முகவுரை
வேத நூல்கள் நான்கு. அவை ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம் எனப்படும். கிருஷ்ணம் சுக்கிலம் என யஜுர் இரண்டாகப் பிரியும். எல்லா சனங்களையும் எது ஆகர்ஷிக்கிறதோ அதற்குக் கிருஷ்ண யஜுர் வேதமெனப் பெயர். சோதியான அறிவு நிறையும் நூலுக்கு சுக்கில யஜுர் வேதம் என்னும் நாமம் வழங்கும்.
சாகைகள்
யஜுர் வேதத்துக்கு 101 சாகைகள் இருந்தன. இதுவரை பல சாகைகள் மறைந்துவிட்டன. இப்பொழுது 56 சாகைகளைப் பற்றித்தான் அறிகிறோம்.
கிருஷ்ண யஜுர் வேத சாகைகளாவன (41) :
அக்கினி வேகம், ஆத்திரேயம், ஆபஸ்தம்பீ, ஆர்ச்சாபினம், ஆருணி, ஆலம்பினம், ஆஹவரகம், உலபம், ஔகேயம், ஐகேயம், ஔப மன்னியவம், கடம், கபிஷ்டல கடம், காண்டிகீயம், காமலாயினம், காலாபம், காலேதை, சரகம், சாகலேயம், சாராணீயம், தாண்டினம், துந்துபம், தும்புரு, தைத்திரீயம், பாதண்டநீயம், பாரத்வாஜீ, பாலங்கினம், பிராச்யகடம், மானவம், மைத்திரணீயம், வாதூலம், வர்தன்தவீயம், வாராயணீயம், வாராஹம், வைகாநசம், சாட்யாயநீ, சியாமாயனம், சுவேதாவதரம், ஹாரித்திரவியம், ஹாரீரதம், இரண்ணியகேசி.
சுக்கில யஜுர் வேத சாகைகளாவன(15) :
வாஜசனேயம், காண்வம், ஜாபாலம், பௌதேயம், மாத்தியன்தினம், தாபாயனீயம், காபோலம், வைநதேயம், பாராசரம், பரமாவடிகம், ஆபடிகம், பௌண்டிரவத்சம், பைஜலாபம், கௌந்தேயம், வைதேயம்.
தைத்திரீயசாகைகளைச் சேர்ந்தவர்கள் தென்னாட்டில் அதிகம். சுக்கில யஜுர்வேத மநுசரிப்பவர்கள் வடநாட்டில் பெருகியுளார்கள். எல்லா சாகைகளுக்கும் வேத மந்திரங்கள் ஏறக்குறைய ஒரே வகையான மந்திரங்களே.
உபநிஷதங்கள்
யஜுர் வேதத்துக்கு சுமார் 49 உபநிஷதங்களுண்டு. கிருஷ்ண யஜுர் வேத உபநிஷங்கள் 32. அவை:
கடம், தைத்திரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாவதரம், கருப்பம், நாராயணம், அமிருத பிந்து, அமிருதநாதம், காலாக்னி ருத்திரம், க்ஷுரிகம், ஸர்வசாரம், சுகரகசியம், தேஜோபிந்து, தியான பிந்து, பிரமவித்தை, யோகதத்துவம், தட்சிணாமூர்த்தி, ஸ்கந்தம், சாரீரிகம், யோகசிட்சை, ஏகாட்சரம், அட்சி, அவதூதம், கடருத்திரம், ருத்திர இருதயம், யோக குண்டலினி (திரம்), பஞ்சப் பிரம்மம், பிராண அக்கினி ஹோத், கலிசம்தரணம், வராகம், சரஸ்வதி இரகசியம்.
சுக்கில யஜுர் வேதத்தின் 17 உபநிஷங்களாவன:
ஜாபாலம், ஹம்ஸம், பரமஹம்ஸம், ஸுபாலம், மாந்திரீகம், நிராலம்பம், திரிசிகி பிராமணம், மண்டலப்பிராமணம், அத்வைதயதாரகம், பைங்களம், பிக்ஷு, துரியாதீதம், அத்தியாத்மம், தாராஸாரம், யாக்ஞவல்கியம், சாட்யாயனீ, முக்திகம்.
உபநிஷதங்கள் என்பன வேத மொழிகளினின்று உயரிய ரிஷிகள் கண்ட உண்மைகளாகும். இனி யஜுர் சம்பந்தமான நூல்களின் விளக்கம்.
வேத நூல்கள்
யஜுர்வேத தைத்திரீய பிராம்மணம் என்பது தைத்திரீய மந்திரங்களின் யாக விளக்கமான ஒரு நூல். இதைத் தவிர தைத்திரீய மந்திரங்களுடன் பிராமண பாகமென ஒன்று உண்டு. அதுவும் மந்திரங்களின் விளக்கங்களை சற்று புலனாக்கும். சதபத பிராம்மணம் என்னும் நூல் நான் தான் சுக்கில யஜுர் வேத பாஷ்யமெனக் கூறும். இன்னம் ஆபஸ்தம்பர், போதாயனர், பாரத்வாஜர், சத்திய சாதர், இரண்ணிய கேசினர், வைகாநசர் முதலியவர் எழுதிய சிரௌத சூத்திரங்களுமுண்டு. தைத்திரீயாரண்ணியகம் வேத மந்திரங்களினின்று உண்டாகும் ஞான பண்டாரமாகும். பிருஹதாரண்ணியகம் சுக்கில யஜுனின்று புலனாகும் புனித மொழிகள். இவ்வேத இலட்சணங்களை அறிவிக்கும் பிரதி சாகைகளுமுண்டு.
மூல ஸம்ஹிதை
யஜுர் வேத சம்பந்தமான நூலகளைப் பற்றிச் சுருக்கமாய் சொல்லிவிட்டோம். இனி கிருஷ்ண யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையைப் பற்றிக் கூறுவோம். சம்ஹிதை என்றால் மந்திரக் கூட்டங்களாகும். ரிஷி தித்திரி பரம்பரையாய் வரும் கிருஷ்ண யஜுர் வேத மந்திரங்களுக்கு தைத்திரீய சம்ஹிதை எனப் பெயர். இந்நூலை 7 காண்டங்களாகப் பிரித்துள்ளார்கள். காண்டங்கள், பிரபாடகங்கள் அல்லது பிரசினங்கள் என்னும் பிரிவுகளால் பிரிக்கப்பட்டு அவை அநுவாகங்களாக வகுக்கப்படும். அநுவாகங்களில் ஒவ்வொரு ஐம்பது பதங்களுக்கு ஒரு எண் உண்டு. அநுவாகக் கடைசியில் ஒரு குறிப்பு வாக்கியமுண்டு. அதில் ஒவ்வொரு மொழியும் வரிசையாய் அநுவாகத்திலுள்ள ஒவ்வொரு 50-வது பதமாகும். இறுதி எண், அநுவாகக் கடைசியில் 50 பதங்களுக்குக் குறைவானால் அவற்றின் எண்ணிக்கையை அறிவிக்கும். ஒவ்வொரு பிரசினத்தின் முடிவில் எல்லா அநுவாகங்களின் முதல் மொழிகளுடன் அந்த அந்த அநுவாக மொத்தப் பதங்களின் எண்ணிக்கைகளுண்டு. பிறகு கடைசியாக அப்பிரசினத்தில் எத்தனை மொழிகள் உண்டு என்பதை ஒரு எண் அறிவிக்கும். காண்டத்தின் முடிவில் ஒவ்வொரு பிரசினத்தின் முதல் மொழியுடன் அத்துடன் அங்கு எத்தனை சொற்கள் உண்டு என்பதை ஒரு எண் புலனாக்கும். ஏழாவது காண்ட முடிவிலுள்ள குறிப்பாவது. இஷே - 16582. வாயவ்யம் - 19265. பிரசாபதி - 10622. யுஞ்சான - 14105. ஸாவித்ராணி - 19104. பிராசீன வம்சம் - 16992. பிரஜனனம் - 13325. ஸப்தம் - 110296. இஷே என்பது முதல் காண்டத்தின் முதல் பதமாகும். அடுத்த எண் அக்காண்டத்திலுள்ள மொத்தப் பதங்கள். பிறகு மிகுதியான ஆறு காண்டங்களின் முதற் பதங்களும் எண்ணிக்கையுமாகும். ’ஸப்தம்’ என்னும் மொழிக்கப்பால் வருவது ஏழுகாண்டங்களிலும் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கையாகும்.
வேத மொழிகளில் எச்சொல்லும் தவறாமல் இருப்பதற்கும், மனப்பாடஞ் செய்பவர்கள் ஞாபகமறதியை ஸ்மரணை செய்வதற்கும் ஆதியில் மகரிஷிகள் இச்சூசனைகளை வேத மந்திரங்களுடன் சேர்த்திருக்கலாம்.
மூல சுக்கிலம்
இனி சுக்கில யஜுர் வேதம். ரிஷி வாஜசனேய பரம்பரையாய் வருவது வாஜசனேய சம்ஹிதையாகும். இனி பொதுவாய் இதைச் சுக்கிலம் அல்லது சுக்கில யஜுர் வேதமென அழைப்போம். இதற்கு 40 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பல மந்திரங்களுண்டு. இந்த எல்லா மந்திரங்களின் தமிழ் வடிவத்தை இங்கு காணலாம்.