6#13a. அரிச்சந்திரனின் யாகம் (1)
“பின் விளைவுகளைச் சிந்தியாமல் உன் தந்தை
சொன்னான் ஒரு நரமேத யாகம் செய்வதாக!”
மாற்றிவிட்டான் லோகிதாசன் மனத்தை இந்திரன்
மறைந்து வாழ்ந்தான் அவனும் மாயை வயப் பட்டு.
சிந்தித்தான் வியாதி மாறுவது பற்றி அரிச்சந்திரன்.
சிந்தித்தான் தன் குலகுரு வசிஷ்டரை அரிச்சந்திரன்.
உபாயம் கூறினார் குலகுரு வசிஷ்டர் வந்துள்ள
அபாயம் நீங்குவதற்கு மன்னன் அரிச்சந்திரனுக்கு.
“புத்திரர்கள் ஆவார் பதின்மூன்று வகையினர்.
புத்திரன் ஆவான் விலைக்கு வாங்கியவனும்!
விலைக்கு வாங்கிவிடு பிராமணப் பிள்ளையை;
நிலைமையை சமாளிப்போம் யாகப் பசுவாக்கி.
பூர்த்தியாகிவிடும் நீ செய்த அந்த சங்கற்பமும்;
தீர்ந்துவிடும் உன் கொடிய வியாதியும்!” என்றார்
“விலைக்கு வாங்கும் அமைச்சரே ஒரு பிள்ளையை!
விலைக்குப் பிள்ளையை விற்கும் பெற்றோர் இருப்பார்.
அறிவியுங்கள் நாடு முழுவதும் இந்தச் செய்தியை
வறியவர் எவரேனும் விலைக்குத் தருவர்” என்றான்.
அமைச்சர் சென்றார் ஊர் ஊராகச் சுற்றி அலைந்து;
அமைச்சர் கண்டார் வறிய அந்தணன் அஜீகர்த்தனை.
இருந்தனர் அவனுக்கு மூன்று மகன்கள் – அத்துடன்
இருந்தன அளவற்ற வறுமையும், பொருளாசையும்.
முதல் பிள்ளையைத் தர விரும்பவில்லை தாயார்;
கடைப் பிள்ளையைத் தரவிரும்பவில்லை தந்தை.
நடுப் பிள்ளைத் தந்தனர் விலைக்கு அமைச்சருக்கு.
நடுப் பிள்ளையின் பெயர் சுனஸ்சேபன் என்பதாகும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.