Special Highlights of Avani Month

ஆவணி மாதத்தின் சிறப்புகள் தெரியுமா?

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள்.

சூரியன் சிம்மத்தில் வலுப்பெறும் இந்த மாதத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அது பலன் தரும் என்பது நம்பிக்கை.

இதனாலேயே சிங்க மாதம் எனப்படும் ஆவணி வழிபாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்ற மாதமாகப் போற்றப்படுகிறது.

சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை; சிவனுக்கு இணையான இறைவனும் இல்லை என்கிறார் அகத்திய மாமுனி.

தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது.

கேரளத்தில் இதுவே முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கொள்ளப்படுகின்றது.

சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி நாள் வருவதால் இது சிரவண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த மாதமே வேதம் கற்றுக்கொள்ள தொடக்க மாதமாக இருந்து வந்துள்ளது.

இன்று அது தேய்ந்து தேய்ந்து வெறும் பூணூலை மாற்றிக் கொள்ளும் ஒரு சடங்கான மாதமாக மாறிப் போயுள்ளது என்கிறார்கள் ஆன்றோர்கள்.

இம்மாதத்தில்தான் சாதுர்மாஸ்ய விரதத்தின்
உச்ச தினங்கள் வருகின்றன.

இதனால் இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் முக்கியமானவை என்பர்.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் இணைந்து கடைய, அழுத்தம் தாளாத வாசுகிப் பாம்பு ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சை கக்கி விடுகிறது.

இதனால் சகல தேவர்களும் அஞ்சி ஓட, தியாகத் திருவுருவான ஈசன்,
அந்த விஷத்தை தாம் ஏற்றுக்கொண்டு சகல லோகங்களையும் காக்கிறார்.

ஈசனுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க சக்திதேவி தொண்டையைப் பற்றிக் கொண்டு அவரை நீலகண்டன் என்றாக்குகிறார்.

அவர் உடல் உஷ்ணத்தால் மாறிவிடாது இருக்க தேவர்கள் அவருக்கு கங்கையால் அபிஷேகம் செய்து, தலையிலேயே கங்கை மற்றும் சந்திரனை அமர வைத்து குளிர்ச்சியை உருவாக்குகிறார்கள்.

இது எல்லாம் நடைபெற்றது ஆவணியில் என்கின்றன புராணங்கள்.

இதனால் ஆவணி என்பது துன்பங்கள் நீங்கும் மாதம் என்றும், இது ஈசனுக்கு உரிய மாதம் என்றும் சொல்வர்.

ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.

ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே.

எனவேதான், ஆவணி மாதத்தில் விநாயகர்
அவதாரம், கிருஷ்ணாவதாரம் திருஅவதாரங்கள் நடைபெற்றன.

மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு.

அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான்.

சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர்.

இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார்.

அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.

ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன.

மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள்.

புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள்.

அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள்.

ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது.

ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும்.

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.

ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.

தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள்.

அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது.

விழாக்களுக்கும் விரதங்களுக்கும் மட்டுமில்லாமல் இந்த மாதத்தில் பல ஆன்றோர்களும் அடியார்களும் தோன்றி உள்ளனர்.

இளையான்குடி மாற நாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் போன்றோரின் குருபூஜை வருவதும் இந்த மாதத்தில்தான்.

சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம் ஆவணி.

ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம்.

ஆவணி மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.

விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.

ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் ஆவணியில் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது.

சிறப்பம்சம் நிறைந்த இந்த ஆவணி மாதத்தில்
இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.
 
Back
Top