Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 100 ( 9 to 11)

கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்

மஞ்ஜீரம் மஞ்ஜுநாதை3ரிவ பத3ப4ஜனம்
ச்’ரேய இத்யாலபந்தம்
பாதா3க்3ரம் ப்4ராந்தி மஜ்ஜத் ப்ரணத
ஜன மனோ ம்ந்த3ரோத்3தா4ரகூர்மம் |
உத்துங்கா3தாப்4ர ராஜன்னகர ஹிமகர
ஜ்யோத்ஸ்னயா சாச்’ரிதானாம்
ஸந்தாப த்4வாந்த ஹன்த்ரீம் தாதிமனுகலயே
மங்க3லா மங்கு3லீனாம் || ( 100 – 9)


திருவடிகளைச் சேவிப்பது தான் சிரேயசுக்குக் காரணம் என்று தன்னுடைய இனிமையான நாதங்களால் உபதேசிக்கும் பாதசரத்தையும்; அஞ்ஞானத்தில் மூழ்குபவர்களும், தன்னை வணங்குபவர்களும் ஆகிய ஜனங்களுடைய மனதாகின்ற மந்தரமலையை உயரத் தூக்கும் ஆமை போன்ற நுனிக் கால்களையும்; உயர்ந்து, சிவந்து, பிரகாசிக்கும் நகங்களாகிய சந்திரர்களுடைய ஒளியினால், தன்னை ஆசிரயித்தவர்களுடைய தாபங்களையும், இருளையும், அஞ்ஞானத்தையும், நாசம் செய்கின்றதும்; மங்களத்தைக் கொடுப்பதும் ஆகிய விரல்களையும் நான் அடிக்கடி தியானிக்கிறேன். ( 100 – 9 )

யோகீ3ந்த்3ராணாம் த்வத3ங்கே3ஷ்வதி4க
ஸுமது4ரம் முக்தி பா4ஜாம் நிவாஸோ
ப4க்தானாம் காமவர்ஷத்யுதரு கிஸலயம்
நாத2 தே பாத3 மூலம் |
நித்யம் சித்தஸ்தி2தம் மே பவனபுரபதே
க்ருஷ்ண காருண்யஸிந்தோ4
ஹ்ருத்வா நிச்’சே’ஷதாபான் ப்ரதி3ச’து
பரமானந்த3 ஸந்தோ3ஹ லக்ஷ்மீம்|| ( 100 – 10)

ஹே! நாதா! ஹே குருவாயூரப்பா! ஹே கருணைக் கடலே! ஹே கிருஷ்ணா! யோகீஸ்வரர்களுக்கு உங்கள் அவயவங்களுக்குள் மிக மிக மதுரமானதும், மோக்ஷத்தை அடைந்தவர்களுக்கு வாசஸ்தலம் ஆனதும்;
பக்தர்களுக்கு அபீஷ்டத்தை வர்ஷிப்பதில் கற்பக விருக்ஷத்தின் தளிரைப் போன்றதும்; ஆகிய தங்கள் பாத மூலம் எப்போதும் என் சித்தத்தில் இருந்து கொண்டு சமஸ்த தாபங்களையும் போக்கடித்து மோக்ஷலக்ஷ்மியை கொடுக்க வேண்டும். ( 100 – 10)

அஞாத்வா தே மஹத்வம் யதி3ஹ நிக3தி3தம்
விச்’வநாத2 க்ஷமேதா2:
ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதி4கதரம்
த்வத் ப்ராஸாதா3ய பூ4யாத் |
த்3வேதா4 நாராயணீயம் ச்’ருதிஷு ச
ஜனுஷா ஸ்துத்யதா வர்ணனேன
ஸ்பீதம் லீலாவதாரை ரித3மிஹ குருதாம்
ஆயுராரோக்3ய சௌக்யம்|| ( 100 -11)


ஹே ஜகன்நாதா! தங்களுடைய மகிமையை அறியாமல் இப்போது என்னால் எது சொல்லப்பட்டதோ அதைத தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரத் துக்கும் அதிகமான ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்திரம் தங்கள் பிரசாதத்தை அ டைவதற்கு ஒரு ஹேதுவாக ஆகவேண்டும். வேதங்களில் ஜனித்ததாலும், லீலாவதாரங்கள் மூலமாக ஸ்துதிக்கத் தக்க தன்மையை வர்ணிப்பதாலும், ஸ்ரீமன் நாராயணனை உத்தேசித்து ஸ்ரீ நாராயண கவியால் எழுதப்பட்ட “நாராயணீயம் ” என்னும் இந்த ஸ்தோத்திரம், இவ்வுலகில் உள்ளவர்களுக்கு பூரண ஆயுள், நல்ல தேக ஆரோக்கியம், சௌக்கியம் என்னும் அனைத்தையும் அளிக்கட்டும்.
( 100 -11)

நாராயண தநூஜேன நாராயணகவே: க்ருதி:|

நாராயண பத3த்3வ்ந்த்வே ஸானுவாதா3 ஸமர்ப்யதே||

ஓம் நமோ ப4க3வதே வாஸூதேவாய || ஓம் தத் ஸத் ||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
 
பின்புலக் கதை

இந்தத் தொடரின் பின்புலக் கதை இது!

யோகதர்ஷன் மாஸ்டர் ஸ்ரீமன் நாராயணீயத்தை விளக்கினார்.

ஒவ்வொரு வரியும் ஒரு மினி ரயில் வண்டி போல இருக்கும்.
எங்கே நிறுத்த வேண்டும்? எப்படிப் பிரிக்க வேண்டும்? தெரியாது.

படிப்பதை விடப் பாடுவது எளிதாக இருக்கும் போலத் தோன்றியது.
திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களின் ஒலிநாடாவை வைத்துக் கொண்டு
மிகவும் சிரமப்பட்டு 100 வேறு ராகங்களில் பாடக் கற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு தசகமும் வெவ்வேறு ராகம். இது ஒரு 100 ராக மாலிகை.
அப்போதும் முழு மனத் திருப்தி ஏற்படவில்லை எனக்கு.

வார்த்தைகளின் பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும்
என்று முனைப்பாகப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினேன்.

ஏறக் குறைய நான் பிறந்த போது வெளிவந்த ஒரு புத்தகத்தில்
பதம் பிரித்துச் சொற்களின் பொருளும் அழகாகத் தரப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த புத்தகத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கூட
அதை வைத்திருந்த அவர்கள் சம்மதிக்க வில்லை.

ஏறக் குறைய நம்பிக்கையை இழந்து விட்டேன் அது கிடைக்கும் என்று.
இவருடைய அத்திம்பேரின் தம்பியிடம் அது பற்றி பேசியபோது
அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்,

“உனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியுமா?”
“தெரியும்” என்றேன். அவர் முகம் மலர்ந்து விட்டது.

“நீ தேடும் புத்தகம் என்னிடம் ஒரு காபி உள்ளது. எத்தனையோ பேர்கள் தரச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் சம்ஸ்க்ருதம் படிக்கத் தெரிந்தவருக்குத் தான் கொடுப்பது என்று தீர்மானமாகக் கொடுக்க மறுத்து விட்டேன். இனி அந்தப் புத்தகம் உன்னுடையது” என்றார்.

எனக்கு மகிழ்ச்சியில் பேசக் கூட முடியவில்லை.
அவர் புத்தகத்தில் என் பெயர் எழுதியிருந்தது போலும்!

புத்தகத்தை அனுப்பி வைத்தார் சென்னை சென்ற உடனேயே.
இப்போது அது என் இணை பிரியாத் துணை ஆகிவிட்டது!

அந்தப் புத்தகம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால்
இந்தத் தொடர் பிறந்து இருக்கவே முடியாது நிச்சயமாக!

அந்தத் தாத்தாவுக்கு நன்றி நம் எல்லோர் சார்பிலும்! :pray2:
ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.

“கண்ணன் அருள் எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்”
என்று வேண்டிக் கொண்டு இந்தத் தொடரை முடிக்கின்றேன். "pray:

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை வசிக்கலாம்.
தினப்படியும் வாசிக்கலாம்! கோகுலாஷ்டமிக்கும் வாசிக்கலாம்!
 
முடிவுரை:

"கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்!"
என்பது எவ்வளவு நிதரிசனமான உண்மை!

யாருக்கும் கிடைக்காத இந்த அரிய பொக்கிஷத்தை இப்போது
எல்லோருக்கும் கிடைக்கச் செய்த மன நிறைவு ஏற்படுகின்றது.

பதினோரு பேருக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்திருக்கின்றதாம்.
'நல்ல விஷயம் பிடிக்கின்றது!' என்பதே ஒரு நல்ல விஷயம் தான்.

அந்த பதினோரு பேர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக!
அவர்கள் யார் யார் என்று எனக்கு இதுவரை தெரியாது;
அதைத் தெரிந்து கொள்ளத் தேவையும் இல்லை அல்லவா?

இன்னமும் கண்ணனை விட்டு விட மனம் இல்லை எனக்கு!
இன்னமும் கண்ணனைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ இருக்கின்றது.

அஷ்டபதி, கிருஷ்ணா லீலா தரங்கிணி, கிருஷ்ண கர்ணாம்ருதம், முகுந்த மலை என!
இஷ்டத் தெய்வத்தைப் பற்றி எழுதுவதற்கு அந்த இஷ்ட தெய்வமே அருள் புரிய வேண்டும்.

தினம் பிரசுரித்தால் தொடர்ச்சி விடாமல் இருக்கும். ஆனால்
தினம் போடும் அளவுக்கு இப்போது எழுத முடியுமா தெரியவில்லை.

திருமந்திரம் ஏழாம் தந்திரம் எழுதிக் கொண்டு இருக்கின்றேன். இன்னமும் !300 பாக்கள் உள்ளன
அது முடிந்த பிறகோ அல்லது அதை எழுதும் போதோ இதையும் தொடங்க வேண்டும்.

வெண்ணை தின்னும் கண்ணனும், விடையேறும் முக்கண்ணனும் அதற்கு வழி காட்டட்டும்.
விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கும் ஆவலுடன் இப்போது விடை பெறுகின்றேன்!

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
 
Status
Not open for further replies.
Back
Top