10#13b. பிராமரி தேவி (1)
வலிமை கொண்டவன் அசுர மன்னன் அருணன்
வெறுத்தான் தேவர்களை அசுர மன்னன் அருணன்
வெளியேறினான் தன் பாதாள உலகத்தை விட்டு;
குடியேறினான் கங்கைக் கரைப் பர்ணசாலையில்.
தவம் செய்தான் காயத்ரீ மந்திரம் ஜபித்து
தவம் செய்தான் 10,000 ஆண்டுகள் நீர் அருந்தி
தவம் செய்தான் 10,000 ஆண்டுகள் காற்றைச் சுவாசித்து;
தவம் செய்தான் 10,000 ஆண்டுகள் எதுவும் உண்ணாமல்.
எழுந்தது தவ அக்னி அவன் உடலில் இருந்து;
கொழுந்து விட்டு எரிந்தது உலகங்கள் எங்கும்.
அஞ்சிய தேவர்கள் தஞ்சம் புகுந்தனர் பிரமனிடம்
அன்ன வாஹனத்தில் சென்றான் காயத்ரீயுடன்.
உயிர் மட்டுமே ஊசலாடியது அருணன் உடலில்;
வயிறு ஒட்டி அவன் உடல் முழுவதும் ஓட்டைகள்!
பிரகாசித்தான் அருணன் இரண்டாவது அக்னியாக;
பிரார்த்தித்தான் அருணன் மரணம் இல்லா வாழ்வு!
“பிறப்பு என்ற ஒன்று ஜீவர்களுக்கு இருந்தால்
இருந்தே ஆகவேண்டும் இறப்பு என்ற ஒன்றும்!
கால வயப்பட்டவர்களே தேவர்கள், தெய்வங்கள்!
கேள் வேறு ஏதாவது வரம்!” என்றான் பிரமதேவன்
“வரக் கூடாது மரணம் அஸ்திர சஸ்திரங்களால்;
வரக் கூடாது மரணம் ஆண்களால், பெண்களால்!
வரக் கூடாது இரண்டு, நாலு கால் பிராணிகளால்;
வரலாம் மரணம் வேறு எதாவது ஒரு விதத்தில்!”
அளவற்ற வலிமை பெற்றான் பிரம தேவனிடம்;
ஆள விரும்பினான் மூவுலகங்களையும் வென்று.
திரும்பினான் வரம் தந்த பிரமன் காயத்ரியுடன்;
திரட்டினான் அருணன் அசுர வீரர்களை ஒன்றாக.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.