• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

Status
Not open for further replies.
சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை- பதில்கள் பிளாட்டோ நூல்களிலிருந்து)
சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் உரையாற்றும்போது அவள், உம்மீது வசை மாரி பொழிந்து ஒரு வாளி தண்ணீரையும் கொட்டினாளே, அப்போது என்ன சொன்னீர்?
இதுவரை இடி இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது.

அட, பொறுமையின் இலக்கணமே ! கிரேக்க நாடு பெற்றெடுத்த தவப் புதல்வா! அப்படியானால் நங்கள் எல்லாம் கல்யாணமே கட்டக் கூடாதோ?

வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். கல்யாணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆகிவிடுவீர்கள்.
இப்போது புரிகிறது, நீங்கள் எப்படி தத்துவ வித்தகர் ஆனீர்கள் என்று. எங்கள் உபநிடத்தில் கூறியதை நீரும் கூறினீரா?

உன்னையே நீ அறிவாய்
நல்ல வாசகம், சாக்ரடீஸ், நீவீர் வறுமையில் வாழ்ந்தீர், ஆனால் ஞானச் செல்வத்துக்குக் குறைவில்லை. இளஞர்களில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டீர். இதுதான் உம் மீதுள்ள பெரும்பழி.

நான் யாருக்கும் எதையும் சொல்லித்தர முடியாது. சிந்தனை செய்யத் தூண்டுவதே என் பணி. உன்னை நீ அறிய சிந்தி, நன்றாகச் சிந்தித்துப் பார்.

தெய்வவாக்கில் உமக்கு நம்பிக்கை அதிகம். டெல்பியில் குறி சொல்லும் தெய்வத்திடம் மிகப் பெரிய அறிவாளி யார் என்று கேட்டதற்கு உம்முடைய பெயரை அது கூறியது.அப்போது என்ன தோன்றியது?
என்னை விடச் சிறந்த அறிவாளி யாரையாவது நான் தேடிக் கண்டுபிடிப்பேன். உடனே தெய்வத்திடம் போய் ஏன் என்னைச் சொன்னாய் என்று கேட்பேன்

அஞ்சாத சிங்கம்,ஆனால் ஒரு ஞானி, எங்கள் ஊர் ஜனக மகாரஜா போல,
அறிவாளி யாரையாவது கண்டுபிடித்தீர்களா?
(பல அரசியல்வாதிகளையும் தத்துவ அறிஞர்களையும் பார்த்தபின்)

அவர்களை விட நான் சிறந்தவனே, தெய்வம் சொன்னது பொய்யன்று.

உமக்கு எப்படி இவ்வளவு துணிவு பிறந்தது?
நல்ல செயலைத் துவங்கும்போது அது நேர்மையானதா என்றுதான் பார்ப்பேன். உயிருக்கு ஆபத்து விளையுமா என்று சிந்திப்பது கோழைத் தனம்.

உமது புகழ்பெற்ற பொன்மொழி எங்கள் சரஸ்வதி தேவி “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பதைப் பிரதிபலிக்கிறதே:
எனக்கு ஒன்று தெரியும் ,அது என்னவென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது
I know one thing, that I know nothing.

ஆஹா, புரிகிறது. எங்கள் வள்ளுவரும் “ அறிதோறு, அறியாமை கண்டற்றால்” என்றுதான் சொல்வார்.படிக்கப் படிக்கத்தான், அடடா, இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்தோமே என்று நினைக்கிறோம்
கிரேக்க மக்கள் தொழுதுவந்த தெய்வங்களை நீர் புறக்கனிக்கச் சொன்னதாக உம் மீது பழி சுமத்தப் பட்டுள்ளது, இளைஞர்களை ஒழுக்கத்திலிருந்து தவறச் செய்தீர்களாமே?
புதிய தெய்வங்களை உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மற்றொரு புறம் நான் நாத்தீகம் பேசியதாகச் சொல்கிறீர்கள். இது முரணாக இல்லையா? வெறுப்பும் பொறாமையும் தான் உங்கள் குற்றச் சாட்டுகளுக்குக் காரணம்.

எழுபது வயது, மூன்று பிள்ளைகளுக்கு தந்தை. நீதி மன்றத்தில் மூன்று சொற்பொழிவுகள் செய்தீர்கள்.முதல் சொற்பொழிவில் என்ன சொன்னீர்கள்?
வீண் கர்வத்தாலும், அறியாமையாலும் கஷ்டப்படும் மக்களைத் திருத்துவதே ஆண்டவன் எனக்கு இட்டிருக்கும் பணி. அறம் தவறாது நீதி நிலை நாட்டப்படவேண்டும். இதுவே என் விருப்பம். என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்பேன்.

உமக்கு மரண தண்டனை விதித்த நீதி மன்றத்தில் 501 பேர் இருந்தனர்.ஒரு கவிஞனும் தோல் வியாபாரியும் உமக்கு எதிராக நின்றனர். இவர்களில் 220 பேர் உமக்கு ஆதவளித்தபோது இரண்டாவது உரையில் என்ன சொன்னீர்?
உங்கள் தீர்ப்பு எனக்கு வியப்பளிக்கவில்லை. முன்கூட்டியே குற்றவாளி என்று முடிவுகட்டி விட்டீர்கள். ஆனால் இத்தனை குறைந்த வாக்குகள் தான் எனக்கு மரண தண்டனை அளித்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நான் குற்றமற்றவன் என்று என் மனச் சாட்சி சொல்லுகிறது எனக்கு நீங்கள் பசியும் பிணியும் ஏற்படாதவாறு மானியம் தந்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறையில் அடிமாடு போல வாழ விரும்பவில்லை நான் வேறு நாட்டுக்கு சென்று வசிக்கவும் விரும்பவில்லை. நான் ஒரு ஏழை, அல்லது அபராதத் தொகை கொடுத்திருப்பேன். எனக்கு பொருளை இழப்பதில் ஒரு கஷ்டமும் இல்லை.

மேலை நாட்டு வள்ளுவா, நீயோ வள்ளுவனுக்கும் கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாய்,மூன்றாம் சொற்பொழிவு பற்றி.......
ஏதன்ஸ் நகர மக்களே! நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. நான் வயதானவன். இந்தத் தண்டனை இல்லாவிட்டாலும் குறுகிய காலத்துக்குள் நான் இறக்கத்தான் போகிறேன் போர்ககளத்தில் ஒரு வீரன் எப்படி நடந்துகொள்வானோ அப்படியே நீதிமன்றத்திலும் நடக்கவேண்டும். மனிதனுக்கு மரணம் ஆபத்தல்ல. அதர்மமே ஆபத்து தர்ம வழியில் நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பமில்லை.

எனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நான் எப்படி செல்வர்களையும் பிறரையும் கேள்விகள் கேட்டு துளைத்தேனோ அப்படியே நீங்களும் செய்ய வேண்டும்.அவர்கள் போக்கில் விட்டு விடாதீர்கள். காலம் அதிகரித்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். நானோ இப்போதே உங்களை விட்டுப் போகிறேன். விடை கொடுங்கள்.

(விஷம் கொடுத்து கொல்வதற்கு முன் சிறைச் சாலையில் நடந்தது: நம் ஊரில் கோவில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிய பிறகு முக்கிய காரியங்களை நிறுத்திவைப்பது போல, ஏதன்ஸ் நகர மக்கள் அருகிலுள்ள தீவின் விழாவுக்கான கப்பல் புறப்பட்டுவிட்டால் அது திரும்பும் வரை எதையும் செய்ய மாட்டார்கள். இதனால் சாக்ரடீஸின் மரண தண்டனை சிறிது தடைப்பட்டது)

நண்பர் :கெட்ட செய்தி கொண்டுவந்திருக்கிறேன்
சாக்ரடீஸ்: கப்பல் வந்து விட்டதா?
நண்பர்: நாளை வரப்போகிறது. நாளை உமது ஆயுள் முடியும்
சாக்ரடீஸ்: நண்பரே நான் தூங்குவதால் என்னை எழுப்பாமல் காத்திருந்தீர். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன்.மங்கை ஒருத்தி மங்கல உடை தரித்து என் முன் தோன்றினாள். இன்றைக்கு மூன்றாம் நாள் நீர் அழகிய சொர்க்கத்திற்கு வந்து விடுவீர் என்றாள்.

விஷம் அருந்தும் முன் நீர் என்ன சொன்னீர்?
உடல் நமக்கு இறைவன் தந்த சிறைச் சாலை; இதிலிருந்து நாமாகத் தப்பிவிடக்கூடாது. ஆண்டவனே நம்மை விடுதலை செய்யவேண்டும் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

விஷ பானம் உடலில் வேலை செய்யத் துவங்கியவுடன் நீர் கடைசியாகச் நண்பரிடம் சொன்ன வார்த்தைகள்.......?
நான் ஒரு கோவிலுக்கு பலிக் கடன் செய்ய வேண்டும். அதை எனக்காக நீர் செலுத்திவிடும்.

(சாக்ரடீஸ் எந்த புத்தகமும் எழுதவில்லை. அவரது சீடர்கள் ,குறிப்பாக பிளாட்டோ எழுதிய நூலிலிருந்தும் சாக்ரடீஸை கிண்டல் செய்து அரிஸ்டபனீஸ் எழுதிய நாடகத்திலிருந்தும் பல விஷயங்களை அறிகிறோம்.)
 
Status
Not open for further replies.
Back
Top