Andal Thoothu

ஸ்ரீ ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 1)

நாளை(17/07/2021),ஆடி மாதப்பிறப்பு. இந்த மாதம் பகவானுக்கும், நித்யசூரி களுக்கும்,தேவ/தேவதைகளுக்கும் உகந்தமாதம்.பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் யோகநித்திரை
துவங்கும் மாதம். தேவர்களின் ஒரு நாள் என்பது, நமது ஒரு ஆண்டுக்காலமாகும். தை முதல் ஆனி முடிய அவர்களது பகல்நாள்.ஆடி முதல் மார்கழி வரை அவர்களது இரவுநாள்.எனவே அவர்கள் நித்திரை கொள்ளும் முன் அவர்களைப் போற்றிப்பாடி, வணங்கி, திருப்பள்ளி கொள்ள வைக்கிறோம்.அதே போல மார்கழி மாதத்தில் அவர்களை, நித்திரை
யிலிருந்து,திருப்பள்ளிஎழுச்சி பாடித் துயில் எழுப்பி விஸ்வரூப தரிசனம் சேவிக்கிறோம்.ஆடிமாதத்திலும்,மார்கழி மாதத்திலும் நம்மை முற்றிலும் பகவத் சம்பந்தமான கைங்கர்யங்களில் ஈடுபடு
த்திக் கொள்ள வேண்டும் என்று முன்னோர் வகுத்துவைத்திருக்கிறார்கள்.

இந்த உலகத்துக்கே, ஆதாரமாக விளங்கும் பூமிப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த மாதம் ஆடி மாதம்!
பூமாலை சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் !
பாமாலை பாடிக் கொடுத்த நாச்சியார் ஆண்டாள்!!
ஆண்டாள் ஆயர்பாடிக் கண்ணனைப் பாடினார்!
திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடினார்!!
ஆண்டாள் பாடிய "திருப்பாவை" அறியாதார் இல்லை.
"கோதை தமிழ் ஐயைந்தும்,ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வமபு" என்பது பூர்வர் வாக்கு.
ஆண்டாள் பாடிய இன்னொரு பாமாலையான "நாச்சியார் திருமொழியும்"திருமால் அடியார்கள் நன்றாக அறிவார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக"ஆடி ஆனந்தம்" என்னும் தொடரில்,ஆடி மாதம் முழுதும் பூமிப்பிராட்டியார் ஆண்டாள் வைபவங்களை அநுபவித்தோம்.2019ல் ஆண்டாள் வைபவங்கள்,ஆண்டாள் அவதார ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் உற்சவ விசேஷங்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.
2020ல் பல்வேறு ஆசார்ய ஸ்வாமிகள் ஆண்டாளைப் போற்றிப் பாடிய பாசுரங்கள்/ஸ்லோகங்களை
"ஆண்டாள் போற்றி" என்று அநுபவித்தோம்.

இந்த ஆண்டு, ஆண்டாள் பாடிய பாசுரங்
களில் சிலவற்றை தேர்ந்தெடுத்துப் பார்ப்போம்.திருப்பாவைப் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஒவ்வொரு மார்கழிமாதத்திலும் பார்த்து வருகிறோம்.
ஆண்டாள் பாடிய இரண்டாவது பிரபந்தம்
"நாச்சியார் திருமொழி"பூதேவி நாச்சியார்/கோதை நாச்சியார் அருளிச் செய்த திருமொழி ஆதலால் நாச்சியார் திருமொழி.ஒரே நாயகன் ஸ்ரீமந் நாராயணின் நாயகி பாடியதால் நாய்ச்சியார் திருமொழி என்றும் சொல்லுவர்.இந்தத் திருமொழியின் 143 பாசுரங்களின், ஆழ்ந்த அர்த்தங்களையும் இந்த ஒரு மாத காலத்துக்குள் பார்ப்பது என்பது சற்றே கடினமான காரியம்.
எனவே நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கண்ணபிரானுக்கு அனுப்பிய "தூது" பாசுரங்களை எடுத்து "ஆண்டாள் தூது" என்னும் தலைப்பில் அநுபவிப்போம்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தூது:

ஸ்ரீராமாயணத்தில்,திருவடி ஆஞ்சநேயர்
ஸ்ரீராமரின் தூதுவராக,இலங்கை அசோகவனத்தில் இருந்த சீதாப் பிராட்டிக்கு நற்செய்தி கொண்டு சென்றார்.மகா பாரதத்தில் சாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணரே பாண்டவ தூதராக கெளரவர் சபைக்குச் சென்றார்.
பக்தன் சென்ற தூது பலித்தது;பகவான் சென்ற தூது பலிக்கவில்லை !

ஆழ்வார்கள் பக்தி மேலீட்டால்,தங்களை எம்பெருமானிடம் சேர்த்துவிடும்படி பலரையும் தூது விட்டார்கள்.நெஞ்சு விடு தூதில் தம் நெஞ்சத்தையே தூது விட்டார்கள்.
பறவைகள்--குயில்,கிளி,நாரை--,
வண்டு,பூக்கள்,மேகம்,மழை ஆகிய வற்றைத் தூது விட்டார்கள்
திருமங்கை ஆழ்வார் காக்கை,
செம்போத்து,கோழி,பல்லிக்குட்டி ஆகியவற்றையும் தூது விட்டார் !!

ஆண்டாள் அனுப்பிய தூதுவர்கள்:

ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானிடம் கைங்கர்யம்(பறை) வேண்டிப் பிரார்த்தித்தார்.--
'பறை தருதியாகில்'
'பாடிப் பறை கொண்டு',
'இறைவா ! நீ தாராய் பறை',
"குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது,இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா !,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு,
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று"
"அங்கு அப்பறை கொண்ட ஆற்றை"

கைங்கர்யம் கிடைத்தாலும், ஆண்டாள் விரும்பியபடி, எம்பெருமானோடு சேர முடியவில்லை.அந்த ஆற்றாமையால் அவரோடு சேர வேண்டும், அவரை எப்படியாவது விரைவில் அடைந்து விட வேண்டும் என்னும் ஆர்த்தியில் விளைந்தவையே நாச்சியார் திருமொழி பாசுரங்கள்.பக்தி மிகத் தீவிரமானால் எப்படியாவது,யார் மூலமாவது எம்பெருமானை உடனே அடைந்து விட வேண்டும் என்னும் பேர்ஆர்த்தி யினால்,அவருக்குத் தூது விடுகிறார்.

ஆண்டாளின் தூதுவர்கள்:
1.காம தேவன் மன்மதன்
2.நெஞ்சு.
3.குயில்
4.மயில்
4.சங்கு(பாஞ்சஜன்யம்)
5.மேகம்.
6.மழை
7.கடல்
8.காந்தல் மலர்கள்
9.தோழிகள்

(-அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

1626500473613.png


1626500483480.png


1626500491174.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 25)

கண்ணபிரானின் திருவாய் அமுத அநுபவம் நித்யம் பெறுகின்ற திருச்சங்காழ்வானுக்கு"அவருடைய வாக்(வாய்) அம்ருதம் இருக்கும்படி என்ன"
என்பது நன்கு தெரியும் என்பதால்,அதை எனக்குச் சொல்வாயாக என்று அவனைக்
கேட்பதாக அமைந்தது இந்த முதல் பாசுரம்.முதல் பாசுரத்தில் "சொல் ஆழிவெண்சங்கே" என்று கேட்கும் ஆண்டாள் மற்ற எட்டு பாசுரங்களிலும் சொல்/கூறு என்றும் எங்கும் நேராகச் சொல்லவில்லை.அவற்றில் சங்காழ்
வானின் மேன்மை,குணங்கள்,எம்பெருமா
னோடு உள்ள நெருக்கம் ஆகியவற்றை உயர்வாகப் போற்றிப் பாடுகிறார்.
சங்காழ்வானை ஸ்தோத்ரம் செய்தால், அவர் மகிழ்ந்து,தான் கேட்ட விஷ்யத்தைச்
சொல்வார் என்னும்படி ஆகும்.

6-1"கருப்பூரம் நாறுமோ ! கமலப் பூ நாறுமோ !
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ !
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும், நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன்,
சொல் ஆழி வெண் சங்கே !"


விளக்கவுரை:

நல்ல வெண்மையான் நிறமும்,கம்பீரமும் உடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யம் என்னும் சங்காழ்வானே! குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்த கண்ண பிரானுடைய,திரு அதரத்தினுடைய
ரஸத்தையும்,பரிமளத்தையும் உன்னிடம் ஆசையோடு கேட்கின்றேன்.அவரது
அழகிய பவளம் போன்ற சிவந்த திரு அதரமானது,பச்சைக் கற்பூரம் போல்
பரிமளிக்குமோ? அல்லது,தாமரைப் பூப் போல பரிமளிக்குமோ? இனிப்பான
ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?--
இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்வாயாக "

கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?

பச்சைக்கற்பூரம் சிறந்த வாசனையோடு இருந்தாலும்,சிறிதளவு அதிகமானாலும்,
எறிச்சு,வெட்டியதாய் இருக்கும்--உறப்பாக,எரிக்கும்படியான காரம் உடைத்ததாய். தாமரை மலர்கள் பறித்தபின் சிறிது நேரம் நல்ல,அலர்ந்த மணமுள்ளதாக இருந்தாலும்,ஆறிக் குளிர்ந்து நிலையில் அதன் மணம் அவ்வளவாக இருக்காது.மிகவும் கொண்டாடத்தக்க மணமுள்ள இந்த இரண்டு பொருட்களுக்குமே இப்படிப்பட்ட குறை இருக்கிறது.எனவே வேறு பொருட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.ஆனால் இது போல எந்தக் குறையும்,எப்போதும் இல்லாதபடி"சர்வ கந்த:"முடையவர் அல்லவா எம்பெருமான்!
சர்வவித நறுமணங்களுக்கும் நறுமணத்
துவம் கொடுப்பவரே பகவான் அன்றோ? அவருடைய திருஅதர நறுமணத்துக்கு முன் கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? அத்தகைய திரு நறுமணம் எப்படி இருக்கும் என்று சொல் வெண்சங்கே !

திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ ?

திரு அதரங்களைத் தாண்டி, பவளச் செவ்வாய்க்குள் புகுந்து(பெரிதாக ஊதும் வண்ணம்) உள்ளே அனுபவிப்பதைப் பற்றிக் கேட்கிறார்.
'சர்வ கந்த:'என்பது போலே –
'சர்வ ரச :'என்பதாம்.

கந்தத்துக்கு கற்பூரம்/கமலப்பூ என்று சொன்னபடி,ரசத்துக்கு தேன் போல/கன்னல் போலே இருக்குமோ என்று விகல்பித்து கேட்க முடியாதவளாய் இருக்கிறார்.திருஅதர மணத்தை நுகரும் போது பேச முடியும்.ஆனால் பவளச் செவ்வாய் ரசத்தைப் பருகுகையில் பேச முடியாதன்றோ?
"வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே,வாய்ச்சுவையாய் திகைக்க வைக்கையாலே
இரண்டாவதாக (ஒரு உதாரணம் சொல்லிக்)கேட்க மாட்டாதவள் ஆனாள்"

திருப் பவளச் செவ்வாய் –

எம்பெருமானின் அழகிய திருவாய் அதரங்கள்,ஆண்டாளின் கண் பார்வை
யில் பட்ட போதிருந்தே, அவரது பார்வை அங்கிருந்து வேறெங்கும்--அவரது மற்ற அவயங்கள் மீதும் படாமல் அங்கேயே நிலைத்து நின்றது; ஏனென்றால் பெருமானின் திருப்பவளச் செவ்வாய் சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயமாய் இருக்கிறபடி யாதலால்.--விஷ்யாந்தரங்கள் அல்ல !!

சப்த, ஸ்பர்ச, ரூப,ரச,கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே எல்லா இந்திரியங்க
ளுக்கும் இரை போடுவது அன்றோ இந்த
த்திருப்பவளச் செவ்வாய்?

சப்தம்--சங்கை வாயில் வைத்து ஊதுவதால்.
ஸ்பர்ச--சங்கு திருஅதரங்களில் படும் போது.
ரூபம்--திருப்பவள--சிவந்த நிறமுடைய--
செவ்வாய் அழகு.
ரசம்--பவளச் செவ்வாயின் அமிர்தம்.
கந்தம்: திருஅதரங்கள்/செவ்வாயின் நறுமணம்.

மருப்பொசித்த மாதவன்:

குவலயாபீடம் என்னும், கம்சனின் பட்டத்து யானையின்(மதம் பிடித்த யானை) கொம்பை அநாயசமாக முறித்துக் கொன்றவர்.பிராட்டிமாருக்கு எம்பெருமானின் வீரதீர பராக்கிரமச் செயல்கள் உகப்பானவை.கர,தூஷண யுத்தத்தில் பதினாலாயிரம் அரக்கர்களை தனி ஒருவராக நின்று போரிட்ட ராமரின் வீரத்தால் உகந்த சீதாபிராட்டி அவரை அணைத்துக்கொண்டது போல,
மதயானையின் கொம்பை முறித்துக் கொன்ற கண்ணபிரானின் வீரத்தால் உகந்த ருக்மணிப்பிராட்டி அவரை அணைத்துக் கொண்டார்.ஆதலால் மருப்பொசித்த "மாதவன்".
இங்கு,மாதவன் மாதவன் என்றால் எம்பெருமானின் வாய்ச்சுவைக்கு உரியரான பிராட்டிமார்களின் ஸ்ரீயபதி
என்பதுவுமாம்.

வாய்ச் சுவையும் நாற்றமும்:

அநுபவ சமயத்திலே, நாற்றம்--நறுமணம் முற்பட்டதாய் இருந்தாலும்
அநுபாஷிக்கிற--அந்த அநுபவத்தைச் சொல்கிற இடத்தில் ரசம் முற்பட்டு, கந்தம் பிற்பட்டு இருக்கிறது.பொதுவாக ஒருவர் படித்து,கேட்டு அநுபவித்த விஷயங்களை
பிறரிடம் சொல்லும்போது அண்மையில் (இறுதியாகக்) அநுபவித்த விஷயத்தை முதலில் சொல்வது போல.

விருப்புற்று கேட்கின்றேன் சொல்:

நான்,நீ பெற்ற பேற்றைக் கொண்டாடி மகிழ்கிறேன்.(உன் மேல்,பொறாமை சிறிதும் இல்லாமல்)உன் அநுபவத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள மிக விருப்ப
முடன் இருக்கிறேன்.
நீ சொல்வாய் என்று சங்கை,நியமனம் செய்யும் அதிகாரமும் ஆண்டாளுக்கு உண்டே ! சங்கு எம்பெருமானுக்கு சேவகம் செய்யும் அடிமையாதலால்,
அவரது திவ்யமகிஷியான ஆண்டாளும், அவரை அடிமை கொண்டு நியமிக்கி
லாம் என்னும் முறைப்படி சங்கு சொன்ன
படி செய்யும் என்று விருப்புற்று, 'சொல்'
என்று நியமிக்கிறார்.

எம்பெருமானின் சப்த, ஸ்பர்ச,ரூப,ரச,
கந்த அநுபவங்களில் விருப்புற்றுக் கேட்கிறேன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஆழி வெண்சங்கே:

கடலில் பிறந்து வளர்ந்த சங்கு--கடலின் ஆழத்துக்கும்,அகலத்துக்கும்,கம்பீர்யத்துக்கும் தக்கவாறு நீயும் பதில் சொல்ல வேண்டும்.கடல் போன்ற விசாலமான பரந்த மனம் கொண்ட நீ உன் அநுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே !
கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே--நிலப்பரப்பை விட மூன்றுமடங்கு அதிகப் பரப்பை உடைய கடல்,இந்த நிலம் சுபிட்சம் இருக்க பல வளங்களைத் தருகிறது; "ஆழியுட் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி" என்னும்படி உயிர் வாழத் தேவையான மழை பொழிய மூல காரணமாக இருக்கிறது.பல கடல்வாழ் உயிரினங்கள்/தாவரங்களை வாழ்விக்
கிறது.அந்த வகையில் கடலில் பிறந்த நீ தக்க பதில் சொல்லி என்னை உயிர் தரிக்கப் பண்ண வேணும்.

வெண் சங்கே :

உனது தூய வெண்மை நிறம் நெஞ்சிலே பட்டால் போலே,உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி--நெஞ்சுக்கு இதமாக
இருக்கும்படி சொல்ல வேண்டும்
பிரியமானவர்கள் விட்டுப் பிரிந்தால்,
பிரிவாற்றாமையால் தேகம் மெலிந்து வெளுத்துப்போவது இயல்பு.ஆனால் அவரை விட்டு விலகாமல், எப்போதும் அவரது அநுபவம் கிடைத்துக் கொண்டிரு
ந்தாலும் உன் தேகம் வெளுப்பு அடைந்து விட்டது.அவர் எங்கே பிரிந்து விடுவாரோ, என்று, இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூட,தேகம் வெளுக்கும்படி அவர் மேல் பிரியமுடைய நீ தான் எனக்குச் சரியான ஆள்.நான் அவரை விட்டுப் பிரிந்து வெளுத்திருக்கிறேனே ! எனது ஆற்றாமையைச் சரியாகப் புரிந்து,
அதைத் சேர்க்கும்படி பதில் சொல்ல வேண்டும்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருஆடிப்பூர உற்சவம் 7 ஆம் நாள்(நேற்று)--
ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்.

1628586894039.png


1628586903416.png


1628586912635.png


1628586921251.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 27)

7-2"கடலில் பிறந்து கருதாது, பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து, போய் ஊழியான் கைத்தலத்திடரில் குடியேறித்,தீய அசுரர்
நடலைப் பட முழங்கும்,தோற்றத்தாய் நற் சங்கே !"


விளக்கவுரை:

"அழகிய சங்கே! சமுத்திரத்திலே பிறந்து ,
அங்கிருந்து பஞசஜனன் என்ற அசுரனு டைய சரீரத்திற் போய் வளர்ந்து, இப்படி பிறந்த இடத்தையும், வளர்ந்த இடத்தை
யும்,நினையாமல் எம்பெருமானுடைய கைத்தலமாகிற உந்நத ஸ்தானத்திலே குடி புகுந்து,கொடியவர்களான அசுரர்கள் துன்பப்படும்படி ஒலி முழக்கம் செய்யும்
படியான மேன்மை/பெருமை உடையவ னாய் நின்றாய்"

கடலிலே பிறந்து "கருதாது" பஞ்சசனன்
உடலிலே வளர்ந்து :

1.கடலிலே பிறந்த தோஷத்தைக் கருதாது
பஞசஜனன் என்னும் அசுரனின் உடலிலே வளர்ந்து.
2.பிரளயத்தில் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தாரகம் ஆன கடல் மிகச்சிறந்த இடம் என்று கொண்டு,
உயர்ந்த இடத்தில் பிறந்தது கருதாது,
தாழ்ந்த அசுரனின் உடலிலே வளர்ந்து.
3.பகவானோடு ஒப்பிட்டால் கடலும்
பஞ்சஜனனும் மிகக் கீழ்நிலையில் உள்ளவர்கள்.ஆதலால் அங்கே பிறந்து,வளர்ந்தது கருதாது பகவான் கைத்தலத்தில் குடிகொண்டது.
4.பகவானின் மேன்மையைக் கருதாத/அறியாத--அகவாயில் (எம்பெருமான் மீது)துவேஷமேயாய்- அசுரன் பஞ்சஜனனின் உடலிலே வளர்ந்து.

5.இவ்வாறாக"சங்கே ! உன் தோஷம் காணாமல் வளர்ந்து,உயர்ந்த இடத்தில் நின்று கொண்டிருப்பது போல,அறியாத
பெண்களான எங்களிடம் உள்ள குற்றம் கருதாது--காணாது உபகரிக்க வேண்டும்.

பிறந்தவாறும்,வளர்ந்தவாறும்,இருந்தவாறும்:

சங்கு,கடலில் பிறந்து,அசுரனனின் உடலில் வளர்ந்து,எம்பெருமான் திருக்கையில் நித்யவாசம் செய்கிறதே?
சங்கு மட்டுமா இப்படி?

ஸ்ரீராமபிரான் அயோத்தியில் பிறந்து, சித்ரகூடத்தில் வளர்ந்து,பஞ்சவடியில் இருந்து வனவாசம் செய்தார் !

ஸ்ரீகிருஷ்ணர் மதுராவில் பிறந்து,
கோகுலத்தில் வளர்ந்து,துவாரகையின் மன்னனாக ஆண்டார் !

எம்பெருமானும் ஸ்ரீவைகுண்டத்திலே இருந்து,திருமாலிருஞ்சோலைக்கு வந்து,
நம்மாழ்வாரின் நெஞ்சிலே வந்து குடி கொண்டார்!(திருமாலிருஞ் சோலை மலை என்றேன்;என்ன ! திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்.)

ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து,
காஞ்சியில் வளர்ந்து,ஸ்ரீரங்கம் வந்து உபயவிபூதிகளுக்கும் உடையவராய்த் திகழ்ந்தார் !

போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறி :

பஞ்சஜனனின் உடலிலிருந்து போய்,
கால சேஷமான/காலக்கணக்குப்படி
படைக்கப்பட்ட வஸ்துக்களைக் கொண்ட
ஜகத்துக்கு, நிர்வாஹனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய கைத்தலத்திலே மேடை(திடர்) போட்டு அமர்ந்து கொண்டு.

தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே !

கண்ணபிரான் யது குலத்திலே பிறந்து,
சத்ருவான கம்சனின் அதிகாரத்தில் இருக்கிற திருவாய்ப்பாடியிலே வளர்ந்து,
காலயவன்,ஜராசந்தன் போன்ற அசுரர்களை முடிக்கும் விதமாய்,
ஸ்ரீ த்வாரகையை படை வீடாக--நாட்டின் தலைநகராகச்- செய்து அங்கே குடியேறி,
பின்னர் துரியோத நாதிகளை, மண் உண்ணும் படி செய்தார்.மகாபாரத யுத்தத்தில் எம்பெருமான் ஆயுதம் எடுக்கவே இல்லை.யாரையும் கொல்ல வில்லை; எம்பெருமான் துரியோதநாதி
களின் ஆன்மபலத்தை அழித்து மனதளவில் கொன்றுவிட்டார்.அதன்பின்
அர்ஜுனன் அவர்கள் தேகத்தை
அம்பெய்து கொன்றான்.பகவான் எப்படி அவர்களின் ஆன்மபலத்தைக் கொன்றார்? குருஷேத்ரத்தில் யுத்தம் ஆரம்பிக்கும் முன் கண்ணன் பாஞ்சஜன்யத்தை எடுத்து சங்கநாதம் செய்தார்.அந்த சங்கநாதத்தின் கம்பீர ஒலியால்,கெளரவர்களின் சப்தநாடியும் அடங்கி,உடம்பு உளுத்துப் போனார்கள். அப்போதே அவர்கள் மனதளவில் மாண்டு
விட்டனர்.இவ்வாறாக தீய அசுரர் நடுங்கி ஒடுங்கும்படி, முழங்கிய நற்சங்கே !

நல் சங்கே :

எம்பெருமான் குற்றத்தையும், குணத்தை
யும் கணக்கிட்டு கர்ம அநுகுணமாக அதற்கேற்ப ஸ்ருஷ்டிப்பார்.கர்ம வினைகளுக்கேற்ப ஜீவர்களின் ஆத்ம யாத்திரையை அமைப்பார்.ஆனால் நீ எங்கள் குற்றங்களை/அறியாத்தனத்
தைப் பார்க்காதே,பகவானை உகக்கும் எங்கள் குணங்களை மட்டுமே கொண்டு,
எங்களுக்கு நன்மை--கிருபையால் எங்களை எம்பெருமானோடு சேர்த்து வைத்தல்- செய்யும் நல்ல சங்கே !!(இத்தகு நல்லவனான உனக்கு,ஐ இரு கரையரான எம்பெருமான் ஒப்பு ஆவாரோ !?!? )

இப்பாசுரத்தின் மூலம் சங்காழ்வானுக்கு ஆண்டாள் உணர்த்துவது:

பகவான் கண்ணனை உகவாதாரை அழியச் செய்யும் தன்மையுடைய சங்கே ! அவரை உகப்பாரை வாழ்விக்க வேண்டிய
கடமையும் உனக்கு உண்டல்லவோ? உகவாத துரியோதனாதிகளை உன் சங்கநாதத்தாலேயே நடுங்கச் செய்த நீ தானே குன்டினாபுரத்தில்,கண்ணபிரான் வரவை எதிர் நோக்கித் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்த ருக்மணிப்பிராட்டியின்.உயிரைக் காத்தாய்--ஊருக்குச் சற்று அருகில் சென்றதும் நீ இனிய நாதம் செய்து,கண்ணன் வந்து விட்டார் என்று ருக்மணிக்கு அறிவித்தாய்.எங்கள் உயிரையும் அவ்வாறு காப்பாற்றுவாயாக!

நீ பிறந்து வளர்ந்தது போலே இருக்க வேணும் காண் ! உன் கார்யங்களும் !
உன் பிறப்பும் வளர்ப்பும் பிறருக்காவே அன்றோ ! (கடலுக்காகவோ,பஞ்சஜனனுக்காகவோ அல்லாமல் எம்பெருமானுக்காக அன்றோ)
உன் கார்யங்களும் பரார்த்தமாக வேண்டுமே--பரர்--பிறர்;அந்தப் பிறரான எங்களுக்கு நன்மை பயப்பதாய்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாந தாசன்)
படங்கள்:
ஆடிப்பூரத் திருநாளில்---
1.2:ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,
ரங்மன்னார் தங்கத்தேரில்.
3.திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில்
4,5,6:ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்.


1628746404142.png


1628746412597.png


1628746420779.png


1628746429816.png


1628746437947.png


1628746447379.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 28)

7-3"தட வரையின் மீது சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்,
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்,
குடியேறி வீற்று இருந்தாய் !கோலப் பெரும் சங்கே !"

விளக்கவுரை:

"அழகிய பெரிய சங்கே!சரத் கால சந்திரன் பௌர்ணமி தினத்தில்,
பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல,நீயும் வடமதுரை
யிலுள்ளார்க்கு அரசானான கண்ண பிரானுடைய திருக்கையில்
குடி புகுந்து உன் மேன்மையெல்லாம் விளங்கும்படி வீற்றிருந்தாய்"

தட வரையின் மீத சரற் கால சந்திரன்:

பெரிய உதய கிரியின் மேலே, சரத் காலத்திலேயே--மேகங்கள் இல்லாத நிர்மலமான ஆகாயத்தில்- எல்லா கலைகளும் நிரம்பின,பூர்ண சந்தரன் வந்து தோன்றினாற் போலே.

இடை உவாவில் வந்து எழுந்தால் போலே:

உவா என்பது பெளர்ணமி,அமாவாசை இரண்டையும் குறிக்கும்.பூரண சந்திரன்
தோன்றியதைச் சொல்வதால் இங்கு, பெளர்ணமியைக் குறிக்கிறது.இடை என்பது சதுர்தசிக்கும் பிரதமைக்கும் நடு என்றபடி.

நீயும் வடமதுரையார் மன்னன்,
வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய்!

தடவரைத் தோள்களுடைய பெரிய கரிய மலை போன்ற எம்பெருமானது திருக்
கரத்தில்,பூரணசந்திரன் போல, எந்தத் தோஷமும் இல்லாத,தூய வெண்மை நிறமுடைய நீ குடியேறி கம்பீரமாக வீற்றிருக்கிறாய்.உன் ஐஸ்வர்யம்--செல்வாக்கு,பெருமை இருந்தபடி தான்
என்னே ?!

வடமதுரையார் மன்னன் --எம்பெருமானின் மேன்மை /பரத்துவத்தைக் குறிக்கிறது !
வாசு தேவன் --நீர்மை/செளலப்யத்தைச் சொல்கிறது.!
கையில்-'வடிவு அழகு/செளந்தர்யத்தைக் காட்டுகிறது !

யாருக்குமே கிட்டாத பேறான எம்பெருமானது திருக்கையில் நித்ய
வாசம் செய்யும் மேன்மை,பிரியமான
வர்களைச் சேர்த்து வைக்கும் நீர்மை,
கோலப் பெரும் சங்கு என்று சொல்லும்படியான வடிவழகு ஆகிய குணங்கள் உனக்கும் உள்ளனவே !

"வடமதுரையில் உள்ள ஜனங்களுக்கு நிர்வாஹகனாய், ஸ்ரீவாசுதேவர் திருமகனாய் இருக்கிறவனுடைய திருக்கையிலே,ஒரு காலமும் பிரியாத படியாக குடியேறி,உன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி எல்லாம் தோற்றும் படியாய் இருந்தாய்"

கோலப் பெரும் சங்கே:

மிக அழகான நீ எம்பெருமானது,
திருக்கையிலே ஏறி வீற்றிருப்பது, அவருடைய அழகுக்கு அழகு கூட்டுவ
தாய் உள்ளது.பச்சைமாமலையான அவர் மீது,பூரண சந்திரன் போல வெண்மையும்,
ஒளியும் உடைய நீ நிற்பது,அவரது திருமேனி அழகைப் பிரகாசிக்க வைக்கிறது.
---------------------------------------

7-4:"சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்,
அந்தரம் ஒன்று இன்றி ஏறி, அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் ! வலம் புரியே !
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே !"


விளக்கவுரை :

"வலம்புரிச் சங்கே! தாமோதரன்-கண்ண பிரானது திருக்கையில்,சந்திர மண்டலம் போலே,இடைவிடாது இருந்து கொண்டு,
அவருடைய காதில்,ஏதோ ரஹஸ்ய மந்திரம் பேசுகிறாப் போல் நிற்கிறாய்.
செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற இந்திரனும்,செல்வத்தில்-ஐஸ்வர்யத்தில் உனக்கு இணையாக மாட்டான்"

சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்:

"செருக்கராய் இருக்குமவர்கள் கையிலே குளிரிக் குடம் -பனி நீர்க் குப்பி –
பிடித்துக் கொண்டு இருக்குமா போலே"
--- இளவரசர்கள்/பெரும் செல்வந்தர்கள்
வெயில்,களைப்பு தங்களைப் பாதிக்காத வண்ணம்,வெளியே செல்லும்போது தங்கள் கையில் ஒரு பனிநீர்த் தென்றல் விசிறியை எடுத்துச் செல்வதைப் போல,எம்பெருமான் திருக்கையில் எப்போதும் இருந்து,சந்திர மண்டலம் போல் குளிர்வித்துக் கொண்டிருக்கும் சங்கே !

தாமோதரன் கையில் :

எம்பெருமானைக் கண்டால்,அவர் வயிற்றில் யசோதை கட்டிய தாம்புக் கயிற்றின் தழும்பாலே,அவர்
ஒரு தாயாருக்கு பவ்யனாய் வளர்ந்தார்-என்று தெரிவது போலே,உன்னைக் கண்டால் இவனும் பவ்யன் என்று தோற்றும்படி இருக்க வேண்டாவோ--
எங்கள் வேண்டுகோளைப் புரிந்து
செயலாற்றி எங்களுக்குப் பவ்யனாய் இருக்க வேண்டுமே,என்றும்,ஆனால் அவ்வாறு நீ இல்லையே என்பதையும் உணர்த்துகிறார்கள்.

அந்தரம் ஒன்று இன்றி ஏறி:

அவரை விட்டுச் சற்று நேரமும் பிரியாமல்,
அவர் திருக்கையில் ஏறி--
அவர் விரும்பி இருப்பார் பலரும் உண்டு. ஆனால் அவர்களைப் போலே சிற்சில சமயங்களில் பிரிந்து இருக்காமல்,
வேண்டும் போது கூடி,வேண்டாத போது விலகாமல் அவர் திருக்கையை விட்டு விலகாமல் இருக்கிறாய்.சங்கொடு, சக்கரம் என்று ஒன்றாகக் கொண்டாடப் படும் சக்கரம் எம்பெருமான் கருதுமிடத்
துக்குச் சென்று பொருதுவிட்டு,மீண்டும்
திரும்புகிறது.ஆனால் நீ அவரோடேயே இருக்கும் பேறு பெற்றாயே!
"ஒரு விச்சேதம் இன்றிக்கே
ஒருத்தருக்கு ஓர் ஆபத்து வந்தவாறே கை விட்டுப் போவாரைப் போல் அல்லாமல்"

அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும்:

அவரது இடக்கையில் எப்போதும் நின்று கொண்டு,அவரது செவிக்கு மிக அருகில் இருந்து அவரது செவியில் ஏதோ ரஹஸ்யமாக மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போல் இருக்கிறாயே !
நீ அவரிடம்,"உம்மைப் பிரிந்து ஆற்ற மாட்டார் பலருண்டு"என்றுசொல்லுவது போலே இருக்கிறது.(அவர்களுக்கு வேண்டியதை அர்த்தம் கொள்கிறார்கள்)

கொள்ளுகையும்,கொடுக்கையும்:

மந்திரம் கொள்வாயே என்று சொன்னாலும்,மந்திரம் கொடுத்து,
உத்திரம்(பதில்) கொண்டது அர்த்தமாகிறது.'உம்மைப் பிரிந்து ஆற்ற மாற்றாமல், ஆண்டாள்,ஆய்ச்சிமார்கள் போல பலர் தவிக்கிறார்களே; அவர்கள் துயர் தீர்க்க வேண்டும்' என்று கொடுத்து,
' அவர்களைப் பிரிந்து அவர்களை விட நான் அதிகம் தவிக்கிறேன்; ஆனாலும் அவர்களின் ஆர்த்தியைப் பெருக்குவதற்
காகவே நான் உடனே முகம் காட்டாமல் இருக்கிறேன்' என்று எம்பெருமான் சொன்னதைக் கொள்கிறது சங்கு !

வலம் புரியே:

பொதுவாக இடம்புரி சங்குகளே அதிகம்;வலம்புரி சங்குகள் அரிதானவை.
மற்ற சங்குகளைப் போலல்லாமல்,நீ வலத்திலே புரிந்தால் போலே,
கார்யத்திலும் வேறு பட்டு இருக்க வேணும் காணும்(எங்கள் துயர் தீர்க்க வேண்டும்)

இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே:

தான் நினைத்த போது மழை பெய்விப்பது,அல்லாத போது தவிர்த்து விடுவது என்னும் பெரும் சக்தி இந்திரனுக்கு இருப்பதாக நினைத்து,
இந்திரன் தான் மிக அதிகமான செல்வம்/அதிகாரம் படைத்தவன் என்பது ஆய்ச்சியர் பார்வையில்.இந்திரனுக்கு அன்றோ ஆயர்கள் பெருவிழா எடுத்தார்கள் ! அந்த இந்திரனும் உனக்கு--நீ பெற்றிருக்கும் செல்வமான பகவானோடு நித்யவாசம் செய்வதைக் கருதினால்--ஒப்பாக மாட்டான்.

ஆய்ச்சியர் பார்வை அல்லாமல்
பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஆண்டாளின் பார்வையில்:

இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாக இருந்து நடத்துபவர் எம்பெருமானே ஆதலால், "இந்திர ப்ராணாதி சப்தங்களும் பகவத் வாசகங்கள் என்னும் வாசனையாலே சொல்லிற்றாதல்"இங்கு இந்திரன் என்று ஆண்டாள் ஸ்ரீமந் நாராயணனையே சொல்கிறார் என்பதாம்."மேலிருங் கற்பகத்தை"(பெரியாழ்வார் திருமொழி 4-3-11),"இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினுமே வேண்டேன்"(திருமாலை-2) என்று பாடியபடி.எனவே எம்பெருமானே கூட உன்னுடைய செல்வத்துக்கு ஒப்பாக மாட்டார் !!!

பகவானுடைய "ஸ்வா தந்த்ர்யம்"என்னும் செல்வம்,உன்னுடைய "பாரதந்த்ர்யம்" என்னும் செல்வத்துக்கு ஈடாகாதே.
அவரது ஸ்வாதந்தர்யம் மாறக் கூடியது: ஒரு ஜீவாத்மா அவரிடம் சரணம் அடைந்தால்,அவர் அந்த ஜீவனிடம் பாரதந்தர்யமாக இருக்கத் தலைப்படு கிறார்.ஆனால் உன்னுடைய பாரதந்தர்
யமோ என்றும் மாறாதது; நித்யமானது.
"ஒருவன் அனுகூலித்த வாறே அழியும் அது -ஸ்வா தந்த்ர்யம் – இறே
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று நிலை நின்றதாய்த்து இது--பாரதந்தர்யம்"
ஸ்ரீராமர் கோசல நாட்டு மன்னராக முடி சூடிக் கொண்ட பின்,லஷ்மணனை இளவரசாக முடி சூடச் சொன்னார்.
ஆனால் லஷ்மணன் முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.என்றும்,ராம கைங்கர்யம் செய்யும் சேவகனாகவே இருப்பேன் என்று,இளவரசு செல்வத்தை மறுத்தவர்,"லஷ்மணோ லஷ்மி சம்பன்ன"
என்று கொண்டாடப்பட்டார்.

"பெருமாள் முடி தவிர்ந்தார் –
இளைய பெருமாள் வகுத்த முடி சூடினார்(பெருமாளுக்கே பாரதந்தர்யமாக இருப்பேன் என்று வகுத்த முடி)"

லக்ஷ்மணருக்கு இணையாக, பாரதந்தர்யம் என்னும் லஷ்மி சம்பந்தத்தைப் பெற்ற சங்கே,எங்கள் பாரதந்தர்யத்தையும் எம்பெருமானிடம் சொல்லி எங்கள் துயர் தீர்ப்பாய்.!!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
திரு ஆடிப்பூரத்தில் திருப்பாவை நாச்சியார்:
1.திருவல்லிக்கேணி
2.திருஎவ்வுள்(திருவள்ளூர்)
3.திருக்கோவிலூர்.
4.திருநாராயணபுரம்.

1628922638315.png


1628922645882.png


1628922654412.png


1628922662156.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 29)

7-5"உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை,
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் !
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்,
பன்னாளும் உண்கின்றாய், பாஞ்ச சன்னியமே !!"

விளக்கவுரை :

"பாஞ்சசன்னியம் என்னும் சங்கே!
ஒரே கடலில்,உன்னோடு கூடவே
வாழ்ந்து கொண்டிருந்த மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று,ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லாத போது
நீ ஒருவன் மாத்திரம்,ஸர்வ ஸ்வாமியாய் எழுந்தருளியிருக்கும்,கண்ணபிரானுடைய திருவாயின் அமுதத்தை,பல காலமாகப்
பருகிக் கொண்டிருக்கும்--நீயே பெரும் பாக்யசாலி !"

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை:

நீ பிறந்த கடலில் பிறந்து வாழும் மற்ற உயிரனங்கள்--மீன்,திமிங்கலம் முதலானவை,
பொருட்கள்--முத்து,பவளம் முதலானவை
ஆகிய விஜாதீய (உன் இனத்தில் சேராதவை) பதார்த்தங்கள்,மற்றும் உன இனத்தைச் சேர்ந்த பல்வேறு சங்குகள்-சஜாதீய பதார்த்தங்கள்.

இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் :

இவ்வாறான மற்ற பதார்த்தங்களை என்ன,ஏது என்று யாரும் எண்ணா
திருக்கும் போது, நீ ஒருவன் மட்டும் இத்தகைய உயர்ந்த இடத்தை அடைந்து வாழும் பேறு பெற்றது எப்படி? காட்டில் எத்தனையோ மரங்கள் இருந்தாலும் கண்ணபிரானின் புல்லாங்குழலாக ஆன பெருமையை மூங்கில் பெற்றபடி ! நந்தவனத்தில் எத்தனையோ மலர்கள் பூத்தாலும் எம்பெருமானின் திருவடிகளுக்கு தாமரையின் ஏற்றத்தைச் சொன்னபடி !

ஒரு தேசத்திலே உன்னோடு சேர வாழ்ந்திருப்பவர்களை,அவர்களும் ஸ்வரூபம் பிரகாசிக்க,பெருமையுடன் வாழவேண்டும் என்று எண்ணக் கடவார் இல்லை காண் !

மன்னாகி நின்ற :
🙏🙏🙏🙏🙏🙏
"ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் விஷ்ணுர்" -என்கிறபடியே என்றும் என்றும் எப்போதும் ஆளும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்.
மதுசூதன் :

இது பகவானின் ஒரு திருநாமம் மாத்திரமாய் இராமல்,ஆஸ்ரிதருக்கு களை யறுத்துக் கொடுக்குமவன்
ஆய்த்து.மது,கைடபர் போன்ற விரோதிகளை அழித்து அடியார்களின் துயர் தீர்ப்பவர்.(எங்கள் துயர் தீர்க்காமல் இருக்கிறாரே !)

வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே !

அவருடைய திருவாயில் ஊறும் அமுதத்தை நித்யமாய்-எப்போதும் அநுபவிக்கும்படியாக நீ பெற்ற பாக்கியம் தான் என்னே ! அதை அநுபவிக்கும் உரிமை உடையவர்களான நாங்கள் அந்த அநுபவம் கிட்டாமல் தவித்திருக்க,
நீ நித்ய அனுபவம் பெற்றுக் கொண்டிரு க்கிறாயே !

பாஞ்ச சன்னியமே !

இங்கு இப்படி விளித்தது,தனக்குக் கிடைக்கவில்லையே என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு.
வேதியர்கோன் பட்டர்பிரானான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்த நான்,கடலில் பிறந்து அசுரன் வயிற்றில் வளர்ந்த உன் காலில் விழும்படி ஆகி விட்டதே. உயர் குடிப்பிறப்புக்கு ஒரு வாழ்ச்சி இல்லையே !

இதனால் பகவானின் சாம்ய குணம்-- எந்த வேறுபாடும் பார்க்காது,யாருக்கு வேண்டுமானாலும் அநுக்ரஹம் செய்யும் குணம்--உணர்த்தப்படுகிறது.
——————————————————–

7-6"போய்த் தீர்த்தமாடாதே, நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான்,கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு,
சேய்த்தீர்த்தமாய் நின்ற,செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம்.பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே !"


விளக்கவுரை:


"வலம்புரிச் சங்கே! நீண்ட நெடுந்தூரம் கஷ்டப்பட்டு, வழி நடந்து போய்க் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களிலே
நீராட வேண்டியிராமல்,நாரத சாபத்தாலே மரமாய் நின்ற இரட்டை மருத மரத்தை
சாய்த்து முறித்துத் தள்ளின கண்ண பிரானுடைய திருக் கைத்தலத்தின் மீது ஏறி, அங்கே குடிபுகுந்தாய்.பாவனம் மிகுந்து, அதி பரிசுத்தமாக எழுந்தருளி யிருக்கும்தாமரை போலச் சிவந்த,
அழகான கண்களையுடைய, எம்பெருமானின் திருவாய் அமுதம் என்னும் புண்ணிய தீர்த்தங்களுக்கு எல்லாம் புண்ணியமான உயர்ந்த தீர்த்தத்தில் நீராடும் பாக்யம் பெற்றாய் "

போய்த் தீர்த்தமாடாதே :

கங்கை,யமுனை,சரயு, முதலான
புண்ணிய நதிகளில் நீராட,ஆயிரம்காதம், ஐந்நூற்று காதம் நடந்து யாத்திரை போய் அங்குள்ள ஆறு, குளம்,ஊற்றுகளில் முழுகி வரவேண்டிய தேவை இல்லாமல்

நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே:

நாரதரின் சாபத்தால் பல ஆண்டுகளாக இரண்டு மருதமரங்களாய் நின்றனர் நளகூபரன்,மணிக்ரீவன் என்னும் இரண்டு அசுரர்கள்.யசோதையால் உரலில் கட்டப்பட்ட பாலகிருஷ்ணர்,
யசோதையிடமிருந்து தப்பிக்க உரலை
யும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து
ஓடினார்.உரல் அந்த மருத மரங்களை அசைக்க அவை முறிந்து விழ,அசுரர்கள் சாப விமோசனம் பெற்றனர்.சிறு குழந்தையாக இருக்கும் போதே அவர்களது சாபம் தீர்த்த தீர்த்தன்கையில் குடியிருக்கும் சங்கே, எங்கள் சாபத்தை
யும் தீர்த்து வைக்கச் செய்வாயாக !

ஏறிக் குடி கொண்டு:

கண்ணபிரான் அவதரிக்கும் போதே,
நான்கு திருக்கரங்களுடனும்,சங்கு, சக்கரங்களை ஏந்தியவாறும் தோன்றி னார்.அவரது அவதார ரகசியம் கம்சனுக்குத் தெரியக்கூடாது என்று கருதிய வசுதேவர்,"உபசம்ஹர;
உபசம்ஹர" --'மறைத்துக்கொள்' என்று வேண்ட,கிருஷ்ணர் அவ்வாறே
மறைத்துக் கொண்டார்.நாம் மறைந்து நின்றதால் தானே,எம்பெருமானைப் பல அசுரர்களும் தாக்க முற்பட்டனர்;
இனிமேல் மறையாமல்,அவர் கையில் முன்னால் நின்று,அவருக்குத் தீங்கு நினைப்போரை நடுங்கச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்ததாம் !
"நாம் மறைந்து நாலு நாள் நிற்கையால் இறே,இப் பிரமாதம் புகுந்தது என்று-
இனி ஒருநாளும் பிரிய ஒண்ணாது என்று திருக் கையை விடாதே வர்த்திக்கிறான் ஆய்த்து"

சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்:

மிகப்பரிசுத்தமான,அதி பாவநமான கிடைத்தற்கரியதாய் எட்ட முடியாத நெடுந்தூரத்தில் உள்ள சிறந்த தீர்த்தமாக விளங்கும் செந்தாமரைக் கண்ணனான சர்வேஸ்வரன்.

"சேய்த்தீர்த்தமாய் நின்ற"என்ற அடைமொழி செங்கண்மாலுக்கும் ஆகலாம், செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தத்துக்கும் ஆகலாம்.

தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் :

கடலில் அமுதம் படும் துறையில் நீராடுவது போல,புண்ணிய நதிகளில் பூர்வாசார்ய ஸ்வாமிகள் நீராடிப் புனிதம் அடைந்த துறைகளில் நீராடுவது போல(சங்கணித்துறை,ஆளவந்தார் படித்
றை,தவராசன் படித்துறை போல), எம்பெருமானது திருமுக மண்டலம் என்னும் நீர்(மை)ப்பரப்பில் சிறந்த துறையான வாழ்க்கையில் நின்று தீர்த்தமாடும் பேறு பெற்றாய் !

வலம்புரியே :

அவருடைய வாயமுதம் பருகும் அநுபவத்தில் ஏற்றம் பெற்றபடி,
சந்நிவேசத்திலும்--இருக்கும் இருப்பிலும் ஏற்றம் பெற்றதைச் சொல்வது.
எல்லோரும்(இடம்புரிகளாக) எங்கெங்கோ போய்த்தீர்த்தமாட, நீயோ(அரிய வலம்புரியாக) இருந்த இடத்தில் இருந்தே, புண்ணிய தீர்த்தங்களுக்கெல்லாம் புனிதமான
எம்பெருமானின் வாய்த் தீர்த்தத்தில் நீராடும் பேறு பெற்றாய் !

எம்பெருமானின் வாய்த்தீர்த்தம்:

எம்பெருமானின் வாய்த்தீர்த்தத்தால் புனிதமடைந்த யமுனை ஆற்றை "தூய பெருநீர் யமுனை"என்று கொண்டாடு கிறார் ஆண்டாள். கண்ணபிரான் யமுனை ஆற்றில்,வாய் கொப்பளித்தும்/நீராடியும் மகிழ்ந்ததால்,அவரது வாய்த்தீர்த்தம் சேர்ந்து,யமுனை "தூயபெரு நீர்" ஆயிற்றாம்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.மதுசூதன் வாயமுதம்...உண்கின்றாய்.
2.சேய்த்தீர்த்தமாய் நின்றசெங்கண்மால்..
...கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு.
3,4: வலம்புரிச் சங்கு.

1628998059385.png


1628998067189.png


1628998076284.png


1628998083132.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 30)

7-7:"செங்கமல நாண் மலர் மேல்,தேன் நுகரும் அன்னம் போல்,
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய,
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்,
சங்கரையா ! உன் செல்வம் சால அழகியதே !!"


விளக்கவுரை:

"அப்போதலர்ந்த செந்தாமரைப் பூவில் படிந்து தேனைப் பருகுகின்ற அன்னப் பறவை போன்று,சிவந்த திருக் கண்களை
யும், கறுத்த திருமேனியையும் உடைய கண்ணபிரானது,அழகிய கைத் தலத்தின் மீதேறி கண் வளர்கின்ற
சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன்னுடைய செல்வமானது மிகவும்
சிறந்தது காண்"

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் :

செந்தாமரையில் அப்போது அலர்ந்த செவ்வி மலர் மேலே,அன்னம் படிந்து அமர்ந்து,(அன்னம் அமர்ந்து தேன் பருகுமளவு பெரிய தாமரை)தேனைப் பருகுவது போல.--அப்போது அலர்ந்த மலரில் வடியும் தேன் தான் மிகச்
சிறந்ததாம்.சிவந்த தாமரை
யில்,கருஞ்சிவப்பு நிறத்தில் ஊறும் தேனைப் பருகும், வெள்ளை அன்னப்
பறவை போல, கருநீல வண்ணனின் திருக்கரத்தின் சிவப்பு உட்புறத்தில் அவரது அநுக்ரஹம் என்னும் தேனைப் பருகும் வெண்மையான சங்கு ! பாஞ்சஜன்யம் என்னும் பெரிய சங்கு கைத்தலத்தில் சுகமாக அமரும் அளவு பெரிய சிவந்த கையுடைய எம்பெருமான்.

செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய அங்கைத் தலமேறி :

"வாத்சல்ய பிரகாசகமான திருக்கண்
களையும்,தாபம் அடைய ஆறும்படி குளிர்ந்த வடிவையும் உடைய ஸ்ரீ வஸூ தேவர் திருமகன்"

"அஹம் அன்னம்,அஹம் அன்னம்--
பகவானுக்கு அடியேன் அடிமை;அவருக்கு போக்யமான வஸ்து, என்று சொல்லி வந்த சங்கு அநுக்ரஹமாகிய தேனைக்
குடித்தபின்,அஹம் அந்நாத அஹம் அந்நாத--அடியேன் அடிமை இல்லை;
நான் உம்மை அநுபவிக்க வந்திருக்கிறேன் என்று அகங்காரத்தில் சொன்னாலும் அந்தக் குற்றத்தைக் காணாமல் குணமாகக் கொள்ளும் வாத்சல்யம் கொண்ட செங்கண்

கருமேனி....அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்:

அழகிய திருக்கையிலே ஏறி அவருடைய அளவற்ற அநுக்ரகத்தைப் பெற்ற சங்கு உண்ட மயக்கத்தில் இடம்,வலம் எங்கும் புரண்டு உருளுமளவு பெரிய அழகிய கை.அவருடைய கரும்பச்சைத் திருமேனி யில்,உள்ள அங்கங்கள் திருவடிகள்,
திருக்கரங்கள்,திருக்கண்கள் எல்லாமே ஒரு கரும்பச்சைத் தடாகத்தில் பூத்த தாமரை மலர்கள் போல.அந்த அழகிய தாமரைக் கையில் தேன் பெருகும் அன்னம் போல வெண்மையை உடைத்தான பாஞ்சஜன்யம்.

சங்கரையா:

சங்குகளுக்கு அரையன்--அரசன்/தலைவன்--'புள்ளரையன் கோயில்' என்று திருப்பாவையில் பாடியது போல !
ஸ்ரீராமர்,சுக்ரீவனுக்கு மகாராஜராக முடி சூட்டுவதற்கு முன்பே,அவரை வானரராஜனே என்று வால்மீகி அழைத்தது போல ! ஜடாயுவையும் கழுகு அரசன் என்று அழைத்தாற் போல !
வேறொரு கோணத்தில்,
"வானர ராஜர்,கழுகு அரசர் போலே,
சங்கரையா என்று அவனுக்கு எம்பெருமானோடு உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறார்"

பகவத் பிரத்யாசத்தியத்தாலே--பகவானுக்கு மிக நெருக்கமாக இருப்ப தால்,உன்னுடைய செல்வாக்கைக் கண்ட மற்ற சங்குகள் எல்லாம் உன் காலிலே விழுந்து,"நீ தான் எங்கள் அரசன்/அரையன்" என்று வேண்டி ஏற்றுக் கொண்டபடி உள்ளதன்றோ உன் ஐஸ்வர்யம்.

உன் செல்வம் சால அழகியதே:

பாசுரம் 7-4 ல் "இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே "என்ற சொன்ன ஒப்பீடு ஒன்றுமில்லை என்று சொல்லும்படி,உன்னுடைய செல்வம்/செல்வாக்கு மிகச் சிறந்ததாக உயர்ந்ததாக உள்ளதே !!

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்).

படங்கள்: செங்கண் திருமேனி வாசுதேவன்--ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள்,திருவெள்ளறை.

1629086350405.png


1629086361125.png


1629086371117.png
 
ஸ்ரீ:
ஆடி ஆனந்தம்--"ஆண்டாள் தூது!!!
(பதிவு 31)

7-8:"உண்பது சொல்லில், உலகு அளந்தான் வாய் அமுதம் !
கண் படை கொள்ளில், கடல் வண்ணன் கைத் தலத்தே !
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் !
பண்பு அல செய்கின்றாய், பாஞ்ச சன்னியமே !!"


விளக்கவுரை:

"பாஞ்ச சன்னியம் என்னும் சங்கே!,
நீ உண்பது என்ன வென்றால், உலகங்க ளை அளந்தவனான,எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம் !
நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் போன்ற நிறத்தை யுடையனான எம்பெருமானுடைய திருக் கையிலே !
இப்படி,உனக்கு ஊணும், உறக்கமும் அங்கேயாய் இருப்பதனால் பெண்
குலத்தவர்கள் அனைவரும்,உன் விஷய மாக,பெரிய கோஷம் போடுகிறார்கள்--எங்கள் ஜீவனத்தை(நாங்கள் உண்பதை/படுத்துக் கொள்ளும் இடத்தை), இவனே கொள்ளை கொள்ளுகிறான் என்று கூச்சலிடுகிறார்கள்--.இப்படி அவர்கள் வருந்தும்படி, அநியாயமான காரியத்தைச் செய்கிறாய்.
இது உனக்குத் தகுதி அல்ல.!"

உண்பது சொல்லில்,உலகு அளந்தான் வாய் அமுதம் ,கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே !

"நீ உண்ணும் படி சொல்லவா?
உறங்கும் படி சொல்லவா?
வாயது கையதான ஐஸ்வர்யம் அன்றோ உன்னது"--நீ இருக்குமிடமான பகவானின் கையும்,அமுதம் பருகும் அவரது திருவாயும் மிக அருகில் அமைந்தபடி.
அன்றிக்கே, நீ கையிலே அமிர்தம் வாங்கி வாயிலிட்டு உண்ட பின்னும்,கையிலு
ள்ளது குறையாதபடி,வாயிலுள்ளதும் குறையாத படியுமான அமிர்தப் பிரவாகம்.
சேஷபூதர் ஆன அடியார்கள் எல்லாரும் பொதுவாக ஆஸ்ரயிப்பது எம்பெருமானின் திருவடிகளில்.ஆனால் உனக்குக் கிடைத்திருப்பதோ
"அடி சூடும் அரசு அல்லவே – வாக் அமிர்தத்தை யாய்த்து புஜிக்கிறது"

வாயாலே ஊட்ட உண்டு(எம்பெருமான் வாயில் வைத்து ஊதும்போது,வாயாலே ஊட்டுகிறார்),நன்றாக உண்டபின், அங்கேயே இருக்கும் அவரது கைத்தலம் என்னும், செளகர்யமான படுக்கையில்,நீ
ஸ்ரமஹரமான வடிவைக் கடைக் கணித்துக் கொண்டு(ஒருங்களித்து சுகமாக இருக்கும் நிலையில்)சாய்ந்து படுத்திருக்கும் அழகு தான் என்னே !
போக்யமான பிரசாதத்தை உண்டுவிட்டு, அங்கேயே படுத்துக் கிடப்பாரை(மீண்டும் எழுந்து,உண்டு மீண்டும் படுத்து) போலே !

அன்றிக்கே பெருமாள் பிரசாதமான பூ,சந்தனம் முதலானவற்றைச் சூடிக் கொண்டு கோயில் வெளிப்பிரகாரத்தி லேயே கிடந்து இருப்பாரைப் போலே !

பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் :

எம்பெருமானின் திருவாய் அமிர்தமும் அவரது பேரழகு வடிவமுமே,ஜீவனமாய்-
உயிர் வாழக் காரணமாய் இருக்கிற ஆய்ச்சிமார் முதலாக, பெண்ணாகப் பிறந்தவர்கள் அனைவரும்,கூட்டமாகக் கை தூக்கி ஆட்டி,அசைத்து உன்னைத் திட்டிக் கூச்சலிடுகிறார்கள்."எங்கள் ஜீவாதாரத்தை,இருப்பிடத்தை நீ ஒருவனே ஆக்கிரமித்துக் கொண்டாய்" என்று.

திருவாய்ப் பாடியில் உள்ள கோபிகை
களும்,வடமதுரைப் பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து கூச்சலிடுகிறார்
களாம்! கிராமத்துப் பெண்களான தங்களை விட்டு,மதுரா நகரத்துக்குச் சென்ற கண்ணபிரான் ஆய்ப்பாடிக்குத் திரும்பவே இல்லை.மதுரா நகரத்து, நாகரிகமான பெண்கள், கண்ணனை ஈர்த்துத், தங்கள் ஊரை விட்டுச் செல்லாமல் செய்து விட்டனர் என்று,
அவர்கள் மேல்,ஆய்ப்பாடி ஆய்ச்சியர்கள் கோபமாக இருந்தனர்.ஆனால் தற்போது தங்கள் இருவர் இடத்துக்கும் போட்டியாக இந்த சங்கு வந்து விட்டதே என்று அனைவரும் சேர்ந்து சங்கைச் சாடுகிறார்கள் !!

பண்பு அல செய்கின்றாய் :

பகவத் விஷயத்திலே ஈடுபட்ட நீர்மை/இரக்கம், உடையராய் இருப்பார் செய்வது அல்ல, நீ செய்வது ! பாகவதர்களாகிய எங்களோடு சேர்ந்து, கூடியிருந்து குளிராமல் நீ மட்டும் தனியாக அனுபவிப்பது பண்பு அல்ல !பகவானுக்கு நெருக்கமாக உள்ளவர்கள்,
"இனியது தனி அருந்தேல்" என்னும்படி
பகவானை "நமக்கு -என்று தனி அனுபவிப்பார் இல்லை காண்"

பாஞ்சசன்னியமே !

"உன்னைச் சொல்லி என்ன பயன்? உன் பிறப்பு அப்படி" என்கிறார்.

"வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்"என்று திருத்தகப்பனார் பெரியாழ்வார் பாடிய படியும்,"போதுவீர் போதுமினோ,
நேரிழையீர் ! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்கள்"என்று தாம் திருப்பாவையில் பாடியபடியும்,
அடியார்களோடு கூடி இருந்து குளிரும் உயர்ந்த குணம் அவர்களுக்கு சிறந்த குடிப்பிறப்பால் வந்தது.ஆனால் "கடலில் பிறந்து,அசுரன் வயிற்றில் வளர்ந்த உனக்கு இந்தப் பெருமையான குணம் எங்ஙனம் வாய்க்கும்?"

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
1.உலகளந்தான்,கடல் வண்ணன்-- கைத் தலத்தே கண்படை கொண்ட சங்கு !
2.பெண் படையார்.

1629168511721.png


1629168536328.png
 
Back
Top