# 16. வேதங்களுக்குப் பொருள் உரைத்தது.
# 16 (a). யுவகுரு வடிவம் எடுத்தது.
வேதங்களைப் பாராயணம் செய்து வந்தனர் முனிவர்கள்;
வேதங்களின் நுண்பொருளைச் சற்றும் அறியாமலேயே!
வசித்து வந்தனர் நைமிசாரண்யம் என்னும் வனத்தில்,
வசப்படவில்லையே வேதங்கள் என்னும் மருட்சியுடன்.
அரும் தவ சீலர் வந்தார் ஒருவர், அரபத்தர் என்பவர்;
அறவே ஒழித்து வென்றவர் தன் ஆணவ மலத்தை!
முனிவர்களின் மனவாட்டத்தின் காரணத்தைக்
கனிவுடன் வினவினார், அதை அறிய விரும்பியவர்!
“வேதங்களின் நுண் பொருளை அறியாமலேயே
பேதையர்களாக வேதம் ஓதி வருகின்றோம் !
பொருள் உணர்த்த வல்ல குருநாதர் ஒருவரை
அருளுடன் எமக்கு அடையாளம் காட்டுவீர்!”
“வேதங்களை உலகிற்கு அருளியவன் நம் சிவன்;
வேதப் பொருளை உமக்கு உரைக்க வல்லவன் அவன்;
வேதப் பொருளைக் கற்க வேண்டியது மதுராபுரியில்,
வேத நாயகன் உள்ளான் யுவ சிவ குரு வடிவில் அங்கு.
தத்துவ அறிவுக்கு உகந்த நகரம் மதுராபுரியே;
உத்தமமான த்வாதசாந்த க்ஷேத்ரம் அதுவே;
விராட்புருஷனுடைய பிரமரந்திரத்துக்கு மேலே
விரட்கடைகள் பன்னிரண்டின் உயரத்திலே!
அந்த சோமசுந்தரரின் அற்புதத் திருக்கோயிலில்,
இந்திரன் அளித்த விமானத்தின் தெற்குப் பகுதியில்,
சுந்தர யுவனாக வடிவு எடுத்து அமர்ந்துள்ள சிவன்
மந்திரப் பொருளை உமக்கு உரைக்க வல்லவன் !”
மருட்சி நீங்கி தெருட்சி அடைய விழைந்த அந்த
மறை முனிவர்கள் சென்றடைந்தனர் மதுராபுரி;
பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடிவிட்டுச்
சொற்பதம் கடந்த அந்த அற்புத நாயகனுடைய,
பொற்பதம் பணிந்து, பின் கற்பதைத் துவங்கினர்,
அற்புதமான தட்சிணாமூர்த்தின் சிலையருகே!
யுவனாகத் தோற்றம், மௌனமே பேசும் மொழி;
யுகங்களைக் கடந்து நிற்கும் உண்மைகள் துலங்கும்!
மேதா மந்திரத்தை விடாது ஓதலாயினர் ;
மேதா விலாசத்தையே விரும்பிய முனிவர்கள்.
கார்த்திகை பௌர்ணமியில் தொடங்கியவர்கள்
கார்த்திகை பௌர்ணமி வரை ஓராண்டு காலம்
ஜெபம், ஹோமம், பிராமண போஜனம் என
ஜெயம் தரும் அனைத்தையுமே செய்தனர்.
மெல்ல மெல்லப் பக்குவம் அடைந்து விட்டன
நல்ல தவத்தால் முனிவர்களின் மனங்கள்.
பொருள் சொல்ல வேண்டிய நேரம் வந்ததை
அருள் கூர்ந்து அறிந்து கொண்டான் இறைவன்.
குரு வடிவம் எடுத்து எதிர் வந்தான் சிவன்,
சிறு யுவன், பதினாறு வயது நிரம்பியவனாக.
திரு நெற்றியில் வெண்ணீறு, திரு மார்பில் பூணூல்,
திரு முக மண்டலத்தில் ஒரு மாறாத புன்சிரிப்பு,
திரு மார்பில் துலங்கின ருத்திராக்க மாலைகள்,
திருக்கைகளில் பவித்ரமும், ஓலைச் சுவடிகளும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி