழியாத கல்வி தருவீர்
இகவாழ்வில் என்னுள் இறையெண்ணம் மேவி இதம்செய்து வாழ அருள்வீர்
சிகைதன்னில் திங்கள் இடமேவு மங்கை திரையாறு மென்று வருவீர்
புகலாகும் உம்தாள் நிலையாகி நன்மை பொழுதேறு முன்னர் புரிவீர்! ... 3

--ரமணி, 18/03/2015, கலி.04/12/5115

குறிப்பு:
எழுசீர் சந்த விருத்தம்: தனதான தான தனதான தான தனதான தான தனனா

இந்தச் சந்த விருத்த யாப்பில் திருஞானசம்பந்தர் தென்திருமுல்லைவாயில் கோவிலுறை
சிவனைப் போற்றும் தம் பதிகத்தில் பயன்படுத்தியுள்ளார் என்று இதை அறிமுகப்படுத்திய
சந்தவசந்தம் குழுமம் சிவத்திரு. வி.சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
??????? ???????? ???????? ????????

இந்த சந்த அமைப்பை ஆறவது சீரில் மட்டும் தனதான/தானான என்று மாற்றி,
’குமுதம்’ திரைப்படத்தில் வரும் ’என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ பாடலில்
கீழ்வரும் வரிகளில் பாடலாசிரியர் மருதகாசி பயன்படுத்தியுள்ளார்:

மணமாலை சூட்டி பலபேரும் வாழ்த்த வளையாடும் என்கையின் விரலில்
கணையாழி பூட்டிப் புதுப்பாதை காட்டி உறவாடும் திருநாளின் இரவில்
இளந்தென்றல் காற்றும் வளர்காதல் பாட்டும் விளையாடும் அழகான அறையில்
சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு தனியேநீ வருகின்ற நிலையில்

மேலே நான் எழுதியுள்ள சந்தப் பாடலும் இந்த வரிகளில் ராகத்தில் அமைந்துள்ளது.

--ரமணி

*****
 
வண்ணச் சிதறல் விஞ்ஞானம்
(அறுசீர் விருத்தம்: தேமா/புளிமா மா காய் .. மா மா காய்)

auroras.jpg

ஹோலித் திருநாள் விளையாட்டாய்
. உறங்கும் வானில் வெகுதூரம்
கோலப் பொடியை இறைத்ததுயார்?
. குழலில் பீய்ச்சி அடித்ததுயார்?
சாலச் சிறந்தே ஓர்வண்ணம்
. சாற்றும் சேதி எதுவாகும்?
தூலப் புகையாய் விரிந்தேதான்
. சூக்கம் பெருமை காட்டுவதோ? ... 1 ... ;சூக்கம் = சூக்குமம்’

சூரி யவொளி வெப்பத்தில்
. சூறைக் காற்று வீசிடுமே
நேரும் காற்றின் நுண்துகளில்
. நிகழும் மின்னேற் றம்பாய
பாரின் துருவ வான்வெளியின்
. பகுதி உறையும் காற்றணுக்கள்
சாரம் குறைய மோதுவதில்
. சகட்டு மேனிக் கோலங்கள்! ... 2

பசுமை வண்ணம் விளைப்பதுவே
. பக்கல் உள்ள உயிர்வளியாம் ... [உயிர்வளி = ஆக்ஸிஜன்]
விசும்பில் முழுதும் செம்மையென
. விளைதல் தூர உயிர்வளியாம்
திசைகள் முழுதும் நீலமெனத்
. திகழும் வாயு ருசரகமாம் ... [ருசரகம் = நைட்ரஜன்]
இசையும் வண்ணம் ஏழின்பின்
. இலங்கும் வாயுத் துகளெனவே. ... 3

இயற்கைக் காட்சிப் பின்னணியாய்
. இறையின் சக்தி உளதென்றே
செயலில் கொண்டு ஆய்வோர்க்கே
. திண்ணம் உண்மை புலனாகும்
இயற்கை பின்னே சூனியமே
. என்றே கொளுவோர் வாணாளில்
இயக்கம் இயக்கன் இயங்குபொருள்
. இனிமை எதுவென் றறியாரே. ... 4

--ரமணி, 22/03/2015

உதவி:
Northern Lights or Aurora Borealis Explained

*****
 
தனிநிற்பேன் வடுவெனவே!
(அளவியல் ஆங்கில சானட்: தரவு கொச்சகக் கலிப்பா + குறள் வெண்செந்துறை:
இயைபு: அஆஅஆ, இஈஇஈ, எஎ)


எத்தனையோ புள்ளினங்கள் எல்லாமே கண்ணினிமை
அத்தனையும் வந்துபார்க்கும் அன்றாடம் உறவாடும்
எத்தனையோ புள்ளிசையாம் எல்லாமே பண்ணினிமை
கத்துவதும் கொஞ்சுவதும் காலைமுதல் சிறகாடும்!

அன்னமென எதையெதையோ ஆர்ப்பரித்தே தேடியுண்ணும்
மின்னலெனக் கண்பட்டு மின்னலெனப் பறந்துவிடும்
அன்னமதை நெய்பருப்பை அக்கணமே நாடியுண்ணும்
இன்னலெதும் செய்யாதாம் இன்னிசையும் மறந்துவிடும்!

இத்தனைக்கும் சுற்றிடத்தில் எங்கணுமே சோலையிலை
வித்தெவணோ அத்தனையும் வேலிகாத்தான் முள்மரமே
புத்துகளாய் எருக்கமுடன் புதர்முட்கள் சாலைவரை
ஒத்துவரும் கான்கொடிகள் ஓங்கியெழுந் துள்வருமே!

வானளாவும் அடுக்ககங்கள் வகைமனிதர் நடுவினிலே
தானளாவும் நான்மட்டும் தனிநிற்பேன் வடுவெனவே!

--ரமணி, 03/04/2015

*****
 
கரிவலம்வந்தநல்லூர் (சங்கரன்கோவில் அருகில்)
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)
(சம்பந்தர் தேவாரம்: 3.120.1: மங்கையர்க் கரசி வானவர்கோன் பாவை)

கோவில்
???????? ???? ?????????? ?????????????!
Naavaapalanigo Trust - ????? ????? ????????? - SANKARANKOVIL/????????????? - KARIVALAM-SIVAN/??????????????????-?????/????????????? - Naavaapalanigo Trust
?????? ??????? - December 2011 Magazine ???????????? - ??????? ??????

காப்பு
கரிமுகன் ஐங்கரன் கண்ணருளால் வேந்தன் ... [வேந்தன் = இந்திரன்]
கரிவலம் வந்தநல்லூர் காணும் இறைவனாம்
பால்வண்ண நாதர் பரிந்தருள் செய்திடும்
கால்வண்ணம் கூறுவேன் கண்டு.

பதிகம்
இந்திரன் ஜெயந்தன் பெற்றதால் சாபம்
. இருவரும் வேடுவர் குலத்தில்
வந்தனர் பிறந்து பூமியில் ஓர்நாள்
. வாளிவில் கொண்டவர் அலைந்தே
வந்ததில் காள வனந்தனில் வேட்டை
. யாடிடக் கண்டவி லிங்கம்
கந்தலாய்ப் புலியின் தோலணி யீசன்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 1

[ஜெயந்தன் = இந்திரன் மகன்; வாளிவில் = அம்பும் வில்லும்;
காளவனம் = கரிவலம்வந்தநல்லூரின் ஒரு பெயர்]

வான்பசு வருணன் விஞ்சையர் சித்தர்
. மரகதன் வாயுவும் இந்தக்
கான்தரு நிலத்தில் விலங்கெனத் தோன்றிக்
. கருத்தனை வழிபட ஈசன்
ஆன்றவர் துதியில் அகமகிழ் வுறவே
. அனைவரின் சாபமும் தீரக்
காந்தனாம் தேவன் இந்திரன் ஏறும்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 2

[வான்பசு = காமதேனு; விஞ்ஞையர் = வித்தியாதரர்; மரகதன் = குபேரன்;
ஆன்றவர் = தேவர்; காந்தன் = தலைவன்]
 
இறைவனின் பேராம் பால்வண நாதர்
. இலக்குவன் வழிபட நின்றார்
இறைவியின் பேராம் ஒப்பனை யம்மை
. இறைவனை மேவிய மர்ந்தாள்
கறைதனைக் கொண்டே அமுதினை தேவர்க்
. களித்தனர் கறைமிடற் றண்ணல்
கறுவியே வாவி சுக்கிரர் செய்தார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 3

சுக்கிரர் வாவி பாலமு தாகச்
. செய்திறை யருளினை வேண்ட
முக்கணர் சோதி வாவியெ ழுந்தே
. முன்னுரு லிங்கமுட் சேர
அக்கணம் வாவி நீருள தாக
. அங்கணர் பால்வண ரானார்
கக்கசம் இன்றிப் புரமழித் தாரின் ... ... [கக்கசம் = பிரயாசை, முயற்சி]
. கரிவலம் வந்தநல் லூரே. ... 4
 
கரிவலம் வரவே கரிபுரம் பேராம்
. காளவ னம்சுடு காடாம்
கருத்தனம் பரனாம் அம்பர புரமாம்
. அமுதுறும் அசலமென் றோர்பேர்
ஒருபெயர் சிவசக் திபுரமாம் இன்னும்
. ஓர்சிவன் முக்திபு ரமெனக்
கருவனின் தலப்பேர் இங்ஙனம் பலவாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 5

[கருத்தனம் பரனாம் = கருத்தன் (சிவன்) அம்பரனாம்; கருவன் = சங்காரமூர்த்தி சிவன்]

கருவையின் மீதோர் நூறெனும் பாடல்
. கனியுமந் தாதிவெண் பாவும்
உருவினில் பதிற்றுப் பத்தெனும் வகையில்
. ஒருசதம் பாக்களும் செய்த
திருவுடை அதிவீ ரராமனின் ஊரே
. திருக்கரு வையெனச் சொல்லும்
கருமிடற் றண்ணல் மேவிய தலமாம்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 6
 
கருவைமன் வரதுங் கன்னொரு பிள்ளைக்
. கனியினைப் பெற்றவ னில்லை
கருவையூர் முழுதும் சிவனுருக் கண்டே
. காலடி வைத்திலேன் என்றான்
மரணமும் வந்து சூழவே கொள்ளி
. மருவிலி வைத்தன ரென்றே
கருவுறும் கதைகள் புகழ்ந்திடும் ஊராய்க்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 7

[கருவைமன் = கருவையின் மன்னன்; மருவிலி = அனாதியாகவே எல்லாம் பொருந்தி
எதுவும் புதிதாக வேண்டாத சிவன்--திருமந்திரம் 9.25]

மலைகொள முயன்ற இலங்கையின் வேந்தை
. மறுகணம் கால்விரற் கீழே
தலைபடத் பத்துத் தோள்பட நசுக்கித்
. தனியருள் செய்துபின் காத்தார்
சிலைநிகர் சக்தி இடமுறும் மேனி
. சிவனெனச் சிந்தையில் வாழும்
கலைமதி மத்தம் தலைநதி கொள்வார்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 8
 
(இறுதிப் பகுதி)

அலையுறும் சயனர் மலருறும் பிரமன்
. அழற்றலை தாள்தனைத் தேடி
மலைவுடன் நின்ற பொழுதிவர் அருளி
. மாண்பினைக் காட்டியே நின்றார்
தொலைவினில் அருகில் மனதினில் கண்முன்
. தோழனாய் நின்றருள் சிவனார்
கலைமறி கரத்தர் வினையழி வரத்தர்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 9

ஆரணம் ஒப்பாப் பன்னெறி இன்னாள்
. அவனியில் மாந்தரை யிழுக்கக்
காரணன் நெறியே உய்நெறி யென்றே
. காரியம் ஆற்றிடும் அடியார்
பூரண நலனும் வேரெனும் அறிவும்
. புண்ணியன் அருளினால் பெறவே
காரிகை மேனி யிடமுற வந்தான்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 10

வனந்தனில் வாழும் பேயுடன் ஆடும்
. வழித்துணை நாதனைப் போற்றி
மனதினில் ஊறும் தினவினைக் கொண்டே
. மாசறச் செய்தலை வேண்டி
நனவினில் நேரும் நிகழ்வுகள் யாவும்
. நஞ்சுணி உளமெனக் கொண்டால்
கனவிலும் காவலன் கண்திறந் தருளக்
. கரிவலம் வந்தநல் லூரே. ... 11

--ரமணி, 08-11/04/2015

*****
 
பிரதோஷத் துதி
என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
(இருபத்து நான்கு சீர் ஆசிரிய விருத்தம்:
கூவிளங்காய் காய் மா மா | காய் காய் மா தேமா x 5)


துள்ளிவிழும் வெள்ளலையில் திரளாய் ஓங்கித்
. துவளவைத்த வாசுகியின் விடத்தால் தேவர்
. . துடிதுடித்தே மரணபயம் மனதில் சூழத்
. . . துரத்துகின்ற வேளையிலே விரைந்தே ஓடித்
. . . . துடிகொண்டார் தூமலர்த்தாள் இணையைப் பற்றித்
. . . . . துயர்நீக்கி உயிர்காக்கத் துதித்தே வேண்ட
வள்ளலவர் விழிநுதலார் அபயம் தந்தே
. . வருநஞ்சால் மாதவனின் நிறமும் மாற
. . . மலரவனும் கவலையுற்றே உள்ளம் வாட
. . . . வன்றொண்டர் சுந்தரரை அனுப்பி யந்த
. . . . . வாசுகியின் காளமவர் மணியாய்ச் செய்தே
. . . . . . வளர்மதியர் வரக்கரத்தில் வைத்தே நிற்க
விள்ளலின்றி விடையவரும் அதனை யேற்றே
. . மிடறுவழி விழுங்கிடவே வாயில் கொள்ள
. . . விமலையவள் பதைபதைத்தே கழுத்தைப் பற்ற
. . . . விடமதுவும் நின்றதனால் நீல கண்டர்
. . . . . விண்ணவரின் வேண்டுதலால் பதிமூன் றாம்நாள்
. . . . . . விடையேறிக் கொம்பிடையே நடனம் செய்வார்
எள்ளளவே சுகமெனினும் அதையும் நாடி
. எனதெனவே கொண்டுதினம் மகிழும் நாளில்
. . . எண்ணத்தில் கறையேற வினைகள் ஏறி
. . . . இகவாழ்வை இழிவாழ்வாய்ச் செய்தல் கண்டும்
. . . . . என்குணத்தான் தாளின்னும் உள்ளம் கொள்ளேன்
. . . . . . எந்தையவர் எனக்கெந்நாள் அருள்செய் வாரோ?

--ரமணி, 16-18/04/2015, கலி.03/01/5116

*****
 
அட்சய திருதியைத் துதி: பொன்மாரி யாகப் பொழி!
(அளவியல் நேரிசை வெண்பா)

விக்னம் விளைத்தே வினைகள் அகற்றியே
லக்னம் திருத்தும் லலிதைமக! - அக்னியாய் ... ... [லக்னம் = காலநேரம்]
என்றன் உளமுறும் ஈனம்கொள் ஞானத்தைப்
பொன்மாரி யாகப் பொழி. ... 1

வேதம் நிலைபெற்றே வேள்விகள் ஓங்கியே
தீதெலாம் நீக்கும் திறமைசேர் - மாதுரியர் ... ... [மாதுரியர் = விவேகியர்]
வன்முறை நீக்கி வளஞ்சேர்க்க வேதனே
பொன்மாரி யாகப் பொழி. ... 2

மூன்றளந்தா னேயினி மூவுலகும் இன்பமுறத்
தான்நீங்கி ஞானம் தழைக்கவே - வான்நிற்கும்
அன்னையின் அன்பே அகமுறவே மாந்தர்க்குப்
பொன்மாரி யாகப் பொழி. ... 3

கண்ணுத லேநின் கழலிணை யாடலில்
மண்ணில் அறந்தழைக்க மானுடர் - எண்ணத்தில்
நன்மையே தங்கி நலம்விளைக்க வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 4

உமையே அமைதியுடன் ஓர்மை அமையக் ... ... [ஓர்மை = ஒற்றுமை]
குமையும் மனிதர் குலாவ - எமைக்காத்தே
இன்னருள் செய்தே இனிவரும் நாளெல்லாம்
பொன்மாரி யாகப் பொழி. ... 5

பொன்மகளே பொன்னுடன் பூமனமும் பூவுலகில்
நன்னெறியாய் நின்றினி நாளெல்லாம் - இன்மையின்
இன்னல் மறைந்து இனிமை நிலவிடப்
பொன்மாரி யாகப் பொழி. ... 6

கலைமக ளேநீ கடைக்கண்ணால் பார்த்தே
உலையும் உலகிது உய்ய - நிலைத்திடும்
நன்மையென ஞானமே நாடிட வுன்னருள்
பொன்மாரி யாகப் பொழி. ... 7

வள்ளிம ணாளநீ வந்தருள் செய்திங்கே
கள்ள மனிதரைக் காய்ந்தழித்தே - உள்ளமெலாம்
உன்கழல் நாளும் உவந்தே உயர்வெய்தப்
பொன்மாரி யாகப் பொழி. ... 8

சிந்தையில் சீர்தருவாய் ஶ்ரீராம உன்னைதினம்
வந்தித்தே வாழ்வில் வளம்பெற்றே - இந்தியப்
பொன்னாடு முன்னிற்கப் பூவுலகில் நன்மைகள்
பொன்மாரி யாகப் பொழி. ... 9

பாரதப் போரினில் பார்த்தனின் சாரதியே
பார்-அதம் ஆவதைப் பார்த்திலையேன்? - வேருடன் ... ... [அதம் = அழிவு, பள்ளம், தாழ்வு]
வின்னம் அறுத்தே விழுமம் எழுந்தோங்கிப்
பொன்மாரி யாகப் பொழி. ... 10

இறையுரு பத்தியில் ஈடுபட்டும் உள்ளே
உறைவதை உள்ளியே ஒன்றும் - நிறைமாந்தர்
பொன்னாய்ப் உருக்கிப் புறந்தரும் சொற்கேட்டால்
பொன்மாரி கொள்ளும் புவி. ... 11

--ரமணி, 21/04/2015, கலி.08/01/5116

*****
 
பிரதோஷத் துதி: உள்ளம் உய்யும் விடையேறே!
(அலங்காரபஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,
சந்தவிருத்தம் என ஐந்து பாவின நிரலில் அந்தாதி மாலையாக அமைந்தது)


(அளவியல் நேரிசை வெண்பா)
விடையேறிக் கொம்பிடை விஞ்சும் மகிழ்வில்
நடமிடும் மூவுலக நாத! - கடையேனென்
உள்ளம் உறவாடி உண்மை உவகையை
உள்ளிடும் உத்தி உரை.

(கலிநிலைத்துறை: மா கூவிளம் விளம் விளம் மா)
உரைக்க ஒண்ணுமோ உவரியில் எழுவிடம் உண்டே
வரரின் ஆருயிர் காத்தருள் செய்திடும் வண்ணம்!
அரைக்கச் சாயுரி யணிந்துநீர் மன்றினில் ஆடக்
கரையா உள்ளமும் காசினி காணுமோ கபாலி!

(நேரிசை அகவல்)
கபாலி யென்றுநீர் கையேந்தும் கோலம்
அபாரக் கருணையில் அமைதிகொள் ஞாலம்!
அபாயம் தீர-உம் அம்புயத்தாள் நாடினேன்
சுபாவம் மீட்டினால் சுமையெலாம் வாடுமே!
அந்தியின் வண்ணத்தில் அகமுறும் மோனமும்
சந்தியின் ஆடும்-உம் தரிசன ஞானமும்
வருவினை அறுக்கவே மாயைகொளும்
உருவெலாம் கடந்திடும் உன்னதம் தருவீர்!

அறுசீர் விருத்தம் (விளம் மா தேமா விளம் மா தேமா)
தருவெனப் பொழியும் ஆடல்
. தரணிகள் படைத்த ழிக்கும்
அருவமும் உருவம் ஆகும்
. அழகினில் உமது கோலம்
வருமுளம் அன்பில் ஆர
. வருவினை அறுவ தாகும்
கருணையிற் கனிந்தென் ஆன்மக்
. கருவுறும் கரையைக் கொள்வீர்!

(வண்ண விருத்தம்: தய்ய தய்ய தய்ய தய்ய
. தய்ய தய்ய ... தனதான)

[திருப்புகழ் 660: வெள்ளிகரம் கள்ள முள்ள வல்ல வல்லி
. கையி லள்ளி ... பொருளீயக்]

கொள்ளு முள்ள மைய லள்ளல்
. குள்ள மில்லை ... பெருமானே
துள்ளு மைவர் செய்யு மல்லல்
. தொல்லை சொல்ல ... முடியாதே
மெள்ள வள்ளல் சொல்லை யுள்ளும்
. வெள்ளை யுள்ள மருள்வீரே
முள்ளை நவ்வு மெய்யை வெல்ல
. வுள்ள முய்யும் .. விடையேறே!

[துள்ளும் ஐவர் = துள்ளியாடும் ஐம்புலன்கள்: மேலுள்ள திருப்புகழ் பாடற் பிரயோகம்]

பொருள் விளக்கம்:
நான் கொள்ளும் இந்த உள்ளத்தில் மையல் அள்ளலாக (சேறாக) மண்டிக் கிடக்கிறது;
. எனினும் என்னிடம் குள்ளம் (கொடுமை, தந்திரம்) இல்லை பெருமானே!
துள்ளியாடும் என் ஐம்புலன்கள் செய்யும் அல்லலின்
. தொல்லை சொல்ல வியலாதாக இருக்கிறது!
மெள்ள நான் வள்ளலாகிய உமது சொல்லை இடைவிடாது நினைக்கும்
. வெள்ளை உள்ளத்தை அருள்வீரே!
முள்போன்ற துன்பங்களை விரும்புகின்ற இந்த உடம்பை வெல்லுவது கூடினால்
. என் உள்ளம் கடைத்தேறும் விடையேறே!

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
29. பெயர்க் காரணம்
(கலிவெண்பா)

பெரியவா என்னும் பெயரேன்? அடியார்
அருமுனியைக் கேட்க அவரும் - பெரியவாய்,
ஓயாமற் பேசிடும் ஓட்டைவாய் என்றுதான்
தாயாரும் மற்றோரும் தக்கபெயர் வைத்தனரோ?
ஓயாமல் நீங்கள் உபநிடத வாக்கியம்
தாயாரின் அன்புடன் தந்தெமைக் காக்கப்
பெரியவாய் என்பதும் பேர்ப்பொருத்தம் ஆமே!
அருமுனியின் பத்தர் அவசரமாய்ச் சொல்லப்
பெரியவாள் என்னும் பெயரெதற் கென்றார்
கரிசனமே கண்ணுறும் காஞ்சி முனிவர்.
மனந்தங்கும் காமாதி மாயைதனை வாளால்
இனந்தெரி யாதறுக்கும் இன்செயற் பேரிதுவே!
காமகோ டிப்பீடம் காஞ்சியின் பேரெதற்கு?
சேமமுனி காரணம் செப்பினார் இன்முகமாய்:
காமகோ டிச்சொல்லே தர்மார்த்த காமகோடி
காமத்தின் கோடியில் கண்ணுறும் மோட்சமே
நாமத்தின் பின்னுறும் நற்பொருள் என்றாரே!
தெய்வத்தை நீணிழலாய்த் தேடித் தொடர்ந்துசென்று
தெய்வத்தின் தீங்குரலைத் தீந்தமிழில் தந்தே
அடியார் கணபதி ஆக்கிய நூலைப்
படிக்கவரும் பத்திநெறிப் பற்று.

--ரமணி, 01/05/2015, கலி.18/01/5116

உதவி:
?????? ??????? ???????? ???????? ??.????????? ????.! | Kanchi Periva Forum

*****
 
அருமுனி அறவுரை
1. பிள்ளையார் தத்துவம்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.42-46]


தேங்காய் உடைத்துத் திருவருள் வேண்டுவோம்
ஈங்கதன் காரணம் ஈசன் தலையையே
ஓங்காரப் பிள்ளை ஒருமுறை கேட்டதே!
தேங்காயின் முக்கண்ணுள் தேன். ... 1

சிதறுதேங் காயின் சிறப்பென்ன வென்றால்
சிதறினைக் கொள்வர் சிறாரே - அதனை
உகந்தருள் செய்வார் உமைமகன், இஃதேன்?
அகங்கார ஓட்டுள் அமுது. ... 2

ஆனை உடல(து) அமர்ந்தே பயணிக்க
மோனையாய் உள்ளது மூஞ்சுறு - மேனி
மலைபோல் இருந்தும் மனதுட் புகுந்தே
இலகாய் அமர்வார் இனிது. ... 3

மானுக்கு வாலும் மயிலுக்குத் தோகையும்
ஆனைக்குக் கொம்பும் அழகெனிலிவ் - வானை
கொடியோனைக் கொம்பினால் கொன்றபின் கொம்பை
ஒடித்தெழுதும் காவியம் ஒன்று. ... 4

புள்ளி விரிக்கும் புனித இறையிணையின்
பிள்ளையாய் வந்துநம் பிள்ளையாரே - உள்ள
முதற்பொருளாய் நிற்கும் முழுமுதற் றெய்வம்
முதலில் துதிகொள்ளும் முத்து. ... 5

தொந்திக் கணபதிமுன் தோப்புக் கரணங்கள்
உந்துதல் ஏனெனில் ஓர்முறைகோ - விந்தன்
சகடம் பறிக்கவர் தன்காதைப் பற்றி
விகடமாய்ச் செய்தார் விழுந்து. ... 6

விக்கினம் நீங்க விநாயகர் போற்றியே
முக்கணமும் உள்ளவரும் மோனமே - சிக்கல்
இகவாழ்வில் தீரும் இனிதே இனிநாம்
சுகமாகக் கொள்வோம் சுமை. ... 7

--ரமணி, 07/05/2015, கலி.24/01/5116
(சங்கடஹர சதுர்த்தி தினம்)

*****
 
அருமுனி அறவுரை
2. அத்வைத தரிசனம்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.49-51]


சீவன் பிரமமெனும் செம்பொருள் ஒன்றென்றே
ஆவதால்நாம் எல்லோரும் ஆண்டவன் ஆவோம்
அருமுனி சங்கரர் ஆதியில் சொன்னார்
உருவம் அனைத்துமே ஒன்று. ... 1

இரண்ய கசிபு இதைத்தானே சொன்னான்?
நரசிம்ம ரென்றுலக நாதன் - அரக்கனைக்
கொன்றாரே! சங்கரர் கொள்வதும் ராட்சசன்
சொன்னதும் ஒன்றாமோ சொல்? ... 2

அரக்கனவன் சொன்ன(து) அவனைத் தவிரப்
பரம்பொருள் இல்லை! பரமாம் பொருள்தவிர
வேறொன்றும் இல்லையென வேதியர் சங்கரர்
ஆறுதல் சொன்னார் அறிந்து. ... 3

தன்னகங் காரத்தைத் தள்ளினால் சீவாத்மா
ஒன்றாய்க் கலந்தே ஒளிபெற்றே - நன்றாகத்
தானே பரம்பொருள் தானே கடலெனத்
தானாகக் கண்டறிவ தாம். ... 4

நாம்கடவுள் இல்லையெனில் நாம்கட வுள்தவிர
ஆம்பொருள் வேறேன்றே ஆகுமே! - தாமோர்
பொருளில்லை வேறு பொருளுமுண் டென்றால்
பரமெவண் ஆகும் பரம்? ... 5

ஆண்டவன் நாமென்னும் அத்வைதி ஆண்டவன்
மாண்பைக் குறைப்பதில்லை; மாறாக - ஆண்டவன்
அல்பமாம் சீவனென் றாவதில்லை என்றடித்துச்
சொல்வோர் செயலத் தொழில். ... 6

கடலாய் விரிந்த கடவுளேதன் சக்தி
உடல்பல வாம்சிற் றுருவாய்ப் - படைத்தே
நதியாய்த் துளைகிணறாய் நம்மூர்க் குளமாய்
விதிகொள் உயிராம் விளை. ... 7

மனிதனாம் போது மனம்தந்தே பாவ
வினையுடன் புண்ய விளையென்(று) - அனுபவிக்கச்
செய்தோர் நிலையில் சிவமாம் பொருளாகி
உய்ய வழிசெய்யும் ஊற்று. ... 8

நிலையற் றமன நிலையிலே பாவ
வலைபுண் ணியவளம் வற்றித் - தொலைய
இயலா நிலையில் இறைபோற்றும் பக்தி
பயில்வதால் கிட்டும் பலன். ... 9

குரங்குமனம் பற்றும் குரம்பை அழுகல் ... ... [குரம்பை = உடல்]
பரமன் அழுகாப் பழமென்(று) - உரமுடன்
பக்தியில் ஆண்டவன் பாதவிணை பற்றினால்
முக்தியாம் ஞான முறும். ... 10

--ரமணி, 08/05/2015, கலி.25/01/5116

*****
 
அருமுனி அறவுரை
3. தர்மமே தலைகாக்கும்
(அளவியல் வெண்பா)

[காஞ்சி முனிவர் உரையிலிருந்து:
’தெய்வத்தில் குரல்’, பாகம் 1 பக்.123-129]


வருடம் புதியாய் வருமடை யாளம்
மரவர்க்க ராச்சிய மக்கள் - அரசுடன்
வேம்பும் இலையுதிர்த்தே மீண்டும் வசந்தத்தில்
ஓம்பும் துளிரின் ஒளி. ... 1

அரசுடன் வேம்பை அருமணம் செய்வித்(து)
இரண்டின் அடியிலும் ஏகதந்தன் நாகம்
உருவைத்துப் போற்றும் உளமே நமது;
தருமம் விரியும் தரு. ... 2

இயற்கையாம் அன்னை இதுபோல் மரங்கள்
வெயிலிளங் காலசுக வெம்மை - வெயில்முதிர்
காலம் தருநிழல் காணவழி வைத்தது
சாலச் சிறந்தவோர் சால்பு. ... 3

முருகனே நாகத்தின் மூலமென்று கொண்டே
தெரிந்தவோர் சொல்லாய்த் தெலுங்கில் - இரண்டுக்கும்
பேர்சுப்ப ராயுடுவாய்ப் பேச மரத்தடியில்
ஏரம்பன் தம்பி யிணை. ... 4

நியதி பிரபஞ்ச நீதி;-நெறிக் கேடாம்
நியதி இயங்காது நீங்க; - நியதி
உருகொள்ளும் சீவசடம் ஒத்துவாழ்ந் துய்ய;
தருமம் மனிதன் தகை. ... 5

ஏதோவோர் சக்தி உலகம் அனைத்திலும்
ஏதோவோர் தர்மம் இயற்றுமே - ஏதேனும்
நாமமாய் நீறாய் நமாஸாய்ச் சிலுவையாய்த்
தீமையகல் வாழ்வெனத் தீர்வு. ... 6

அந்தவோர் சக்தியே ஆண்டவன் என்றுலகில்
வந்த மதங்கள் வழிபடுமே - அந்தம்
எதுவென் றறியா எளியன் மனிதன்
இதுவுலக வாழ்வின் இயல். ... 7

உடல்விழையும் உள்ளத்தின் உள்ளலாம் செல்வம்
நடையெதிர் கால நலமாம் - மடமையிதே!
ஆயுளின் காப்பாய் அமையுமோ செல்வசுகம்?
தோயும் தருமமே தோள். ... 8

கடவுளுக்கே சொந்தம்நாம் காணுலகம் என்று
நடப்பதே தர்மம் நமக்கு - உடையார்
அவர்முன் சிறுதுரும்பே ஆவோம்நாம் என்றே
தவிர்ப்போம் சுயநலத் தை. ... 9

சுயநலம் தள்ளி சுதருமம் பக்தி
பயில்வதே மாந்தரின் பாதை - நயம்மேவும்
பக்தியுற அன்பே பரமென்(று) அணைக்கும்!
முக்திக்கு பக்தி முதல். ... 10

மனதுறும் பக்தி மகிழ்வின் செயலாய்த்
தினமும் வழிபாடு சேவை - தனதென்று
கொள்ளாத் தியாகமென்று கொள்கை - யெனமதம்
விள்ளுமே வாழ்வின் விடை. ... 11

தருமத்தில் வாழ்ந்தால் தன்னுயிர் தெய்வம்
அரசாள் உலகம் அடையும்; - பரமாகும்
ஓருயிர்; தெய்வ உலகிலே சேவைசெய்யச்
சேருமெனப் பல்வகையில் தீர்ப்பு. ... 12

முடிவு எதுவெனினும் மோனமா னந்தம்
தடையேதும் இல்லாத் தகையாய் - அடியோடு
துன்பம் துயரம் துராசைகள் தோல்வியிலா
இன்பநிலை என்போம் இதை. ... 13

இந்தநிலை எய்தி இறைசுகம் கொள்ளவே
எந்த தருமந்தான் ஏற்றதெனில் - சொந்தமென
வந்தடையும் முன்னோர் வழியில் செயல்படச்
சிந்திக்க நேரும் சிறப்பு. ... 14

இராமர் தருமம் இகத்திலே கொண்டால்
பிராணிகளும் கொள்ளும் பிரியம் - இராவணன்
துர்நெறி கொள்வார்க்குச் சோதர னும்பகை!
தர்மமே காக்கும் தலை. ... 15

--ரமணி, 08/05/2015, கலி.25/01/5116

*****
 
ஜகத்குரு தரிசனம்
31. வீணை இசைத்த வித்தகர்!
(கலிவிருத்தம்)

சதாராவில் ஓர்சமயம் தங்கினார் பெரியவர்
விதானமாய் அரசமரம் விளைநிழல் இருக்க
நிதானமாய் அதன்வேரில் நிலத்தில் படுத்தார்
யதார்த்தமாய் ஓர்திரை யதிராஜர் முன்னே. ... 1

வீணையுடன் தரிசித்தார் வித்துவான் ஒருவர்
ஆணையை வேண்டினார் அருமுனிமுன் வாசித்தார்
காணுவோர் யாவருமே கனிமழையில் நனைந்தனர்
வீணையைக் அவரிடம் வித்தகர் கேட்டனரே! ... 2

அருமுனி கேட்டதில் அனவருக்கும் ஆச்சரியம்!
சுருதியைச் சேர்த்தவர் சொன்னார் சரிபார்க்க
சரியெனச் சொன்னதும் சகத்குரு வாசித்தார்
ஒருசில நிமிடம் தொடர்ந்தது வாசிப்பே. ... 3

அழுதார் வித்துவான் அகம்பதறிக் கால்விழுந்தே
தொழுதார் ஆவியைத் தோய்த்தே கண்ணீரில்
பழுது பொறுத்தருளப் பணிவுடன் வேண்டினார்
இழைகல்விச் செருக்கை இனிவிடென் றார்முனியே. ... 4

விடைபெற்று நண்பரிடம் வித்துவான் சொன்னார்
விடையோனின் மலைதூக்க விழைந்தான் இராவணன்
அடிவிரலால் அம்பலத்தான் அவனைச் சாய்க்கவே
கொடைவேண்டிச் சாமகானம் கொண்டிசைத்தான் அல்லவா? ... 5

நானங்கே சாமகானம் நாடியே வாசித்தேன்
ஆனமட்டும் முயன்றும் அதுசரியாய் வரவில்லை
கானத்தை யாரறிவார்? கர்வமே தலைதூக்க
நானெதையோ வாசித்து நலிவை நிறைத்தேனே. ... 6

பெரியவர் சர்வக்ஞர்! பேதம் உடன்கண்டார்!
சரிசெய்தே வாசித்தார் தரித்திரனை மன்னித்தே!
தெரிந்ததைச் செய்வாய் தெரியாத தைத்தெளிவாய்த்
தெரிந்துகொள் எனும்புத்தி தீட்டினார் மனத்துள்ளே! ... 7

--ரமணி, 29/05/2015, கலி.15/02/5116

உதவி:
MAHA PERIVA KNOWS TO PLAY ON VEENA VADYAM TOO ! | Kanchi Periva Forum

*****
 
ஜகத்குரு தரிசனம்
32. சாத்திரமும் எள்ளுப் புண்ணாக்கும்!
(அளவியல் வெண்பா)

வெளிநாட்டில் பக்தருக்கு வேலை யெனவே
அளித்திருக்கும் வாய்ப்பில் அவரும் - களித்தே
குடும்பத்தின் சூழல் குறைகள் களைய
உடும்பாய்ப் பிடித்தார் உவந்து. ... 1

சாத்திரம் மீறியதாய்ச் சஞ்சலம் வாட்டவே
தீத்திறப் பார்ப்பனர் தீதகல - சாத்திரக்
காவலர் ஆகிய காஞ்சிமுனி கோலத்தை
நாவுள்ளம் சித்தரித்தார் நன்று. ... 2

[தீத்திறப் பார்ப்பனர் = வேத வேள்விகள் செய்யும் அந்தணர் குலம்;
சித்தரித்தார் = விவரமாய் எழுதினார், சித்தம் தரித்தார்]

விடுமுறை நாளில் வெகுகாலம் காணக்
கிடைக்காத் தரிசனம் கிட்ட - அடியார்
விமான நிலையம் விடுத்தே முனிவர்
சமாஜம் உடனேவந் தார். ... 3

அன்று சமையலில் ஆவதைக் கேட்டமுனி
நின்றே சிலவற்றை நீக்கியே - இன்னின்ன
சேரென்று சொன்னதில் சிப்பந்திக் காச்சரியம்
சீரார் முனியின் செயல்! ... 4

பத்தர் முனிகண்டு பாதம் பணியவே
இத்தருணம் உண்ணச்செய் என்றுசொன்னார் - பக்தர்
வயிறாரச் சாப்பிட்டு வந்தார் முனிவர்
உயிராகப் பார்த்தாரே உற்று. ... 5

விரதம் முடிந்ததா வித்தகர் கேட்கக்
கருவிழி நீர்வழியக் கண்டே - உருகிப்
பெரியவா என்றுமட்டும் பேசிநின்றார் பக்தர்
தரிசனத்தில் தீர்ந்த தவிப்பு. ... 6

எதுவும் புரியாமல் எல்லோரும் பார்க்க
யதிசொன்னார் இங்கிவன் யாத்திரை யாக
வரும்வரை ஏதுமே வாயுண்ண வில்லை
விரதத்தில் வந்தார் விழைந்து. ... 7

இடையிலே சம்பவம் இன்னொன்று: பக்தர்
கொடுவென் றெதைக்கேட்டுக் கொள்ள? - திடமுனி
கேட்ட(து) அதிசயம்! கேட்டறியா தார்கேட்ட
ஆட்டத்தில் ஆடினரே அங்கு! ... 8

வந்தவர் உண்ண, வரமுனி ஆணையிட்டார்
இந்தா இவனிடம் எள்ளுப்புண் ணாக்குடன்
தையலிலை வாங்கித் தரச்செய்தே கொண்டுவா!
கையுடன்செல் என்றார் கனிந்து. ... 9

அருள்லீலை ஏனோ? அருமுனி சொன்னார்
பிரியம் இவனுக்கென் பேரில் - ஒருபார்ப்பான்
சாகரம் தாண்டினால் சாத்திரம் சொல்வதெனில்
ஆகா(து) எதுவும் தர. ... 10

சாத்திரமே நானிங்கு சார்ந்துநிற்க வேண்டும்தான்
பாத்திரம் ஓர்பெரும் பக்தரென்றால் - பாத்திரமும்
வேண்டும்தான் சாத்திரம் வேண்டல் அனுசரித்தே
ஆண்டுநான் கொள்வேன் அகம். ... 11

எள்ளுப்புண் ணாக்கினை இந்த மடப்பசு
கொள்வதில் நாளை கொடுத்திடும் பாலை
எனக்குத் தரநீங்கும் எல்லாக் குறையும்
மனத்தில் இவனுக்கும் மாண்பு. ... 12

சாத்திரம் தர்மம் தவறாத காஞ்சிமுனி
சூத்திரத்தில் பக்தர் சுகமுற்றே - நேத்திரம்
நீரோடக் கைகூப்பி நிற்க முனிதருமம்
வேரோடும் பக்தியில் வேய்ந்து. ... 13

--ரமணி, 06/06/2015, கலி.23/02/5116

உதவி:
'??????? ???????????? ????? ???????' | Kanchi Periva Forum

*****
 
ஆனித் திருமஞ்சனத் துதி: நீராடும் போதினிலே...
(ஆசிரியத் தாழிசை)

வேரோடும் தேவருடன் வினையோடும் தானவரும்
போராடிப் பாற்கடலில் பொங்கமுதம் கடைந்தக்கால்
நீராடி அலைநஞ்சை நிறைசெய்தீர் நீருண்டே! ... 1

[வேரோடும் = நன்மையே விளைக்கும் அறத்தின் வேரோடும்]

சீரோடும் ஏழுலகும் சிரந்தன்னில் கொள்ளுமிறைப்
பேராளன் என்றேநீர் பெயர்பெற்றே அருள்செய்ய
நீராடும் ஆட்டத்தில் நீதிநெறி நீடுறுமே! ... 2

நாராய ணன்தேவர் நான்முகனும் போற்றிடவே
பாராளும் வேந்தனெனப் பசுபதியாய் நின்றருள
நீராடும் ஆட்டத்தில் நிலைகொள்ளும் ஐந்தொழிலே! ... 3

காரோடும் முகிலிறங்கிக் கதித்துவரும் கால்களென
நீராடி நூற்றெட்டாய் நின்றிலங்கும் கூத்துகளில்
நீராடும் ஆட்டமென நீள்சிறப்ப தைந்தாமே! ... 4

வேரோடும் இறையாக வினையோடும் உயிர்யாவும்
சீரோடக் காரோடச் சித்தமெலாம் போராட
நீராடும் நீர்த்துளியால் நெஞ்சத்தில் நிர்மலமே! ... 5

நீராடும் நிலவாடும் நீள்சடையின் ஆட்டத்தில்
ஏரோடும் ஊர்த்தவத்தில் எழுந்தருளும் எந்தைநீர்
நீராடும் அருவுருவாய் நின்றிலங்கும் ரகசியமே. ... 6

[ஏரோடும் ஊர்த்தவத்தில் = உழவர் ஏர்க்கலப்பை ஓட வாழும் ஊரின் தவத்தில்;
அழகும் நன்மையும் விளைக்கும் உமது ஊர்த்தவ தாண்டவம்]

ஆரணத்தின் ஒலியுடன்தே வாரத்தின் பண்ணொலிக்கத்
தேரோடும் வீதியிலே திருவெல்லாம் நின்றிலங்க
நீராடி நீறணிந்த நீலகண்டன் தரிசனமே! ... 7

நீர்காற்று நெருப்புவெளி நிலமென்னும் ஐம்பூதம்
ஊர்மண்ணாய் உயிர்வாழும் உலகமென உருப்பதுவே
நீராடும் ஆட்டமெனும் நிம்மதியில் உயிர்வாழ்வே! ... 8

நீராவிப் புகைபோல நிலையற்ற நிலவுலகில்
நீராவி காத்தேயென் நெஞ்சினிலே நின்றருளி
நீராடி வினைதீர்த்தென் நீள்பிறவி கொள்வதென்றோ? ... 9

--ரமணி, 24/06/2015, கலி.09/02/5116
(ஆனித் திருமஞ்சன தினம்)

*****
 
பிரதோஷத் துதி: உண்மையை உரைப்பீர் சற்றே!
(அறுசீர் விருத்தம்: கூவிளம்/கருவிளம் மா மா விளம் மா மா)

சேயெனச் சிறந்த தில்லை
. தேடியே அலைந்த தில்லை
காயிலே பழுத்த தில்லை
. கனியிலே இனித்த தில்லை
தாயெனக் கண்ட தில்லை
. தந்தையாய் அறிந்த தில்லை
பேயுடன் ஆடும் தில்லைப்
. பித்தனே அருள்செய் வீரே. ... 1

கோயிலுட் காண்டல் இல்லை
. கொம்பெனக் கொண்ட தில்லை
பாயிரம் அறிந்த தில்லை
. பக்தியிற் சிறந்த தில்லை
வாயினிற் போற்ற வில்லை
. மனதிலும் பெரிதாய் இல்லை
நாயகன் நடனன் தில்லை
. நன்றெனக் கருள்செய் வீரோ? ... 2

இகத்திலே இன்பம் என்றே
. இருமையைக் கொண்ட துண்டு
அகத்திலே விளையும் ஆசை
. அனுபவித் துழன்ற துண்டு
முகத்திலே பணிவென் றாலும்
. முனிவுகொள் உள்ள முண்டு
நகத்திலே உணர்வைப் போல
. நானுமை யுணர்ந்த துண்டே! ... 3

கல்லிலே கண்ட துண்டு
. கனவிலே கண்ட தில்லை
சொல்லிலே கேட்ட துண்டு
. சூக்குமம் கண்ட தில்லை
இல்லையும் உண்டும் என்றே
. இருப்பதை உணர்ந்த தில்லை
தில்லையில் ஆடும் தீர்த்த!
. திருவருள் செய்வீ ரன்றோ? ... 4

வேரென நின்றே தில்லை
. வெளியிலே ஆடும் வேந்த!
காரிருள் நீக்கி யென்றன்
. களைகளை வெட்டிச் சாய்த்தே
பாரிலென் பிறப்பின் போக்கைப்
. பரிவுடன் மேம்ப டுத்தி
யாரென என்றன் உன்றன்
. உண்மையை உரைப்பீர் சற்றே! ... 5

--ரமணி, 29/06/2015, கலி.14/03/5116

*****
 
பிரதோஷத் துதி: உண்மையை உரைப்பீர் சற்றே!
(அறுசீர் விருத்தம்: கூவிளம்/கருவிளம் மா மா விளம் மா மா)

சேயெனச் சிறந்த தில்லை
. தேடியே அலைந்த தில்லை
காயிலே பழுத்த தில்லை
. கனியிலே இனித்த தில்லை
தாயெனக் கண்ட தில்லை
. தந்தையாய் அறிந்த தில்லை
பேயுடன் ஆடும் தில்லைப்
. பித்தனே அருள்செய் வீரே. ... 1

கோயிலுட் காண்டல் இல்லை
. கொம்பெனக் கொண்ட தில்லை
பாயிரம் அறிந்த தில்லை
. பக்தியிற் சிறந்த தில்லை
வாயினிற் போற்ற வில்லை
. மனதிலும் பெரிதாய் இல்லை
நாயகன் நடனன் தில்லை
. நன்றெனக் கருள்செய் வீரோ? ... 2

இகத்திலே இன்பம் என்றே
. இருமையைக் கொண்ட துண்டு
அகத்திலே விளையும் ஆசை
. அனுபவித் துழன்ற துண்டு
முகத்திலே பணிவென் றாலும்
. முனிவுகொள் உள்ள முண்டு
நகத்திலே உணர்வைப் போல
. நானுமை யுணர்ந்த துண்டே! ... 3

கல்லிலே கண்ட துண்டு
. கனவிலே கண்ட தில்லை
சொல்லிலே கேட்ட துண்டு
. சூக்குமம் கண்ட தில்லை
இல்லையும் உண்டும் என்றே
. இருப்பதை உணர்ந்த தில்லை
தில்லையில் ஆடும் தீர்த்த!
. திருவருள் செய்வீ ரன்றோ? ... 4

வேரென நின்றே தில்லை
. வெளியிலே ஆடும் வேந்த!
காரிருள் நீக்கி யென்றன்
. களைகளை வெட்டிச் சாய்த்தே
பாரிலென் பிறப்பின் போக்கைப்
. பரிவுடன் மேம்ப டுத்தி
யாரென என்றன் உன்றன்
. உண்மையை உரைப்பீர் சற்றே! ... 5
--ரமணி, 29/06/2015, கலி.14/03/5116

நண்பர் ரமணி அவர்களுக்கு,

ஒரு நல்ல கவிதை. தந்த உங்களுக்கு நன்றி.

வழக்கம் போல சில நெருடல்கள். சொல்லிவிடுகிறேன். தவறாகப்புரிந்துகொள்ள வேண்டாம்.

1. பேயுடன் ஆடும்.......

காளி யைக்குறிப்பிடுவதானால் தாயென்று குறிப்பிடலாமே. அசையும் மாறாதிருக்குமே.

2. வாயினிற் போற்றவில்லை......

வாயினாற்போற்றவில்லை/வாயினிற்போற்ற(ல்இ)ல்லை என்பவை கொஞ்சம் கூடப்பொருத்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

3. நகத்திலே உணர்வைப்போலே....... நல்ல உவமை. வாழ்த்துக்கள்.

4. இல்லையும் உண்டும் என்றே............

"உண்டும்" நெருடுகிறது. உண்டு என்பது வலிந்து "உண்டும்" ஆக்கப்பட்டது போல் தோற்றம். அர்த்தம் வேறு பட்டுப்போனதாக ஒரு நெருடல். சிந்திக்கவும்.

தோன்றியதைச் சொல்லாமல் இருப்பது ஒரு நீண்ட தாங்கொணாப்பிரசவ வேதனை போல. எனவே சொல்லிவிட்டேன். தவறாயின் மன்னிக்கவும்.

அன்புடன்
வாக்மி.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top