18 புராணங்களில் ஒன்றான கருட புராணம்

Status
Not open for further replies.
18 புராணங்களில் ஒன்றான கருட புராணம்

1. தோற்றுவாய்: 18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூதமா முனிவர் வந்தார். அவரை முனிவர்கள் வரவேற்று உபசரித்து வணங்கினர். நால்வகை புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல விஷ்ணு சம்பந்தப்பட்ட சாத்வீக புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினர். ஸ்ரீமந் நாராயணனை முன்பொரு சமயம் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வான் பணிந்து உலக நன்மையைக் கருதி ஒரு கேள்வியைக் கேட்க, பகவான் அதற்குத் தக்க விடையளித்தார். அவ்வாறு திருமால் கருடனுக்குக் கூறியதையே உங்களுக்குக் கூறுகிறேன் என்று கூறி கருட புராணத்தைக் கூற ஆரம்பித்தார். கருடபுராணம் அளவில் பெரியதோ, சிறியதோ அல்லாமல் நடுத்தரமானது. இது பூர்வ காண்டம் என்று இருபெரும் பகுதிகளைக் கொண்டது. பல அத்தியாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் முற்பகுதி பெரியது, பிற்பகுதி சிறியது.
உலகில் ஜீவன்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணம் என்ன? ஏன் பிரேத ஜன்மம் அடைகிறது? நரகம், சொர்க்கம் அடைவோர் யார்? ஏன்? நற்கதி கிடைப்பதற்கான வழி யாது? என்றெல்லாம் கேட்க, திருமால் புன்னகையுடன் விடை தரலானார்.
பிறந்தவன் இறப்பது நிச்சயம் என்பதை உணர வேண்டும். நமனுக்குப் பயந்து நல்ல தருமங்களை ஆற்றி அறநெறிப்படி வாழவேண்டும். வருணா சிரம தருமப்படி அதாவது அவரவர் குல மரபுப்படி வழுவாது நடப்போர் போகம், யோகம் ஒருங்கே பெற்று நீடுழி வாழ்ந்து இறுதியில் தமக்குரிய உலகை அடைவர். பற்றற்றவர்களாய், அறிஞர்களாகி பகவானைத் தியானித்து நல்வழியில் நற்பேறு பெற முயற்சி செய்ய வேண்டும் என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். இத்தகைய அவர் ஆக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வாகும்.
2. திருமாலின் அவதாரங்கள்: காசியப முனிவருக்குக் கருடனே இப்புராணத்தைக் கூறினார். நான் வியாசரிடமிருந்து இதனைக் கேட்டேன் என்று மேலும் கூறலானார். முதலில் மஹாவிஷ்ணுவின் இருபத்து இரண்டு அவதாரங்களைப் பார்ப்போம்.
1. முதன் முதலில் குமாரன் வடிவில் தோன்றி பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து தவம் செய்தார்.
2. பூவுலகை மீட்க வராக அவதாரம் எடுத்தார்.
3. பலவகைத் தந்திரங்களை உலகில் பரப்ப தேவரிஷியாய்த் தோன்றினார்.
4. நரநாராயணனாய் அவதரித்தார். (நரன், ஆவேசாவதாரம், நாராயணன் - அம்சாவதாரம்)
5. கபிலராக அவதரித்து சாங்கிய யோகத்தைத் தனது சீடர் அசூரிக்குக் கற்பித்தார்.
6. அத்திரி, அனுசூயை தம்பதிகளுக்கு மகனான தத்தாத்திரேயர் அவதாரம்.
7. சுவயம்பு மன்வந்ரத்தில் ருசி, ஆகுதியோருக்கு மகனாகத் தோன்றி பல யாகங்களைச் செய்தார்.
8. அடுத்து நபி, மேரு புத்திரனால் உருக்கிரமன் என்ற பெயரில் அவதரித்தது பற்றற்ற நிலையில் இருந்து அனைவர்க்கும் வாழ்வின் நன்னெறிகளைத் போதித்தார்.
9. பிருது என்ற பெயரில் தோன்றி பூவுலகத்திற்குத் தானியங்களையும், மூலிகைகளையும் வழங்கினார்.
10. மச்சாவதாரம் எடுத்து பிரளயத்திலிருந்து வைவஸ்வத மனுவைக் காத்தருளினார். வேதங்களையும் ரக்ஷித்தார்.
11. தேவாசுரர்கள் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைய வாசுகியை நாணாக்கி, மந்தர மலையை மத்தாக்கி கடையும்போது மலை உள்ளே அழுந்திட, அதனை ஆமை வடிவில் நிலைப்படுத்திய கூர்மாவதாரம்.
12. அடுத்து உலகில் மருத்துவம் பரப்ப எடுத்த தன்வந்திரி அவதாரம்.
13. அசுரர்களை ஏமாற்றி தேவர்களே அமுதம் பெறுமாறு பங்கிட எடுத்த அழகிய, கவர்ச்சியான மோஹினி அவதாரம்.
14. இரணியனைக் கொன்று, பக்தன் பிரகலாதனுக்கு அருளிட எடுத்த நரசிம்மாவதாரம்.
15. மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி அருள மூன்றடி மண் கேட்க எடுத்த வாமனாவதாரம் (திருவிக்கிரமா அவதாரம்)
16. தந்தையாகிய ஜமதக்கினியைக் கொன்ற கார்த்தவீர்யாஜுனனையும், இருபத்தோரு தலைமுறை மன்னர்களையும் அழிக்கத் தோன்றிய பரசுராமர் அவதாரம்.
17. பராசரர், சத்தியவதி இருவருக்கும் மகனாகத் தோன்றிய வேத வியாசர்.
18. நாரதராக அவதரித்து தேவர்களுக்கு வாழ்க்கை முறை தத்துவங்களை உபதேசித்தது.
19. இராமாயணக் காவியத் தலைவனாக விளங்கிய இராமாவதாரம்.
20. கோகுலத்தில் கிருஷ்ணனாக அவதரித்து கம்சன், சிசுபாலன் தந்தவக்கிரர்களை அழித்துப் பாண்டவர்க்கு உதவுதல், கீதோபதேசம் முதலியன.
21. புத்த மதத்தைத் தோற்றுவிக்க புத்தராகத் தோன்றினார் திருமால்.
22. அடுத்து கல்கி அவதாரம் எடுக்கப்போவதும் அவரே.
(சனகர், பலராமன் அவதாரமும் அவரே என்று சிலர் கூறுவர்) அத்துடன் கஜேந்திரனுக்கு அருளத் தோன்றியது. வாலகில்யரிஷி (விராட் ஸ்வரூபமாய் விளங்குவது எல்லாம் அவனது அவதாரமே என்பர்.)
புராணத் தோற்றம் பற்றிய வேறுவிதமான வரலாறு
நாரதர், தட்சன், பிருகு முதலிய ரிஷிகள் பிரம்மலோகம் செல்ல அவர்களுக்குப் பிரம்மன் உபதேசம் செய்தார். பறவைகளின் அரசனாகிய கருடன் தவமியற்றி விஷ்ணுவைத் திருப்தி செய்ய, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று பகவான் கேட்க, கருடன் தான் பெருமானின் வாகனமாக வேண்டும் வரம் கேட்டான். மேலும் பாம்புகள் தன்னைக் கண்டு அச்சமுறவேண்டும் என்றும், புராணம் இயற்றும் ஆற்றல் வேண்டும் என்று கேட்டுப் பெற்றான். இவ்வாறாக கருடன் இப்புராணத்தை விஷ்ணுவிடம் கேட்டு, பின்னர் பிரம்மனுக்குக் கூறினார். பிரம்மனிடம் இருந்து வியாசரும், அவர் மூலம் மற்றோரும் அறிந்தனர்.
3. படைப்பு (அ) சிருஷ்டி மற்றும் உத்தம மார்க்கம்
எங்கும் பிரம்மம் இருந்தது. எங்கும் நீர் சூழ்ந்திருந்தது. திடீரென்று ஒரு பொன் முட்டை (அண்டம்) தோன்றியது. அதனுள்ளிருந்து விஷ்ணு வெளியே வந்து நான்முகனைத் தோற்றுவிக்க, பிரம்மன் படைப்புத் தொழிலைத் துவங்கினார். படைக்க பிரமன், காக்க விஷ்ணு, அழிக்க சிவன் என்று ஆயிற்று. இந்த மூன்று வடிவமும் பிரம்மமே ஆகும். பிரம்மா முதலில் தேவர், அசுரர், மித்ருக்கள், மானவர்களைத் தோற்றுவித்தார். மற்றும் ராக்ஷசர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும் சிருஷ்டிக்கப்பட்டனர். பிரம்மன் முடியிலிருந்து பாம்புகள், மார்பிலிருந்து செம்மறி ஆடுகள், வாயிலிருந்து வெள்ளாடுகள், வயிற்றிலிருந்து பசுக்கள், பாதங்களிலிருந்து குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் தோன்றின. உடலில் உள்ள உரோமங்களிலிருந்து மூலிகைகள் உண்டாயின. அவர் வாயிலிருந்து அந்தணர்கள், புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்கள், தொடைகளிலிருந்து வைசியர்கள், பாதத்திலிருந்து சூத்திரர்கள் தோன்றினர்.
விஷ்ணு கருடனுக்குக் கூறிய செய்திகள் : உலகில் உள்ள எண்பத்து நான்கு லக்ஷ யோனி பேதங்களில் இருபத்தோரு லட்சம் முட்டையிலிருந்து தோன்றும் அண்ட சங்கள், செடி, கொடி போன்ற இருபத்தோரு லட்சம் உற்பிச வகையைச் சார்ந்தவை. அடுத்து இருபத்தோரு லட்சம் சராயுச வகையைச் சார்ந்தவை. அதாவது கருப்பையிலிருந்து வெளி வருபவை. கொசு போன்ற வியர்வையிலிருந்து தோன்றுபவை இருபத்தோரு லட்சங்கள் சுவேதசம் எனப்படும்.
சிறந்த மானிடப் பிறவி
அனைத்திலும் மானிடப் பிறவியே சிறந்தது. எல்லா உயிர்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி ஆகியன உரியவை. ஞானம் மனிதனுக்கு மட்டும் உரித்தானது. கிருஷ்ணசாரம் என்ற கருப்பு நிற மானிகள் வசிக்கும் இடம் புண்ணிய பூமி. அதில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பர். அந்தப் பூமியும் தேவர்களையும், முனிவர்களையும், பிதுர்க்களையும் பூசிப்பவர்களுக்கு மிக்க நன்மை உண்டாகும். பூதம், பிரேதம், பைசாசங்களுக்கு ஆவியுருவம் மட்டுமுண்டு. தேகம் பெற்ற ஜீவர்கள் சிறப்புடையவர்கள். மானிடர்களில் பிராமணர்கள் சிறப்புடையவர். அவர்களில் பிரம்ம ஞானம் உடையவர்கள் அதிகச் சிறப்புடையவர்கள் ஆவர். சுவர்க்க மோட்சம் அடைய மானிடப் பிறவியே காரணமாகிறது. மண், பெண், பொன் ஆசை கொண்டவன், அதர்மம் புரிபவன், சுயநலக்காரனாகி தீவினைகளைச் செய்பவன் ஆகியோர் நரகத்தை அடைகின்றனர். எனவே கல்வியும், வித்தையும் கற்றவனும் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானேந்திரியங்கள் நாசமடைய உதவுகின்றன.
உத்தம மார்க்கம்
ஒருவன் செய்த பாவ புண்ணியங்களே ஒருவனுடன் மரணத்துக்குப் பின்னும் செல்லும். எனவே, தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். ஆகையால், உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தானதர்மங்கள் செய்வதும், முக்திக்குச் சாதனமான பரம பக்தி பிரபத்தி மார்க்கம் எனப்படும். அதுவே உத்தமமானதென்று பகவான் கருடனுக்குக் கூறுகிறார்.


To be Continued....
 
Status
Not open for further replies.
Back
Top