ரமணி ஹைக்கூ

Status
Not open for further replies.
27/11/2015
45.
புகையாய் ஓடும் முகில்
பௌர்ணமி நிலவு மூழ்கி எழும்
குழந்தை பார்க்கத் தாய்

46.
அந்தி நேர வான்
மரக்கிளைப் பறவைகள் மௌனத்தில்
அடங்காத புறாக்கள்

*****
 
47.
எலிக்குறி தொடர்ந்திடவே
கணினித் திரைமேல் சிறுபூச்சி
முகமலர்ச் சிறுவன் கை.

[எலிக்குறி = mouse pointer]

48.
குஞ்சுக் கால் நடக்கும்
கட்டெறும்பு வரிசை பற்றி
தும்பி வட்டமிடும்

*****
 
49.
முள்மரத்தில் கொக்குகள்
கறுப்பாய் ஒரு பறவை
பாடிக் களைத்த குயில்

50.
மழைநீர்த் தேக்கத்தில்
தலைகீழ் இயற்கை மனம் கவரும்
மனிதர் வழக்கம் போல்.

*****
 
52.
கண்ணாடி வில்லை
வெய்யில் குவிக்கும் இரு சிறுவர்--
சிறுமியின் கவிழ்த்த கை

53.
சூரியன் தலைக்கு மேல்
வாய்நீர் விசிறும் சிறுவர்கள்--
காலடியில் வானவில்

*****
 
54.
திருச்சி நெடுஞ்சாலை
மையிருள். பேருந்து பழுது--
மின்மினிப் புதர் விளக்கு!

09/12/2015
55.
தென்னையின் காய்ந்த மட்டை
இற்று நிலம் விழும் ஓசை--
கோழி கூரை தொடும்!

56.
ஆந்தைக்கண் விரித்து
ஆகாயம் நோக்கும் பொழுது--
ஒரே ஒரு நட்சத்திரம்!

*****
 
11/12/2015
57.
தொங்கும் சிறு கம்பி
அலகால் முயலும் காக்கை--
நுனிக்காலில் குழந்தை!

58.
கண்ணுடன் கண் நோக்கக்
காக்கையைப் பார்த்தாள் என் மனைவி--
மாடியில் போட்ட வடாம்!

*****
 
59.
வயல்சேற்றில் நகர்வது
வெள்ளைத் தாமரைப் பூக்களோ?
வாத்துகள் அணிவகுப்பு!

60.
ஜன்னல் கம்பியில் கண்--
வான்நின்று ஒரு நட்சத்திரம்
குழந்தை கண்ணில் விழும்!

*****
 
16/12/2015
61.
மின்விசிறி அருகே
கூரையில் நீரலைகள் ததும்பும்--
பல்லியும் பச்சோந்தி!

62.
அணிலை விரட்ட
முருங்கை மரத்தை ஆட்டும் குழந்தை--
தரையில் பூக்கோலம்!

*****
 
22/12/2015
63.
மரக்கிளைப் பறவைகள் சளசள
தூளியில் குழந்தை கண்பார்க்கும்--
தாயவள் கண்மூட!

64.
நாய் காலைத் தூக்கும்
கருவோலைப் பந்தல் பிரிப்பு--
பசுவுக்கு உணவு!

*****
 
65.
இருளில் சதுப்பு நிலம்
குழந்தைக் குரல்கள் காதில் விழும்--
கானாங் கோழிகள் குழு!

66.
சிறகடித்துக் குளிக்கும்
குருவித் திரள் எங்கே போயின?
நுண்கதிர் தரும் அழிவு!

*****
 
‪#‎ரமணி_ஹைக்கூ‬
67.
அலிமரக் கட்டை மேல்
ஊதா நிறத்தில் மீன் கொத்தி--
குரலில் திடுக்கிடும் குழந்தை!

68.
ஓயாது தேடும்
சின்னக் குருவி தேன்சிட்டு--
சீழ்க்கை காதுறுத்தும்!

*****
 
69.
கண்டது மேய்ந்த பசு
வாலை வீசி அசைபோடும்--
கால் நடுவே கொக்கு!

70.
கடுகுக் கண்ணுடன் அணில்
குழந்தை தின்ன வாயசைக்கும்--
மார்பில் முதுகில் கை!

*****
 
71.
தென்னையில் சலசலப்பு
விளக்கைப் போட்டுப் பார்த்தபோது--
குழந்தையின் ஆந்தை விழி!

72.
துரத்தும் கரையும் இனம்
பூனையின் வாயில் ஓர் காக்கை--
குழந்தை பரிதவிக்கும்!

*****
 
‪#‎ரமணி_ஹைக்கூ‬
06/01/2016
73.
அதிகாலை ஐந்து
துவாதசிநாள் வெண்பிறை நாட்டியம்--
சிறுமுகில் நட்டுவனார்!

74.
நிலா அருகிலோர் விண்மீன்--
உன்னிப் பார்க்கும் சிறுகுழந்தை
பற்றும் முந்தானை!

*****
 
‪#‎ரமணி_ஹைக்கூ‬
75.
மாமரம் மறைத்திருக்க
வடக்கில் சூரியன் அஸ்தமனம்--
ஓர் மாடி ஜன்னலில்!

76.
புதிதாய் வாசல் ராம்ப்
ஆசிர்வதித்தது பசு ஒன்று--
சாணி மூத்திரமாய்!

*****
 
#‎ரமணி_ஹைக்கூ‬
77.
’அப்பா, உஷ்!’ குழந்தை.
நுனிக்கால் உன்னிக் காட்டியது--
குட்டைநீர் பருகும் புறா!

78.
’கொக்குக் கெத்னை கால்?’
’நீ சொல்லு...’ ’நாலு!’
குழந்தை வரைந்த படம் காட்டும்!

crane-4.jpg

*****
 
22/01/2016
79.
மாலை மென்காற்றில்
சீராய் மூச்சு சிலந்தி வலை--
உள்ளே சிலந்தி உடல்!

80.
எங்கோ குயில் கூவும்
குழந்தை மகிழ்வுடன் எதிரொலிக்கும்--
குயில் மட்டும் இன்று

*****
 
Status
Not open for further replies.
Back
Top