ஶ்ரீ மஹா கந்த சஷ்டி விரதம்

praveen

Life is a dream
Staff member
ஶ்ரீ மஹா கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக பக்தர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.


தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.


தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து,காப்புக்கட்டல்
அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.


பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.


கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.


ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள்


கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.


அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.


ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.


அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.
 
Back
Top