• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Srivilliputhur Temple History in Tamil

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ வில்லி புத்தூர் கோவில் வரலாறு தெரிந்து கொள்வோமா

ஸ்ரீ வில்லி புத்தூர் கோவில் மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் வட விருசத்தினடியில் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடிவருட சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் கதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்பருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் உருவங்கள் இருக்கின்றன. விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது.

இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன.

இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபடதிறந்து வைக்கப்படுகின்றன.

திருத்தேர் :

இக்கோயில் தேரில் மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது.

இதிலிருந்து இதன் பழமை நம்மை வியக்க வைக்கிறது.

திருப்பதியில் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது.

இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வரும்.

மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தான் கள்ளழகர் அணிவிக்கிறார்.

ஆண்டாள் அவதார தலம்: ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெயர் இத்திருத்தலத்தில் தான் கிடைக்கப்பெற்றது.

சக்கரத்தாழ்வார் சந்நதி மிகப்புராதனமானது பஞ்சலோகத்தால் ஆன விக்ரகமே விக்ரகமாக விளங்குகிறது. வேறு எங்கும் இப்படி இல்லை.

திருஷ்டிக்காக பாடிய பாடல் :

ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார்.

பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார்.

இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர்.

மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார்.

பக்தியின் உயர்நிலை இது.

எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்,மல்லாண்ட திண்தோள் மணிவண்ணாஉன் சேவடி செவ்வி திருக்காப்பு' என்று துவங்கி "திருப்பல்லாண்டு' பாடினார்.

இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர்' என வாழ்த்தினார்.

அதுவரையில் "விட்டுசித்தன்' (விஷ்ணு சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர், "பெரியாழ்வார்' என்னும் திருநாமம் பெற்றார்.

இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது.

திருப்பாவை விமானம் :

மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள்.

30 பாசுரங்கள் உடையது இது.

கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும்.

தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன.

இதற்கு, "திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.

மாதவிப் பந்தல்:

ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது.

ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள்.

இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது.

இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம்.

ஆண்டாள் மடியில் ரங்கநாதர்:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஆண்டாளின் மடியில் சயனித்திருப்பார்.

அதுபோல, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம்.

இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும்.

இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது.

ஆண்டாளின் தாத்தா,பாட்டி:

முகுந்த பட்டர், பத்மவல்லி என்ற பெருமாள் பக்தர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் இறைவனான வடபத்ரசாயிடம் பக்தி கொண்டவர்களாக இருந்தனர்.

கோயில் வேலை செய்து வந்த அவர்களுக்கு கருடாழ்வாரின் அம்சமாக, ஐந்தாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது.

இவருக்கு, "விஷ்ணு சித்தர்' என்று பெயரிட்டு வளர்த்தனர்.

இவரும் பெருமாள் தீராத பக்தி கொண்டிருந்தார்.

அவரது பக்தியில் மகிழ்ந்த லஷ்மி தாயார், இவருக்கு வளர்ப்பு மகளாக ஆண்டாள் என்ற பெயரில் அவதரித்தாள்.

அவ்வகையில் முகுந்தபட்டர், பத்மவல்லி இருவரும் ஆண்டாளின் தாத்தா, பாட்டியாகின்றனர்.

திரட்டுப்பால் நைவேத்யம்:

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.

அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

இதனை, "பச்சைப்பரத்தல்' என்பர். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர்.

திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.

ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.

அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.

பால்மாங்காயை பார்த்திருக்கிறீர்களா?:

வைகாசி பெளர்ணமியின் போது, ஆண்டாளுக்கு தயிர் சாதம், "பால்மாங்காய்' நைவேத்யம் செய்கின்றனர்.

சுண்ட காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், மிளகு, சீரகம், சீனி ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

வைகாசி கோடைமாதமாக இருப்பதால் பெரியாழ்வார் தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் (ஆண்டாளின் வீட்டார்) இதனை படைக்கின்றனர்.

இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற உடை, சந்தனம், மல்லிகை மலர் சூடி காட்சி தருவாள்.

108 கம்பளி:

கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபாலவிலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர்.

அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

பாவை நோன்பு:

பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள்.

பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள்.

அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள்.

அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

கன்னிகாதானம்:

பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார்.

அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவழியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ரங்க மன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர்.

பின் ரெங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கிக்கொள்கிறார்.

திருமாளிகை:

ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக இருக்கிறது.

இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீர் கொடுத்தாராம்.

எனவே, இக்கோயிலை "நாச்சியார் திருமாளிகை' என்று சொல்கிறார்கள்.

முத்துப்பந்தல்:

ஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "முத்துப்பந்தல்' எனப்படுகிறது.

இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது.

மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.

பால்கோவா சிறப்பு ஏன்?:

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவிற்கு வரும்.

பசு மாடுகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் இங்கு அதிகளவில் பால்கோவா போன்ற பால்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

திருப்பாவை யில், "குடம் வைக்கவைக்க பால் நிறையும் அளவிற்கு கறவைகள் (பசுக்கள்) அதிகமாக வாழும் பகுதி' என்று பொருள்படும்படியாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

அவள் இத்தலத்தை கோகுலமாகவே எண்ணி வாழ்ந்ததால் பெருமாள், இப்பகுதியை பசுக்கள் நிறைந்த பகுதியாக மாற்றி அருளினார்.

இன்றும் இங்கு பசுக்கள் சுரக்கும் பாலிற்கு தனி சுவை இருக்கிறது.

அதனால் ‌பால்கோவாவும் புகழ் பெற்று விட்டது.

ஏலே' ஆண்டாளு!:

திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஏலே'. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு காலத்தில் திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது.

இதன் காரணமாக "ஏலே' என்ற வார்த்தை இங்கும் பயன்படுத்தப்பட்டது.

ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை "எல்லே' என்று இருந்ததாம்.

திருப்பாவையில் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?' என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள்.

"எல்லே' என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து "ஏலே' என்று ஆனதாகச் சொல்வர்.

குழந்தைகள் ஆணாயினும், பெண்ணாயினும் "ஏலே' என செல்லமாக அழைப்பர்.

பெரியவர்களிடையே சண்டை வந்து விட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், "ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே' என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம்.

தட்டொளி:

ஆண்டாள் சன்னதிக்கு நேர் எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி ஒன்று உள்ளது.

கண்ணாடியை அக்காலத்தில் "தட்டொளி' என்று சொல்லியுள்ளனர்.

இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்துக்கொண்டாளாம்.

தற்போது பளபளப்பு குறைந்துள்ள இந்த கண்ணாடியைத் தான், ஆண்டாள் திருப்பாவையில், "உக்கமும் (விசிறி) தட்டொளியும்' என்று குறிப்பிட்டிருக்கிறாள்.

ஓம் வடிவ அம்சம் :

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியாழ்வார் சன்னதிகள் ஓம் எனும் பிரணவ மந்திர அடிப்படையில் அமைந்துள்ளது.

இதில் ரெங்கமன்னார் "அ'காரமாகவும், ஆண்டாள் "ம'காரமாகவும், கருடாழ்வார் "உ'காரமாகவும் அமைந்து "ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர்.

பேண்ட்,சர்ட் அணிந்த பெருமாள்:

திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது பேண்ட், சட்டை அணிந்து வருவர்.

இது இன்று, நேற்று நடக்கும் வழக்கமல்ல. பெருமாள், ஆண்டாளை திருமணம் செய்தபோதே, பேண்ட், சட்டை அணிந்து சென்றார்.

இதன் அடிப்படையில் இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார்.

ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் இவர் வெள்ளை வேஷ்டி அணிந்திருப்பார்.

பெருமாள் அருகில் கருடாழ்வார்:

பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார்.

ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.

தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம்.

இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார்.

ஆண்டாள் திருமணத்தின்போது, கருடாழ்வார் சுவாமியை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்து வந்தார்.

இதனாலும், மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாள், தாயாரை வணங்க விருப்பப்பட்டதாலும் அருகில் இருப்பதாகவும், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு நிற்பதாகவும் சொல்வர்.

மனைவியின் விருப்பத்தை நிறை வேற்றிய பெருமாள்:

கணவன், எப்பேர்ப்பட்ட உயரிய பொறுப்பில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும்.

இதற்கு உதாரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் திகழ்கிறார்.

தன் தந்தை பெரியாழ்வார் மூலமாக கண்ணனின் லீலைகளைப் பற்றி அறிந்து கொண்ட ஆண்டாள், கண்ணன் மீது தீராத அன்பு கொண்டாள்.

ஸ்ரீவில்லிப்புத்தூரை கோகுலமாகவும், தன்னை கோபிகைப் பெண்ணாகவும் பாவித்து பெருமாளை வேண்டி பாசுரங்கள் பாடினாள்.

பெருமாளும் அவளைதிருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும், ஆண்டாள் விரும்பியது கண்ணனைத்தானே! எனவே, மனைவி ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக அருள்புரிந்தாராம்.

எனவே, இங்குள்ள ரெங்கமன்னார் கிருஷ்ணராகவும், ஆண்டாள் ருக்மிணியாகவும், கருடாழ்வார் சத்தியபாமாவுமாகவும் அருளுவதாக ஐதீகம்.

கீர்த்தி தரும் ஆண்டாள்:

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள்.

பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர்.

எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.

வளையல், மஞ்சள்கயிறு பிரசாதம் :

திருமணமாகாத பெண்கள் இங்கு கண்ணாடி கிணறை சுற்றி வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள்.

இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர்.

இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

முப்புரி ஊட்டிய தலம்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் (சுயம்பு) ஆகிய மூன்று பேர் அவதரித்த பெருமையுடையது.

எனவே, இத்தலத்தை "முப்புரிஊட்டியதலம்' என்கின்றனர்.

திவ்யதேசங்களில் புனிதமான ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.

லட்சுமி ஹயக்ரீவர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர், ஓவிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

கல்வியில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தமிழக அரசு சின்னம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார்.

11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம்.

இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாக சொல்கிறார்கள்.

இக்கோபுரத்தை பற்றி கம்பர், ""திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்'' என மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக குறிப்பிட்டு பாடியுள்ளார்.

பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும்.

ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை.

சிலைகள் இல்லாமல், தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம்பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது.

ஆண்டாள் பாடிய பாசுரங்கள்:ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள்.

இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

ஆண்டாளின் பிறபெயர்கள்:ஆண்டாளின் இயற்பெயர் கோதை.

இதற்கு பூமாலை என்று பொருள். இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு என பல பெயர்கள் உண்டு.

வெள்ளிக்குறடு:

ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் மண்டபம் உள்ளது.

இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள்.

இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

வட்ட வாலுடன் ஆஞ்சநேயர்:

ஆஞ்சநேயர், தனது வாலை தலைக்கு மேல் வைத்தபடிதான் காட்சி தருவார்.

இக்கோயிலில் தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.

சிற்பக்கலைக்கு சான்றாக உள்ள சிற்பம் இது.

பெருமாள் பெயர் சூட்டிய பெரியாழ்வார்:

பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது.

எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார்.

108 திவ்யதேச சுவாமிகள்:

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம்.

இதனை நினைவுறுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை:

அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது.

இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்.

லஷ்மி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். அதுமட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள்.

இவ்வூரை, "கோதை பிறந்த ஊர்', "கோவிந்தன் வாழும் ஊர்' என்றும் சிறப்பித்து சொல்வர்.

பங்குனி உத்திரத்தில் திருமணம்:

ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார்.

அவர்கள் காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள்.

எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள்.

ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார்.

இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார்.

தன் மகளை ரெங்கமன்னார், அழைத்துக் கொண்டதை எண்ணிய அவர், தன் ஊரில் வைத்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.

ரெங்கமன்னாரும் ஒப்புக்கொண்டார்.

அதன்படி பங்குனி உத்திரத்தன்று ஆண்டாளை, ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கிறது.

மகள் மீது பாசம் கொண்ட தந்தை:

பெரியாழ்வார், தான் வளர்த்த நந்தவனத்தில் குழந்தையாக கிடைத்த ஆண்டாள் மீது அதிக பாசம் கொண்டு வளர்த்தார்.

ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் பெரியாழ்வார்.

ஆண்டாளை அவர் ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுக்க சென்றபோது, ஆண்டாள் ஸ்வாமியுடன் சேர்ந்துவிட்டாள்.

அப்போது தன் மகளைக் காணாத அவர் ஆற்றாமை மிகுதியால், ""ஒருமகள் தன்னையுடையேன் உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்'' என்று பாடினார்.

தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார்.

ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பக்தர் பார்த்தபின்பே தரிசனம்:

ஆண்டாள் கோயிலில் நடை திறக்கும் அர்ச்சகர்கள் முதலில், ஆண்டாளை பார்ப்பதில்லை.

கதவை திறந்ததும் ஆண்டாளுக்கு வலப்புறத்தில் இருக்கும் கண்ணாடியை பார்க்கின்றனர்.

ஆண்டாள் முதலில் இந்த கண்ணாடியை பார்த்துக்கொள்வதாக ஐதீகம்.

இதன் அடிப்படையில் அர்ச்சகர்கள் இவ்வாறு செய்கின்றனர்.

பின்பு ஆண்டாளுக்கு தீபம் ஏற்றப்படுகிறது.

பக்தர்கள் பார்ப்பதற்காக திரை விலக்கப்பட்ட பிறகே, அர்ச்சகர்களும் ஆண்டாளை பார்க்கின்றனர்.

ஆண்டாளுக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

முன்பு, ஆண்டாள் சன்னதி நடைதிறக்கும் போது ஒரு பசு கொண்டு வரப்படும். மகாலட்சுமி வாசம் செய்யும் பசுவின் பின்புறத்தில் ஆண்டாள் முதலில் விழிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் இல்லை.

மூன்று வாசலுடன் பெருமாள்:

இத்தலத்திலுள்ள வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது.

ஸ்வாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளது.

ஆனால், ஸ்வாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை.

பிறந்த வீட்டிற்கு செல்லும் ஆண்டாள்:

ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று மகாலட்சுமியின் அம்சத்துடன் நந்தவனத்தில் அவதரித்தாள்.

இவள் பிறந்த ஆடி பூரத்தன்று தனியே நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறாள்.

அப்போது அவள் பாடிய திருப்பாவை, நாச்சியார்திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது.

கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள்.

அதேபோல, ஆண்டாள் பிறந்தவீட்டிற்கு செல்லும் நாளில் அவளை வழிபட அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பர்.

திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?:

ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் ஸ்வாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கான காரணம் இதுதான்.

ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம்.

எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ரா‌ பெளர்ணமியின் போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது.

அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.

பூமியைக் காட்டிய அம்பாள்:

ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள்.

இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளுக்கு கிளி ஏன்?:

கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது.

ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம்.

ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள்.

வியாசரின் மகனாகிய, சுகப் பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.

கிளி செய்யும் முறை:

இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது.

மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது.

ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள்.

பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.

மாலையில் சேர்க்கப்படும் பூக்கள்:

ஆண்டாளக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது.

இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது.

திரு விழாக் காலங்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர்.

கள்ளழகருக்கு அனுப்பும் புடவை நிறம் எடுப்பது எப்படி?:

மதுரையில் சித்திரா பெளர்ணமியின் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் கொடுத்தனுப்பும் பட்டுப்புடவையை கள்ளழகர் அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குகிறார்.

கள்ளழகர் உடுத்தும் பட்டுப்புடவையின் நிறத்தை வைத்து, அந்த ஆண்டில் நாட்டின் நிலை எப்படியிருக்கும் என்று கணிப்பதுண்டு.

இந்த ஆடை, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு சாத்தப்படுவதற்காக புடவைகள் வைக்கப்பட்டிருக்கும் பரிவட்ட அறையில் இருந்து, பணியாளரால் எடுக்கப்படுகிறது.

புடவை எடுப்பவர் நிறத்தையும் பார்ப்பதில்லை. கள்ளழகரின் விருப்பத்தால், ஏதேனும் ஒரு நிறத்தில் புடவை வரும் என்கின்றனர்.

ராஜாங்க கோலம்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார்.

இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.

கருடாழ்வாரின் மூன்று பதவி:

கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.

புத்திசாலியான பெண் குழந்தை பிறக்க வேண்டுமா:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லஷ்மி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார்.

இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார்.

தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார்.

எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது.

பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, "வர்ணகலாபேரர்' என அழைக்கின்றனர்.

இவரது சன்னதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சம்.

இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீலஷ்மிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்.

இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது.

ஸ்ரீவில்லிபுத்தூர்- பெயர் விளக்கம்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திற்குரிய விளக்கத்தைக் கேளுங்கள்.

ஸ்ரீ என்றால் லஷ்மி.

இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள்.

வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர்.

பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால்

"புத்தூர்' என்றும் பெயர் வந்தது.

பிற்காலத்தில், இவற்றை மொத்தமாகத் தொகுத்து

"ஸ்ரீவில்லிபுத்தூர்' என பெயர் பெற்றது.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

1627912172328.png
 

Latest ads

Back
Top