Tamil Brahmins
Page 760 of 776 FirstFirst ... 260660710750756757758759760761762763764770 ... LastLast
Results 7,591 to 7,600 of 7756
 1. #7591
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #523 to #525

  #523. அதோ முகமே சிவனாக மாறும்.

  நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய

  செந்தீ கலந்து உள்சிவன் என நிற்கும்
  உந்திக் கலந்து அங்கு உலகம் வலம் வரும்
  அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.

  முடிவினைச் செய்பவன் உருத்திரன். அவன் இருப்பிடம் மூலாதாரம். அவனே இறைவனின் அதோ முகம் ஆவான். அவனே சுழுமுனை வழியே மேலே சென்று தலையில் உள்ள செவ்வொளியுடன் கலந்து சிவன் ஆகி விடுவான். உலகங்களின் இயல்பை மாற்றி விட்டு மேல் எழுந்து நிற்பான்.

  #524. ஊழித் தலைவனும் சிவனே ஆவான்

  அதோமுகம் கீழ்அண்டம் ஆன புராணன்
  அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
  சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப்பிரானும்
  அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.

  அதோமுகம் பிரணவம் என்னும் அண்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முகம். அது நுண்ணுடல் முழுவதும் பரவும் ஆற்றல் படைத்தது. ஒளியை உடைய, பிரணவ வடிவம் கொண்ட, சக்தியுடன் கூடிய அதே சதாசிவன் தான் அதோமுகனாகவும், ஊழித் தலைவனாகவும் இருக்கின்றான்.

  #525. நூறு நாடிகள் இணைக்கின்றன

  அதோமுகம் மாமலர் ஆயது கேளும்

  அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து
  அதோமுகம் ஆகிய அந்தம் இல் சத்தி
  அதோ முகம் ஆகி அமர்ந்திருந்தானே.

  அதோமுகம் ஓர் ஆயிரம் இதழ்த் தாமரையாக ஆனது என்ன விந்தை? தலையில் கவிழ்ந்துள்ள
  சஹஸ்ரதளத்தில் இருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து செல்கின்றன. கவிழ்ந்துள்ள நாடிகளில் அழிவற்ற சக்திகளோடு அதோமுகன் ஆன இறைவனும் திகழ்கின்றான். 2. #7592
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  21. சிவ நிந்தை

  #526 to #529

  #526. கிளியும், பூனையும்

  தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
  அழிவு உறுவார் அமராபதிநாடி
  எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
  கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே.

  தெளிந்த ஞானம் பெற்ற மேலோர் ஈசனைச் சிந்தையினுள்ளே தேடி அவன் அருளைப் பெறுவர். தெளிந்த அறிவற்ற கீழோர் சிவபிரான் எளியவன் என்று எண்ணி அவனை இகழ்ந்து பேசினால், அவர்கள் கதி பூனையின் கையில் அகப்பட்ட ஒரு கிளியின் கதி போல ஆகிவிடும்.

  #527. வானவர் தானவர் சிவனை அறியார்


  முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்

  விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
  அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
  தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே

  நெஞ்சில் அன்பின் ஈரம் இல்லாத வானவர்களும், தானவர்களும் காமத்தால் கெட்டுப் போனவர்கள் ஆவர். அவர்களால் அதோமுகத்தில் விளங்கும் இறைவன் பெருமையை உணர இயலாது. அன்பால் கசிந்து அமுதம் சுரக்கும் ஈசனைத் தம் உடலில் தேக்கித் தாங்குபவர்களால் மட்டுமே அவனை உணர முடியும்.

  #528. பகை ஈசனை மறைக்கும்


  அப்பகையாலே அசுரரும், தேவரும்

  நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
  எப்பகை ஆகிலும் எய்தார் இறைவனைப்
  பொய்ப்பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.

  தீராத பகைமை பூண்ட அசுரர்களும் அமரர்களும் உய்வு பெறாமலேயே அழிந்து போயினர். எந்த விதமான பகைமை பூண்டாலும் இறைவனை அடைய முடியாது. விளையாட்டாகப் பகைமை பூண்டாலும் அது வினையாக மாறி ஒன்றுக்குப் பத்துத் தீமைகள் செய்து விடும்.

  #529. நானே விகிர்தன்!


  போகமும் மாதர் புலவி அது நினைந்த

  ஆகமும் உள்கலந்து அங்கு உளர் ஆதலில்
  வேதியர் ஆயும் விகிர்தன் ஆம் என்கின்ற
  நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே.

  அந்தணராகப் பிறந்திருந்த போதிலும் பெண்ணின் கூடலையும், ஊடலையும் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதாலும், நானே பிரம்மம் என்று எண்ணுவதாலும், ஈசனைப் பற்றிய நினைப்புகளை அறவே ஒழித்து விடுவர்.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #7593
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  22. குரு நிந்தை

  22. குரு நிந்தை
  குருவைப் பழித்தல் குரு நிந்தை ஆகும். அது விளைவிக்கும் துன்பங்களைப் பற்றி அறிவீர்.

  #530 to #533


  #530. ஞானம் வேண்டுமெனில்

  பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்

  உற்றிருந் தாரை யுளைவன சொல்லுவர்
  சுற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
  பெற்றிருந் தாரன்றி யார் பெரும் பேறே.

  ஞானம் பெற்ற மேலோரையும் கீழ்மக்கள் பேண மாட்டார்கள். தம்முடைய உற்றார்களையும் மனம் வருந்தும்படிச் செய்வார்கள. கற்று அறிந்த குருவிடம் பொருந்தியவரே ஞானம் அடைய முடியும். அவரை அல்லாது வேறு எவரால் ஞானம் அடைய முடியும்?

  #531. நாத ஒலியை எழுப்பி விடுவார்

  ஓரெழுத்து ஒருபொரு ளுணரக் கூறிய

  சீரெழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
  ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்திங் கோருகம்
  பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

  ஓரெழுத்து மந்திரம் ஆகிய பிரணவத்தின் பொருளை மாணவருக்கு உணர்த்தியவர் குருநாதர். அதன் நாதத்தை அவனுள் எழுப்பியவர் குருநாதர். அத்தகைய குருவின் மனத்தை நோகடிக்கும் மாணவன் ஊர் முழுவது வீணே அலைந்து திரியும் நாயாகப் பிறப்பான். ஒரு யுகம் வரையில் வெறும் ஓரறிவுள்ள ஒரு புழுவாகப் பிறந்து உலகில் உழல்வான்.

  #532. ஆவியும் பொருளும் கெடும்!

  பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

  சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
  அத்தமு மாவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்
  சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

  இல்லற ஞானிகளும், தத்துவ ஞானிகளும் உள்ளம் வருந்தும்படி நடந்து கொண்டவர்கள் தம் இனிய ஆவியையும் செல்வதையும் ஓர் ஆண்டுக்குள் இழந்து விடுவர். இது சத்தியம். சதாசிவத்தின் மீது ஆணை.

  #533. தீச் செயலின் பரிசு!

  மந்திரமோ ரெழுத்து துரைத்த மாதவர்

  சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
  நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூருறு
  வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

  ஓரேழு மந்திரமாகிய பிரணவத்தை உபதேசித்த தவ சீலரான குருவின் உள்ளத்தை வருத்தம் அடையச் செய்தவன் இழிந்த நாயாக நூறு பிறவிகள் எடுப்பான் . தாழ்ந்த பிறவிகள் பல எடுத்து வீணே மடிந்து போவான்.


 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #7594
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #534 to #536

  #534. பதவி பறி போகும் !

  ஈச னடியா ரிதயங் கலங்கிட

  தேசமு நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்
  வாசவன் பீடமு மாமன்னர் பீடமும்
  நாச மதாகுமே நந்நந்தி யாணையே.

  சிவனடியார் தம் உள்ளம் கலங்கினால் அப்படிக் கலங்கச் செய்தவனின் தேசம், நாடு, போன்ற எல்லாச் சிறப்புகளும் அழிந்து போய் விடும். இந்திரனின் ஆட்சியாயினும், மன்னவன் ஆட்சியாயினும் அது நஷ்டமாகி விடும். இது எம் சிவபெருமான் இட்ட ஆணை.

  #535. பொய் புகன்றால் துன்பம்!

  சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

  நன்மார்க்க முங்குன்றி ஞானமும் தங்காது
  தொன்மார்க்க மாய துறையு மறந்திட்டுப்
  பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமுமாமே.

  நன்னெறியைப் புகட்டிய நல்ல குருவிடம் பொய் சொல்லல் ஆகாது. ஒருவன் குருவிடம் அவ்வாறு பொய் பேசினால், அவன் பெற்றிருந்த தவம் அழியும். குருவிடம் பெற்ற உபதேசமும் நிலைத்து நிற்காது. பழைய உபதேசங்களும், கற்று அறிந்திருந்த நன்னெறிகளும் மொத்தமாக மறந்து போகும். அவன் ஆன்ம வளர்ச்சியின் அத்தனை வழிகளும் அடைபட்டு விடும். கொடிய வறுமை வந்து சேரும்.

  #536. ஞான நெறியே சிறந்தது

  கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
  மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
  கைப்பட்ட நெய்பால் தயிர் நிற்கத் தானறக்
  கைப்பிட்டுண்பான் போன்றுங் கன்மி ஞானிக்கொப்பே.

  கையில் அகப்பட்ட மாணிக்கத்தை எடுத்துக் கொள்ளாமல் காலில் அகப்ட்ட கல்லைச் சுமப்பது அறிவின்மையாகும். கைவசம் உள்ள நெய், பால், தயிர் போன்றவற்றை உண்ணாமல் வெறும் பிட்டை எடுத்து உண்பதும் அறிவின்மையாகும். ஞான நெறியைத் துறந்து விட்டு கன்ம நெறியைத் தேர்ந்தெடுப்பதும் இது போன்ற அறிவின்மையே ஆகும்.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #7595
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  23. மயேசுர நிந்தை

  23. மயேசுர நிந்தை

  மகேசுரரைப் பூசை செய்பவர் மயேசுரர்.
  அவரை நிந்தனை செய்வோர் அடையும்
  தீமைகளை இப்பகுதி எடுத்துரைக்கின்றது.


  #537 & #538

  #537. நரகக் குழி

  ஆண்டா னடியார்க்கும் விரோதிகள்

  ஆண்டான் அடியவ ரையமேற் றுண்பவர்
  ஆண்டானடியாரை வேண்டாது பேசினோர்
  தாந்தாம் விழுவது தாழ்ந்த நரகாகுமே.

  சிவன் அடியவர்கள் உலக இயல்பிலிருந்து மாறுபட்டவர்கள். அவர்கள் வயிறு பசிக்கும் போது மட்டும் ஐயம் ஏற்று உண்பவர்கள். அத்தகைய உயர்ந்த சிவனடியார்களை நிந்திப்பவர்கள் தாழ்ந்த நரகக் குழியை அடைவார்கள்.

  #538. சிவ போகம்

  ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
  ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
  யான கொடுவினை தீர்வா ரவன் வயம்
  போன பொழுதே புகுஞ் சிவ போகமே.

  சிவஞானியைத் தூற்றுபவன் நல்வினைகளில் இருந்து நீங்கித் துன்பம் அடைவான். சிவஞானியயரை வணங்குபவன் தீவினைகள் நீங்கி இன்பம் அடைவான், . அடியாரிடம் செல்லும் போதே அவர்களுக்குச் சிவபோகம் கைக் கூடி விடும்.

 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #7596
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  24. பொறையுடைமை

  24. பொறையுடைமை
  பொறுத்துக் கொள்ளும் தன்மை.
  உடலில் உள்ள அமுதம் வற்றிடாமல்
  பொறுத்தல் பொறை நிலை ஆகும்.


  #539 & #540

  #539. அமுதம் சுரக்கும்

  பற்றிநின்றார் நெஞ்சில் பல்லி தான் ஒன்றுஉ ண்டு

  முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
  தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
  வற்றாது ஒழிவது மாகமை ஆமே.

  யோகியர் மெய் நெறியைப் பற்றிக் கொண்டு அதனின்றும் வழுவாமல் நிற்பார். அவர்கள் உள்ளத்தை மெய்ப்பொருளுடன் கூட வேண்டும் என்ற எண்ணம் உடும்பு போலப் பற்றிக் கொண்டு இருக்கும். அது மூக்கு, நாக்கு இவற்றின் செயல்களை அழித்து விடும். பிராண வாயு கீழ் நோக்கிச் செல்லாது தடுக்கும். மன ஓட்டதை ஒடுக்கும். அப்போது அமைதியான மன மண்டலத்தில் அமுதம் சுரக்கும்.

  #540. ஞானி மேலானவன்

  ஓலக்கம் சூழ்ந்த உலப்பு இலி தேவர்கள்
  பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
  மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
  ஞாலத்து இவன் மிக நல்லவன் என்றாரே.

  பால் ஒத்த மேனி கொண்ட ஈசனின் பதம் பணிவதற்காக அவன் கொலு மண்டபத்தைச் சூழ்ந்து நின்றனர் அழிவில்லாத அமர்கள். அப்போது ஈசன் அவர்களிடம், பொறுமையில் சிறந்த இந்த ஞானி மாலுக்கும் அயனுக்கும் தலைவன் ஆவான். இவன் உலகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தவன் என்ற சொன்னான்.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7597
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #541 & #542

  #541. இறைவனை அடையலாம்

  ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

  சேனை வளைந்து திசைதொறுங் கை தொழ
  ஊனை விளைத்திடு மும்பர் தம் மாதியை
  யேனை விளைந்தருள் எடடலுமாமே.

  மெய்ஞானம் கை கூடப் பெற்ற ஒரு ஞானிக்கு அவர் உடலின் கருவிகள் கரணங்கள் என்னும் படை ஏவல் செய்யும். அவரை அனைவரும் கைதொழுவர். உடலை மாற்றி அளிக்கும் தேவாதிதேவனை அவர் ஞானத்தாலே அடைய முடியும்.

  #542. இலயம் உண்டாகும்

  வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்

  பல்வகையாலும் பற்றிப் பதம் செயும்
  கொல்லையின் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
  எல்லை இலாத இலயம் உண்டாமே.

  பல வகையான இன்ப துன்பங்களை உயிர்களுக்குத் தருவான் சிவன். அந்த உயிரின் பக்குவத்துக்கு ஏற்றபடி அதன் உடலிலும் உள்ளத்திலும் பல விதமான அனுபவங்களைத் தந்து மேலும் பக்குவம் அடையச் செய்வான். மூலாதாரத்தில் நின்று கூத்தாடும் பெருமான் ஐந்தொழில்களை நிகழ்த்துவது அந்தக் கூத்தின் ஒருமைப்பாடு ஆகும்.
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #7598
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  25. பெரியாரைத் துணைக் கோடல்

  25. பெரியாரைத் துணைக் கோடல்
  ஞானம் மிகுந்தவரைத் தனக்குத் துணையாக ஏற்றுக் கொள்ளல்.

  #543 to #545

  #543. பெரியவர் துணை

  ஓடவல் லார் தமரோடு நடாவுவன்

  பாடவல் லார் ஒலி பார்மிசை வழங்குவன்
  தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
  கூடவல் லார் அடி கூடுவன் யானே.

  தலப்பயணம் செய்பவர்களோடு சேர்ந்து கொண்டு நானும் தலப்பயணங்கள் செய்வேன்.இன்னிசை பாடுபவர்களின் இசையைக் கேட்டு நான் இன்பம் அடைவேன். உள்ளத்தில் தன்னைத் தேடுபவர்களுக்கு அருளும் சிவனோடு பொருந்தும் திறன் பெற்றவர்களின் திருவடிகளில் நானும் பொருந்துவேன்.

  #544. நெஞ்சே நீயும் வா!

  தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்

  மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
  நீயிடர்ப் பட்டிருந்தென் செய்வாய் நெஞ்சமே
  போமிடத் தென்னோடும் போது கண்டாயே.

  படர்வதற்கு கொழுகொம்பு இல்லாத தளிரைப் போல வாட்டம் அடைந்தாலும், மன உறுதி கொண்டவர் தன் மனத்தின் மீது அன்பு வைத்து அதன் வழிப்படி எல்லாம் செல்வதில்லை!
  நீ மட்டும் தனியாயாக இருந்து கொண்டு என்ன செய்வாய் என் நெஞ்சமே? பெரியாரைக் காண நான் போகும் போது நீயும் என்னுடன் வருவாய்!


  #545. சான்றோர் சகவாசம்

  அறிவார் அமரர் தலைவனை நாடிச்

  செறிவார் பெறுவார் சிவதத்துவத்தை
  நெறிதான் மிக மிக நின்றருள் செய்யும்
  பெரியாருடன் கூடல் பேரின்பமாமே.

  உண்மை அறிவு பெற்ற சான்றோர் தேவதேவனை விரும்பி அவனோடு பொருந்தி இருப்பார். அவர்கள் தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்த சிவ தத்துவத்தைப் பெறுவார். நல்ல நெறியில் நிற்பவர்களுக்கும் உபதேசிக்க வல்ல பெரியாருடன் சேர்ந்து இருப்பது பெரும் இன்பத்தைத் தரும்.


 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #7599
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #546 to #548

  #546. சிவநெறி

  தார்சடை யான் தன் தாமராய் உலகினில்
  போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்.
  வாய் அடையா, உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
  கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

  உலக வாழ்வில் உழல்பவர்கள் சிவனைத் துதிக்காமல் இருக்கலாம். பெரியவர்களுடன் கூடி இருப்பவர்கள் சிவபெருமானுக்கு உறவினராகி அவன் திருவடிகளையே சென்று அடைவர்.. மெளனமாக சிவனை ஆன்மாவில் துதிப்பவர்களுக்குச் சிவன் அருள் செய்வான். அந்தச் சிவ நெறியில் இணைவது என்பது சான்றோர் சகவாசத்தாலேயே நிகழும்.


  #547. சிவபுரம்


  உடையான் னடியார் அடியார் உடன்போய்ப்

  படையா ரழல்மேனிப் பதி சென்று புக்கேன்
  கடையார நின்றவர் கண்டறி விப்ப
  வுடையான் வருகென ஓலைமென்றாரே.

  எல்லாம் உடையவன் சிவபெருமான். அவன் அடியாருக்கு அடியாராகிச் சிவபுரத்தில், சிவ சோதியில் பொருந்தி நின்றார் ஒருவர். அவர் என்னைக் கண்டதும் சிவபெருமானிடம் விண்ணப்பித்தார். என்னை அழைத்து வருமாறு சிவன் பணித்தான். கடை வாயிலில் நின்றவர் எனக்கு அடைக்கல முத்திரியைக் காட்டினார். என்னை உள்ளே வருமாறு அழைத்தார்.

  #548. பெரியார் துணை


  அருமைவல் லோன் கலை ஞானத்துள் தோன்றும்;

  பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
  உரிமைவல் லோன் உணர்ந்து ஊழி இருக்கும்;
  திருமைவல் லாரோடு சேர்ந்தனன் யானே.

  சான்றோரோடு கூட வல்லவன் கலை ஞானத்துடன் விளங்குவான். பெருமை உடைய ஞானம் பெற்றவன் பிறவிச் சுழலிலிருந்து வெளிப்படுவான். உரிமையோடு பழகுபவன் சிவனை உணர்ந்து என்றும் அழிவில்லாமலிருப்பான். அருமை பெருமை வாய்ந்த சான்றோர்களின் சிறந்த துணையை அடைகின்ற பெரும் பேற்றைப் பெற்றேன் நான்.

  இரண்டாம் தந்திரம் முற்
  றுப் பெற்றது.

 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #7600
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,733
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  மூன்றாம் தந்திரம் - திருமூலரின் திருமந்திரம்

  1. அட்டாங்க யோகம்

  இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடையது அட்டாங்க யோகம் . இவை இறைவனை அடைவதற்கான வழிகள் ஆகும்.

  #549 to #552

  #549. யோகம் செய்தல்

  உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
  நிரைத்த இராசி நிரைமுறை எண்ணி
  பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
  நிறைத்த இயம நியமம் செய்தானே.


  பலவகையாகப் பேசப்படுகின்றது உயிர் மூச்சு. பிராணாயாமத்தில் அது நன்கு கட்டுப்படுத்தப்பட்டு கழுத்துக்கு மேலும் கீழும் பன்னிரண்டு அங்குலங்கள் இயக்கப்படுகின்றது. இதை எடுத்துக் கூறிய குருநாதர் தீமைகளைப் போக்கும் இயமத்தையும், நன்மைகளைத் தரும் நியமத்தையும் கற்பித்தார்.

  #550. அட்டாங்க யோகம்


  செய்த வியாம நியமஞ் சமாதி சென்று
  உய்ய பராசத்தி உத்தர பூருவம்
  மெய்த கவச நியாசங்கள் முத்திரை
  எய்த வுரை செய்தவன் இந்நிலை தானே.


  இயம, நியமங்களில் முறைப்படி நிற்க வேண்டும். சமாதியில் நன்கு பொருந்த வேண்டும். முன்னால் இருந்து வழி காட்டியும் பின்னல் இருந்து தாங்கிக் கொண்டும் இருக்கும் பராசக்தியின் துணையைப் பெற வேண்டும். கவசம், நியாசங்கள், முத்திரைகள் இவற்றை சரிவரச் செய்ய வேண்டும். உய்வதற்கு இதுவே நல்ல வழியாகும்

  #551. பிறவிப் பிணி இல்லை!


  அந்நெறி இந்நெறி என்னாது அட்டங்கத்
  தந்நெறி சென்று சமாதியில் நின்மின்;
  நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில்ஏகலாம்;
  புல்நெறி ஆகத்தில் போக்கு இல்லை ஆகுமே.


  இறைவனை நாடுவதற்கு அது நல்ல வழியா இது நல்ல வழியா என்று மயங்க வேண்டாம். அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி நிலையை அடையுங்கள். அந்த நெறியில் சென்று அந்நிலையில் பொருந்தியவர்களுக்குச் சிவப்பேறு கிட்டும். மெய் ஞானமும் கிட்டும். மெய் ஞானம் கிடைக்காமல் போனாலும் மீண்டும் ஓர் உடலில் வந்து பொருந்துகின்ற பிறவிப்பிணி அழிந்து விடும்.

  #552. எட்டு நெறிகள்


  இயம நியமமே எண்ணிலா வாதனம்
  நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாராஞ்
  சயமிகு தாரணை தியானம் சமாதி
  அயமுறு மட்டாங்கம் ஆவதுமாமே.


  இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் ஆகும்.

  1. இயமம் = தீயவற்றைச் செய்யாது இருத்தல்.

  2. நியமம் = நல்லவற்றைச் செய்தல்

  3. ஆசனங்கள் = பலவிதமான உடலின் இருக்கை நிலைகள்

  4. பிராணாயாமம் = மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்துவது

  5. பிரத்தியாகாரம் = மனத்தைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது.

  6. தாரணை = கட்டுக்குள் உள்ள மனத்தை நிலை பெறச் செய்வது.

  7. தியானம் = இடையறாது ஒரே பொருளைச் சிந்தனை செய்வது.

  8. சமாதி = சிவனும், சீவனும் ஒன்றி இருத்தல்.
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •