பொன்விளைந்தகளத்தூர், பொன்பதர்கூடம் :- இவ்விரு தலங்களும் ராமயணத்தோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது.
ராவணன் இறந்தபின், மண்டோதரி ராமபிரானிடம், ராமா என் கணவனுக்கு தண்டனை கொடுத்தாய் சரி, நான் உனக்கு என்ன செய்தேன்? எனக்கும் கணவனை இழந்த தண்டனையைக் கொடுத்து விட்டாயே என கேட்டு விட்டு, ராமா எனக்கு எதுவும் வேண்டாம், நீ வைகுண்டத்திலே எப்படி சேவை ஸாதிக்கிறாயோ அது போல எனக்கு உன் விஸ்வரூப் தரிசனத்தைக் கொடு என வேண்டியதற்கு இணங்க, ஸ்ரீ ராமபிரான் சதுர்புஜத்துடன் விஸ்வரூப் காட்சி கொடுத்த தலம் பொன் பதர் கூடம். வேறு எங்கும் ராமபிரானை நான்கு கரங்களோடு தரிசிக்க முடியாது.
ருத்ராங்கோவில் - எல்லோரும் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரரை மட்டுமே தரிசித்திருப்பர். வேதகிரீஸ்வரருக்கும் முற்பட்ட, சிவாலயமாம் ருத்ராங்கோவிலைப் பற்றி தெரிந்ததை சொல்லுவோம்.
வழிபாட்டு முறைப்படி முதலில் இவரை தரிசித்தபின் தான், வேதகிரீஸ்வரரைத் தரிசிக்கவேண்டும்.
ஒரு முறை கருடாதிரூடராய் திருமால், ஈசனைக் காண வந்த வேளையில், கருடாழ்வார் வெளியில் நிற்க, திருமால் உள்ளே சென்று வருவதற்குள், நந்தியானவர் தனது மூச்சுக் காற்றை கருடனின் மீது வீச, கருடனின் இறக்கைகள் உதிர்ந்து விட்டன. இதைக் கண்ட திருமால் ஈசனிடம் முறையிட்டார்.
ஈசனும் நந்தியைப் பார்த்து, தவறுக்கான தண்டனையாய், பூமிக்குள் போகும் படி உத்தரவிட்டாராம். உடனே நந்தியின் உடல் பூமிக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது. கழுத்துவரை போன பிறகு ஈசன், திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க அப்படியே இரு என ஆணையிட்டாராம்.
இன்றும் இவ்வாலயத்தில், நந்தியின் புதைந்த திருமேனியைக் காணலாம். இத்தலத்தை தரிசித்தால், கோடி ருத்திரர்களை ஒரு சேர வலம் வந்த புண்ணியத்தைப் பெறலாம்.
வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு கிழக்கே அரை கிலோமீட்டரில் ருத்ராங்கோவில் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடந்திருக்கிறது.