• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Varahi Navratri 2023

வாராஹி நவராத்திரி 2023: வளம் தரும் வாராகி..ஆஷாட நவராத்திரியில் வழிபட்டால் என்னென்ன நன்மைகள்

ஆஷாட நவராத்திரி தொடங்கியுள்ள இந்த நேரத்தில் பிரபல கோவில்களில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

வாராஹி நவராத்திரி காலத்தில் அம்மனை வணங்கினால் வளங்கள் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வர் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா நேற்று 18ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவில்:வழக்குகளிலிருந்து விடுபட வாராகியின் அருள் கட்டாயம் தேவை.

வாராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் கட்டாயம் தேவை. பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்கன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த வாராஹி: லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் விஷூக்ரப் ப்ரான ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' எனும் நாமங்கள் இந்த அன்னையைக் குறிக்கின்றன.

லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள்.

'ஜகத் கல்யாண காரிண்ய' எனும் படி உலகம் உய்ய வேண்டிய பணிகளில் அருளும் ஸப்தமாதர்ளில் தலையானவள். மகாகாளி தாருகாசுரனோடு போர் புரியும்போது அவளுக்குத் துணை நின்றவள் அன்னை வாராகி.

வராஹ ரூபம்:

யக்ஞ வராஹ மூர்த்தியின் சக்தி இவள். சும்பாசுரனோடு சண்டிகா புரிந்த போரிலும் உதவியவள். ஹிரண்யாட்சனைக் கொல்ல வராஹ ரூபம் தரித்து சங்கு,சக்கரம், கதை போன்றவற்றை ஏந்தி அவனை வதைத்து பூமாதேவியை கடலில் இருந்து மீட்டார் திருமால். உலகின் ஜீவாதாரமான பூமிதேவியை உலகிற்கு மீட்டுத் தந்த மூர்த்தி அவரின் அம்சமான வாராகியும் பராக்ரமங்களில் தன்னிகரில்லாதவள்.

பயம் போக்கும் வராகி:

இந்த தேவியின் கரங்களில் சங்கு, சக்கரம் இருப்பது தன்பதி திருமாலைப் போல் கணவனுக்கேற்ற மனைவியாய் இருப்பதுபோல் உள்ளது. அனந்த கல்யாண குணங்களை உடையவள். வலக்கரம் அபய முத்திரையுடன் இருப்பது அடியாருக்கு அடைக்கலம் தந்து, பயத்தைப் போக்குவதாகவும் உள்ளது. பூமியை மறுபடியும் நிலைநாட்டிய வராஹமூர்த்தி வாராஹியுடன் வராஹகிரியில் தங்கியிருந்தார். அச்சமயம் அங்கு சென்ற நாரதர் உலகிற்கு நலன்கள் புரிய அந்த வாராஹியை காசியில் பிரதிஷ்டை செய்தார். காசியில் வாராஹி, காஞ்சி காமாட்சிஅம்மன் சந்நதியின் கோஷ்ட வாராஹி, பள்ளூர் வாராஹி, தஞ்சைப் பெரிய கோயில் வாராஹி என விசேஷமான வாராஹி சந்நதிகள் பக்தர்களுக்கு அருள்மணம் பரப்பி வருகின்றன.

ஆஷாட நவராத்திரி:

தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியுள்ளது.

வாராகி அலங்காரம்: ஆஷாட நவராத்திரி நாளில் வாராகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து மாலையில் இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்றைய தினம் மஞ்சள் அலங்காரமும், நாளை

20ஆம் தேதி குங்குமம் அலங்காரமும்,

21ஆம் தேதி சந்தன அலங்காரமும்,

22ஆம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும்,

23ஆம் தேதி மாதுளை அலங்காரமும்,

24ஆம் தேதி நவதானிய அலங்காரமும்,

25ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும்,

26ஆம் தேதி கனி அலங்காரமும்,

27ஆம் தேதி காய்கறி அலங்காரமும்

28ஆம் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

கிழங்கு நிவேதனம்: வாராகி தேவியின் நிவேதனத்தில் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்ந்த பலகாரம் இடம்பெற வேண்டும் என பூஜை முறையில் முக்கியமாகக்குறிப்பிடப்பட்டுள்ளது. மயில்தோகை விசிறியால் விசிறி, ப்ரார்த்தனை செய்து முறுக்கும், வெள்ளரிக்காயும் நிவேதித்து அன்பர்களுக்கு விநியோகம் செய்தால் நலம் பெறலாம். பஞ்சமி தினத்தன்று தேங்காயை இரண்டாக உடைத்து, நெய்விளக்கேற்ற, கேட்ட வரங்களை தருவாள் அன்னை.

வாராஹி தேவிக்கு யாகம்:

வராஹி தேவியை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பஞ்சமுக வாராஹி அன்னை அருள்பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வாராஹி நவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் பஞ்சமுக வாராஹி ஹோமம், அபிஷேகம், சகஸ்ர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. வழக்குகளிலிருந்து விடுபட இவள் அருள் கட்டாயம் தேவை. எலும்பிற்கு அதிதேவதையான இவள் கோபமுற்றால் வாதமும், பித்தமும் ஏற்படும். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி வாராஹியின் அம்சமே. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் கட்டாயம் தேவை என்பதால் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அன்னை வாராகி தேவியை வழிபட வேண்டும்.
 

Latest ads

Back
Top