Sri Ponnadikal Jeeyar

மணவாளமாமுனிகளின் பொன்னடியாம்
செங்கமலப் போதுகள்!!
--ஸ்ரீபொன்னடிக்கால் ஜீயர் !!

நாளை(30/09/2021) புரட்டாசி புனர்பூசம்,வானமாமலை மடத்தை ஸ்தாபித்த வானமாமலை ஒண்ணாம் ஜீயரான, பொன்னடிக்கால் ஜீயரின் திருநட்சித்திரம்.இவர் பாரதத்தின் பல பகுதிகளிலும்,நேபாளத்திலும் மடத்தின் பல கிளைகளை நிறுவினார். மணவாள மாமுனிகளின் பிரதம சீடரான இவர், மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களுள் முதல்வர்;மாமுனிகளின் முதல் சீடர்- இவர் மாமுனிகளின் திருவடி நிலைகளாகக் கொண்டாடப் படுவதால்
பொன்னடிக்கால் ஜீயர் என்று போற்றப்படுகிறார்.

ஸ்வாமியின் தனியன்:

"ரம்யஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா,
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே"

"மாமுனிகளை,எப்போதும் ஆஸ்ரயித்தவரும்,அவர் திருவடி ரேகைகள் போன்றவரும், அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ராமாநுஜ முநி என்னும் பொன்னடிக்கால்
ஜீயரை வணங்குகிறேன்"

மாமுனிகளின் "ப்ராண ஸுக்ருத்= உயிர் நண்பர்"

வானமாமலையில் அவதரித்த இவரது இயற்பெயர் 'அழகிய வரதர்'.'அழகிய மணவாளர்' என்னும் மாமுனிகளிடம், மாமுனிகள் கிரஹஸ்தராக இருந்த போதே சீடரானார். மாமுனிகளுக்கு முன்னமே சந்யஸ்ரமம் மேற்கொண்டார். மாமுனிகள் உடனேயே இருந்து அவருக்குப் பல கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.கோவில் அண்ணன், எறும்பியப்பா முதலான பல ஆசார்யபுருஷர்கள் மாமுனிகளை ஆஸ்ரயிப்பதற்கு புருஷஹாரம் செய்தார்.
மாமுனிகள் இவரைத் தம் "ப்ராண ஸுக்ருத்" என்று கொண்டாடினார்.

ஆசார்யர் தந்தருளிய அரியாசனம்-சரியாசனம்:

மாமுனிகள் தமக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருளினார். அப்பாச்சியாரண்ணா மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட, மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அவரை அமரச்செய்து , தன் திருவாழி – திருச்சக்கரத்தையும் (திருச்சங்கு – திருச்சக்கரம்) கொடுத்து அப்பாச்சியாரண்ணாவுக்கு திருவிலச்சினை (சமாச்ரயணம்) செய்யுமாறு கட்டளை இட்டார் . முதலில் பொன்னடிக்கால் ஜீயர் சங்கோஜத்துடன் இதை மறுத்தார். ஆனால் அதைத் தொடர்ந்து மாமுனிகள் வலியுறுத்த அவ்வாரே அப்பாச்சியாரண்ணாவுக்கும் அவருடன் வந்திருந்த சிலருக்கும் சமாச்ரயணம் செய்து மாமுனிகள் கட்டளையை பூர்த்தி செய்வித்தார். மாமுனிகள் தமக்கு அஷ்ட திக்கஜங்கள் இருப்பதைப் போல, பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.

அரங்கன் தந்தருளிய"அரங்கநகரப்பனும்"
திருமலையிலிருந்து உகந்துஎழுந்தருளிய
"திருமலை நாச்சியாரும்" :


ஸ்ரீரங்கத்தில் இருந்து, மாமுனிகளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த, பொன்னடிக்கால் ஜீயரை தமக்குக் கைங்கர்யம் செய்ய அனுப்புமாறு, 'வானமாமலை தெய்வநாயகப் பெருமாள்'
மாமுனிகளுக்கு ஒரு ஸ்ரீமுகம்(கடிதம்) அனுப்பினார்.அதன்படி மாமுனிகள் அவரை, உடனே வானமாமலை செல்லப் பணித்தார்.பெரியபெருமாளிடம் விடைபெறுவதற்காக அவரைச் சேவித்து, "அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா !
துணியேன் நின்னருளல்லது எனக்கு...."
(பெரிய திருமொழி 11-8-8) என்று பாடினார்.இப்பாசுரத்தைக் கேட்டு மிக உகந்த பெரிய பெருமாள் தம் சந்நிதி யிலிருந்த, லஷ்மிநாராயணப் பெருமாள் விக்ரஹத்தைத் தந்தருளி வானமாமலைக்கு எடுத்துச் செல்லுமாறு பணித்தார்.அந்த விக்ரஹமே வானமாமலை ஜீயர் மடத்துத் திருவாராதனைப் பெருமாளான "அரங்கநகரப்பன்"

வானமாமலை தெய்வநாயகப்பெருமாள் சந்நிதியில் தாயார்,மூலவர் ஸ்ரீவரமங்கை
நாச்சியாருக்கு உற்சவர் விக்ரஹம் இல்லாமல் இருந்தது.ஒரு நாள் தெய்வநாயகன் பொன்னடிக்கால் ஜீயரின் கனவில் எழுந்தருளி திருமலையிலிருந்து நாச்சியாரை எழுந்தருளப்பண்ணுமாறு நியமித்தார். திருமலை நாச்சியாரும் ஜீயர் கனவில் எழுந்தருளி “அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளப்பண்ணி தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வெய்யும்” என தன் சங்கல்பத்தை தெரிவித்தாள். இதே போல் திருமலை ஜீயர்களின் கனவில் திருவேங்கடவரும், திருமலை நாச்சியாரும் எழுந்தருளி ஆணையிட்டனர். இதையேற்ற ஜீயர்கள் அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம் அர்ச்சா திருமேனியை ஒப்படைத்தனர்.
பொன்னடிக்கால் ஜீயர் தானே தாயாரை எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.அந்தத் திருமலை நாச்சியாரே இன்று வானமாமலையில் தாயார் உற்சவராக எழுந்தருளி யிருக்கிறார்.

பெரியாழ்வார்,அனந்தாழ்வான்,வரிசையில் பொன்னடிக்கால் ஜீயர்:


பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை ஆண்டாளை,அரங்கருக்கு மணமுடித்து வைத்ததால்,பெரியாழ்வார் அரங்கருக்கு "மாமனார்' ஆனார்.

திருமலை அனந்தாழ்வான் தோட்டத்தில், ஒரு நாள் இரவு ஒரு யுவனும்,யுவதியும் வந்து மலர்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருக்க,திருவேங்கடவருக்கு மாலை கட்டுவதற்கான மலர்களை இவர்கள் பறிக்கிறார்களே என்று அனந்தாழ்வான் அவர்கள் மேல் கோபம் கொண்டு விரட்ட,அந்த யுவன் தப்பித்து ஓடிவிட்டான்.யுவதியைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டார் அனந்தாழ்வான்.மறுநாள் காலை திருவேங்கடவர் மார்பில் 'அலர்மேல் மங்கை'யைக் காணாத அர்ச்சகர் திடுக்கிட்டார்.திருவேங்கடவர், அர்ச்சகரிடம்,முதல்நாள் இரவு நடந்த தைக் கூறினார்.அர்ச்சகர் அனந்தாழ் வானிடம் தாயாரை விடுவிக்குமாறு சொல்ல,திவ்ய தம்பதிகளிடம் அபச்சாரப் பட்டோமே என்று பலவாறு வருந்திய அனந்தாழ்வான், தாயாரை நன்றாக அலங்கரித்து சீர்வரிசைகளுடன்,மங்கள வாத்தியங்கள் முழங்க, அழைத்துச் சென்று திருவேங்கடவரிடம் ஒப்படை த்தார்.ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து தாயாரை திருவேங்கடவரிடம் சேர்ப்பித்த அனந்தாழ்வான் வேங்கடவருக்கு 'மாமனார்' ஆனார்.

திருமலை நாச்சியாரை தெய்வநாயகப் பெருமாளுக்குக் கன்னிகாதனம் செய்து கொடுத்ததால் பொன்னடிக்கால் ஜீயர்,தெய்வநாயகருக்கு 'மாமனார்' ஆனார்.இந்த வைபவத்தைக் கொண்டாடும் வண்ணம், இன்றும் ஒவ்வொரு தைமாதமும் கணுப் பொங்கலன்று ,ஸ்ரீவரமங்கைத்தாயார் (உற்சவர்),திருத்தகப்பனார் திருமாளிகை யான,வானமாமலை ஜீயர் மடத்துக்கு எழுந்தருள்கிறார்.அங்கு தாயாருக்குச் சிறப்பாக திருவாராதனை நடந்தபின்,சீர் வரிசைகளுடன் அனுப்பி வைக்கப் படுகிறார்.

மாமுனிகளின் பவித்ர வஸ்துக்களைப் பெற்ற பேறுடைய ஜீயர்:


வடதேச யாத்திரை சென்ற பொன்னடிக்கால் ஜீயர் ஸ்ரீரங்கம் திரும்பி வருவதற்குள் மாமுனிகள் பரமபதம் எய்திவிட்டார். மாமுனிகளின் சீடர் ( பூர்வாச்ரமத் திருப்பேரனார் ) ஜீயர் நாயனாரையும், மற்றுமுள்ள சில ஸ்ரீவைஷ்ணவர்களையும் தண்டன் சமர்ப்பித்து தன் ஆசார்யனை பிரிந்து, தான் வாடும் சோகத்தை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம்(திரி தண்டத்தின் மீதம்), திருவாழி மோதிரம் மற்றும் பாதுகைகளும் பொன்னடிக்கால் ஜீயரிடம் சமர்ப்பிக்க பட்டன. இன்றும், வானமாமலை ஜீயர்கள் உற்சவ காலங்களில் மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிகிறார்கள்.

'ராமாநுஜ திவ்யாஜ்ஞாவை வர்த்ததாம்,அபிவர்த்ததாம்' என்று வளர்த்த பொன்னடிக்கால் ஜீயர்


வானமாமலை ஜீயர் பாரதம் முழுவதும் யாத்திரை சென்று, ராமாநுஜ சம்பிரதாய ஸ்ரீவைஷ்ணவ மடங்களை பல்வேறு நகரங்களிலும்--திருப்பதி,காசி, அயோத்யா,மதுரா, காஷ்மீரம்,காட்மண்டு முதலான-83 இடங்களில் நிறுவி ஆங்காங்கே பல சீடர்களை நியமித்தார் அந்நந்தப் பிரதேச த்தை ஆண்ட மன்னர்கள் பலரும் அவர் சீடர்களாகி மடத்துக்கு நில,புலன்களையும், மற்றும் பல சொத்துக்களையும் வழங்கினர்.வட இந்தியாவில் இவை "தோத்தாத்ரி மட்" என்று அறியப்படுகின்றன.தோத்தாத்ரி என்பது வானமாமலை தெய்வநாயகப் பெருமானின் திருநாமம்.அந்த 'மட்'களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள சீடர்களை 'மகந்த்'களாக(ஜீயர்/தலைவர்) நியமித்தார்.இந்த மடங்கள் பல, இன்று தனி அமைப்புகளாகச் செயல் பட்டாலும்,வானமாமலை மடத்து ஜீயரையே தங்கள் ஆசார்யராக ஏற்றுக் கொண்டு,அவரது வழிகாட்டுதல்படி நடந்து வருகின்றன.

வட இந்தியாவில் புகழ்பெற்ற ராமானந்தர் என்னும் ஆசார்யர் பொன்னடிக்கால் ஜீயரின் சீடரானார்.ராமானந்தருக்கு பல இடங்களில் மடங்களும் எண்ணற்ற சீடர்களும் உருவாகினர்.கபீர்தாஸும், இந்தியில் ஸ்ரீராமாயணம் பாடிய துளசிதாசரும் ராமானந்தரின் முக்கிய சீடர்கள்.அந்த மடங்கள்/சீடர்கள் மூலம் ராமாநுஜ சம்பிரதாயம் அங்கு பல்கிப் பெருகியது.(ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முதன் முதலில் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடியவர்கள் இந்த ராமானந்தரின் சீடர் பரம்பரையில் வந்த இன்றைய மஹந்துகளும்/அவர்களது சீடர்களுமே !).

பொன்னடிக்கால் ஜீயர் ஸ்தாபித்த வானமாமலை மடத்தை, இது வரை 30 ஜீயர்கள் பீடாதிபதிகளாக இருந்து அலங்கரித்துள்ளனர்.தற்போதைய 31 ஆவது பட்டமாக 'ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமாநுஜ ஜீயர்'எழுந்தருளி இருக்கிறார்.இவர்கள் அனைவருமே இந்தியா முழுதும் யாத்திரை சென்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்து வந்தனர். வடஇந்தியாவிலும்,அயல்நாடுகளிலும், புகழ்பெற்ற 'ஸ்வாமிநாராயண் ' பக்தி இயக்கத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்வாமிநாரயணர் வானமாமலை மடத்தின் சீடர்.
ஸ்ரீவல்லபாசார்யரும்,ஸ்ரீசைதன்யமகாபிரபுவும் வானமாமலை மடம்/ஜீயர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.நம் பாரதநாட்டின் முதல் குடியரசுத் தலைவர் திரு.ராஜேந்திர பிரசாத்தும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் வானமாமலை மடத்தின் சீடர்கள் ஆவர்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1,2,3: ஸ்ரீவரமங்கை நாச்சியார் கணுப்பொங்கலன்று ஜீயர் மடம் எழுந்தருளுதல்.
4,5: பொன்னடிக்கால் ஜீயர்.
6.வர்த்தமான வானமாமலை ஜீயர்,
ஸ்ரீ மதுரகவி ராமாநுஜ ஜீயர்--மாமுனிகளின் திருவாழி மோதிரத்துடன்.

WhatsApp Image 2021-09-29 at 8.36.28 PM.jpeg
WhatsApp Image 2021-09-29 at 8.36.46 PM.jpeg
WhatsApp Image 2021-09-29 at 8.37.06 PM.jpeg
WhatsApp Image 2021-09-29 at 8.37.23 PM.jpeg
WhatsApp Image 2021-09-29 at 8.37.59 PM.jpeg
 
Back
Top