• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உறவுகள் தொடர்கதை - நாவல் - அனாமிகா

Status
Not open for further replies.
சுப்பர் ஹிட் ஆகும்!!

தமிழ்க் கதை என்பதால், தமிழிலே பின்னூட்டம்! சில நாட்களாக, என்னை 'நிலாச்சாரல்' புத்தகத்தின் உள் செல்ல

முடியாது, இன்டர்நெட் தடுத்தது! நேற்று முயன்றபோது, அஹா! கிடைத்தது! விடுவேனா, சந்தர்ப்பத்தை! திறந்தேன்;

படித்தேன் - முதலில் பதினெட்டாம் பகுதியை! தமிழ் சினிமாவின் முடிவில், வில்லன் தன் எல்லாத் திட்டங்களையும்

கோர்வையாகச் சொல்லும்போது, கடைசி நிமிஷங்களில் படம் பார்க்க வந்தவர்களுக்கும், கதையின் 'போக்கு'

நன்றாகப் புரிந்துவிடும். அதே போல நானும் உணர்ந்தேன்! சூர்யா, கதிர்வேல், அரவிந்தன் பேச்சுக்களிலிருந்து,

தெளிவாகக் கதையோட்டம் புரிந்தது. நமக்கு மற்ற சின்னச் சின்ன உரையாடல்கள் வேண்டுமென்றால்,

முற்பகுதிகளைப் படிக்க வேண்டும். நான் படிக்கவில்லை!



சூர்யா போன்ற பெண்கள், நிஜ வாழ்வில் இருப்பது இயலாத விஷயம். 'லூட்டி செய்யும் கதாநாயகிகளைப் போல நிஜ

வாழ்வில் பெண்கள் செய்தால், பலர் முகம் சுளிப்பார்கள்', என்று முன்பு என்னுடைய ஒரு 'நூலில்' எழுதியிருந்தேன்.

சூர்யா செய்வது 'தமிழ் சினிமாத்தனம்' - 100%



திரை உலகில் சிபாரிசு இருந்தால், திருமதி ஹேமா, தன் கதையை ஒரு படமாக்கச் சொல்லலாம். சுப்பர் ஹிட் ஆகும்.

கட்டாயம்!



அரவிந்த்: நடிகர் சூர்யா / நடிகர் விக்ரம்

சாந்தி: ஜோதிகா

சூர்யா: அசின்


இயக்குனர்: K. S. ரவிகுமார்!


இது என் தேர்வு!

:drama: . . . :thumb:

 
Thanks to Kunjuppu Sir and Raji ma'am for the feedbacks :wave:

Raji ma'am, actors' selection is o.k with me except for Asin, Asin's fans will be greatly disappointed if she comes in a sari for the whole film and preaches about Indian culture,....isn't it? A few years ago, Suhasini, Revathi, Devayani and the like would have suited but now I feel it can be a newcomer with no strings attached. I don't have any filmi connections, ...., if any producer wants a clean story without third-rate for a

I am continuing the story here for Tambram readers and comments are welcome as usual.

அத்தியாயம் - 3
***************
அரவிந்தனின் வீட்டிலிருந்து புறப்பட்ட சூர்யா, தோழி மலர்விழியின் வீட்டுக்குச் சென்றாள்.

"அட, சூர்யாவா? வாம்மா, நல்லாயிருக்கியா? மலர், சூர்யா வந்திருக்கா பாரு..."

மலர்விழியின் தாயார் அன்புடன் வரவேற்றார்.

"வாங்கம்மா, வாங்க! எங்க வீட்டுக்கு இப்பதான் ரோடு வசதி வந்திருக்கு போல" மலர் கேலி செய்ய,"ஏய்..மலர்! வந்ததும் வராததுமா என் கையால
அடி வாங்கப் போறே பார்."

"சரி, சரி வா உள்ளே போகலாம்."

"நீ எப்படி இருக்கே சூர்யா? ஆஃபிஸ் வேலைகள் எல்லாம் எப்படி இருக்கு?"

"எல்லாம் நல்லா இருக்கு. நீ வீட்டில் உட்கார்ந்துகிட்டு என்ன பண்றே?"

"என்ன இப்படி கேட்கிற சூர்யா? வீட்டுல எவ்வுளவு வேலை? சாப்பிடணும், தூங்கணும், புத்தகம் படிக்கணும், டி.வி பார்க்கணும்."

"அம்மாடி! ரொம்பக் கஷ்டம்தான் போ, அது சரி, குமார், ஆனந்தி எல்லாம் எப்படி இருக்காங்க?"

அதுவரை விளையாட்டாய்ப் பேசிக்கொண்டிருந்த மலர், திடீரென்று முகம் மாறினாள்.

"குமார் நல்லா படிக்கிறான். இந்த ஆனந்தியைப் பத்திதான் ரொம்பக் கவலையா இருக்கு"

"ஏன்,ஒழுங்கா காலேஜ் போகிறாளா, இல்லையா?"

"அதெல்லாம் போகிறா, ஆனா எதுவும் படிக்கிற மாதிரியே தெரியலை. ரொம்ப ஃபேஷனா டிரெஸ் பண்றதும், ஊர் சுத்தறதும்தான் பெரிசா இருக்கு.
அடிக்கடி ஃப்ரெண்ட்ஸ் கூட ஊர் சுத்த போயிடறா. வீட்டுக்கு லேட்டா வர்றா; ரொம்ப கண்டிக்கவும் முடியலை. அவளைப் பத்திதான் கொஞ்சம் கவலையா இருக்கு."

"காலேஜ் சேர்ந்த முதல் வருஷம், இல்லையா மலர்? ஸ்கூல்ல கண்டிப்பா இருந்துட்டு காலேஜ் வந்ததும் சுதந்திரமா இருந்தா அப்படித்தான் இருக்கும்.
அதே சமயம், அவங்க அந்த சுதந்திரத்தோட எல்லை மீறாமலும் பார்த்துக்கணும். எதுக்கும் அவளோட ஃப்ரெண்ட்ஸ் எந்த மாதிரின்னு கவனிச்சு வை."

"ஆமாம், சூர்யா! எல்லாருக்கும் எனக்குக் கிடைச்ச மாதிரி நல்ல தோழி கிடைச்சுடுவாளா?"

பள்ளி நாட்களில் பூத்த அவர்கள் நட்பு வேர் விட்டு இறுகி இப்போது மரமாகி விட்டது. தன் குடும்பத்தை எண்ணி சூர்யா கலங்கும் வேளைகளில்
மலரும், அவள் தாய், தந்தையும்தான் சூர்யாவுக்கு ஆறுதல் சொல்வார்கள்.

"நல்ல புத்தகங்கள் படிக்கிற ஆர்வம், நல்ல விஷயங்கள்ல ஆர்வம் - இதெல்லாம் வந்துட்டா வேண்டாத குணங்களெல்லாம் விட்டு ஓடியே
போயிடும். ஆனா, பாரு மலர் ! இதோட வாசனை கூடத் தெரியாதபடி இப்பல்லாம் எங்கேயும் ஆபாச காட்சிகள், அரைகுறை ஆடைகள், அழகிப்
போட்டின்னு பெண்களை அசிங்கப்படுத்தறது - இதெல்லாம் நிறைஞ்சு போய் இந்தக் கால இளைஞர்களையும், இளம்பெண்களையும் ஒரு
மயக்கத்தில் வைச்சிருக்கு.இந்த மயக்கம் தெளிஞ்சுட்டா எல்லாம் சரியாயிடும். ஒரு நாள் ஆனந்தி வீட்டுல இருக்கிற நேரம் பார்த்து எனக்கு
சொல்லு; நான் வந்து அவளைத் தெளிய வைக்கிறேன். என்ன சரியா?"

மலர் சம்மதம் என்று தலையசைத்தாள்.

"சூர்யா...கேட்கவே மறந்துட்டேன், நேத்து ஃபோனில் சொன்னியே...அந்த விஷயம் என்னாச்சு? அவரைப் பார்க்கப் போனியா? இல்லையா?"

"கத்தாம மெதுவாப்பேசு, மலர்! அம்மா கேட்டுடப் போறாங்க"

"அப்ப அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமா? சரி, முதல்ல விஷயத்துக்கு வா"

"நேரா அவங்க வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்துட்டுதான் உங்க வீட்டுக்கு வவேன்."

"ஆள் எப்படியிருக்கார்? அதைச் சொல்லு"

"பார்க்க நல்லாயிருக்கார். பேசின வரைக்கும் நல்ல மாதிரியாதான் தெரியுது. பிடிச்சிருந்தா ஃபோன் பண்ணுங்கன்னு நம்பர் கொடுத்துட்டு
வந்திருக்கேன்."

"நாளைக்கே ஃபோன் வரும் பார்"

"எல்லாம் நல்லபடி முடியட்டும். அதுவரையில் அம்மாவுக்குக் கூட சொல்லாதே"

மலர் ஒப்புக்கொள்ள, சூர்யா விடைபெற்றுக் கிளம்பினாள்.

*****************************************************
சூர்யாவைப் பார்த்த பிறகு, அரவிந்தனுக்கு உற்சாகம் கூடியிருந்தது. 'சூர்யாவையே கல்யாணம் செய்துகொண்டால் என்ன?' என்றும் தோன்றியது.
ஆனால் அடிக்கடி, 'டாடி, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்களா?' என்று ரஞ்சனி கேட்பது போல ஒரு பிரமையும் ஏற்பட்டது.

இருந்தாலும், சூர்யாவை மறக்க அரவிந்தனால் முடியவில்லை. அவளுடைய அடக்கமான தோற்றமும், அமைதியான பேச்சும் அவன் நினைவை
விட்டு நீங்கவேயில்லை.

சூர்யா வந்துவிட்டுப் போன இரண்டு நாள்களுக்குள்ளேயே சம்மதம் என்று அரவிந்தன் முடிவெடுத்துவிட்டான். ஆனாலும் ஃபோன் செய்து சொல்ல
அவனுக்குத் தயக்கமாகவே இருந்தது. 'நம்மைப் பற்றி 'சீப்'பாக சூர்யா நினைத்து விட்டால்?' என்ற கேள்வி அவன் மனசுக்குள் எழுந்தது. அதனால்
ஒருவாரம் முடிந்த பிறகே ஃபோன் செய்ய வேண்டும் என்று மிகுந்த சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

இதற்கிடையில், அவன் அளித்திருந்த விளம்பரத்துக்கு வேறு சில கடிதங்களும் தபாலில் வந்தன. எட்டாவது வரை, பத்தாவது வரை படித்த
பெண்களாக அவை இருந்ததால், அரவிந்தன் அப்படியே ஒதுக்கிவிட்டான். ஒரு கடிதம் மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது.

திருமணமாகி ஒரு மாதத்தில் விவாகரத்து செய்துவிட்ட பெண்ணின் தகப்பனார் சற்றே கோபத்துடன் எழுதியிருந்தார்.'விவாகரத்து வாங்கிய
நீங்களே, விவாகரத்து செய்த பெண்னைத் திருமணம் செய்ய மறுப்பது ஏன்?" என்று கோபமாய்க் கேட்டிருந்தார்.

சிந்தித்துப் பார்த்ததில் அரவிந்தனால் பதில் சொல்ல முடியவில்லை. 'மனைவி என்பவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள்' என்று காலம்
காலமாக ஆண்கள் மனத்தில் பதிந்து விட்ட கருத்தே இதற்கு அடிப்படையாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் மட்டும் எழுந்தது. மனத்தில்
சூர்யா பதிந்து விட்டதால், அதற்குமேல், அந்தக் கடிதத்தை அவன் பொருட்படுத்தவில்லை.

மறுநாள் திங்கட்கிழமை அன்று காலையில் சூர்யாவின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான்.

"ஹலோ, சூர்யா பேசறேன்."

"நான் தான் அரவிந்தன் பேசறேன்."

எதிர்முனையில் மௌனம்.

"உங்களை நேரில் பார்த்துப் பேசணும். மாலையிலே கண்ணகி சிலையருகில் காத்துக்கிட்டிருக்கேன். வர முடியுமா?"

"சரி, வரேன். எத்தனை மணிக்கு?"

"ஆறு மணிக்கு வாங்க. சாயங்காலம் பார்க்கலாம். பை."

மாலை ஆறு மணிக்கு கண்ணகி சிலையின் அருகில் காத்திருந்த அரவிந்தன், இரவு எட்டு மணி வரை காத்திருந்து, காத்திருந்து
களைத்துப் போனான். சூர்யா வரவேயில்லை.

(உறவுகள் தொடரும்......)
 
................
Raji ma'am, actors' selection is o.k with me except for Asin, Asin's fans will be greatly disappointed if she comes in a sari for the whole film and preaches about Indian culture,....isn't it? A few years ago, Suhasini, Revathi, Devayani and the like would have suited but now I feel it can be a newcomer with no strings attached.........

Dear Hema, Asin is the only youngster who has good expressions. She will look different in dresses like sarees and
chudis. But no worries for her fans. The director will include dream scenes and quench their thirst!! :sleep:

Best wishes...
 
அத்தியாயம் - 4
***************
மறுநாள் அலுவலகம் வந்தபோது, அரவிந்தனின் கண்கள் சிவந்திருந்தன.

முதல்நாள் சூர்யாவுக்காக காத்திருந்து கிடைத்த ஏமாற்றத்தின் விளைவு அது. ஏமாற்றம் கோபமாக மாறியது.

"என்னைப் பிடிக்கவில்லை என்றால், நேற்று நான் ஃபோன் செய்தபோதே சொல்லியிருக்கலாமே. அதை விட்டுவிட்டு எதற்காக வருவதாகப் பொய்
சொல்லி என்னை அவமானப்படுத்த வேண்டும்?"

சூர்யாவின் மேல் எழுந்த கோபம் அவன் உறக்கத்தைத் தின்றுவிட்டது.

வழக்கமான சுறுசுறுப்பில் வேலைகள் நடக்கவில்லை என்றாலும் மாலையாகும் போது கொஞ்சம் இயல்பாக மாறியிருந்தான்.

பணியாள் வந்து, "சார்! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க" என்றபோது, யாராவது நண்பனாக இருக்கக்கூடும் என்று எண்ணியபடி சென்ற
அரவிந்தனுக்கு, சின்னதாய் ஒரு சந்தோஷ அதிர்ச்சி சூர்யா வடிவில் காத்திருந்தது.

சூர்யாவைப் பார்த்ததில் நிஜமாகவே சந்தோஷம்தான் என்றாலும், முதல்நாளின் கோபம் இன்னும் மிச்சம் இருந்ததால், அரவிந்தன் மகிழ்ச்சியை
வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டான்.

"அட சூர்யாவா! என்ன இந்தப் பக்கம், ஏதாவது வேலையா வந்தீங்களா?"

"என்ன இப்படிக் கேட்கறீங்க? உங்களைப் பார்த்து பேசத்தான் வந்திருக்கேன்."

"ஆனா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கே."

"பரவாயில்லை, நீங்க முடிச்சுட்டு வாங்க.நான் அதுவரை காத்துக்கிட்டிருக்கேன்."

அதற்குமேல் அரவிந்தனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பத்து நிமிடங்களில் கோப்புகளை ஒழுங்கு செய்து, தன்னுடைய அலமாரியைப் பூட்டி
உரிய முறையில் அனுமதி பெற்று வந்துவிட்டான்.

"வாங்க சூர்யா! வெளியில போய் பேசலாம்."

"வேலை முடிஞ்சாச்சா?"

அரவிந்தன் தலையாட்டியே தீர வேண்டிய கட்டாயம். மேலும் கீழுமாய் நன்றாகவே ஆட்டினான்.

சிறிதுதூரம் நடந்த பின், உணவகம் வந்தது.

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அந்த ஹோட்டல்லே போய்ப் பேசலாமா?"

அரவிந்தன் கேட்க, சூர்யா முதலில் தயங்கி பிறகு 'சரி'யென்று தலையாட்டினாள்.

உணவகத்தின் உள்ளே, உருவாக்கப்பட்ட இருட்டு. மேஜைகளின் மீது மட்டும் விழும்படி, சின்னச் சின்ன வெளிச்சப் பூக்கள். 'திடீரென்று
அரசனாகி விட்டோமோ' என்று எண்ணுமளவுக்கு மிகுந்....த அடக்கமாக, மிகுந்த மரியாதையுடன் உபசரிக்கும் 'பேரர்'கள்.

அரவிந்தனும் சூர்யாவும் அமர்ந்து இரண்டு குளிர்பானங்களுக்கு ஆர்டர் செய்தனர். சூர்யாவே பேசத் தொடங்கினாள்.

"நேற்று என்னை வரச் சொன்னீங்களே, எதுக்கு?"

"கல்யாணத்துக்குச் சம்மதம் அப்படீங்கற என் முடிவை உங்ககிட்டே சொல்லலாம்னுதான் வரச்சொன்னேன்."

கதைகளில் வருவது போல் திருமணம் என்றதும் சூர்யாவின் முகத்தில் நாணத்தின் செம்மை படர்கிறதா எனப் பார்க்கும் ஆவலில் அரவிந்தன்
பேச்சை நிறுத்தினான். அடச் சே! விளக்குகள் போடாத அந்த உணவகம் அவன் ஆசையை நிராசையாக்கியது. மீண்டும் தொடர்ந்தான்.

"ஆனா, நேத்து நீங்க வராததுனால உங்க முடிவைத் தெரிஞ்சுக்க முடியலை."

"இன்னிக்கு உங்களைத் தேடி வந்துட்டேனே, இன்னும் என் முடிவு புரியலைன்னா சொல்றீங்க?"

சூர்யா சிரித்தபடி கேட்க, அரவிந்தனும் அவள் சிரிப்பில் சேர்ந்துகொண்டான்.

இன்னும் ஏதேதோ பேசியபடி, இனிப்பு வரவழைத்துச் சாப்பிட்டபிறகு கல்யாணப்பேச்சு எழுந்தது.

"கல்யாணத்தை சிம்பிளா ரிஜிஸ்டர் ஆஃபிஸ்லே வைச்சுக்கலாம். எங்கப்பா, அம்மா வர்றது சந்தேகம்தான். ஐந்து, ஆறு பேர் நண்பர்கள்தான்
வருவாங்க.அவ்வளவுதான். உன் பக்கம் எப்படி?"

"என் கல்யாணத்துக்கு வர்றதுக்கு இரண்டு பேர்தான் காத்துக்கிட்டிருக்காங்க. ஒருத்தி, என் தோழி மலர், பிறகு இன்னொரு தோழி சிந்து. நான்
ஒரு விஷயம் கேட்கலாமா?"

"என்ன தயக்கம் சூர்யா? தாராளமாக் கேளு"

"அதாவது, சிந்து ஆஃபிஸ் வேலையா சிங்கப்பூர் போயிருக்கா. மூணு மாசத்துல வந்துருவா, அவளுக்கு என் கல்யாணத்துல கலந்துக்கணும்னு ரொம்ப ஆசை. அதனால மூணு மாசம் கழிச்சு நாம கல்யாணம் செய்துக்கலாமா? ப்ளீஸ்..." என்று சூர்யா கேட்க, அரவிந்தனும் ஒப்புக்கொண்டான்.

"அப்படியே செய்துடலாம், கூடவே ஒரு சின்ன நிபந்தனை!"

"என்ன, சொல்லுங்க?"

"நான் எங்கேயாவது வெளியில கூப்பிட்டா, நீ கண்டிப்பா வரணும். சரியா?"

"உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். எல்லா ஆண்களும் உங்களைப் போல நல்லவரா இருந்தா, அந்த
ப்ரியா இப்படிக் கஷ்டப்படுவாளா? நினைச்சாலே ரொம்ப பாவமா இருக்குங்க..."

அரவிந்தனுக்கு சூர்யாவின் பேச்சு சுத்தமாகப் புரியவில்லை.

"இப்படி திடீர்னு 'டிராக்' மாறிப் பேசினா, எனக்கு என்ன புரியும் சூர்யா? யார் அந்த ப்ரியா? என்ன கஷ்டம்? தெளிவாத்தான் சொல்லேன்."

"என் கூட ஆஃபீஸ்லே வேலை செய்யற ப்ரியாங்க. நேத்து நான் வர முடியாம போனதுக்குக் காரணமே அவங்கதான்."

"ஓஹோ! இப்பப் புரியுது. அவங்க கஷ்டத்தை எல்லாம் உங்கிட்ட சொல்லி அழுது புலம்பிகிட்டு இருந்திருப்பாங்க. அதனால்தான் வரமுடியலையா?"

"அதுவும் இல்லைங்க."

"பின்னே, என்ன தான் ஆச்சு?"

"நேத்து நான் உங்களைப் பார்க்க வர்றதுக்காக கிளம்பிட்டிருந்தேன், அப்ப ப்ரியா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவங்க எங்க பிராஞ்சுக்கு
வந்து ஆறு மாசம்தான் ஆகுது. ஆஃபிஸ்லே ரொம்பவும் ரிசர்வ்டு டைப். யார் கூடவும் ரொம்ப பேச மாட்டாங்க. ஆஃபிஸ்லே எல்லாரும் திகைச்சுப்
போய் நின்னுட்டாங்க. அப்புறம் நான்தான் ஆஃபிஸ் ரெகார்ட்ஸ் பார்த்து அவங்க அட்ரஸ் தெரிஞ்சுக்கிட்டு, ஒரு ஆட்டோ வைச்சு அவங்களை ஒரு
ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனேன்."

"ம்....பிறகு?"

"டாக்டர் பார்த்து மயக்கம் தெளிய மருந்து கொடுத்தார். அப்புறம் ஏதேதோ டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார். அப்புறம் நானும்
அவங்களுக்குத் துணையா அவங்க வீடு வரைக்கும் போனேன். அவங்க வீட்டுல பாருங்க, ஸ்கூல் படிக்கிற அவங்க குழந்தை பயந்துகிட்டே
உட்கார்ந்திருக்கு. ஆறு மணிக்கு வர்ற அம்மா ஏழரை மணியாயிடுச்சே, இன்னும் வரலையேன்னு கவலையா, தனியா உட்கார்ந்திருந்த அந்தக்
குழந்தையைப் பார்த்து எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு."

"ஏன் சூர்யா! அவங்க வீட்டுல பெரியவங்க, அவங்க புருஷன் யாருமே இல்லையா?"

"அவங்க டைவர்ஸீயாம். அவங்க அப்பா, அம்மா வேறே ஏதோ ஊர்லே இருக்காங்களாம். ஹ்ம்! உங்களை மாதிரி நல்ல கணவர் அமைஞ்சிருந்தா,
அவங்க இப்படித் தனியா திண்டாடியிருப்பாங்களா? எல்லாம் அவங்கவங்க அதிர்ஷ்டம். என்ன சொல்றீங்க?"

அரவிந்தன் 'ம்' என்று தலையாட்டினான். நெஞ்சுக்குள் மகள் ரஞ்சனியின் நினைவு மின்னலைப் போல ஓடியது. ரஞ்சனியும் இப்போது, இந்த
நிலையில்தான் இருப்பாளோ?

"என்ன அப்படியே உட்கார்ந்துட்டீங்க? நேரமாச்சு. நான் கிளம்பறேன். அப்புறமா பார்க்கலாம். பை."

சூர்யா எழுந்திருக்க, யோசனைகளை விடாப்பிடியாகத் தள்ளிவைத்து அரவிந்தனும் அவளுடன் கிளம்பினான்.

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 5
***************
தியாகராய நகரில் சூர்யாவும், செண்பகமும் பொருள் வாங்கி முடிக்கும் போது, உச்சி வெயில் தலையைச் சுடத் தொடங்கி விட்டது.
செண்பகத்துக்கு ஐம்பது வயது; அவருடைய உறவினர் வீட்டில் சிறிய விசேஷம். வெள்ளியில் பரிசுப்பொருள் வாங்க முடிவெடுத்து, துணைக்கு பக்கத்து வீட்டு சூர்யாவோடு வந்திருந்தார். காலை பத்து மணிக்கு அங்கு வந்துவிட்டார்கள். நிறையக் கடைகள் இறைந்து கிடந்த போதும், சில இடங்களில் டிசைன் பிடிக்கவில்லை; சிலவற்றில் விலை கைக்கு எட்டவில்லை. கடைகடையாக ஏறி இறங்கி இப்போது தான் அன்னம் போல அழகிய குங்குமச்சிமிழ் கையில் வந்தது.

"இங்க வந்தாதாம்மா தெரியுது; இந்தியா எவ்வுளவு பணக்கார நாடுன்னு."

சூர்யா செண்பகத்திடம் முணுமுணுத்தாள். அவள் சொல்வது உண்மையோ என்று கூட சிலசமயம் தோன்றும்; ஒவ்வொரு நகைக்கடையும், புடைவைக்கடையும் மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதைப் பார்க்கும் யாருக்கும் அப்படித்தான் தோன்றும். ஆனால், கொஞ்ச தூரம் கடந்து ரங்கநாதன் தெருவுக்குப் போனால், அங்கே எத்தனையோ பேர் அதிலும் சிறு வயதில் ஸேப்டி பின், ஃபிரிஜ் கவர், நாப்தலின் உருண்டைகள் என்று அலைந்து அலைந்து விற்பதைப் பார்க்கும் போது, "இந்தியா போல ஏழை நாடும் உண்டோ?" என்றாகி விடும்.

"என்னம்மா யோசனை? ஹோட்டல் வந்தாச்சு. உள்ளே போகலாம், வாங்க"

இருவரும் உள்ளே நுழைந்தனர். சூர்யா கைகழுவி வருவதற்காக 'வாஷ்பேஸின்' தேடிச் சென்றாள்.

சில மேஜைகளைக் கடந்து சென்ற போது தெரிந்த ஒரு முகம், அவள் சிந்தனைகளைக் கிளப்பியது. கை கழுவும் போது அவள் மனம் மலரைப் பற்றி நினைத்தது.

"மலர், ஆனந்தியைப் பற்றி கவலைப்பட்டது சரிதானா? இப்படிக் கல்லூரி நேரத்தில் இங்கே ஆனந்தி வந்திருப்பது எதற்காக? ஏதோ விடுமுறை, வகுப்பு இல்லை என்று வைத்துக்கொண்டாலும் தோழிகள் யாருமின்றி, இப்படித் தனியாக ஓர் இளைஞனுடன் .....ம்....இதில் ஏதோ ஒரு விஷயம்
இருக்கிறதே...ஒரு வேளை ஆனந்தி அவனைக் காதலிக்கிறாளோ?"

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சூர்யா முடிவெடுத்தாள். அதற்கான காரணமும் இருந்தது. சூர்யா தங்களைத் தாண்டிப் போனதைக் கூட ஆனந்தி கவனிக்கவில்லை. அவர்கள் இருவருமே அப்போதைக்கு அந்த ஹோட்டலில் இருப்பதாகவே தெரியவில்லை. சுற்றி நடக்கும் எதுவும் தெரியாமல் ஒரு தனி உலகில் இருப்பது போன்ற எண்ணமே இருந்தது.

சூர்யா கைகழுவி மீண்டும் அவர்கள் மேஜையைத் தாண்டிச் சென்றாள். இப்போதும் ஆனந்தி அவளைக் கவனிக்கவில்லை. செண்பகத்தின் அருகில் சென்ற சூர்யா, 'என் ஃப்ரெண்டோட தங்கை வந்திருக்கா. நான் போய் பேசிட்டு வந்திடறேன்."

"அதோ...அங்கே அந்த பையனோட தனியா வந்திருக்காளே, மஞ்சள் சுடி, அவ தானே? நானும் பார்த்திட்டுதான் இருக்கேன், உலகமே தெரியாம உட்கார்ந்திருக்கிறதைப் பாரு, இவங்களெல்லாம் காலேஜ் போய் படிக்கிறாங்களோ இல்லையோ நல்லா காதலிக்க கத்துக்கிறாங்க!"

செண்பகம் வெறுப்போடு கூறினார்.

"ஆனந்தியைப் பார்த்தால் காதல் மாதிரி தோணுது. ஆனா, அந்தப் பையன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. இப்ப டக்னு போய் நின்னு பார்த்தால் ஓரளவுக்கு கணிச்சுடலாம்; கல்யாணம் செய்துக்கறவனா, கைகழுவிடப் போறவனான்னு. இப்ப விட்டுட்டு விஷயம் முத்தினப் பிறகு
புலம்பி என்ன பயன்? எதுக்கும் நான் போய் பேசிட்டு வந்துடறேன்"

அந்த இளைஞனை எடை போட்டுக்கொண்டே சூர்யா ஆனந்தியை நோக்கிச் சென்றாள்.

இந்தக் காலத்தில் பெரும்பான்மையான இளைஞர்கள் வித்தியாசமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, சராசரிகளாகி விடுபவர்கள். அவர்களில் இவனும் அடக்கம். சாயம் போன ஜீன்ஸ், அழுக்குக் கலரில் டி-ஷர்ட், சென்னையில் கொளுத்தும் இந்த அனலில் ஒரு ஜீன்ஸ் ஜாக்கெட் வேறு.
அவனுடைய பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு சூர்யாவுக்குச் சிரிப்புத் தான் வந்தது. மேலைநாட்டு நாகரிகத்தைக் காப்பியடிப்பதென்றாலும்,அதற்கென்று இப்படியா? அவர்கள் நாட்டுக்கும், நமது நாட்டுக்கும் உள்ள சீதோஷ்ண நிலை வித்தியாசங்கள் புரியாமல் நடக்கும் இவர்களை யார் காப்பாற்றப் போகிறார்களோ?

அவன் அநேகமாக மோட்டார்பைக் அல்லது ஏதாவது வாகனம் வைத்திருக்கக்கூடும். அதற்கு அடையாளமாக ஒரு விரலில் சாவியை வைத்தபடி சுழற்றிக் கொண்டிருந்தான்.

"ஹலோ ஆனந்தி! என்ன ஆச்சரியமா இந்தப் பக்கம்? எப்படி இருக்கே?"

சூர்யாவின் கேள்வி இருவரையுமே திடுக்கிட வைத்தது.

"வ..வந்துக்கா....காலேஜ் லீவு... அதான்.."

"இவர் யாருன்னு எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லையே? உன்னோட கிளாஸ்மேட்டா?"

"இல்லைக்கா...வ...வந்து..."

ஆனந்தி மென்று விழுங்க, அவனுக்கு இது போன்ற விஷயங்கள் ஏற்கனவே பழக்கம் போலும். உடனே சமாளித்துக் கொண்டு பேசினான்.

"நான் சரவணன். நண்பர்களுக்கு சரண். ஆனந்தி காலேஜ்ல வேற சப்ஜெக்ட். ஃபைனல் இயர் படிக்கிறேன். வாங்க, உட்காருங்க" என்று அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினான். சூர்யா நன்றி சொல்லி அமர்ந்து கொண்டாள்.

"நான் ஆனந்திக்கு அக்கா மாதிரி. இன்னொரு விஷயம். நான் காதலுக்கு எதிரி இல்லை. அதனால நீங்க தாராளமா எங்கிட்ட உண்மையைச் சொல்லலாம்."

சரவணன் படபடப்பாய் பேசினான்.

"என்னங்க, நான் தான் சொல்லிட்டேனே? நீங்க அனாவசியமா எங்க மேலே சந்தேகப்படறீங்க."

"மிஸ்டர் சரண்! ப்ளீஸ், நீங்க சும்மாயிருங்க. ஆனந்தியை எனக்குப் பத்து வருஷமாத் தெரியும். அவளோட முகத்தைப் பார்த்தே 'என்ன விஷயம்'னு சொல்ல முடியும். இருந்தாலும் அவளே சொல்லணும், அது தான் நியாயம்.ம்....ஆனந்தி, நீ சொல்லு. உங்களுக்குள்ள உறவு எந்த மாதிரி?"

சூர்யாவைப் பார்த்ததுமே கைகால் நடுங்கத் தொடங்கி விட்ட ஆனந்தி, அவள் பேசப்பேச முகம் வெளுத்துக் கொண்டே வந்தாள். இப்போது சூர்யா கேட்ட கேள்வி அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், இங்கேயே இப்போதே எதிர்பார்க்கவில்லை. முகத்தில் வியர்வை படர்ந்தது. நாக்கு வறண்டதைப் போலிருந்தது.

"சொல்லு, ஆனந்தி"

சூர்யா அடிக்குரலில் அதட்டினாள்.

"வந்துக்கா...நானும் அவரை விரும்பறேன். அவரும் என்னை விரும்பறார்."

ஆனந்தி அவசரமாய்ச் சொல்லி முடித்தாள்.

"எத்தனை நாளா இந்தப் பழக்கம்?"

"இரண்டு மாசம் பத்து நாள்"

சொல்லி விட்டு, ஆனந்தி தலையைக் குனிந்துகொண்டாள்.

"உனக்கு என்ன வயசு, ஆனந்தி?"

இப்போது எதற்கு இந்தக் கேள்வி என்று புரியாமல் விழித்த ஆனந்தி, "பதினெட்டு முடிஞ்சுது" என்றாள்.

"அதற்குள்ளே கல்யாணத்துக்கு இவ்வுளவு அவசரப்படறே, சரி பரவாயில்லை" என்று பெருமூச்சு விட்டாள் சூர்யா.

ஏதோ உபதேசமோ, திட்டோ விழப்போகிறது என்று காத்திருந்த ஆனந்தி, சூர்யா சொன்னதைக் கேட்டு மனதிற்குள் மகிழ்ந்தாள். கண்களில் சந்தோஷம் மின்னியது. சரணை ஆவலோடு பார்க்க, அவன் எந்த மாற்றமும் இன்றி அப்படியே அமர்ந்திருந்தான்.

"நீங்க அடுத்தபடி ஆனந்தியை பார்க்கப்போறது அவங்க வீட்டுல உங்க பேரெண்ட்ஸ் கூடத்தான். உங்க வீட்டுல பெரியவங்க கிட்ட சொல்லி,அனுமதி வாங்குங்க. ஆனந்தி வீட்டுல அனுமதி வாங்கறது என் பொறுப்பு. என்ன? இரண்டு நாள் போதும்னு நினைக்கிறேன். வர்ற ஞாயிற்றுக்கிழமையே கூட நீங்க முறைப்படி பெண் கேட்டு வரலாம். எதுக்கும் சனிக்கிழமை ஃபோன் பண்ணி, ஆனந்தி கிட்ட கன்ஃபர்ம் பண்ணிடுங்க. வா, ஆனந்தி போகலாம். பை, சரண்!"

ஆனந்திக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. சூர்யா அக்கா சொன்னால், மலர் நிச்சயமாகக் கேட்பாள். தன் காதலை இத்தனை சுலபமாய்க் கல்யாணத்தில் முடிக்க, ஆண்டவனே தான் சூர்யா அக்காவை இன்றைக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணினாள். ஆனந்தி சரணைக் கடக்கும்போது, அவன் புறங்கையில் லேசாகக் கிள்ளி, கண்களால் விடைபெற்றாள்.

செண்பகத்தின் அருகில் சென்று சூர்யாவும் ஆனந்தியும் அமர்ந்தனர். ஆனந்தி கவனிக்காத போது, சூர்யா செண்பகத்திடம் கண்ஜாடை காட்டிவிட்டு பேசத்தொடங்கினாள்.

"எங்க ஆனந்தியும், அந்தப் பையனும் காதலிக்கிறாங்களாம். எப்படியும் யாரோ ஒருத்தருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப் போறாங்க, அதை இந்தப் பையனுக்கே செய்து கொடுக்கலாம்னு மலர் வீட்டுல சொல்லலாம்னு இருக்கேன். கண்ட இடங்கள்லே எல்லாம் சுத்தி பேர் கெட்டுப்போறதைவிட, அவனையே கல்யாணம் செய்துட்டு கௌரவமா வாழ்ந்துடலாமே, என்ன சொல்றீங்க?"

"நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்" ஆமோதித்தாள் செண்பகம்.

"அதான் ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வரச் சொல்லி இருக்கேன், வருவாங்களா ஆனந்தி?" என்று சூர்யா கேட்க, " நிச்சயம் வருவார்" என்று உறுதியாய்க் கூறினாள் ஆனந்தி.

(உறவுகள் தொடரும்.......)
 
அத்தியாயம் - 6

ஞாயிறு. சன் டி.வியின் நிகழ்ச்சியில் லயித்திருந்த மலரை அழைப்புமணி இசை எழுப்பிக் கலைத்தது.

கதவைத் திறந்த மலர் முகம் மலர்ந்தாள்.

"அட! சூர்யாவா, வா, வா!என்ன,யாரைத் தேடறே?'

"ஆனந்தி இல்லையா?"

"இருக்கா. என்னவோ அதிசயம் இன்னிக்கு அவ வீட்டுல தான் இருக்கா.என்ன விஷயம்?"

"மலர்! முன்னே ஒருநாள் நான் உங்கிட்ட சொன்னேன், நினைவிருக்கா? ஆனந்தியைப் பார்த்து பேசணும்னு. அதுக்குத்தான் வந்திருக்கேன்."

"ம்.. தாராளமா பேசு. நல்ல புத்தி சொல்லு."

சூர்யா சென்று ஆனந்தியின் அறைக்கதவைத் தட்டி அனுமதி கேட்டுப் பிறகு அறையினுள் நுழைந்தாள்.

"வாங்கக்கா, உட்காருங்க"

கட்டில் மேல் அமர்ந்தபடி, ஆனந்தி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
சூர்யா ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி ஆனந்தியைக் கவனித்தாள்.மெல்லிய சரிகை இழையோடிய காஞ்சி காட்டன் புடவை, மிதமான ஒப்பனை என்று எந்த நேரமும் பெண்பார்க்கும் வைபவத்திற்குத தயாராக ஆனந்தி அலங்காரம் செய்திருந்தாள்.

"என்ன அதிசயமா புடைவை கட்டியிருக்கேன்னு மலர் கேட்கலையா ஆனந்தி?"

"கேட்டா.ஒரு தோழி வர்றதாச் சொன்னேன். ஆமாம், நீங்க அக்கா கிட்டே பேசறேன்னு சொன்னீங்க, இன்னும் பேசலையா?"

"நான் எதுவும் சொல்லலை. நீ ஏதாவது சொன்னியா?"

"நீங்க வீட்டுல பேசறேன்னு சொன்னதால, நான் வாயே திறக்கலை. இப்ப அவங்க திடீர்னு வந்து நின்னா, வீட்டுல என்ன சொல்லுவாங்களோ,பயமா இருக்குக்கா."

"மலருக்கு காதல்லே நம்பிக்கேயே இல்லை. உங்க அப்பா, அம்மா, மலர் கிட்ட இப்ப உன் காதலைச் சொன்னா, வீணா நீ திட்டுதான் வாங்கணும்.அதைவிட, சரணோட அப்பா, அம்மா வந்து நேரா கல்யாணம் பேசட்டும். அப்ப நைஸா நான் இந்த விஷயத்தைக் சொல்லிடறேன். கல்யாணம் நிச்சயமாயிட்டா, காதல் பெரிய தவறா தெரியாது."

"சரிக்கா, அப்படியே செய்துடுங்க. உங்களைத்தான் நாங்க நம்பியிருக்கோம். எனக்குப் பொண்ணு பிறந்தா, உங்க பேரையே வைக்கிறேன்.நீங்கதான் எப்படியாவது எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும்."

"கல்யாணம் நடத்தி வைக்கிறவரை எல்லாம் சரிதான் ஆனந்தி! ஆனா குழந்தைக்குப் பேர் வைக்கிறேன்னு சொன்னே பாரு, அதுமட்டும் வேண்டாம்,அப்புறம் கோபம் வரும்போதெல்லாம் என் பெயரை வைச்சு திட்டித் தீர்த்திடுவீங்க."

ஆனந்தியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஆமாம் ஆனந்தி! கேட்கவே மறந்திட்டேன்.நேத்து சரவணன் போன் பண்ணினானா? எத்தனை மணிக்கு வர்றதாச் சொன்னான்?"

"நேத்து போன் வரலைக்கா. ஆனா இன்னிக்கு நிச்சயம் வருவார்."

"நான்பாட்டுக்கு கல்யாணம் பேச வரச் சொல்லிட்டேன். சரவணன் குணம் எப்படி,அவங்க குடும்ப விவரம், அவங்க வீட்டு அட்ரஸ், மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் உனக்குத் தெரியுமா ஆனந்தி?"

"அக்கா, சரண் குணத்தைப் பத்தி கவலையே வேண்டாம். அவர் மாதிரி ஒரு நல்லவரைப் பார்க்கவே முடியாது. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் கவர்மென்ட் வேலையில இருக்காங்க. ஒரு தம்பி படிக்கிறான். அவங்க வீடு அரும்பாக்கத்துல இருக்கு, சரியா அட்ரஸ் தெரியாது."

"ரெண்டு மாசமா காதலிக்கிறீங்க, வீட்டு அட்ரஸ் வாங்கக் கூடத் தோணலியா ஆனந்தி?"

"இல்லைக்கா. தினம் காலேஜ்லதான் பார்த்துக்கறோம். அதான்..." ஆனந்தி இழுத்தாள்.

"சரி, சரி, விடு. அதான் நேர்ல வரப் போறாங்களே, நானே கேட்டுக்கறேன். ரொம்பநேரம் உன்கூடவே நான் பேசிட்டிருந்தா, மலருக்குச் சந்தேகம் வரும்.வா, டி.வி பார்க்கப் போகலாம்."

இருவரும் வந்து ஹாலில் மலருடன் அமர்ந்து கொண்டார்கள். ஆனந்தியும் அன்று வீட்டில் இருந்தது மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மூவரும் சேர்ந்து அரட்டை, பகல் உணவு, விளையாட்டு என்று பொழுது போக்கினார்கள்.
மாலை மணி ஐந்தைத் தொட்டது. மலர் ஏதோ வேலையாக கடைக்குப் போனாள்.

"என்ன ஆனந்தி! இனிமே அவங்க வருவாங்கன்னு நான் நினைக்கலை. ஆனாலும் சரண் இப்படிச் செய்யக் கூடாது."

"ஒருவேளை அவங்க வீட்டுல சம்மதிக்கலையோ என்னவோ?"

"சரி, அதையாவது போன் செய்து சொல்லலாமே, உன் நம்பர் தெரியுமில்லையா?"

இதே கேள்விக்குண்டான பதிலைத்தான் ஆனந்தியும் தேடிக்கொண்டிருந்தாள். இப்போது சூர்யா அதே கேள்வியைக் கேட்கவும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் ஆனந்தி தவித்தாள்.

"உங்களுக்குள்ளே தவறா எதுவும் நடக்கலையே ஆனந்தி?"

ஆனந்தி பதறினாள். "ஐயோ! என்னக்கா இப்படியெல்லாம் கேட்கறீங்க?"

"நல்லவேளையா எதுவும் நடக்கலை. அப்படி ஒருக்கால் ஏதாவது ஆகி, பிறகு சரண் உன்னைக் கைவிட்டுட்டா என்ன செய்வே ஆனந்தி?"

ஆனந்தியால் பதில் சொல்ல முடியவில்லை.

"சரண் நம்பர் உங்கிட்ட இருக்கில்ல? நீயாவது போன் செய்து கேளு."

"செய்யாம இருப்பேனாக்கா? ரொம்ப நேரமா cell switched off அப்படின்னு ஒரே மெசேஜ் தான் வருது, செல்லை ஆஃப் பண்ணி வைச்சிருக்கான் போல "

"சரி விடு, நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு யாருக்கெல்லாம் தெரியும்?"

"நாங்க எப்பவும் காலேஜ்க்கு வெளியிலேதான் மீட் பண்ணுவோம். என் கிளாஸ்லே லேசா இப்பதான் சந்தேகம் வந்திருக்கு. மத்தபடி பீச்,பார்க்,ஹோட்டல்னு வெளியிலே போயிடுவோம். எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க?"

"உங்க காதலுக்கு சாட்சி என்னன்னு யாராவது, ஒருவேளை சரணே நாளைக்கு கேட்டுட்டா, உன்பக்கம் யாரவது இருக்காங்களான்னு பார்த்தேன்.ம்ஹூம், ஒருத்தர் கூட இல்லை. பீச் மணலையும், ஹோட்டல் டேபிளையும் தவிர வேறு யாராவது இருக்காங்களான்னு நீயே யோசிச்சுப் பாரு,
ஆனந்தி!"

ஆனந்தி யோசிக்கத் தொடங்கினாள்.

"நாளைக்கு நானும் உங்கூட வந்து சரணோட விளக்கத்தைக் கேட்கணும். இங்கே உங்க பஸ் ஸ்டாண்டுலே வெயிட் பண்ணு, ஆனந்தி! நாளைக்கு நானும் உன்கூட வர்றேன்."

அதற்குள் மலர் வந்துவிட, சூர்யா இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினாள்.

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 7

இரவு மணி பதினொன்று.

கடிகாரம் பதினோரு முறை மணியடித்து ஓய்ந்தது. ஆனந்தி விடிவிளக்கு வெளிச்சத்தில் ஊசலாடும் பெண்டுலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் மனமும் காதல், நியாயம் என்ற இரு உணர்வுகளுக்கிடையே ஆடிக்கொண்டிருந்தது.

முதன்முதலில் சரணைச் சந்தித்ததும், அவர்கள் காதல் வளர்ந்த விதமும் நினைவில் வந்தன.

சரவணின் ஒன்று விட்ட தம்பி, ஆனந்தியின் வகுப்பில் படிப்பவன். அவனைப் பார்த்துப் பேச அடிக்கடி சரண் ஆனந்தியின் வகுப்புக்கு வருவான்.
எல்லாரிடமும் கலகலப்பாகப் பேசும் ஆனந்தி கூடிய சீக்கிரம் சரணுடன் அமர்ந்து அரட்டை அடிக்கும் அளவுக்குப் பழகி விட்டாள். அதைத் தொடர்ந்து
அவனுடைய நண்பர்கள், ஆனந்தி, அவள் தோழிகள், சரண் என்று எல்லாருமாக ஹோட்டல், சினிமா, பிக்னிக் என்று வெளியே செல்லத்
தொடங்கினார்கள். நண்பர்கள் கூட்டத்தை படிப்படியாக விலக்கி இறுதியில் சரண்- ஆனந்தி மட்டும் தனியாகச் செல்லும்படி அவர்கள் நட்பு ஒரு
கட்டத்தில் காதலாக மாறிவிட்டது.

"நிச்சயம் இது தெய்வீகக் காதல் தான்" என்றுதான் ஆனந்தி எண்ணியிருந்தாள். ஆனால், இன்று சூர்யா கேட்டுவிட்டுப் போன கேள்விகளை ஆனந்தியால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
"உங்கள் காதலை நிரூபிக்கும் சாட்சி யார்?" என்று கேட்டு அவை ஆனந்தியைச் சுற்றிச் சுற்றி வந்தன.

ஆனந்தி யோசித்துப் பார்த்தாள். கல்லூரியைப் பொறுத்தரை அவர்கள் எல்லாரையும் போல் நண்பர்கள்தான். வெளியிடத்தில் அவர்களை ஒன்றாகப்
பார்த்த ஒரே சாட்சி, சூர்யா மட்டுமே.

சரவணன் 'ஐ லவ் யூ' என்று ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தான்; அவளோ அதே அட்டையில் 'ஐ டூ லவ் யூ' என்று கையெழுத்திட்டு சரணிடமே
திருப்பிக் கொடுத்து விட்டாள்.

ஒருக்கால் சரண் அவளைக் காதலிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டால், அதை மறுத்து ஆதாரம் காட்ட ஆனந்தியிடம் எதுவுமே இல்லை
என்று ஒருபக்கம் மனது நியாயம் கூறியது.

"சேச்சே! சரண் அப்படிச் சொல்லக்கூடியவர் அல்ல. அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். நாளைக் கல்லூரியில் பார்த்ததும் 'ஐ'ம் ஸாரி ஆனந்தி!
நேற்று என்னால் வரமுடியலை. ப்ளீஸ்,மன்னிச்சுடு" என்று கெஞ்சப் போகிறார். இன்று வராவிட்டால் என்ன? உடம்பு சரியில்லாமல் போயிருக்கலாம். ஊருக்கு எங்கேயாவது அவசர வேலையாக போயிருக்கலாம்; நான் இரண்டு நாளாக கல்லூரிக்குப் போகவில்லை. அதனால் எனக்கு அவர் நிலைமை தெரியவில்லை." என்று காதலில் விழுந்துவிட்ட மறுபக்க மனது சமாதானம் சொன்னது.

ஆனந்தி சரணை கடைசியாக சூர்யா வந்த அன்று ஹோட்டலில் பார்த்ததுதான். எப்படியும் ஞாயிறன்று சரண் வருவான்; திருமணம் நிச்சயமாகி விடும். திங்களன்று திடீர் அறிவிப்பாக கல்லூரியில் கல்யாணச் செய்தியைச் சொல்லும் 'த்ரில்'லை இழக்க விரும்பாமல் இரண்டு நாள்களாக லீவு எடுத்து வீட்டிலேயே இருந்துவிட்டாள்.

நியாயம் மூளைக்குப் புரிந்தாலும் மனது காதலையே ஆதரிக்க, சரண் மீது முழு நம்பிக்கையோடு தூங்கத் தொடங்கினாள்.

மறுநாள் சொன்னபடியே ஆனந்தி பேருந்து நிலையத்தில் காத்திருக்க, சூர்யா குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டாள். இருவரும் கல்லூரிக்குச்
செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.

ஆனந்தி உற்சாகமாகவே இருந்தாள். 'ஏதோ பெரிதாக நேற்று சரணை சூர்யாக்கா சந்தேகப்பட்டு விட்டாரே! இன்று நேரடியாகவே பார்த்துப்
பேசிக்கொள்ளட்டும். அப்போதுதான் என் சரண் மீது நம்பிக்கை வரும்' என்பது அவள் எண்ணமாக இருந்தது.

சூர்யா நினைவோ வேறுவிதமாக இருந்தது. சரணை முதலில் பார்த்தபோதே அவன் திருமணம் செய்துகொள்ளும் ரகமில்லை என்று ஊகித்து
விட்டாள். அவள் உள்ளுணர்வு அப்படி தீர்மானமாகக் கூறியது. அந்த தைரியத்தில்தான் ஞாயிற்றுக்கிழமை பெண்கேட்க வரும்படி அன்று
சரணிடம் கூறினாள்.

நேற்று சரண் வராமல் இருந்தது சூர்யாவின் சந்தேகத்தை உறுதியாக்கி விட்டது. தான் ஏமாறப்போவது தெரியாமல், மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு
உடன்வரும் ஆனந்தியை நினைத்தால்தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதிலும், இந்தப் பாடம் ஆனந்திக்கு ரொம்பவே அவசியம் என்பது நினைவுக்கு வந்ததும், தன் வருத்தம் கொஞ்சம்
குறைந்ததுபோல சூர்யா உணர்ந்தாள். கூடவே 'காதல் தோல்வி' என்று ஆனந்தி மனம் உடைந்து போகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும்
எழுந்தது.

ஆனந்தியின் கல்லூரி வாசலில் பேருந்து நிற்க, இருவரும் இறங்கினார்கள்.
வழக்கம்போல சரணும் அவன் நண்பர் பட்டாளமும் இன்னும் பல மாணவர்களும் கல்லூரியின் சுற்றுச்சுவரிலேயே அமர்ந்திருந்தனர். ஆனந்தி அவர்கள் இருந்த இடத்தை அடைந்ததும், 'ஹாய்' என்றாள். சரண் சூர்யாவைப் பார்த்து திடுக்கிட, மற்ற அனைவரும் பதிலுக்கு 'ஹாய் ஆனந்தி' என்று
கோரஸாக குரல் கொடுத்தனர்.

"ஹாய் சரவணன்! இப்படி வர்றீங்களா? உங்க கிட்டேகொஞ்சம் பேசணும்"

சூர்யா அழைக்க சரண் எழுந்து வந்தான்.

மூவரும் கல்லூரிக்குள் நுழைந்து ஒரு மரத்தின் அடியில் நின்று பேசத் தொடங்கினர்.

ஆனந்திதான் முதலில் ஆவலுடன் கேட்டாள்:

"நல்லவேளை சரண்! உங்களுக்கு நேத்து உடம்பு சரியில்லையோன்னு கவலைப்பட்டேன்; இப்ப உங்களைப் பார்த்ததும்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. ஆமாம், நேத்து ஏன் வரலை?"

சற்றே கவலை தோய்ந்த குரலில், ஆனந்தி மேலும் தொடர்ந்தாள்.

"உங்க வீட்டுல .. நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கலையா, சரண்?"

சூர்யா இடையில் குறுக்கிட்டாள்.

"உங்க வீட்டுல சம்மதிக்கலைன்னாலும் பரவாயில்லை, சரண்! ஆனந்தி வீட்டுல முழு ஆதரவு உண்டு. எப்ப கல்யாணத்தை வைச்சுக்கலாம்?"

"ஸாரி மேடம்! இந்தக் கல்யாணம் நடக்காது. ஏன்னா...எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை."

ஆனந்தி அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் திகைத்து நின்றாள். சூர்யாவைப் பொறுத்தவரை, இது அவள் எதிர்பார்த்ததுதான், எனவே மேலும்
தொடர்ந்தாள்.

"அப்ப சரவணன்! நீங்களும் ஆனந்தியும் பழகினதெல்லாம்?"

"அதெல்லாம் வெறும் நட்பு மேடம். இந்த வயசுல கேர்ள் ஃப்ரெண்ட் இல்லாட்டாதான் அதிசயம். அதுக்காக கல்யாணம் செய்துக்க முடியுமா? நோ
சான்ஸ்!!"

"சரண்! நீங்களும் நானும் காதலிச்சது?" ஆனந்தி இன்னமும் சரண் சொன்னதை நம்ப முடியாதவளாய்க் கேட்டாள்.

"ஆனந்தி! அதெல்லாம் காதலாகாது. எல்லார் கூடவும் நீ சகஜமாப் பழகினே, கலகலப்பாப் பேசினே. எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. உன்னைக்
கவரணும்கிறதுக்காக காதல்ங்கிற வார்த்தையை பயன்படுத்திக்கிட்டேன். தட்ஸ் ஆல்."

"அப்ப நம்ம கல்யாணம் சரண்?"

"திரும்பத் திரும்ப அதையே கேட்காதே ஆனந்தி! அப்படியே நான் கல்யாணம் பண்றதா இருந்தாலும், 50 பவுன்,100 பவுன்னு கொட்டிக் கொடுக்க
எங்க ஜாதியிலேயே எவ்வளவோ பேர் காத்துக்கிட்டிருக்காங்க தெரியுமா? உனக்கு இஷ்டமிருந்தா நம்ம நட்பு எப்பவும் போல தொடரலாம்; இல்லைன்னா, இன்னையோட விட்டுடலாம். முடிவு உன்னோடதுதான். பை ஆனந்தி, பை மேடம்!"

சரவணன் முடித்துவிட்டுப் போய்விட்டான்.

காதல்தோல்வி, ஏமாற்றப்பட்ட அவமானம், சரவணனுடைய உண்மை சுபாவம் ஏற்படுத்திய அதிர்ச்சி - அனைத்தும் சேர்ந்து தாக்கியதில் நிலை
குலைந்து போய், கண்ணீர் வழிய நின்றிருந்த ஆனந்தியை சூர்யா மெல்ல ஆறுதலாய் அணைததபடி வீட்டுக்குச் செல்லப் புறப்பட்டாள்.

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 8

சூர்யாவின் வீடு.

ஆனந்தி அழுது அழுது களைத்துப் போயிருந்தாள். சூர்யா கல்லூரியில் இருந்து ஆனந்தியை தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள். 'சரி, கொஞ்சம் அழுது ஓயட்டும்' என்று தனியறையில் விட்டுச்சென்றாள். முகம் வீங்கி, கண்கள் சிவந்து, கன்னங்களில் கண்ணீர்க்கறை படிந்து சிதைந்த
ஓவியமாய்த் தெரிந்த ஆனந்தியைப் பார்த்து சூர்யா திடுக்கிட்டாள். அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

"எதுக்கு ஆனந்தி இப்படி அழறே?"

சூர்யா கேட்டதும் மீண்டும் ஆனந்தியின் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆனந்தி அழுகையின் நடுவில் விம்மிக்கொண்டே, "நான் அவனை...அவனை
எவ்வளவு நேசிச்சேன் தெரியுமாக்கா? இப்படி என்னை ஏமாத்திட்டானே! என்னால தாங்க முடியலை" என்றாள்.

"இப்படி ஓர் அயோக்கியனை எப்படி காதலிச்சோம்னு நீ வருத்தப்படறதில நியாயம் இருக்கு ஆனந்தி! நல்ல வேளையா, தவறா எதுவும் நடக்கறதுக்கு
முன்னால அவனைப் பத்தின உண்மை தெரிஞ்சுதேன்னு சந்தோஷப்படறதுல புத்திசாலித்தனம் இருக்கு. நாம வந்து மூணு மணி நேரமாகுது.
இவ்வுளவு நேரமா, ஓர் அயோக்கியனுக்காக, காதலைப் பத்தின புனிதத்தை உணராத ஒருத்தனுக்காக உன்னோட அழுகையை வீணடிச்சிருக்கியே,
உனக்கே வெட்கமாயில்லையா, ஆனந்தி?"

ஆனந்தி விசும்பலை உடனே நிறுத்தினாள். ஆதரவுக்குத் தோளிருந்தால் அழுகை பொங்கிவரும்; அதிர்ச்சி வைத்தியமே உடனடி மருந்து என்று
புரிந்து வைத்திருந்த சூர்யா அப்படி ஒரு கேள்வி கேட்டாள்.

இரண்டு நிமிடங்கள் மௌனத்தில் கரைய, "அக்கா! நீங்க சொன்னதுதான் சரி. அவனுக்காக நான் எதுக்கு வீணா அழணும்? இனிமே அவன்
முகத்தில்கூட விழிக்க மாட்டேன்" என்று உறுதியான குரலில் ஆனந்தி சொன்னதும் சூர்யாவுக்கு நிம்மதியானது.

"ஆனந்தி! நான் ஒரு விஷயம் சொல்லணும். நிதானமாக் கேட்கறியா?"

"நீங்கதான் என்னைக் காப்பாத்தி இருக்கீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன் அக்கா!"

"நடந்ததுக்கெல்லாம் சரண் மட்டுமே பொறுப்பு இல்லை. உனக்கும் அதிலே பங்கிருக்கு ஆனந்தி!"

"அக்கா!"

ஆனந்தி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

"ஆண் - பெண் நட்புங்கிறது ஓர் எல்லைக்குட்பட்டு இருக்கணும். அப்பதான் அங்கே நட்போட கண்ணியம் காப்பாற்றப்படும். நீ அந்த எல்லையைத்
தாண்டிப் போயிட்டே. அதனாலதான் சரவணன் மனசில சலனம் வந்திருக்கு. நீ உன்னுடைய தகுதியா நினைச்ச அந்த நல்ல பழக்கம், கொஞ்சம்
ஏமாந்திருந்தா உன் வாழ்வையே இழக்க வைச்சிருக்கும். என்ன, நான் சொல்றது சரிதானே?"

ஆனந்தி குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தாள்.

"தவறு உன்பேர்ல மட்டுமில்லை ஆனந்தி! நிறையப் பெண்கள் இப்படித்தான் நினைக்கிறாங்க; பெண்கள் சுதந்திரம்னா அரைகுறையா டிரெஸ்
பண்றது, ஆண்களோட பழகறது, ஹோட்டல், டிஸ்கோன்னு சுத்தறது - இப்படித்தான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் சுதந்திரத்தோட
சேர்த்து பெண்மையையும் இழிவுபடுத்தறதுதானே தவிர, சாதனை இல்லை.
"எந்த ஒரு மனிதனாலே தன்னைத்தான் கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறதோ, அவன் தான் சுதந்திரம் அடைந்தவன்" அப்படின்னு காந்தியடிகள்
சொன்னார். சுதந்திரத்தாலே கட்டுப்பாடும், ஒழுக்கமும், நேர்மையும் வளரணும். அழகு, இளமை, பருவம் - இதெல்லாம் அவசியம் தான்; அதுவும் இந்த வயசில அப்படித்தான் தோணும். ஆனா பெண்மைங்கிறது இவை மட்டுமே இல்லை; அறிவு, கருணை, இரக்கம், உதவி மனப்பான்மை - இப்படி இன்னும் பெரிய விஷயங்கள் எல்லாம் கூட பெண்மைக்கு அடையாளம் தரும். தலையிலேர்ந்து கால்வரை போர்த்திக்கிட்டு, வாழ்க்கை முழுக்க சேவை செய்து, இறந்த பிறகும் கோடிக்கணக்கான நெஞ்சங்களில் அழியாமல் வாழ்ந்துக்கிட்டிருக்காங்களே அன்னை தெரெஸா, அவங்களை விட அழகான
மனசு எந்த மிஸ் யுனிவர்ஸ்க்கோ,மிஸ் வோர்ல்டுக்கோ இருக்கும்ணு நீ நம்பறியா?"

ஆனந்திக்குப் பளீரென மின்னலடித்தது போல இருந்தது.

"ஒரு நிமிஷம் இரு, ஆனந்தி! இதோ வர்றேன்" என்று எழுந்து சென்ற சூர்யா, வரும்போது ஒரு புத்தகத்துடன் வந்தாள்.

"ஆனந்தி! உன்னைப் போல இளைய தலைமுறையைச் சேர்ந்தவங்க முக்கால்வாசி நேரம் டி.வி பார்க்கறீங்க; எந்த நேரம் போட்டாலும், யாராவது ரெண்டு பேர் காதலிச்சிட்டே இருக்காங்க. அதனால காதலைத் தாண்டி உங்க சிந்தனைகள் போகிறதேயில்லை. இந்த புத்தகத்தைப் படி. "

ஆனந்தி பிரித்துப் பார்த்தாள். முதல் பக்கத்தில்,
"கருணை நிறைந்த கண்களே அழகான கண்கள்; உதவி செய்யும் நெஞ்சமே அழகான நெஞ்சம்" என்று எழுதப்பட்டிருந்தது.

"அறிவுத்தெளிவு, தைரியம், சமுதாயத்திற்காக தியாகம் செய்யத் தயங்காத மனசு, விடாமுயற்சியோட போராடும் குணம் - இதெல்லாம் நிறைஞ்ச
பெண்கள் உருவாகிறதுதான் உண்மையான பெண்கள் சுதந்திரமா இருக்க முடியும். இதைப் படிச்சா உனக்கே புரியும்னு நம்பறேன். நேரமாயிடுச்சு,
வா, சாப்பிடலாம்."

உணவு முடிந்ததும் ஆனந்தி விடைபெற்றாள்.

"அக்கா! நடந்தது எதுவும் மலர் அக்காவுக்குத் தெரிய வேண்டாம்; பாவம், மனசு வருத்தப்படுவாங்க. அக்காவுக்கு என்மேலே இருந்த நம்பிக்கையும்
போயிடும். ப்ளீஸ், அக்கா கிட்டே சொல்லாதீங்க" என்று கேட்க சூர்யா தலையைத்தாள்.

ஆனந்தி கிளம்பிய பிறகு, சூர்யா மலருக்கு போன் செய்தாள். மலரிடம் நடந்தவற்றை விவரமாகக் கூறி, கூடவே மலருக்குத் தெரிய வேண்டாம்
என்ற ஆனந்தியின் வேண்டுகோளையும் கூறினாள்.

"இவ்வுளவு விஷயம் நடந்திருக்கா சூர்யா? நீ அன்னிக்கு ரொம்ப நேரம் பேசும் போதே எனக்கு லேசா சந்தேகம்தான்"

"எல்லாம் நல்லபடி முடிஞ்சாச்சு. ஆனா நீ எதுவுமே தெரியாத மாதிரி காட்டிக்கணும் மலர்! எதுக்கு உங்கிட்டே எல்லாம் சொன்னேன்னா, ஆனந்தி
மனசு மாறின மாதிரிதான் தெரிஞ்சுது. இருந்தாலும் இரண்டு மூணு நாள் அவளைக் கண்காணிக்கிறது அவசியம்னு நான் நினைக்கிறேன். என்ன
புரியுதா மலர்?"

"ம்ம்.. புரியுது, மீண்டும் அவ பழசை நினைச்சு மனசு உடையாம இருக்கணும். நான் அவளை கவனமாப் பார்த்துக்கறேன். ரொம்ப நன்றி சூர்யா!"

"என்ன மலர், நமக்குள்ளே எதுக்கு இந்த சம்பிரதாயமெல்லாம்?"

"சரி, உன்னோட விஷயம் எந்த நிலையிலே இருக்கு?"

"நானே உன் கிட்டே சொல்லணும்னு இருந்தேன். அடுத்த ஞாயிறு நாம அரவிந்தன் வீட்டுக்குக் போகப்போறோம். என்ன ரெடியா?"

"தாராளமா. அவர் எப்படின்னு நான் பார்த்துச் சொல்லவேண்டாமா? கண்டிப்பா போய்ப் பார்க்கலாம், பை"

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 9

அரவிந்தன் மிக உற்சாகமாக இருந்தான்.

முன் தினம் சூர்யா அவன் அலுவலகத்திற்கு போன் செய்து, "நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாமா? என் தோழி மலர்னு சொன்னேனே, அவ உங்களை சந்திக்க விரும்பறா" என்று அனுமதி கேட்க, மகிழ்ச்சியோடு வரும்படி கூறினான்.

அன்று ஞாயிறு என்றாலும் காலை சீக்கிரமே எழுந்து அறையை ஒழுங்குபடுத்தினான். வரவேற்பறையை நீண்ட நாள்களுக்குப் பின் ஒட்டடை அடித்து சுத்தம் செய்தான்; சிதறிக் கிடந்த நாளிதழ்களை அழகாக அடுக்கி வைத்தான். சூர்யாவுக்குக் கொடுப்பதற்காக இனிப்பு, கார வகைகளை வாங்கி வைத்தான்.

சொன்னபடி சூர்யாவும், மலரும் மாலை நான்கு மணிக்கு வந்தனர். அறிமுகம் முடிந்தபின் அரவிந்தன் மலரிடம் அவள் படிப்பு, குடும்பம் பற்றி
பேசினான். இடையில் மலர்,

"சூர்யா உங்ககிட்டே சாயந்தரம் வரேன்னு சொல்லிட்டா; ஆனா நான் காலையிலேயே வந்து ஒரு சர்ப்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பிளான்
வைச்சிருந்தேன்."

"ஐயையோ! நல்ல வேளை!! நான் தப்பினேன்; காலையிலே வந்திருந்தா, இந்த வீடே வேற மாதிரி இருந்திருக்கும்." என்று அரவிந்தன் சிரித்தான்.

மலர் உடனே, " பார்த்தியா சூர்யா! நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோம், சே!" என்றவள், அரவிந்தனிடம், "உங்க வீட்டுக்கு வர்றதா இருந்த
பிளானை மாத்தி சூர்யா அவ ஆபிஸ்ல கூட வேலை செய்றவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா" என்றாள்.

"அதுதான், நான் அன்னிக்கு உங்ககிட்டே சொன்னேனே, ப்ரியா அவங்க வீட்டுக்குப் போயிருந்தோம்."

"ஆங், இப்ப ஞாபகம் வருது" என்று அரவிந்தன் சொல்ல, மலர் குறுக்கிட்டாள்.

"சூர்யா, அவங்க பேரு சாந்தின்னு அவங்க பொண்ணு சொன்னா; நீ என்ன ப்ரியான்னு சொல்றே?"

"மலர்! அவங்க முழுப்பேர் சாந்திப்ரியா. எங்க ஆபிஸ்ல ஏற்கனவே ரெண்டு சாந்தி இருக்காங்க. அதனால இவங்களை ப்ரியான்னுதான் சொல்றோம்."

மலர் அரவிந்தனிடம், "அவங்க பொண்ணு என்ன ஸ்மார்ட் தெரியுமா? ஆனா பாவம் அது வயசுக்கு மீறிக் கஷ்டப்பட வேண்டியிருக்கு பாருங்க"

"என்ன விஷயம் சூர்யா? புரியற மாதிரிதான் சொல்லேன்"

"அவங்க எப்பவுமே ரிசர்வ்டு டைப். அன்னிக்கு மயக்கம் போட்டு விழுந்த பிறகு ரொம்ப கவலையா தெரியத் தொடங்கினாங்க. நான் ஆபிஸ்லே வைச்சு
அவங்களைக் கேட்டுப் பார்த்தேன். சொல்ல மறுத்துட்டாங்க; எனக்கு மனசு கேட்கலை; அதான் இன்னிக்கு மலரைக் கூட்டிட்டு நேரா அவங்க
வீட்டுக்கு போயிட்டேன்."

********************

"சூர்யா! எனக்கு முன்ன, பின்ன தெரியாத ஒருத்தர் வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்கே, வந்தோமா, பார்த்தோமா, பேசினோமானு
கிளம்பணும்" என்ற மலருக்குத் தலையசைத்த சூர்யா, ப்ரியா வீட்டுக் கதவைத் தட்டினாள்.

கதவைத் திறந்த ப்ரியாவின் மகள் சூர்யாவை அடையாளம் தெரிந்துகொண்டாள்.

"சூர்யா ஆன்ட்டி தானே! அன்னிக்கு அம்மா கூட வீட்டுக்கு வந்தீங்களே!" என்றபடி, இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.

மலரை அறிமுகம் செய்ய அவளுக்கு வணக்கம் சொல்லிக் கைகுவித்தாள்.

"அம்மா இருக்காங்களா?" என்று சூர்யா கேட்டதுமே அந்தப் பிஞ்சு முகம் வாடியது.

"ம்ம்..உள்ளே ரூம்லே அழுதுகிட்டிருக்காங்க" என்று மெதுவாகக் கூறினாள்.

"என்ன அழறாங்களா?" சூர்யா அதிர்ச்சியாய்க் கேட்க, "ஆமாம் ஆன்ட்டி! முன்னெல்லாம் நான் "அப்பா வேணும்" அப்படின்னு கேட்டு அடம்பிடிச்சா,
அம்மாவும் அழுவாங்க. ஆனா, இப்பல்லாம் நான் நல்லபெண் ஆயிட்டேன் ஆன்ட்டி! அப்பா வேணும்னு அழுகிறதேயில்லை. இப்ப அம்மா ரொம்ப 'பேட்' ஆயிட்டாங்க, அடிக்கடி உட்கார்ந்து அழுதுகிட்டே இருக்காங்க, நான் சொன்னாலும் கேட்கவே மாட்டறாங்க, ப்ளீஸ் ஆன்ட்டி, நீங்களாவது
அம்மா கிட்டே சொல்லுங்க"

"அப்பா எங்கேம்மா போயிட்டார்?'

விவரம் அறியாத மலர் கேட்க, பிறருடைய பாவத்துக்காக சிலுவை சுமந்த இயேசுபிரான் போல் பெற்றோர் தவற்றால் வாடிக்கொண்டிருக்கும் அந்தக்
குழந்தை தலை குனிந்து சோகமான குரலில்,"ம்..டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. எங்கப்பா எங்களை விட்டுட்டு தனியா போயிட்டாரு" என்றாள்.

"மலர், நீ குழந்தை கூட பேசிக்கிட்டிரு, நான் போய் ப்ரியாவைப் பார்த்துட்டு வரேன்" என்று சூர்யா சென்றாள்.

அழுது கொண்டிருந்த ப்ரியா, தன்னை யாரோ தீண்டியது உணர்ந்து நிமிர, சூர்யா தெரிந்தாள்.

"நீங்க ...எங்கே....இங்கே ..என் வீட்டிலே..?" ப்ரியா திணறினாள்.

"ப்ளீஸ் ப்ரியா! என்ன கஷ்டம்னாலும் மனசுல போட்டு அடக்கி வைக்காதீங்க. உங்களுக்கு உதவி செய்ய நாங்க எல்லாரும் இருக்கோம். சொல்லுங்க,
உங்களுக்கு என்ன பிரச்னை? நீங்க இப்படி அழுதுகிட்டே இருக்கீங்கன்னு உங்க பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா"

"அவளோட எதிர்காலத்தை நினைச்சுத்தான் நான் தினம் தினம் அழுதுகிட்டிருக்கேன், சூர்யா" என்ற ப்ரியா, மேலும் அழத் தொடங்கினாள்.

"ப்ளீஸ்...அழாதீங்க, என்ன விஷயம்னு சொல்லுங்க"

"அன்னிக்கு டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னார், இல்லியா? அதன்படி எல்லா ரிப்போர்ட்டும் எடுத்துக்கிட்டு மறுபடி போனப்போ,
அவர் என்ன சொன்னார் தெரியுமா, சூர்யா? என் இதயம் ரொம்ப பலவீனமா இருக்காம்; அதிகபட்சம் ஒரு வருஷம்தான்; அதுக்குமேல நான்
உயிரோட இருக்கமாட்டேன்னு சொல்லிட்டார்."

சூர்யா திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

"நான் சாகப்போறதைப் பத்திக்கூட எனக்குக் கவலையில்லை, சூர்யா! ஆனா என் பெண்ணோட எதிர்காலம்? அவ நிலைமை என்னவாகும்? அதை
நினைச்சுத்தான் அழறேன்."

"அதுக்குள்ளே நீங்க மனசைத் தளர விடாதீங்க, ப்ரியா. எவ்வளவோ நல்ல ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க; அவங்க கிட்டே காட்டினா, உங்களுக்கு
குணமாயிடும்."

"எனக்கு அதெல்லாம் அவசியமில்லை சூர்யா! அம்மாவும் இல்லாம என் பொண்ணு அனாதை ஆயிடுவாளோன்னு பயமா இருக்கு."

"சேச்சே! வீணா பயப்படாதீங்க ப்ரியா! அவங்க அப்பாவை வரச் சொல்லலாமே? உங்களுக்கும் துணையாயிருக்கும்"

"இல்லை சூர்யா! நாங்க டைவர்ஸ் வாங்கின ஒரு வாரத்துல அவர் ஆபிஸில் லீவு எடுத்துக்கிட்டு வடக்கே எங்கேயோ போயிட்டார். நானும் அப்போ
இருந்த கோபத்திலும், வெறுப்பிலும் அதுக்குப் பிறகு அவரைப் பார்க்க முயற்சி செய்யலை. இப்போ என் நிலைமை தெரிஞ்சா வருவார், என் மேல
பரிதாபத்தினால வருவார்; என் மேல கோபம் இருந்தாலும் நான் சாகப்போறேன்னு தெரிஞ்சா அவரும் வேதனைப்படுவார்; என்மேலே கோபிச்சுக்கிட்டு எங்கேயோ சந்தோஷமா இருக்கிறவரை எதுக்காகத் தேடிக் கூட்டிட்டு வந்து வேதனைப்படுத்தணும்? நீங்களே சொல்லுங்க"

சூர்யாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"அப்ப அவருக்கு இதைப்பற்றிச் சொல்ல வேண்டாங்கறீங்களா?"

"நான் போனபிறகு ரஞ்சனி அவர்கிட்ட தான் வளரணும். அவருக்கு ரஞ்சனின்னா உயிர். அவளை நல்லா வளர்ப்பார். நான் இறந்த பிறகு நீங்கதான் அவரைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்டே அவளை ஒப்படைக்கணும். தயவுசெய்து, எனக்காக இந்த உதவியைச் செய்யறீங்களா, சூர்யா?"

"கண்டிப்பா செய்யறேன். நீங்களும் உங்க உடம்பை கவனமா பார்த்துக்கணும். மருந்துகளை தவறாம சாப்பிடணும், அடிக்கடி அழக்கூடாது."

"சரி, சூர்யா, இன்னோர் விஷயம், ரஞ்சனி ஏற்கனவே அவ அப்பா கூட இல்லையேங்கற ஏக்கத்துல இருக்கா. அவகிட்ட இதையும் சொல்லி,
கஷ்டப்படுத்த வேணாம், குழந்தை கிட்டே சொல்லிடாதீங்க."

******************
கேட்டுக்கொண்டே இருந்த அரவிந்தன் சட்டென திடுக்கிட்டவனாய், "அந்தக் குழந்தை பேர் என்ன சொன்னீங்க?" என்று கேட்க, சூர்யா 'ரஞ்சனி'
என்றாள்.

(உறவுகள் தொடரும்......)
 
அத்தியாயம் - 10

அரவிந்தன் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

மனத்தில் நிம்மதி இருந்தால், தரையில் படுத்தாலும் தூக்கம்வரும்; மனம் குழம்பித் தவித்துக்கொண்டிருக்கும்போது, மெத்தை இருந்தும், கட்டில்
இருந்தும் தூக்கம் மட்டும் வராது. இப்போது அரவிந்தனும் அந்த நிலையில்தான் இருக்கிறான்.

சூர்யாவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காலையில் உற்சாகமாய்க் கண்விழித்தான். இப்போதோ கண்மூடி உறங்க இயலாமல்,"ஏன்தான்
இன்று சூர்யா வர நேர்ந்ததோ?" என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

சூர்யா ப்ரியாவைப் பற்றிச் சொல்லத் தொடங்கியபோது "யாரைப் பற்றியோ சொல்லப் போகிறாள்" என்றுதான் கேட்கத் தொடங்கினான் அரவிந்தன்.
ஆனால் அவள் மகளின் பெயர் ரஞ்சனி என்றதும் ஒரு நொடி திடுக்கிட்டுப் போனான். நெஞ்சுக்குள் அவன் மகளின் நினைவலை ஓடியது.

இருந்தபோதிலும் அந்தக் குழந்தையின் வயதைக் கேட்டான். சூர்யா,"ரஞ்சனி ஜவஹர் வித்யாலயாவில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்" என்று
சொன்ன பிறகு, அரவிந்தனின் மனம் இருண்டது. அதன் பிறகு சூர்யா, மலர் பேசிய விவரம் ஏதும் உணர்வுக்கு எட்டவில்லை. சிறிது நேரத்துக்குள்
அவர்கள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

ஒருவேளை, சூர்யா சொன்ன ப்ரியா - அந்த சாந்திப்ரியா அவன் மனைவி சாந்தியாக இருந்தால்? அரவிந்தனின் மனம் அலை பாய்ந்தது.

சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது. சாந்தி நெல்லையை விட்டுக் கிளம்ப மறுத்ததில்தானே விவாகரத்து எண்ணமே வளர்ந்தது? அப்படியிருக்க,
அவள் எப்படி சென்னையில் இருக்கப் போகிறாள்?

வேறு ஏதோ சாந்திப்ரியா, அதேபோல் அவள் மகளுடைய பெயரும் ரஞ்சனி. ஒவ்வொரு காலகட்டத்தில் சில பெயர்களே பெரிதும் வைக்கப்படும்.
சுஷ்மிதா உலக அழகியான பிறகு எத்தனையோ பேர் தங்கள் குழந்தைகளுக்கு சுஷ்மிதா என்று பெயர் வைத்தார்கள். அதுபோலவே அந்த ரஞ்சனியும்
இருக்கலாமே!

எத்தனையோ சமாதானங்கள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், மனத்துக்கு அமைதி கிடைக்கவில்லை. "ஆனால்" என்கிற ஒரு வார்த்தை
அவனை விடாமல் குடைந்து கொண்டிருந்தது.

ஆனால், ஒருவேளை, அது அவன் மனைவி சாந்திப்ரியாவாகவே இருந்தால்? மகள் ரஞ்சனியாகவே இருந்துவிட்டால்?

அரவிந்தன் - சாந்திக்கிடையே கருத்து வேறுபாடுகள் மிக அதிகம். அதனால் இருவரும் சேர்ந்து வாழ இயலாமல் விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்து பெற்றுவிட்ட காரணத்தால் மட்டுமே சாந்தியை விரோதியாக எண்ண அரவிந்தனின் மனம் இடம் தரவில்லை. 'தன்னுடைய
வாழ்க்கை இப்படியாகி விட்டதே' என்ற சுய இரக்கமும், 'என் மகளை என்னிடமிருந்து பிரித்து விட்டாளே' என்ற கோபமும்தான் அதிகமாக இருந்தது.

சாந்தி ஒரு வருடத்துக்குமேல் உயிரோடு இருக்கப்போவதில்லை என்று சூர்யா சொன்னதை நினைத்தபோது இதயம் கனத்துப்போனது. வேண்டாம்!
இது அவனுடைய சாந்தியாக இருக்கவேண்டாம்! அவள் வேறு எங்காவது அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கட்டும் என்று விரும்பினான்.

ஆனால், சாந்தி அவன் மனைவியாக இருக்கும் பட்சத்தில், அவன் மகள் ரஞ்சனியின் நிலை? 'அப்பாவான நான் உயிருடன் இருந்தும் என் மகள்
யாருமற்ற அநாதையாக அலைய வேண்டுமா?'

அரவிந்தனுக்குள் இருந்த ரஞ்சனியின் தந்தை கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

குளத்தில் கல்லெறிந்ததைப் போன்று, சாந்தியின் நினைவு அவன் மனத்தில் அவர்கள் பழைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை மீண்டும் மேலே கொண்டு
வந்தது.

அரவிந்தனுக்கு முதலில் சாந்தியை பெண்பார்க்கச் சென்றது நினைவில் வந்தது. இருவர் குடும்பத்துக்கும் அப்போதே பிடித்துப்போய் விட்டது.
ஒப்புத்தாம்பூலம் மாற்றிக்கொண்டு, நேரடியாகத் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டனர்.

பெண்பார்க்கச் செல்லும் முன்பே, சாந்தி வீட்டிலிருந்து "திருமணத்திற்குப் பிறகும் பெண் வேலைக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும்" என்று
தகவல் வந்துவிட்டது. அப்போது அரவிந்தனுடைய வேலையிலும் பெரிய வருவாய் ஏதும் இருக்கவில்லை. அதனால் ஒரு குடும்பம் என்றான பிறகு,
அதன் செலவுகளுக்கு ஈடு செய்ய இன்னொரு வருவாய் மிக அத்தியாவசியம் என்பதால் அரவிந்தன் மகிழ்ச்சியுடன் அதற்குச் சம்மதித்தான்.
அவர்கள் இல்லற வாழ்க்கையும் இன்பமாகவே நடந்தது. ரஞ்சனி பிறந்த பிறகு, அரவிந்தனுக்கு யோககாலம் தொடங்கியது. அவன் அடுத்த கட்ட
பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெற்றான். எல்லாம் ரஞ்சனியின் ராசி என்று குழந்தையைக் கொண்டாடினான்.

ஒவ்வொரு கட்டமாக அரவிந்தன் பணி உயர உயர, அவனுடைய சம்பளமும் கூடத் தொடங்கியது. ரஞ்சனிக்கு மூன்று வயதானபோது, தன்
குடும்பம் வசதியான வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் அரவிந்தனுக்கு வரத்தொடங்கியது.

அந்தச் சமயத்தில்தான், ஒருநாள் பேச்சுவாக்கில் சாந்தியிடம் சொன்னான்:
"இப்பல்லாம் நானே கைநிறையச் சம்பாதிக்கிறேனே சாந்தி! இனிமேலும் எதுக்கு நீ வேலைக்குப் போய் கஷ்டப்படணும்? பேசாம வேலையை
விட்டுட்டு வீட்டோட இரேன்!"

அரவிந்தனைப் பொறுத்தவரையில், உதவி தேவைப்படும்போது மட்டும் பெண்கள் வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணம் உடையவன். இத்தனை
காலம் சாந்தியின் சம்பளம் தேவையாக இருந்தது. இனி அந்த நிலை இல்லையே என்று கருதியே அப்படிச் சொன்னான். அப்படிச் சொன்னதில்
எந்தத் தவறும் இருப்பதாக அவனுக்குப் படவில்லை; ஆனால் சாந்திக்குப் பட்டது.

"வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்க என்னால முடியாது. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதைப் பேசி முடிச்சாச்சு. நான் வேலைக்குப்
போக நீங்க சம்மதிச்சதால தான், நான் நம்ம கல்யாணத்துக்கே சம்மதிச்சேன், தெரியுமா?"

சாந்தி கோபத்தில் படபடக்க, அரவிந்தனுக்கும் கோபம் தொற்றியது.

"முட்டாள்தனமா பேசறே, சாந்தி! நம்ம கல்யாணத்தின்போது என் சம்பளம் என்ன, இப்ப நான் வாங்கற சம்பளம் என்னன்னு உனக்கே தெரியும்.
அப்ப உன் சம்பளம் நமக்குத் தேவையா இருந்தது. அதனால சம்மதிச்சேன். இப்பதான் அது தேவையில்லையே, இன்னும் எதுக்கு நீ வேலைக்குப்
போகணும்?"

"வேலைக்குப் போறது சம்பளத்துக்காக மட்டும்னு நான் நினைக்கலை. வேலைக்குப் போகிறதால 'நம்ம படிப்பு பயன்படுதே'ன்னு சந்தோஷமா இருக்கு; நம்மாலும் சம்பாதிக்க முடியும்னு தன்னம்பிக்கை இருக்கு; அதுக்கும்மேல ஒரு திருப்தி இருக்கு. சம்பளத்துக்காகவே வேலைக்குப் போகணும்னு நினைக்கிறவங்களுக்கு இதெல்லாம் புரியுமான்னு எனக்குச் சந்தேகமும் இருக்கு."

"வேலைக்குப் போகிற பெண்களுக்கு தன்னம்பிக்கை இருக்கோ இல்லையோ, எக்கச்சக்கமா திமிர் இருக்கு. அதுக்கு இந்த வீட்டிலேயே சாட்சியும் இருக்கு."

அரவிந்தன் கோபத்தோடு வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, விருட்டென்று வெளியே புறப்பட்டான்.

(உறவுகள் தொடரும்......)
 
அத்தியாயம் - 11

கணவன், மனைவிக்குள் ஏதாவதொரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்
யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்து சமரசம் செய்ய வேண்டும்.
அதைச் செய்யத் தவறிவிட்டாலோ, அதுவே நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டேயிருக்கும். சில சின்ன பிரச்னைகளையும்
பெரியதாக்கிக் காட்டும்; பல புதிய பிரச்னைகளையும் உருவாக்கும்.

அரவிந்தன் - சாந்தி நிலையும் அப்படித்தான் ஆனது. தான் சொன்னதை அவள் கேட்கவில்லையே என்று அரவிந்தனுக்குக் கோபம். அவள் வேலைக்குப் போவது கூட அவனுக்கு இப்போது இரண்டாம் பட்சம்; தான் சொன்னதை மதிக்காமல் தன் சொல்லை அலட்சியப்படுத்தி எதிர்க்கிறாள் என்பதே மனத்தில் பதிந்திருந்தது.

சாந்திக்கோ அரவிந்தனின் போக்கு புதிராக இருந்தது. தன் முடிவை அவள் மீது திணிக்க முயன்றது அரவிந்தன் மீது எரிச்சலைக் கிளப்பியது.

"இவர்கள் வேலைக்குப் போ என்றால் போகவேண்டும்; வேண்டாம் என்றால் வீட்டில் இருக்கவேண்டும். எனக்கு எந்த உரிமையும் கிடையாதா? வேலைக்குச் செல்பவள் நான்; எனக்கே எந்தக் கஷ்டமும் இல்லை; இவருக்கு என்ன கஷ்டம் இருக்கிறது?" என்ற ரீதியில் சாந்தியின் சிந்தனை இருந்தது.

அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகள் எழுந்தன. சாந்தி வீட்டை ஒழுங்காகக் கவனிப்பதில்லை என்று அரவிந்தன் குறை சொல்லத்
தொடங்கினான். ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அரவிந்தன் மீண்டும் நேரடியாகப் பேச்சைத் தொடங்கினான்.

"சாந்தி! உன்னை மாதிரி பெண்கள் அவசியமே இல்லாமல் வேலைக்குப் போறதாலதான், வேலை அவசியம் கிடைக்க வேண்டிய ஆம்பளைகளுக்குக்
கிடைக்கிறதில்லை. இது எப்பதான் உங்களுக்குப் புரியப்போகுதோ?"

"இதுல எதுக்காக ஆண், பெண்ணுன்னு நீங்க வித்தியாசம் பார்க்கறீங்கன்னுதான் எனக்குப் புரியமாட்டேங்குது. எந்த வேலையா இருந்தாலும், அந்த வேலைக்கேற்ற தகுதியும், அதை ஒழுங்காச் செய்யற திறமையும் யாருக்கு இருக்கோ, அவங்களுக்குத்தான் வேலை கிடைக்கும்."

"அப்ப ஆம்பளைங்க தகுதி இல்லாதவங்க; திறமை குறைஞ்சவங்கன்னு சொல்றியா?"

"நான் அப்படிச் சொல்லவே இல்லை; நீங்களே அப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டா, அதுல எனக்கு ஆட்சேபணையும் இல்லை."

அரவிந்தனுக்கு கோபத்தால் முகம் சிவந்துவிட்டது.

"சரி, என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசறதுன்னு நீ தீர்மானம் பண்ணிட்டே! உன்கிட்டே யார் என்ன பேச முடியும்?"

"நீங்க என்ன சொல்லி நான் கேட்கலை? சும்மா இஷ்டத்துக்கு சொல்லாதீங்க"

"சரி, இப்ப சொல்றேன், கேளு! வேலையை விட்டுட்டு வீட்டுல இருந்து ரஞ்சனியைக் கவனிச்சுக்க!"

"ரஞ்சனியை பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்! அவளைக் கவனிக்க எனக்கு யாரும் சொல்லித் தரவேண்டிய அவசியமில்லை."

"நானும் யாரோ இல்லை; அவளோட அப்பா! அந்த அக்கறையிலதான் சொல்றேன். உனக்கு வேலைக்குப் போய் வரவே நேரம் பத்தலை. நீ எங்க
ரஞ்சனியைக் கவனிக்கிறே?"

"நாள் முழுதும் வீட்டுல இருந்து குழந்தையைக் கவனிச்சாதான் என் பாசத்தை நீங்க ஒத்துக்குவீங்கன்னா, நான் பாசம் இல்லாதவளாகவே இருந்துட்டுப் போறேன். வேணும்னா நீங்க வீட்டுல இருந்து நாள் முழுதும் ரஞ்சனியைப் பார்த்துக்குங்க. நம்ம குடும்பத்தை என் சம்பளத்துலேயே
நடத்த என்னால முடியும்."

"பேசறது நீ இல்லை சாந்தி! மாசா மாசம் சம்பளம் வாங்கறியே, அந்தப் பணம் கொடுத்த திமிர்! இனிமே உன்னோட பணம் ஒரு பைசா கூட எனக்கும் என் பொண்ணுக்கும் வேண்டாம். அதை நீயே என்ன வேணுமோ செய்துக்க. நான் எந்தக் கேள்வியும் கேட்கமாட்டேன்."

அரவிந்தன் தீர்மானமாய்ச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சாந்தி இப்படிக் கடுமையாய் பேசக்கூடியவள் என்று அரவிந்தன் எதிர்பார்க்கவில்லை. அவன் மனத்தில் சாந்தியின் நிலை கொஞ்சம் கீழே
இறங்கிவிட்டது.

மாதாமாதம் அலமாரியில் சாந்தியின் சம்பளம் கவருடன் இருக்கும். அரவிந்தன் சொன்ன வாக்கைக் காப்பாற்றினான். ஒருமுறை சாந்தி ஏதோ
'இன்கிரிமென்ட்' வந்திருப்பதாக அவனிடம் சொன்னாள். அப்போதும்கூட அரவிந்தன் கவரைப் பிரித்துப் பார்க்கக்கூட இல்லை.

அந்தச் சம்பவத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. ரஞ்சனிதான் இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தாள்.

ரஞ்சனி பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். அம்மாவைவிட அப்பாதான் அவளுக்குப் பிடிக்கும். இரண்டு வருடங்கள் ஓடின. இதற்கு நடுவில் இரண்டு முறை அரவிந்தனுக்கு வேறு ஊர்களுக்கு மாற்றல் வந்தது.

"சாந்தியின் அலுவலகம் வேறெங்கும் கிளைகள் இல்லாதது. தான் மாற்றல் வாங்கினால், சாந்தி வேலையை விட்டுவிட நேரும்; வீணாகப் பிரச்னைகள்
உருவாகும்" என்று அரவிந்தன் மாற்றலை மறுத்துவிட்டான்.

அதன்பிறகு மூன்றாவது முறையாக, பதவி உயர்வோடு கூடிய மாற்றல் வந்தது. பதவி உயர்வு கொடுத்து அவன் அலுவலகத்தின் சென்னைக்
கிளைக்கு அவனை மானேஜராக மாற்றம் செய்திருந்தார்கள்.

அரவிந்தனுக்கு அந்த நாள் இன்னும் நினைவிருக்கிறது. எத்தனையோ வருடங்களின் கனவு நினைவான நாள் அது!

அலுவலகத்தில் புகழ்மாலை, பாராட்டு மழை!

"உன் வயசுல யாரும் இதுவரை மானேஜர் போஸ்ட்டுக்கு வந்ததில்லை; நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி!"

"எங்களுக்கு எல்லாம் பெரி..ய ட்ரீட் கொடுக்கணும், அரவிந்தா....என்ன?

"உங்க கடுமையான உழைப்புக்குக் கிடைச்ச சரியான பரிசு சார், இது!"

விதவிதமான மனிதர்கள்,விதவிதமான விமரிசனங்கள்!

ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு, இனிப்புக் கடைக்குச் சென்றான். நான்கைந்து வகைகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

ரஞ்சனி அப்போதுதான் பள்ளி முடிந்து வந்திருந்தாள். அரவிந்தனைப் பார்த்ததும் "அப்பா!" என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டாள். இருவரும்
கிளம்பி ஓட்டலுக்குச் சென்றனர். ரஞ்சனிக்கு ஐஸ்கிரீம், பொம்மை, புது டிரஸ் என்று மகளைத் திக்குமுக்காடச் செய்தான் அரவிந்தன்.

மாலையில் வீடு திரும்பியபோது சாந்தி வந்திருந்தாள்.

ரஞ்சனி நேராக சாந்தியிடம் ஓடி, "அம்மா! நாமெல்லாம் சென்னை போகப்போறோம் தெரியுமா?" என்று உற்சாகமாய்க் கத்தினாள்.

சாந்தி மௌனமாக இருக்க, அரவிந்தன் "எனக்கு டிரான்ஸ்ஃபர் வந்திருக்கு, சாந்தி" என்றான்.

"அப்படியா சரி! நீங்க சென்னை போய்க்குங்க. என்னால வேலையை விடமுடியாது" என்றாள் சாந்தி.

அரவிந்தன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

(உறவுகள் தொடரும்......)
 
அத்தியாயம் - 12

"நான் உங்க கூட சென்னைக்கு வரலை" என்று சாந்தி சொன்னதைக் கேட்டு அரவிந்தன் அதிர்ச்சி அடைந்தான்.

ஒரு சண்டை வரப்போகும் சூழ்நிலையை உணர்நித ரஞ்சனி, பயந்துபோய் மெதுவாக அடுத்த அறைக்குச் சென்றாள். தனக்குள் எழுந்த கோபத்தை
மிகவும் சிரமப்பட்டு அரவிந்தன் அடக்கிக்கொண்டான். பொறுமையாக சாந்தியிடம் பேசத்தொடங்கினான்.

"சாந்தி! நீ நிஜமாத்தான் சொல்றியா? நீ எங்க கூட வரப்போறதில்லையா?"

"சும்மா ஒரு தமாஷ் செய்தேன்" என்று சொல்லி, கலகலவென சிரிப்பாள் என்று அரவிந்தன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மாறாத முகபாவத்தோடு,
முன்பைவிட தீர்மானமாக சாந்தி அதையே மறுபடியும் சொன்னாள்.

"இல்லை, நான் உங்களோடு வர்றதாயில்லை"

"என்ன காரணம் சாந்தி?"

"என்னை எப்படியாவது வேலைக்குப் போகவிடாம செய்யணும்னுதான் நீங்க இந்த மாற்றல் வாங்கி இருக்கீங்க"

"சாந்தி! நீ வேலைக்குப் போக்வேண்டாம்னு இப்ப நான் சொன்னேனா?"

"நீங்க சொன்னால்தானா? சென்னையில் எங்க ஆபீசுக்கு கிளை இல்லையே?"

"அதுக்கு நான் என்ன சாந்தி செய்ய முடியும்? நாம அங்க போனபிறகு நீ வேறே வேலை தேடிக்கலாமே"

"இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல எனக்கு ஒரு பிரமோஷன் வரக்கூடிய வாய்ப்பிருக்கு. இந்த நேரத்துல இருக்கிற வேலையை நான் எதுக்காக
விடணும்?நீங்க வேணும்னா இந்த மாற்றல் வேண்டாம்னு எழுதிக் கொடுத்துடுங்க."

"அது முடியாது, சாந்தி. ஏன்னா..." என்று தொடங்கிய அரவிந்தன் சட்டென நிறுத்தினான்.

இப்படிச் சந்தேகப்படும் இவளிடம் நான் எதற்காக நிரூபிக்க வேண்டும்?

"எப்ப உனக்கு என்மேலே இவ்வுளவு சந்தேகம் வந்தாச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் உன்னால நம்ப முடியாது. அப்படி உன்னை
நம்ப வைக்கணும்கிற அவசியமும் எனக்கில்லை. ஒரு வாரம் உனக்கு டைம் தர்றேன்; பொறுமையா யோசிச்சுப்பார். உனக்கு என்மேலே நம்பிக்கை
வந்தா, நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு நினைச்சா, எனக்குச் சாதகமான பதிலைச் சொல்லு. அப்புறம் உன் இஷ்டம்!" சொல்லி முடித்துவிட்டு அரவிந்தன் உள்ளே சென்றான்.

கட்டிலின் ஒரு மூலையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த ரஞ்சனி, மெல்ல வந்து அரவிந்தனைக் கட்டிக்கொண்டாள். வெளியே
போய்விட்டு வந்த சந்தோஷம் ஊசி குத்திய பலூனைப் போல வடிந்து போயிருந்தது.

"ஏம்ப்பா அம்மா உன்கூட எப்பவும் சண்டை போடறாங்க?" என்று கவலையுடன் ரஞ்சனி கேட்ட கேள்வி இப்போது கூட அரவிந்தன் முன்னால்
இருப்பது போன்ற பிரமை.

அரவிந்தன் தலையை உலுக்கியபடி பழைய நினைவுகளில் இருந்து மீள முயன்றான்; ஆனால் முடியவில்லை.

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாந்தி பிடிவாதமாக வர மறுத்தது மனத்திரையில் காட்சியாக விரிந்தது.

"சாந்தி! நாளைக்குச் சென்னை போக டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போறேன்.உன்னோட முடிவென்ன?"

"என் முடிவில எந்த மாற்றமும் இல்லை"

"எப்ப என்மேலே இருந்த நம்பிக்கை போயிடுச்சோ, இனிமே நாம சேர்ந்து வாழறதிலே அர்த்தமே இல்லை"

அப்போதும் சாந்தி மௌனமாகவே இருந்தாள்.

"நாம டைவர்ஸ் பண்ணிடலாம்னு தோணுது."

அப்போதும் மௌனம். அதற்குமேல் அவள் மௌனத்தைத் தாங்க முடியாமல் அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் அரவிந்தன் சென்னைக்குக்
கிளம்பிவிட்டான். ரஞ்சனி, "என்னை விட்டுட்டுப் போறீங்களா அப்பா?" என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

ஒரு மாதம் கழித்து விடுமுறையில் மீண்டும் அரவிந்தன் வீட்டுக்குத் திரும்பியபோது, அவனுக்காக விவாகரத்து பத்திரம் காத்திருந்தது. ரஞ்சனி
தன்னோடு இருக்கவேண்டும் என்பதில் அவன் முயற்சி தோற்றுப்போனது.

***************************
முதல்வேலையாக நாளை சென்று ரஞ்சனியைப் பார்க்கவேண்டும்; அப்போது மனம் நிம்மதி அடையும் என்று தீர்மானித்த பிறகே அரவிந்தனால்
தூங்க முடிந்தது.

மலர் ஏற்கனவே ரஞ்சனி படிக்கும் பள்ளியைப் பற்றிச் சொல்லியிருந்ததால், அரவிந்தனுக்கு அதைக் கண்டுபிடிக்க எந்த சிரமமும் இருக்கவில்லை.
பள்ளி முதல்வரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ரஞ்சனியைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னான்.

"எந்த வகுப்பு மாணவி ஸார்?"

"மூன்றாம் வகுப்பு மேடம்!"

"எந்த செக்ஷன்?"

அரவிந்தனிடம் பதில் இல்லை.

"ஸாரி, மேடம், செக்ஷன் தெரியலை. சரியா ஞாபகமில்லை" சமாளிக்க முயன்றான்

"பரவாயில்லை. இனிஷியல் சொல்லுங்க; கண்டுபிடிச்சுடலாம்"

"இனிஷியல் ஏ! ஏ.ரஞ்சனி"

ரஞ்சனி படிக்கும் வகுப்பைக் கண்டுபிடித்து அவளை அழைத்துவர ஆசிரியை பியூனை அனுப்பினார். அரவிந்தன் வெளியே வந்து நாற்காலியில்
அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினான்.

அதோ...! அதோ வருபவள் அவன் மகள் ரஞ்சனியேதான்! இரண்டு வருட இடைவெளியில் கொஞ்சம் உயர்ந்து, மெலிந்து, வாடிய முகத்தோடு வந்த
ரஞ்சனி, அரவிந்தனைப் பார்த்து ஒரு நொடி நம்ப முடியாமல் வியப்பில் திகைத்து நின்றாள். மறுநொடி "அப்பா..!" என்று கூவியபடி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.

அரவிந்தன் மகளை வாரியணைத்தான்.

"ஏம்ப்பா எங்களை விட்டுட்டுப் போனீங்க? நீங்க இல்லாம எனக்கு எவ்வுளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?"

படபடவெனப் பேசிக்கொண்டே போன ரஞ்சனி, சட்டென்று அழத்தொடங்கினாள்.

"இனிமே நீங்க என்னை விட்டுட்டுப் போனா...நான் அப்புறம் .அப்புறம்....உங்ககூட பேசவே மாட்டேன்."

ரஞ்சனி தேம்பிக்கொண்டே சொல்ல, அரவிந்தன் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

"இல்லைம்மா..இனிமே உன்னை விட்டு எங்கேயும் போகவேமாட்டேன்."

"காட் பிராமிஸ்?"

ரஞ்சனி தன் கையை நீட்ட, 'காட் பிராமிஸ்' என்று அரவிந்தன் சத்தியம் செய்ததும்தான் அவள் முகத்தில் சிரிப்பு வந்தது. அப்போது மணியடித்தது.

ரஞ்சனி உடனே "அப்பா! இப்ப இன்டர்வெல் டைம். எங்க கிளாஸ் ரூம் போகலாம், வாங்க" என்று அரவிந்தனின் கையைப் பற்றி இழுத்தாள்.

"எதுக்கும்மா? அங்கே வந்து நான் என்ன செய்யப்போறேன்? நாம இங்கேயே பேசலாமே!"

"உங்களுக்குத் தெரியாதுப்பா, என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் என்ன கேட்டாங்க, தெரியுமா? ஏன் ஸ்கூல் ப்ரொகிராம் எதுக்கும் உங்கப்பா வரலையே, அவருக்கு உன்னைப் பிடிக்காதான்னு கேட்கறாங்க. விக்கின்னு ஒரு பையன்...அவனும், அவன் மம்மியும் கூட தனியா இருக்காங்களாம்...அவன் சொன்னான், நீங்க இனிமே என்னைப் பார்க்க வரவே மாட்டீங்கன்னு. நீங்க வாங்கப்பா...எனக்கு அப்பா இருக்கார்னு என் கிளாஸ்ல எல்லாரும் பார்க்கணும், வாங்கப்பா...!"

எங்கள் பிரிவு இந்தக் குழந்தை மனத்தில் எவ்வுளவு பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது?

வருத்தமும் வேதனையும் பொங்க அரவிந்தன் ரஞ்சனியுடன் நடந்தான்.

"அப்பா! இவன் சுரேஷ், ஹேய் அபர்ணா! அவந்திகா! ராகுல், ப்ரேம்....எல்லாரும் வாங்க! எங்க அப்பா வந்தாச்சு!"

குழந்தைகள் அவனைச் சூழ்ந்து கொள்ள, ரஞ்சனி டக்கென்று விலகி ஓடினாள். வரும்போது ஒரு சிறுவனை அழைத்து வந்தாள்.

"விக்கி! எங்கப்பா வந்தாச்சு, பார்த்தியா? உங்கப்பாவும் சீக்கிரம் வந்துடுவார், கவலைப்படாதே!"

வாடியிருந்த அவன் முகத்தைப் பார்த்து ஆறுதல் சொன்னாள்.

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 13

இடைவேளைக்கான நேரம் முடிந்து மணி ஒலித்தது. அரவிந்தனைச் சூழ்ந்திருந்த குழந்தைகள் பட்டாளம் அவரவர் இடம் தேடி நகரத் தொடங்க, அதற்குள் அவர்கள் வகுப்பாசிரியை வந்துவிட்டார்.

"என்ன கும்பல் இங்கே?"

"எங்கப்பா வந்திருக்கார் மிஸ்!" ரஞ்சனி சொல்ல, அரவிந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பதில் வணக்கம் சொன்ன ஆசிரியை, ரஞ்சனியையும் வகுப்புக்குப் போகச் சொல்லிவிட்டு, அரவிந்தனிடம், "உங்க கிட்டே ஒரு நிமிஷம் தனியாப்
பேசணும்" என்றார்.

இருவரும் வெளியே வந்தனர்.

"ரஞ்சனி புத்திசாலிப் பொண்ணு; வெரி ஸ்மார்ட்! ஆனா, வகுப்புல அப்பான்னு ஏதாவது பாடத்துல வந்துட்டா, உங்களை நினைச்சு ரொம்ப அப்ஸெட் ஆயிடுவா. இரண்டு வருஷமா நான்தான் அவளுக்கு வகுப்பு மிஸ். அடிக்கடி என்கிட்டே வந்து 'எங்கப்பா வந்துடுவார்தானே மிஸ்'னு கேட்பா. மத்த
பசங்க எல்லாம் 'அவங்கப்பா வாங்கிட்டு வந்தது'னு ஏதாவது எடுத்துட்டு வந்தா, ரஞ்சனியும் விக்கியும் ரொம்ப டிப்ரெஸ் ஆயிடுவாங்க. ரஞ்சனி
உங்க கிட்டே எவ்வுளவு பாசமா இருக்கான்னு நீங்க புரிஞ்சுக்கிட்டா நல்லது."

அரவிந்தன் இடையில் குறுக்கிட்டான்.

"ஆனா, மேடம்! நானும் என் மனைவியும் பிரிஞ்சு வாழறோம்."

"தெரியும் சார், சாந்தி எங்கிட்டே சொல்லி இருக்காங்க. நீங்க மனைவியை மட்டும்தான் சட்டப்படி பிரிஞ்சீங்க. உங்க மகள் ரஞ்சனிங்கிறது
என்னிக்கும் பிரியாத உறவு. குறைஞ்சது மாசத்துக்கு ஒரு முறையாவது நீங்க வந்து ரஞ்சனியை பார்த்துட்டுப் போங்க. ரஞ்சனியோட வெல்விஷர்ங்கிற
முறையில இது என்னுடைய வேண்டுகோள். நான் வரேன்."

ஆசிரியை சென்று ரஞ்சனியை அனுப்பி வைத்தார்.

"என்னப்பா, மிஸ் என்ன சொன்னாங்க?"

சிந்தனையில் மூழ்கிவிட்ட அரவிந்தன் கலைந்து வந்தான்.

"நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னாங்க. சரி, அப்பா கிளம்பட்டுமா?"

"வீட்டுக்குத் தானேப்பா போறீங்க?"

அரவிந்தன் தயங்கினான்.

"இ...இல்லைம்மா.."

"அப்ப திரும்ப இனிமே என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?" ரஞ்சனியில் குரலில் அழுகையின் அடையாளம்.

"அப்படி இல்லை ரஞ்சு! நான் வீட்டுக்கு வரலாமான்னு அம்மா கிட்டே கேளு. அம்மா சரின்னு சொன்னா நாளைக்கு நானும் உன்னோட வீட்டுக்கு
வருவேன், சரியா?"

அரவிந்தன் சமாதானப்படுத்த முயன்றான்.

"நிச்சயமா நாளைக்கு வரணும். சரியா? பை" ரஞ்சனி கையசைத்து வகுப்புக்கு ஓடினாள்.

அரவிந்தனுக்கு சாந்தியின் நினைவும், கூடவே அவளுக்கு ஏற்பட்டுள்ள நோயும் நினைவுக்கு வந்தன. மகளைப் பார்த்த மகிழ்ச்சி அப்படியே
ஆவியாக, மனைவியைப் பார்த்து ஆறுதல் சொல்ல உள்ளம் தவித்தது.

சாந்தி சொன்னதாக சூர்யா கூறியவை அவன் காதில் எதிரொலித்தன.
"இப்ப என் நிலைமை தெரிஞ்சா ஒருவேளை அவர் வருவார்; ஆனா மனசு மாறி வரமாட்டார். என்மேலே பரிதாபப்பட்டு வருவார். நான்
சாகப்போறேன்னு தெரிஞ்சா வேதனைப்படுவார். எதுக்கு அவரை கூட்டிட்டு வந்து வேதனைப்படுத்தணும்?"

நோயால் சாந்தி வேதனைப்படும்போது, உதவ வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. அதன் காரணம், இன்னும் சாந்தி மீது தனக்கு உள்ள
அன்பா, அல்லது சாந்தி இருக்கப்போவது இன்னும் கொஞ்ச காலம்தானே, அதுவரை அவளை சந்தோஷமாக வைத்திருக்கலாமே என்ற பரிதாபத்தில் எழுந்த உணர்ச்சியா என்று அரவிந்தனாலேயே இனம் பிரிக்க முடியவில்லை.
ஆனால் சாந்தியின் நோய் பற்றித் தனக்கு தெரிந்ததாக அரவிந்தன் காட்டினால், நிச்சயம் அவன் பரிதாபப்பட்டே வந்திருக்கிறான் என்று சாந்தி
முடிவு செய்துவிடுவாள். அவன் மனம் மாறி வரவேண்டுமென்ற அவள் ஆசை நிறைவேறாமல் போய்விடும். அரவிந்தனின் மனச்சாட்சி அவனை
எச்சரித்தது.

"நானே மனசு மாறி வந்தது போலத்தான் சாந்தியைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவள் எண்ணம் நிறைவேறும். அவள் சொல்லும் வரை
அவள் வியாதியைப் பற்றித் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. சாந்தியின் உடல்நிலையைத் தெரிந்து கொள்ள நிச்சயம் சூர்யா உதவி செய்வாள்" என்று தீர்மானிக்க, சூர்யா என்ற பெயர் வந்ததும் கொஞ்சம் இடறியது.

'சூர்யாவை இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னாயே? அது என்னவாயிற்று? இப்போது அவள் உன்
மனைவி நலத்துக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயே?'

---அரவிந்தன் மனசுக்குள் போராட்டம் நடக்கத் தொடங்கியது.

"சாந்தியின் நிலை எனக்கு முன்பே தெரிந்திருந்தால், சூர்யாவிடம் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். அது என் தவறா? இல்லை. என்னைவிட,
சூர்யாவுக்கு சாந்தியின்மேல் அதிகமான அன்பும், அக்கறையும் உண்டு. சாந்திக்காகவும், ரஞ்சனிக்காகவும் அவ்வுளவு தூரம் வருத்தப்பட்ட சூர்யா,
இப்போது அவர்கள் வாழ்க்கை சீராகப்போகிறது என்று தெரிந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவாள்."

இன்றைக்கே சூர்யாவிடம் இதுபற்றிப் பேசி அவள் கருத்தை அறிவதென்று அரவிந்தன் தனக்குள் முடிவெடுத்தான். நிச்சயமாய் சூர்யா சாந்திக்கு
எதிராய் இருக்க மாட்டாள் என்று அவன் மனம் சொன்னது. மாலையில் கடற்கரையில் காத்திருப்பதாய், தொலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

*************************
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய சாந்திக்கு அதிசயம் காத்திருந்தது.
எப்போதும் பள்ளிச் சீருடையோடு, ஆயாவோடு சண்டை போட்டு அடம் செய்து கொண்டிருக்கும் ரஞ்சனி அன்று வேறு உடைக்கு மாறியிருந்தாள்.
தலை சீவி, முகம் கழுவி, டிரெஸ் செய்திருந்தாள். அதைவிடப் பேரதிசயம், உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தாள்.

"அடாடா!இன்னிக்கு மழைதான் வரப்போகுது, ரஞ்சு!" என்றபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் சாந்தி.

"ஆமாங்க, அம்மா! பாப்பா இன்னிக்கு ரொம்ப நல்ல புள்ளையா இருக்கு" என்றபடியே ஆயா காபி கொண்டுவந்தாள்.

அதைப் பருகிய சாந்தி உடை மாற்றிக் கொண்டு வந்து ரஞ்சனியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

"என்ன ரஞ்சு! ஏதாவது விஷயம் இருக்கணுமே இன்னிக்கு, என்ன சொல்லு?"

"ஒரு ஸ்பெஷல் நியூஸ் இருக்கும்மா."

"அதானே பார்த்தேன், என்ன சொல்லு?"

"நீங்களே யோசனை பண்ணுங்களேன்"

"ம்....நீ கிளாஸ்லே ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கியிருக்கே, கரெக்டா.?"

"போம்மா....இது ரொம்ப ரொம்ப....ஸ்பெஷல்...."

"எனக்குத் தெரியலை, ம்,,நீயே சொல்லு"

"சொல்லட்டுமா..? இன்னிக்கு அப்பா என்னைப் பார்க்க வந்தார், தெரியுமா?" என்றாள் ரஞ்சனி , உற்சாகமாக.

"ரஞ்சனி! பொய் சொல்லக்கூடாதுன்னு உனக்கு சொல்லியிருக்கேன் இல்லை?"

"பொய்யில்லைம்மா..காட் பிராமிஸா அப்பா இன்னிக்கு ஸ்கூலுக்கு வந்தார்; என்னோட பேசினார்! நான் வீட்டுக்கு வாங்கப்பான்னு கூப்பிட்டேன். அம்மா சரின்னு சொன்னா நாளைக்கு வரேன்னு சொன்னார். அம்மா, அம்மா! நாளைக்கு அப்பாவை இங்கே கூட்டிட்டு வரேன்மா, ப்ளீஸ்மா! சரின்னு சொல்லுங்கம்மா! " என்று ரஞ்சனி கெஞ்சினாள்.

"இன்னமும் எனக்கு நம்பிக்கை வரலே. சரி, அப்படி ஒருவேளை நாளைக்கு அப்பா ஸ்கூலுக்கு வந்தா, நீ அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வா"

"தேங்க்யூம்மா...!"

ரஞ்சனி உற்சாகத்தில் துள்ளினாள்.

(உறவுகள் தொடரும்......)
 
அத்தியாயம் - 14

படுப்பதற்கு முன்பு கூட ரஞ்சனி ஒரு முறை, "அம்மா, நாளைலேர்ந்து அப்பாவும் நம்ம கூட தான் இருப்பார், இல்லையா?" என்று கேட்டுவிட்டுத்
தான் தூங்கினாள்.

சாந்திக்குத்தான் உறக்கம் வரவில்லை. ரஞ்சனி அரவிந்தனைப் பற்றிச் சொல்லியதில் சாந்திக்கு உண்மையில் சந்தோஷமே. இரண்டு வருடங்களாகத்
தொடர்பே இல்லாமல் இருந்தவர், இப்போது குழந்தையைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் மனம் மாறியிருக்கும்.ஆனாலும், தான் எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்ற குற்ற உணர்ச்சி அவளுக்குள் உறுத்தியது.

இத்தனைக்கும் காரணமான கல்பனாவை நினைத்தபோது கோபமும், ஆத்திரமும் வந்தது. கூடவே 'அவள் பேச்சைக் கேட்டு அப்போது அப்படி
நடந்துகொண்டு, இப்போது வருத்தப்படுகிறாயே, முட்டாள்!' என்று மனசாட்சி சமயம் பார்த்து இடித்துரைத்தது.

கல்பனா சாந்தியின் முந்தைய அலுவலகத்தோழி. எப்போதும் பெண்ணுரிமை பேசுபவள். அவளுடைய அக்கா வரதட்சணைக் கொடுமையால்
தற்கொலை செய்து கொண்டதால், கல்பனாவிற்கு 'திருமணம் என்பதே முட்டாள்தனம்; ஆண்களுக்கு பெண்கள் எழுதித் தரும் அடிமை சாசனம்'
என்று மாற்ற முடியாத தீர்மானம் இருந்தது. அவளைப் பொறுத்தவரை ஆண்களை விட அரக்கர்கள் மேம்பட்டவர்கள்; கல்யாணம் பெண்ணுக்குத்
தேவையில்லை' என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருபவள்.

அரவிந்தன் தனக்கு சம்பளம் உயர்ந்ததும், சாந்தியை வேலையை விடச் சொன்னதை பேச்சுவாக்கில் சாந்தி கல்பனாவிடம் சொன்னாள். உண்மையில்
சாந்தியே முதலில் வேலையை விட்டுவிட்டு, நிம்மதியாக வீட்டோடு இருந்து விடலாம் என்றுதான் முடிவு செய்து வைத்திருந்தாள். ஆனால்
கல்பனாவின் பேச்சைக் கேட்டு, அவள் மனம் அடியோடு மாறியது.

"அதெப்படி, சாந்தி, உன் விஷயத்துல அவர் முடிவெடுக்கலாம்? நீ வேலைக்கு வர்றதா, வேணாமான்னு நீதான் தீர்மானிக்கணும். அவரா
'வேலைக்குப் போகாதே; வீட்டுல இரு'ன்னு எப்படி அதிகாரம் செய்யலாம்?"

"இத்தனை நாள் என் சம்பளமும் குடும்பம் நடத்த அவசியமா இருந்தது கல்பனா! இனிமேல் அவர் சம்பளமே போதும். அதனால....."

"அதான் விஷயமா? இவ்வுளவு நாள் உன் பணம் தேவைப்பட்டதால உன் சொல்லுக்கு வீட்டுல மதிப்பு இருந்திருக்கு. இனிமே அது
தேவையில்லை, அதனால உன்னோட மதிப்பும் இறங்கத் தொடங்கிடுச்சு. சாந்தி! நீ வேலைக்கு வந்து போகும் போதே உன் நிலைமை
இப்படியிருக்கே, நீ அவர் கையை எதிர்பார்த்து வீட்டோட இருந்தா, உன் மதிப்பு எப்படி இருக்கும்னு நீயே யோசிச்சுப் பார்!"

கல்பனா சொன்ன கோணத்தில் சாந்தி சிந்திக்கத் தொடங்கினாள். அதுவும் சரியாகவே தோன்றியது. திருமணமான இத்தனை வருடங்களில்
அரவிந்தன் எதற்காகவும் அவளை வற்புறுத்தியதில்லை. இப்போது வேலையை விடும்படி தன் கருத்தை அவள் மீது திணிக்கிறான். அவள்
சம்பாதிக்கும் பணம் குடும்பத்துக்குத் தேவையில்லை என்பதால்தான், அவள் கருத்து அலட்சியப்படுத்தப்படுகிறதா?

சாந்தியின் சிந்தனை பாதை மாறிவிடாமல் கல்பனா அடிக்கடி உபதேசம் செய்தாள்.

"எந்த வீட்டிலாவது மனைவி பெரிய வேலையில் இருக்கான்னு புருஷன் வேலையை விட்டுட்டு பிள்ளைகளை வளர்க்கிறானா? இல்லையே.
ஆனா பொம்பளைங்க மட்டும் அவங்க வேலைக்குப் போன்னா போகணும்; வேலையை விட்டுட்டு வீட்டோட இருன்னா இருக்கணும்.
அவங்களுக்குன்னு சொந்தமா மூளை, சிந்தனை எதுவுமே இருக்கக்கூடாதா, என்ன?"

கல்பனா சொன்னதை சாந்தி சண்டையில் அரவிந்தனிடம் சொல்லப்போக, அதோடு அவர்கள் நடுவில் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.

"வேணும்னா நீங்க வீட்டோடு இருந்து ரஞ்சனியைக் கவனிச்சுக்குங்க. என் சம்பளம் நமக்குப் போதும்" என.....

"பேசறது நீ இல்லை சாந்தி, மாசா மாசம் சம்பளம் வாங்கறியே, அந்தப் பணம் கொடுத்த திமிர்! இனிமேல் உன்னோட பணம் ஒரு பைசா கூட எனக்கும் என் பெண்ணுக்கும் வேண்டாம்" என்று அரவிந்தன் அன்றிலிருந்து அவள் பணத்தை வாங்க மறுத்துவிட்டான்.

மறுநாள் சாந்தி நடந்ததை எல்லாம் கல்பனாவிடம் சொல்லி அழுதாள்.

"இப்படிச் சொல்லுவார்னு நான் நினைக்கவே இல்லை, கல்பனா! இந்த வேலையால தானே எங்களுக்குள்ள இப்படி சண்டை? பேசாம ராஜினாமா
பண்ணிடட்டுமா?"

கல்பனா கண்களில் நீர் வரும்வரை சிரித்தாள்.

"என்ன கல்பனா, நான் அழுதுக்கிட்டிருக்கேன், நீ இப்படிச் சிரிக்கிறே?"

"உன் புருஷன் நேரடியா வேலையை விடுன்னு சொன்னப்ப, நீ முடியாதுன்னுட்டே. ஆனா இப்ப நீயா வேலையை விடட்டுமான்னு கேட்கற
நிலைக்கு அவர் உன்னை கொண்டு வந்துட்டார். இதுதான் ஆண்களோட ராஜதந்திரம். இதைப் புரிஞ்சுக்காம நீ முட்டாள் மாதிரி வந்து அழறே,
உன்னுடைய ஏமாளித்தனத்தைப் பார்த்து நான் சிரிக்காம எப்படி இருக்கறது, சொல்லு?"

சாந்தி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"ஆனாலும் கல்பனா, அவர் இனிமேல் என் பணத்தைத் தொடக்கூட மாட்டேன்னு சொல்லிட்டாரே."

"அதெல்லாம் அந்த நேரத்துல கோபத்துல சொல்றது, சாந்தி! அதுக்கெல்லாம் அர்த்தம் தேடக்கூடாது. இப்ப உன் கணவருக்கே ஏதாவது அவசரமா
பணம் தேவைப்பட்டா இல்ல ஒரு வீடு வாங்கணும்னே வைச்சுக்கோ - உன் பணத்தைக் கேட்காம இருந்துடுவாரா? இதுக்கெல்லாம் பயந்துட்டு நீ
வேலையை விட்டுடாதே! அவ்வுளவுதான் என்னால சொல்ல முடியும். நாம குனியக் குனியத் தான் ஆம்பளைங்க குட்டறாங்க; ஞாபகம்
வைச்சுக்கோ"

கல்பனா சொன்னபடியே நடப்பதென்று சாந்தி தீர்மானித்தாள். தன் சம்பளப் பணத்தை அப்படியே வங்கியில் சேமிக்கத் தொடங்கினாள். தன்
தனிப்பட்ட செலவுகளுக்கு மட்டும் அதிலிருந்து உபயோகித்தாள்.
தான் இவ்வுளவு தூரம் சொல்லியும் சாந்தி கேட்காததில் அரவிந்தனின் மனம் உடைந்து போனது. அதை அவன் நடவடிக்கைகளின் மூலமாக
சாந்தி புரிந்துகொண்டாள். என்றாலும், 'இனிமேல் குனியவே கூடாது' என்று முடிவெடுத்து, தொடர்ந்து வேலைக்குச் சென்றாள்.

கல்பனா சொன்னது போலவே, சாந்தியின் முடிவுக்கு வெற்றி கிடைத்தது. அதற்குப் பிறகு அரவிந்தன் சாந்தியின் வேலை பற்றி ஒரு நாளாவது
வாய் திறந்து பேசியதேயில்லை. கல்பனாவும், சாந்தியும் தாம் உரிமைப் போரில் வென்றதாய் மகிழ்ந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அரவிந்தன் சென்னைக்கு மாற்றல் உத்தரவு வந்திருப்பதாய்ச் சொல்ல, சாந்தியின் மனம் தன்
போக்கிலேயே நினைத்தது.

என்னை வேலையை விடச் செய்வதற்காகத் தானே நீங்கள் மாற்றல் வாங்கியிருக்கிறீர்கள் என்று அரவிந்தனைக் குற்றம் சாட்ட, அவன் மறுத்தான்.

"அப்படியென்றால் மாற்றல் வேண்டாம் என்று மறுத்து விடுங்கள்" என்று சாந்தி வற்புறுத்த, என்னவோ காரணம் சொல்ல வந்த அரவிந்தன்,
சட்டென நிறுத்திக் கொண்டான்.

ஒரு வாரம் கெடு கொடுத்து முடிவைச் சொல் என்று கூறிப் போய்விட்டான்.
சாந்தி குழப்பம் அடைந்தாள். அவளுக்கு வர வேண்டிய பிரமோஷன் இரண்டு, மூணு மாதத்தில் வரும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது போய்
வேலையை விடுவதா?

கல்பனாவிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்தாள்.

(உறவுகள் தொடரும்......)
 
அத்தியாயம் - 15

மறுநாள் அலுவலகத்தில் சாந்தி கல்பனாவிடம் விஷயத்தைக் கூறினாள்.

"இப்பப் போய் வேலையை விடப்போறியா சாந்தி? பிரமோஷன் வரப் போற நேரத்துல யாராவது வேலையை விடறேன்னு சொல்லுவாங்களா? டிரான்ஸ்ஃபர் வேண்டான்னு அவரைச் சொல்லச் சொல்லிடேன்."

"சொல்லிப் பார்த்தேன், கல்பனா! முடியாதுன்னு ஏதோ காரணம் சொல்ல வந்திட்டு, சொல்லாமலேயே நிறுத்திட்டார். எனக்கு ஒரு வாரம் 'டைம்'
கொடுத்திருக்கார்."

"உன் கிட்ட கூட சொல்ல முடியாதபடி அப்படி என்ன காரணம் இருக்க முடியும் சாந்தி?"

"அதான் எனக்கும் புரியலை கல்பனா"

"எனக்கென்னவோ அவர் மறுபடி உன்னை எப்படியும் வேலையை விட வைக்கிற முயற்சியில இறங்கியிருக்காரோன்னு தோணுது"

"எனக்கும் அதுதான் சந்தேகமாயிருக்கு"

"நம்ம சமுதாய அமைப்பே முட்டாள்தனமா இருக்கு சாந்தி! வேலை, கேரியர்னாலே அது ஆணுக்கு மட்டும்தான் இருக்கணும்னு முடிவு
செய்துடறாங்க. அவங்களோட பதவி உயர்வு, அவங்களுக்கு வர்ற இடமாற்றல் மட்டும்தான் பெரிசு. மனைவி ஏதோ நானும் வேலைக்குப்
போனேன்னு போயிட்டு வரணும். மனைவிக்குப் பதவி உயர்வு வந்தா கணவனுக்கு பிளட்பிரஷர் ஏறுது. அவளுக்கு இடமாற்றம் வந்தா, குடும்பம்,
புருஷன், குழந்தை எல்லாரையும் விட்டுட்டு எங்கேயும் போகமுடியாதுன்னு எழுதிக் கொடுத்துடுன்னு சுலபமா சொல்லிடுவாங்க. பதவி உயர்வு
வந்தாக் கூட அதுக்குக் காரணமா இருந்த அவளுடைய உழைப்பும், நேர்மையும் யார் கண்ணுக்கும் தெரியறதில்லை. அவளோட புடைவை மட்டும்தான் தெரியுது. மோசமான ஆளுங்க!"

கல்பனா பொரிந்துகொண்டே போனாள்.

"என்ன கல்பனா, நான் என்னோட பிரச்னைக்குத் தீர்வு கேட்டேன். நீ என்னடான்னா உன் பாட்டுக்கு எல்லாரையும் திட்டிக்கிட்டிருக்கே?"

"ஆமா சாந்தி! நீ மட்டும் விதிவிலக்காகவா இருக்கப்போறே? இவ்வுளவு வருஷமா நீ உழைச்சதுக்கு அங்கீகாரமா, ஒரு கௌரவமா உனக்குப்
பதவி உயர்வு வரப்போகுது. ஆனா நீயும் மத்தவங்களை மாதிரி "வேலையை விடக் குடும்பம்தான் முக்கியம்" அப்படின்னு டயலாக் பேசிட்டு,
வேலையை விட்டுட்டு போகப்போறே. ஏன் எப்பப் பார்த்தாலும் பெண்களுக்கு மட்டும்தான் குடும்பம் இருக்கணுமா? இத்தனை வருஷம் பாடுபட்டு
வேலைக்கு வந்ததெல்லாம் ஒண்ணுமே இல்லாம வீணாகப் போகும்னு நினைச்சா என்னாலேயே தாங்க முடியலை...ஹ்ம்.. நீ எப்படி தாங்கிக்கப்
போறியோ, எனக்குத் தெரியலை சாந்தி!"

வேலையை விட்டுவிடலாம் என்று எண்ணியிருந்த சாந்தி, வேறுவிதமாய் யோசிக்கத் தொடங்கினாள்.

மறுநாள் கல்பனாவிடம் தன் முடிவைச் சொன்னாள்.

"எனக்கு என்னுடைய வேலையும், பதவி உயர்வும் முக்கியம். இது என் கௌரவப் பிரச்னை. இதுல நான் விட்டுக் கொடுக்கறதா இல்லை. அவருக்கு
நான் முக்கியம்னா, அவர் மாற்றல் வேண்டாம்னு சொல்லிக்கட்டும்."

"சாந்தி! இப்போதான் எனக்கு உன்னைப் பார்த்தாப் பெருமையா இருக்கு. எல்லாப் பெண்களுக்கும் இப்படி ஒரு ¨தைரியம் வந்துட்டா, பெண்ணடிமைத்தனங்கிறதே இருக்காது."

கல்பனா மகிழ்ந்து பாராட்டினாள்.

சாந்தி தீர்மானித்தது போலவே தான் சென்னைக்கு வரப்போவதில்லை என்று அரவிந்தனிடம் கூறினாள். சரி, நான் இங்கேயே இருக்கிறேன் என்று
அரவிந்தன் கூறுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அரவிந்தன் அவன் முடிவிலிருந்து மாறவில்லை. அதனோடும் கூட நாம டைவர்ஸ்
பண்ணிக்கலாம் என்று சொல்ல, சாந்திக்கு அந்த அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை. அப்படியே திகைத்துப் போய் அமர்ந்து விட்டாள்.

அரவிந்தனும் அவள் மௌனத்தையே விவாகரத்துக்கும் சம்மதமாய் அர்த்தம் செய்துகொண்டு, அவளிடம் சொல்லிக் கொள்ளாமலேயே சென்னைக்குப்
புறப்பட்டுச் சென்றான்.

மறுநாள் பையில் ராஜினாமா கடிதத்தோடு அலுவலகம் சென்ற சாந்தி, கல்பனாவைப் பார்க்காமல் இருந்திருந்தால் இப்போது அரவிந்தனுடன்
வாழ்ந்து கொண்டிருப்பாள். "ஏன் தான் அன்று கல்பனாவைப் பார்த்தேனோ?" என்று இப்போது கூட சாந்தி தன்னையே நொந்து கொள்வதுண்டு.

"அவர் விவாகரத்து செய்து கொள்ளலாமா என்று கேட்டுவிட்டார், கல்பனா! அதனால்தான் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம்
என்று தீர்மானித்து விட்டேன்."

சாந்தி அழாக்குறையாகச் சொல்ல, கல்பனாவின் முகம் கோபத்தால் சிவந்தது.

"ஏன் தான் இப்படி விவாகரத்து என்றால் பெண்கள் எல்லாம் பயப்படுகிறீர்களோ புரியவில்லை. இப்போது விவாகரத்து செய்துவிட்டால் தான் என்ன?

சாந்தி, உனக்கு என்ன குறைச்சல்? படிப்பு இல்லையா, வேலை இல்லையா, கை நிறைய சம்பளம் இல்லையா? உன்னால் தனியாக வாழ முடியாதா?
உன் குழந்தையை வளர்க்க முடியாதா? அவர் என்ன உன்னை 'டைவர்ஸ்' செய்வது? நான் உன்னை நல்ல வக்கீலிடம் கூட்டிக்கொண்டு போகிறேன்;
நீ முதலில் அவருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவை. அப்போதுதான் இந்த ஆண்களின் திமிர் அடங்கும்." கல்பனா படபடத்தாள்.

"என்ன கல்பனா, டைவர்ஸ் பண்ணிடச் சொல்றே?" சாந்தி அதிர்ச்சியடைந்தாள்.

"இங்கே பார் சாந்தி! எப்ப டைவர்ஸ் பண்ணலாம்னு அவர் வாயிலேர்ந்து வந்துடுச்சோ, அப்பவே அவருக்கும் உனக்கும் உறவு விட்டுப் போச்சுன்னு
புரியுது. உன் கூட வாழறதுல இஷ்டம் இல்லாம தானே இப்படிச் சொல்லியிருக்கார்? உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வற்புறுத்தி நீ சேர்ந்து
வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம்? அவர் டைவர்ஸ் பண்றதுக்கு முன்னால நீயே நோட்டீஸ் அனுப்பிடு. அவருக்கு உன்னோட சேர்ந்து வாழ
விருப்பமிருந்தா, நிச்சயம் இதுக்கு ஒத்துக்க மாட்டார். அப்படி இல்லைன்னா, உன் எண்ணங்களுக்கு மதிப்புத் தராத, உன்னை விரும்பாத ஒருத்தர்
கூட வாழறதை விட டைவர்ஸ் வாங்கிட்டு தனியா வாழ்ந்துடறதே நல்லது."

கல்பனா 'அடித்த வேப்பிலை'யில் மயங்கிப்போன சாந்தி விவாகரத்துக்கான பத்திரத்தை விடுமுறையில் வந்த அரவிந்தனிடம் தந்தாள். ஒரு வார்த்தை
'ஏன்' என்று கூடக் கேட்காமல், நீட்டிய இடத்தில் அவன் கையெழுத்துப் போட்டுவிட, சாந்தியின் விவாகரத்து நடந்தது.

அதன் பிறகு அரவிந்தன் வடக்கே எங்கோ 'டூர்' போய்விட்டான் என்பது மட்டும் அவளுக்கு எட்டியது. அவள் அலுவலகத்திலேயே பெண்கள்
அவளைப் பற்றி பின்னால் பேசினார்கள். "அந்த அப்பாவியைப் போய் டைவர்ஸ் பண்ணிட்டாளே" என்று பேசினர். கல்பனா மட்டும் 'பெண்ணுரிமை,
சுயகௌரவத்துக்காகப் போராடி வென்ற வீராங்கனை நீ - இதற்கெல்லாம் வருந்தலாமா?' என்று தேற்றினாள்.

சாந்தி எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மூன்று மாதங்களில் அவளுக்கும் சென்னைக்கு மாற்றல் வந்ததை என்னவென்று சொல்வது? விதி
என்றுதான் சாந்திக்குத் தோன்றியது.

சாந்தி வேலை பார்த்து வந்த அலுவலகம் அதே துறையிலிருந்த சென்னை அலுவலகம் ஒன்றைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. அங்கே அலுவலக நிர்வாகத்தை கவனிக்க சாந்தியே செல்ல வேண்டும் என்றும் மேலிடம் கட்டளையிட்டு விட்டது.

விவாகரத்து செய்து சரியாய் ஆறு மாதங்களில், எங்கே செல்ல முடியாது என்று மறுத்து விவாகரத்து வரை வந்தாளோ, அதே சென்னைக்கு
சாந்தியும் வந்து வேலையில் சேர்ந்தாள்.

"நிழலின் அருமை வெயிலில் தெரியும்; நீரின் அருமை பாலையில் தெரியும்" என்று சொல்வார்கள். அதுபோல் அரவிந்தனின் அருமை சாந்திக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. அவர்களுடைய இனிமையான இல்வாழ்க்கை, ரஞ்சனியிடம் அவனுக்கிருந்த பாசம் - இவற்றை நினைக்கும்போது மனத்தை நெகிழச் செய்தது. கல்பனாவின் போதனையால் தவறான பாதையில் சென்றுவிட்ட அவள் மனம் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஒரு நல்ல கணவனாய், நல்ல தகப்பனாய் இருந்த அவரைப்போய் நம் அவசரபுத்தியால் இழந்துவிட்டோமே என்ற வருத்தம் வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் ஒரு கேள்வி மட்டும் மீதமிருந்தது. எதற்காக அவர் அந்த மாற்றலை மறுக்கவில்லை? அந்தக் கேள்வி மட்டும் அவள் உள்ளத்தை குடைந்து
கொண்டே இருந்தது.

அதற்கான பதிலும் சமீபத்தில் தெரிய வந்த பிறகு சாந்தி தன் வாழ்க்கையைத் தானே கெடுத்து விட்டதாய் உணர்ந்து அழத்தொடங்கினாள்.

அரவிந்தனின் அலுவலக நண்பர் சீனிவாசனை சாந்தி சமீபத்தில் கடைத்தெருவில் சந்தித்தாள். உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக வந்தவர்,
சாந்தியைச் சென்னையில் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

"உன்னையும் இங்கே மாத்திட்டாங்களாம்மா? பார்த்தியா, ஜி.எம் சம்சாரமா கார், வீடுன்னு குடித்தனம் செய்ய வேண்டியவ இப்படித் தனியா வாழ்ந்துகிட்டிருக்கே, எல்லாம் விதி, வேறென்ன சொல்றது?

"அவரு ஜி.எம் ஆயிட்டாரா?"

"அது உனக்குத் தெரியாதாம்மா? இரண்டு முறை மாற்றல் வந்தும் அரவிந்தன் ஏனோ வேணாம்னிட்டான். அப்புறம் பெரிய பிரமோஷன் வந்து தானே
சென்னைக்கு வந்தான். என்ன தான் வந்து என்ன பிரயோஜனம்? மனுஷனுக்கு நிம்மதிதானே முக்கியம்?" என்று சொல்லிவிட்டுப் போக, சாந்தியின்
கேள்விக்கு விடை கிடைத்தது.

மாற்றல் வேண்டாம் என்று ஏன் அரவிந்தன் சொல்லவில்லை என்பது புரிந்தது. புதிதாய் வாங்கிய கண்ணடி ஜாடியை தூள்தூளாய் உடைத்ததுபோல்,
கையில் வந்த அற்புதமான வாழ்க்கையைக் கைநழுவவிட்ட தன் முட்டாள்தனம் சாந்திக்கு விளங்கியது. அரவிந்தன் மீதான பாசம் கூடியது.

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 16

பொன்மாலைப்பொழுது. அலைகள் கரையோடு அலுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தன.

"ரொம்ப உள்ளே போகாதே; அலை அடிச்சிட்டுப் போயிடும்" - தாய்மையின் எச்சரிக்கைக்குத் தலையாட்டிக் கொண்டே கடலுக்குள் முன்னேறும்
சிறுவன்;

உடை நனையும் என்ற அச்சத்தில் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்;

பொங்கும் அலையில் குதிக்கும் சிறுவர்கள்;

பந்து, துப்பாக்கி, குதிரைச் சவாரி, ராட்டினம் - எதையுமே லட்சியம் செய்யாமல் கர்மயோகியாய் "பட்டாணி சுண்டல், சுண்டல் " என்று டின்களுடன் சுற்றி வரும் சிறுவர் கூட்டம்;

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து சூர்யாவுக்கு அலுத்துவிட்டது.

"என்ன அரவிந்தன்! ஏதோ பேசணும்னு வரச் சொல்லிட்டு, அப்படியே உட்கார்ந்துட்டிருக்கீங்க? நான் இன்னொரு நாளைக்கு வரட்டுமா?"

சூர்யா மணலைத் தட்டிவிட்டுக் கொண்டே எழ, அரவிந்தன் அவசரமாக, "இரு, சூர்யா! முக்கியமான விஷயத்தைப் பேசணும்னு தான் வரச்
சொன்னேன்; உட்கார்" என்றான்.

"சரி, சொல்லுங்க!" என்ற சூர்யா மணலில் அமர்ந்தாள்.

"உன் கூட ஆஃபீஸ்லே வேலை பார்க்கிற சாந்தியைப் பத்தி அன்னிக்கு சொல்லிட்டிருந்தியே, சூர்யா...."

"சாந்திப்ரியாவையா சொல்றீங்க?"

"ஆமாம். அவங்களோட கணவர் திரும்ப அவங்க கூட சேர்ந்து வாழத் தயாரா இருக்கார்."

"நிஜமாவா சொல்றீங்க? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு."

சூர்யா பரவசமுற்றாள்.

"எப்படிக் கண்டுபிடிச்சீங்க? எப்படி சமரசம் செய்தீங்க?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

"சூர்யா! அதெல்லாம் பிறகு உனக்குச் சொல்றேன். ஆனா அவரு மறுபடி சாந்தியோட வாழறதுல ஒரு சிக்கல் இருக்காம். அதைத் தீர்த்துவைக்க
என்கிட்டே உதவி கேட்டார். நான் உன்கிட்டே கேக்கப் போறேன்."

"அப்படி என்ன பெரிய சிக்கல்?"

"அவரு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துக்கறதா ப்ராமிஸ் பண்ணிட்டாராம். ஆனா இப்ப சாந்தியோட நிலைமை தெரிஞ்ச பிறகு, சாந்தி
கூட வாழவே அவர் இஷ்டப்படறார். இதை அந்தப் பெண் ஒத்துக்குவாளான்னு சந்தேகப்படறார். தனக்குத் துரோகம் பண்ணிட்டதா அந்தப் பெண் நினைக்கக்கூடாதுன்னு வருத்தப்படறார்."

"இது எப்படி துரோகமாக முடியும்? சாந்தியைப் பத்தித் தெரிஞ்ச பிறகு அவர் அந்தப் பெண்ணோடு பழகத் தொடங்கியிருந்தா அதுதான் துரோகம்.
இது அவருக்கே தெரியாம நடந்துவிட்ட தவறு. நடந்ததை விளக்கமா எடுத்துச் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டா, எந்தப் பெண்ணும் புரிஞ்சுக்குவா."

"அந்தப் பெண்ணோட நிலையில இருந்தா, நீ மன்னிச்சுடுவியா சூர்யா?"

அரவிந்தன் குரலில் ஆர்வப் படபடப்பு.

"வேற வழி? மன்னிச்சுட்டு, அவங்கவங்க வழியைப் பார்த்துட்டுப் போக வேண்டியதுதான்."

"அப்ப என்னை மன்னிச்சுடு, சூர்யா!"

சூர்யா அரவிந்தனைத் திகைப்புடன் பார்த்தாள்.

"ஸாரி சூர்யா! நான் இவ்வுளவு நேரம் சொல்லிட்டு இருந்தேனே சாந்தியோட கணவர் - அது நான் தான்!"

சூர்யா மௌனமாய் தலையைக் குனிந்தபடி மணலைக் கிளறினாள்.

"நீங்க அன்னிக்கு சாந்தி, அவங்க பொண்ணு ரஞ்சனின்னு சொன்ன போதே எனக்கு லேசா சந்தேகம் வந்தது. இன்னிக்கு ரஞ்சனியோட ஸ்கூலுக்கு
போயிருந்தேன். அவள் என் பொண்ணுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன். நாளைக்கு சாந்தியைப் பார்க்கப் போகலாம்னு இருக்கேன். இனிமே சாந்திகூடவே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி உன்னைப் பார்த்து உண்மையைச் சொல்லலாம்னுதான் வரச்சொன்னேன். என் முடிவு தவறா சூர்யா?"

சூர்யா பெரூமூச்சு விட்டாள். அவள் கண்கள் கலங்கியிருப்பதாய் அரவிந்தன் உணர்ந்தான்.

"தவறில்லைன்னுதான் என் வாயாலேயே ஏற்கனவே சொல்ல வைச்சுட்டீங்களே."

"என்னை மன்னிச்சுடு, சூர்யா! என்னால உனக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"போதும் அரவிந்த்! திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க! உங்க நிலைமையிலே யார் இருந்தாலும், இந்த முடிவைத்தான் எடுத்திருப்பாங்க.
உங்களோடவாழ்க்கை சிறப்பா இருக்க என் வாழ்த்துக்கள்!"

"சூர்யா! நாங்க மறுபடி சேரக் காரணமே நீ தான். சூர்யா! நான் உன்னை மறக்கவே மாட்டேன், தாங்க்யூ வெரிமச்!"

சூர்யா விரக்தியாய்ப் புன்னகை புரிந்தாள்.

"அப்ப நான் கிளம்பலாமா?"

"ஒரு சின்ன வேண்டுகோள் சூர்யா!"

" என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை எங்கேயாவது சந்திக்க நேர்ந்தா, தெரியாத மாதிரி காட்டிக்கணும். அதுதானே?
கவலைப்படாதீங்க. என்னால உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. என் வாழ்க்கையில புதுக்கதை எழுதறதா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.
இப்பதான் தெரியுது, ஒரு தொடர்கதைக்கு இடைஞ்சலா நடுவில வந்திருக்கேன்; வந்த வழியிலேயே திரும்பிடறேன். ஹ்ம்...எது எப்படியோ, இனிமே சாந்தியும், ரஞ்சனியும் சந்தோஷமா, நிம்மதியா இருப்பாங்க இல்லே! அது போதும் எனக்கு! குட்பை!"

சூர்யாவின் உருவம் மறைந்து போகும்வரை, அவள் சென்ற திசையையே பார்த்தபடி அரவிந்தன் அமர்ந்திருந்தான்.

சூர்யா வாசமிகு மலராய் அரவிந்தன் உள்ளத்தில் மணம் வீசினாள். மலர் மணம் வீசி, வீழ்வது போல சூர்யா அரவிந்தனை அவன் குடும்பத்தோடு
இணைத்து விட்டாள்; ஆனால் அவள் பாதை இப்போது வேறு திசையில் மாறிவிட்டது.

சூர்யாவைப் பற்றின உயர்வான எண்ணம் நிறைந்த நெஞ்சோடு அரவிந்தன் வீட்டுக்குத் திரும்பினான்.

மறுநாள் மாலை பள்ளி முடியும் நேரம். அரவிந்தன் சரியான நேரத்துக்கு வந்து ரஞ்சனிக்காகக் காத்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் ரஞ்சனி துள்ளிக்கொண்டே ஓடிவந்தாள்.

"அப்பா! வந்துட்டீங்களா? இன்னிக்கு நாம வீட்டுக்குப் போறோம்...ஹே....!"

"அம்மா என்ன சொன்னாங்க, ரஞ்சு?"

சாந்தியின் பதில் எப்படி இருந்தாலும், அன்று வீட்டுக்குப் போவதாக அரவிந்தன் ஏற்கனவே முடிவு செய்துவிட்டான். இருந்தாலும் சாந்தியின்
பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனை விடவில்லை.

"நீங்க வந்தீங்கன்னு நான் சொன்னதை அம்மா நம்பவே இல்லைப்பா. பிறகு நாளைக்கு அப்பா வந்தா, வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு சொன்னாங்க."

சாந்தி தன்னைப் பார்ப்பதை தவிர்க்கவில்லை என்பதே அரவிந்தனுக்குப் போதுமானதாக இருந்தது.

இரண்டு வருட நிகழ்ச்சிகளைப் பேசியபடியே ரஞ்சனி உற்சாகமாய் உடன்வர, இருவரும் வீட்டுக்கு வந்தனர்.

"வாங்கப்பா, உள்ளே வாங்க!! ஆயா, எங்கப்பா வந்துட்டார், வந்து பாருங்க..!!"

ரஞ்சனி அரவிந்தனின் கையைப் பற்றி இழுத்துச் செல்ல, ஆயா வந்து ஆச்சரியமாகப் பார்த்து, வணக்கம் சொல்லிப் போனார்.

"ரஞ்சனி! அம்மா எப்படி இருக்கிறா?"

"அதை ஏம்ப்பா கேட்கறீங்க? இப்பல்லாம் அடிக்கடி தனியா உட்கார்ந்துட்டு அழுதுகிட்டு இருக்காங்க."

சாந்தியின் நோயை எண்ணி அரவிந்தன் மிகவும் வருத்தம் அடைந்தான்.
ரஞ்சனியோடு விளையாடியபடி நேரம் சென்றுவிட, அலுவலகம் முடிந்து வந்த சாந்தி அரவிந்தனைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றாள்.

(உறவுகள் தொடரும்.....)
 
அத்தியாயம் - 17

அரவிந்தனைப் பார்த்த சாந்தி வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தாள். என்றாலும் உடனே சமாளித்துக் கொண்டாள்.

சாந்தி மிகவும் இயல்பாக "எப்படி இருக்கீங்க?" என்று கேட்க, அரவிந்தனுக்கு தான் வந்த வேலை சுலபமாக முடியும் அறிகுறி தெரிந்தது.

"நல்லாயிருக்கேன் சாந்தி! நீ எப்படி இருக்கே?"

"அதான் பார்க்கறீங்களே, அப்படியே தான் இருக்கேன்" என்றவள் ஆயாவை அழைத்தாள்.

"ஆயா, இராத்திரி சமையல் ஸ்பெஷலா இருக்கணும். ரஞ்சனியையும் கூட்டிட்டுப் போய் வேண்டிய காய்கறி வாங்கிட்டு வாங்க" என்று பணத்தைக்
கொடுத்தாள்.

கடைக்குப் போக ரஞ்சனி உற்சாகமாய்க் கிளம்பினாள்.

"அப்பா, நீங்களும் வர்றீங்களா?"

"இல்லைம்மா. இப்ப நீ போயிட்டு வா. இன்னொரு நாள் நான் வரேன்."

அவர்கள் இறங்கிச் செல்வதற்காகவே காத்திருந்த அரவிந்தன் பேசத் தொடங்கினான்.

"சாந்தி! நாம தனியாப் பேசறதுக்கு அழகான ஒரு வாய்ப்பை உண்டாக்கிட்டே. யூ ஆர் வெரி ஸ்மார்ட்! இப்ப நான் சொல்றதை நீ கொஞ்சம்
பொறுமையாக் கேட்கணும்.பிறகு நீ உன் முடிவைச் சொல்லலாம். ப்ளீஸ், அந்த சோபாவில் உட்கார்."

சாந்தி உண்மையிலேயே திகைத்துப் போனாள். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கத் துடித்துக் கொண்டிருக்க, இவர் இப்போது சொல்ல
என்ன இருக்கிறது? ஒருவேளை மறுமணம் செய்து கொண்டு விட்டாரா?
குழப்பத்தில் உள்ளம் நொந்து போக, மௌனமாய் அமர்ந்தாள்.

அரவிந்தன் ஜன்னலருகில் சென்று நின்று கொண்டான். தோட்டத்தில் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கும் செடிகளைப் பார்த்தபடியே
பேசத் தொடங்கினான்.

"சாந்தி! நமக்கு நடுவிலே சில வேண்டாத சம்பவங்கள் நடந்து போயிடுச்சு. அதுக்குக் காரணமா இருந்ததை நினைச்சு நான் ரொம்ப
வேதனைப்படறேன். பெண்கள் எல்லா நிலையிலும், எல்லா வேலையிலும் இருக்காங்கன்னு நான் நேரடியாப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆண்களுக்குச் சமமான திறமையும், தகுதியும் அவங்களுக்கும் இருக்குன்னு அனுபவபூர்வமா புரிஞ்சுக்கிட்டேன். என் எண்ணம் மாறிடுச்சு. நாம மறுபடியும் சேர்ந்து வாழணும்னு ஆசைப்படறேன், சாந்தி! உனக்கும் இதில விருப்பம் இருந்தாத்தான்!"

சாந்தியின் விசும்பல் ஒலி அரவிந்தனின் பேச்சை நிறுத்தியது. அரவிந்தன் திரும்பிப் பார்க்க, சாந்தியின் கண்களிலிருந்து அருவியாக நீர் பெருகிக்
கொண்டிருந்தது.

"ஐயோ சாந்தி! ஏன் இப்படி அழறே? உனக்கு விருப்பம் இல்லைன்னா, நான் இதைப் பத்தி பேசவே மாட்டேன், என்னை மன்னிச்சுடு, ப்ளீஸ்..."
அரவிந்தன் பதறிப் போனான்.

"என்னங்க, இப்படிப் பேசறீங்க? இது என் பாவத்துக்குப் பிராயச்சித்தமா வர்ற கண்ணீர். தொலைஞ்சு போன வாழ்க்கை மறுபடி வீடு தேடி வந்தது
நான் செய்த புண்ணியம். தயவு செஞ்சு நீங்க தான் என்னை மன்னிக்கணும்...பளீஸ்"

அரவிந்தனுக்கு சாந்தியின் மனமாற்றம் மகிழ்ச்சி அளித்தது.

"பரவாயில்லை, விடு சாந்தி! ஏதோ நேரம் சரியில்லை."

"இல்லைங்க..எனக்கு மூளை தான் அப்ப சரியில்லாம போயிடுச்சு. எல்லாம் அந்த கல்பனா கொடுத்த ஐடியாவால வந்த வினைங்க"

"ஓஹோ!! ஏதுடா, நம்ம சாந்தி இப்படியெல்லாம் செய்ய மாட்டாளேன்னு அப்பவே சந்தேகமா இருந்தது. எல்லாம் கல்பனா உபயமா?"

"ஆமாம். அதை இப்ப சொல்லுங்க..உங்களுக்கு பிரமோஷன் வந்ததே, அதை ஏன் என்கிட்டே சொல்லாம மறைச்சீங்க?"

"ரொம்ப ஆசையாய் பிரமோஷனோட வீட்டுக்கு வந்தா, நீ உங்ககூட வரமாட்டேன்னு பிடிவாதம் செய்தே. அந்தக் கோபத்துல நான் அதைச்
சொல்லலே. அப்புறம் லீவ் போட்டு வந்தபோது, உங்கிட்டே எடுத்துச் சொல்லி, உன்னையும் சென்னைக்கு கூட்டிட்டுப் போகலாம்னு நினைச்சு
வந்தேன். நீ என்னன்னா, நான் ஊரிலேர்ந்து வந்ததும், விவாகரத்து பத்திரத்தை எடுத்து நீட்டினே. சரி, உனக்கு என்கூட வாழப் பிடிக்கலைன்னு
நானே முடிவு செய்துட்டேன்."

"நீங்க தானே முதல்ல டைவர்ஸ் செய்துடலாம்னு சொன்னீங்க?"

"அது ஏதோ கோவத்துல சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே செய்துடணுமா, மக்கு?"

அரவிந்தன் செல்லமாய் சாந்தியின் தலையில் தட்டினான்.

"அதுவும் கல்பனாவோட முடிவுதாங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்காததால தான் டைவர்ஸ் கேட்டீங்க. அதனால நீயே டைவர்ஸ் வாங்கிடுன்னு
அவதான் சொன்னா."

"நீ பேசுவேன்னு நானும், நான் பேசுவேன்னு நீயும் காத்துக் காத்து கடைசியிலே இப்படி ஆயிடுச்சு பாரு சாந்தி!"

"ஆமாங்க; எப்படியோ இப்பவாவது உண்மை புரிஞ்சுதே! ஆமாம், எப்படி எங்களைக் கண்டுபிடிச்சு வந்தீங்க?"

"உங்க பழைய ஆஃபீஸ்லே விசாரிச்சு உன் அட்ரஸை வாங்கிக்கிட்டேன். ரஞ்சனி படிக்கிற ஸ்கூலைத் தெரிஞ்சுக்கிட்டேன். நேரா உன்னை வந்து
பார்க்கத் தயக்கமா இருந்தது. அதுதான் முதல்லே ரஞ்சனியைப் பார்க்கப்போனேன். எப்படியோ எல்லாம் நல்லவிதமா முடிஞ்சாச்சு, சாந்தி! நீ
வேலைக்குப் போறதுல் இப்ப எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே."

"ஆனா எனக்கு இப்ப வேலைக்கு போறதுல இஷ்டம் இல்லைங்க"

"ஏன் சாந்தி?"

அரவிந்தன் புரியாமல் விழிக்க, சாந்தியே தொடர்ந்து பேசினாள்.

"மத்தவங்க கிட்டே கொள்ளையடிக்கிறது மட்டும் திருட்டு இல்லை. நம்ம தேவைக்கு மேல அதிகமா சேர்த்து வைக்கறதும் திருட்டுதான்னு நான்
புரிஞ்சுக்கிட்டேன். உங்களைப் பிரிஞ்சிருந்த காலத்துல உங்களை நினைச்சு எவ்வுளவு நாள் அழுதிருக்கேன், தெரியுமா? நீங்க சொன்னதை
எல்லாம் யோசிச்சுப் பார்த்து அதில் இருந்த உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன். நம்ம குடும்பத்துக்கு உங்க சம்பளமே போதும். நான் என் வேலையை
ராஜினாமா பண்ணிடறேன். தகுதியான, வேலை அவசியமா தேவைப்படற ஒருத்தருக்கு அது பயன்படறதுதான் முறை. நாளைக்கு என் ராஜினாமா
கடிதத்தை நீங்களே என் ஆஃபிஸ்லே கொண்டுபோய் கொடுத்துடுங்க."

அரவிந்தனுக்கு விண்ணில் பறக்கும் உணர்வு ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் இணைந்து வாழத்தொடங்கினார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுக்கத் தயாராய் இருந்ததால், பிரச்னைகள் அவர்களை விட்டு விலகிப் போயின. இனிய குடும்பத்தின் குட்டி தேவதையாய் ரஞ்சனி மகிழ்ந்தாள். அன்பும், இன்பமும் பொங்க, அரவிந்தன் - சாந்தியின் இல்லறம் செழித்தது.

********************

மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

சூர்யாவின் வீடு.

சூர்யாவும் மலரும் அமர்ந்து சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்து கொண்டிருந்தனர்.

அழைப்புமணி ஒலிக்க, கதவைத் திறந்த சூர்யாவுக்கு ஆச்சரியம்!!

"அடடே சாந்தி! நீங்களா? என்ன திடீர் விஸிட்? வாங்க...உள்ளே வாங்க..!"

"திடீர்னு ஒருநாள் வேலையை விட்டுட்டு வீட்டோட செட்டிலாய்ட்டேன். ஆஃபீஸ்லே என்மேலே அக்கறை காட்டினது நீ மட்டும்தான் சூர்யா! அதான்
உன்னை நேர்ல பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். பை தி பை, மீட் மை ஹஸ்பெண்ட், அரவிந்தன்! ரஞ்சனியை உனக்குத் தெரியும்தானே, ரஞ்சு,
ஆன்ட்டிக்கு ஹலோ சொல்லு.."

சூர்யா 'ஹலோ ஆன்ட்டி' என்ற ரஞ்சனிக்கு பதிலளிக்க, அரவிந்தன் நேராய் சூர்யாவைப் பார்த்து வணக்கம் சொன்னான்.

சூர்யா அழகாய்ச் சமாளித்துக் கொண்டாள். அரவிந்தனுக்கு பதில் வணக்கம் சொல்லி, மெதுவாய் சில விஷயங்கள் பேசினாள். மலரும் தானும்
அதுவரை அரவிந்தனைப் பார்த்ததே இல்லை எனும்படி நடந்து கொண்டாள்.
ரஞ்சனி போரடிப்பதாய் வெளியே சுற்றிப் பார்க்கச் சென்றாள்.

"சூர்யா! உங்களைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அப்ப என்னால நம்ப முடியலை. இப்ப நேர்ல பார்த்த பிறகு தான் எல்லாம் புரியுது."

"என்ன சொல்றீங்க சாந்தி?"

"நீங்க நடிச்சது போதும்னு சொல்றேன்."

சூர்யாவும் மலரும் திடுக்கிட்டார்கள்.

"நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும். அவரைத் தெரியாத மாதிரி நீங்க நடிக்க வேண்டிய அவசியமில்லை."

சாந்தி உறுதியான குரலில் சொன்னாள்.

(அடுத்த இதழில் முடியும்....)
 
அத்தியாயம் - 18

"உங்களுக்குள் இருந்த பழக்கம் எனக்குத் தெரியும்" என்று சாந்தி சொல்ல, சூர்யாவும் மலரும் தர்மசங்கடமாய் உணர்ந்தனர்.

சூர்யா உதவிக்கு வருவானா என்ற ஆவலில் அரவிந்தனைப் பார்க்க, அவன் பேசத் தொடங்கினான்.

"சாந்தி சொல்றது உண்மைதான், சூர்யா! நமக்குள்ளே நடந்த விஷயத்தையெல்லாம் நான்தான் அவகிட்டே சொன்னேன். அப்புறம், சாந்தியோட நோய் எப்ப குணமாகும்னு உன்கிட்டே கேட்கலாம்னு தான் வந்திருக்கோம்."

"அது...வந்து..." சூர்யா திணறினாள்.

"தெரியாதுன்னு மட்டும் சொல்லாதே சூர்யா! ஏன்னா அந்த வியாதியைப் படைச்சதே நீ தானே! என்ன சூர்யா, எப்படி இதெல்லாம் தெரிஞ்சதுன்னு
பார்க்கறியா?"

"சாந்திக்கு நோய் இருக்கிறதா நீ சொன்னதால, நான் அவளை முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிட்டுப் போனேன். சாந்திக்கு
எந்த நோயும் இல்லைங்கிற உண்மை தெரிஞ்சுது. அப்பாடா..அந்த நிம்மதியும் சந்தோஷமும் ரொம்ப மனசுக்கு நிறைவா இருந்தது. அதுக்குப் பிறகு
நமக்கு இடையில நடந்த எல்லா விஷயங்களையும் சாந்திகிட்ட சொல்லிட்டேன்."

அரவிந்தன் நிறுத்த, சாந்தி தொடர்ந்தாள்.

"அவர் இன்னொரு கல்யாணம் செய்துக்க இருந்தது எனக்கு வருத்தம்தான். இருந்தாலும் உண்மையை ஒத்துக்கிட்ட நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது. சூர்யா! எங்களைச் சேர்த்து வைச்ச உங்களுக்கு நன்றி சொல்லிட்டு, அப்படியே ஒரு கேள்விக்கு பதிலும் தெரிஞ்சுட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம். நீங்க சொன்ன பொய்களுக்கு காரணம் என்ன?"

"எப்ப உங்களுக்கு இந்த அளவு உண்மை தெரிஞ்சாச்சோ, இனி மீதி இருக்கிறதையும் நானே சொல்லிடறேன். நான் சொன்ன பொய்களுக்கு எல்லாம் ஒரே காரணம், நீங்க இரண்டு பேரும் மறுபடி சேரணும்கிறதுதான். அரவிந்தன்! உங்க கூட நான் பழகினதும் வெறும் நடிப்புதான். அதுக்காக
என்னை மன்னிச்சுடுங்க. சாந்தி! நான் நிறைய பொய் சொல்லியிருக்கேன். எல்லாத்தையும் விட, உங்களுக்குத் தீர்க்க முடியாத நோய் இருக்குன்னு
அரவிந்தன் கிட்டே பொய் சொன்னேன். அதனால ஏற்படக் கூடிய அனுதாபம் உங்க மேல இருந்த பாசத்தை அதிகமாக்கும்னு எதிர்பார்த்தேன்.
நான் நினைச்ச பலன் கிடைச்சது."

"நாங்க ரெண்டு பேர் சேர்ந்து வாழறதுல உனக்கு என்ன சூர்யா இவ்வுளவு அக்கறை?"

"நான் பட்ட கஷ்டம் உங்க மகள் ரஞ்சனி பட வேண்டாம்னுதான்."

"கொஞ்சம் விளக்கமா சொல்லு சூர்யா"

"மலர், அப்பாவைக் கூட்டிட்டு வாயேன்."

சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்து அமர்ந்தார்.

"வணக்கம் தம்பி! வணக்கம்மா! நான் சூர்யாவோட அப்பா கதிர்வேல்."

"சூர்யாவோட அப்பாவா?" அரவிந்தனுக்கு ஆச்சரியம்!!

"என்னப்பா, அநாதைன்னு சொல்லிக்கிட்டா ? அவளுக்கேது அப்பான்னு பார்க்க்றியா? அது உனக்கு அவமேலே இரக்கம் வரணும்கிறதுக்காக நான்
சொல்லச் சொன்ன பொய்! சூர்யாவுக்கு ஒரு தம்பியும் தங்கையும் கூட உண்டு."

சூர்யா தொடர்ந்தாள்.

"எனக்குப் பத்து வயசிருக்கும்போது, ஏதோ ஒரு சண்டை காரணமா எங்கப்பாவும், அம்மாவும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டாங்க. அப்பா இருந்தும்
இல்லாமப் போற அந்த வேதனையை, நான் அனுபவிச்சிருக்கேன். மலரும் அவ குடும்பமும்தான் எனக்கு எப்பவும் ஆறுதல் சொல்வாங்க. நானாவது
பரவாயில்லை, என் தம்பி, தங்கைக்கு அப்பா முகம் கூட ஞாபகமில்லை.
இரண்டு வருஷத்துக்கு முன்னால எங்க அம்மா உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா ஆனாங்க. அப்ப அப்பாவைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க.அப்பா வந்து பார்த்ததுல அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். பிறகு மூணு மாசம்தான் சேர்ந்து இருந்தாங்க. அதுக்குள்ளே அம்மா இறந்துட்டாங்க.."

கதிர்வேல் தொடர்ந்தார்:

"ஏதோ ஒரு சண்டை காரணமா பிரிஞ்சு போய் இப்படி வாழ்க்கையை வீண் பண்ணிட்டேனேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. அவகூட சேர்ந்து
வாழலையேங்கிற குறை இன்னும் என் நெஞ்சில் இருக்கு. என்னை மாதிரி கோபத்துல சண்டை போட்டுப் பிரியறவங்களை சேர்த்து வைம்மான்னு
நான்தான் சூர்யாவைக் கேட்டுக்கிட்டேன்.

இந்த மாதிரி சண்டை போட்டுப் பிரிஞ்சு போறவங்களால தனியா வாழவும் முடியாது; அவங்களா வந்து சமாதானம் ஆக அவங்க "ஈகோ" விடாது;
இதில குழந்தைங்க பாடு தான் இன்னும் மோசம், அவங்க படற மன வேதனை....ரொம்ப அதிகம்..! இரண்டுங்கெட்டான் நிலையா அவங்க படற
கஷ்டத்தைத் தீர்க்க எவ்வுளவு பொய்யையும் தாராளமா சொல்லலாம். இது என் கருத்து."

அரவிந்தனின் மனதில் ரஞ்சனியின் ஆசிரியை கூறிய இதே போன்ற கருத்துக்களும் அலைமோதின. ஆம், இவர் சொல்வது சரிதான்!!!

சூர்யா தொடர்ந்தாள்:

"அப்பா இப்படிக் கேட்ட பிறகு என்னைச் சுத்தி அந்த மாதிரி யார் இருக்காங்கன்னு பார்த்தேன். சாந்தி வந்தாங்க. பழைய ஆஃபிஸ்லேர்ந்து
அவங்களைப் பத்தியும், அரவிந்தன் பத்தியும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அரவிந்தன் கூடப் பழகணும்னு முயற்சி செய்தபோது, அவங்க
ஆஃபிஸ் நண்பர் மூலமா அவர் பத்திகையில விளம்பரம் கொடுத்திருந்தது தெரிஞ்சுது. அப்புறமா நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியுமே!"

அரவிந்தனும் சாந்தியும் வியப்பில் வாயடைத்துப் போனார்கள்.

"எங்க இரண்டு பேரைச் சேர்த்து வைக்க நீங்க எவ்வுளவு சிரமப்பட்டிருக்கீங்க சூர்யா! உங்க குடும்பத்துக்கு நாங்க ரொம்ப கடன்பட்டிருக்கோம்."

அரவிந்தன் நெகிழ்ந்து கூறினான்.

"தம்பி! நீ செய்யக் கூடியது, நீயும் உன் மனைவியும் ஒத்துமையா வாழுங்க. உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது பிரிஞ்சுபோனா, அவங்களையும்
சேர்த்துவைக்க முயற்சி பண்ணுங்க."

கதிர்வேல் கூற, அரவிந்தன் மனப்பூர்வமாய்த் தலையாட்டினான்.

"கணவன் - மனைவி உறவுங்கிறது அழகான ஒரு தொடர்கதை. கோபத்திலோ, அவசரத்திலோ அந்தத் தொடர்கதையை படக்குன்னு பாதியிலே
நிறுத்திட்டா, வாழ்க்கையோட திசையே மாறிப்போயிடும். இதை எல்லாரும் ஞாபகம் வைச்சுக்கிட்டா ரொம்ப நல்லது."

"ஆமாம் அங்கிள், நான் படிச்ச ஒரு பொன்மொழி இப்ப நினைவுக்கு வருது.
'மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பொறுப்பான, அன்பான பெற்றோர் இருந்துவிட்டால், பெரும்பாலான சமூகக் குற்றங்கள் தாமே
மறைந்துபோகும்.'

"சரியாச் சொன்னே, மலர்! இந்தக் கருத்து எல்லாருக்கும் பரவினா, நாடே நன்மை பெறும்."

"உங்களோட சேர்ந்து உழைக்க நாங்களும் தயாரா இருக்கோம்."

அரவிந்தனும் சாந்தியும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சூர்யா - வார்த்தைகளின் வெளிப்பூச்சில் மயங்கிவிடாமல் வாழ்க்கையின் உண்மையான வண்ணத்தை உணர்ந்துவிட்ட சுடர். சூர்யாவைப் போன்ற
சுடர்கள் பெருகி நம் தேசம் ஒளிமயமாகும், பண்பாடு மிளிரும் பண்டைய பாரதமாய் மாறும் என்று நம்புவோம்!!! வந்தேமாதரம்!!!
 
உறவுகள் நாவலை முழுவதுமாக இன்றுதான் படித்தேன்.
உங்கள் கதை சொல்லும் நேர்த்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சொல்லியிருக்கும் கருத்து இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒன்று.
நன்றிகள் பல.
தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்.
 
தாங்கள் என் நாவலைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி, சிவா ஸார்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top