கவிஞர் வாலியின் திரையிசைப் பாடல்களைத் தொகுத்து "வாலி 1000" என்ற பெயரில்
இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள்.
கவிஞர் வாலியின் பல திரைப்படப் பாடல்கள் கவியரசு கண்ணதாசனுடையது என்று பலரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, கவியரசரின் பாடல் என்று
மேற்கோள்கூடக் காட்டுகிறார்கள்.
இந்தத் தொகுப்பு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும்.
கவிஞர் வாலியின் திரையிசைப் பாடல்களின் தொகுப்பைப் பார்த்தபோது, கவிஞர்
வாலியின் கவியரங்கப் பாடல்கள் நினைவுக்கு வந்தன.
வாலி தலைமையிலான ஒருசில கவியரங்கங்களில் முன்வரிசை இரசிகராகக் கவியரசர்
கண்ணதாசன் வந்தமர்ந்து இரசித்த நிகழ்வுகளுக்கு நான் சாட்சியாக
இருந்திருக்கிறேன்.
கவியரங்கத்தில் இலக்கிய நயத்துடன் சமயோசிதமாகக் கவிதை புனையும் கவிஞர் வாலி,
திரைப்பாடல்களில் வர்த்தக நோக்குடன் மெட்டுக்குப் பாடல் எழுதுவதைப் பற்றி அவரே
ஒரு கவியரங்க மேடையில் தனது பதிலைப் பதிவு செய்திருக்கிறார்.
"இங்கே நான்
வண்ண மொழிப் பிள்ளைக்குத்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ விலைபெறுமோ
அந்தப்பா எழுதுகிறேன்
எந்தப்பா? நீர் சொல்லும்!
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!''
என்பதுதான் கவிஞர் வாலியின் அந்தப் பதிவு.
வார்த்தை வித்தகம் என்பது கவிஞர் வாலிக்குக் கருவில் கிடைத்த வரம்.
கவிஞர் வாலியின் கவியரங்கக் கவிதைகளும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டியவை.
திரையிசைப் பாடல்கள் மெட்டுக்குக் கருத்தரித்தவை என்றால், கவியரங்கப் பாடல்கள்
இலக்கிய முத்திரைக்குத் தகுதியானவை.
கவிஞர் வாலியின் 1000 திரையிசைப் பாடல்களைக் கவிஞர் பழனிபாரதியும், கவிஞர்
நெல்லை ஜெயந்தாவும் தேர்ந்தெடுக்க, திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன்
தொகுத்தளித்திருக்கிறார்.
தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்களில் எதுவும் பழுதில்லை. ஆனால், தொகுத்திருக்கும்
விதத்தில்தான் குழப்பம் தெரிகிறது.
ஒரு கவிஞனின் படைப்புகளை - அது திரையிசைப் பாடல்களாகவே இருந்தாலும் -
காலவரிசைப்படி தொகுப்பதுதான் சரியான தொகுப்பாக இருக்க முடியும்.
அகர வரிசைப்படி தொகுக்க இது என்ன அகராதியா?
சரி, அகர வரிசைப்படித் தொகுத்தார்களே, ஒவ்வொரு பாடல் வெளிவந்த திரைப்படமும்,
எந்த ஆண்டு வெளிவந்தது என்கிற விவரமாவது இருக்க வேண்டாமா?
கலாரசிகன்
நன்றி:- தினமணி
http://www.dinamani.com/Images/article/2010/12/26/25tmani2.jpg