61a. வந்திக் கிழவி.
61 (a). வந்திக் கிழவி.
வைகை ஆற்றில் பெரும் வெள்ளம்!
வைகை ஆற்றால் பெரும் துன்பம்!
ஆற்றின் கரையை உயர்த்திவிட்டு
ஆற்றின் வேகத்தைக் குறைக்கவேண்டும்.
குடிப் பெயர்களைக் கணக்கில் எடுத்து,
உடைந்த கரையையும் கணக்கில் எடுத்து,
பங்கு பிரித்தனர் அங்கு காவலர்கள்,
பறை சாற்றின தண்டோராக்கள்.
“வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும்!
விரைந்து கரையை உயர்த்த வேண்டும்!”
மண்வெட்டிகளுடனும், கூடைகளுடனும்,
மரம் சுமப்பவர்கள், தழை எடுப்பவர் என
விரைந்து வந்தனர், பணியைத் தொடங்கினர்.
கரையோரம் நிறுத்தப்பட்டன நல்ல மரங்கள்,
விரித்துக் கிடத்தினர் வைக்கோல் பிரிகளை,
பரப்பிய தழைகளின் மேல் கொட்டினர் மண்!
ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்தனர்,
“அடங்க வேண்டும் ஆறு கட்டுக்குள்” என்று!
பறையடித்துப் பரவசம் ஊட்டினர் சிலர்,
குரவையிட்டுக் நல்ல கூத்தாடினர் சிலர்.
தென் கிழக்குப் பகுதில் வசித்திருந்தாள்,
தொண்டுக் கிழவியாகிவிட்ட மூதாட்டி.
ஆயிரம் பிறைகள் கண்டு விட்ட வந்தி,
ஆயினும் கொண்டவள் மாறாத பக்தி.
தவ சீலி, நரை, திரை, மூப்படைந்தவள்;
தனியாள், பிட்டு விற்றுப் பிழைப்பவள்;
அவித்த பிட்டை விற்பனைக்கு முன்னர்
அர்ப்பணிப்பாள் அரன் திருவடிகளுக்கு.
தன் பங்கு மண்ணை நிரப்புவது எப்படி?
தன்னால் முடியாது தள்ளாத வயதில்!
துணை என்று சொல்லிக் கொள்ளவோ,
இணையாகப் பணிபுரியவோ ஆள் இல்லை.
கூலி ஆள் கிடைத்தாலும் போதும்.
கூலி கொடுத்து வேலை வாங்கலாம்.
வேலை முடியாமல் நின்று விட்டால்
வேந்தன் சினம் பாயும் தன் மேல்.
கிழவியின் குமுறல் விழுந்தது செவிகளில்!
அழகிய கூலியாள் அங்கே திருக்கோவிலில்!
அழுக்குப் படிந்த உடைகள், ஒரு மண்வெட்டி,
வழுக்கி விழும் சும்மாடு, ஒரு மண் கூடை.
“கூலிக்கு ஒரு வேலையாள் வேண்டுமா?
கூலியாள் வேண்டுமா?கூலியாள்!கூலியாள்!”
குதூகலம் அடைந்தாள் வந்தி கிழவி.
கூப்பிட்டாள் அந்த அழுக்கு அழகனை!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.