• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Aadi 18 am Perukku

ஆடி பதினெட்டாம் நாள் ஸ்பெஷல் ஆடிப் பெருக்கு‌விழா

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக காலகாலமாக முழு உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

காவிரியில் பொங்கிப் பெருகி வரும் புதுவெள்ளம் புத்துணர்வு தரும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவிரி ஆறு செழிக்க வைப்பதால் காவிரியை - தங்கள் வீட்டுப் பெண்ணாக மதித்து மக்கள் வழிபடுகிறார்கள்.

இதனால் காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆடி பெருக்கு திகழ்கின்றது.

காவிரி பொங்கிப் பெருகிப் பாய்வதற்குக் காரணம் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான்.

எனவே காவிரி பூஜையில் அவருக்கு இஷ்டமான காப்பரிசியும் விளாங்கனியும் நாவற்பழமும் கண்டிப்பாக இருக்கும்.

காவிரி பாயும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மாவட்டங்களில் இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

ஐந்து ஆறுகள் பாயும் தஞ்சையில் திருவையாறு காவிரியின் புஷ்ய மண்டப படித்துறை மற்றும் ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபப் படித்துறை ஆகியன ஆடி பெருக்கு வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றவை.

இங்கு புதுமண தம்பதிகள் அதிகளவில் வந்து வழிபடுகிறார்கள்.

ஆடிப்பெருக்கு அன்று வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆறு குளம் நதி ஆகிய முக்கிய புண்ணிய நீர் நிலைகளில் நீராடுவதைப் பெரும் பேறாகக் கருதுவர்.

புது மணப்பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றி புதிய மஞ்சள் கயிற்றுடன் புதியதாக மாற்றிக் கொள்வர்.

பெரும்பாலும் மூத்த சுமங்கலிகள் புதிய மஞ்சள் சரடு அணிவிப்பர்.

ஆடி பெருக்கு அன்று காவிரியில் குளித்து பூஜை செய்வது விசேஷமானது என்பதால் காலையில் பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் படித்துறையில் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர்.

அந்த இடத்தை சுத்தம் செய்து அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து வைத்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

பூஜையில் காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம், எலுமிச்சங்கனி, காதோலை கருக மணி, வாசமுள்ள மலர்கள், வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து தூப தீப ஆராதனையுடன் கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர்.

பூஜை முடிந்ததும் காவிரியில் மஞ்சள் மற்றும் பூக்கள், காதோலை கருகமணி ஆகியவற்றை தாமரை இலையில் வைத்து அகல் விளக்குடன் மிதக்க விடுவர்.

சில இடங்களில் மாலை நேரத்தில் - விளக்கேற்றி பூஜை செய்து தாமரை இலையில் விளக்கினை வைத்து - காவிரியில் மிதக்க விடுவர்.

காவிரி பெருகி வரக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்வதும் பூஜையில் தேங்காய் பால் பொங்கல் நைவேத்யம் மற்றும் தேங்காய், புளி, தயிர் சாதங்கள் என சித்ரான்னம் படைத்து வழிபடுவதும் உண்டு.

நதிக்கரையில் கூடும் புதுமணத் தம்பதிகள் பட்டு வேட்டி பட்டுச் சேலை அணிந்து திருமண மாலைகளை ஆற்றில் மிதக்க விட்டு புது வெள்ளம் போல வாழ்வில் என்றைக்கும் மகிழ்ச்சி பெருக வேண்டும் என்று வேண்டுவர்.

திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர்.

ஸ்ரீரங்கத்தில் ஆடிப் பெருக்கு அன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.

அங்கே அரங்கனின் சார்பில் பட்டுப் புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை ஆகிய மங்கலப் பொருட்கள் அனைத்தும் யானை மீதேற்றி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, காவிரி ஆற்றின் நீரில் சீதனமாக விடப்படும்.

ஆடிப்பெருக்கு நாளன்று திருவயாரில் ஸ்ரீ அறம் வளர்த்தநாயகியும் எம்பெருமான் ஐயாறப்பரும் புஷ்ய மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வர்.

அங்கு தீர்த்தவாரி நடக்கும்.

நீரின்றி அமையாது உலகு
ஆடிப்பெருக்கின் புது வெள்ளத்தில் யோகிகளும், சித்த புருஷர்களும் ஒளி வடிவாக நீராடி, காவிரி அன்னையை வணங்குவதாக ஐதீகம்.

எனவே, காவிரியில் நீராடி ஏழை எளியோர்க்கு தான தர்மங்களைச் செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம்.

ஆடிப்பெருக்கு பூஜையை காவிரிக் கரையில் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் திருவிளக்கேற்றி வைக்கவும்.

ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட்டு சுத்தமான தண்ணீரால் நிறைத்து அதனை விளக்கின் முன் வைத்து தண்ணீரில் வாசமுள்ள பூக்களை இடவும்.

ஏதாவது ஒரு சித்ரான்னம் செய்து நிவேதனமாக வைத்து சாம்பிராணி தூபம் நெய் தீபம் காட்டி கற்பூர ஆரத்தி செய்து சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தால் சகல செளபாக்யமும் கிடைக்கும்..

கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, பொருணை எனும் புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபடவும்.

பின் செம்பிலுள்ள வீடு முழுதும் மாவிலை கொண்டு தெளித்து உள்ளங்கை அளவு தீர்த்தப் பிரசாதமாக அருந்தவும். புனித நீர் மீதமிருந்தால் செடி, கொடிகளின் வேரில் ஊற்றி விடவும்.

சீரும் சிறப்பும் பெற்ற காவிரி - வரும் ஆண்டுகளில் - முன்பு போல பொங்கிப் பெருகி வர வேண்டும்.

என்றும் குன்றாத செல்வச் செழிப்புடன் மக்கள் வாழ்வதற்கு காவிரியே கதி..

நடந்தாய் வாழி காவேரி!..
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் !

பலன் தரும் ஸ்லோகம் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் பெற

ஸ்நானம் செய்யும் போது இந்த ஸ்லோகத்தை சொன்னால் ப்ரஹ்மாவின் கமண்டலத்திலிருந்து கங்கை ஜலம் நேராக நம் தலையில் விழும் பாக்கியம் பெற்றவராக ஆவோம்.

நதிஸ்தோத்ரம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாசனம்
பாகீரதி வாரணாஸி யமுநா ச ஸரஸ்வதீ பல்குநி சோணபத்ரா
ச நர்மதா கண்டகீ ததா கயாப்ரயாகே ஸரயூஸ் த்ரிவேணி மணிகர்ணிகா
க்ருஷ்ணவேணீ பீமரதி, கௌதமி பயநாசிநி அக நாசி வியத்கங்கா
துங்கபத்ரா பலாபஹா குண்டீ ஹைமவதீ சைவ வரதா ச குணுத்வதீ
வேத்ரவதீ வேதவதீ காயத்ரீ கோசிகீ ததா குந்தா மந்தாகிநீ சைவ
க்ருதமாலா ஹர்த்ருதா மஞ்சரீ தபதீ காளீ ஸீதா சாலகநந்திநீ
ஸ்த்தாச்ரமச்ச ஸிம்ஹாத்ரீ புண்டரீக மதோத்பலம்
ஸ்வாமி புஷ்கரணீ சைவ ஸத்ய புஷ்கரணீ ததா
சந்த்ர புஷ்கரணீ சைவ ஹேமபுஷ்கரணீ ததா
கௌமேதகீ குருக்ஷேத்ரம் பதரீ த்வாரகா ததா

பொருள்:

பாகீரதி, வாரணாசி, யமுனை, சரஸ்வதி, பல்குநி, சோணபத்ரா, நர்மதை, கண்டகீ, கயா, ப்ரயாகை, சரயூ, திரிவேணி, மணிகர்ணிகா, க்ருஷ்ணவேணீ, பீமரதி, கௌதமி, வியத்கங்கா, துங்கபத்ரா, பலாபஹா, குண்டீ, ஹைமவதீ, வேத்ரவதீ, வேதவதீ, காயத்ரீ, கோசீகீ, மந்தாகிநீ, தபதீ, ஸ்வாமி புஷ்கரணீ, ஸத்ய புஷ்கரணீ, சந்த்ர புஷ்கரணீ, ஹேம புஷ்கரணீ, கௌமேதகீ, குருக்ஷேத்ரம், பதரீ, த்வாரகா ஆகிய எல்லா புண்ணிய நதிகளுக்கும் நமஸ்காரம். என் பாவங்கள், மன விகாரங்கள் முதலான அழுக்குகளை நீக்கி என்னைப் புனிதனாக்குவீர்களாக, நமஸ்காரம்.

ஆடிப்பெருக்கு தினமான ஆடி பதினெட்டாம் தேதியன்று எந்த நீர்நிலையிலாவது நீராடி, இத்துதியைப் பாராயணம் செய்தால், மேலே
குறிப்பிட்ட அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும். பாவங்கள் தொலைந்து, புண்ணியம் பெருகும்.

ஸ்ரீரங்கா நாதா

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

1627911550861.png
 

Latest ads

Back
Top