வைஷ்ணவத்தில் முதல் ரகசியமெனப்படுவது திருவஷ்டாக்ஷர மந்திரமான (எட்டெழுத்து மந்திரம்) ‘ஓம் நமோ நாராயணாய’. இதில் முதல் சப்தமான ‘ஓம்’ என்பது ஓரெழுத்தாக கொள்ளப்படும். இதன் பொருள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இம்மந்திரம் உடையவர் மூலமாக உபதேசமாக அருளப்பட்டது குறித்து நெகிழ்ச்சியான வரலாறு சொல்வார்கள்.
எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தே இதை உபதேசமாகப் பெற்றார். ஒரு தடவை அல்ல, இரு தடவை அல்ல, 18 முறை உடையவர் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடந்து இந்த உபதேசத்தை யாசித்தார். ஒவ்வொரு முறையும் திருக்கோட்டியூர் நம்பிகள் ஏதாவதொரு காரணம் சொல்லி, இந்த திருமந்திர உபதேசத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். கடைசியாக 18வது முறை இந்த உபதேசத்தை தந்தருளி, இவ்வுபதேசத்தை எளிதில் யாருக்கும் தந்துவிடலாகாது என்று சொன்னார். ஆனால் இவ்வுலக மக்களின் மேல் உள்ள கருணையினால், உடையவர் அங்கிருந்த கோவில் கோபுரத்தின் மேலேறி, ‘யாருக்கெல்லாம் ஸ்ரீ வைகுண்டம் போகவேணுமென்ற ஆசையிருக்கிறதோ அவர்களெல்லாம் கேட்டுக் கொள்ளுங்கள். ஸ்ரீ வைகுண்டத்தை அடைய வழி இந்த மந்திரமே’ என்று சொல்லி இந்த மந்திர உபதேசத்தை ஊருக்கெல்லாம் வழங்கினார்.
திருக்கோட்டியூர் நம்பிகள் இதை கேள்விப்பட்டவுடன் கோபமடைந்து உடையவரிடம், ‘நான் இம்மந்திரோபசத்தை யாருக்கும் எளிதில் கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே. என் பேச்சை எப்படி மீறினாய்? ஆச்சார்யன் பேச்சை மீறினால் நீ நரகத்துக்கல்லவோ செல்வாய்?’ என்று கேட்டார். அதற்கு உடையவர், ‘இம்மந்திரத்தை கேட்டதனால் இந்த ஊரிலிருக்கும் இத்தனை பேரும் ஸ்ரீ வைகுண்டம் போவார்களேயானால், அதன் பொருட்டு நான் நரகத்திற்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்ல, திருக்கோட்டியூர் நம்பிகள் உடையவரின் கருணையைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டு மகிழ்ந்தார் என்று சொல்வார்கள்.
மேலெழுந்தவாரியான பொருள்:
ஸ்ரீநாராயணனை சரணடைகிறேன்.
உட்பொருள்:
ஓம்
‘அ’காரம் + ‘உ’காரம் + ‘ம’காரம் (அ+உ+ம் = ஓம்)
’அ’ என்னும் எழுத்து இங்கு விஷ்ணுவைக் குறிக்கிறது. (இங்கு ப்ரம்மம், விஷ்ணு, நாராயணன் என்ற எல்லா சொற்களும் சுட்டுவது ஒரே பொருளையே என்று கொள்ள வேண்டும்)
1) சமஸ்கிருத இலக்கணப்படி ‘அ’ என்னும் சப்தம் ப்ரம்மத்தைக் (விஷ்ணு) குறிக்கும்.
2) அனைத்து மொழிகளிலும் (அடியேன் அறிந்தவரை) ‘அ’ என்னும் சப்தமே முதலெழுத்தாக அமையும். அதுபோலவே ப்ரம்மமே எல்லாவற்றிற்கும் தொடக்கம். அதனால் இந்த ‘அ’ சப்தம் ப்ரம்மத்தை குறிக்கிறது.
3) ‘அ’ என்பது ‘அவா’ என்னும் வினைச்சொல்லின் சுருக்கமே. அவா என்பதற்கு ’காப்பாற்று / இரட்ச்சி’ என்று பொருள். விஷ்ணு எல்லாவற்றையும் இரட்சிப்பதால் ‘அ’ என்பது விஷ்ணுவைக் குறிக்கும்.
’உ’ என்னும் எழுத்து இங்கு பிராட்டியை (ஸ்ரீ மகாலஷ்மி தாயாரை) குறிக்கும். இன்னொரு பொருளாக ‘மட்டுமே’ என்றும் நிற்கும்.
’ம்’ என்னும் எழுத்து ஜீவாத்மாவை குறிக்கிறது.
சமஸ்கிருதத்தில் ’ம’ எழுத்து 25வது மெய்யெழுத்தாகும். அதேபோல ஜீவாத்மா 25வது தத்வமாக தோன்றியவர் என்று கொள்வார்கள்.
முதல் தத்வம் – ப்ரகிருதி (matter)
2வது தத்வம் – மகான்
3வது தத்வம் – அகங்காரம்
பஞ்ச சூட்சும பூதங்கள் (ஒலி, தொடு உணர்வு, நிறம் அல்லது உருவம், ருசி, வாசனை)
பஞ்ச ஸ்தூல (அல்லது) மகா பூதங்கள் (ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி)
பஞ்ச கர்மேந்திரியங்கள்
பஞ்ச ஞானேந்திரியங்கள்
மனசு
ஆக இவற்றிற்கு பிறகு 25வது தத்வமாக ஜீவாத்மா தோன்றினார்.
’ம’ எழுத்து ‘அறிய’ என்னும் வினைச்சொல்லின் சுருக்கமாக சொல்லப்படும். ஜீவாத்மா அறிந்து கொள்பவர். எனவே இந்த ம சப்தம் ஜீவாத்மாவை சொல்லுகிறது.
’ம’ எழுத்து ’அளவு’ என்னும் வினைச்சொல்லின் சுருக்கமாகவும் சொல்லப்படும். ஜீவாத்மா அணுவைப் போன்ற ஒரு குறிப்பிட்ட அளவிலிருப்பதால், இந்த ம் சப்தம் ஜீவாத்மாவை சொல்லுகிறது.
மேற்கூறியது போல, ‘அ’ என்பது விஷ்ணுவையும், ‘உ’ என்பது பிராட்டியையும் குறிப்பதாகக் கொண்டால், ஜீவாத்மா இவர்களுக்கு சேவை புரிபவர், அடிமை என்னும் பொருள் கிடைக்கும். ’உ’ என்பதை ‘மட்டுமே’ என்று அர்த்தப்படுத்தினால், ஜீவாத்மா விஷ்ணுவுக்கு மட்டுமே அடிமை செய்பவர்; ஜீவாத்மா ஜீவாத்மாவுக்கே கூட அடிமை அல்லர், என்ற பொருள் கிடைக்கும். இங்கு பிராட்டி விஷ்ணுவிடமிருந்து பிரிக்கும் தன்மையில்லாமலிருப்பதால் (எவ்வாறு என்பது பிறகு விளக்கப்படும்) ‘அ’ சப்தமே விஷ்ணு, பிராட்டி இருவரையும் குறிக்கும். ஆக முடிவில், ஜீவாத்மா சுதந்திரன் அல்லர்; அவர் ‘சேஷ பூதர்’. ப்ரம்மமே ‘சேஷி’. ப்ரம்மத்துக்கு சேவை செய்வதே ஜீவாத்மாவின் நோக்கம் என்பது சொல்லப்படுகிறது.
நமக
பொருள் 1: தொழுகிறேன், வணங்குகிறேன்.
பொருள் 2:
நமக = ந + மக => என்னுடையதில்லை. எது என்னுடையதில்லை? இங்கு ஜீவாத்மாவை சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். அப்படிக் கொண்டால்,
நான் என்னுடையவனில்லை. நான் பரமாத்மாவிற்கு அடியவன், உரியவன்.
எதுவுமே என்னுடையதில்லை. எல்லாமே பரமாத்மாவிற்கு உரியது. அவன் சொத்து.
சுதந்திரம் என்னுடையதில்லை. ஜீவாத்மா சுதந்திரமானவனில்லை. ஜீவாத்மா பரமாத்மாவைச் சார்ந்தே இருப்பவன்.
முதலாளித்துவம் என்னுடையதில்லை. நான் யாருக்கும் எஜமானில்லை, நான் உட்பட. நாராயணனே எல்லோருக்கும் எஜமான்.
இதன் மூலமாக, என்னை இரட்சித்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையதில்லை. பெருமானுடையது என்பது தெளிவாகிறது.
நாராயணாய
நாரா + அயனம்
நாரா:
ர = அசிது - அழியக்கூடிய வஸ்துக்கள். (ஜீவாத்மாவை தவிர மற்ற எல்லாமும் அழிபவையே).
நர = சிது = அழியாத வஸ்து; ஜீவாத்மா, சேதனன். இதில் மற்றொரு பொருளும் உண்டு. இந்த நர என்னும் சொல் பரமாத்மாவையும், அவரது கல்யாண குணங்களையும், அவருடையதான திருவாபரணங்கள், திருஆயுதங்கள் முதலிய அசேதனங்களையும் கூட குறிக்கும். ஏனெனில் இவையும் அழியாதவையே.
நார = ஜீவாத்மாக்களின் குழு.
நாரா = குழு, குழுவான ஜீவாத்மாக்களின் திரள்.
அயனம்: இந்த சொல்லுக்கு கீழ்க்கண்டவாறு மூன்று விதமாக பொருள் கொள்ளலாம்.
1. உறையும் இடம்.
இதனாலே,
இந்த நாரங்கள் உறையுமிடம் பரமாத்மா என்று பொருள் வரும். நாரங்கள் குழு, குழுவாக, திரள் திரளாக ப்ரம்மத்திடம் உறைகின்றன என்று அறியப்படும். இதனால் இந்த சேதன, அசேதனங்கள் அனைத்தும் ப்ரம்மத்திடம் அடங்குகின்றன. எனவே நாராயணன் மிகப்பெரியவன், அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டவன், அளவிட முடியாதவன், ஆதியிலிருந்தே இருப்பவன் என்ற பொருள்களெல்லாம் புரிய வருகின்றன. பரம்பொருளின் இந்த குணாதிசயம், ’ஃபாகிர்வியாப்தி’ என்று கூறப்படுகிறது.
‘ஃபாகிர்வியாப்தி’ குணம், சேதன அசேதனங்கள் இருக்குமிடத்திலும், இல்லாமிடத்திலும் ஆகிய எல்லா இடங்களிலும் ப்ரம்மம் இருக்கிறான் என்று அறிவிக்கிறது.
இன்னொரு விதமாக பார்த்தால், பரமாத்மா இந்த நாரங்களில் உறைகிறான் என்றும் தெரியும். ஒவ்வொரு ஜீவாத்மாவினுக்குள்ளும் அந்தர்மியாமியாய் பரமாத்மா இருக்கிறான் எனப் பொருள். எனவே அவன் அணுவுக்குள்ளும் அணுவாய், மிகச்சிறியவானகவும் இருக்க முடியும் என்று புரிகிறது. இந்த குணாதிசயம், ‘அந்தர்வியாப்தி’ என்று கூறப்படுகிறது.
‘அந்தர்வியாப்தி’ குணம், சேதன, அசேதனங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ப்ரம்மம் இருக்கின்றான் என்று காட்டுகிறது.
2. உபாயம்.
இதனாலே, ஜீவாத்மாக்கள் ஸ்ரீவைகுண்டத்தை அடைய விஷ்ணுவே உபாயம் என்று பொருள்.
3. குறிக்கோள்.
இதனாலே, ஜீவாத்மாக்களின் குறிக்கோள் விஷ்ணுவே என்று பொருள். அவனை அடைவதே குறிக்கோள்.
இப்பொழுது மேற்சொன்ன அர்த்தங்களை சேர்த்துப் பார்க்கும் பொழுது, கீழ்க்கண்டவாறு மிக ஆச்சரியமான அர்த்தங்கள் கிடைக்கின்றன.
ஸ்ரீமந் நாராயணனுக்கு வணக்கங்கள்.
ஸ்ரீமந் நாராயணனை நான் சரணைடைகிறேன். என்னுடைய இருப்பு என்பது நாராயணனை சந்தோசப்படுத்துவதற்கே. என்னை இரட்சிக்கும் பொறுப்பும் என்னுடையதல்ல, அது நாராயணனுடையது. இந்த சரணாகதியினால் ஏற்படும் பலனும் அந்த நாராயணனுக்கே, எனக்கல்ல.
பிராட்டியுடன் கூடிய நாராயணனுக்கே நான் அடிமை செய்பவன். மற்ற யாருக்குமல்ல. எனக்கு கூட இல்லை. எனக்கு சுதந்திரம் என்பது கிடையாது. நான் எப்போதும் நாராயணனையே சார்ந்திருக்கிறேன்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு நான் என்னைச் சமர்ப்பிக்கிறேன். இந்த அர்ப்பணமும் அவனது கருணையினால் விளைந்ததே தவிர வேறு தனி முயற்சியில்லை. அவன் மட்டுமே என்னை இரட்சிக்க முடியும். வேறு எவரும் என்னை இரட்சிக்க முடியாது. என்னாலே கூட என்னை இரட்சித்துக் கொள்ள முடியாது.
பிராட்டிக்கும், நாராயணனுக்கும், அவர்களது அடியார்களுக்கும் மட்டுமே நான் கைங்கர்யம் பண்ணுவேன். என்னுடைய தனிப்பட்ட சந்தோசத்திற்காக எதுவும் செய்ய மாட்டேன். என்னுடைய செயல்கள் அனைத்தும் ப்ரம்மத்தை சந்தோசப்படுத்துவதற்காகவே அமையும்.
பிராட்டிக்கும், நாராயணனுக்கும் மற்றும் அவர்களது அடியார்களுக்கும் நான் எப்போதும் தொண்டு செய்வேன்.
நான் எனக்கு சொந்தமில்லை. எனக்கு எதுவும் சொந்தமில்லை, எதுவும் என்னுடையதில்லை. நான் உட்பட, எல்லாமும் நாராயணனின் சொத்து.
ப்ரபத்தியைத் (சரணாகதி) தவிர எனக்கு வேறு உபாயமில்லை. என்னால் வேறெந்த உபாயமும் (ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்) செய்ய முடியாது. விஷ்ணுவே உபாயம். அவர் என்னை ஆசீர்வதித்து, பகவத் அனுபவத்தையும், பாகவத அனுபவத்தையும், பகவத்-பாகவத கைங்கர்யத்தையும் அளிப்பார்.
என்னுடைய இரட்சகம் பகவானின் பொறுப்பு. பகவான் என்னுடைய பாவங்களை மன்னிப்பார். பகவான் என்னை ஆசீர்வதித்து அவருக்கு தொண்டு செய்ய அருள் புரிவார்.
நாராயணனுக்கு மட்டுமே நான் சொந்தமானவன். அவனிடம் நான் சரணாகதி, ப்ரபத்தி பண்ணுகிறேன். அவனுக்கு நான் எல்லா காலத்திலும் தொண்டு செய்வேன்.