பயணக் க(வி)தைகள்...

Raji Ram

Active member
பயணக் க(வி)தைகள்...

மயங்க வைக்கும் மலேசியா – 1


இறையருள் இருந்தால்தான் வரும் நெடும் பயணங்கள்;
குறையின்றிக் கிடைக்கும் பலவிதமாய் அனுபவங்கள்!

எண்பது தாண்டிய அன்னை பாஸ்போர்ட் எடுத்ததும்,
அன்புடன் அழைப்பு வந்தது மலேசியப் பயணத்துக்கு!

பல்கலைக்கழக dean ஆக பணிபுரியும் அண்ணன்
பல இடங்கள் சுற்றி வர ஆசைகாட்டி அழைக்க,

தேடல் பல இன்டெர்நெட்டில் செய்து, ஒரு வித
ஆவல் உந்த, நாங்கள் எண்ணினோம் பயணம் செய்ய.

புதிய அறிமுகமாய் சென்னை பினாங்கு பாதையில்
புதிய விமானங்கள் பறப்பது ஏப்ரல் மாதம் தொடங்க,

கொளுத்தும் அக்னி நட்சத்திர சூட்டையும் பாராது,
எடுத்தோம் டிக்கட்டுகள் மே பத்தாம் தேதி பறந்திட.

விருந்தும் மருந்தும் மூன்று நாள் எனினும், நன்கு
விருந்தோம்பும் அவர்களிடம் ஆறுநாட்கள் இருப்போம்!

சென்னை ஏர்போர்ட்டில் முதல் அனுபவமே
அன்னையை மிகவும் இக்கட்டில் மாட்டியது!

சக்கர நாற்காலிக்கு வேண்டுகோள் விடுத்தும்,
அக்கறையாகப் பணி புரியும் ஆட்களுக்கோ பஞ்சம்!

எங்கள் விமான அலுவலகமே திறக்காது மூடிக்கிடக்க,
தங்கள் வேலைகளையே அவரவர் பார்த்து நடக்க,

நேரம் செல்லச் செல்ல என்னவர் பரிதவிக்க,
ஓரமாய்க் கிடக்கும் டிராலியில் ஒன்றை எடுத்து,

‘ஏறுங்கள்’ என அன்னையிடம் கூறி, அதில் அமர்த்தி
வேறு வழியின்றி, ‘புறப்பாடு’ கதவு வரை உருட்டி,

முதல் கோணல், முற்றும் கோணல் ஆகக்கூடாதென
முதல் வேலையாக இறைவனை வேண்டி இருக்க,

ஒருவழியாக ஊழியர் ஒருவர் உதவி செய்ய வந்திட,
இருவர் சென்று போர்டிங் பாஸ் வாங்கி வந்தோம்.

பயணிகளின் கூட்டம் ஹஜ் யாத்திரையால் நிரம்ப,
பயம் வந்தது சரியாக விமானம் ஏற முடியுமா என்று!

நல்ல வேளையாக போர்டிங் பாஸ் எடுத்தவர்களை
அந்த வரிசைகளைத் தாண்டி வரவைத்து உதவினர்!

இருக்கையில் அமர்ந்ததும்தான் பயணம் உறுதியானது!
இருக்கிறான் மேலே ஒருவன் காத்திட எனப் புரிந்தது!

அதிகாலை தயாரித்த சிற்றுண்டியை உண்டபின்,
புதிதாகத் தயாரித்த காபியை வாங்க விழைய, நம்

இந்திய ரூபாயே கொடுக்கலாமே எனக்கூறிக் கையில்
ஏந்திய கால்குலேட்டரில் கணக்கிட்டு, மூன்று நூறு

நோட்டுக்களை வாங்கிய அழகி தந்தாள் மலேசிய
நோட்டுக்கள் நான்கு மட்டும் என்னவர் கைகளிலே!

அதற்குப்பின் பசியேது? அடுத்த உணவு வீட்டிலேதான்!
அதன்பின் காலி இருக்கைகள் பல கண்ட நாங்கள்,

அன்னையைப் படுக்க வைத்தோம் 3 இருக்கைகளில்.
தன்னை மறந்து இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்தார்.

சென்னை நேரத்தில் இரண்டரைமணி தொலைந்தாலும்,
சென்னை திரும்புகையில் அது திரும்பக் கிடைக்குமே!

மலேசிய நேரம் மாலை மூன்று மணிக்கு அடைந்தோம்
மலேசிய விமான நிலையத்தை, மன மகிழ்ச்சியுடன்!

பறக்கும் வழியில் பல குட்டித் தீவுகள். பச்சை
நிறத்தில் மரங்கள் அடர்ந்து இருக்க, சுற்றிலும்

கடல் நீரும் பச்சை, நீலமாய் மிளிர, அது கப்பல்கள்
கடலில் சிந்தும் எண்ணெய்க் கசிவுகள் என அறிந்தோம்!

இயற்கை அன்னைக்கு மனித இனத்தால் துயரமே!
செயற்கைச் சாதனங்களால் சுற்றுச் சூழல் மாசுபடுமே!

முடிந்தவரை காமராக்களில் இயற்கையின் அழகைப்
பதித்து வைத்தோம் பல அழகிய புகைப்படங்களாக!

வெய்யில் வெளியில் சுட்டெரித்தாலும், விமானத்தில்
வெய்யிலின் தாக்கம் துளிகூடத் தெரியவில்லை!

ஆங்கிலம் மலாய் மொழிகளில் மட்டுமின்றிப்
பாங்காகத் தமிழிலும் அறிவிப்புச் செய்கின்றார்!

செல்போன் – கைபேசி; lap top – மடிக்கணினி; என்று
சொல் வளத்தால் கொஞ்சம் அசரவே வைக்கின்றார்!

விமானத்திலிருந்து இறங்கும்போது, சக்கர நாற்காலி
விமானத்தின் படிகள் இறங்கியவுடனே கிடைத்தது.

நம்மையே தள்ளிச் செல்லுமாறு சொன்னாலும், அங்கு
நன்மை செய்யும் மனிதர்களைக் கண்டதும் நிம்மதியே!

வெளியில், அண்ணன் அழைத்துச் செல்ல நிற்க,
துளியும் அசதி தெரியாது வீட்டிற்குப் பயணித்தோம்!

தொடரும் ...
 
Last edited:
மயங்க வைக்கும் மலேசியா – 2


சுத்தத் தமிழ் மணக்கும் மலேசிய மண்ணில், நாம்
சுத்தமாக ஆங்கில மொழி மறக்கவும் வகையுண்டு!

ஒலியை மையப்படுத்தி எழுதும் சொற்களால்,
மொழி கொஞ்சம் மறப்பதும் இயற்கைதானே!

Express ஐ ekspres என, coffee ஐ kopi என
central ஐ sentral என எழுதுகின்றார் இங்கு!

ஒருவகையில் மிகவும் எளிதான ஆங்கிலமாயினும்,
மறுபடியும் சரியாக எழுத வருமோ என ஐயம் எழும்!

இன்னுமொரு விசேஷம் இந்த ஊர் மொழியில்
காபிக் கடை என்பதை கடை காபி என்றிடுவார் !

ஒரு சில நாள் இதேபோலப் படித்தால் என் பெயரை
ஒரு வேளை ஈஸ்வரி-ராஜ என்பேனோ என்னவோ!

அமெரிக்க நாட்டை முன்மாதிரியாகக் கொண்டாலும்,
அமெரிக்கா போல dry clean கழிவறைகள் இல்லை!

நிறைய நீர் வளம் இருப்பதால், இங்கு குழாய்களில்
நிறைய நீர் கொட்டுகிறது நயாகரா வெள்ளம்போல!

பொது மக்கள் உலவும் எல்லாயிடங்களிலும் கட்டாயம்
பொதுவான தொழுகை அறை அமைத்து வைத்துள்ளார்!

கைகால்களை சுத்தம் செய்து, வேளை தவறாது
மெய்யான பக்தியுடன் தொழுகை செய்கின்றார்!

மேலைநாட்டு பாணியில் சீன மக்கள் ‘சிக்’ உடை,
தலைவிரிகோலம் என வெளியில் உலவிடுவார்;

முகமதியர், உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிய
வண்ணமய அழகிய உடைகளில் வலம் வருவார்!

பார்வைக் குறை உள்ளவருக்கு, நடை பாதைகளில்
நேர்த்தியான ஜாலிகள் நெடுகிலும் வழி காட்டும்!

அந்த ஊரை வேடிக்கை பார்த்தபடி பயணம் செய்து,
வந்து சேர்ந்தோம் பல்கலைக்கழக வளாகத்துக்கு.

பல்கலைக் கழகம் உள்ளது 230 ஏக்கர் பரப்பில்;
பலவித வசதிகளுடன் பசுமையாக உள்ளது!

பாதுகாப்பு மிகுந்த இடமாகவும் இருக்கிறது;
பாதுகாக்க செக்யூரிட்டி செக்கிங் இருக்கிறது.

பயணக் களைப்புத் தீர சிற்றுண்டி உண்டபின்,
சயன நேரம் வரை அரட்டையில் மூழ்கினோம்!

பொறுமையாகத் தயாராகி, காலை உணவு முடித்து,
அருமையான பினாங் நகரம் மீண்டும் சென்றோம்!

மீண்டும் முன்தினம் வந்த அதே வழியில் சென்றாலும்,
மீண்டும் புது விஷயங்கள் பல அன்றும் அறிந்தோம்!

சுங்கை பெட்டானி என்ற இடத்தில் பல்கலைக் கழகம்.
அங்கிருந்து பினாங் நகரம் ஒருமணி நேரப் பயணம்.

மிக உயர்ந்த பாலம் ஒன்றைக் கடக்க வேண்டும்;
மிக எளிதாக கப்பல்கள் அடியில் நுழைந்து செல்லும்!

அருகிலேயே படகுத்துறை அமைந்துள்ளது; அதில்
அருமையான முறையில் வாகனங்கள் கடத்தப்படும்!

ஒருவழிக்கு ‘கப்பம்’ கட்டிச் சென்றால் மீண்டும்
வரும் வழிக்கு மீண்டும் கட்டணம் கிடையாது!

பாலத்தில் சென்று படகிலே திரும்பலாம்; அல்லது
படகில் சென்று பாலம் வழியே திரும்பலாம்!

முதலில் மலேசியரின் புத்தர் கோவில் சென்றோம்;
முதல் முறை கண்டு அதிசயித்தது புத்தர் சிலையே!

நூறு அடி நீளத்தில் நேர்த்தியாகச் செய்யப்பட்டு,
மாறுபட்ட தோற்றமாகவே அது அமைந்துள்ளது!

பலவித கை முத்திரைகளுடன் பல புத்தர் சிலைகள்,
பல பேர்களின் அஸ்தி ஜாடிகள் வைத்த அலமாரிகள்!

பழைய குருமார்களின் சிலைகளும் அங்கு உண்டு;
புதிய மெழுகுவத்திகளை ஏற்றிப் பிரார்த்தனை உண்டு!

நான்கு தலைகளுடன் பிரம்மா போல சிலையுண்டு;
நன்கு வடித்த யாளிகளும் வேறு சிலைகளும் உண்டு.

நமது எதிர்காலத்தை அறிய ஒரு சக்கரம் உள்ளது;
ஐம்பது காசுகள் கொடுத்தால், அதைச் சுற்றி விடலாம்.

எந்த எண் வருகிறதோ அதைப் பார்த்துக் கொண்டு
அந்த எண் காகிதம் எடுத்தால், நம் எதிர்காலம் உண்டு!

எதிரிலேயே சீனர்களின் புத்தர் கோவிலும் உண்டு;
எளிதிலே தெரிந்திடும் வேறுபாடுகளும் உண்டு!

முகத்தோற்றம் முதல், கோவில் வடிவங்கள் வரை,
மிக வேறுபட்டு அது அமைந்திருக்கிறது! நம்மவர்

இறைவன் திருவிளையாடல்களைப் படங்களாய்
நிறைவாக வைப்பதுபோல புத்தரின் படங்கள்!

அமைதியான சூழலில் அமைந்த கோவிலைக் கண்டு,
அருமையான பினாங் மீனாக்ஷி கோவில் சென்றோம்!

தொடரும் ...
 
Last edited:
மயங்க வைக்கும் மலேசியா – 3


சன்னதிகள் பெரிதாக மீனாக்ஷி, சுந்தரேஸ்வரருக்கு!
சன்னதிகள் உள்ளன வேறு பல தெய்வங்களுக்கு!

பதினெட்டுப் படிகளுடன் ஐயப்பன் அமர்ந்திருக்க,
அதியழகுடன் சரஸ்வதி, மகாலட்சுமி, முருகன் விளங்க,

பிரும்மா ஒருபுறம் இருக்க, ஈசன் சன்னதியைச் சுற்றி
பிரும்மாண்டமாய் எட்டு யானை முகப்புகள் இருக்க,

பெருமாள் சன்னதி அடுத்து இருக்க, சைவ வைணவ
ஒருமைப்பாடுள்ள கோவிலால் மனம் நிறைந்தது !

இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டிய கோவில் இது;
அருமையான அமைப்பில் நமக்காக எழுந்துள்ளது!

நம் நாட்டு உணவுக்குப் பலவித உணவகங்கள் உண்டு;
நம் நாட்டைவிட மலிவாகவும் விலைகள் கொண்டு!

பல கிண்ணங்களை ஜலதரங்கம் போலடுக்கி, நடுவில்
சாதமோ சப்பாத்தியோ உணவாகப் பரிமாறுகின்றார்!

பறவைகள் பூங்காவுக்கு உணவு முடித்துச் சென்றோம்;
பறவைகள் ‘மணம்’ பரப்பிப் பறந்தன, கூண்டுகளில்!

சில இடங்களில் மூச்சுப் பயிற்சியும் தேவைதான்!
சில நிமிடங்களேனும் மூச்சு அடக்கத் தெரியணும்!

குட்டிப் பறவைகள் முதல் நெட்டை எமு வரை பல
சுட்டித்தனம் செய்து மகிழ்வித்தன அங்கு! மேலும்

பயிற்சி பெற்ற பறவைகளின் காட்சியும் உள்ளது;
பயிற்சியாளரின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பறக்கிறது!

மழை மேகங்கள் கண்ட மயில்கள் மூன்று தம்
தழையும் தோகைகளை விரித்து ஆடி மகிந்தன!

சக்கர நாற்காலியை வெறுப்பேற்றும்படியாகவே,
அக்கறை இல்லாது அமைத்த சொரசொரப்புத் தரை!

பறவைக் கூண்டுகள் பார்க்க சில மணிகள் ஆகிவிட
நிறைவான மனத்துடன் வீடு திரும்ப விழைந்தோம்!

Ferry service அருகில் வந்து, van ஐ அதில் ஏற்றி,
ferry பயணமும் செய்தோம், புதுமை அனுபவமாக!

ferry-service-penang.jpg


மேல்தளத்தில் வளைவுப் பாதையில் போய் ஏறலாம்;
கீழ் தளத்தில் சுமார் நாற்பது வண்டிகள் அடங்கலாம்!

இருசக்கர வாகனங்கள் நூறு ஒரு தளத்தில் அடங்கும்;
இரு தளங்களிலும் பயணிக்கப் பல வண்டிகள் ஏறிடும்!

சில நிமிடங்களில் கரை வந்து சேருகிறோம்;
சில துளி பெட்ரோலை நாமும் சேமிக்கிறோம்!

மறுநாள் தலைநகர் கோலாலம்பூர் செல்ல ஆயத்தம்;
அதுதான் திருட்டுக்குப் புகழ் (!) பெற்ற ஒரு நகரமாகும்!

குறுக்காகக் கைப்பைப் பட்டைகளை இங்கு அணிவார்;
குறுக்கு வழியில் சம்பாதிப்போர் ‘சுட்டுவிடும்’ பயம்!

இந்தியர்கள்தான் நகைகளை தெரியும்படி அணிவதால்,
இந்தியர்களே மாட்டிக்கொள்ள வாய்ப்பும் அதிகமாம்!

வானுயர் கட்டிடங்கள் நிறைந்த நகர் காணும் ஆவல்;
வேனிலே அனைவரும் பயணித்தோம் காலையில்.

அழகிய ஹைவேப் பாதை; சின்ன அமெரிக்கா போல;
பழகிய வழியில் அதிவேகத்தில் ஓட்டும் ஓட்டுனர்!

வழியில் ஓர் exit – ல் நிறுத்தி, கொஞ்சம் ஓய்வெடுத்து.
வழிக்கு எடுத்து வந்த சிற்றுண்டியால் தெம்பானோம்!

கடைகளில், உணவகங்களில் விசாரிக்கும் விதமே தனி!
முடியுமா முடியாதா எனக் கேட்பதற்கு “can or not?”

சர்க்கரை இல்லாத ஐஸ் காப்பி விசாரிப்பதற்கும் ,
சிக்கனமாக விலை குறைப்பதற்கும் ‘can or not’ தான்!

சுட்டு விரலை நீட்டிப் பேசுவது நாகரிகக் குறைவாம்!
சுட்டு விரல் வேலையைக் கட்டை விரல் செய்கிறது!

ஒருமுறை நாங்கள் van இலிருந்து கிளிக் செய்ய,
ஒரு போலீஸ்காரர் சுட்டுவிரல் நீட்ட, நடுங்கினோம்!

மாநகரம் வந்து, ஹோட்டலறையில் செக்-இன் செய்து,
மதிய உணவுக்கு சீதாராம் ஹோட்டல் சென்றோம்!

முனியாண்டி விலாஸ் முதல் இந்திய உணவகங்கள்,
இனிதே தமிழ்ப் பெயர் முகப்புடன் விளங்குகின்றன!

நாற்பதுக்கும் மேல் அடுக்கியுள்ள உணவுகளில்
ஏற்றவை எடுத்து, நாம் முதலாளியிடம் காட்டணும்!

ஒரே பார்வை பார்த்துவிட்டு, ‘எஸ்டிமேட்’ போட்டு,
அதே குறித்து, உரிய பணம் அவர் வசூலிக்கிறார்!

வறுத்த உணவுகளில் இவர்களுக்கு நாட்டம் அதிகமே!
வறுத்து வைத்துள்ளனர் கத்திரிக்காயையும் கூட!

தயிர் வடை நன்கு செய்யத் தெரியவில்லை – பெரிய
தயிர் வடையை எடுத்தடித்தால் ஆளே விழுந்திடுவார்!

வயிறார உண்டபின், ஒரு mall காணச் சென்றோம்.
பெரிதாக நுழைவாயில்; அழகாக அமைந்திருந்தது!

தொடரும் ...
 
Last edited:
மயங்க வைக்கும் மலேசியா – 4


பெயர் MID VALLEY MEGA MALL; அதனுள் சென்றால்,
பெயரும் புகழும் பெற்ற கடைகள் நிறைந்துள்ளன!

வேலைப்பாடுகள் துல்லியமாய்க் கொண்ட பற்பல
கலைநயம் மிகுந்த நகைகளின் அணிவகுப்பு அங்கு!

மிகப் பெரிய ESCALATOR மாடிகளுக்கு ஏற்றிவிடும்;
மிகப் பிரகாச விளக்குகள் ஒளிர்ந்து மயக்கிவிடும்!

எலக்ட்ரானிக் சாதனங்கள் கொட்டிக் கிடக்கின்றன;
எலெக்ட்ரிக் சாதனங்களோ மிகுந்து இருக்கின்றன.

உலகப் புகழ் வாய்ந்த SWAROVSKI கிரிஸ்டல் கடை;
ஊழியரோ ஒரு ‘க்ளிக்’குக்கு மேல் விடவில்லை!

crystal-works.jpg


கிடைத்த ஒரு படத்துடன் திருப்தி அடையாது,
கிடைத்த மறு சந்தர்ப்பத்திலும் ‘க்ளிக்’கினேன்!

எப்போதும்போல ஜன்னல் ஷாப்பிங்தான் அதிகம்!
தப்பாது குட்டிப் பொருட்கள் மட்டும் வாங்கினோம்!

ஒரு உணவகத்தில் சிற்றுண்டிப் பாக்கெட்டுகள் சில
ஒரு சில நிமிடங்களில் வாங்கி, ரூமுக்கு வந்தோம்.

அருமையான சுவையில் அனைத்தும் இருக்க, மிகப்
பொறுமையாக ருசித்துப் பின் Z-LAND சென்றோம்!

மூவர் தங்கும் வசதியுள்ள மூன்று நட்சத்திர அறைக்கு,
அறுபது ரிங்கட் தான் செலவாகிறது! மிக மலிவுதான்!

மறுநாள் காலை உணவு ஓசியில் எட்டு மணிக்கு!
சரிதான்; வேலை முடியுமே எனக் காத்திருக்க – வந்தது

குட்டியாகக் கரிந்த இரு ரொட்டித் துண்டுகள் தட்டிலும்,
கெட்டியாகப் பாலில்லாக் காப்பி ஒரு குட்டிக் கப்பிலும்!

நொந்து போனாலும், கிடைத்தது லாபமென விழுங்கி,
வந்து சேர்ந்தோம் புகழ் பெற்ற MENARA K.L காண.

சில ஆண்டுகளுக்கு முன் 4 – வது இடத்தில் இருந்தது;
சில புதிய வருகைகளால் எட்டாவது இடம் போகும்!

தொலைதொடர்புக்கு அமைந்த இதனுயரம் 421 மீட்டர்.
தொலைந்து போகும் சக்தி 2058 படிகளில் ஏறினால்!

அதிவேக எலிவேட்டர் உள்ளது மேலே செல்ல – அது
எளிதாக ஒரு நிமிடத்தில் மேலே போய்ச் சேர்க்கிறது!

பரிசுப் பொருட்கள் வாங்கச் சுற்றிலும் கடைகள்;
பெரிசுகள் ஓரிடத்தில் அமர்ந்து காண CD உண்டு.

அங்கு காணும் காட்சிகள், விவரங்கள் அடங்கிய CD,
நன்கு ஒளி ஒலி வடிவில், இலவசமாய்த் தருகின்றார்!

பல பைனகுலர்கள் சுற்றிலும் உள்ளதால், நகரம்
பல்வேறு தோற்றங்களாய் அழகாய்ப் பரிமளிக்கிறது.

cars-like-ants.jpg


எறும்புப் படைபோலக் கார்களின் வரிசைகள் தெரிய,
அரும்புகள் போலப் பச்சை மரங்கள் பல அணிவகுக்க,

அரிய PETRONAS TOWER, உயர்ந்த கட்டிடங்கள், மலைகள்,
பெரிய ஒட்டகம் வரைந்த கண்ணாடி, இரட்டையான

ஒரு உயரக் கட்டிடத்தின் நடுவில் அமைந்த பாலத்தில்
சிறு நீச்சல் குளம்,, உணவகம் என்று பலவிதமாய்க்

கண்முன்னே காட்சிகள் தெரிய, இது மாய உலகமோ
என்றுடனே எண்ணம் தோன்றுவதும் இயற்கைதானே!

மின்னும் கற்கள் பதித்த எத்தனையோ பொருட்கள்;
இன்னும் காணத் தூண்டும் நல்ல கலைப் பொருட்கள்.

அழகிய வண்ணப் படங்களாய் போஸ்ட் கார்டுகள்;
அழகிய வண்ண வடிவங்களில் சாவி வளையங்கள்.

விரைவில் குட்டிப் பரிசுப் பொருட்கள் மட்டும் வாங்கி,
விரைவாய் இறங்கிட, எலிவேடரின் உதவி நாடினோம்.

அருகிலேயே குட்டி மிருகக் காட்சி சாலை. அங்கு
அருமையான வண்ணப் பாம்புகளே அதிகம். ஒரு

குட்டிக் குரங்கு தன் கூண்டின் பூட்டை இழுத்துத்
தட்டித் தட்டிச் சேட்டை செய்து, திட்டு வாங்கியது!

பேசும் கிளி விசிலடித்து, ஏதோ மொழியில் மிழற்ற,
ஏசும் மொழியா, பாராட்டா என்றே புரியவில்லை!

குதிரைச் சவாரிக்கு 50 கிலோ வரம்பு வைத்ததால்,
குதிரையை மறந்து, F 1 RACE STIMULATION கண்டோம்!

ரேஸ் காரின் உள்ளே அமர வைத்து கம்ப்யூட்டரால்
ரேஸ் செல்லுவதுபோலப் பாதைகளைக் காட்டுகிறார்!

ஓட்டும்போது மோதிவிட்டால், ஆட்டம் முடிந்துவிடும்;
ஓட்டிக்கொண்டே இருப்பவருக்கோ நேரக் கட்டுப்பாடு!

பலர் ஆவலுடன் படையெடுக்கும் இடம் அது!
சிலர் அசடு வழிவார், கார் முட்டி மோதும்போது!

AQUARIUM செல்ல நேரம் போதாமை; அதை மறந்து,
அப்போதே இரட்டை கோபுரம் காணப் புறப்பட்டோம்!

 
மயங்க வைக்கும் மலேசியா – 5


கோலாலம்பூரின் பெருமையே PETRONAS TOWER.
கோலாகலமாக இருக்கிறது அருகில் சென்றாலே!

petronas-tower-by-night.jpg


உலகில் மிக உயர்ந்த இரட்டை கோபுரம் இதுவே;
எளிதில் கட்ட இயலாத 1483 அடி உயர அமைப்பே!

இரவில் விளக்குகள் செய்யும் ஜாலத்தில் மின்னும்;
விரைவில் போட்டோ பல எடுக்க மனம் எண்ணும்!

தினமும் நூற்றி ஐம்பது பேர்களே கோபுரம் ஏறலாம்!
அதற்கும் விசேஷ அனுமதி வாங்க வேண்டுமாம்!

அடியின் நின்று நோக்கினால் நம் கழுத்து வலிக்கும்;
நொடியில் நம்மீது விழுமோ எனப் பயம் துளிர்க்கும்!

அடிப்பாகம் மிகவும் விஸ்தாரமானது; வட்ட
வடிவில் இருக்கிறது நான்கு மாடிக் கட்டிடம்.

நான்கு மாடிகள் ஏறிச்செல்ல LIFT வசதி உண்டு;
நன்கு அமைக்கப்பட்ட கடைகளும் பல உண்டு.

உணவகங்கள் ஒரு தளம் முழுதும் உண்டு;
உணவு வகைகளுக்குப் பஞ்சமில்லை அங்கு!

மேற்கூரை கண்ணாடி வழியே காணலாம் கோபுர உச்சி;
மேலான இணைப்புப் பாலமும் தெரிவது நேர்த்தி!

பாலத்தின் இரு நுனியும் கோபுரத்துடன் இணையாது!
பாலத்தின் மையப் பகுதியையே தாங்குமாறு அமைப்பு!

எண்பத்தெட்டு மாடிகளில் இந்தப் பாலம் இணைப்பது
நாற்பத்தி ஒன்றாம், நாற்பத்தி இரண்டாம் மாடிகளை.

அடித்தளத்தின் இருபுறமும் மிக நேர்த்தியாக
நெடிது உயர்ந்து நிற்கிறது இரட்டை கோபுரம்.

ஒற்றைப்படை இரட்டைப்படை மாடிகளில் நிற்க
ஒரே LIFT இரண்டு அடுக்காய் இயங்குமாம் இங்கு!

கோபுர அழகை ரசித்துப் படம் பிடித்து மனம் நிறைய,
கோவில் காண ஆவலுடன், BATU CAVES விரைந்தோம்!

தங்க நிற முருகனைத் தரிசிக்கும் ஆவல் உந்த,
அங்கு வந்து சேர்ந்தோம் இளமாலை வேளையில்.

சிமென்ட்டால் செய்து, தங்க நிறம் பூசியுள்ளனர்;
சிமென்ட் சிலை என்றே நம்ப முடியாது, பார்த்தால்!

batu-caves-lord-murugan4.jpg


முருகனைத் தங்கத்தாலே இழைத்ததுபோல அழகு!
முருகு என்றாலே அழகுதானே! இதில் வியப்பென்ன?

நெடிய நூற்றி நாற்பது அடி உயரம்! மிக
நெடும் தூரத்திலிருந்தே காணும் உருவம்!

நகை முகமும், அழகு வடிவமும், காக்கும் வேலும்,
இமை மூடாது கண்டு அதிசயிக்க வைத்தது நிஜம்!

கரிந்த ரொட்டி எப்போதோ ஜீரணமாகியிருக்க,
பரிந்து உபசரிக்கும் உணவகத்தை நாடினோம்!

வயிறார உண்டால் படி ஏறக் கடினம் என,
பசியாறக் கொஞ்சம் சிற்றுண்டி உண்டோம்!

செங்குத்தான 270 படிகள் கண்டு பயம் தோன்ற,
அங்கேயே உலவிட மூவர் முடிவு செய்தோம்!

புறாக்கள் கூட்டம் நெரிசலாக முட்டி மோதிக்கொள்ள,
பொறாமைதான், முருகன் அடிமையான அவைமேல்!

நூறு அடி உயரக் குகை, மேலே உள்ளதாம்!
ஆறுமுகன் சன்னதியும் அங்கே உள்ளதாம்!

மாலை வேளை ஆகாததால் திரை போட்டிருந்ததாம்;
வேலை, மேலிருந்து புகைப்படங்கள் எடுப்பதுதான்!

அருகில் சிவனுக்கும், மாருதிக்கும் கோவில்கள்;
பெரிதாய் உள்ள ஆஞ்சநேயர் நெஞ்சில் ராம சீதையர்!

விரும்பியபடி இறைவன் தரிசனம் கண்டபின்,
திரும்பினோம் இனிய இல்லம் மாலை வேளையில்.

பாதையின் இருபுறம் அடர்ந்திருக்கும் PALM மரங்கள்;
பாதையே தெரியாதபடிக் கொட்டும் மழைச் சாரல்கள்.

மிகுந்த ஆதாயம் ரப்பர் தோட்டம் கொடுக்காததால்,
மிகுந்துவிட்டன இப்போது PALM மரத் தோட்டங்கள்!

முன்பு நிறைந்து கிடந்த ரப்பர் தோட்டங்கள் மாறி
நன்கு பாமாயில் உற்பத்திக்கு வகை செய்துள்ளனர்.

மலேசிய மழையை அனுபவித்தபடியே பயணம்;
மலேசிய நடு இரவில் தொடங்கினோம் சயனம்!

 
மயங்க வைக்கும் மலேசியா – 6


அண்ணன் பணி நிமித்தம் மறுநாள் சென்றுவிட,
அண்ணி துணையுடன் காலை டாக்சிப் பயணம்!

சுங்கை பெட்டானியின் CITY CENTRE சென்றோம்.
அந்த டாக்சி ஓட்டுனர் ஜாக்கி சானைப் போல!

மிக மரியாதையாய் பேசி, நிதானமாக ஓட்டும்
மிக நல்ல மனிதர்; ஆஸ்தான ஓட்டுனராம்!

அந்த ஷாப்பிங்கும் எப்போதும் போல அல்ல!
சொந்த உபயோகத்திற்கு நிறையக் கிடைத்தன!

துணிகள் உலர்த்த வட்ட ஹாங்கர், அறுபது
மணித்துளிகளுக்குள் அலாரம் வைக்க TIMER,

குளிர் காலத்தில் அணிய மெத்தென்ற செருப்பு,
குளிக்கும்போது முதுகு தேய்க்கப் பட்டை என

பலவித உபயோகப் பொருட்கள் கிடைக்க,
ஒருவித ஆவலுடன் அவற்றை வாங்கினோம்!

சில கடைகளில் T’ SHIRT நன்றாகக் கிடைக்க,
சில அவற்றில் வாங்கிப் பையை நிறைத்தோம்!

ஆனந்தமாய் இல்லம் திரும்பி, ஓய்வெடுத்து,
ஆவலுடன் மாலை ‘வெந்நீர் ஊற்று’ காண எண்ண,

நாங்கள் எதிர்பார்த்த டாக்சி வர முடியாததால்,
எங்கள் மனதில் ஏமாற்றம் வர, உடனே அண்ணன்

பெரிய TESCO மாலுக்குக் கூட்டிச்சென்று பலவித
அரிய பெரிய காய் கனிகள் காட்டினார்! மேலும்

ஐந்து ‘ரிங்கட்’ கடையை அங்கு காட்டிவிட,
புகுந்து விளையாடினோம்; வாங்கினோம்!

அன்றைய பொழுது அவ்வாறு இனிதே கழிய,
எங்கள் விடுமுறையின் கடைசி நாள் வந்தது!

உராங் உடான் தீவுக்குச் செல்ல முடிவு செய்ததால்,
விரைவாய் உறங்கினோம், விடியலில் கண்விழிக்க!

இரு கார்களில், BUKIT MERAH LAKE TOWN செல்ல
இரு மணி நேரம் பயணம் செய்தோம் நாங்கள்.

இங்குதான் ஒரு தவறு செய்துவிட்டோம்! அது
தங்கவே வசதியில்லாத இடமாகும்; அன்னையைத்

தனியே விடமுடியாது போனதால், அண்ணனும்
உடனே இருக்கும் சூழ்நிலை அங்கு உருவானது!

உள்ளே சென்றால், அனைத்தும் பார்த்த பின்தான்
வெளியே வரமுடியும்; இடையிலே வர இயலாது!

நான்கு மணிநேரம் சுற்றி வரும் வரை, இருவரும்
நன்கு அமரக்கூட முடியாமல் மிகவும் தவித்தனர்!

முதலில் உராங் உடான் தீவுக்கு படகுப் பயணம்;
கடலில் செல்வதுபோல் ஆடாத, இனிய பயணம்.

எங்களைக் காப்பாற்றுங்கள் என்ற வேண்டுகோளை
தாங்களே சொல்வதுபோல அறிவிக்கும் வரவேற்பு!

காட்டிலே சின்னஞ் சிறிசுகள் வாழ்க்கை கடினமாம்!
காட்டிலேயிருந்து அவைகளைக் கொண்டு வந்து,

நான்கு நிலைகளாக அதன் இளமையைப் பிரித்து,
நான்கும் முடிந்து, அதன் வாலிப வயதில், மீண்டும்

காட்டிலேயே விடுவாராம் இயற்கைச் சூழலில்,
காட்டு வாழ்க்கையை அதற்குப் பழக்கியுள்ளதால்!

நான்கு மாதக் குட்டியைக் கண்டு மனம் இரங்கியது!
நன்கு அமைத்த படுக்கையிலும் உறங்காது நின்றது!

four-months-old.jpg


பெரிசுகள் மிகவும் அட்டகாசம் செய்தன! மிகப்
பெரிசுகளோ தலையில் கை வைத்து அமர்ந்தன!

மனிதனின் சேஷ்டைகள் போலவே இவை செய்யும்;
மனிதனைவிடப் பெரிய அளவிலும் வளரும்!

கம்பி வேலிகள் அமைத்து, நாம் அருகில் சென்று
வம்பு செய்யாதபடி தடுத்து வைத்துள்ளனர்!

மறுபடியும் படகுச் சவாரி; மற்ற விலங்கினங்கள்
வேறு இடத்தில்; அவற்றைக் காணச் சென்றோம்!

 
மயங்க வைக்கும் மலேசியா – 7


பட்சிகளின் கூடாரம் சென்றால், அங்கு கண் -
காட்சியாக அவைகள் சாகசங்கள் செய்தன!

மலாய் மொழியில் பேசுபவனின் ஆணைக்குத்
தலை வணங்கிக் கிளிகள் செய்தது அபாரம்!

கொடி ஏற்றுவது, சைக்கிள் ரேஸ் செய்வது,
கூடைப் பந்து விளையாட்டு, நடிப்பது என

பலவித அற்புதங்கள் அவை செய்து காட்ட,
பல குப்பைகளை கீரி சுத்தம் செய்து காட்ட,

நன்றாகப் பொழுது போனது; மீண்டும்
ஒன்றாக ‘ஊர்வன உலகம்’ சென்றோம்!

மிகப் பெரிய மலைப்பாம்பு முதல் பல வகைகள்;
மிக ‘மணம்’ பரப்பும் வாய் திறந்த முதலைகள்.

வெள்ளை எலி முதல் பெரிய முயல்கள் வரை
செல்லப் பிராணிகள் பகுதியில் உலவி வந்தன.

தோகை உதிர்ந்த மயில்கள் சில வெயிலில்
சோகமே உருவாகப் படுத்துக் கிடந்தன!

SKY CYCLE என்பது உயரத்தில், ஒரு தண்டவாளத்தில்
கையால் பெடல் செய்யும் ஒற்றைச் சக்கரப் பெட்டி!

அதை ஓட்டத் தெம்பில்லாததால், ROPE WAY
வகையில் அமைந்த CHAIR LIFT -ல் சென்றோம்!

water-park.jpg


இருவர் அமரும் சோபா போல உள்ளது; மேலே
இருந்து WATER PARK காண வகை செய்தது!

நீரில் அளைந்து விளையாடும் பலரைக் கண்டு
நேரில் நாமும் செல்லலாமா என்றது மனம்!

மறுபுறம் வந்து இறங்கினோம்; நுழைவாயிலில்
இருவரும் வாடி வதங்கி இருந்தனர், வெய்யிலில்!

எடுத்து வந்த உணவு வகைகளைப் பரப்பி,
அடுத்து இருந்த உணவகத்தில் உண்டோம்!

அதிக விலைப் பொருட்கள் கடைகளில் இருக்க,
சிறிய நினைவுப் பரிசுகள் மட்டும் வாங்கினோம்.

இனிய இல்லம் திரும்பினபோது, எங்களில் இருவர்
கொடிய வெய்யிலில் சும்மா இருந்தது நெருடியது!

நிறைய அனுபவங்கள் மயக்கும் மலேசியாவில்
குறைந்த நாட்களிலே கிடைக்கப் பெற்றோம்!

எடுத்த புகைப் படங்களை ஆல்பமாக்கி அனுப்பி,
அடுத்த நாள் பயணத்துக்குப் பாக்கிங் செய்தோம்!

அதிகாலை நாலரை மணிக்குப் புறப்பாடு – எனவே
அதே ஜாக்கி சான் டாக்சி மீண்டும் அன்று ஏற்பாடு!

விமானத்தில் ஏறச் சரியாக வந்து சேர்ந்தோம்;
விமான நிலையத்தில் கடும் காப்பி ருசித்தோம்!

இம்முறையும் விமானத்தில் காலி இருக்கைகள்;
இம்முறை நானும் ஒரு மணி நேரம் படுத்தேன்!

திங்களன்று தொலைத்த இரண்டரை மணி நேரமும்,
ஞாயிறன்று கிடைத்தது, ஞாயிறுடன் பயணித்ததால்!

சிங்காரச் சென்னையில் ஒன்பது மணிக்கு இறங்க,
மங்காத வெய்யில், சூடு பரப்பிக் கொதித்திருக்க,

சுங்கச் சோதனை முடித்து, வெளியேறி, வண்டியில்
பாங்காக வந்து சேர்ந்தோம் எங்கள் இனிய இல்லம்!

ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை; பயணமும்
ஒருக்காலும் மறக்க முடியாதபடி நினைவிருக்கும்!

குறையின்றிக் கடல் கடந்த பயணம் முடிக்க உதவ,
இறையன்றி யாரால் இயலும்? அவனுக்கு நன்றி பல!


… உலகம் உய்ய வேண்டும் …

… ராஜி ராம் … 21 – 05 – 2010
 
பயண அனுபவங்களைத் தொடங்கினேன்;
பயண அனுபவங்களைத் தொடர்கிறேன்!

அடுத்த பெரிய தொகுப்பாக, இறைவன்
கொடுத்த இரண்டாம் கடல் கடந்த பயணம்!

சென்ற ஆண்டு மீண்டும் எம் அமெரிக்க விஜயம்;
அந்தக் க(வி)தைகளில் மேலும் பல புதிய விஷயம்!


வரவேற்பை எதிர்நோக்கும்,
ராஜி ராம்
 
பயணக் க(வி)தைகள்...

பயண அனுபவங்களைத் தொடங்கினேன்;
பயண அனுபவங்களைத் தொடர்கிறேன்!

அடுத்த பெரிய தொகுப்பாக, இறைவன்
கொடுத்த இரண்டாம் கடல் கடந்த பயணம்!

சென்ற ஆண்டு மீண்டும் எம் அமெரிக்க விஜயம்;
அந்தக் க(வி)தைகளில் மேலும் பல புதிய விஷயம்!


வரவேற்பை எதிர்நோக்கும்,
ராஜி ராம்
திருமதி ராஜி ராம் அவர்களுக்கு .
தங்கள் மலேசியப் பயண அனுபவங்கள் சுவையாக இருக்கின்றன. படங்கள் நன்றாக உள்ளன. மேலும் தொடரவும் .
நான் சிறு வயதில் பள்ளியில் வடமொழியும் ஆங்கிலமும் மட்டுமே பயின்ற காரணத்தினால் தாய் மொழியில் திறன் குறைவாக உள்ளது . நல்ல தமிழ் எழுத ஆர்வம் உள்ள காரணத்தினால் தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.
நல்லாசிகள்
ப்ரம்மண்யன்
 
ஊக்கமே உயர்வுக்கு வழி அல்லவா? எனக்கு
ஊக்கம் தரும் உள்ளங்களே என்னுடைய பலம்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் என் காமராவில் சிக்கிய,
அமர்க்களமாக, ஆகாய தேவனின் கண் போல மின்னிடும்,

அந்த ஆதவனின் புகைப்படத்தை முன்னிறுத்திவிட்டு,
இந்தப் பகுதியைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!



viewThumb.jsp



கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 1


கடல் போல இறையருள் இருப்பது சத்தியமே! அதனால்
கடல் கடந்து வருவதும் நமக்குச் சாத்தியமே!

இந்த ஆண்டு எங்களிடம் வரவேண்டும் என - இந்தியா
வந்த அமெரிக்க வாழ் மகன் ஆசையுடன் அழைப்பு விட,

மூன்று மாதம் அங்கு சென்று தங்க வேண்டிய ஏற்பாடுகள்,
மூன்று மாதம் முன்னரே சென்னையில் ஆரம்பமாயின.

சென்ற ஆண்டு முடிவில் நிஷாப் புயல் இந்த மாநகரில்
வந்த வேகத்தில் மழை பெருகி, வீட்டில் வெள்ளம் நுழைய,

நினைத்தாலே நடுங்கும் அதன் விஷமம் நினைவில் வர,
அனைத்து அலமாரிகளின் அடிப் படிகள் காலி செய்தோம்.

சுவாமி அலமாரி முதல் என் அருமை வீணைகள் வரை
பூமியிலிருந்து ஒரு அடி உயர்த்தி வைத்தோம்.

ஜன்னல்களில் நாப்தலின் உருண்டைகள் போட்டு - சின்ன
ஜந்துக்கள் நுழையாமல் பாதுகாப்பு அமைத்தோம்.

பெரிய அளவு பெட்டிகள் இரண்டு வாங்கி வந்ததும்,
பெரிய பயணத்தின் உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ள,

குட்டிக் குட்டிப் பரிசுப் பொருட்கள் பல வாங்கி வந்து
பெட்டிகளில் அடுக்கும் வேலையும் தொடங்க,

நண்பர் ஒருவர் எங்கள் மாடியில் இரவுகள் தங்க
அன்புடன் இசைந்ததும் டென்ஷன் குறைந்து விலக,

பணிப் பெண் முதல் பால் பையன் வரை பலரிடமும்
கனிவுடன் சொல்லிவிட்டுப் பயணத்திற்குத் தயாரானோம்.

 
அன்புள்ள திருமதி ராஜி ராம்,

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து ,
forum இல் புகுந்து, ஒரே நாளில் மெம்பர்
ஆகிவிட்ட உங்களுக்கு எனது
வரவேற்புக்களும், வாழ்த்துக்களும்!

V.R.
 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 2


டிக்கட், குறைந்த விலையிலேயே ஒரு லக்ஷம் தொட்டுவிட,
இக்கட்டு வராதிருக்க இன்ஷுரன்ஸ் இருபது பெரிய நோட்டாக,

எத்தனை பணம் பர்சில் இருந்தாலும் ஒரே நாளில்,
அத்தனையும் காலியாக, கலியாணச் செலவுதான்!

சும்மாவா அமெரிக்கப் பயணம் என்பது? வேறு எப்படி
அம்மாவும் ஆசைக்காகப் பிள்ளைகளிடம் இருப்பது?

பாதுகாப்புச் செய்பவற்றை லாக்கரில் வைத்து - பூச்சி வராது
பாதுகாப்புச் செய்ய, பாத்ரூம்களில் பிளீச்சிங் பவுடர் போட்டு,

கடைசிநாள் சாப்பாடு பக்கத்து மெஸ்ஸில் எடுத்து,
கடைசி நிமிடம் வரை பிஸியாக இருந்து - இரவில்

ஏர்போர்ட்டுக்குக் கால் டாக்ஸி எடுத்து வந்தடைய,
ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அன்பாகச் செக்-இன் செய்ய,

மேல்மருவத்தூர் நிற சல்வார் அணிந்த என்னை, ஒரு
மேல்மருவத்தூர் பக்தையென ஒரு இலங்கை மாமி எண்ண,

சிங்களத் தமிழில் அவள் என்னிடம் கதைத்துத் தள்ள,
தங்களின் அனுபவங்களை அழகாக எடுத்துச் சொல்ல,

நடு ராத்திரி என்ற நினைவே எழாமல், அப்போது
படு குஷியாக மனம் மகிழ்ச்சியில் திளைத்தது!

விமானம் ஏற அழைப்பு வர, அனைவருடன் க்யூவில் நின்று,
விமானம் ஏறி அமர்ந்தோம். சில நிமிடத்தில் நல்ல டின்னர்!

இனிய எம்.எஸ்ஸின் பாட்டுக் ஹெட் போனில் ஒலிக்க,
தனியே தூக்கம் வர, இசையுடன் கண்ணயர்ந்தேன்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 3


அரை மயக்கமாய்த் தூக்க அலைகள் தொடர,
விரைவிலேயே வெந்நீரில் நனைத்த சிறு துண்டு தர,

கண் விழித்து, முகம் துடைத்ததும், இளம் மங்கையர்
அன்புடன் பரிமாறினர், மசால் தோசையும் உப்புமாவும்!

சர்க்கரை சாப்பிட முடிந்தால், பெரிய அளவில் கிடைக்கும்
சர்க்கரைப் பண்டமும், ஐஸ்கிரீமும் நன்கு சுவைக்கலாம்!

குடிக்கக் காபியும், டீயும், தக்காளி ஜூசும் என
அடிக்கடி தருவது இப்போது ஒரு ஏர்வேசில்தான்!

இரண்டு தமிழ் படங்களும், ஆஸ்காரில் பற்பல
சிறப்புப் பரிசுகள் பெற்ற 'ஸ்லம் டாக் மில்லினேரும்'

பார்த்து முடிப்பதற்குள் பிரசெல்ஸ் வந்துவிட,
'காத்திருங்கள் இரண்டு மணிநேரம்', என அறிவித்து,

விமானம் சுத்தமாக்க எங்களை இறக்கிவிட, நாங்கள்
விமான லவுஞ்சில் பொறுமையாகக் காத்திருந்தோம்.

செக்யூரிடி பெண்மணி என் தங்க நகைகள் கண்டு,
செக் பண்ண வேண்டுமெனப் பையைக் குடைந்தாள்.

ஒரு பர்சினுள் வைத்த குட்டி பர்சில் நான் பாதுகாத்த
இரு ஒரு டாலர் நோட்டுகளைக் கண்டு சிரித்தாள்!

ஷூவில் எவனோ ஒரு முறை பாம் வைக்க - எல்லோரின்
ஷூவையும் கழற்றிப் பார்த்த சோதனை மிக வேதனையே!

மீண்டும் நல்ல சாப்பாடு, அரைகுறைத் தூக்கம் என
மீண்டும் பயணம் தொடர, நியூயார்க் வந்தடைந்தோம்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 4


நிமிடங்கள் செல்வதே தெரியாதவாறு - அங்கு காண்பது
நிமிடத்திற்கு ஐந்தாறு விமானங்கள் வந்து போவது.

யூ எஸ்ஸுக்கு நல்வரவு என இனிய குரல் ஒலிக்க,
யூ எஸ்ஸுக்குள் மிக ஆவலுடன் நுழைந்தோம்!

கூட்டமாக மாணவரும், கோடை ஆரம்பமும் இல்லாததால்,
கூட்டமே இல்லாத கியூவில் விரைவில் நகர்ந்து சென்றோம்.

ஜாலி மூடில் குடியேற்ற அதிகாரி இருக்க, " யார் உங்களில் பாஸ்?" - எனக்
கேலி செய்தவாறு வினவ, என்னவர் என்னைக் காட்ட, சிரித்தபடி

"எத்தனை மாதங்கள் இங்கு இருக்கணும்?" என அதிகாரி கேட்க,
எத்தனையோ முறை மனப்பாடம் செய்த "ஆறு மாதங்கள்", என

நான் சொல்ல, "என் மகன் எம். ஐ. டி - யில் படித்தான்", என்று
என்னவர் கூற, "இங்கு பிசினஸ் செய்கிறான்", என்றும் தொடர,

"பாஸ் சொன்னபடி செய்கிறேன்", என ஜோக் அடித்தபடி - அதிகாரி
பாஸ்போர்ட்டில் ஒவ்வொரு துண்டுப் பேப்பரைக் கிளிப் செய்தார்!

நெகிழ்வுடன் நன்றி பகர்ந்து, எங்களின் பெட்டிகள் வருகைக்காக
மகிழ்வுடன் சென்று நின்றோம்; கன்வேயர் சுற்ற ஆரம்பித்தது.

தொப்பை மனிதர் போலப் பல பெட்டிகள் சுழன்று வர - எம்
சப்பைப் பெட்டிகளை விரைவில் அடையாளம் கண்டோம்!

எண்பது கிலோ கொண்டு வர இருவருக்கும் அனுமதி இருக்க,
ஐம்பது கிலோதான் கொண்டு வந்தோம், எம் இடுப்பைக் காக்க!

வண்டி ஒன்று ஐந்து டாலர் கொடுத்து, எடுத்து,
வந்து சேர்ந்தோம் அடுத்த 'செக் இன்' வரிசைக்கு.

தொடர் பயணம் என்பதால் அதிகத் தொகை கேட்கவில்லை;
இடர் ஏதுமில்லாமல், அமைதியாய் லவுஞ்சில் காத்திருந்தோம்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 5


அடுத்த விமானம் ஏற மூன்று மணி நேரம் இருக்க,
எடுத்து வந்த பிஸ்கட் எல்லாமே காலி ஆனது!

ஒரு மடிசார் உடை சாஸ்திரிகள் மாமி இட்லி உண்ண,
சிறு புன்னைகையுடனே அவரிடம் நான் பேச எண்ண,

"உனக்கும் இட்லி வேணமா?" என அவர் கேட்க,
எனக்குப் பசியில்லை எனக் கூறி நான் மறுக்க,

சில நிமிட அரட்டைக்குப் பின், அந்த லவுஞ்சைப்
பல நிமிடங்கள் சுற்றி வந்து நேரம் கடத்தினோம்.

ஈ ஓட்டினோம் என்று கூடக் கூற முடியாது;
ஈ, எறும்பு இத்தியாதி அங்கு அறவே கிடையாது!

விமானம் ஏற அழைப்பு வர, ஆவலுடன் நாங்கள் செல்ல,
விமான அளவு பார்த்த எனக்கு "நம் பெரிய பெட்டிகளை

இந்தக் குட்டிப் பறவையில் ஏற்ற முடியுமா?" - என
வந்தது பயம்! ஒரு வரிசைக்கு மூன்றே இருக்கைகள்!

பறக்கும் நேரம் முப்பது நிடங்களே - ஆனால்
பறக்க ரன்வே கிடைக்க நாற்பது நிமிடங்கள்!

பாஸ்டன் வந்ததும், பிள்ளைகளைக் காணும் குஷி வர,
பாஸ்டன் நேரம் செட் செய்து, பெட்டிகள் எடுக்க வந்தோம்.

நாங்கள் பயந்ததுபோல் ஒன்றும் ஆகவில்லை;
எங்கள் சப்பைப் பெட்டிகள் வர நேரமும் ஆகவில்லை!

டாலர் மூன்று போட்டு வண்டி எடுக்க முயல,
டாலர் நோட்டை மூன்று முறை மிஷின் துப்ப,

உருளைகள் உள்ள பெட்டிகளானதால், நான்கையும்
உருட்டி வந்தோம் அருகிலுள்ள எக்ஸிட் கதவு வரை.

வெளியே வந்தவுடன் குளிர் காற்று உடலைக் கடிக்க,
உள்ளே மீண்டும் சென்று, தொலைபேசி தேடும்போது,

கண்டோம் பிள்ளைகளை! பார்க்கிங் செல்லாமல்
வந்தோம் இனிய இல்லம் ஒரு மணி நேரத்தில்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 6


இல்லம் இனிய இல்லம் என்ற எண்ணம் உதிக்க,
நல்ல ஏற்பாடுகள் எங்களுக்காக மகன் செய்திருக்க,

பெண்ணரசியின் சமையலை நன்கு சுவைத்துவிட்டு,
கண்ணயரும் முன்னேயே பெட்டிகளைப் பிரித்தோம்!

அப்பளமும், ஊறுகாயும், ஜாமும், ஸ்வீட்டும் என
தப்பாமல் பலவற்றைக் கொண்டு வந்திருந்தோம்.

மைசூர்பாகு பாக்கெட்டை செக்யூரிட்டி பிரித்தாலும்,
மைசூர்பாகு ஒன்றுகூடக் காணாமல் போகவில்லை!

புதுக் கட்டிலும், இரண்டு அடி உயர மெத்தையும், இதமான
புது comforter போர்வையும் புது வாசனையுடன் கிடைக்க,

வந்தது நல்ல உறக்கம்; ஆனால் இரவு ஒரு மணிக்கு
வந்தது நல்ல விழிப்பும், கூடவே நல்ல பசியும்!

இந்திய நேரப்படி பசியும், இயற்கை அழைப்பும் வர,
விந்தையான jet lag கொஞ்சம் பாடு படுத்தியது!

தூங்குவது போல பாவனை செய்தபின் - மனம்
ஏங்கும் காபி தயார் செய்து அருந்தினோம்.

சாப்பிடக்கூட நேரமில்லாத பிள்ளைகள் ஏதோ
சாப்பிட்டு, வேலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

பெருமளவு செல்வம் இருந்தாலும், தினமும்
சிறிதளவே உண்பது அமெரிக்க வழக்கம்தான்!

சிரியலும், muffin - னும் காலை உணவாகிறது.
சிறிதளவு oat meal தான் மதிய உணவாகிறது.

வயிறு வாடாமல் இருங்கள் என இந்தியாவில்தான்
வயிற்றுப் பாட்டை எப்போதும் நினைக்கின்றோம்.

அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்நாட்டவர்போல்
அமெரிக்க வாழ்க்கைதான் இங்கு வாழ்கின்றார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்ட அமெரிக்கா
வேறுபாடு அதிகமின்றி இப்போதும் இருக்கிறது!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 7


இரண்டாம் நாள் முழுவதும் ஓய்விலேயே இருந்தோம்.
இரண்டு வேளையும் இந்திய உணவு தயார் செய்தோம்.

அமெரிக்க வாழ் சுற்றத்தார் பலரிடம் தொலைபேசினோம்.
அமெரிக்காவில் பயணம் செய்யத் தேதிகள் தேர்வு செய்தோம்.

முதல் வார முடிவுக்கு முன், வெள்ளிக் கிழமை இரவு,
முதல் முறையாய் வாஷிங் மெஷின் இயக்க அறிந்தோம்.

ஆறு குவார்டரில் துவைக்க, ஆறு குவார்டரில் உலர்த்த,
வேறு அறையில் மிஷின் இருந்த இடத்தைப் பார்த்தோம்.

மறுநாள் காலை அகாடியா நேஷனல் பார்க் காண,
இருநாள் விடுமுறையில் புறப்பட்டுச் சென்றோம்.

ஆறு மணி நேரப் பயணத்தில், இரண்டு முறை
அரை மணி நேர ஓய்வும் வழியில் எடுத்தோம்.

ஹைவேயில் கார்கள் பொம்மைகளாய்த் திகழ - முதல்
ஹைவேப் பயணமே மிக இனிதாக இருந்தது.

மதிய உணவுக்குச் சைனீஸ் விடுதியில் நிறைய ஆர்டர் செய்து,
மிஞ்சிய உணவை எடுத்துக்கொண்டு ஹோட்டலை அடைந்தோம்.

வெங்காயம் கண்ணில் தெரிந்தால் உண்ண மாட்டான் என
வெங்காயத்தை அரைத்து மகனுக்குச் சமைத்த நான்

பெரிய சைஸ் காலி பிளவர் முதல் கத்தரிக்காய் வரை,
அருமையாய் உண்ணும் அவனைக் கண்டு வியந்தேன்!

சில நிமிடங்களில், பார்க்கைச் சுற்றி வரச் சென்றோம்.
பல ஆச்சரியமான விஷயங்களும் அங்கு கண்டோம்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 8

எங்கள் ஹோட்டலில் கண்ட அதிசயம் முதலில்.
தங்கள் காபியை பாத்ரூமிலே போட வசதியாய்

காலைக் காபிக்கு வேண்டிய மிஷினுடன் அந்த
வேலைக்கு வேண்டிய பொருட்களும் உள்ளன அங்கு!

'காபி குடித்ததும் வேகமாய் ஓடுவோர், அங்கேயே அமர்ந்து
காபியைக் குடிப்பரோ?' - என்று கிண்டல் செய்து சிரித்தோம்.

வளைந்து செல்லும் பாதைகள் கடந்து, மரங்கள் பல
விளைந்து கிடக்கும் பெரிய பார்க்கினுள் சென்றோம்.

பல வித செடி கொடிகளும் இருக்கக் கண்டோம்;
பல தீவுகள் உள்ள கடலும் அருகில் கண்டோம்.

சின்னஞ் சிறிய குளமானாலும், அதில் சாமர்த்தியமாய்
சின்ன board வைத்துப் பெருமையாக்குவர் அமெரிக்கர்!

உல்லாசப் பயணிகளைக் கவரும் பல கலைகளை,
உல்லாச விரும்பிகள் இவர்களிடம் கற்க வேண்டும்!

அடர்ந்த காட்டில் சில நிமிடம் நடந்த பின்,
தொடர்ந்து சென்றோம் thunder hole காண.

mail


mail


பாறைகள் சூழ்ந்த கடலின் ஒரு இடத்தில் சில
பாறைகள் குழியாகி குகை போல அமைந்துவிட,

அலைகள் உயந்து வரும் சமயத்தில், அதில் மோதும்
அலைகள் உண்டாக்கும் வெற்றிடம் பேரொலி எழுப்பியது!

இடி போன்ற ஓசையும், உயர்ந்து தெறிக்கும் கடல் நீரும்,
நொடிப் பொழுதில் அனைவரையும் அதிசயிக்க வைத்தன!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 9


மலைப் பாதையில் மேலும் ஏறிச் சென்றால் காண்பது
அலை மோதும் கடலில் நடுவில் உள்ள தீவுகள்.

இயற்கையின் வண்ண ஜாலம் கண்களால் காண்பதெல்லாம்
செயற்கைக் கண்டுபிடிப்பான காமராவில் வர மறுக்கிறது!

எத்தனை வண்ணங்கள்; எத்தனை விதப் பாறைகள்;
அத்தனையும் கண்டபின் மலை உச்சி அடைந்தோம்.

குளிர் காற்று சென்னைவாசிகளை வாட்ட, அங்கு பலர்
குளிர் இல்லாததுபோல் ஆடைக் குறைப்பில் இருக்க,

எட்டரை மணி ஆகும் சூரியாஸ்தமனத்திற்கு என அறிந்ததும்,
இத்தனை பார்த்தது போதுமென அறைக்குத் திரும்பினோம்.

மதியச் சாப்பாடு நிறையவே இருந்தது எங்கள் கையிருப்பில்;
போதிய அளவு உண்ட நாங்கள் நித்திரா தேவி அரவணைப்பில்!

அடுத்த நாள் கான்டினென்டல் வகைகள் காலை உணவாக,
எடுத்து உண்டோம் ஆசை தீரப் புதுப் புது வகைகளாக.

எவ்வளவு முறை குடித்தாலும் அமெரிக்கக் காபி
அவ்வளவு ருசிக்கவில்லை! வேறு வழியில்லை!

படகுத் துறைக்குச் சென்று, இரண்டு மணிப் பயணம்
படகில் சென்றுவர ஆவலுடன் ஆயத்தமானோம்.

குளிர் காற்றுத் தாக்கம் தடுக்க, எல்லோருக்கும்
குளிர் தாங்கும் கம்பளிகள் இலவசமாக் கிடைக்க,

மிகுந்த எதிர்பார்ப்புடன் படகின் மேல் தளத்தில் ஏறி,
தகுந்த இடம் தேடி, அனைவரும் அமர்ந்து கொண்டோம்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 10


கடல் நீரின் வெப்பம் எட்டு டிகிரி சென்டிகிரேட் என
உடன் வரும் வழிகாட்டி சொல்ல - எங்கள்

நடுக்கம் அதிகரிக்க, உடல் வெப்பம் வெளியேறாது
தடுக்கும் வண்ணம் கம்பளி போர்த்தி ஒடுங்கினோம்!

மூன்று டாலர் வாடகைக்கு பைனாக்குலர் உண்டு என
மூன்று முறை அறிவிப்பு வந்ததும் - நாங்கள்

இரண்டு பேருக்கு ஒன்று என்ற கணக்கில்
இரண்டு பைனாக்குலர் வாங்கிக் கொண்டோம்.

தூரத்துத் தீவுகள் அதில் பெரிது பெரிதாய்த் தெரிய,
தூரத்தில் பறக்கும் பறவைகளும் அருகில் தெரிய,

நுரை தள்ளிச் செல்லும் படகில் பயணித்துத்
தரை விட்டுத் தொலை தூரம் சென்றோம்.

வண்ண வண்ணமாய் மிதக்கும் பாட்டில்கள் போன்றவை
உண்ணும் உணவாகும் LOBSTER - களைப் பிடிக்கும்

பொறியின் மேற்பகுதி எனவும், அந்த LOBSTER
கறியின் பிரியர்கள் இம்மக்கள் எனவும் அறிந்தோம்.

வழிகாட்டியின், விவரங்கள் பல அடங்கிய, அமெரிக்க
மொழி கேட்டபடி SEAL கள் காணக் காத்திருந்தோம்.

THUNDER HOLE போன்ற பல அமைப்புகள் இருந்தாலும், மக்கள்
அண்டும் வண்ணம் அமைந்தது நேற்றுக் கண்ட ஒன்றுதான்!

பாறைகள் சூழ்ந்த கடலின் தீவு ஒன்றில்
பாறைகள் மீது கண்டோம் பல SEAL களை!

mail


குட்டிகளைச் சுமந்த சீல்கள் அமைதி காத்திருக்க,
குட்டி சீல்கள் தங்கள் தாய் சீலைத் தொடர்ந்து நீந்த,

எப்படி இந்தக் குளிர் நீரில் கும்மாளமிடுகின்றன என
எண்ணி வியந்தவாறு பயணம் தொடர்ந்தோம்!

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 11


அடுத்த தீவில் லைட் ஹவுசைச் சுற்றிலும் பறவைகள்.
எடுத்தேன் ஆவலுடன் அழகிய வண்ணப் படங்கள்.

mail


நூற்றுக் கணக்கில் பறவைகள் கூடுகள் அமைத்து,
நூற்றுக் கணக்கில் முட்டைகளும் இட்டிருக்க,

விரும்பியபடி படங்கள் பல எடுத்த பின்,
திரும்பினோம் கரைக்கு, நிறைந்த மனத்துடன்.

சின்ன ஷாப்பிங் சென்று, கடைகளைச் சுற்றி வந்து
சின்ன ஒரு படம் மட்டும் வாங்கித் திருப்தியானோம்.

ஆறு மணி நேரப் பயணம் இல்லம் சேர உள்ளதால்,
வேறு ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டோம்.

வழியில் மதிய உணவுக்கு இந்திய உணவகம் தேட,
வழிகாட்டும் குட்டி உபகரணம் உடனே வழி சொன்னது!

உள்ளங்கை அளவே உள்ள அந்த gps மனதை வெல்கிறது.
உள்ளங்கை நெல்லிக்கனிபோல வழி ஆங்கிலத்தில் சொல்கிறது.

வரைபடம் வைத்த காலம் இங்கு மலையேறிவிட்டது.
விரைவில் வழி காண இதுவே துணையாகிவிட்டது.

ஆறு ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றமாகத்
தேறுவதில் இந்த மாற்றமே முதன்மையாகும்!

இந்தியச் சுவையில் அருமையாக உண்டு - இனிய இல்லம்
வந்து சேர்ந்தோம், வழியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு.

 
Last edited:
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 12


ஒரு வாரத் துணிகள் துவைக்க இருந்ததால்,
ஒருவாறு அந்த வேலை முடிக்க வேண்டும்.

குவார்டர்கள் வைத்திருந்த பர்சைக் காணவில்லை;
குவார்டர்கள் தேவை துவைக்கும் மிஷினில் போட!

சில்லறை மாற்ற வேண்டிக் காபிக் கடைக்குக் செல்ல,
சில்லறைக்கு வேண்டி அந்தக் காபி ஒன்றை வாங்க,

அடுத்த கடையில் சில்லரை மிஷின் உள்ளது என்று
அடுத்த லாண்டரிக் கடையை அங்கிருந்தவள் காட்ட,

தண்டனை போல அந்தத் தொட்டிக் காபியை
தண்டமான இரு டாலருக்காகக் குடித்தோம்!

கையிலிருந்த பத்து டாலருக்குக் குவார்டர்கள் மாற்றிக்
கை நிறையக் காசுடன் பெருமையாய் இல்லம் திரும்ப,

துவைக்கும் சோப்பு உள்ள அலமாரியில் இருந்தது,
துவைக்க வேண்டிச் சேர்த்த குவார்டர்கள் உள்ள பர்சு!

ஆறு காசுகள் போட்டு துவைக்கும் மிஷினை இயக்க,
ஆறைந்து மணித்துளிகளில் துணிகள் பிழிந்து கிடைக்க,

ஆறு காசுகள் போட்டு டிரையரில் துணிகள் நிரப்பி, அறுபத்தி-
யாறு நிமிட நேரத்தில் காய வைத்து எடுத்து வந்தோம்.

அதிகச் சூட்டில் துணிகள் சுருண்டு போய்விட - அவைகளுக்கு
அதிகச் சூட்டு இஸ்திரியால் உயிர் கொடுத்தபின் அறிந்தோம்,

பாதி நேரம் ஆனவுடன் மெல்லிய துணிகளை எடுக்கலாம்;
மீதி நேரமும் ஓட்டி கெட்டித் துணிகளைக் காய வைக்கலாம்!

இந்தியா இந்தியாதான்! நம் வாழ்க்கை முறைக்கு
இந்த மிஷின் துவைப்பதெல்லாம் ஒத்தே வராது.

ஒரு வாரத் துணிகளை, உள்ளாடைகள் முதல் சேர்த்து
ஒரே முறை துவைப்பதை ஏற்பதும் நமக்குக் கடினமே!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 13


மூட்டிலே வலி வராது ஜாகிங் செய்ய - மகன்
வீட்டிலே வைத்துள்ளான் யானை மிஷின் ஒன்றை.

ஓடும் வேகம் முதல், செலவான கலோரிகள் வரை,
ஓடும் மானீடர் காட்டுகிறது மிகத் துல்லியமாய்!

எதைக்கண்டாலும் try செய்ய ஆர்வம் காட்டும் நான்
அதையும் விடவில்லை! ஏறி ஐந்து நிமிடம் 'ஓடினேன்'.

சென்ற முறை என் பயணக் குறிப்புகள் உரைநடையில் இருக்க,
இந்த முறை புதுக்கவிதை வடிவில் செய்ய முனைந்தேன்.

'ஆசு கவி' என்று சுற்றம் பல எனைக் காட்ட,
'ராசு கவி' என்று என் அக்கா பெயர் சூட்ட,

தப்பாது லாப் டாப்பின் எதிரில் அமர்ந்து கொண்டு,
இப்போது நான் பெற்ற அனுபவங்கள் தட்டெழுதினேன்.

ஜி மெயில் மொழி மாற்றத்தை நாடிய நான் அறிந்தேன்
ஜி மெயில் கடிதப் பக்கமே மொழி மாற்றம் செய்வதை!

இனி மிகச் சுலபமே! வெட்டி ஓட்டும் வேலை இல்லை.
எளிதாகத் தட்டெழுதிவிடலாம் நேராகக் கடிதத்திலே.

கடல் கடந்து நான் இந்த முறை பெற்ற அனுபவங்களுக்கு,
கடல் கடந்த இரண்டாம் அனுபவம் - எனத் தலைப்பிட்டேன்.

இன்டர்நெட் பழகிவிட்டால் நேரம் நன்கு ஓடிவிடும்.
இன்டரஸ்டிங் - ஆன விஷயங்கள் நம்மைத் தேடிவரும்.

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 14

வெள்ளி மாலை வந்து விட்டால் எல்லோரும்
துள்ளி குதித்து ஓடும் பழக்கம் இங்கு இருந்தாலும்,

இந்த வாரம் சனிக்கிழமை இருந்தோம் இனிய இல்லத்தில்!
வந்த ஓய்வு நேரத்தை ரிலாக்ஸ் செய்து கழித்தோம்.

எடுத்து வந்த சினிமா சி.டிக்கள், டி.வி நிகழ்ச்சிகள் பார்த்து,
அடுத்த நாளைய பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்தோம்.

இனிய சுற்றத்திற்கு சாக்கலேட்டும், சுவாமி படப் பரிசுகளும்,
தனித் தனியே எடுத்து வைத்து, உறங்கச் சென்றோம்.

சப்வே ரயில் நிலையம் வரை மகன் கொண்டுபோய் விட,
சப்வே பயணம் பழகிய நாங்கள் சிவப்பு லைன் ரயில் ஏற,

சில நிமிடங்களில் south station வர, அங்கு
சில நிமிடங்கள் காத்திருந்தோம் amtrak ரயிலுக்கு.

வரிசையாகச் சென்று, பொறுமையாக ரயில் ஏறி,
வரிசைக்கு நான்கு சீட்டுகள் உள்ள கோச்சில் அமர்ந்தோம்.

சதாப்தி ரயில் போல, சாய்வு இருக்கைகள் உண்டு;
திருப்தியாக உண்ண உணவு தர pantry car உண்டு.

வடை போன்ற bagel வாங்கி, இருவரும் பயணத்தின்
இடையில் உண்டோம், இந்த ஊர் மக்கள் போல!

ஆறு மணி நேரத்தில் wilmington station வர,
ஆர்வமாக சுற்றத்தார் எங்களை வரவேற்க,

ஒரு ஏக்கர் மரங்களின் நடுவிலுள்ள அந்த வீட்டை
ஒரு சில நிமிடங்களில் நாங்கள் வந்தடைந்தோம்.

mail


இனிமையான பியானோ இசை இல்லத்தை நிறைத்திருக்க,
இனிமையாக இசைத்த சிறுவனை வாழ்த்தினோம் மேலும் சிறக்க!

அருமையான ருசியில் இந்திய உணவு உண்டபின், அனைவரும்
பொறுமையாகக் கூடிப் பேசிப் பின்னிரவில் உறங்கச் சென்றோம்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 15


லக்ஷ்மி கோவிலுக்கு மறுநாள் காலையில் சென்றோம்.
லக்ஷ்மி கோவிலில் சிவனுக்கும் அருமையான அபிஷேகம்!

mail


ருத்திரமும், சமகமும் மூவர் ஜபிக்க, சிவ பெருமானாகிய
ருத்திரனின் லிங்கத்திற்கு பல வித அபிஷேகங்கள்!

மனம் குளிரப் பூஜைகள் கண்டுவிட்டு, ஆண்டவனின்
மனம் குளிர வைத்த அர்ச்சகரிடம் பிரசாதம் பெற்றோம்.

சில தாள்களை, ராம நாமம் எழுதும் கட்டத்துடன்,
பல மணி நேர HOME WORK ஆக அர்ச்சகர் அளித்தார்!

மதிய உணவுக்குப்பின், எங்களில் நால்வர் மட்டும்
புதிய அனுபவம் பெற LONGWOOD GARDENS சென்றோம்.

உயர்ந்த வெப்ப நிலை உள்ள நாடுகளில் வளரும்
உயர்ந்த வகை செடிகள், மரங்கள் அங்கு உள்ளன.

எத்தனை வண்ண மலர்கள்? எத்தனை வண்ண இலைகள்?
அத்தனை அழகும் காமராவில் படம் எடுக்க முடியுமா?

நொடிக்கு ஒரு படமென எடுத்தோம்; அங்குள்ளது
நொடிக்கு ஒரு விதமாய் மாறும் MUSICAL FOUNTAIN!

ராகத்திற்கு ஏற்றபடி உயரமும், நீர் அளவும் மாறும்
வேகத்திற்கு ஈடில்லை! காட்சி மிக அருமைதான்!

பலவித வடிவங்களில் வெட்டப்பட்ட மரங்கள்.
பலவித மிருகங்கள், பறவைகள் வடிவில் செடிகள்.

நடந்து நடந்து நாங்களும் EXHAUST ஆக,
தொடர்ந்து காமரா பாட்டரியும் EXHAUST ஆக,

இம்முறை இது போதுமென நின்று, ஐந்து மணிக்கு
மறுமுறை MUSICAL FOUNTAIN SHOW ஒன்று கண்டு,

உடல் சோர்வையும் மீறி மனம் ஆனந்தமாயிருக்க,
உடன் திரும்பினோம், வீட்டில் சுற்றம் காத்திருக்க!

 
Back
Top