• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Slokams of 32 Avatars of Lord Ganesha

praveen

Life is a dream
Staff member
கணபதியின் 32 திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்!

1. பால கணபதி

கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

2. பக்த கணபதி

நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்

தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

3. ஸக்தி கணபதி

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

4. ஸித்தி கணபதி

பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

5. உச்சிஷ்ட கணபதி

நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்
தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:

சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்
கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

நீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.

நான்கு கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.

6. க்ஷிப்ர கணபதி:

தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்
பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

தந்தம், கற்பகக் கொடி, பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.

7.விக்ந ராஜ (விஜய) கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.

8.ஸ்ருஷ்டி கணபதி

பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும், , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.

9.ருணமோசந கணபதி:

பாஸாங்குஸௌ தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய திருவயிறு, ஆகியவற்றை உடையவரும், பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

10.டுண்டி கணபதி

அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

11.த்விமுக கணபதி

ஸ்வதந்த பாஸாங்குச ரக்ந பாத்ரம் கரைர் ததாநோ ஹரி நீல காத்ர:
ரக்தாம்ஸூகோ ரத்ந கிரீட மாலீ பூத்யை ஸதாமே த்விமுகோ கணேஸ:

தந்தம், பாசம், அங்குசம், ரத்தின பாத்திரம் தாங்கியவரும் ஹரியைப் போல் நீல‌நிறத் திருமேனியுடன் கூடியவரும் செந்நிற ஆடை; ரத்ன கிரீடம் தரித்தவரும் ஆன‌த்விமுக கணபதியைத் எந்நேரமும் துதிக்கிறேன்.

12.யோக கணபதி

யோகாரூடோ யோகபட்டாபிராமோ பாலார்காபஸ்சேந்த்ர நீலாம்ஸூகாட்ய
பாஸேக்ஷ் வக்ஷாந் யோக தண்டம் ததாநோ பாயாந்நித்யம் யோக விக்நேஸ்வரோந:

யோகாசனத்தில் யோகபட்டம் தரித்த திருக்
கோலத்தில் அழகு மிகுந்த தோற்றத்தில், இளஞ்சூர்யனைப் போன்ற திருமேனியுடன் நீல நிற ஆடை அணிந்து, பாசம், கரும்பு, அக்ஷமாலை, யோகதண்டம் தரித்து, அனுதினமும் அருள் பாலிக்கும் யோக விக்நேச்வரரைத் துதிக்கின்றேன்.

13. ஏகதந்த கணபதி

லம்போதரம் ஸ்யாமதநும் கணேஸம் குடாரமக்ஷஸ்ரஜ மூர்த்வகாப்யாம்
ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம் வாமேதராப்யாம் ச ததாநமீடே

பெருவயிறுடன் கூடியவராக,; நீல நிற மேனியுடன் பரசு, அக்ஷமாலை, லட்டுகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்த ஏகதந்த கணபதியைத் துதிக்கிறேன்.

14. ஹேரம்ப கணபதி

அபய வரத ஹஸ்த: பாஸ தந்தாக்ஷமாலா
ஸ்ருணி பரஸூ ததாநோ முத்கரம் மோதகம் ச
பலமதிகத ஸிம்ஹ: பஞ்ச மாதங்க வக்த்ரோ
கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப நாமா

முன்னிரு திருக்கரங்களில், அபய வரத முத்திரைகளைத் தரித்தவரும், மற்ற கரங்களில், பாசம், தந்தம், அக்ஷமாலை, உலக்கை, கோடரி, மலர், மோதகம், பழம் ஆகியவற்றைத் தாங்கியவரும், சிம்மத்தை வாகனமாகக் கொண்டவரும், ஐந்து திருமுகங்களைக் கொண்டவரும் ஹேரம்பர் என்ற திருநாமத்தை உடையவருமான ஹேரம்ப கணபதி நம்மைக் காக்க வேண்டும்.

15. ந்ருத்த கணபதி

பாஸாங்குஸாபூப குடாரதந்த சஞ்சத்கரா க்ல்ருப்த வராங்குலீயகம்
பீதப்ரபம் கல்பதரோரதஸ்தம் பஜாமி ந்ருத்தோப பதம் கணேஸம்
பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் தாங்கிய கரங்கள்: மோதிரம் போல் வளைந்த துதிக்கை, பொன்னிறத் திருமேனி ஆகியவற்றுடன் கூடி, கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் அருளும் நிருத்த கணபதியைத் துதிக்கிறேன்.

16. ஹரித்ரா கணபதி

ஹரித்ராபம் சதுர்பாஹூம் ஹரித்ரா வதநம் ப்ரபும்
பாஸாங்குஸ தரம் தேவம் மோதகம் தந்தமேவச
பக்தாபய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாஸநம்

பாஸாங்குஸௌ மோதகமேகதந்தம் கரைர் ததாநம் கநகாஸநஸ்தம்
ஹாரித்ரகண்ட ப்ரதிமம் த்ரிநேத்ரம் பீதாம்ஸூகம் ஹரித்ரா கணேஸமீடே

மஞ்சள் நிறத் திருமுகத்துடன் ஐச்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவரும், பாசம், அங்குசம், மோதகம், தந்தம் தாங்கிய மஞ்சள் ஒளி வீசும் நாற்கரங்களை உடையவரும், பக்தருக்கு அடைக்கலம் ஈந்து தடைகளை அகற்றுபவருமான - ஹரித்ரா கணபதியைத் துதிக்கிறேன்.

பாசம், அங்குசம், மோதகம், தந்தம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், பொன்மயமான ஆசனத்தை உடையவரும் மஞ்சள் நிறத் திருமேனியை உடைய முக்கண்ணரும் பொன்னிறத்தினாலான பீதாம்பரத்தை தரித்தவரும் ஆன‌ஹரித்ரா கணபதியை வணங்குகிறேன்.

17. தருண கணபதி

பாஸாங்குஸாபூப கபித்த ஜம்பூ
பலம்திலாந் வேணுமபி ஸ்வஹஸ்தை:
த்ருத: ஸதாயஸ் தருணாSருணாப:
பாயாத் ஸயுஷ்மாந் தருணோ கணேஸ:

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, கரும்புத் துண்டு, முறித்த‌தந்தம் ஆகியவற்றைத் தாங்கிய எட்டுத் திருக்கரங்களும், இளங்கதிரவன் போன்ற செந்நிற மேனியும் கொண்ட தருண கணபதியைத் துதிக்கிறேன்.

18. வீர கணபதி

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான‌ வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

19. த்வஜ கணபதி

ய: புஸ்தகாக்ஷ குணதண்ட கமண்டலு ஸ்ரீர்
நிவ்ருத்யமாந கரபூஷண மிந்துவர்ணம்
ஸ்தம்பேரமாநந சதுஷ்டய ஸோபமாநம்
த்வாம் ஸம்ஸ்மரே த்வஜகணாதிபதே ஸ தந்ய:

புத்தகம், அக்கமாலை, தண்டம், கமண்டலம் ஆகியவை நான்கு திருக்கரங்களையும் ஆபரணங்களாக அலங்கரிக்க, சந்திரனின் வண்ணத்தில் (வெண்ணிறத்தில்) ஒளிரும் திருமேனியை உடைவரும், கம்பம் போல் திடமானதும், சோபிப்பதுமான நான்கு திருமுகங்கள் கொண்டவரும் ச்ரேஷ்டருமான, த்விஜ கணபதியைத் துதிப்பவர் புண்ணியம் செய்தவராவார்.

20. விக்ந (புவநேச) கணபதி

ஸங்கேக்ஷூசாப குஸூமேஷூ குடாரபாஸ
சக்ராங்குஸை: கலம மஞ்ஜரிகா ககாத்யை:
பாணிஸ்திதை: பரிஸமாஹித பூஷண ஸ்ரீ
விக்நேஸ்வரோ விஜயதே தபநீய கௌர:

சங்கு, கரும்பு வில், மலரம்பு, கோடரி, பாசம், சக்ரம், அங்குசம், பூங்கொத்து ஆகியவை தாங்கிய எண்கரங்களை உடையவரும், விரும்பத் தக்க அலங்காரங்கள் சூழ சோபையுடன் விளங்குகிறவரும், பொன்னிறத் திருமேனியை உடையவரும் ஆன விக்ந விநாயகரைத் துதிக்கிறேன்.

21. ஊர்த்வ கணபதி

கல்ஹார ஸாலி கமலேக்ஷூக சாபபாண
தந்தப்ரரோஹககதீ கநகோஜ்வலாங்க:
ஆலிங்கநோத்யதகரோ ஹரிதாங்கயஷ்ட்யா
தேவ்யாதிஸத்வ மபய மூர்த்வ கணாதிபோமே

செங்கழுநீர்ப் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு; தந்தத்தில் தாங்கிய கதை முதலியவற்றைக் கரங்களில் தரித்த‌, பொன் போல மின்னும் திருமேனியை உடையவரும், பச்சை நிற திருமேனியளான தேவியை ஆலிங்கனம் செய்தவாறு அருட்காட்சி தருபவருமான‌ ஊர்த்வ கணபதியைத் துதிக்கிறேன்.

22. லக்ஷ்மீ கணபதி

பிப்ராணஸ் ஸூகபீஜபூர கமலம் மாணிக்ய கும்பாங் குஸாந்
பாஸங் கல்பலதாஞ்ச கட்க விலஸத் ஜ்யோதிஸ் ஸூதா நிர்ஜர:
ஸ்யாமேணாத்த
ஸரோருஹேண ஸஹிதோ தேவீத்வயே நாந்திகே
கௌராங்கா வரதாந ஹஸ்த கமலோ லக்ஷ்மீ கணேஸோSவதாத்

தந்தாபயே சக்ரவரௌ ததாநம் கராக்ரகம் ஸ்வர்ணகடம் த்ரிநேத்ரம்
த்ருதாப்ஜ மாலிங்கிதமப்தி புத்ர்யா லக்ஷ்மீ கணேஸம் கநகாபமீடே

திருக்கரங்களில் இருக்கும், கிளி, செம்மாதுளம்பழம், தாமரை, மாணிக்கமயமான கும்பம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, வாள் ஆகியவை, ஜோதிப் பிரகாசம் போல் ஒளி வீச பிரகாசமான திருமுகத்துடன், நீல வண்ண ஆம்பல் மலரைத் தாங்கிய, வெண்ணிறத் திருமேனியை உடைய இரு தேவியரை இரு புறமும் அருகில் அமர்த்திக் கொண்டு, பொன்னிறத் திருமேனியை உடையவராக வரம் தரும் (வரத முத்திரை) கரத்துடன் விளங்கும் லக்ஷ்மீ கணபதியைத் துதிக்கிறேன்.

தந்தம், அபயம், வரதம், சக்ரம் ஆகியவை தாங்கிய கரங்களுடையவரும், துதிக்கையில் பொற்கலசம் ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும்,, செந்தாமரை ஏந்திய லக்ஷ்மீயுடன் கூடியவருமான, பொன்னிற மேனியை உடைய லக்ஷ்மீ கணபதியை வணங்குகிறேன்.

23. மஹா கணபதி

ஹஸ்தீந்த்ராநநம் இந்துசூடம் அருணஸ் சாயம் த்ரிநேத்ரம் ரஸாத்
ஆஸ்லிஷ்டம் ப்ரியயா ஸ பத்மகரயா ஸ்வாங்கஸ்தயா ஸந்ததம்
பீஜாபூர கதேக்ஷூ கார்முக லஸச் சக்ராப்ஜ பாஸோத்பல
வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரக்நகலஸாந் ஹஸ்தைர் வஹந்தம் பஜே

சிறந்த யானை முகத்தை உடையவரும், பிறைச்சந்திரனை மணிமுடியில் தரித்தவரும், சிவந்த மேனியை உடையவரும், முக்கண்ணரும், தாமரையைக் கரத்தில் தாங்கிய அன்புக்குரிய தேவியை மடி மீதில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம் முதலியவற்றைக் கரங்களில் தரித்தவரும், துதிக்கையில் ரத்ன கலசம் தாங்கியருளுபவருமான‌ மஹாகணபதியைத் துதிக்கிறேன்.

24. ஏகாக்ஷர கணபதி

ரக்தோ ரக்தாங்க ராகாம் ஸூக
குஸூமயுதஸ்தும் திலஸ் சந்த்ரமௌலி:
நேத்ரைர் யுக்தஸ்த்ரிபி: வாமநகர
சரணோ பீஜபூரம் ததாந:
ஹஸ்தாக்ரா க்ல்ருப்த பாஸாங்குஸ ரதவரதோ
நாகவக்த்ரோSஹி பூஷோ
தேவ:பத்மாஸநஸ்தோ பவது ஸூககரோ
பூதயே விக்நராஜ:

சிவந்த நிறப் பட்டாடை அணிந்து, சிவப்பு நிற மலர் மாலையுடன், செந்நிறத் திருமேனியும், பிறை அணிந்த் திருமுடியும் கூடியவராக, முக்கண்களும், சிறிய அளவிலான (குள்ளமான) கரங்கள்-கால்கள் உடையவராக‌, மாதுளம்பழம், அங்குசம், பாசம், வரதம் கைகளில், யானை முகம், நாகம் ஆபரணம் ஆகியவற்றையும், ஐஸ்வர்யத்தின் அறிகுறியாகக் கிளியையும் கரங்களில் தாங்கியவராக, பத்மாசனத்தில் அமர்ந்து அருளும், ஏகாக்ஷர கணபதியாம் விக்னராஜனைத் துதிக்கிறேன்.

25. வர கணபதி

ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
ஹஸ்தே ச பாஸங்குஸௌ
பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
ஸாத்விந்து மௌலிம் பஜே
புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
பத்மோல்லஸத்தஸ்தயா
தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
பாத்ரோலஸத் புஷ்கரம்

செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத் தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில் ஏந்தியவர்.

26. த்ரயாக்ஷர கணபதி

கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.

27. க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.

28. உத்தண்ட கணபதி

கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
பாஸஞ்ச சக்ராந்விதம்
கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
உத்தண்ட விக்நேஸ்வர:

நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போது
ம் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.

29. த்ரிமுக கணபதி

ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
தக்ஷே ததாந: கரை:
பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
வாமே ததாநோ முதா
பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
ஸத்கர்ணிகா பாஸூரே
ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
நாகாநந: பாதுந:

கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச, பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.

30. ஸிம்ஹ கணபதி

வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
தக்ஷே விதத்தே கரை:
வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம்
ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
ஸங்கேந்துகௌர: ஸூப:
தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
பாயாதபாயாத் ஸந:

வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.

31. துர்கா கணபதி

தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
தந்தம் தக்ஷேவஹந் கரை:
வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
ஜம்பூத்யதத் கரை:
ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
துர்கா கணபதிர் முதே

உருக்கிய பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு, ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.

32. ஸங்கடஹர கணபதி

பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்

பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க, வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும், பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கிறேன்.

கஜமுக பாத நமஸ்தே !

1630932074895.png
 

Latest ads

Back
Top